Home » Articles » சமூகப் பணி படிப்பு

 
சமூகப் பணி படிப்பு


அழகர்சாமி
Author:

தொடக்கத்தில் வெறும் சமூக சேவையோடு மட்டுமே தொடர்புடைய படிப்பாகக் கருதப்பட்ட சமூகப்பணி படிப்பு, வேகமாக இயங்கும் இன்றைய வாழ்வில் மனித உறவு மேம்படவும், நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளை போக்கவும், போதைப்பொருள் பயன்பாடு, மனநல பிரச்சனைகள், சிறுவர் மற்றும் முதியோர் வாழ்வு போன்றவற்றிற்கு பெரும் பங்காற்றும் துறையாக விளங்கி வருகிறது. இளைஞர்கள், பெண்கள், ஊனமுற்றோர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் சமூகக் குற்றவாளிகள் வாழ்வில் மாற்றத்தையும், பல்வேறு சமூகப் பிரச்சனைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் படிப்பாகும்.
இதில் பங்காற்றும் ஒருவருக்குக் கிடைக்கும் திருப்தியானது மிக அதிகமாக இருக்கிறது. மனிதனை உளவியல் ரீதியாக அணுகும் ஆர்வம், பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்றவை ஒருவரிடம் இருந்தால் இந்தப் படிப்பை மேற்கொள்ளலாம். இப்படிப்பினை படிப்பவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, பிறரின் வாழ்வில் நம்மால் பெரிய மாறுதலை ஆரோக்கியமாக உருவாக்க முடியும் என்பதை இந்த சமூகப்பணி படிப்பு கற்றுத் தருகிறது.
முன்பெல்லாம் ‘சோசியல் வொர்க்’ போன்ற படிப்புகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. அந்த படிப்பிற்கு அதிக மரியாதை கிடைத்துள்ளது. அந்தப் படிப்பைப் பற்றிய பல தவறான கருத்துக்கள் இன்று மறைந்துள்ளன. சமூகப் பணித்துறையில் ஒரு புதிய பார்வை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
சோசியல் வொர்க் என்பது சமூகத்தில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் கிராம, நகர வளர்ச்சிக்கு உதவுதல், சமூக இன்னல்களை நீக்குதல் மற்றும் இன்ன பிற நல்ல செயல்களைச் செய்தல் என்பது மட்டுமல்ல கடந்த பல வருட காலத்தில், சோசியல் வொர்க், ஒரு நல்ல தொழில் முறை பணியாக (Professional) வளர்ந்துள்ளது. மேலும் இது ஒரு வழக்கமான சம்பிரதாய பணியும் அல்ல. இந்தப் பணியானது சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, மனித உறவுகளில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துகிறது.
மேலும், சமூக பொருளாதார மற்றும் உணர்வு ரீதியான பிரச்சனைகளைக் களைய முயற்சிப்பதே சமூகப்பணியின் முக்கிய பணியாக இருக்கிறது. இதற்கு கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை, மாநாடுகளை நடத்துவது, ஆதாரமான வளங்களை அதிகப்படுத்துவது, பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சமூகத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவது, பல நலத்திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவது என இவர்களின் பணி எப்போதும் உயரிய நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கும்.
இப்பணியின் வகைகள்:

 • சமூகப்பணி படிப்பில், நோயாளிகளின் தேவை அறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் மருந்துகள் எடுப்பது தொடர்பாக உதவுதல் போன்ற முற்றிலும் மருத்துவமனை சார்ந்த கிளீனிக்கள் சோசியல் வொர்க்
 • போதை மருந்து பயன்பாட்டு பிரச்சனைகள், பாலியல் முறைகேட்டு பிரச்சனைகள் தொடர்பாக, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கும் பள்ளி சோசியல் வொர்க்
 • மன உளைச்சலுள்ள குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினர் ஆகியோருக்கு உள்ள நடத்தை சிக்கல்களை ஆராய்ந்து, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியான சைக்யாட்ரிக் சோசியல் வொர்க் (Medical & Psychiatric Social Work)
 • சிறைக்கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, அதன் மூலம் அவர்களைத் திருத்தி, சமூக விரோத நடவடிக்கைகளை குறைப்பது போன்ற பணியான குற்றவியல் மற்றும் திருத்துதல் சோசியல் வொர்க் (Criminology and Correction Administration Welfare).
 • வீட்டு வசதிகள், வேலையின்மை பிரச்சனைகள் மற்றும் உள்ளூர் சேவைகள் ஆகியவற்றைக் கவனிப்பது போன்ற பணியான சமூக அமைப்புப் பணி(Community Development), சமூகம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் நிறுவனங்களின் தீவிர செயல்பாட்டிற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் Teaching and Research பணி, வணிக நிறுவனங்கள் மற்றம் தொழிற்சாலைகளில், தொழிலாளர் நலன்களை உறுதி செய்வது தொடர்பான பணியான தொழில்துறை சோசியல் வொர்க் (HRD) என்று பல பணி வாய்ப்புள்ள படிப்புகளை சமூகப்பணி படிப்பு வழங்குகிறது.

வேலை வாய்ப்புகள்:
கிராமப்புற அவலம் மற்றும் வசதியின்மை, படிப்பறிவின்மை, மருத்துவ வசதிகளில் குறைபாடு மற்றும் மருந்துகளை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற அவலங்களைப் பற்றிய அதிகரித்துவரும் விழிப்புணர்வானது, சோசியல் வொர்க் துறையில் வேலைவாய்ப்பை அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO) வேலை வாய்ப்புக்களை அதிக அளவில் அளிக்கின்றன. மேலும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், சோசியல்வொர்க்கர்களைப் பணியமர்த்துகின்றனர்.
அரசுப்பணி என்று எடுத்துக்கொண்டால், நல அதிகாரி பணிகள், அரசு சாரா அமைப்புகளில் ஏராளமான பணிவாய்ப்புகள் குவிந்துள்ளன. சோசியல் வொர்க் படிப்பில் பட்டம் பெற்ற ஒருவர், முதலில் சோசியல் வொர்க்கராகப் பணியில் சேர்ந்து, பின்னர் பணி உயர்வு பெறலாம். ஒருவர் இத்துறையில் போதிய அனுபவம் பெற்ற பின்னர் சொந்தமாக கவுன்சிலிங் மையம் தொடங்கலாம்.
மேலும், உலக சுகாதார நிறுவனம், யுனிசெப், லேபர் பீரோ, பல கார்பரேட் நிறுவனங்கள் தங்களின் பணியாளர் நலத்திட்டங்களுக்கு பல சோசியல் வொர்க்கர்களை பணியமர்த்துகின்றனர்.
சம்பளம்:
நீங்கள் பணிக்குச் சேரும் தொண்டு நிறுவனத்தைப் பொறுத்து ஆரம்ப சம்பளம் ரூ.12,000 முதல் ரூ.18,000 வரை இருக்கும். அதே சமயம் சர்வதேச ஏஜென்சிகள் அதிக சம்பளம் தருகின்றன.
படிப்புகள்:
பல வித பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விதவிதமான படிப்புகளை வழங்குகின்றன.

 • சோசியல் வொர்க்-ல் இளங்கலைப் படிப்புகள் (BSW) தகுதி 2 தேர்ச்சி
 • முதுகலைப் படிப்பு (MSW) – ஏதேனும் இளநிலைப் படிப்பில் தேர்ச்சி
 • எம்.பில் மற்றும் பி.எச்.டி. முதுநிலை சமூகப்பணி படிப்பில் தேர்ச்சி

களப்பணி (Field Work):
இப்படிப்பில் மட்டும் தான் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கட்டாயமாக களப்பணியாற்ற வேண்டும். களப்பணி வேலைக்கான திறமையினை வளர்க்க உதவுவதால் படிப்பினை முடிக்கும் முன்னரே வேலை வாய்ப்பினைப் பெற முடிகிறது.
சோசியல் வொர்க் சார்ந்த படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்,
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம், கோவை அவினாசிலிங்கம், கற்பகம், அமிர்தா போன்ற பல்கலைக்கழகங்களிலும்,
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி,P.S.G. கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா, G.R.D., பிசப் அப்பாசாமி, சி.எம்.எஸ். வணிகவியல் கல்லூரி, ஸ்ரீ நாராயணகுரு, சேரன் கலை கல்லூரி, S.M.S. கல்லூரி, நேரு கல்லூரி, நேரு மஹாவித்யாலயா, ஹிந்துஸ்தான், A.J.K., பிஷப் அம்புரோஸ் கல்லூரி, சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, என்.ஜி.எம். கல்லூரி, ஆர்.வி.எஸ்., எஸ்.என்.ஆர்., ஸ்ரீ.ஜி. கல்லூரி, ஈரோடு அம்மன் கலை கல்லூரி போன்ற கல்லூரிகளிலும்,
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மதுரை சமூகப்பணிக் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, விருதுநகர் இந்து நாடார் கல்லூரி, கொடைக்கானல் கிறிஸ்டியன் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி, லேடிடோக் கல்லூரி, பாத்திமா கல்லூரி போன்ற கல்லூரிகளிலும்,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பிஷப் ஹீப்பர், காவேரி, தந்தை கேன்ஸ் ரோவர், அடைக்கல மாதா, ஜீமத் ஆண்டவர் காலேஜ், உருமு தனலட்சுமி காலேஜ், இந்திரா காந்தி கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, போன் சாக்கர்ஸ் கல்லூரி பெரியார் மணியம்மை கல்லூரி, கிறிஸ்துராஜ் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகள் போன்ற கல்லூரிகளிலும்,
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மெட்ராஸ் சமூகப் பணிக் கல்லூரி, சென்னை கிறிஸ்டியன் கல்லூரி, லயோலா, எத்திராஜ், வைஷ்ணவி, ராமகிருஷ்ண விவேகானந்தா கல்லூரி, பாரத் பல்கலைக்கழக கல்லூரி, மார்க் கிரகோரியஸ் கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, முகமது சதக் கல்லூரி போன்ற கல்லூரிகளிலும்,
திருநெல்வேலியில் செயின்ட் சேவியர் கல்லூரி, நாகர்கோவில் எஸ்.டி. இந்து கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி, மலாய்கரை கத்தோலிக் கல்லூரி, திருப்பத்தூர் சேக்ரட் கலை கல்லூரி போன்றவை எம்.எஸ்.டபிள்யூ (Master of Social Work MSW) வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்களாகும்.
தொடர்புக்கு: பேராசிரியர் அ. அழகர்சாமி, துறைத்தலைவர், முதுகலை சமூகப்பணித் துறை, ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை – 08

Mobile: 98427 29127.
Email: aalagar2002@yahoo.co.in

 

3 Comments

 1. Naveen says:

  அருமையான கட்டுரை….

 2. hello sir,
  i am azhagendran studying BE(AUTOMOBILE),I wish to join part time of Bsw ,so first of all how to join sir on open university of coimbatore .and i studyed dr,mcet pollachi.can i join us……

 3. Vignesh says:

  நல்ல தகவல்

Post a Comment