Home » Articles » அந்நிய முதலீடும் பண வீக்கமும்

 
அந்நிய முதலீடும் பண வீக்கமும்


நாகராஜ் கே
Author:

கடந்த இரண்டு வருடங்களாக பத்திரிக்கைகளில் இடைவிடாது வரும் தலைப்பு பணவீக்கம். பணவீக்கம் என்றால் என்ன? ஒரு நாட்டில் அரசாங்கம் அடிக்கும் பணத்தின் மதிப்பு குறைவது தான் பணவீக்கம். பணவீக்கம் அதிகமானால் உங்களால் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்திற்கு முதலில் இருந்ததை விட குறைவான அளவே பொருட்களை வாங்க முடியும்.
இந்திய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் கணக்கிடும் பணவீக்க அளவு கடந்த சில ஆண்டுகளாக சராசரியாக கிட்டத்தட்ட பத்து சதவீதம். இது உலகத்தில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மிக அதிகம். இந்தியாவில் ஏன் இந்த அளவு பணவீக்கம்? பணவீக்கம் எப்படி உருவாகிறது? இது பொதுமக்களை எப்படி பாதிக்கிறது? என்பதைப் பார்ப்போம்.
பணவீக்கத்தைப் புரிந்து கொள்ள முதலில் பணம் எப்படி உருவாகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பணம் ரிசர்வ் வங்கியால் அச்சிடப்படுகிறது. ஆனால் நீங்கள் கண்ணில் பார்க்கும் ரூபாய் நோட்டு மட்டும் பணமல்ல. பணம் அடிப்பதைத் தவிர ரிசர்வ் வங்கி பல்வேறு வழிகளில் நமது நாட்டில் பணத்தை உருவாக்குகிறது.
வங்கிகளுக்கு கடன் அளிப்பது அதில் ஒரு முக்கியமான வழிமுறை. இதை வங்கிகள் மக்களுக்கு கடனாகக் கொடுக்கின்றன. நாட்டிற்கு உள்ளே வரும் அந்நிய முதலீட்டின் மூலமும் பணம் உருவாக்கப்படுகிறது. இதைத்தவிர உலக வங்கி போன்ற நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் மூலமும் (இதுவும் ஒரு வழியில் அந்நிய முதலீடு தான்) பணம் உருவாக்கப்படுகிறது.
பணவீக்கத்திற்கான காரணங்களில் முக்கியமானது நாட்டில் உள்ளே வர அனுமதிக்கப்பட்ட வரையறை அற்ற அந்நிய முதலீடு.
தற்போது மேற்கத்திய நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த பெரும்பாலான நாடுகளில் மிகக் குறைவான வட்டியில் பணம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணத்தை கடனாக பெறும் பெரும் நிறுவனங்கள் இங்கே கிடைக்கும் அதிகப்படியான லாபத்திற்காக இதை இங்கே முதலிடுகின்றன.
பெரு நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை வீட்டு விலையும், நிலத்தின் விலையும் இந்த அளவு உயர்ந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த அந்நிய முதலீடுகள்.
இருப்பிடத் துறையில் நுழையும் அதீதமான இந்தப் பணம் படிப்படியாக பரந்த பொருளாதாரத்தில் நுழைந்து அனைத்து விலைகளும் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்க அரசால் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கடந்த மூன்றாண்டுகளில் ஒரு கோடி கோடிஙுஙு (இருமுறை கோடிஙு தவறாக எழுதப்படவில்லை)க்கும் மேலே பணம் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அளவு பணம் அமெரிக்காவில் பணவீக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் இதில் பெரும்பாலான பணம் ஆசிய நாடுகளில் முதலிடப்பட்டு அந்த நாடுகளில் பணவீக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவும் இதனால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு. இதையே ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்றவை குறைவான அளவில் செய்கின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் மற்ற நாடுகளில் எந்த ஒரு பொருளாதார பாதுகாப்பும் இன்றி அச்சிடப்படும் பணம் (கிட்டத்தட்ட அரசால் அடிக்கப்படும் கள்ள பணம்) நமது நாட்டில் நிரந்தர சொத்துக்களை வாங்கப் பயன்படுத்தப்பட்டு, விலைவாசி ஏறுவதற்கும் காரணமாகின்றது. அந்நிய முதலீடு நமக்கு நல்லது இல்லையா? அந்நிய முதலீடு என்பது குறைவான அளவில் முறையாக பயன்படுத்தப்பட்டால் ஒரு வேளை நன்மை இருக்கலாம்.
நாம் சுயசார்போடு இருந்தால் அந்நிய முதலீடு என்பது தேவை இல்லை. நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் அளவும், இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவும் சமமான இருந்தாலும் நமக்கு அந்நிய முதலீடு தேவை இல்லை.
புதிய பொருளாதாரக் கொள்கை உருவாகும் வரை இங்கு அந்நிய முதலீடு என்பது மிகக் குறைவாகவே இருந்தது. புதிய பொருளாதார கொள்கை உருவான பின்னர் அந்நிய முதலீடு என்பது இந்தியாவை காக்க வந்த கடவுள் என்ற அளவில் அரசும், வியாபார நிறுவனங்களும், பத்திரிக்கைகளும் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டன.
வளர்ந்த நாடுகளின் பெரும் நிறுவனங்கள் மற்றும் நமது பெரும் நிறுவனங்கள் நமது மனித வளத்தையும், இயற்கை வளங்களையும் குறைவாக வாங்க இந்தப் பிரசாரங்கள் பெரிதும் பயன்பட்டன. அரசு அந்நிய முதலீட்டை ஈர்க்க தகுந்த கட்டமைப்புகளை உருவாக்குகின்றோம் எனக்கூறி, மக்களின் நல்வாழ்வுக்காக நூற்றாண்டுகளாக இருந்த விவசாய மற்றும் வாழ்வியல் கட்டமைப்புக்களைச் சீர்குலைத்தது.
வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சொந்த நாடுகளில் கற்பனை கூட செய்து பார்த்திராத அளவு இலவச நிலம், வரி குறைப்பு என சலுகைகளை அள்ளி வழங்கியது.
இந்த நிலங்கள் பெரும்பாலானவை ஏழைகளிடம் இருந்து பிடுங்கப்பட்டவை என்பது கூடுதல் தகவல். இந்த நிறுவனங்களுக்காக ஏரிகள் அழிக்கப்பட்டன. கடற்கரைகள் தாரை வார்க்கப்பட்டன. பெரும் மலைகள் மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டன. இந்த பத்தாண்டுகளில் மக்களிடம் இருந்து நிறுவனங்களுக்கு நடந்த அசையாத சொத்து பரிமாற்றம் அளவு எந்த காலத்திலும் நடந்திருக்க முடியாது. அதேபோல இந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சுற்றுப்புற சூழல் அடைந்த சேதம் எப்போதும் நடந்திராது.
அதேநேரம் மக்களிடம் நுகர்வோர் கலாச்சாரம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. பத்திரிக்கைத் துறையில் மறைமுகமாக நுழைந்த அந்நிய முதலீடு இந்தப் பத்திரிக்கைகளை வெளிநாடு மற்றும் உள்நாட்டு பெருநிறுவனங்களின் அடிமைகளாக மாற்றியது. இந்தியா வல்லரசாகும், நமது கவலைகள் தீரும் என்ற போலியான கனவுகளை இந்தப் பத்திரிக்கைகள் திட்டமிட்டு மக்களிடம் ஏற்படுத்தின. இந்தப் பத்திரிக்கைகள் மக்களுக்குத் தற்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் தெரியாத வண்ணம் எதிர்கால கனவுகளை விற்பனை செய்தன.
அந்நிய முதலீட்டிற்கு ஆதரவாக அரசும் பெரும் நிறுவனங்களும் எப்போதும் பதிலாக சொல்லும் இரு வார்த்தைகள் “வளர்ச்சி” மற்றும் “வேலைவாய்ப்பு”.
ஆனால் உண்மை என்னவென்றால் இந்த முதலீடுகள் உருவாக்கிய ஒவ்வொரு வேலைக்கும், விவசாயம், சிறுதொழில்கள் போன்ற துறைகளில் இவர்கள் எத்தனையோ வேலைகளைப் பறித்து இருக்கிறார்கள். இன்று இந்தியா வளர்ந்த நாடுகளுக்குக் குறைவான விலையில் பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கும் ஒரு பட்டறையாக மாறியதற்கு இந்த அந்நிய முதலீடு ஒரு முக்கிய காரணம். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக மக்களின் சொத்துக்களைப் பிடுங்கி அவர்களை அன்றாடம் காய்ச்சிகளாக மாறும் நிலையை இது ஏற்படுத்தி இருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்வதற்கும், நமது நாடு உணவு பற்றாக்குறையில் தவிப்பதற்கும் இன்னும் பல பிரச்சனைகளுக்கும் வரைமுறை அற்ற இந்த அந்நிய முதலீடு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.
அதேநேரம் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் நீண்ட நாள் முதலீடு செய்வதற்குப் பதிலாக பெரும் லாபத்தை ஒரு குறுகிய காலத்தில் அடையும் நோக்கத்தில் செய்யும் முதலீடுகள் நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளிவிடும்.
மொத்தத்தில் அந்நிய முதலீட்டின் மீது மிகக் கவனமாக மீள்பார்வை தேவை. அந்நிய முதலீட்டின் மீதும், அதற்கும் பணவீக்கத்திற்கும் இருக்கும் தொடர்பு குறித்தும் நேர்மையான விவாதம் நடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் நமது எதிர்காலம் பெரும் கேள்விக்குறி ஆகிவிடும்.

 

1 Comment

  1. malavai kani says:

    miha arumai

Post a Comment


 

 


July 2012

ஏமாற்று வேலைகள்…..எச்சரிக்கை நடவடிக்கைகள்!
சாதிக்கலாம் வாங்க
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக வேண்டுமா?
உலக மக்கள் தொகை தினம்
விவசாயத்தின் இப்போதைய தேவை
எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!!
விவசாயம் + தொழில்நுட்பம்
wifi வலையமைப்பு
அம்மாவின் கைகள்
பாதை மாறிய பயணங்கள்
அந்நிய முதலீடும் பண வீக்கமும்
உற்சாக ஊற்று உங்களுக்குளே
மாறுவேஷம்
உங்களால் முடியும்
எழவேண்டும் தன்னம்பிக்கை கலாச்சாரம் …