Home » Post » சாலையோர உணவகங்கள் – எச்சரிக்கை ரிப்போர்ட்

 
சாலையோர உணவகங்கள் – எச்சரிக்கை ரிப்போர்ட்


ஆசிரியர் குழு
Author:

இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது நண்பர் தனக்கு அடிக்கடி சிறுநீர் ரத்தமாகப் போகிறது என்று சொல்லி மருத்துவரிடம் சென்றான். சிகிச்சை தரும்போது பிரச்சனை சரியாவதும், சில வாரங்களில் மீண்டும் அதே பிரச்சனையுடன் அவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. எத்தனையோ பரிசோதனைகள் செய்து பார்த்தும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. இறுதியில் அவனுடைய உணவுப்பழக்கத்தை பற்றித் தீவிரமாக விசாரித்தபோது தான், தினமும் மாலை நேரங்களில் வேலையைவிட்டு வீட்டிற்கு வரும்போது வழியில் உள்ள சாலையோர உணவுக்கடையில் ‘சில்லி சிக்கன்’ சாப்பிட்டு வருவது புரிந்தது.
இந்த உணவுப்பழக்கம் தான் அவருக்கு பிரச்சனையைத் தோற்றுவித்துள்ளது. எப்படியென்றால் ‘சில்லி சிக்கன்’ உணவிற்கு நிறத்தைக் கொடுப்பதற்காக ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துவார்கள். அந்த வேதிப்பொருளை பயன்படுத்துவார்கள். அந்த வேதிப்பொருள்தான் அவருடைய சிறுநீரகத்தைப் புண்ணாக்கி ரத்தம் கசிய வைத்தது என்று உறுதிசெய்யப்பட்டு, அந்த உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். இப்போது அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையும் தீர்ந்துவிட்டது.
பொதுவாக சாலையோரக் கடைகளில் உணவுகள் சாப்பிடுபவர்கள் ஏழைகள் தான். அவர்கள் தான் இத்தகைய உணவகங்களால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மலிவு விலை என்பதால் சாப்பிட்டுவிட்டு, பின்னர் மருத்துவமனைக்கு செலவு செய்ய வேண்டிய நிலைமைக்குச் சென்றுவிடுகிறது ஏழைகளின் வாழ்க்கை.
நீர் சுத்தமில்லாதது, சமைத்த உணவைச் சுத்தமாகப் பாதுகாக்காமல் வைப்பது, உணவில் கலப்படம் போன்றவற்றால் தொற்றுநோய்களின் ஆதிக்கம் இத்தகைய மக்களைப் பெரிதும் ஆட்டிப்படைக்கிறது. சுகாதாரமற்ற முறையில் அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தியே காபி, பால், தேநீர், வடை, பஜ்ஜி, போண்டா, இட்லி, பிரியாணி, புரோட்டா, இறைச்சி, மீன் இப்படி அனைத்து வகையான உணவுகளையும் விற்பனை செய்கிறார்கள். இத்தகைய கடைகளில் தண்ணீரை வைத்திருக்கும் பாத்திரங்களைப் பார்த்தீர்களானால் அழுக்கடைந்து போன பிளாஸ்டிக் குடங்களாகவும், சமைக்கவும், சாப்பிடவும் பயன்படுத்தப்படும் பாத்திரங்களும், தட்டுக்களும் சுத்தம் என்றால் என்ன என்று எதிர்கேள்வி கேட்கும்.
அதேபோல் தள்ளுவண்டியில் உணவு வியாபாரம் செய்பவர்கள், சமைத்த உணவை மூடி பாதுகாப்பாக வைப்பதில்லை. குறிப்பாக மீன், இறைச்சி போன்றவற்றைத் துண்டுகளாக்கி மசாலாவைத் தடவி, சிவப்பு நிறத்திற்காக வேதிப்பொருளை பூசி நுகர்வோரைக் கவர்வதற்காகத் திறந்த பாத்திரங்களில் அப்படியே பாதுகாப்பு இல்லாமல் வைத்திருப்பார்கள். இப்படி வைத்திருக்கும்போது சாலைகளில் இருந்து கிளம்பும் புழுதியும், வாகனங்களில் இருந்து வரும் கரும் புகையும் இந்த உணவுகளில் படிந்து விடுவதும் வாடிக்கைதான்.
