Home » Articles » உறவுகளைக் காப்போம்!

 
உறவுகளைக் காப்போம்!


கோபாலகிருஷ்ணன் எம்
Author:

இன்றைய வாழ்வின் முக்கிய இலட்சியமாக இருப்பது படிப்பது, வேலை செய்வது, திருமணம் செய்து கொள்வது, ஓர் இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது எனச் சுருங்கிவிட்டது. தனக்காக, தன் குடும்பத்துக்காக உண்மையான அன்புடன் வாழ்வதனை விட்டுவிட்டு பிறரின் மதிப்பு, கௌரவம், புகழுக்காக வாழும் இமிடேஸன் வாழ்க்கை பெருகிவிட்டது.
அன்பு, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்வு, காதல் இவைகளுக்கெல்லாம் விடைகொடுத்து வெகுநாட்களாகின்றன. அப்படியானதொரு போலி வாழ்க்கை முறை தான் இப்பொழுது பலரது வாழ்க்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்றைய திருமணம் எங்கு நிச்சயிக்கப்படுகின்றதென்ற கேள்விக்கு விடைதேடும் முன்னரே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடுகிறது. நகலான நடைமுறை வாழ்வுதான் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறது. இத்தகைய உறவு முறிவுக்குக் காரணம் என்ன? மனிதர்களுக்கு இடையில் ஏன் இந்த இடைவெளி? சின்ன சின்ன விஷயங்களைக் கூடப் புரிந்துகொள்ள முடியாமைக்கு என்ன காரணம்?
பதில் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரையறை கரைந்துபோய்விட்டது தான். ஆண், பெண் இருபாலருமே தங்களுக்கான எல்லையைக் கடந்து விடும்போது உறவுச்சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.
உறவுகள் தான் ஒருவரை மெருகேற்றுவது. மனதின் காலி இடங்களை நிரப்புவது. அத்தகைய உறவுகளைத் தளரவிட்டால், அதில் விரிசல் ஏற்பட்டு மனதளவில் பாதிக்கப்பட்டு, இணைந்திருக்க வேண்டிய உறவுகள் தளர்ந்து விரிசலடைந்து இனி சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலைக்குச் சென்று விடுகிறது. இப்படி உறவைப் பேணத் தெரியாமல் உறவின் இனிய உணர்வுகளை இழந்து நிற்கிறார்கள் இன்றைய தலைமுறையினர்.
அன்பும், காதலுமே உறவுகளை இணைக்கும் பாலம். அந்த அன்பில் இடைவெளி விழுவதால் தான் பந்தங்கள் பலவீனமடைகின்றன. அன்பு என்பது இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது. சிறைப்படுத்தினாலும் இணங்காது. துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு.
ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரைப் புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும், பாராட்டவும் கற்றுக்கொண்டால் உறவுகளுக்கு இடையில் புரிதலில் சிக்கல்கள் ஏற்படாது.
அதேபோல் உறவுகளை வலிமைப்படுத்தப் பேச்சும், பேசும் விதமும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பேசும் விதம் முறையானதாக இருந்தால் உறவுகளை இணைக்கும் பாலமாக அது அமைந்து அந்த உறவிற்கு இன்னும் வலிமையைச் சேர்க்கும். யுத்தகளமான பேச்சுக்கள் பலமான பாலத்தையும் இடித்துத் தொடர்புகளைத் துண்டித்துவிடும். எப்பொழுதும் பிறரைக் குத்துகின்ற பேச்சுக்கள், மற்றவரைவிட தானே பெரியவன் என்பதை வெளிப்படுத்தும் பேச்சுக்கள், பிறரின் பலவீனங்களை விமர்சிக்கின்றப் பேச்சுக்கள் என்று இருந்தால் அவர்கள் இருக்கின்ற உறவுகளையும் இழந்துவிடுவார்கள்.
பிறரது உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அகந்தையும், ஆணவமும் இல்லாமல் விட்டுக்கொடுக்கும் பண்பு வேண்டும். பிறரை பகையாளியாக்கி அவதூறாக பேசித் திரிவதையே விரும்பும் மனம் எப்படி நல்ல உறவுகளுக்குச் சொந்தமாகும். சிந்தியுங்கள்!.
உறவுகளின் மூலமாகச் சந்தோஷங்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள். அதற்கான வாய்ப்புகள் இன்னும் உங்களிடம் உள்ளது. எல்லாவற்றையும் இழந்த பிறகு கால விரயங்களைக் கடந்த பிறகு உறவின் சந்தோஷங்களை இழந்து விட்டேனே என்று வருந்துவதை விட இப்பொழுதே உங்கள் உறவை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

 

1 Comment

  1. manimuthu.s says:

    உறவை காக்க

    ஊக்கும் அன்புப் பாலங்கள்

    கண்முன் வாழ்த்துக்கள்

Post a Comment


 

 


January 2012

உனக்குள்ளே உலகம்
வளமான வாழ்வுக்கு
ஆடம்பரம் அழிவைத் தரும்
வேளாண்மை அன்றும்… இன்றும்… இனியும்…
வாழ்வியல் நுட்பங்கள்
நியூட்ரினோ
நாட்டுக்கு நாமென்ன செய்தோமென கேட்டு கேட்டு கடமைகள் செய்வோம்!
பதிவுகள்
ஸ்டீவ் ஜாப்ஸ்
தாயுமானவர்
சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள்
கோவையின் வரலாற்று வேர்கள்
மனம் விட்டுப் பேசுங்கள்
எண்ணங்களே பிரம்மாக்கள்
சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!!
உறவுகளைக் காப்போம்!
உள்ளத்தோடு உள்ளம்
கேளுங்கள் கொடுக்கப்படும்