– 2012 – November | தன்னம்பிக்கை

Home » 2012 » November

 
 • Categories


 • Archives


  Follow us on

  வாழ்வில் வெற்றியடைய விரும்பினால்…

  தனக்கான ஒரு எதிர்கால தொழில்துறையைத் தேர்ந்தெடுப்பது, ஒவ்வொரு மாணவருக்கும் பெரிய சவாலாகவே எப்போதும் திகழ்கிறது. ஏனெனில், பலரால் விரும்பப்படுவது, பலரால் பரிந்துரைக்கப்படுவது, வருமானம் அதிகம் வருவது, பல கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்பிற்கே முக்கியத்துவம் கொடுப்பது போன்ற நெருக்கடியான அம்சங்களைத் தாண்டி

  Continue Reading »

  தகுதிதான் அடிப்படை!

  ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  Continue Reading »

  உங்களின் உழைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?

  வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிந்த, பலரும் சொல்லக்கூடிய ஒரு விஷயம். ஆனால் அந்த உழைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பலரும் யோசிக்க மறந்து விடுகிறார்கள்.

  Continue Reading »

  ஆறுதலாக நாலு வார்த்தை…

  ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.

  Continue Reading »

  நம்மை உணரும் தருணங்கள்

  புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது சிலர் உணர்ச்சிவசப் படுகிறார்கள். சினிமா பார்த்துக் கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு காட்சியில் அழுகிறார்கள். ஆனால் படம் பார்க்கும் அத்தனை பேரும் அழுவதில்லை.

  Continue Reading »

  ஜெயிக்கலாம் தோழி ….

  பொதுவாக இந்தியப் பெண்கள் தங்களுடைய உடல் அழகை, உடல் நலத்தைப் பேணிக் காப்பதில்லை. திருமணத்துக்கு முன்புவரை மட்டுமே தங்களைப் பற்றிப் பெரும்பாலும் கவலைப்படுகிறார்கள், அழகாக தங்களைக் காண்பித்துக் கொள்ளவும் பெருமுயற்சி எடுததுக் கொள்கிறார்கள்.

  Continue Reading »

  ஆளுமைத்திறன்

  உங்கள் சொல், செயல், சிந்தனையை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வளர்ச்சிகள் மீது உங்களுக்கே ஆளுமை அவசியம்.
  Managing Yourself என்பது அரிய கலை. இந்தக்கலையை அறிந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். உங்களது வீட்டு நிர்வாகத்தைச் சரிவர கவனிக்கிறீர்களா? நீங்களே சுயமாகத் தொழில் செய்கிறீர்களா? அல்லது பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கின்றீர்களா?
  இது பெரிய விஷயம் ஒன்றுமில்லை. ஆளுமைத் திறனுடையவர்கள் மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன் வாழ்கின்றார்கள். அதுபற்றி சற்றேஆராய்வோம். உங்கள் வாழ்க்கையில் எழக்கூடிய சவால்களை, பிரச்சனைகளை நீங்கள் தைரியமாக எதிர்கொள்ளும்போது அதில் ஒரு திரில் இருக்கவே செய்கிறது.
  உங்களுடைய தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, குடும்ப வாழ்க்கையானாலும் சரி, அலுவலகப்பணியானாலும் சரி எந்த அளவு நீங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள் என்பது முக்கியமானது. அதனை எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்படும்.
  ஒரு சிறந்த நிர்வாகி தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை ஆளத் தெரிய வேண்டும். யார் யாரிடம் எந்தப் பணியைக் கொடுத்தால் சிறப்பாக நிறைவேறும். தொழில் மேம்பாட்டிற்கு என்ன செய்ய வேண்டும், போட்டிகளைச் சமாளிப்பது எப்படி, உற்பத்தித் திறனில் மாற்றம் செய்ய வேண்டுமா? ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் எப்படி சமாளிப்பது? திடீரென நஷ்டம் ஏற்பட்டால் அதனை எப்படி ஈடுகட்டுவது? இவை யாவும் அவர் சரியாக கவனித்துச் செயல்பட்டாலேயே ஊழியர்களிடம் மதிப்பும், மரியாதையும் உடையவராக இருப்பார். மேலதிகாரிகளிடமும், தொழில் அதிபரிடமும் நல்ல உறவு (Rapport) இருக்கும். அவர் நிர்வாகத் திறமையற்றவராக இருந்தால் பணியாளர்களிடம் மதிப்பை இழப்பார்.
  ஆக, சிறந்த நிர்வாகிக்கு இந்த ஆளுமைத்திறன் அவசியம். சிலர் தங்களுடைய சக்திக்கு மேற்பட்ட பொறுப்புக்களை தங்கள் தோள்களில் சுமப்பதாலேயே தடுமாறுகிறார்கள். செய்ய முடியாததை நான் செய்து முடிக்கிறேன் என்று வீணாக சூளுரைத்துத் திண்டாடுவானேன்.
  என்ன முடியுமோ, உங்கள் தகுதி, நேரம், வசதி வாய்ப்புக்கு ஏற்பப் பணிகளை மேற்கொள்வீர்களானால் எளிதில் முடிக்கலாம். பாரம் உங்கள் தோள்களை அழுத்தாது.
  Too much is too bad என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். எதைத் தள்ள வேண்டும், எதைக் கொள்ள வேண்டும் என்றஉய்த்துணர்வும் அறிவும் அவசியம். அந்தப் பொறுப்பு உங்களுடையதே.
  சில சமயங்களில் நாம் ஆற்றவேண்டிய பணிகள் பற்றி நமது திட்டத்தில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் நாம் போடும் கணக்கு தவறாகி விடுகிறது. தீர ஆலோசிக்க நேரம் இல்லாமல் அவசரகதியாய் அள்ளித்தெளித்த கோலமாய் பரபரவென எதையோ செய்கிறோம். அதனால் அக்காரியம் சீராக நடைபெறாமல் சிதைவுறுகிறது.
  அப்படிச் செய்கிறேன், இப்படிச் செய்கிறேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டு, அந்த வாக்கைக் காப்பாற்றியாக வேண்டுமே என்று ஏன் வீணான மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதை உணர்ந்து, அறிந்து திருத்திக்கொள்ள, செய்துமுடிக்க வேண்டிய பணிகள் பற்றி சரியான திட்டமிடுதல் அவசியம். இது உங்களுடைய ஆளுமைத்திறனை மேம்படுத்தும்.
  ஆக Managing yourself என்பதை அறிந்து செயல்படும்போது திட்டமிடுதல் சரியாக அமைந்து, எடுத்த காரியங்கள் செவ்வனே நிறைவேறக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். இந்த ஆளுமைத்திறன் சரியாக இல்லாவிட்டால் பணிமுடியாமல் நமக்கு ஒருவித மனச்சோர்வு ஏற்படுகிறது. அது நமது உட்சக்தியை குலைத்துவிடுகிறது.
  வெறும் ஏட்டளவில் கணக்கு போட்டால் மட்டும் போதாது. சாதகபாதகங்கள் ஆராய்ந்து செயல்படுவதே சாலச்சிறந்தது. அதுவே ஆளுமைத்திறன் வளர உதவும். கீழ்க்கண்டவற்றை நீங்கள் சரியாக அனுசரித்தால் உங்கள் ஆளுமைத்திறன் பழுதுபடாமல், எந்த வேலையையும் சரியாகத் தீர்மானித்து நிறைவேற்றமுடியும்.
  நீங்கள் செய்துமுடிக்க வேண்டிய மூன்று முக்கிய பொறுப்புக்கள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டினைப் பழுது இன்றி நிறைவேற்றினாலும் போதும். நீங்கள் சாதனையாளர் தான். உங்களை அறியாமல், நீங்கள் விரும்பாத சில பணிகளைச் செய்ய வேண்டி நேரிடலாம். அந்த மாதிரி இக்கட்டாண நிலையில் நீங்கள் சிக்கிக்கொண்டது கூடத் தெரியாமல் ரொம்பவும் “பிஸி”யாக இருக்கலாம். இந்த இடியாப்ப சிக்கலிலிருந்து விடுபட நீங்கள் முயன்றாலும் முடியாமல் போகலாம். அங்குதான் Managing yourself கை கொடுக்கும்.
  உங்களுடைய தனித்தன்மை, திறமை இது பற்றிச் சிந்திக்காமல் நீங்கள் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். அதனால் தடுமாற்றத்திற்கு ஆளாகலாம். இதிலிருந்து எப்படியும் மீண்டுவருவேன் என்று நம்பிக்கையுடன் முயலுங்கள். உங்கள் ஆளுமைத்திறன் உங்களுக்குக் கை கொடுக்கும்.
  என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று சிந்திக்கக்கூட கால அவகாசம் இல்லாமல் இருக்கலாம். அப்போது உங்களது “Presence of mind” உங்களுக்குக் கைகொடுக்கும். அடுத்து வாக்குக்கொடுத்துவிட்டு, அப்பணியை முடிக்க முடியாமல் போகலாம். இதற்காக சமாதானம், சால்சாட்டி சொல்லாதீர்கள். உங்களது இந்த தர்மசங்கடத்திற்குப் பிறரைப் பழிக்காதீர்கள். அடுத்த தடவை இதுபோல் பொறியில் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்க முயலுங்கள்.
  உங்களால் முடியுமா, முடியாதா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க முடியும். முடியாததைச் செய்ய முற்பட்டு முடங்குவானேன். முடிந்ததைத் திருப்தியுடன் செய்யலமே. உங்களுடைய ஆளுமைத்திறன் சரியாக இல்லை என்றால் நீங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எளிதில் சோர்வடைந்து விடுவீர்கள்.
  சில விஷயங்களில் உங்களுக்கு எரிச்சல் வரும். வேலை செய்வதில் உற்சாகத்தை இழப்பீர்கள். அது கடமையாற்றுவதில் உள்ள உங்கள் அக்கறையைக் குறைத்துவிடும்.
  இலக்கை நிர்ணயிக்காமல் எந்தப் பணியையும் செய்ய முற்படாதீர்கள். உங்களுக்கு நீங்களே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
  என் குடும்ப வாழ்க்கை, பணியிடத்தில் நான் நடந்துகொள்ளும் விதம், என் சொந்த வாழ்க்கை இவையாவும் திருப்திகரமாக அமைந்துள்ளதா? என் சக்தியை மீறிப் பொறுப்புகளைச் சுமக்கின்றேனா? தேவையில்லாமல் இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொள்கிறேனா? மாறுதலுக்கு இடம் தராமல் எப்போதும் அரைத்த மாவையே அரைப்பதுபோல, மாமூலான செயல்பாடுகளிலேயே கவனம் செலுத்துகிறேனா? சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறேனா? என் செயல்முறைதிட்டமிட்ட ரீதியில் அமைந்துள்ளதா?அதிகமாக மன உளைச்சல் இல்லாமல் அமைதியாகப் பணியைச் செய்கின்றேனா?
  என்னுடைய பிரச்சனைகளிலிருந்து மீண்டுவர முடியாமல் தவறான பழக்கத்திற்கு ஆளாகின்றேனா? (மதுபோதை, சிகரெட் பழக்கம், சூதாட்டம் போன்றவை) சற்று இதைப்பற்றி நீங்கள் சிந்திப்பீர்களானால், எங்கே நீங்கள் தவறு செய்கிறீர்கள், அதை எப்படிச் சரிசெய்து கொள்ள முடியும் என்ற விவேகம் பிறக்கும். ஆக “”Managing yourself” என்ற அருங்கலையை நீங்கள் சரிவரப் பயின்று என்றும், எப்போதும் செயல்வீரராக மாறுங்கள்.

  வெற்றி விதிகள்

  வாழ்க்கையின் ஒரு புறம் நீங்கள் நிற்கிறீர்கள். மறுபுறம் வெற்றி நிற்கிறது. இரண்டிற்கும் இடையே இடைவெளி. இடைவெளியை நிரப்பி வெற்றியை அடைய உறுதுணை புரிவது எது? தலைவிதியா? கடின உழைப்பா?
  பெரும்பாலானோர் வெற்றி என்பது தலைவிதியையும், கடின உழைப்பையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை அனுபவத்தை வைத்துப் பார்த்தால் வெற்றி பெறபல தன்மைகள் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய பல தன்மைகள் என்னவென்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
  ஆயிரம் மைல் தூரப் பயணம் கூட ஒற்றை, முதல் அடியுடன் தான் தொடங்கும் என்பதைப்போல முதல் அடியை எடுத்து வையுங்கள் உங்கள் வெற்றிக்காக….
  பில்கேட்ஸும் கற்பனை சக்தியும்:
  நிஜத்தில் உணர்ந்திடாத ஓர் அனுபவத்தை மனக்கண்ணால் காண்பதே கற்பனை. பில்கேட்ஸ், மிகப்பெரிய அளவில் சிந்திக்கவும், தான் அடைய வேண்டிய இலக்கை முன் கூட்டியே மனத்திரையில் காணவும் ‘கற்பனையின் சக்தி’ தான் உதவியது.
  பள்ளிக்குப் போவதே கசப்பான விஷயமாக இருந்த கேட்ஸுக்கு ஒரு கணினியை கண்டது வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய 13 வயதில் நண்பர்களுடன் இணைந்து ‘புரோக்ராமர்ஸ் குரூப்’ என்றகுழுவைத் தொடங்கினார். அதன்பிறகு ‘ஒவ்வொரு மேஜையிலும் கணினி. ஒவ்வொரு கணினியிலும் மைக்ரோசாஃப்ட்’ என்றலட்சியத்தை கற்பனை செய்து கொண்டார். அந்தப் பார்வையுடனே மைக்ரோசாஃப்ட்டைத் தொடங்கினார். இன்று அவரது லட்சியம் நிறைவேறி இருக்கிறது. இச்சாதனைக்குப் பின்னால் அபரிமிதமான கற்பனை சக்தியும், விடாமுயற்சியும் நிறைந்திருந்த கேட்ஸின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.
  உங்களது விருப்பம் எதில் என்பதை சீக்கிரமே கண்டுகொள்ளுங்கள். பிறகு தேவையான திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
  மனக்கண்ணில் எதிர்காலத்தைக் காண கற்பனை சக்தியைப் பயன்படுத்துங்கள்.
  இலக்குகளை அடையும்வரை கடுமையாக உழையுங்கள்.
  ஒபாமாவும் சொற்களின் சக்தியும்:
  உணர்வின் வெளிப்பாடு சொல். உங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதன் காரணமாக சொற்கள் சக்தி வாய்ந்தவையாகின்றன. உள்ளுணர்வை வெளிப்படுத்துவதில் சொற்களே முக்கிய பங்காற்றுகின்றன.
  பராக் ஒபாமா பல்வேறு இணங்களைக் கொண்ட அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும், மகத்தான வெற்றி பெறவும் ‘சொற்களின் சக்தி’ முதன்மை வகித்தது எப்படி? 2009 ஜனவரி 20ல் அமெரிக்காவின் 44வது அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட ஒபாமா தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘நமக்குத் தேவை மாற்றம்’ என்றகோஷத்தை எழுப்பினார்.
  அந்த சக்தி வாய்ந்த மந்திரச் சொல் தான் அமெரிக்க ஆப்பிரிக்கத் தலைவர் ஒருவரை முதன்முறையாக வெள்ளை மாளிகையில் குடியமர்த்தியது. ஒபாமாவிடம் இருந்து அன்பு, பலம், உறுதி என்று நேர்மறையான சொற்களே வந்தது. வெறுப்பு, பலவீனம், சந்தேகம் என்று எதிர்மறைசிந்தனை பேச்சில் தலைகாட்டவே இல்லை.
  ஒபாமாவிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்,
  மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த நேர்மறைசொற்களே உதவும்.
  மனோபாவத்தை மட்டுமின்றி தலைவிதியையும் சொற்கள் நிர்ணயிப்பதால் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.
  நீங்கள் பயன்படுத்தும் நேர்மறைச் சொற்கள் பிறருக்கு எழுச்சியூட்டுவதற்கும், உங்களது வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கவும் உதவும்.
  ஏ.ஆர். ரஹ்மானும் தன்னம்பிக்கையின் சக்தியும்:
  மனப்போராட்டத்திற்கும், சந்தேகக் கண்ணோட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இலக்கை நோக்கி ஆர்வத்துடன் பயணிக்க வழிவகுத்து, வாழ்க்கையின் அற்புதமான மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பதுடன் கனவுகள் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருக்கும் சக்தி ‘தன்னம்பிக்கை’.
  உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வர ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘தன்னம்பிக்கையின் சக்தி’ உறுதுணை புரிந்தது எப்படி? ஜனவரி 6, 1966ல் சென்னையில் ஒரு இசைக்குடும்பத்தில் திலீப் குமாராகப் பிறந்தார். 4 வயதிலேயே பியானோ வாசிக்கத் தொடங்கினார். 9 வயதில் தந்தையை இழந்தார். 11 வயதில் குடும்பத்துக்குத் துணை நிற்கவேண்டும் என்ற நிர்பந்தத்துடன் கீ-போர்ட் வாசிப்பவராக இளையராஜாவிடம் இணைந்தார்.
  சிறுவயதில் அதிக வெட்கத்தின் காரணமாக, தனிமையில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டே பாடி பார்த்த அவர் இன்று மக்களின் முன் ஒளிவீசும் விளக்குகளுக்கு மத்தியில் பாடுகின்றார். 2008ல் இரண்டு ஆஸ்கர் விருதுகளை ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்கு பெற்றரஹ்மான் உலகப் புகழ் ‘மொஸார்ட் ஆப் மெட்ராஸ்’ன் பிரதிநிதியாக உள்ளார்
  ரஹ்மானின் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:
  உங்களுக்கும் உங்களது இலக்குகளுக்கும் இடையில் இடையூறாக இருப்பது உங்களது அச்சமே. அதை ஊக்கத்துடன் எதிர்கொண்டு வெல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
  உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
  நீங்கள் இன்று எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல. தன்னம்பிக்கை சக்தி உடனிருக்கும் பட்சத்தில் எந்த உயரத்தையும் எட்ட முடியும்.
  குறிக்கோள் சக்தியும் ஸ்ரீதரனும்:
  வாழ்வின் திசைக்கு ஓர் அர்த்தத்தைத் தருகிறஎழுத்துப்பூர்வ வாக்குமூலங்களே ‘குறிக்கோள்’. சாதனைக்கான பாதையில் இருந்து விலகாமல் கவனத்துடன் பயணிக்க உதவும் எழுத்துப் பூர்வமான குறிக்கோள் குறிப்பிட்ட கால எல்லை மற்றும் உங்கள் மனதின் ஆசையை விவரிக்கிறது. கொங்கண் ரயில்வே மற்றும் டெல்லி மெட்ரோ திட்டங்களின் மூலம் அறியப்பட்ட தொழில்நுட்ப அறிஞரான திரு. ஸ்ரீதரன் அவர்களுக்கு தனது இலக்குகள் அனைத்தையும் குறித்த காலத்தில் அடைய குறிக்கோளின் சக்தியே உதவியது.
  1963ல் கடல் சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை 6 மாதங்களில் பழுது பார்த்துவிட வேண்டும் என்று இந்திய ரயில்வே துறையும், 3 மாதத்தில் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று ஸ்ரீதரனின் மேலதிகாரியும் கட்டளையிட்டிருந்தனர். பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஸ்ரீதரனோ வெறும் 46 நாட்களில் வேலையை முடித்துக் கொடுத்தார். 760 கி.மீட்டர் தூர கொங்கண் ரயில்வே திட்டம், 150க்கும் மேற்பட்ட பாலங்கள், 82 கி.மீட்டர் மலையைக் குடைந்து இருப்புப்பாதை அமைத்தல் போன்றதிட்டங்களில், இலக்குகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் முடித்துக் கொடுத்தவர். திட்டப் பணியில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களை நாள்தோறும் ஆய்வுசெய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்த திரு. ஸ்ரீதரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்,
  முன்னேற்றத்திற்கு உகந்த, தெளிவான, கால எல்லை வரையறுக்கப்பட்ட குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
  சரியான இடைவெளிகளில் குறிக்கோளை ஆய்வு செய்துகொள்ள வேண்டும்.
  குறிக்கோளை நோக்கிய பயணத்தில் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்வதுடன் உங்கள் குழுவையும் உற்சாகப்படுத்திக் கொண்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
  லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங்கும் ஒருமுகப்படுத்துதலும்:
  அலைபாய்கிற எண்ண ஓட்டங்களை ஓரிடத்தில் குவிய வைத்து, உங்களுடைய குறிக்கோளை அடைய செய்யும் சக்தி ஒருமுகப்படுத்துதல். நீங்கள் ஒரு விஷயத்தின் மீது முழுகவனத்தை போதுமான அளவிற்கு செலுத்தும்போது உங்களது செயல்திறன் மேம்படுவதுடன் குறிக்கோளையும் அடைய முடிகிறது. திரு. லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங் தனக்கு ஏற்பட்ட புற்றுநோயை எதிர்கொள்ளவும், உலகின் மிகப்பெரிய சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெறவும் ‘ஒருமுகப்படுத்துதலின் சக்தி’ வழிவகுத்தது.
  1999 முதல் 2005 வரை தொடர்ந்து ஏழு முறை பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி வாகை சூடிய ஆம்ஸ்ட்ராங் புற்றுநோயில் இருந்து மீண்டுவந்தவர். 1996ல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இனி ஓராண்டிற்குமேல் உயிருடன் இருக்க வாய்ப்புகள் இல்லை என்றேமருத்துவர்கள் கூறினர். ஆனால் லேன்ஸோ, தனது நோயைப்பற்றி சிந்திப்பதைத் தவிர்த்துவிட்டு தான் ஈடுபட்டுவந்த விளையாட்டில் வெற்றிகளை குவிப்பது ஒன்றின் மீதே மனதை ஒருமுகப்படுத்தினார். இடையில் மருத்துவச் சிகிச்சையையும் மேற்கொண்ட லேன்ஸ் நோயில் இருந்து விடுபட்டு, ‘நானே வெற்றி பெறுவேன்’ என்று சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ஆம்ஸ்ட்ராங்கின் வெற்றியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:
  நீண்ட நெடிய பயணமான வெற்றியை எட்டுவதற்குப் பல தடைகளைக் கடக்க நேரிடும். அதற்கு தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, நம்பிக்கையை இழக்காமல் உற்சாகமாக பயணத்தைத் தொடர வேண்டும்.
  உங்களுக்குத் தேவையானதில் மனதை ஒருமுகப்படுத்துங்கள்.
  வெற்றியைத் தேர்வு செய்யுங்கள்; ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள்.
  திருபாய் அம்பானியும் செயலின் சக்தியும்:
  உங்கள் எண்ணங்களுக்குத் தொடர் முயற்சிகளின் மூலமாக நிஜத்தில் வடிவம் கொடுப்பதே செயல். செயல் என்பது உங்கள் குறிக்கோளை அடைவதற்குரிய பணியைச் செய்வதைக் குறிக்கும். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்திற்கு சொந்தக்காரராகத் திகழ்ந்த திருபாய் அம்பானிக்கு ‘செயலின் சக்தி’ அவரை குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்த்தியது.
  கிராமத்து பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்த அம்பானிக்கு, 25 ஆண்டுகளுக்குள் உலகின் கோடீஸ்வர தொழில் அதிபர்களுள் ஒருவராக வலம்வர வேண்டும் என்று எண்ணினார். பெரிதாக யோசி, மாறுபட்டு யோசி, வேகமாக யோசி, முன்னோக்கி யோசி, சிறந்தவற்றிற்கு குறி வை என்றகொள்கையை நடைமுறைப்படுத்திச் சாதித்தார். திருபாய் அம்பானியின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
  இலக்குகளை அடையவும், கனவு நனவாகவும் செயல்களே வழிவகுக்கும்.
  ஒருவரது சிந்தனையும், செயலும் பெரிதாக இருக்க வேண்டும். அதுவே கனவுகள் நிறைவேறஉறுதுணை புரியும்.
  இலக்குகளை அடைவதற்கு ஒரு சிறு செயலின் மூலம் தொடங்கினாலே போதும். அந்தச் சிறு செயலே எண்ணங்கள் நிறைவேறபாதை அமைத்துத் தரும்.
  ஏழுமுறை விழு. எட்டாவதாக எழு என்றஜப்பானிய மொழிக்கு ஏற்ப இதுவரை தோல்வியே கண்டிருந்தாலும் இவர்களைப் போன்று சாதிக்க நாமும் அவர்கள் பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றுவோம். நாளை உலகம் நமக்கானது.

