Home » Articles » Be Cool… ஆல் ஈஸ் வெல்…

 
Be Cool… ஆல் ஈஸ் வெல்…


சித்ரகலா S
Author:

நானாக இருந்திருந்தால் அவர்கள் செய்ததை விட இன்னும் சிறப்பாக செய்திருப்பேன்; நானாக இருந்திருந்தால் இன்னும் வேகமாக முடித்திருப்பேன் என்று ஒரு சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ‘இந்த நானாக இருந்திருந்தால்’ என்பன போன்ற வார்த்தைகள் சொல்பவர்களுக்கு வேண்டுமானால் சிறப்பு சேர்க்கும். இதனால் பாதிக்கப்படுபவர்களை ‘அவர்களாக இருந்திருந்தால்’ என்ன சமாதானம் செய்வார்கள். எல்லோருக்கும் எல்லா விதமான திறமைகளும் ஒன்றாக இருப்பதில்லை. திறமை வாய்க்கப்பெற்றவர்கள் தன் திறமைகளை மேலும் மேம்படுத்திக் கொண்டு செயல்களால் மற்றவர்களையும் பெருமைபடச் செய்ய வேண்டும்.
திறமையால் கிடைக்கப் பெறும் புகழை மனதிற்குள் ஏற்றி ஆற்றலை அதிகப்படுத்த வேண்டுமேயன்றி, அப்புகழை தலைக்கேற்றி தலைக்கனத்தால் மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளைப் பேசக்கூடாது. ஒருவர் தமது தன்னம்பிக்கையால் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதால் பெரும்பாலானவர்கள் நன்மை பெறமுடியும்.
“மன்னன் ஒருவன் தனது குதிரைப் படையுடன் ஒரு மிகப்பெரிய பாலைவனத்தைக் கடந்து எதிரி நாட்டிற்குச் சென்று போரிட்டு வெற்றி வாகை சூடி தனது நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான். செல்லும் பொழுது, அனைவரும் போரிட வேண்டும், வெற்றி பெறவேண்டும் என்ற சிந்தனையிலேயே சென்றதால் பாலைவனத்தைக் கடந்து சென்றது பெரிய விசயமாகத் தெரியவில்லை. போர் முடித்து தனது நாட்டிற்கு வர இன்னும் பாதியளவு தூரம் இருக்கும் பொழுது, அனைத்து வீரர்களுக்கும் தாங்க முடியாத தண்ணீர் தாகம். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தண்ணீர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இந்த நிலையிலேயே சென்றால் உயிர் மிஞ்சாது என்றநிலை. மன்னன் தனது படை வீரர்களிடம் தண்ணீர் இருக்குமிடம் எனக்குத் தெரியும், அனைவரும் வேகமாக படைகளைக் கிளப்புங்கள் என்றார். அதைக் கேட்டதும் அனைவரும் உற்சாகத்துடன் மன்னனை வேகமாக பின்தொடர்ந்தனர். இன்னும் கொஞ்சம் தூரம் என்று கூறிக்கொண்டே மன்னனும் வேகமாக முன்னோக்கிச் செல்ல, வீரர்களும் பின்தொடர்ந்தார்கள். இறுதியில், தனது நாட்டை வேகமாக வந்தடைந்தார்கள். மன்னனது நம்பிக்கை வார்த்தையால் அனைத்து வீரர்களும் மனந்தளராமல் நம்பிக்கையுடன் படைகளைக் கிளப்ப, நாடு வந்து சேர்ந்தனர்”. இது போன்றநம்பிக்கை வார்த்தைகள் மரணத்தின் விளிம்பிற்குச் செல்பவர்களுக்கும் கூட தைரியத்தை வரவழைக்கும்.
நான் எதையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன், எதுவாயினும் நேருக்கு நேர் பேசி விடுவேன்’ என்பவர்கள், அறிவை பயன்படுத்தியாவது பேச வேண்டியதை மட்டும் பேச வேண்டும். ஒருவர் வேண்டும் என கேட்பதை கொடுக்க முடியா விட்டாலும், வேண்டாமென ஒதுக்குவதை திணிக்காமல் இருக்கலாம். கோபங்கொண்டு எடுக்கும் முடிவுகளாலும், ஆத்திரமான வார்த்தைகளாலும் கடத்தப்படும் நொடிப்பொழுது நிமிடங்கள், காலம் முழுவதும் மாற்ற முடியாத வடுக்களை ஏற்படுத்திவிடும். சாதாரணமானவர்களின் வார்த்தைகளை விட, அன்பானவர்களின் கடுமையான வார்த்தைகளால் ஏற்படும் வலிகளுக்கு மருந்துகள் கிடையாது.
கோபத்தின் விளைவைத் தெரிவித்த மொபைல் குறுஞ்செய்தியொன்று, “தந்தை தனது புதிய காரை தண்ணீர் விட்டுத் துடைத்துக் கொண்டிருந்தார். காரின் பின்பக்கமாக உட்கார்ந்திருந்த மகன் கார் சாவியை வைத்துக் கொண்டு கீறல் செய்து கொண்டிருந்தான். அதைப்பார்த்த தந்தை கோபத்தால், பக்கத்திலிருந்த சுத்தியலை எடுத்து ஆத்திரத்துடன் குழந்தையின் கை மேல் வீச, குழந்தை வலியால் துடித்துக் கதறினான். அவனை காரிலேயே அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார் தந்தை. முதலுதவி செய்த மருத்துவர், குழந்தையின் பிஞ்சு விரல் நசுங்கிவிட்டது, விரலை எடுக்க வேண்டும் என்று கூறி மேற்கொண்டு சிகிச்சை அளித்தார். சிகிச்சை முடிந்து காரில் வீட்டிற்குச் செல்ல வந்த தந்தைக்கு காரைப் பார்த்த பொழுது, அடக்க முடியாத கண்ணீர். மகன் தனது காரின் மேல் எழுதிய கிறுக்கல் ‘ஐ லவ் மை டாடி’Д.
எனது நண்பர் எழுதிய பொழுது போக்குக் கவிதை ஒன்று,
எதை எதையோ
எழுத வேண்டும் என்று
ஆசைப்பட்டேன்
எதை எழுதுவதென்றே
தெரியாமல்
இதை எழுதுகிறேன்Ð
இப்படித்தான் போகிறது பெரும்பாலானவர்களது வாழ்க்கையும். சிந்திக்கும் திறன் அனைவருக்கும் உள்ளது. சுயமாக சிந்தித்து, நல்லனவற்றைத் தேர்ந்து, அதன் வழியில் நடந்தால் அனைத்தும் நலமாக அமையும். ‘Be Cool; All is Well’.


Share
 

1 Comment

  1. manimuthu.s says:

    சிந்தித்
    தேன்

Post a Comment


 

 


March 2012

மாற்றி யோசிக்கலாம் வாங்க
சந்திப்பு…
அவசரத் தேவைகள்
டிஜிட்டல் தேவதை…
இலக்கு இன்னது என எழுது
விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்
வேளாண்மை அன்றும்… இன்றும்… இனியும்…
வாடகைத் தாய்
டென்சன் படுத்தாதீங்க!
ஒரு கப் காபி சாப்பிடலாமா..?
Be Cool… ஆல் ஈஸ் வெல்…
வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!
வாழ்க்கையின் தத்துவம்
காலமே செல்வம் என்று சொன்ன காலக் கணிதர் டாக்டர் இல.செ.க.
நல்ல விழுமியங்களை விதைப்போம்…
தெய்வீக திருமண பந்தம்