இப்படிப்பட்ட சுகாதாரமில்லாத உணவுகளை உண்பதால் பாக்டீரியா முதல் ஏற்படும் டைபாய்டு, காலரா போன்ற நோய்க்கும், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலையும், அமீபா கிருமிகளால் வாந்திபேதியும், சீதபேதியும் ஏற்படும் அபாயம் அதிகம். இதைத்தவிர செரிமானக் கோளாறு, நெஞ்சில் எரிச்சல், வயிற்றில் உப்புசம், அல்சர் போன்றவையும் ஏற்படும்.
பல நேரங்களில் இத்தகைய கடைகளில் சமையல் செலவைக் குறைக்கும் நோக்குடன் தேங்காய் எண்ணெய்யுடன், பெண்களின் அழகு சாதனைப் பொருள்களைத் தயாரிக்கப்பயன்படும் அரிசித் தவிட்டிலிருந்து எடுக்கும் எண்ணெயையும் கலந்து சமைப்பதுடன், இறைச்சியை சீக்கிரமாக வேகவைப்பதற்காக காய்ச்சலுக்குத் தரப்படும் ‘பாராசிட்டமல்’ மாத்திரைகளைப் பயன்படுத்துவதும் நடக்கிறது. இந்தியாவில் இத்தகைய சுகாதாரமற்ற உணவுகளை உண்பதால் சிறுநீரகம் கெட்டுவிடுவதும், இரைப்பை, குடல், கணையப் புற்றுநோயும் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்று உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது.
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் கூட இத்தகைய உணவகங்கள் உள்ளன. ஆனால் அங்கு அவர்கள் கடைபிடிக்கும் சுத்தம் நமது வீட்டில் கூட அப்படி இருக்கமாட்டோம் என்று அங்கு நேரில் சென்று பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் சமைத்த உணவை எப்போதும் சூடாக வைத்திருப்பார்கள். உணவைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து ஈக்கள் மொய்க்காதவாறு பாதுகாத்திருப்பார்கள். மினரல் வாட்டரைத்தான் பயன்படுத்துவார்கள். இத்தகைய சிறிய நாடுகளில் கூட இவ்வளவு சுகாதாரம் கடைபிடிக்க முடியும் போது நம்மால் முடியாதா? கண்டிப்பாக முடியும். சரியான திட்டமிடலும், தெளிவான சட்டங்களும், மக்கள் ஆரோக்கியத்தின் மேல் அரசுக்கு அதிக அக்கறையும், சமுதாயக் கடமையும், உடல் நலன் குறித்த விழிப்புணர்வும் இருந்தால் கண்டிப்பாக முடியும்.
இந்திய அரசின் சுகாதாரத்துறை முறைப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொற்றுநோய் தடுப்புக்கு இப்போது செய்யும் செலவை விட இன்னும் பல நூறு கோடிகளை ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். சிந்திக்குமா அரசு?

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2012

ஏமாற்று வேலைகள்…..எச்சரிக்கை நடவடிக்கைகள்!
சாதிக்கலாம் வாங்க
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக வேண்டுமா?
உலக மக்கள் தொகை தினம்
விவசாயத்தின் இப்போதைய தேவை
எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!!
விவசாயம் + தொழில்நுட்பம்
wifi வலையமைப்பு
அம்மாவின் கைகள்
பாதை மாறிய பயணங்கள்
அந்நிய முதலீடும் பண வீக்கமும்
உற்சாக ஊற்று உங்களுக்குளே
மாறுவேஷம்
உங்களால் முடியும்
எழவேண்டும் தன்னம்பிக்கை கலாச்சாரம் …