Home » Articles » சாதிக்கலாம் வாங்க

 
சாதிக்கலாம் வாங்க


பிரசன்னா வெங்கடேஷ்
Author:

2012ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் 6வது ரேங்க் பெற்று சாதனை புரிந்துள்ளார் திரு. பிரசன்ன வெங்கடேஷ். தன்னுடைய அம்மா இறந்த 3 நாட்களில் முதன்மைத் தேர்வை எதிர்கொண்டு இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
எப்படி முடிந்தது இந்தச் சாதனை… இதற்காகப்பட்ட கஷ்டங்கள் என்னென்ன… இது எத்தனை ஆண்டு கனவு… என்று பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டதிலிருந்து….

ஐ.ஏ.எஸ். என்றஇலக்கை எப்போது முடிவு செய்தீர்கள்?
ஐ.ஏ.எஸ். என்ற இலக்கை என் மனதில் பதியம் போட்டு வளர்த்தது என்னுடைய அப்பா வெங்கட்ராமன் அவர்கள் தான். நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே ஐ.ஏ.எஸ். என்றகனவை என்னுள் அவர் விதைத்தார். தற்போது அவரின் கனவு நனவாகி உள்ளது. “நீ என்னவாக ஆக வேண்டும் என நினைக்கிறாயோ, அதுவாகவே நீ ஆவாய்” என்ற விவேகானந்தரின் சொற்களுக்கு ஏற்ப என்னுடைய கனவான ஐ.ஏ.எஸ். தற்போது நனவாகி உள்ளது.
ஐ.ஏ.எஸ். என்ற இலக்கு நோக்கிய பயணத்தில் தங்களின் முன் தயாரிப்பைப் பற்றி…
திருச்சியில் பிளஸ் 2 முடித்த பிறகு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. அக்ரி எடுத்து படித்தேன். அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பலர் ஏற்கனவே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். அவர்களுடைய வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் பல எங்கள் பல்கலையில் நடந்தது. அவர்களின் அனுபவங்கள் எனக்கு ஒரு உத்வேகத்தைத் தந்தது. அவர்களின் பேச்சுக்கள் எனக்குள் இருந்த ஐ.ஏ.எஸ். என்ற தீயை தூண்டிவிட்டது. ஐ.ஏ.எஸ். தேர்வை எப்படி எதிர்கொள்வது? எத்தகைய முன் தயாரிப்புகளை மேற்கொள்வது? எப்படி பயிற்சி செய்வது? என்றபல கேள்விகளுக்கு விடையாகக் கிடைத்தது அவர்களின் பேச்சுக்கள். அவர்களின் வழிகாட்டுதல் படி பாடங்களைத் தேர்வு செய்து படித்தேன்.
தங்களின் வெற்றிக்கு ‘இன்ஸ்பரேசன்’ என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?
என்னுடைய ‘இன்ஸ்பரேசன்’ என்றால் திரு. சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., திரு. இறையன்பு, ஐ.ஏ.எஸ். மற்றும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் திரு. டி. சங்கர் அவர்கள் தான். திரு. சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ். மற்றும் திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ். போன்றவர்களின் ‘மோட்டிவேசன் ஸ்பீச்’ எனக்குத் தன்னம்பிக்கையைத் தந்தது. குறிப்பாக, திரு. சங்கர் அவர்களின் வழிகாட்டுதல்கள் எனக்கு பெரிய உந்து சக்தியாக இருந்தது. ‘உன்னால் முடியும்’, ‘நீ இதைச் சாதிப்பாய்’ என்று கூறி தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுத்தவர் திரு. சங்கர் அவர்கள்.
தமிழ் வழியில் படித்த நீங்கள் தேர்வை எதிர்கொள்ளும்போது கடினமாக இருந்ததாக உணர்ந்தீர்களா?
என்னைப் பொறுத்த அளவில் மொழி ஒரு பிரச்சனையே இல்லை. முடியும் என்ற எண்ணமும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால் போதும். எந்த மொழியில் கல்வி கற்றிருந்தாலும் வெற்றி பெறமுடியும். முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன்.
வேளாண்மைக் கல்வி கற்ற நீங்கள் பொது நிர்வாகம் மற்றும் புவியியல் பாடங்களை விருப்பப் பாடங்களாக எடுத்து எப்படிச் சாதிக்க முடிந்தது?
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்டிப்பாக பொது நிர்வாகத்தைத் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் பொது நிர்வாகத்தைத் தேர்ந்தெடுத்தேன். இரண்டு மாதங்கள் மட்டுமே இந்தப் பாடத்தை படித்துத் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். புவியியல் தேர்விற்குக் காரணம் திரு. சங்கர் அவர்களின் வழிகாட்டுதல். மிக எளிமையாகக் கற்றுத்தந்தார். அவரின் தொழில்நுட்ப வழிகாட்டல் தான் அந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறஉதவியது. என்.சி.ஆர்.டி. ருபான்ற மத்திய அரசு வெளியிடும் நூல்கள் புவியியல் பற்றிய புத்தகங்கள் மற்றும் ஹிந்து ஆங்கில நாளிதழ் போன்றவை உதவின. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களைப் படித்ததால் ஒரு Basic Idea கிடைத்தது.
எப்படி முதன்மைத் தேர்வை எதிர்கொண்டீர்கள்?
ஒவ்வொரு வெற்றிக்கும், சாதனைக்கும் உந்துசக்தியாக விளங்கிய என்னுடைய அம்மா மஞ்சுளா அவர்கள் முதன்மைத் தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அதுவும் தவிர எனக்கு 1000F காய்ச்சல். இத்தகைய கடினமான சூழ்நிலை ஒருபுறம். எப்படியாவது இந்தத் தேர்வை எழுதி சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் மற்றொரு புறம்.
பெரிய மனப்போராட்டத்திற்கு இடையே முதன்மைத் தேர்வை எதிர்கொண்டேன். இறுதியில் வெற்றியாக முடிந்தது. எனக்கு கிடைத்த இந்த வெற்றிக்கு இடையூறாக இருந்த தடைகளை எல்லாம் வெற்றிப் படிக்கற்களாக மாற்றி வெற்றி பெற்றிருக்கிறேன் என்றால் அதற்கு என் அம்மாவின் ஆசி தான் காரணம் என்று நினைக்கிறேன். திடமான மனத்தையும், தன்னம்பிக்கையையும் என்னுடைய அம்மா எனக்குக் கற்றுக்கொடுத்திருந்ததால் மெயின் தேர்வில் என்னால் வெற்றி பெறமுடிந்தது.
நேர்முகத் தேர்வை எப்படி எதிர்கொண்டீர்கள்?
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற அர்ப்பணிப்பு உணர்வும், ஆளுமைத் திறனும் வேண்டும். பன்முகத் தன்மையைப் பரிசோதிக்கும் களமாகவே நேர்முகத் தேர்வு இருக்கும். அதைப்போலவே தான் எனக்கும் இருந்தது. நேர்முகத் தேர்வில் நான் எதிர்கொண்ட கேள்விகளில் முக்கியமானது, வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வறுமையின் பிடியிலேயே இருக்கக் காரணம் என்ன? அதைத் தீர்ப்பதற்கு என்ன வழி? என்னுடைய பதிலாக, “இத்தகைய பிரச்சனைக்குக் காரணம் இடைத்தரகர்கள் தான். உற்பத்தியில் பங்கு கொள்ளாத அவர்களுக்குத் தான் இலாபத்தில் பெறும் பகுதி செல்கிறது. அத்தகைய இடைத்தரகர்களின் தலையீட்டை குறைத்தால் மட்டுமே இத்தகைய பிரச்சனைகளைச் சரிசெய்ய முடியும்.
ஒரு பக்கம் தானியங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் மக்கள் பசியுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையே ஒரு பாலமாகவும், ஒரு தொடர்பாளனாகவும் (Link) நான் இருந்து இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பேன்” என்று கூறினேன்.
மற்றொரு கேள்வி, விவசாயிகளின் தற்கொலை பற்றியது. “சரியான விலைக்கொள்கை இல்லாததது தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளக் காரணம்.
உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு ஏற்றவிலை நிர்ணயம் செய்ய வேண்டும். விளைச்சலுக்குச் சரியான விலை நிர்ணயம் செய்தால் இத்தகைய தற்கொலைகளைத் தடுக்கலாம்” என்பதை என்னுடைய பதிலாகக் கூறினேன்.
இப்படிப் பல கேள்விகள் நடைமுறையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கத் தேவையான தீர்வுகளை முன்வைத்தே அமைந்தது.
இந்தச் சாதனைக்குப் பின்னால் இருந்தவர்களைப் பற்றி…
என்னுடைய சாதனைக்கு உறுதுணையாக இருந்தது சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் திரு. சங்கர் அவர்கள். மற்றொரு பக்கபலம் என்னுடைய சகோதரர் திரு. அம்சராஜன். பொருளாதாரத்திலிருந்து பல வகையிலும் எனக்கு உதவியவர். நான் சோர்வடையும் போதெல்லாம் தோள் கொடுத்து என் கஷ்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட எனது நண்பர்கள் பாலா, ஐயப்பன், பார்வதி. இவர்களின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் மற்றும் உதவிகளே என் வெற்றிக்குக் காரணம். இவர்களையெல்லாம் இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு தங்களின் பங்களிப்பு எப்படிப்பட்டதாக இருக்கும்?
இந்த நாடு தான் எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்தது. இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் முடிந்தவற்றைச் செய்ய வேண்டும். என்னுடைய படிப்பு இந்த நாட்டிற்காகத்தான் பயன்பட வேண்டும் என்பது தான் என் இலட்சியம். குறிப்பாக, விவசாயத்தை மேம்படுத்தி விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கல்விக்காக பாடுபட வேண்டும். இதுவே என்னுடைய எதிர்கால இலக்காக இருக்கும்.
ஐ.ஏ.எஸ். எழுதக் காத்திருப்போருக்கு தாங்கள் கூறுவது…
நம்மால் முடியும் என்ற மன நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு விடாமுயற்சியுடன் முழுமையாகத் தயாரானால் நீங்களும் ஒரு ஐ.ஏ.எஸ். தான்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2012

ஏமாற்று வேலைகள்…..எச்சரிக்கை நடவடிக்கைகள்!
சாதிக்கலாம் வாங்க
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக வேண்டுமா?
உலக மக்கள் தொகை தினம்
விவசாயத்தின் இப்போதைய தேவை
எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!!
விவசாயம் + தொழில்நுட்பம்
wifi வலையமைப்பு
அம்மாவின் கைகள்
பாதை மாறிய பயணங்கள்
அந்நிய முதலீடும் பண வீக்கமும்
உற்சாக ஊற்று உங்களுக்குளே
மாறுவேஷம்
உங்களால் முடியும்
எழவேண்டும் தன்னம்பிக்கை கலாச்சாரம் …