Home » Post » மாற்றத்திற்கு ஆசைப்படு…

 
மாற்றத்திற்கு ஆசைப்படு…


ஆசிரியர் குழு
Author:

மேலைநாடுகள் ஒவ்வொன்றுக்கும் இன்று வரையிலும் இந்தியா என்பது ஒரு அதிசய நாடே..

இன்னும் சொல்லப்போனால் ஆச்சரியமான நாடும் கூட. இத்தனை ஏற்றத்தாழ்வுகள், மொழிகள், மதங்கள், ஜாதிப்பிரிவுகள், குழப்பங்கள், போராட்டங்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், லஞ்சம், ஊழல் என்று தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போது எந்த புரட்சியும் நடக்காமல் இன்னமும் ஏன் இந்த மக்கள் இத்தனை சகிப்பாளர்களாக இருக்கிறார்கள் என்று உள்ளுக்குள் தோன்றும்.

பரம ஏழை, ஏழை, அன்றாடம் உழைத்தால் தான் வாழ வேண்டிய வர்க்கம், நடுத்தரவர்க்கம், சற்று வருமானம் உள்ள நடுத்தரவர்க்கம், பணக்காரன், லாப நட்டத்தால் பாதிப்படையாத பணக்காரர்கள், ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் பணம் படைத்தவர்கள் என்று ஏராளமான சமூக முரண்பாடுகள் உள்ள இந்தியாவில் நாட்டின் நிலம் முதல் நடக்கும் ஊழல் வரைக்கும் எல்லாமே பெரிது.

ஆயிரம் பேர்கள் ஒரே சமயத்தில் இறந்தால் கூட ஜனத்தொகையின் அடிப்படையில் நமக்கு ஒரு செய்தியாகத் தான் இருந்து தொலைக்கின்றது.

அடுத்து ஐந்து ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் எவ்வாறு ஆட்சி செய்யப் போகிறார்கள் என்பதை கூறும் தேர்தல் அறிக்கை இப்போது சற்று மாறுதலாகி உங்களுக்கு நாங்கள் என்னன் இலவசமாக தரப்போகின்றோம்? என்பதை கூறக்கூடிய அறிக்கையாக மாறியுள்ளது.

இன்று நாம் காணும் இலவசங்கள் மலிந்த தேர்தல் அறிக்கைகள் எரிச்சலை உருவாக்குவதை விட பொது மக்களுக்கு அடிக்கடி தேர்தல் வரக்கூடாதா? என்ற ஏக்கத்தை தான் அதிகபடுத்துகின்றது. காரண்ம நாம் எதிர்பார்ப்பதும் அதுவே தான்.

முடிந்தவரையிலும் அத்தனை கட்சியிலும் என்னன்ன வாங்கிக் கொள்ள வாய்ப்புண்டு என்பதை மனதிற்குள் பட்டியலிட்டு வைத்துக் கொண்டு தயாராக இருக்கிறார்கள்.

ஏன் இத்தனை மாற்றங்கள்?

ஏற்கனவே தேர்ந்தெடுத்தவர் தொகுதிக்காக என்ன செய்தார்? தாலியை அடகு வைத்து கெஞ்சிக் கொண்டு வந்து நின்றாரே? இப்போது இவ்வளவு பெரிய சொத்துக்கு அதிபதியாக இருக்கிறாரே? எப்படி சம்பாரித்தார்? இவர் எப்படி சட்டத்தில் மாட்டாமல் இருக்கிறார்? தரங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தவன் இப்படி வெட்கம் இல்லாமல் வந்து நிற்கின்றானே? இவனைச் சுற்றிலும் எப்போதும் ஒரு வெட்டிக்கும்பல் சுற்றிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து முதல் காலி செய்வது வரைக்கும் செய்து கொண்டு இருந்தார்களே? ஐயோ, இவர்களை தேர்ந்தெடுந்தால் அடுத்த ஐந்தாண்டும் நமக்கு அதோகதிதான்.

யாராவது இப்படி யோசித்துள்ளார்களா? இல்லை எதிரே வந்து நிற்கும் போது அந்த வேட்பாளரிடம் கேட்கும் தைரியம் தான் வருமா? வராது? ஏன்?

காரணம் பணத்திற்காக எதையும் செய்யலாம் என்ற இயல்பான குணாதிசியம் மெதுமெதுவாக பரவிக் கொண்டிருக்கிறது. பணத்தை மட்டுமே மதிபபீடு செய்யும் சமூக கட்டமைப்பு உருவாகிக் கொண்டிருப்பதால் பணம் வைத்திருப்பவன் பரம யோக்கியனாகவும், இல்லாதவன் எதற்கும் லாயக்கு இல்லாதவனாகவும் ஆகிவிட்டான்
.

ஒரு நடுத்தர வர்க்கம் பார்வையில் இந்தியாவில் வாழ எந்த பிரச்சனையும் இல்லை. எந்த மொழி வேண்டுமானாலும் பேசலாம். இந்தியாவின் எந்த பகுதிக்கு வேண்டுமானலும் சுதந்திரமாக போகலாம். நம் கையில் காசு இருந்தால் எந்த தொழில் வேண்டுமானலும் தொடங்கலாம் உருவாக்கலாம் வளர்க்கலாம். மொத்தத்தில் நாம் விரும்பும்படி வாழலாம். விரைவாக முன்னேற எதை வேண்டுமானாலும் வளைக்கலாம். கணக்கற்ற பணம் இருந்தால் சட்டத்தின் சந்து பொந்துக்களை உடைக்கலாம். ஒட்டலாம்.

பார்க்க தொலைக்காட்சி உண்டு. அழுது தீர்க்க நெடுந்தொடர் உண்டு. யோசிக்காமல் இருக்க நகைச்சுவை காட்சி உண்டு. இதுவும் வேண்டாம் என்றால் திகட்ட திகட்ட திரைப்படக் காட்சிகளை மட்டுமே கண்டு களிக்க 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருக்கும் சேனலும் உண்டு. அவன் சரியில்லை என்று இவனும், இவன் கொள்ளைக்காரன் என்று அவனுமாய் லாவணி பாடும் செய்தி தொகுப்புரைகளும் உண்டு. பல சமயத்தில் இது குறித்தே பேசப்படும் பரப்புரைகளும் உண்டு. இது எதுவுமே வேண்டாம் என்றால் நிம்மதியான டாஸ்மார்க் உண்டு.

ஆறுமாதங்களில் இருபது ரூபாய் கூடக் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கும் பெட்ரோல் விலை எதுவும் நினைவுக்கு வராது. அச்சமூட்டும் விலைவாசி உயர்வு அத்தனையும் மறந்து போயாச்சு. அடித்த கொள்ளையின் எண்களை கூட எண்ணத் தெரியாமல் திகைத்த திகைப்பு கூட மாறிவிட்டது.

எல்லாவற்றையும் விட பீடிக்கு லாட்டரி அடித்தவன் சொகுசாய் காரில் வலம் வருவதைப் பற்றி யோசிக்க கூட நினைப்பு வரவில்லை. காரணம் இலவசத்தை எதிர்பார்த்து எதார்த்த வாழ்க்கையை விட்டு விட்டு எவன் வருவான்? எதைத் தருவான் என்று யோசிப்பு மட்டுமே இந்த தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு வாக்காளர்கள் மனதிலும் ஓடிக்கொண்டிருப்பதால். வீடு தேடி வந்து தருபவனை கெடுப்பவர்களை அடிக்க ஓங்கும் கைகள் என்றுமே ஒன்று சேராது. காரணம் அவ்வாறு சேரக்கூடாது என்பதற்காகவே போட்டி போட்டுக் கொண்டு ஆற்றில் ஓடும் நீரை அம்மா நீ கொஞ்சம் குடி. அய்யா நீ கொஞ்சம் குடி என்று மாற்றி மாற்றி பழக்கப்படுத்தியாகி விட்டது.

நமக்கு வேறென்ன வேண்டும் ?

எது தான் இங்கு இல்லை? எல்லாமே உண்டு. மொத்தத்தில் எந்த சூழ்நிலையிலும் எது குறித்தும் ஆழ்ந்து யோசிக்காமல் இருக்க, தன்னிலை மறந்து வாழ கற்றுக் கொண்டால் இந்த நாடு தகுதியான நாடு தான்.

யோசித்தால் தான் மண்டையிடி. ஆழ் மனதில் உருவாகியுள்ள அழுக்குகளை சுரண்டிப் பார்க்க விருப்பமில்லாமல் வாழும் ஒவ்வொரு தனிமனிதர்களைப் போலவே இது தான் சரி என்று வழிநடத்தும் தலைவர்களும் நமக்கு அமைந்திருப்பதால் நம் ஜனநாயகத்திற்கு என்றுமே அழிவில்லை.

காரணம் நம் ஆசைகள் அதிகம். அதற்கான உழைப்புகள் என்பது மிகக் குறைவு. நாம் அளவுக்கு அதிகமாக ஆசைப்படக்கூடாது. தகுதியானவர்கள் நமக்கு தலைவர்களாக வர வேண்டும் என்று?

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2012

ஏமாற்று வேலைகள்…..எச்சரிக்கை நடவடிக்கைகள்!
சாதிக்கலாம் வாங்க
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக வேண்டுமா?
உலக மக்கள் தொகை தினம்
விவசாயத்தின் இப்போதைய தேவை
எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!!
விவசாயம் + தொழில்நுட்பம்
wifi வலையமைப்பு
அம்மாவின் கைகள்
பாதை மாறிய பயணங்கள்
அந்நிய முதலீடும் பண வீக்கமும்
உற்சாக ஊற்று உங்களுக்குளே
மாறுவேஷம்
உங்களால் முடியும்
எழவேண்டும் தன்னம்பிக்கை கலாச்சாரம் …