Home » Cover Story » விதையென விழு! விருட்சமென எழு!!

 
விதையென விழு! விருட்சமென எழு!!


இராஜகோபால்.எஸ்
Author:

அது 1980ம் வருடம். அப்போது அவருக்கு வயது 21. கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (ஆ.இர்ம்.) இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். தங்கள் கிராமத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த தனியார் பள்ளியின் செயல்பாடுகள் சரியில்லாததையும், மாணவர்களுக்குத் தேவையான, தரமான கல்வியைக் கொடுக்க முடியாத சூழலும் இருப்பதை உணர்கிறார். இளமைக்கே உரித்தான வேகத்துடன் சென்று, பள்ளியைத் தான் நடத்திக் கொள்ளுவதாகக் கேட்கிறார்.
2012ம் வருடம் வயது 51. அந்த இளைஞர் தரமான கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களில் ஒன்றான யுனிவர்சல் பள்ளியின் தாளாளராகவும், பள்ளியின் முதல்வராகவும் இன்று பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். 30 வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு துளி கூட சமூக நோக்கத்திலிருந்து விலகிவிடாமல் தன் பள்ளியைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார்.
முயற்சி என்பது கானல்நீர் அல்ல. அது வெற்றி என்கிற ஜீவநதிக்கு அழைத்துச் செல்லும் என்பதற்கேற்ப யுனிவர்சல் நர்சரி மற்றும் பிரைமரி, யுனிவர்சல் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் தாளாளராகவும் கல்விப் பணியில் உயர்ந்து வருகின்றதிரு. எஸ். இராஜகோபால் அவர்களை, அவரது யுனிவர்சல் மேல்நிலைப் பள்ளி அலுவலகத்தில் முனைவர் செந்தில் நடேசன் அவர்களுடன் சந்தித்தோம். உள்ளொளி காட்டும் வெளிச்சத்தில் நடப்பவரே இலக்கை அடையக்கூடியவர் என்று தன்னுடைய வெற்றி அனுபவங்களை உற்சாகமாக பகிர்ந்து கொண்டார். அவருடனான சந்திப்பிலிருந்து இனி நாம்…

கல்வி என்பது ‘வியாபாரம்’ என்ற பரவலான பேச்சுக்குள் சிக்குண்டுவிட்ட நிலையில் நீங்கள் இப்பணியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கல்வி என்பது நம்முடைய வாழ்க்கையின் வழிமுறைகளையும், நாட்டின் எதிர்காலத்தையும் மெருகேற்றும் மேன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டும். சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக பள்ளிகள் அமைய வேண்டும். விதைகளாக வரும் குழந்தைகளை தானியமாக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடே நான் பள்ளியை நடத்துவதற்கான நோக்கம்.
இந்த மண்ணில் இப்போதும் ஒரு மகத்தான மரபு இருந்து கொண்டிருக்கிறது. மருத்துவத்தையும், உணவுப் பொருளையும், கல்வியையும் பணத்திற்காக யாருக்கும் பரிமாறக் கூடாது. நமக்கு அடுத்தவர்களிடம் இருந்து வழங்கப்பட்ட அறிவை வியாபாரப் பொருளாக்கிவிடக் கூடாது என்ற எண்ணம் மனதில் எப்போதும் இருந்து கொண்டிருப்பதால் தான் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்திலேயே எங்கள் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நல்ல கல்வியின் அவசியத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். எனவே தான் அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வியை வழங்கியாக வேண்டும் என்று உடலாலும், மனதாலும் வருத்திக் கொண்டு இந்த சீரிய பணியைச் செய்து கொண்டிருக்கிறோம்.
இன்றைய நிலையில் கல்வி…
பொதுவாக இன்று நாம் கற்றுக்கொடுக்கும் கல்வி மூளைக்கு மட்டுமே ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்வதைப் போல அமைந்துவிட்டது. நம்முடைய கல்விமுறை இதிலிருந்து முற்றிலும் மாறுபட வேண்டும். உடலுக்கான வலிமையைத் தருவதாகவும், மனதுக்கான கல்வியாகவும், இதயத்துக்கான உணர்தலைத் தரக்கூடியதாகவும், மூளைக்கான அறிவாகவும் ஒருங்கிணைந்து ஒரு முழுமையான மனிதனை உருவாக்குகிற கல்வியாக மாற்றப்பட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. ஆனால் நடைமுறையில் கல்வியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றம் இதயத்தைப் பலவீனமாக்கிவிட்டு மூளையை பலமுள்ளதாக மாற்றியிருக்கிறது. இதன் விளைவு நல்ல ஐய்க்ண்ஸ்ண்க்ன்ஹப் உருவாக்கத் தவறிவிடுகிறது.
அறிவை மட்டுமே உயர்த்திப் பிடிக்கிற கல்வியால், மனிதர்கள் உணர்வுகளைக் கடக்க முடியாமல் பதற்றமும், பயமும் அடைகிறார்கள். மரம் செழித்து வளர வேண்டுமானால் மண்ணுக்குள் வேரைச் செலுத்தியாக வேண்டும். அதுபோலத்தான் கல்வியையும், அறிவையும் வெளியே தேடுவதற்கு இணையாக மனதிற்குள்ளும் வேர்களைப் போல இறங்க வேண்டும். இத்தகைய நோக்கங்களைக் கொண்ட அமைப்பாக கல்வித்துறையை மாற்றியமைக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதே நிதர்சன உண்மை.
தங்களின் மனநிலைக்கேற்ப ஆசிரியர்களை எப்படி தயார்படுத்துகிறீர்கள்?
எங்கள் பள்ளிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்தும், பொருளாதார ரீதியாக மிகவும் ஏழ்மையான குடும்பங்களில் இருந்துமே அதிக அளவில் படிக்க வருகின்றனர். அத்தகைய குடும்பங்கள் கல்விக்காக தங்களிடம் இருக்கும் அனைத்து நிதி ஆதாரங்களையும் பணயமாக வைக்கிறார்கள். இது ஒரு புறம்.
இன்னொரு புறம், கடுமையான பாடச்சுமை, போட்டி போட வேண்டிய நிர்பந்தம், சமூகத்தில் பரவலாக பரவிவிட்ட புதிய சுதந்திரங்கள், பல கேளிக்கை நிகழ்ச்சிகள் போன்றவை பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்களின் பங்கு மிகமிக மகத்தானது என்பதை எங்கள் ஆசிரியர்களுக்கு உணர வைக்கிறோம். வகுப்பறையில் ஏற்படும் அதிர்வலைகள் தான் மின்காந்த அதிர்வலைகளாக இந்த பூமியில் பரவக்கூடியது என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து மாணவர்களின் மூளைகளை மட்டும் தொடாமல் இதயங்களையும் தொட அவர்களுக்குப் பயிற்சியளிக்கிறோம்.
வாழ்க்கையில் எந்தச் சூழலிலும் தன்னம்பிக்கையுடன் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற புரிதலையும், மன தைரியத்தையும் மாணவர்களிடம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு எங்கள் ஆசிரியரின் கற்பித்தல் முறை இருக்கும்படி அவர்களுக்குப் பயிற்சியளிக்கிறோம். மனிதனை மனிதாக உருவாக்கும் சிற்பிகள் தான் ஆசிரியர்கள் என்பதை புரிந்து கொண்டு, தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக உருவாக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பையும் அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கும்படி கற்பிக்க வைக்கிறோம்.
மேலும் எங்கள் ஆசிரியர்களுக்குத் தலைசிறந்த, நன்கு புலமை பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை எடுக்கச் சொல்லி தங்களின் பாடங்களில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதுடன், எளிமையாக பாடம் எடுக்கவும் கற்றுத் தருகிறோம்.
