மர்மமாய் இருக்கும் மனசு – 3
மாரிமுத்துராஜ் A.G on Dec 2012
மனதின் மகத்தான ஆற்றலை இன்று மனிதர்கள் பயன்படுத்தத் தெரியாமல், மருகிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் மயக்கத்தை, அச்சத்தை பயன்படுத்திக் கொண்டு இன்றைக்கு எத்தனையோ வியாபாரிகள் கிளம்பி ‘மனதைக் கட்டுப்படுத்தலாம்’, ‘மனதை வெல்லலாம்’, ‘மனதை வளப்படுத்தலாம்’, ‘மன அமைதி பெறலாம்’ என்று மனிதர்களைப் பாடாய்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
மனக்குறை ஏதுமின்றி ஒருகாலத்தில் மகிழ்வாய் வாழ்ந்து வந்த மனிதன், இன்று அவனுக்குள் ஆசைகள் பெருகப்பெருக, தேவைகள் அவனைத் திண்ணத் தொடங்கியதால், திக்குத்தெரியாத காட்டிற்குள் விழிபிதுங்கிச் செய்வதறியாத சிறுபிள்ளையாக, தேம்பித்தேம்பி அழத்தொடங்கிவிட்டான். இதனால் அவனுள் என்ன நேர்ந்தது?
‘மன எரிச்சல், மனமுடைதல், மன பேதலிப்பு, மனப்பிராந்தி, மனப்பிரமை, மன மயக்கம், மனப்பால் குடித்தல், மனப் பதற்றம், மன நெருடல், மன நடுக்கம், மனப்புழுங்கல், மன நோகல், மன ஏக்கம், மனத்தளர்வு, மனத்துயர், மனத்தாங்கல், மனத்தளர்ச்சி, மனச்சோர்வு, மனச் செருக்கு, மனச்சலிப்பு, மனச் சஞ்சலம், மனங்கோணுதல், மனக்கொதிப்பு, மனம் கூசுதல், மனங்குத்துதல், மனக்கோளாறு, மனக்குறை, மனக்குழப்பம், மனக்குருடு, மனக்கிளர்ச்சி, மனக்காய்ச்சல், மனவருத்தம், மனப்பிளவு, மனக்கவலை, மன மயக்கம், மனக்கடுப்பு, மனக்கசப்பு… என்று மனதோடு சம்பந்தப்பட்ட மனநோய்கள் ஏராளம்.
அப்பப்பா, என்ன இது, இத்தனையும் போதாதென்று இன்னும் புதுதி புதிதாக கிளம்பி வந்துகொண்டே இருந்தால், பாவம் இந்த மனிதன் என்ன தான் செய்வான். பைத்தியம் பிடிக்காத குறையாகப் பரிதவித்துக்கொண்டு இருக்கின்றான். இதிலிருந்து தப்பிக்க, தன்னைக் காத்துக்கொள்ள அவன் ஏதாவது ஒரு முயற்சி எடுக்க வேண்டித்தான் உள்ளது. அந்த முயற்சி முட்டாள்தனமாக இருந்தால் கூட அவன் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. அதிலும் பலர், தற்போதைக்கு ரிலீஸ் ஆனால் ‘போதும்பா’ என்கிற முடிவிற்கு வருவதுதான் அபத்தமானது.
முள்ளை முள்ளாளே எடுப்பதுபோல, மனதை, மனதால் தான் கண்டுபிடிக்க முடியும் என மனதார அதைத் தேடிப்போனேன். மனம் பற்றிய ஆய்வு இன்று, நேற்று தோன்றியதல்ல, மனிதன் என்றைக்குச் சிந்தனை வயப்பட்டானோ, அன்று தொன்றுதொட்டே தோன்றலானது. என்றாலும், இன்னும் அதை முழுமையாக அறிந்த பாடில்லை.
தொன்றுதொட்டு வரும் ஒருசில மனக்கருத்துக்கள்:
ஒன்றறிவு அதுவே உற்றறிவு
(Touching is the first sense)
இரண்டறிவு அதுவே அதனோடு நாவே
(Taste is the second sense)
மூன்றறிவு அதுவே அற்றொடு முக்கே
(Smell is the third sense)
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
(Sight is the fourth sense)
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
(Sound is the fifth sense)
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
(Mind is the sixth sense)
மனம் என்பது மனிதனின் ஆறாவது அறிவு என்றார் தொல்காப்பியர்.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”
“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”
என்று மனம் குறித்து வள்ளுவம் பேசுகிறது.
“மனமென்னும் பெண்ணேÐ
ஒன்றையே பற்றி ஊசலாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய், புதியதை அஞ்சுவாய்;
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய், சீச்சீÐ
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்
தன்னை யறியாய் சகத்தெலாந் தொளைப்பாய்
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்
பொதுநிலை அறியாய், பொருளையுங் காணாய்
நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
நின்னை மேப்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியுந் தேடுவேன்
– பாரதி
இப்படி மனங்குறித்து பேசிய மகாகவி கூட
“துணிவெளுக்க மண்ணுண்டு
தோல்வெளுக்க சாம்பலுண்டு
மணிவெளுக்க சாணையுண்டு
மனம்வெளுக்க வழியில்லையே”
என்று வருந்தியவன் தான்
“பேயா யுழுலுஞ் சிறுமனமே
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நடாதே
நினது தலைவன் யானேகாண்”
என்று மனதின் மண்டையில் நறுக்கென்று குட்டுவதும், மேலும் முத்தாய்ப்பாக அவர் முடிப்பதைப் பாருங்கள்.
“சித்தினியன்பு மதன்பெருஞ் சக்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால் – மனமேÐ
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோД என்று முடிக்கின்றார்.
பாரதிக்குப் பின் வந்த கண்ணதாசனோ, பாமரனுக்கும் கூட புரியும்படி, மனம் என்றால், இதுதாண்ட என்கிற பாடத்தை நடத்திவிட்டுப் போய்விட்டார்.
“மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடாД
என்றவன்,
“மனமிருந்தால் பறவைக் கூட்டில்
மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே
மலையைக் காணலாம்
துணிந்துவிட்டால் தலையில்
எந்தச் சுமையும் தாங்கலாம்”
என்று மனத்தின் மகத்தான ஆற்றல் குறித்து பேசியவர் முடிவில்,
“உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலைவணங்காமல் நீ வாழலாம்”
என்று மிகப்பெரிய உண்மையை சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போனார். காட்டு மிராண்டியாய் அலைந்து திரிந்த மனிதன், என்றைக்கு ஒரு வரைமுறைக்குள் கட்டுப்பட்டு வாழத் தொடங்கினானோ, அன்றைக்கே உருவானதுதான் இந்த மனம்.
இந்த மனம் என்னும் மந்திரகோல் செயல்படத் தொடங்கிய பின்தான் பல நவீன மாற்றங்கள் உலகில் தோன்றலாயின. அதன் உச்சகட்ட நிலைதான் இன்றைய நவநாகரிக உலகின் வெளிப்பாடு என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட மனத்தைக் குறித்து அகராதியில் உள்ள விளக்கம் என்னவென்று அறிந்துகொள்ள அடுத்த இதழ்வரை காத்திருங்கள்…