Home » Articles » மேடை மாலை கைத்தட்டல்

 
மேடை மாலை கைத்தட்டல்


ஸ்ரீனிவாசன்
Author:

மணிமகுடங்களையே உருட்டித் தள்ளய ஆக்ரோஷமான புரட்சிகளானாலும் சரி, மானுட சமுதாயத்தையே மாற்றுப் பாதையில் திருப்பி விட்ட மௌனப் புரட்சிகளானாலும் சரி, அதை முன்னின்று நடத்தும் ஆளுமையின் மேடைப் பேச்சும் அதன் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.
சிரிப்பு இயற்கை நமக்கு அளத்தப் பரிசு. ஆனால், மொழியோ மனிதனின் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு. மேடையில் ஒருவர் பேசும் பொழுது எழும் கைத்தட்டல் என்பது ஒரு உடனடி அங்கீகாரம். கரகோஷம் கிறக்கம் தரும் ஒன்றுதான். நம் எல்லோருக்குமே மேடையில் பேசவேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால், வாய்ப்பு கிடைத்தால் பயம் வந்து சூழ்ந்து கொள்ளும். வந்த வாய்ப்பை “வேண்டாம்” என்று கூறி விடுவோம்.
இந்தத் தொடர் உங்களது மேடை பயத்தை முற்றிலுமாகப் போக்கி, உரையாற்றும் திறனை வளர்க்கும்.
தூரிகையை இப்படியும் அப்படியுமாக வீசி ஒரு தேர்ந்த லாவகத்துடன் சித்திரங்களை உருவாக்கும் ஓவியர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களது கலைத் திறன் அவ்வளவு உயர்ந்தது.
அப்படிப்பட்ட ஓவியர்களல் ஒரு சிலர் சுயம்புவாக உருவாகி இருப்பார்கள். பலருக்கு, இளம் வயதில் ஓவிய ஆர்வம் இருந்திருக்கும். ஆனால், திறமை இருந்திருக்காது. தக்க குரு ஒருவரை அணுகி, தம் திறனை மேம்படுத்தி வளர்ந்திருப்பர்.
முதல் வகையினரை இயல்புக் கலைஞர்கள் என்று சொல்வார்கள். இரண்டாம் வகையினர் பயிற்சிக் கலைஞர்கள் எனப்படுவர். அது போலவே மேடைப் பேச்சிலும் இரண்டு வகையினர் உண்டு. முதல் வகையினரை ORATORS என்றும் மற்றவரை SPEAKERS என்றும் பொதுவாக அழைக்கிறோம். நாம் இரண்டாம் வகை.
நண்பர்களோடு நாம் உரையாடுவதற்கும் மேடைப் பேச்சுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. சில கூர் தீட்டலும் மெருகேற்றலும்தான் தேவை. ஆங்கிலத்தில் இதை ONE TO ONE – ONE TO MANY ! என்பார்கள்.
பரஸ்பர உரையாடலில் நாமும் நம் நண்பரும் மாறி மாறிப் பேசிக் கொள்கிறோம். இரண்டு பேர் விளையாடும் மேடைப் பந்தாட்டம் (Table Tennis) போன்றது அது. நான்கைந்து நண்பர்கள் கூடிப் பேசுவதிலும் இதே விதிதான்.
ஆனால், மேடையில் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை நாம் மட்டுமே பேசுகிறோம். மற்றவர்கள் கேட்கிறார்கள். இது ஒரு ஒருவர் மட்டுமே ஒரு சமயத்தில் விளையாடும் GOLF போன்றததாகும். ஆகவே, தொடர்ந்து பேசுவது என்பதுதான் முதல் வித்தியாசம்.
உரையாடலில், நாம் சொல்வது நம் நண்பனுக்குப் புரியவில்லை என்றால் அதை ஒரு கேள்வியாகக் கேட்டுத் தௌவு பெறுவார். மேடைப் பேச்சில் இதற்கு உடனடியான வாய்ப்பு இல்லை. எனவே, இந்த விஷயங்களை உள்ளடக்கியே நமது பேச்சைத் தயாரிக்க வேண்டும்.
நேயர்கள் அவ்வப்பொழுது குறுக்கிட்டுப் பேசினால் அல்லது கேள்வி கேட்டால், நம் சிந்தனை ஓட்டம் தடைப்படும். மற்றவர்களுடைய கவனமும் சிதறும். எனவே கேள்விகளைக் கடைசியில் கேட்கும் விதி முறையே சிறந்தது. அதற்கேற்ப நம் உரை, தௌவாகவும் விரிவாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • மேடையில் பேசும் வாய்ப்புகள் கிடைத்தால் ஆர்வத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அதனைத் தேடிச் செல்லுங்கள். இதற்கான அமைப்புகள் ஆங்காங்கே உள்ளன. அப்படி இல்லையெனில் ஒத்த ஆர்வமுடைய நண்பர்களோடு நீங்களே ஒன்றை ஆரம்பியுங்கள். எல்லோரும் பயன் பெறலாம்.
  •   மாணவர்களாக இருந்தால் உங்கள் பள்ளயில் அல்லது கல்லூரியில் ஒரு அமைப்பை உருவாக்குங்கள். மேலும் “தன்னம்பிக்கை” மாத இதழ் நடத்தும் மாதாந்திரக் கூட்டங்களலும் பங்கேற்றுக் கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
  • உங்களுக்குத் தரப்படும் தலைப்பு உங்களுடைய ஆர்வ வட்டத்திற்குள் இருப்பது மிகவும் அவசியம். தெரியாத அல்லது பரிச்சயம் இல்லாத துறை பற்றிய வாய்ப்பு வந்தால் ஒரு புன்சிரிப்போடு ஒதுக்கி விடுங்கள். மேடை ஏறிய பின்பு “இந்தக் கூட்டத்தில் பேசுவதற்கு நான் தகுதியானவன் இல்லை” என்னும் போலித் தன்னடக்கம் காட்டுவது அழகல்ல. மேலும் நம்மால் வெற்றிகரமாகப் பேசவும் முடியாது.

மூன்றாவது, மொழி. நமக்குத் தாய் மொழி தமிழ். பயிற்று மொழியும் பெரும்பாலும் தமிழே. எனவே தமிழில் பேசும் முயற்சியை நாம் முதலில் மேற்கொள்வோம். வேற்று மொழியில் உதாரணமாக, ஆங்கிலத்தில் பேசுவது எப்படி என்பது பற்றி பிறகு பார்ப்போம்.
சரி, பேசும் வாய்ப்பு கிடைத்து விட்டது. கூட்டத்திற்கு இன்னமும் இரண்டு வார காலம் இருக்கிறது. என்ன செய்யலாம் ?
வாய்ப்பை ஏற்றுக் கொண்டதற்காக, முதலில் நம்மை நாமே பாராட்டிக் கொள்வோம். அதை வௌப்படுத்தும் விதமாக கரகோஷம் எழுப்புவோமே !
தொடரும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment