Home » Articles » பாதை மாறிய பயணங்கள்

 
பாதை மாறிய பயணங்கள்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறைவிழா, பண்டிகை என ஊரே அமர்க்களப்படும். சாதி, மத பேதமின்றி, சகோதர உணர்வோடும் பயபக்தியோடும் செயல்பட்டனர். அன்றும் கரகாட்டம் என்ற நிகழ்ச்சி நடந்தது.
அதிலே அளவுமுறை, கட்டுப்பாடு இருந்தது. ஆனால், இன்று 24 மணி நேரமும் நம் வீட்டுக்குள்ளேயே, நம் அனுமதியில்லாமல் நம்மிடமிருந்து பணமும் பெற்றுக்கொண்டு, நம் மனதையும், பண்புகளையும் சீரழிக்கும் எத்தனை கரகாட்டங்கள் டி.வி.யில் ஒளிபரப்பப்படுகின்றன.
இவைகளைக் காண்பதற்கு எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யும் மனப்பாங்குடன் இல்லத்தரசிகள், குழந்தைகள் தேர்வுக்குப் படிக்கும் சில நாட்கள் கூட இவர்களால் அக்காட்சிகளைக் காணாவிட்டால் தலைவெடித்துவிடும் என்ற நிலை பல வீடுகளில்.
நீ உன் நண்பன் வீட்டிற்குச் சென்று “குரூப் ஸ்டடி” செய் என்றோ, வேறு ஏதோ தேடிப்பிடிக்கும் காரணங்கள் கூறியோ மது போதையாளர்களைவிட மோசமாக மனம் பாதித்த நிலையில் வாழ்வதை அறியும் போது கோபம் வருகிறது.
என்ன செய்ய முடியும்?
மாணவர் / இளைஞர் போதைப்பழக்கம்:
பொடிகளாலும், மதுவாலும் இன்று இளைஞர் சமுதாயம் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை விடுமுறைநாட்களில், மாலை நேரங்களில் டாஸ்மாக் கடை முன்பு அலைமோதும் கூட்டம் வாயிலாகவும், பொதுஇடங்களில் பண்பாடில்லாமல் நடந்துகொள்ளும் தவறான செயல்களாலும் அறியலாம். பெரியவர்களுக்கு மதிப்பு என்பதோ, அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்பது என்பதோ குறைந்து கொண்டே வருகிறது. இதற்கான காரணத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.
ஒன்று: பெற்றோரின் பங்கு, தம் குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும், நல்ல வேலைக்குச் சென்று அதிக சம்பளம் பெற வேண்டும், அதற்காக என்ன கஷ்டமும் படத்தயார் இது பெற்றோரின் மனநிலை.
ஆனால் தம் குழந்தை நல்லவர்களுடன் பழகுகிறானா? நல்ல பண்புகளைக் கொண்டிருக்கிறானா? என்பதைக் கண்காணிப்பதில் தயக்கம். நல்லது சொல்லப்போய், ஏதாவது இசகு பிசகாக நடந்துவிட்டால், இவர்களது விருப்பமெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடுமே என்றபயம்.
இந்த பயத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அடியாத மாடு படியாது என்றபழமொழிப்படி தினமும் இடைவிடாமுயற்சியோடு நல்ல பண்புகளைக் கூறி வந்தால், கட்டாயம் மாறுவார்கள். அடிக்க வேண்டும் என்பதல்ல. தொடர்ந்து கூறுவதுடன் தாமும் அதுபோல் செய்ய வேண்டும்.
மற்றது சமுதாயப் புல்லுருவிகள் பங்கு: யார் இவர்கள்?பெரிய நெட் ஒர்க்கில், கடைசியாக இளைஞர்கட்கு, மாணவ சமுதாயத்துக்கு போதையுண்டாக்கும் பொடிகளை சப்ளை செய்பவர்கள், தமது சிறு சுய லாபத்துக்காக ஒரு கலாச்சாரத்தையே கறையானாக அரிப்பவர்கள் இவர்கள்.
எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது? தங்கள் குழந்தைகட்குத் தருவார்களா? நிச்சயமாகத் தரமாட்டார்கள்.
‘நாய் விற்றகாசு குரைக்குமா?’ என்று நியாயப்படுத்தும் போக்கு, நாயை விற்றால் சமுதாயத்துக்கு பாதிப்பில்லை. நாய்க்கறி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கூடும். வேறு பாதிப்பில்லை.
ஆனால் போதைப் பொடிகளால், அவைகளை உபயோகிப்போரின் உடல், மனம் சிதைந்து ஆரோக்கியம் கெட்டு, மன அமைதி பறிக்கப்பட்டு நிராதரவான நிலைக்குச் செல்வதைத் தான் காண முடியும்.
இதற்கு அவர்கள் மட்டுமே காரணமா? பெரிய நெட்வொர்க் என்று கூறினோமல்லவா, ஆட்சியாளர்கள், தாதாக்கள், அடியாட்கள், காவல்துறையினர், எளிதில் விலைபோகும் ஏமாளிகள் எனப் பெரிய பட்டாளமே உள்ளது.
தமது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள, அடுத்த முறைதேர்தலில் செலவு செய்ய எனப்பல காரணங்களைக் கூறிக்கொண்டு, போதைப் பொடி விற்பனையாளர்களது கவனிப்புக்கு ஆளாகி, சமுதாயச் சீரழிவுக்குத் துணை போகின்றனர்.
எந்தத் துறையில் தான் இது இல்லை?
இதோ மேலும் ஓர் உதாரணம்.
கோவையிலிருந்து பெங்களூருக்கு தினசரி இரவு புறப்படும் டிராவல்ஸ் பஸ்களின் எண்ணிக்கை சுமார் 160, இதைவிட கூடுதலாகவும் இருக்கலாம். ஒரு பஸ்ஸில் சராசரியாக 30 பேர் என்றால் சுமார் 4800 பேர். நபர் ஒருவருக்கு கட்டணமாக ரூ. 400 முதல் ரூ. 700 ஏன் அதற்கும் மேலே கூட்டத்தைப் பொறுத்து வசூலிக்கின்றனர்.
கோவையிலிருந்து பெங்களூருக்கு இரவு புறப்படும் ரயில் ஏதேனும் உள்ளதா? தேடிப்பார்த்தேன்; தெரியவில்லை. ஒரு ரயிலுக்கு சுமார் 2000 பேர் என்றால், குறைந்தது இரு ரயில்கள் கோவையிலிருந்து பெங்களூருக்கு இரவில் புறப்பட வேண்டும். இதைச் செயல்படுத்த எது தடையாக உள்ளது. புதிதாகப் பாதை அமைக்க வேண்டுமா? தேவையில்லை,
புதிய ரயில் நிலையங்கள் கட்ட வேண்டுமா? தேவையில்லை,
வேறு என்ன தான் தடை?
டிராவல்ஸ் பஸ் உரிமையாளர்களின் அன்பான உபசரிப்பு தான் தடையாக உள்ளது என சமீபத்தில் செய்தி ஒன்று கிடைத்தது.
வருமானம் அதிகரிக்கவும், மக்களுக்குக் குறிப்பாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்கட்கு உதவிடவும், சாலை விபத்துக்களைக் குறைத்திடவும் உடனே புதிதாக ஒரு ரயிலையாவது விடலாமே.
யார் செய்வது?
பயணத்துக்கு மக்கள் தயார். ஆனால் (ரயில்) வாகனம் தான் இல்லை.
பெறும் சம்பளமும், வசதிகளும், DA-வும் போதாது என்று தனியார் டிராவல்ஸ் பஸ் உரிமையாளர்களது அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் ஆட்சியாளரும், இரயில்வே நிர்வாகமும் இருக்கும் வரை மாறிய திசையில், அதாவது… மாற்றப்பட்ட திசையில் தான் பயணம் செய்தாக வேண்டுமென்றநிர்பந்தம்.
இதுபோல் இன்னும் பல கூறலாம்.
தடம் மாறிய பயணம்:
இது என்றுமே தடுமாற்றம் தான் தரும். தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை. திரும்பிவந்து, சரியான பாதையில் செல்வது தான் புத்திசாலித்தனம். சிந்திக்கும் ஆறாவது அறிவைப் பெற்றுள்ள மனிதனின் சிறப்பியல்பு, இதுதான்.
ஆனால், இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இனி திரும்பிச்சென்று சரியான வேறு பாதையைக் கண்டுபிடித்து பயணம் சென்றால், ஆயுளே முடிந்துவிடும் எனப்பலர் எண்ணலாம்.
தவறான பாதையில் பயணத்தை முழுமையாக முடித்தால், பாதிப்பு மிக அதிகம். பயணத்தைப் பாதியில் திருத்தி அமைத்துக்கொள்ளும்போது காலவிரயமானாலும், குறைவான பாதிப்பே உண்டாகும். ஏனெனில் நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை தானேஙு சரி, அடுத்த பிறவியில் பார்த்துக் கொள்ளலாம் என ஒத்திப்போட முடியாதேஙு
அடுத்த பிறவி:
லூயிஸ் எல். ஹே என்றஅமெரிக்கப் பாட்டி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு வயது 85. அவரது 72வது வயதில் பால்ரூம் டான்ஸ் கற்றுக்கொள்ள ஆசை வந்தது. வயதான காலத்தில் ஏன் சிரமப்பட வேண்டும். அடுத்த பிறவியில் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டார். நான்காண்டுகள் கழித்து 76வது வயதில் ஏன் அடுத்த பிறவி வரை காத்திருக்க வேண்டும். இந்த பிறவியிலேயே கற்றுக்கொள்ளலாமே என முடிவெடுத்துக் கற்றுக் கொண்டார்.