ஐ-பேடு (i-Pod) போன்ற புதிய தொழில்நுட்பக் கருவிகளால் கல்வியில் புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
பரவலாக இன்று கூறப்படும் செய்தி காலத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் மாணவர்களின் மனநிலையையும், அறிவுத் திறனையும் புரிந்து கொண்டு, புதிய தொழில்நுட்பங்களுடன் பாடம் நடத்த வேண்டும் என்பதே என்னைப் பொருத்த வரையில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் (Smart Class Room) என்று சொல்லி, லேப்-டாப் (Laptop), ஐ-பேடு (i-Pod) போன்ற புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பாடம் எடுப்பதில் உடன்பாடு இல்லை. அத்தகைய கல்விமுறையால் மாணவனின் மனதைப் புரிந்து கொள்ள முடியாது என்பது என் கருத்து. உதாரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் எங்கள் பள்ளியில் நடந்த என்னை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றாக படிக்கும் ஒரு மாணவன் சில நாட்களாக ஏதோ ஒரு மன அழுத்தத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன். அவனிடம் சென்று என்ன பிரச்சனை, இரண்டு நாட்களாக மிகவும் சோர்வுடனும், எதிலும் அக்கறை இல்லாமலும் இருப்பதைப்போல் காட்சியளிக்கிறாய் என்று கேட்டேன். மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின்னர் அம்மாணவன் தன்னுடைய பிரச்சனையைப் பற்றி பேச ஆரம்பித்து, தன்னுடைய தந்தை சில வாரங்களாக வேலைக்குச் செல்லவில்லை என்றும், காலை வேலையிலேயே மது அருந்தி விடுவதாகவும் கூறினான். இப்படிப்பட்ட சூழலில் இருந்து வரும் என்னால் பாடத்தில் சரியாக கவனம் செலுத்த முடிவதில்லை என்றவன், இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை என்றும், அதற்குக் காரணம் எங்கள் வீட்டில் சமைப்பதற்கு அரிசி இல்லை என்றும் கூறிய செய்தி என்னை அப்படியே தூக்கிவாரிப் போட்டது.
ஒரு மாணவன் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை, இப்படி எத்தனையோ பிரச்சனைகளுக்கு இடையில் வரும் மாணவனுக்கு புதிய தொழில்நுட்பக் கல்வி அவசியமா? ஒரு மாணவன் சாப்பிட்டானா, இல்லையா என்பதை அறிந்து கொள்ளாமல் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் (நம்ஹழ்ற் இப்ஹள்ள் தர்ர்ம்), புதிய தொழில்நுட்பம் என்று அவன் வாழ்நாள் முழுவதும் ஜீரணிக்க முடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணித்துக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணும்போதே, இன்றைய சூழ்நிலையில் மாணவர்களுக்குத் தேவை புதிய தொழில்நுட்பங்கள் அல்ல. மாணவனின் உள்ளத்தைப் புரிந்துகொண்டு பாடம் எடுக்கும் மனிதர்களைக் கொண்ட ஆசிரியர் குழு என்பதை உணர்ந்தேன். எந்தவித தொழில்நுட்பங்களும் இல்லாத காலத்திலேயே தலைசிறந்த ஆளுமைகளைக் கொடுத்த கல்வி இப்போது மட்டும் கொடுக்காமலா? போய்விடும். எனவே தொழில்நுட்பங்களை காட்டிலும் ஒரு மாணவனின் மனதைப் புரிந்து கொண்டு பாடம் எடுக்கும் முறையே சிறந்தது.
தங்களின் இந்த முயற்சிக்கு மக்களின் ஆதரவு எப்படி உள்ளது?
நல்ல ஆதரவு இருப்பதால் தான் இவ்வளவு காலம் இதை நிலைத்து செய்து கொண்டிருக்கிறோம். எங்களிடம் செல்வம் இல்லை. எங்கள் மாணவர்கள் பெருஞ்செல்வந்தர்களும் இல்லை. எங்களிடம் அரசும் இல்லை. இவையாவும் இல்லாவிடினும் ஏழை மாணவ, மாணவிகள் எங்கள் பள்ளியில் வந்து பயில்கிறார்கள். மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது. இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் படிப்பிலும், பண்பிலும் சிறந்தவர்களாக திகழ்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகு இப்போது நல்ல ஆதரவு இருக்கிறது.
மாணவர்களுக்கு எத்தகைய வழிகாட்டுதல்களைச் செய்து கொடுக்கிறீர்கள்?
வாழ்க்கையை வளப்படுத்துகின்ற, மனிதனை உருவாக்குகின்ற, குணத்தை மேம்படுத்துகின்ற, கருத்துக்களை ஜீரணம் செய்யத்தக்க கல்வியை நாங்கள் எங்கள் மாணவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். வலிமை தரும் கருத்துக்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளுங்கள், பலவீனப்படுத்தும் கருத்துக்களை உடனே விலக்கிவிடுங்கள் என்று தான் சொல்லித் தருகிறோம். ஒரு பலவீனத்திற்குப் பரிகாரம் என்றால் பலத்தை நினைப்பதே தவிர பலவீனத்தை நினைப்பதல்ல என்பதை எடுத்துக்கூறி ஒவவொரு மாணவனின் உள்ளிருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருகிறோம்.
மனித மனத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. அந்த ஆற்றலை ஒரு மையத்தில் குவிக்க உங்களால் முடியும். அவனின் ஆற்றலை எவ்வாறு தட்டிவிட வேண்டும்? அவனுக்குத் தேவையான உந்துதலை எப்படி அளிப்பது போன்றவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, அவனுக்கு பாடம் கற்பிக்கிறோம். ஆசிரியர்கள் திட்டுவதாலோ, தண்டனை தருவதாலோ மாணவர்களைத் திருத்திவிட முடியாது என்பதை உணர்ந்து அன்பாகப் பேசி அவர்களுக்கு அவர்களின் தவறுகளைப் புரிய வைக்கிறோம். மாணவர்கள் மதிப்பெண் வாங்குவதைவிட அப்பாடப்பொருள் குறித்த ஆர்வமும், போதிய அறிவும், படைப்பாக்கத் திறனும் கொண்டவர்களாக உருவாக வேண்டும் என்பதை எங்கள் ஆசிரியர்கள் புரிந்து கொண்டு கல்வி கற்பிக்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்களுக்குத் ‘தன்னம்பிக்கை’ அளிக்க வேண்டிய பெரும்பணி ஆசிரியர்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து பாடம் எடுக்கிறோம்.
எங்கள் குழந்தைகளிடம் தயக்கம் என்பதே இருக்காது. அப்படித்தான் நாங்கள் அவர்களை தயார் செய்கிறோம். ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கு நூறு சதவிகிதம் வந்து சிறப்பு வகுப்புகளில் பங்கேற்றுப் படிக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவிற்கு எங்கள் பள்ளியை நேசிக்கிறார்கள் என்பது புரியும்.
எங்கள் மாணவர்களுக்கு இந்த சமூக நிலை, அப்பா, அம்மா படுகின்ற கஷ்டம் என்னவென்று தெரியும். அதிலிருந்து மீண்டு மேலே வரவேண்டும் என்கிற அக்கறையையும், பொறுப்புணர்வையும் அவர்களின் மனதில் விதைக்கிறோம்.
இது எனக்கு மாணவன் தந்த பாடம் என்று ஏதேனும் சம்பவங்கள் தங்கள் பள்ளியில் நடந்ததுண்டா?
உண்டு. அந்த மாணவன் பெயர் மனோஜ். எங்கள் பள்ளிக்கு வரும்போது ஒரு அரசுப் பள்ளியில் அவன் 6ம் வகுப்பைப் படித்துக் கொண்டிருந்தான். வறுமையின் எல்லையில் இருந்த அந்த மாணவனுக்கு கல்வியில் எந்த அடிப்படையும் தெரியவில்லை. இந்நிலையில் அந்த மாணவனை இரண்டாம் வகுப்பில் சேர்த்து, அவனுக்கென்றே ஒரு ஆசிரியரை நியமித்து மிகுந்த கவனத்துடன் பாடங்களைச் சொல்லித்தர ஆரம்பித்தோம். சில மாதங்களில் பாடங்களை நன்றாக புரிந்து கொண்டதால், அவனது வயதைக் கணக்கிட்டு உநகஇ எனப்படும் எட்டாம் வகுப்பு தேர்வைத் தனித்தேர்வாக எழுத வைத்தோம்.
பின்னர் ஓர் ஆண்டு இடைவெளியில் 10ம் வகுப்பு தனித் தேர்வாக எழுதவைத்து 11ம் வகுப்பில் எங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டோம். 12ம் வகுப்பில் அந்த மாணவன் 1010 மதிப்பெண்களைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தான். அப்போது அந்த மாணவன் கூறிய வார்த்தைகள் இன்னும் என் மனதில் நினைவுச் சின்னமாக காட்சியளிக்கிறது.
“சார் ஒரு மாணவன் 10ம் வகுப்பில் தோல்வியடைந்து விடுவான், 12ம் வகுப்பில் தோல்வியடைந்து விடுவான் என்றும் 9ம் வகுப்பிலும், 11ம் வகுப்பிலும் அவனை தோல்வியடையச் (Fail) செய்வது எந்த விதத்தில் நியாயம். ஒரு மாணவனுடைய வாழ்க்கையில் திருப்புமுனை (Turning Point) எப்போது வருமுன்னு நாம முடிவு பண்ண முடியாது சார். எப்போ எது நடக்கும் என்று தெரியாத போது இப்ப எப்படி முடிவெடுத்து இந்த மாணவன் மேல் வகுப்புக்குச் செல்லலாம், இவன் செல்லக்கூடாது என்று எப்படி முடிவெடுக்க முடியும்” என்று அவன் கேட்ட கேள்விக்குப் பதில் நீங்களே கூறுங்கள்…
நெகிழ வைத்த சம்பவமாக தாங்கள் சொல்ல விரும்புவது…
எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டுமென்றமுயற்சியில் பொதுமக்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று ஒவ்வொருவராக பங்கெடுத்துக் கொள்வதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உணர்கிறேன். இதை நினைவு கூறும்போது 1992ல் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வைச் சுட்டிக்காட்ட வேண்டும். அப்போதுதான் இந்த பள்ளி எத்தகைய மனிதர்களால், எத்தகைய சூழ்நிலையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும்.
எங்கள் பள்ளியின் கட்டமைப்பை உயர்த்துவதற்காக வங்கியில் கடன் பெற்றிருந்தோம். 1992ம் வருடம் வங்கிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் வங்கியின் அதிகாரிகள் இன்னும் இரண்டு நாட்களில் பணத்தை செலுத்தவில்லை எனில் வங்கியே இப்பள்ளியை எடுத்துக் கொள்ளும் என்று கூறிச்சென்றுவிட்டார்கள். இந்தக் கடினமான சூழ்நிலையில் இருந்து எப்படி வெளிவருவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது, எனது நண்பர் மூலம் ஒரு செய்தி கிடைத்தது. இந்தப் பிரச்சனை தீர்வதற்கு வங்கியின் உதவிப் பொது மேலாளரைப் பார்த்துப் பேசு, நல்ல வழிகிடைக்கும் என்று கூறி அவரிடம் பேசுவதற்கு அனுமதி பெற்றுத் தந்தார்.
அந்த நாளும் வந்தது. வங்கியில் அவரைப் பார்த்து பேசினேன். “இரண்டு நாட்களில் நானே தங்கள் பள்ளியை நேரில் வந்து பார்க்கிறேன்” என்று கூறிய உதவிப் பொது மேலாளர் இரண்டு நாட்களுக்கு பிறகு பள்ளியை நேரடியாகப் பார்வையிட்டார். அப்போது என்னுடைய எதிர்காலத் திட்டத்தையும், எப்படி கடனைத் திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்பதையும் திட்ட அறிக்கையாக கூறினேன். என்னுடைய உறுதியையும், முடியும் என்ற தன்னம்பிக்கையையும் புரிந்து கொண்ட அந்த உதவுப் பொது மேலாளர் ஒரு வருடம் எந்தவித தொந்தரவும் தரமாட்டோம். நீங்கள் கூறியபடி கடனை அதன்பிறகு திருப்பிச் செலுத்துங்கள் என்று கூறிச் சென்றுவிட்டார்.