  ஒப்பனை – 2

  பல அடுக்கு மாடிக் கட்டிடங்களில் நடைபெறுகின்ற காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. MSB மல்ட்டி ஸ்டோர்டு பில்டிங்குகள் அவற்றை உருவாக்கும் தொழில்நுட்ப செயல்பாடுகள் என அனைத்துமே பிரமிக்கத்தக்க ஒப்பனைகள்தான். Nord / LB என்பது வடக்கு ஜெர்மனியில் உள்ளதொரு மிகப்பெரிய வங்கிக் கட்டிடம். கேன்ட்டிவர் (Cantelever) என்பது கட்டிடத்திலிருந்து நீண்டு நிற்கின்றதொரு அமைப்பு. உதாரணமாக ஜன்னலுக்கு மேலிருந்து நீண்டு நிற்கின்ற மழைச்சாரலைத் தடுக்கும் அமைப்பைக் கூறலாம். மேற்சொன்ன ஜெர்மானிய வங்கிக் கட்டிடத்தில் அவ்வாறான மிகவும் அசாதரணமான நீட்சியின் மீது பிரமிக்கத்தக்க கட்டிடம் அமைக்கப்பட்டு நின்றது. உடன் வந்திருந்த மராத்திய ஷோலாபூர் மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் ஒருவர் அக்கட்டிடத்தை காட்டி வியந்தார். Cantelever நீட்சி மீது ஏழு அடுக்குவரை கட்டிடம் கட்டப்பட்டு உயர்ந்து நின்றது.
  தேர்வுக்கான டிப்ஸ்கள் கொடுத்து மிக நீண்ட நாட்களாகிப் போகின்றன. எனவே ஒப்பனை தத்துவத்தில் இதுகுறித்துப் பேசுவோம். சமீபத்திய இ.ஆ.ப. தேர்வு கேள்வித்தாளைப் பார்த்தோம். இரண்டாம் தாள் சிரமம், எளிது. முதல்தாள் எளிது, சிரமம் என நண்பர்கள் அவரவருக்கு மனதில் பட்டதை சொல்லிக்கொண்டு இருந்தனர்.
  இரண்டாம் தாளில் பத்து கேள்விகள் முடிவெடுப்பது குறித்த கேள்விகள். அவற்றில் மட்டும் எதிர்மறை மதிப்பெண் கிடையாதாம். ஒருவேளை ஒவ்வொரு பதிலுக்கும் ஒவ்வொரு மதிப்பெண் வைத்திருப்பார்களோ? என்று யோசித்துப் பார்க்க வைத்தது கேள்விகள். உதாரணத்திற்கு ஒரு கேள்வியை எடுத்துப் பார்ப்போம். ஒரு விளையாட்டுப் போட்டியில் மாணவன் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையைப் பெற்ற பிறகு அவன் வயது மூன்று நாட்கள் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமெனத் தெரிய வந்தால் என்ன செய்வோம்? என்றொரு கேள்வி அதற்கு நான்கு மாற்று வாய்ப்புப் பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அ. கோப்பையைத் திரும்ப வாங்குவேன், ஆ. சகவாரிய உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிப்பேன், இ. இருக்கட்டும் என விட்டு விடுவேன் ஈ. மற்றொன்று என்றவாறு எல்லா பதில்களும் சரியானவைகளாகவே தெரியும் வண்ணம் இந்த சுவாரஸ்யமான கேள்வி அமைந்திருந்தது.
  நான்குமே மிகச்சரியாக இருக்கப்போவது இல்லை. எனவே மூன்று தவறான பதில்கள் தங்களை ஒப்பனை செய்துகொண்டு சரியானவை போல தோற்றமளித்து நம்மை ஏமாற்றும் முயற்சியில் இருக்கின்றன. ஆக சரியான பதில் தெரியவில்லை என்றால் கூட தேர்வில் வெற்றிபெற ஒப்பனையை கலைக்கும் கூர்மையான பார்வை இருந்தால் தவறான விடைகளை கழித்துக்கட்டி மதிப்பெண் பெறலாம். தவறான விடைகள் எப்படி “மல்டிபில் Multiple” சாய்ஸ் கேள்விகளில் உருவாக்கப்படுகிறன்றன? என்று யோசிக்க வேண்டும். அவை ஒரு திறமையான கேள்வித் தயாரிப்பாளரால் உருவாக்கப்படுகின்றன. அவரை நாம் தலைசிறந்த ஒப்பனையாளர் என்று கற்பனை செய்து கொள்வோம்.
  ஒரு ஊரில் இரண்டே முடிவெட்டுபவர்கள் இருந்தார்கள். அவர்களில் தலை கலைந்த ஒருவரையே புதிதாய் வந்த ஒரு வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்தார். ஏனென்றால் அழகான தலையோடு இருக்கும் சிகையலங்கார நிபுணருக்கு கேச வடிவமைத்ததே இவர்தான்! என்று ஒரு சிறிய மூளைக்கு வேலை கதை உண்டு…….. அதைப்போல ஒப்பனை செய்து சாய்ஸ்களை எப்படி உருவாக்குவார் என பாம்பின் கால் பாம்பறிவது போல கேள்வித் தயாரிப்பாளரின் மனநிலையை பதில் எழுதப் போகின்ற மாணாக்கன் தேர்வுக்கு தயாராகும் பொழுது ஆழமாக யோசித்து ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக முந்தைய வருட கேள்வித்தாள்களை வைத்து பயிற்சி எடுக்க வேண்டும். புதிதாக கேள்விகளை நாமே உருவாக்கிப் பார்ப்பது இன்னும் பலன் அளிக்கும்.
  என்ன? என்று ஒரு சொல்லை வாக்கியத்தின் இறுதியில் சேர்ப்பதோடு கேள்விகள் பிறந்துவிடுவதில்லை. நமக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர் நேர்முகத் தேர்வில் வைவா வோசி (Viva – Vo Cee), “நீங்க கேள்விகள் கேளுங்க? அதனோட தராதரத்திற்குத் தகுந்த மாதிரி நான் மதிப்பெண்கள் போட்டுக்கொள்கிறேன். எனக்கும் தெரியாத மாதிரி ஏதும் கேள்வி கேட்டுவிட்டால் முழு மதிப்பெண்கள் தருகின்றேன்” என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன்-
  வாஸ்தவமான பேச்சு. ஏனெனில் நல்ல கேள்விகளைக் கேட்பதற்கு, பதில் எழுதுவதைக் காட்டிலும் அதிகமாக புரிந்து படிக்க வேண்டும். குறிப்பாக பல வாய்ப்பு (Multiple choice) கேள்விகளைத் தயாரிக்கையில் அவற்றை கடினமாக்குவதற்காக கடைசிநேர ஒப்பனைகள் செய்யப்படுகின்றது.
  ஒரு சில நேரங்களில் கடந்த ஐந்து வருட கேள்வித்தாள்கள் அல்லது அதே ஆணையம் நடத்தும் பிற தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களில் வந்துள்ள கேள்விகளுக்கான சாய்ஸ்களில் லேசாக சிறுசிறு ஒப்பனைகள் செய்வதன்மூலம் பெரிய மாற்றத்தை விடைகளில் உருவாக்கி மதிப்பெண்கள் மாற்றப்படுகின்றன. இவற்றைக் கூர்ந்து கவனிக்கின்ற மாணவர்கள் வெற்றி பெறுகின்றார்கள். அதற்கான பயிற்சி மையம் வைத்துள்ள பயிற்றுனர்கள் இச்சிறு ஒப்பனைக் கலை குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவார்களேயானால் அவர்கள் நேரமும் மாணவர்கள் உழைப்பும் நேர்முக பலன்களைக் கொடுக்கும். விலங்கியல் பாடத்திட்டத்தில் இருந்தோ பழைய தேர்வு கேள்விகளில் இருந்தோ நேரடியான எடுத்துக்காட்டுக்களை நிறைய இங்கே காட்ட முடியும். ஆனால் அது கட்டுரையின் பொதுத் தன்மையை பாதித்துவிடும் என்பதால் இவ்விடத்தில் நிறுத்துகின்றோம்.
  இந்திய ஆட்சிப்பணி தேர்வில் முதனிலை முடிந்து முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் காலம் இது. நிறையப்பேர் ஓய்வு எடுக்கலாம் என்று கருதுகின்ற தருணம். ஓய்வு மிகவும் முக்கியமானது. ஆங்கிலத்திலே REST எடுக்கலாம் RUST பிடிக்கக்கூடாது என்று தோழி ஒருவருக்குச் சொன்னேன். ஓய்வுக்கும் சோர்விற்கும் வித்தியாசம் இருக்கின்றது. அறிஞர் அண்ணா அவர்களது கட்டுரை ஒன்றிலும் இது வரும். இரும்பு துருப்பிடிப்பது போல சோம்பல் ஓய்வு நேரத்தில் படரவிடக்கூடாது.
  தேர்வு முடிவுகள் வருகையில் சீறிப்பாய தயாராக புத்தகங்கள் சேகரிப்பதில் இறங்கியிருக்க வேண்டும். திட்டமிடுதல் கற்பனை செய்தல் இரண்டும் ஒரே மாதிரியான ஒப்பனைத் தோற்றங்களே. கட்டுப்படுத்தப்பட்ட கற்பனை திட்டமிடுதலாக மிளிர்கின்றது.
  எண்ணங்களை வலிமையாக்குங்கள் என்று விவேகானந்தர் அதனால்தான் சொல்யிருக்கின்றார். ஆழ்ந்த படிப்பு செய்வதற்காக தேர்ந்தெடுக்க வேண்டிய பாடப் பகுதிகளை (Portion) அகன்ற படிப்பை நூலகம் சென்று செய்வதன் மூலம் வெள்ளோட்டமிடலாம். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் புத்தகத்தின் (எந்த பாகம்?) ஒரு கட்டுரையில் அவர் இசையமைப்பாளர் (ஏ.ஆரா? இராசாவா?) அருகே அமர்ந்து ஒவ்வொரு இழையாக சிறு சிறு ஒலிகளை கோர்த்துப் பாடலை ஒப்பனை செய்வது குறித்து எழுதியிருப்பார். நாமும் நூலகம் சென்று பல்வேறு மூலப் புத்தகங்களில் இருந்து சுவையான, அழகான, தெளிவான, விளக்கமான, பிரகாசமான பகுதிகளை பொறுக்கி எடுத்து இந்தக் கேள்வி தேர்வில் வந்தால் எப்படி தேர்வாளரை அசத்தலாம் என்று கற்பனை செய்து திட்டமிட்டு வைத்துக்கொள்வதற்காக இந்தக் காலகட்டத்தை வைத்துக் கொள்ளலாம். இது படிப்பதை நேசித்தால் இயல்பாக வரும். அம்மா மகளை ஒப்பனை செய்து அழகு படுத்துவதைப்போல நமக்குப்பிடித்த பதில்களை பல மிளிரும் அலங்காரமான மேற்கோள்கள், அறிஞர் பெயர்கள், தத்துவங்கள், ஊர், இடம், பொருள் பெயர்கள், மாற்றுப் பெயர்கள் சாதாரணமாக புத்தகங்களில் இல்லாத கோணத்தில் உள்ள விளக்கப் படங்கள் முதலியவை மூலம் மிகவும் அழகுபடுத்தலாம். இவைகளே ஒப்பனைப் பொருட்கள். சரியான பதில்களில் சரியான அளவில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இதுபோல படிப்பு வாழ்வு முழுவதும் எண்ணற்ற தகவல்களை நமக்கு அளித்த வண்ணமே இருக்கின்றது. உள்ளமும் உடலும் ஒப்பனை செய்துகொள்கையில் விளைவு அழகானதாக இருக்கும். மன ஒப்பனைக்கு விழைவோம்!
  மீண்டும் சீனி, வேகமாக சாப்பிட்டு முடித்தது என்ன? என்பதை பார்ப்போம். அது ‘குட்டி’ என்று செல்லமாக அழைக்கப்படும் பொமரேனியன் நாய்க்குட்டி சாப்பிடுவதற்காக தயாரிக்கப்பட்டிருந்த உணவே. ஏதோ வித்தியாசமாதான் இருந்தது என்று சுவையைப்பற்றி பின்னர் விவரித்த சீனியை ஒப்பனை ஏமாற்றிவிட்டது அல்லது தானாய் ஏமாந்துவிட்டார். பொம்மி, ‘பிஸி’ (Busy) என்று காட்டுவது ‘caller tone’ காலர் டோன் தான் என்பதை இன்னேரம் கண்டுபிடித்திருப்பீர்களே… அடுத்த மாதம் ‘இரகசியமாக’ சந்திப்போம்

  பாலைவனமாவதைத் தடுக்க… நிலத்தடி நீர் சேமிப்போம்!

  நமக்கு குடி தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால், பெரும்பாலும் வரும் பதில், கோவை மக்களிடமிருந்து சிறுவாணி என்றும், திருப்பூர் மக்களிடமிருந்து பரம்பிகுளம் என்றும், ஈரோடு மக்களிடமிருந்து காவிரி ஆறு என்றும், சேலம் மக்களிடமிருந்து மேட்டூர் அணை என்றும், சென்னை மக்களைக் கேட்டால் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் வீராணம் திட்டம் என்றும் பலவகையான குடிநீர் குழாய்களிலிருந்து வீட்டுக்கு வரும் தண்ணீர் வழங்கும் திட்டத்தைத் தான் கூறுவார்கள்.
  ஆனால் மழைநீர் எப்படி நிலத்தடி நீராக, குளங்கள், அணைகளில் குடிநீராகச் சேமிக்கப்படுகிறது என்பதைப் பற்றி பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. அப்படித் தெரிந்தாலும் இதை அதிகரிக்க வழிகள் என்பது பற்றி சிந்திப்பதும் இல்லை.
  தற்போது பருவமழை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி, இதனால் விவசாயம் செய்ய ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை, அதன் மூலம் நெல் போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை விளைவிக்க முடியாமல் போவது, குடிநீர் பற்றாக்குறை, இவை அனைத்திற்கும் காரணம் பருவமழை காலத்தில் நாம் தண்ணீரைச் சரியாக சேமிக்க தவறியது தான் முக்கியக் காரணம் ஆகும்.
  இந்த நீர் சேமிப்பு தான் ஒரு நாட்டை பாலைவனம் ஆக்கும் பேராபத்தில் இருந்து காக்கக் கூடிய வழிமுறையாகும். ஒவ்வொரு முறையும் பருவ மழை பெய்யும்போது நிலத்தில் உள்ள நீர் ஓடைகள், குளம், குட்டை, ஆறுகள் என்று அனைத்திலும் சென்று பிறகு கடல் நீரில் கலக்கிறது.
  ஒவ்வொரு வருடமும் நாம் வீணாகக் கடலில் சேர்க்கும் நீரின் அளவை கணக்கிட்டுப் பார்த்தால், நீரை நாம் சேகரித்து இருந்தால் வளமான, தண்ணீர் அதிகம் உள்ள மாநிலமாக இருந்திருக்கலாம். கங்கை காவிரி இணைப்பு என்ற முயற்சி கூட நீர் நிலைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் நீர் வளத்தைப் பெருக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும்.
  தற்போது கோவை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் நிலத்தடி நீர் 1000 அடி தாண்டி ஆழமாக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் எடுத்து விவசாயம், குடிநீர் போன்றவற்றிற்காகப் பயன்படுத்துகிறார்கள். குறைந்தது 50 அடி ஆழம் உள்ள கிணறுகள் கடந்த பத்து ஆண்டுகளில் 100 அடி ஆழ கிணறுகளாக மாறிவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த அதே அளவு நீர் தான் அந்தப் பகுதியில் இருக்கிறது. இந்த நீரை அதிக ஆழம் கிணறு தோண்டிய அல்லது ஆழ்குழாய் கிணறு அமைத்த சிலருக்கு மட்டுமே அதிக நீர் கிடைக்கிறது. மற்றவர்கள் கிணறு ஆழப்படுத்த முடியாமல், ஆழ்குழாய் கிணறு தோண்ட முடியாமல் உள்ளவர்களுக்கு நிலத்தடி நீர் கிடைப்பதில்லை. இருக்கின்ற நீரை மட்டும் பயன்படுத்த வேண்டிய நிலையில் சிலர் இருக்கின்றனர். எனவே நீரை சேமிக்காமல், குறைந்து கொண்டே போகும் நீருக்காக சண்டை போட்டுக் கொள்ம் நிலை தற்போது இருக்கிறது.
  ஏன் இந்த நிலத்தடி நீர் குறைபாடு? ஏன் நம்மால் இதைச் சேமிக்க முடியவில்லை? ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குளம், ஏரி போன்ற நீர்பிடிப்பு பகுதிகள் இருக்கும். இவை அனைத்தும் கிராம பஞ்சாயத்துக்கள் கவனிக்கும் முறையில் தான் இருக்கிறது. இந்த ஏரி, குளங்களுக்கு நீர் வருவதற்கு ஓடைகள் இருக்கும்
  நாம் நமது ஊரில் உள்ள ஏரி அல்லது குளங்களை 20 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அந்த ஏரி, குளங்கள் அப்படியே அதே அளவில் இருக்கிறதா என்றால், இல்லை. அதன் அளவு குறைந்து போயிருக்கும். ஏரிகளுக்கு வரும் ஓடைகள் முன்பிருந்த அளவில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதா? எனக்கேட்டாலும் இல்லை என்றே ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.
  இதற்குக் காரணம் குடியிருப்புகளின் ஆக்கிரமிப்பும், ஓடைகளில் இருந்து வரும் வண்டல் மண் (Silting) நாளுக்கு நாள் குளம், குட்டைகளில் வந்து படிவதும் குறைந்துமே. இதனால் தற்போதுள்ள பெரிய அணைகளின் நீர்தேக்க அளவும் குறைந்து கொண்டு தான் வருகிறது.
  மேலும், நாளுக்கு நாள் ஏற்படும் மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக தண்ணீர் தேவையும் அதிகரித்து வருகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் போக்குவரத்து சாலைகள், அடுக்குமாடி கட்டிடங்களால் பல நீர் நிலைகளின் இணைப்புகள் துண்டிக்கப் படுகிறது. இதனால் ஒரு ஏரி, குளத்தில் இருந்து மற்றொரு குளத்திற்கு நீர் செல்ல முடியாமல், வெள்ளப் பெருக்கு, சேதம் ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. ஆறுகளையும், ஓடைகளையும் முறையாக பராமரித்துப் பயன்படுத்தி வந்திருந்தால் நிலத்தடி நீர் தேவையான அளவிற்கு சேமிக்கப் பட்டிருக்கும்.
  ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு சிறிய அளவில் தாங்கள் வசிக்கும் வீடுகளில் நிலத்தடி நீரை சேமித்தால் மட்டுமே நாளைய தலைமுறையினர் தண்ணீர் பற்றாக்குறை இன்றி வாழ முடியும். நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்க பல முயற்சிகளையும், ஆராய்ச்சிகளையும் தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஆனால் அவர்களது முயற்சிக்கு மக்களது தண்ணீருக்கான விழிப்புணர்வும் இருந்தால் மட்டுமே முழுவதுமான முயற்சிகளைச் செயல்படுத்த முடியும்.
  நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழ் உள்ள இடங்களை சிவப்புப் பகுதி (Red Zone) என அரசு அறிவித்துள்ளது. நிலத்தடி நீர் அபாயகரமான பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஏரி, குளங்கள் தூர்வாரும் திட்டம், மலைப்பகுதிகள் நீர் சேமிப்புத் திட்டம், வீடுகளில் நிலத்தடி நீர்த்திட்டம் எனப் பல திட்டங்கள் இருந்தும் நீரின் முக்கியத்துவத்தை அறியாமல் இருப்பது கவலைப்பட வேண்டிய விசயமாக உள்ளது. “வானம் பொழிகிறது! பொழிந்த நீர் எங்கே செல்கிறது?”