அதேபோல் தன் 75வது வயதில் யோகா கற்றுக்கொண்டார். அவர் கூறுகிறார், “புரதச்சத்து நிறைந்த உணவு, அதிகளவு காய்கறிகள், சிறிது பழங்கள் மட்டுமே சாப்பிடுகிறேன். அதிகமான உடற்பயிற்சி, யோகா செய்கிறேன். என்னை நான் நேசிக்கிறேன். எல்லோரையும் மன்னித்து மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கிறேன். குழந்தைப்பருவ நாட்களை விட இப்போது அதிக சுறுசுறுப்பாக என்னால் செயல்பட முடிகிறது”.
வாழ்க்கையில் இந்தப் பாட்டி படாத கஷ்டங்களே இல்லை. ஒரு பெண்ணுக்குத் தலையானதையே பலமுறைஇழந்து, அதனால் புற்றுநோய் வந்து, அதையும் தன் மனவலிமையால் மட்டுமே, எவ்வித மருந்துகளும் சாப்பிடாமல் குணப்படுத்திக் கொண்டவர். இதுபோல் பலர் உள்ளனர். நாம் சோர்ந்துவிடும்போது, தோல்வி அடையும்போது, பயப்படும்போது, இவர்களை நினைத்தாலே போதும். நம் உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பித்துவிடும்.
சரியான பாதை:
பொதுவாக இன்றைய சமுதாயச் சிக்கல்களுக்கு அடிப்படையான காரணம் நமது தவறான உணவுப்பழக்கமும், அதன் தொடர்ச்சியாக நோய்களும், மனபாதிப்பும். இயன்றவரை பழங்கள், காய்களை அதிகஅளவில் உணவில் சேர்த்துக் கொண்டு, எதைச் சாப்பிட்டாலும், உதடுகளை மூடி, முழு கவனத்தோடு நன்றாக மென்று விழுங்க வேண்டும். சாப்பிடும்போதோ சாப்பிட்ட பின் அரை மணிக்குள்ளோ தண்ணீர் கட்டாயம் குடிக்கக் கூடாது.
ஏதாவது சில உடற்பயிற்சிகளை, அவரவருக்கு தகுந்தாற்போல கட்டாயம் செய்ய வேண்டும். இது நமது உடல் உள்உறுப்புகளைத் தூய்மைப்படுத்துகிறது.
மனப்பயிற்சியின் மூச்சுப்பயிற்சி மிகவும் அவசியம். முழு நினைவோடு மூச்சை இழுத்துவிடவும். இதுபோல் 25 முறைஒருவாரம் செய்த பின், மூச்சை இழுத்து, இயன்றவரை நிறுத்திவிடவும். இதுபோல் 25 முறைதொடர்ந்து வாழ்நாள் உள்ளவரை செய்யவும். இதுதான் சரியான பாதை.
சிறுவயது முதல் நம்மை அறிந்தோ அறியாமலோ நாம் உட்பட பலரை வெறுத்திருக்கிறோம். அந்தப்பதிவுகளையெல்லாம் நம் மனதிலிருந்து வெளியேற்றவேண்டும். காலை கண்ணாடியில் நம் முகத்தைப் பார்த்து கண்களை உற்றுநோக்கி, ஒவ்வொருவரும் தம்மையே நேசிப்பதாயும், முழுமையாக ஏற்றுக்கொள்வதாயும், எல்லோரையும் மன்னிப்பதாயும் பலமுறைகூறுங்கள்.
இதனால் மாணவர்கள் நினைவாற்றல் கூடுகிறது. இளைஞர்கட்கு விரும்பிய பணி மற்றும் வாழ்க்கை அமைகிறது. குடும்பத்தில் அன்பான சூழல் அமைகிறது. என்றுமே தன்னம்பிக்கையோடு, சுறுசுறுப்போடு செயல்பட முடிகிறது. முதுமைக்காலம் மகிழ்ச்சியாக அமைகிறது. இன்னும் வேறு என்ன செய்ய வேண்டும்? பாதையை மாற்றுங்கள். பயணத்தை மகிழ்ச்சியாக்குங்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment