Home » Articles » உலக மக்கள் தொகை தினம்

 
உலக மக்கள் தொகை தினம்


மனோகரன் பி.கே
Author:

1986ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1987ம் ஆண்டு முதல் ஜூலை 11ம் தேதியை உலக மக்கள்தொகை தினமாக அறிவித்தது. மக்கள்தொகை பெருக்கத்தின் தீமைகளையும், சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது அந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் 200 கோடிக்கும் குறைவாக இருந்த மக்கள்தொகை நூற்றாண்டின் இறுதியில் 600 கோடியை தாண்டிவிட்டது. அதாவது பத்தொன்பது நூற்றாண்டுகளின் அதிகரித்த மக்கள்தொகையைப் போல் இரண்டு மடங்கு ஒரே நூற்றாண்டில் அதிகரித்திருக்கிறது என்பதுதான் வேதனை தரும் உண்மை.
2011ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி உலக மக்கள்தொகை 700 கோடியைத் தொட்டுவிட்டது. 700 கோடியைத் தொட்ட பெண்குழந்தை, இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னௌ புறநகர்ப்பகுதியில் வாழும் ஒரு ஏழைத்தம்பதிக்குப் பிறந்ததாகவும், அந்தக் குழந்தைக்கு நர்கீஸ் என்று பெயர் சூட்டப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. பிலிப்பைன்சும், ரஷ்யாவும் தங்கள் நாட்டில், 700 கோடியாவது குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளன. இதனால் எந்த நாட்டில் 700 கோடியாவது குழந்தை பிறந்தது என்பதை யாரும் அறுதியிட்டு கூற முடியாது.
உலகம் முழுவதும் மக்கள்தொகையை மிகச்சரியாக கணிப்பதற்கான அளவு கோல்கள் எந்த நாட்டிடமும் இல்லை என்பதால், 700 கோடியாவது குழந்தை எது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக்குழப்பம் குறித்து ஐ.நா., மக்கள்தொகைப் பிரிவு தலைவர் கெர்ஹார்டு ஹெய்லிக் கூறுகையில், =உலகின் குறிப்பிட்ட இடத்தில் தான், 700 கோடியாவது குழந்தை பிறக்கும் எனக்கூறுவது சரியாக இருக்க முடியாது. காரணம் சரியான புள்ளிவிவரங்கள், வசதிகள் கொண்ட நாடுகள் மிகவும் குறைவு. ஆகவே, மிகச்சரியாக கணிக்கவே முடியாது’ என்றார்.
உலகின் மக்கள்தொகை 700 கோடியைத் தொட்டுள்ளதை வரவேற்கும் வகையில் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் தனது அறிக்கையில் ‘நமது பூமி நெரிசலாகி வருகிறது என்று பலர் கூறுகின்றனர். நான் அவ்வாறு கருதவில்லை. நமது பலம் 700 கோடியாக உயர்ந்துள்ளது. பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில் சமூகத்தைத் தட்டி எழுப்பவும் அனைவரும் நன்மை பெறவும் இந்த பலத்தை நாம் பயன்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
உலக மக்கள்தொகையில் 20 சதவீதம் சீனநாட்டுக்கு உரியது. 18 சதவீதம் இந்தியாவுக்கு உரியது. ஆனால் அமெரிக்காவின் பங்கு வெறும் 5 சதவீதம் தான். இந்தியாவில் முன்பு ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்ற திட்டமும், தற்போது ‘வீட்டுக்கு ஒரு மரம், வீட்டுக்கு ஒரு குழந்தை’ என்ற திட்டமும் நடைமுறையில் இருந்தாலும் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டம் அத்தனை தீவிரமாக கடைபிடிக்கப்படவில்லை. ஆனால், சீனாவில் அப்படியல்ல. ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை என்பது அரசின் விதி. அதற்கு அதிகமாகப் பிள்ளைபெற்றால் அக்குழந்தைக்கு அரசின் சலுகைகள் பள்ளி முதல் வேலைவாய்ப்பு வரை கிடைக்காது. மக்கள்தொகைப் பெருக்கத்தை சீனா திறமையாகக் கட்டுப்படுத்திவிட்டது.
ஆனால், இப்போது சீனாவில் வேறுவிதமான பிரச்சனை உருவெடுத்துள்ளது. சீனா மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் காட்டிய தீவிரத்தின் விளைவு, இன்று அந்நாட்டில் சிறார்களைவிட முதியோரும் நடுத்தரவயதினரும்தான் அதிகம். மனித ஆற்றல் குறைந்து செய்வதறியாது தவிக்கிறது சீனா. ஒருவகையில் பார்த்தால் இந்தியா சீனாவைப்போல் குடும்பக்கட்டுப்பாடு விஷயத்தில் அத்தனை கடுமையாக இல்லாததும் நல்லதாகவே அமைந்துவிட்டது. இந்தியாவில் தண்ணீர், உணவு உள்ளிட்ட பற்றாக்குறைக்குக் காரணம் நிலப்பரப்பு அல்ல. நாட்டில் உள்ள அத்தனை கோடி மக்களுக்கும் உணவும், உயிர்வாழ்விற்கான காற்றும், நீரும் நிறையவே இருக்கிறது. இதையெல்லாம் நாம் பாழ்படுத்தாமலும், அந்நியர் வந்து பாழ்படுத்தவிடாமலும் காத்து நின்றாலே அனைவருக்கும் உணவும் கிடைக்கும். வாழ இடமும் இருக்கும்.
இன்று இந்தியாவின் இயற்கை வளங்கள் இந்திய மக்களின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக அன்னிய நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஏற்றுமதிக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை.
அறியப்பட்ட வளங்களைக் கணக்கில் கொண்டு உலக மக்கள்தொகை மிகையாக (Over Population) கருதப்படுகிறது. நாளைய தினம் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இயற்கையின் இரகசியங்கள் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு புதுப்புது வளங்கள் கண்டறியப்படுமானால் இருக்கும் இந்த மக்கள்தொகை குறைவானதாக (Under Population) கருதப்படும் நிலை ஏற்படக்கூடும்.
அதேபோல மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் கேடுகளைவிட மக்கள்தொகை குறைந்துவிட்டால் அது பேராபத்தில் முடிந்துவிடும் என்ற கணிப்பும் இருக்கின்றன. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டின் காரணமாக உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து, ஓய்வெடுக்கும் மூத்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இவையனைத்தும் எதிர்காலத்தில் நிலவும் சமூக, பொருளாதார, இயற்கை சூழலைப் பொறுத்தது. இன்றைய சூழலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள்தொகை ஒரு நாட்டிற்குச் சொத்தா? அல்லது சுமையா? என்றால் தொழிலாளர்களின் தேவை பெருமளவில் இருக்கும் சில நாடுகளுக்கு வேண்டுமானால் அது சொத்தாக இருக்கலாம். இந்தியாவைப் பொறுத்தமட்டில் மக்கள்தொகைப் பெருக்கம் ஒரு சுமையாக இருக்கிறது என்பதே உண்மை. அதன்பொருட்டே சிறுகுடும்ப நெறியைப் பின்பற்றுவோருக்கு அரசு பல்வேறு சலுகைகளையும், உதவிகளையும் அளிக்கிறது.
உலகளாவிய பொருளாதார மாற்றங்களின் காரணமாக அண்மைக் காலங்களில் மக்களில் ஒரு சிறு பகுதியினர் வெளிநாடுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் நல்ல வேலைவாய்ப்பையும், உயர்ந்த வருமானத்தையும் பெறுவதை வைத்துக்கொண்டு பெருகிவரும் மக்கள்தொகை நாட்டுக்கு ஒரு சொத்து என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.
பல்வேறு துறைகளில் சாதனைகள் படைக்கப்பட்டிருந்தாலும் வறுமை, வேலையின்மை, கல்லாமை ஆகிய சமுதாயக் குறைகள் இன்னும் அகற்றப்படவில்லை. வளர்ச்சியின் பலன்கள் அடித்தள மக்களை இன்னும் சென்றடையவில்லை என்பதை பாரதப் பிரதமர் அண்மையில் வேதனையோடு குறிப்பிட்டுள்ளார். முன்னேற்றத்தின் வளர்ச்சி வேகத்தைவிட மக்கள்தொகை பெருக்கத்தின் வேகம் அதிகமாகவே இருப்பதே இதற்கு முக்கியக் காரணம்.
எனவே மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். சிறிய குடும்பமே சிறப்பான குடும்பம் என்பதை உணர்த்த வேண்டும். அறிவுறுத்தலின் மூலமே அறியாமையை அகற்ற முடியும். எழுத்தறிவுப் பெருக்கமும் குறிப்பாக பெண் கல்வி வளர்ச்சியும் ஏற்பட்டால்தான் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
ஒரு ஆண் கல்வி பெற்றால் தனி நபரின் கல்வியே. ஆனால் ஒரு பெண் கல்வி பெற்றால் அது ஒரு குடும்பம் முழுவதும் கல்வியாகும் என்ற மகாத்மாவின் கருத்தை சிந்தையில் கொள்ள வேண்டும். கல்விக்குச் செலவிடும் ஒரு ரூபாய், குடும்ப நலத்திட்ட பிரச்சாரத்திற்கும், கருத்தடை சாதனைங்களை வழங்குவதற்கு செலவிடப்படும் பத்து ரூபாய்க்குச் சமம்.
மனிதன் வேலை செய்யும் வெறும் ‘ஹார்டுவேர்’ ஆக மட்டும் இருந்தால் போதாது. சிந்திக்கும், முடிவெடுக்கும், நிர்வகிக்கும் ஒரு ‘சாஃப்ட்வேர்’ ஆக கல்வி அவனுக்குள் புகுத்தப்பட்டால் மனித உழைப்பு மனித முதலீடாக மாறும். மக்கள்தொகை கல்வி மனித முதலீடு.
உலகில் மக்கள் சக்திக்கு இணையாக வேறு சக்தி இல்லை. மனிதனின் சக்திக்கு அடிப்படை அவனுடைய மூளையின் திறனே ஆகும். ஆனால் அதனை முழுமையாகப் பயன்படுத்தும் சக்தியை மனிதன் இன்னும் பெறவில்லை. இந்தக் குறையைப் போக்க தேவைப்படுவது அறிவு. அந்த அறிவை வளர்ப்பது கல்வி.
‘இந்தியா ஏழைகள் வாழும் செல்வந்த நாடு’ என்பார்கள். ‘இந்தியாவில் செம்மைப்படுத்தப்படாத, பக்குவப்படுத்தப்படாத, வெளிச்சத்திற்கு வராத பல திறமைகள் புதைந்து கிடப்பது போல, உலகில் வேறு எங்கும் இல்லை’ என்றும் கூறுகிறார். 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த நிர்வாகி என்று கருதப்படும் ஜாக் வெல்ச் (Jack Welsch). இதைத்தான் ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்கிறது திரைப்பாடல்.
இயற்கையின் உன்னத படைப்பு மனிதன். இயற்கை வளம் மிகுந்த இந்தியாவில் மகாசக்தியாக விளங்கும் மனித சக்தியை அறிவியல் தொழில்நுட்பத்தோடு இணைத்து ஆக்க வழியில் ஈடுபடுத்தினால் சுமையாக கருதப்படும் மக்கள்தொகை சொத்தாக மாறும்..

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2012

ஏமாற்று வேலைகள்…..எச்சரிக்கை நடவடிக்கைகள்!
சாதிக்கலாம் வாங்க
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக வேண்டுமா?
உலக மக்கள் தொகை தினம்
விவசாயத்தின் இப்போதைய தேவை
எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!!
விவசாயம் + தொழில்நுட்பம்
wifi வலையமைப்பு
அம்மாவின் கைகள்
பாதை மாறிய பயணங்கள்
அந்நிய முதலீடும் பண வீக்கமும்
உற்சாக ஊற்று உங்களுக்குளே
மாறுவேஷம்
உங்களால் முடியும்
எழவேண்டும் தன்னம்பிக்கை கலாச்சாரம் …