Home » Cover Story » உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!!

 
உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!!


தினேஷ் இராமசாமி
Author:

வாழ்க்கையில் ஒழுங்கையும், நேர்மையையும் தனது கொள்கையாகக் கொண்டுள்ள மாணவ சமுதாயத்தை உருவாக்கவும், இளைய தலைமுறையின் வளர்ச்சிக்கும் தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் கல்லூரியை நடத்துபவர். 27 வயதில் சிறந்த நிர்வாகத்திறமைக்காக இத்தாலியின் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.
தன்னிடம் உள்ள முழுமையான திறமையை தன்னால் மட்டுமே வெளிப்படுத்த முடியும் வேறு யாராலும் தன்னை இயங்கச்செய்ய முடியாது வழிகாட்டிகளாக அல்லது தூண்டுகோலாக செயல்பட முடியும் என்று தனக்கான இலக்குகளையும் திட்டங்களையும் நிர்னயித்துக்கொண்டு விடாமுயற்சியும் முனைப்பும் குறையாமல் இளைய சமுதாயத்திற்காக இயங்கி வருகிறார். அய்யன் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பவானி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, பவானி மேனிலைப்பள்ளி, அன்னை காவேரி ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தின் சேர்மனாக திகழ்ந்து வரும் டாக்டர் தினேஷ் இராமசாமி அவர்களை டாக்டர் செந்தில் நடேசன், பேராசிரியர் கே. நாகராஜ் அவர்களுடன் நேர்முகம் கண்டோம்.

நம் முயற்சியின்மையைத் தவிர காலமும் நேரமும் ஒருபோதும் நம்மை சோம்பேறியாக்குவதில்லை என்று புதுமைச் சிந்தனையுடன் பல சாதிப்புகளை நிகழ்த்திவரும் அவரோடு இனிநாம்…
பிறந்தது, படித்தது…
கோபிச் செட்டி பாளையம் நான் பிறந்த ஊர். தந்தை இராமசாமி. பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தவர். தாய் வெற்றிச்செல்வி இல்லத்தரசி. எனது பள்ளிப் படிப்பு புளியம்பட்டி, கோபிசெட்டி பாளையம், சென்னை என்று கிட்டத்தட்ட ஒன்பது ஊர்களில் படிக்க வேண்டியதாக இருந்தது. காரணம் உயர்தரக் கல்வியைக் கற்று உயர்ந்தவனாக நான் வரவேண்டும் என்ற என் தந்தையின் விருப்பமே. அவரின் விருப்பப்படியே அங்கெல்லாம் படித்தேன் என்று மட்டும் சொல்ல முடியாது. அங்கு தான் வாழ்க்கையின் பன்முகத் தன்மைகளையும், நிறைய நல்ல விஷயங்களையும், பல்வேறுபட்ட கல்வி நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது.
தொடர்ந்து கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை மேலாண்மைக் கல்வியைப் (B.B.M.) படித்தேன். மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்று எம்.எஸ்.சி. பைனான்ஸூம், எம்.பி.ஏ.வும் படித்து முடித்து இந்தியா திரும்பினேன்.
வெளிநாட்டில் கல்வி கற்ற அனுபவம்…
இந்தியாவில் நான் கற்றதைக் காட்டிலும், முற்றிலும் வேறு விதமான சூழ்நிலை நிலவியது. கல்வி முறையில் மட்டுமல்ல, அவர்களது ரசனை, வாழ்க்கை பற்றி அவர்களது பார்வை, அவர்களின் கல்வித்தரம், பழக்கவழக்கங்கள் என்று முற்றிலும் மாறுபட்டவையாக உணர்ந்தேன். எதிர்மறையான எண்ணங்களையும், அணுகுமுறைகளையும் மாற்றிக்கொள்ள கற்றுக் கொடுத்தது. நீ அடைய முடியாதது எதுவும் இல்லை. நீ முன்னேற விரும்பினால் அதற்குத் தடையாக உள்ளவற்றை எப்படி அகற்றுவது என்பனவற்றையெல்லாம் அவர்களின் கல்விமுறை எனக்குக் கற்றுத் தந்தது.
கல்வித்துறையில் நுழைந்ததற்கான காரணம்?
பொதுவாக பள்ளியில் படிக்கும்போது பல கனவுகள் ஏற்படும். சில ஆசிரியர்களைப் பார்க்கும்போது அவரைப் போன்று பிற்காலத்தில் வரவேண்டும் என்று நினைப்போம். சிலநேரம் நமது பெற்றோரைப் போல வரவேண்டும் என்று நினைப்போம். ஆனால் என்னைப் பொறுத்த அளவில் சிறுவயதில் வரும் இதுபோன்ற ஆசைகளும், விருப்பங்களும் கால ஓட்டத்தில் மாறிக்கொண்டே இருக்கும். 25 வயதுக்குப் பிறகு வரும் ஆசையும், கனவுமே நம்மை வழிநடத்தும். காரணம், நாம் இருக்கும் நிலை, நம்முடைய பொருளாதாரம், வளரும் விதம், நம்முடைய அனுபவம் ஆகியவற்றில் அத்தகைய ஆசையும், கனவும் ஏற்பட்டிருப்பதால் அதை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்வோம். வெற்றியும் பெறுவோம்.
அப்படித்தான் எனக்கும் ஏற்பட்டது. இங்கிலாந்தில் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவிற்கு வந்தவுடன் ஓரிரு ஆண்டுகள் எனது மாமாவின் இரும்புத் தொழிற்சாலையில் பணி செய்தேன். அப்போது எங்களின் கல்வி நிறுவனங்களைக் கவனித்துக் கொள்ள சரியான நபர்கள் இல்லாததால் வளர்ச்சி தடைபட்டுக் கொண்டிருந்ததை அறிந்து பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். குறுகிய காலத்தில் எங்களின் நிறுவனங்களை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறேன்.
பல இடங்களில் நான் கற்ற கல்வி அதற்குப் பெரிய பலமாக இருக்கிறது. அந்த நுட்பங்களை தற்போது எனது கல்லூரியில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் பொறுப்பேற்ற பின்பு கல்வி நிறுவனத்தின் வளர்ச்சியில் தங்களின் பங்களிப்பு?
இரண்டாண்டுகளாக எங்களின் கல்வி நிறுவனத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். எங்களின் அறக்கட்டளை சார்பில் பவானி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, பவானி மேல்நிலைப்பள்ளி, அன்னை காவேரி ஆசிரியப் பயிற்சிப் பள்ளி, அய்யன் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்குகிறது.
மேலை நாடுகளில் நான் கற்ற கல்விமுறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது, இத்தகைய கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதற்கு, எனக்கு நிறைய பொறுப்புகள் இருப்பதாக நினைத்துக் கொண்டு உழைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட இடத்தை உரிய நேரத்தில் அடையத் திட்டமிட்டு உழைத்துக் கொண்டிருக்கிறேன். எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தரமான கல்வியை பெறவும், வேலைவாய்ப்பைப் பெறவும் முயற்சியெடுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
எனது மாணவர்கள் மதிப்பெண் பட்டியலில் முதலிடம் பெற வேண்டும் என்பதைக் காட்டிலும், வேலைவாய்ப்பு மிக்க கல்வியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் பல்வேறு நிலைகளில் புதிய நுட்பங்களை புகுத்திக் கொண்டிருக்கிறேன்.
80 பேர் மட்டுமே சேர்ந்திருந்த கல்லூரியில் அடுத்த ஆண்டில் 400 பேரை (400 out of 400) சேர்த்தேன் தொடர்ந்து முழு அளவிலான எண்ணிக்கையில் மாணவர்களைச் சேர்த்துக்கொண்டிருக்கிறேன்.
பின் தங்கிய பகுதியில் பள்ளிக் கல்லூரியைத் தொடங்கி நடத்திட காரணம்?
பொதுவாக ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணத்திலும் ஏதாவது ஒரு இலக்கை நிர்ணயித்து அதை எட்டிப்பிடிக்க அதனைத் துரத்திக் கொண்டே செல்ல வேண்டும் என்று விரும்புபவன் நான். தற்போது இந்திய இளைஞர்களுக்குத் தேவை சரியாக தேர்ந்தெடுக்கக்கூடிய இலக்கு. அந்த இலக்கை நோக்கி எப்படி பயணத்தைத் தொடர்வது, இலக்கை அடைய பின்பற்ற வேண்டிய கோட்பாடுகள் என்ன என்பதையெல்லாம் சொல்லித் தர வேண்டும்.
மேலும், தற்போதைய இளைஞர்கள் மத்தியில் ஏராளமான எதிர்மறை எண்ணங்கள் திணிக்கப்படுகிறது. நல்ல எண்ணங்கள் தான் இந்த உலகை ஆளும் என்பது அவர்களுக்குப் புரிய வைக்கப்பட வேண்டும்.
எங்களுடைய நோக்கமே கல்விச் சேவையை சிறப்பாக வழங்க வேண்டும் என்பது தான். அதுவும் இந்த பின்தங்கிய பகுதியில் உள்ள மக்களுக்குத் தேவையான கல்வியை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நகரத்தைத் தவிர்த்து கிராமத்தில் கல்லூரியை ஏற்படுத்தினோம். நகரத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏராளமான வசதி வாய்ப்புகள் ஏற்கனவே இருக்கிறது. ஆனால் இதுபோன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்கள் இல்லை என்பதால் எங்கள் நிறுவனங்களை, பின்தங்கிய கிராப்புறத்தில் ஏற்படுத்தினோம். நகரத்தில் இருக்கும் மாணவர்கள் பெறும் வசதிகள் அதிகபட்சம் எங்கள் மாணவர்களும் பெறும் வகையில் கல்வியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் நன்றாகப்படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் கட்டணச்சலுகையும் வழங்குகிறோம். எனது பெயரில் இயங்கும் தினே இராமசாமி அறக்கட்டளை மூலமாக இந்த வருடம் முதல் 250 நபர்களுக்கு ரூபாய் 2500 வீதம் வழங்கிவருகிறேன்
கல்வியில் கிராமப்புற மாணவர்களின் நிலை?
கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்களின் கல்வியறிவு குறைவாக இருக்கும். காரணம், அவர்களது பெற்றோர்கள் படித்திருக்க மாட்டார்கள். மேலும் குடும்ப சூழல் காரணமாக அவர்களால் முழுமையான அளவில் கல்வியில் கவனம் செலுத்த முடியாது. அப்படிப்பட்ட மாணவர்களைத் தான் அதிகமாக எங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்கிறோம். கிராமப்புற மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மட்டுமே இந்தியாவின் எதிர்காலக் கனவை நனவாக்க முடியும் என்பதால் பின்தங்கிய பகுதி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். திட்டங்கள் இல்லாமல், இலக்குகள் இல்லாமல் வாழ்கின்ற வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? அந்த வாழ்க்கையே அர்த்தமற்றது என்று தோன்றும். எடுத்துக்கொண்ட காரியத்தில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று கடுமையாக யோசிக்கிற நாம் அதன் அடுத்த கட்டம் பற்றி அதிகம் சிந்திப்பது இல்லை. ஆனால் நாங்கள் சிந்தித்ததுடன் செயல்படுத்தவும் செய்திருக்கிறோம் என்பது மகிழ்சியளிக்கிறது.
கல்லூரியின் தோற்றம் குறித்து?
எனது தாத்தாவின் (அமரர் திரு. பி.ஏ. சுவாமிநாதன், மற்றும் அறங்காவலர் எண்ணத்தில் உதித்ததுதான் இந்தக் கல்லூரி. தான் பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பி இந்தக் கல்லூரியை ஆரம்பித்தனர். இந்த கல்லூரி ஆரம்பிக்கும்போது ஒரே எண்ணங்களைக் கொண்ட நபர்கள் இணைந்து கொண்டனர். சிலபேரைத் தவிர பெரும்பாலானோர் விவசாயிகள். அவர்களின் உதவியால் தான் இந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
மனிதர்கள் வாழ்வார்கள். மறைவார்கள். அவர்களது பெயரை ஏன் வைக்க வேண்டும் என்று எண்ணிய அவர்கள் தமிழுக்கு பெருமை சேர்க்க “அய்யன் திருவள்ளுவர்” கலை அறிவியல் கல்லூரி என்று வைத்தனர். அதைப்போலவே தான் பவானி ஆற்றைப் பெருமைப்படுத்தும் விதமாக “பவானி” பள்ளியும், காவேரி ஆற்றைப் பெருமிதப் படுத்தும் நோக்கத்துடன் அன்னை “காவேரி” ஆசிரியப் பயிற்சி பள்ளியும் ஏற்படுத்தினார்கள்.
கல்வியில் சேவையைத் தாண்டி பணம் முக்கியமாக்கப்பட்டுவிட்டதா?
இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் எதிர்பார்ப்புகளும், ஆர்வங்களும் அதிகரித்துவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியை அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டதால் அவர்களது தேடலும் அதிகரித்துவிட்டது. ஒரு கல்லூரியை மாணவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் அதன் சூழல், கற்பிக்கும் முறை, பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் இன்னபிற வசதிகளையும் பார்க்கிறார்கள். எந்தக் கல்லூரி இதைப் பூர்த்தி செய்கிறதோ அதையே தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே மாணவர்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கல்வி நிறுவனங்கள் முதலீடுகளை அதிக அளவில் செய்ய வேண்டிய சூழ்நிலை. அத்தகைய முதலீட்டுக்கான வருவாயைத் தான் கட்டணமாக வசூலிக்கின்றனர்.
ஆரம்பத்தில் சேவையாக செய்யத் தொடங்கினாலும் கால ஓட்டத்தில் அதிகப்படியான வசதிகளைத் தர வேண்டியிருப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் பெரும்பாலான கல்லூரிகளுக்கு ஏற்படுவதால் அவை சேவை மனப்பான்மையில் இருந்து விலகிச் சென்றுவிட்டதாக தோன்றுகிறது. சில கல்லூரிகளில் அப்படி நடைபெறலாம். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் இன்னும் சேவைமனப்பான்மையுடனேயே செயல்படுகிறது என்பது என் கருத்து.
எப்படிப்பட்ட ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
எந்த ஒரு பணியும் அதைச் சார்ந்த மக்களுக்கும், சமுதாயத்திற்கும் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை படைத்திருக்கும். ஆனால் ஆசிரியப் பணியின் தாக்கம் தலைமுறை தாண்டியது. நாட்டின் நிலையையே, சமுதாயத்தின் சரித்திரத்தையே மாற்றிவிடும் வல்லமை கொண்டது. காரணம் ஆசிரியப்பணி உற்பத்தி செய்வதும், உருவாக்குவதும் அவற்றின் பொருட்களை அல்ல, நாட்டின் உயிர்நாடிகள், சிந்திக்கும் சான்றோர்களை என்று நன்கு உணர்ந்து பணியாற்றக்கூடிய ஆசிரியர்களை எங்கள் பள்ளியில் சேர்த்திருக்கிறோம். மாணவர்களின் பன்முகத்தன்மையை வளர்க்கும் படி செயலாற்றும் ஆசிரியர்களே எங்கள் பள்ளியில் இருக்கிறார்கள்.
சாதிப்பாக நீங்கள் கருதுவது?
எனக்கு எப்போதுமே புதுமையாகவும், வித்தியாசமாகவும் செய்ய வேண்டும் என்ற கனவு இருந்து கொண்டே இருக்கும். அப்படி இருந்த கனவை நனவாக்கியது தான் அய்யன் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து கின்னஸ் உலக சாதனை புரிந்தது.
எங்கள் கல்லூரி ஆசிரியப்பயிற்சி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தி, உலகிலேயே மிக நீளமான ஓவியத்தை, மாணவர்களின் கை விரல்களைக் கொண்டு வண்ண அச்சுக்களால் அய்யன் திருவள்ளுவர் உருவத்தை அப்படியே 133 அடி நீளத்திற்கு வரைந்தோம். இதில் மாணவர்கள் மட்டுமின்றி அவரது பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள் என்று 3 தலைமுறை கலந்து கொண்டு ஒன்பது மணி நேரத்தில் இந்தச் சாதனையை படைத்தோம்.
இந்தச் சாதனை திருவள்ளுவருக்கும், திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரிக்கும் பெருமை சேர்த்ததாக கருதுகிறேன்.
எதிர்காலத்திட்டம்?
L.K.G-ல் சேர்ந்தால் Ph.D. முடித்து வெளியில் வரும் அளவிற்கு இத்துறையில் முன்னேற வேண்டும் என்பதே எனது இலட்சியம். அந்த இலக்கை நோக்கியே எனது பயணத்தைத் தொடர்கிறேன். மேலும் வெளிநாட்டில் இருந்த போது நான் கற்றுக்கொண்ட நுட்பங்களை எனது மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வை மாற்றியமைக்கக் கூடிய அளவில் எனது திட்டமிடலை செய்து கொண்டிருக்கிறேன்.
தாங்கள் சுட்டிக்காட்ட விரும்பும் வழிகாட்டி?
எனது முதல் வழிகாட்டி குடும்பத்தார் அடுத்து மாமா, அம்மா, அருண் பவுண்டரி இயக்குநர் திரு. விசுவநாதன் மேலும் கல்வித்துறையைப் பொறுத்த அளவில் கோவை கலைமகள் கல்லூரியின் செயலாளர் திரு. சின்னத்ராஜ் அவர்கள் தான் எனக்கு எப்போதும் ரோல்மாடல். எனக்குத் தேவைப்பட்ட நேரத்தில் எல்லாம் தேவைப்பட்ட ஆலோசனைகளை எவ்வித தயக்கமும் இன்றி கொடுத்து வருபவர்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் நம் நாட்டிற்கு வருவதைப் பற்றி?
வரவேற்க வேண்டிய விஷயம். முன்பு வசதி வாய்ப்பு இருந்தவர்கள் மட்டுமே வெளிநாட்டிற்குச் சென்று தரமான கல்வியைக் கற்றனர். இப்போது அவர்கள் இந்தியாவில் தொடங்கும்போது, அத்தகைய கல்வி நமது மாணவர்களுக்கும் கிடைக்கும். இதனால் மாணவர்களுக்கு நன்மை கிடைக்குமே ஒழியே வேறொன்றும் இல்லை.
பொதுவாக அவர்கள் வந்தால் இந்திய கல்வி நிறுவனங்கள் அழிந்து விடும் என்ற எண்ணம் ஏற்படுவது களையப்பட வேண்டிய ஒன்று. அவர்கள் கொடுக்கும் வசதியை நாமும், கொடுக்கத் தொடங்கும் ஆரோக்கியமான போட்டி மட்டுமே ஏற்படும் என்பதால் மாணவர்கள் சிறந்த கல்வியினையே பெறுவார்கள்.
இந்தியக் கல்வி முறையில் மாற்றம் அவசியமா?
கண்டிப்பாக இந்தியாவில் தற்போது இருக்கும் இந்தக் கல்வி முறை முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். மனப்பாடம் செய்யும் முறை மாறி செய்முறைப் பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் தங்களுடைய பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். நவீன காலத்திற்கு ஏற்ப மாணவர்களை தயார் செய்யக்கூடிய அளவிற்குத் தரமான கல்வியாக மாற்றியமைக்க வேண்டும். அப்போதுதான் மற்ற நாடுகளோடு போட்டியிட்டு வெல்ல முடியும்.
வளரும் தலைமுறைக்கு சொல்ல விரும்புவது?
இளைஞர்கள் வாழ்வில் பொருளாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கல்வியைக் கற்பது மட்டுமின்றி நல்ல விழுமியங்களைத் தருகின்ற படிப்பாகவும் கல்வியை நேசிக்க வேண்டும். எல்லா வெற்றிக்கும் பின்னால் திறமையான திட்டமிடல் இருக்கிறது என்பதை உணர்ந்து திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். திட்டமிடுதலில் வெறும் மனதால் மட்டும் திட்டமிடாமல், நெருங்கியவர்களின் ஆலோசனைப் படியும், வரிசைப்படுத்தியும் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். சரியான தகவல், சரியான நேரத்தில் கிடைத்துவிட்டால் வாழ்வில் தோல்விக்கு இடமில்லை என்பதை புரிந்துகொண்டு வெற்றி பெறுங்கள்.
ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தொலைநோக்கு பார்வை ஆகியவற்றை பின்பற்றினால் வானமும் நிச்சயம் நமக்கு வசப்படும். வாழ்க்கையிலும், தொழிலிலும் வெற்றி பெற ஆர்வமும், முயற்சியும் வேண்டும். ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல். எதையுமே ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும், தொலைநோக்குடனும் செய்ததால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்
இந்தியாவின் எதிர்காலம் இளைய சமுதாயம் தான் என்பது இப்போது யாவரும் உணர்ந்து கொண்ட உண்மையின் வரிகள் என்பதை நினைவில் கொண்டு இளைய சமுதாயம் நடைபோட வேண்டும் என்பதே நான் கூறுவது.
புத்தகங்களுடன் உங்களுக்கான உறவு?
பலமானது. மனிதனைப் பண்படுத்துவதில் புத்தகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. மனிதர் சோர்ந்திருக்கும் போதெல்லாம் அவனைத் தட்டியெழுப்பி ஓடச் செய்வது புத்தகங்கள் தான். நெப்போலியன், விவேகானந்தர், காந்தி போன்றோர்களின் வரலாறுகளைப் படிக்கும்போது, அவர்கள் எப்படி சாதித்தனர் என்பதைப் படிக்கும் போது, நமக்கும் அத்தகைய தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் ஏற்பட்டு ஒரு உற்சாகத்தைத் தரும். அந்த உற்சாகம் உந்து சக்தியாக நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். மனிதனை மேம்படுத்தும் கருத்துகள் உள்ள புத்தகம். ஆளுமைத்திறனை வளர்க்கும் புத்தகம், தனி மனித ஒழுக்கத்தை எடுத்துக்கூறும் புத்தகம், தனிமனிதனின் தன்னம்பிக்கையைத் தூண்டும் புத்தகம் என்று தேடித்தேடிப் படிக்கும் பழக்கமுண்டு. ஒவ்வொரு மனிதனின் பெரும் வெற்றிக்கும் புத்தகங்கள் பலமாக இருந்திருக்கின்றன.
“”சாவை சாவு தீர்மானிக்கட்டும்
உன் வாழ்வை நீ தீர்மானி
புரிந்துகொள்
சுடும் வரைக்கும் தான் நெருப்பு
சுற்றும் வரைக்கும் தான் புவி
போராடும் வரைக்கும் தான் மனிதன்
நீ மனிதனாக இருந்தால் போராடு
போராடி வெற்றி கொள்”
என்ற கவிப்பேரரசின் கூற்று எனக்கு நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது எப்போதும்.
உங்கள் வெற்றிக்குப் பின்னால் நிற்பவர்கள் குறித்து?
என்னுடைய வெற்றிக்கு பின்னால் எப்போதும் இருப்பவர்கள் எனது பெற்றோர்கள். மேலும், நம்மை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள வெளியில் இருந்து ஓர் உந்துதல் எப்போதும் தேவைப்படுகிறது. அதுபோல இத்தனை காலம் என்னை அடைகாத்து, அடையாளப்படுத்தியதில் அவர்களுக்கு அதிக பங்குண்டு.
அடுத்து எனது மனைவி (எழிலரசி). அவரது பரந்த அறிவு எங்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு அதிக அளவில் தற்போது பயன்படுத்தப்படவில்லை. எதிர்காலத்தில் அவரது பங்களிப்பு அதிக அளவில் இருக்கும். எனது தங்கை கீர்த்தனா, மகள் அர்த்தனா பிரகதி, எந்நாளும்எனக்கு உற்சாகத்தைத் தந்துவருகிறார்கள்
தன்னம்பிக்கை பற்றி…
தான் சாதிக்காததை தன்னம்பிக்கை சாதிக்கும் என்பார்கள். அப்படி ஒவ்வொருவருக்குள் இருக்கும் தன்னம்பிக்கையையும் விழித்தெழச் செய்வது இந்த தன்னம்பிக்கை மாத இதழ். வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்து தோல்வியடையும்போது, மூடப்படும் கதவை திறக்கும் சாவி போன்ற நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கும் தன்னம்பிக்கை மாத இதழ் ஒவ்வொருவரின் கரங்களிலும் இருக்க வேண்டும். அவசியம் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் வாசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்

Subscribe for new post

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2012

நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள் – 7
வேளாண்மை அன்றும்… இன்றும்… இனியும்…
ஒரு நேரத்தில் ஒரே வேலை
நிறுவனர் நினைவுகள்
நவீன ஓவியங்களில் ஒளிரும் நட்சத்திரம்
உனக்குள்ளே உலகம்
தகவல் தொழில் நுட்பம் – அதிகரிக்கும் வேலை வாய்ப்பு
மண் குதிரை
ஸ்டீவ் ஜாப்ஸ்
ஆளை அசத்தும் ஆளுமை
கோவையின் வரலாற்று வேர்கள்
நண்பனே உன் சமத்து
மெண்ட் & மெண்ட்
உயர் அவா (உயர வா)
உள்ளத்தோடு உள்ளம்
உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!!