அப்போதைக்கு பிரச்சனை முடிந்தது. ஆனால் திருப்பிச் செலுத்த வேண்டுமே. ஒரு யோசனை ஏற்பட்டது. மாணவர்களின் பெற்றோர்களை நேரடியாக அழைத்துப் பேசினேன். பள்ளியின் நிலையை எடுத்துக்கூறி “மாணவர்களுக்கு நீங்கள் கட்டணமாகச் செலுத்துவதை முடிந்த அளவு ஒரு வருட கட்டணத்தை முழுவதுமாக செலுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டேன்.
எதிர்பாராத திருப்பமாக 100 பெற்றோர்கள் தலா 10,000 ரூபாயைப் போட்டு மொத்தமாக 10 லட்சத்தைக் கொடுத்து பள்ளியை நன்றாக நடத்துங்கள். இது எங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளி. எப்போது முடிகிறதோ அப்போது திருப்பித் தாருங்கள் என்று கூறியது என்னை நெகிழச் செய்து விட்டது.
இப்படி ஒவ்வொரு விசயத்திலும் பெற்றோர்களும், நண்பர்களும் தங்கள் பள்ளியைப் போலவே இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இன்றளவிலும் இருக்கிறார்கள். எங்கள் பள்ளியை மக்கள் பள்ளி என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பொதுமக்களின் ஆதரவு இருப்பதால் தான் எங்களால் இவ்வளவும் செய்ய முடிகிறது.
இப்படி நல்ல மனிதர்கள் இருக்கும்போது ஏன் பின்நோக்கி யோசிக்கணும் மிகவும் சங்கடமாக இருக்கும்போது எனக்கு உறுதுணையாக இருப்பது.
“தேடிச் சோறு நிதந்தின்று பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக வுழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப் பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போல நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?”
என்ற பாரதியின் பாடல் தான். இதை நினைத்துக் கொண்டால் தன்னம்பிக்கை கிடைத்துவிடும்.
இந்த பள்ளியைப் பொறுத்தவரை உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்கால திட்டங்கள் இருக்கிறது?
இந்தப் பள்ளி இப்போது ஒரு அடையாள முயற்சியாக மட்டுமே இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த அடையாள முயற்சி பள்ளிகளுக்கு எல்லாம் ஒரு வழிகாட்டியாக வேண்டும் என்பது தான். எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று நினைப்பதில்லை. அனைத்து மாணவர்களுக்கும் 90% மதிப்பெண்களுக்கு மேல் பெற வேண்டும் என்றே உழைக்கிறோம். எங்கள் மாணவர்களில் நன்றாக படிப்பவர்களை Toppest மாணவர்கள் என்றும், ஓரளவிற்கு நன்றாகப் படிப்பவர்களை Moderate என்றும், சுமாராகப் படிப்பவர்களை Well-wisher என்று பிரித்து பாடங்களைக் கற்றுத் தருகிறோம். Well-wisher பகுதியில் உள்ள மாணவர்களுக்கு கூடுதலான கவனம் செலுத்தி கற்பிக்கிறோம். எதிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு நான் மட்டும் பொறுப்பல்ல, மாணவர்களின் பெற்றோர் அளிக்கிற ஆதரவு, நண்பர்களின் வழிகாட்டுதல் போன்றவைதான் காரணமாக இருக்கும்.
புத்தக வாசிப்பின் வாசிப்பின் அவசியம் குறித்து?..
நல்ல புத்தகங்களோடு தொடர்பு வைத்திருப்பதும், நல்ல புத்தகங்களை வாங்கி படிப்பதும் வாழ்க்கையை மேம்படுத்தும். புத்தகங்கள் தான் நீடித்த, நிலையான நண்பன். அப்படிப்பட்ட புத்தகங்கள் நமது வாழ்க்கைப் பயணத்தில் நம்முடன் எப்பொழுதும் தொடர்ந்து வரும். எப்போதெல்லம் கஷ்டமான, துன்பமான சூழ்நிலை நிலவுகிறதோ அப்போதெல்லாம் புத்தகங்கள் தான் பல அரும்பெரும் செயல்களைச் செய்த மனிதர்களின் எண்ணங்களைக் கொண்டு கண்ணீரைத் துடைக்கிறது. எனக்கு மிகப்பெரிய உந்துசக்தியைக் கொடுக்கும் புத்தகங்கள் என்று எடுத்துக்கொண்டால் மேலாண்மை பொன்னுசாமியின் புத்தகங்கள், பாலகுமாரனின் நாவலான ‘மெர்குரிப் பூக்கள்’, எஸ். இராமகிருஷ்ணனின் புத்தகங்கள் என்று நீண்ட பட்டியல் உள்ளது. நாம் வரலாற்றையும், கலாச்சாரத்தையும், அறிவியலையும், தொழில்நுட்பத்தையும், கலையையும் புத்தகங்களின் மூலம் படித்து, நம்மை ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை பற்றி?…
வளரும் தலைமுறைக்கு வாழ்ந்து வரும் தலைமுறைகளின் வெற்றி ரகசியத்தை உள்ளது உள்ளபடியே எடுத்துச் சொல்வதில் தன்னம்பிக்கைக்கு மாற்று வேறொன்றும் இல்லை. மனிதனுக்கு ஒரு புறத்தில் தன்னம்பிக்கை அவசியம். கூடவே இந்தத் தன்னம்பிக்கையும்(இதழ்) அவசியம்
ஒரு சமூகத்தை மாற்ற வேண்டுமா? அனைவருக்கும் கல்வியைக் கொடு என்ற கூற்றுக்கு ஏற்ப குறைந்த கட்டணத்தில் கல்வியை வழங்கிவரும் திரு. எஸ். ராஜகோபால் அவர்கள் பள்ளியில் படிக்கும் போதே தன்னுடைய அப்பா செய்து வந்த தொழிலான சாக்கு தைக்கும் தொழிலைப் பகுதி நேரமாகச் செய்து கொண்டு படித்தவர். எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்த இவர் தன் மாணவர்கள் அத்தகைய கஷ்டத்தைப் படக் கூடாது என்று நினைக்கிறார்.
தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடும் செய்து கொடுத்திருக்கிறார். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் யாராவது இறந்துவிட்டால் அந்த மாணவனுக்கு 12ம் வகுப்பு முடிய முற்றிலும் இலவசக் கல்வியைக் கொடுக்கிறார்.
வகுப்பறையில் நுழைந்து ஒவ்வொரு மாணவ, மாணவியரின் குறிப்பேட்டையும் வாங்கிப் பார்த்தோம். முத்து முத்தாக அச்சு கோர்த்தது போல் அழகான கையெழுத்து, இதற்காக சிறப்புக் கையெழுத்துப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக மாணவர்கள் கூறுகிறார்கள். வாசிப்புத் திறனை அதிகரிக்கும் பொருட்டு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வருடந்தோரும் நல்ல புத்தகங்களை வாங்கி இலவசமாக கொடுக்கிறார்.
பாடப்புத்தகத்தை வடிவமைத்த ஆசிரியர்களை அழைத்து வந்து ஒரு குறிப்பிட்ட பாடம் ஏன் பாடப்புத்தகத்தில் வைக்கப்பட்டது என்பதையும், அந்த குறிப்பிட்ட பாடத்தை பற்றியும் அவர்களாலேயே கற்பிக்க வைக்கிறார். இதனால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் அந்த குறிப்பிட்ட பாடத்தை வைத்ததன், நோக்கத்தை அறிந்து கொள்ளச் செய்கிறார். இப்படி எத்தனையோ புதுமைகளைச் செய்து கொண்டிருக்கும் யுனிவர்சல் பள்ளியின் வளர்ச்சி, திரு. எஸ் இராஜகோபால் அவர்களின் வளர்ச்சி இமயத்தைப் போல உயர்ந்து நிற்க தன்னம்பிக்கை வாழ்த்துகிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment