Home » Cover Story » சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!!

 
சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!!


ஆனந்த் பழனிசுவாமி Taxi Taxi சேர்மன்
Author:

  • கடவுள் வரங்களை விற்பனை செய்கிறார். விலை முயற்சி. அந்த முயற்சியால் கடவுளிடம் வரம் பெற்று சிந்தனையாலும் இளம் வயதில் தொழில் துறையில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர்.
  • அடஇ பேப்பர்ஸ் & போர்ட்ஸ் மற்றும் தஞஐ பங்ஸ்ரீட் உள்ளிட்ட பல நிறுவனங்களை உள்ளடக்கிய ஆனந்த் பழனிச்சாமி குழுமத்தின் சேர்மன்.
  •   எலைட் வோல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவின் எக்ஸ்கியூடிவ் டைரக்டர்.
  •   நிறைய ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விச் சேவையும், ஏழை எளியோருக்கு மருத்துவச் சேவையும் செய்து வருபவர்.
  •   கோவையை பசுமையாக்கும் நோக்கத்தில் நிறைய மரங்களை நட்டு பாதுகாத்து வருபவர்.

  • இத்தாலியப் பல்கலைக்கழகம், உலகளவில் சிறந்த தொழில் நிர்வாகத் திறமை படைத்தவர் எனப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கிய சிறப்பிற்குரியவர்.
  •   மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் ஏழு நிலை ராஜகோபுர பணியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர்.
  •   பொதுவாகவே பயணம் என்பது பணம், பயம் சார்ந்த விசயமாக இருந்ததை நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி சார்ந்த விசயமாக மாற்றியதுடன், எங்கோ தொலைதூரத்தில் உள்ள பெற்றோர்கள் இரவுப் பொழுதில் தங்கள் பெண் பிள்ளைகளைத் தனியாக அனுப்பி வைக்க அச்சப்பட்டதைத் தகர்த்த பெருமைக்குரியவர்.

இப்படிப் பல்வேறு சிறப்புகளுக்குரியவர் ‘பஹஷ்ண் பஹஷ்ண்’ சேர்மன் திரு. ஆனந்த் பழனிசுவாமி அவர்களை நாம் டாக்டர் செந்தில் நடேசன் மற்றும் பேராசிரியர் கே. நாகராஜ் ஆகியோருடன் சந்தித்த போது…
“திட்டவட்டமான குறிக்கோளை மனத்தில் பதிய வைத்து அது நிறைவேறும்வரை அதில் வைராக்கியமாக இருந்தால் எப்படிப்பட்ட வெற்றிகளையும் நம்மால் எய்த முடியும்” என்றவருடன் இனி நாம்…
எந்தச் செயல் உங்களை இந்தளவு உயர்த்தியது என்று எண்ணுகிறீர்கள்?
என்னுடைய சிந்தனைகள் தான் என்னை இவ்வளவு தூரம் உயர்த்தி இருக்கிறது. பத்து வயதில் என்னுடைய தன்னம்பிக்கையின் வலிமையை உணர்ந்து என்னுடைய சிந்தனைகளை மிக உயர்ந்ததாக அமைத்துக் கொண்டேன். உதாரணமாக, எந்த ஒரு காரைப் பார்த்தாலும் அந்தக் காரை நான் ஓட்டுவதாகக் கற்பனை செய்து கொள்வேன். எப்படி காரில் ஏற வேண்டும். இறங்கும் போது எப்படி இறங்க வேண்டும் என்ற ஒவ்வொரு விஷயத்தையும் எனக்குள் பதியம் போட்டுக் கொண்டு வளர்ந்தேன்.
மற்றொரு விஷயம் என் அப்பா பழனிசுவாமி இறந்த நிகழ்வு. எனக்கு 9 வயதிருக்கும் போது என்னுடைய அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் ஒருநாள் இரவு 2 மணியளவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். நானும் அம்மாவும் மட்டுமே அப்பாவுடன் இருந்தோம். அப்போது ஸ்டெக்சர் தள்ளும் ஒருவரை, ஒரு செவிலியர் இவர் யார் என்று என் அப்பாவைப் பார்த்துக் கேட்கும்போது ‘இது தேராத கேஸ்’ என்று கூறி கையில் சைகையைக் காட்டுகிறார். எனது அம்மா அப்படியே உடைந்து போய்விடுகிறார்கள். அந்த ‘தேராத கேஸ்’ என்ற வார்த்தை தான் எனக்கு பொருளாதாரத்தின் தேவையை உணர்த்தியது.
சில நேரங்களில் வார்த்தைகள் எண்ணங்களை தாண்டி வெறும் ஒற்றை அகராதி அர்த்தத்தை மட்டுமே தெளிக்கின்றன. அது பேசுபவர் அல்லது கேட்பவரின் மனோநிலையையும், சூழ்நிலையையும் பொறுத்து மாறுபடலாம். பெரும் சந்தோசத்தைப் போலவே மிகத் துல்லியமான வலிமையையும் அது உருவாக்கும். அப்படித்தான் அந்த ‘தேராத கேஸ்’ என்ற ஒற்றை வார்த்தை எனக்குப் பொருளாதாரத்தின் அவசியத்தை ஏற்படுத்தியது. நெருக்கமானவர்களின் மரணத்துக்குப் பிறகு ஒரு விநாடியில் எல்லாமே முடிந்து விடுவதைப்போல அப்பாவின் இறப்பால் பொருளாதார ரீதியில் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அப்போது எனது அம்மா ஒரு நூற்பாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அம்மாவை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்த நான் ஏழாம் வகுப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு அதே மில்லில் வேலைக்குச் சேர்ந்தேன். சில மாதங்களுக்குப் பிறகு படித்துக் கொண்டே வேலைக்குப் போகலாம் என்று நினைத்து பள்ளியில் மீண்டும் சேர்ந்து படித்தேன்.
பள்ளிக்குச் செல்லும்போது என்னுடைய பேக்கில் புத்தகங்களுடன் பகுதி நேர வேலை செய்யும் இடத்தில் கொடுத்த சீருடை எப்போதுமே இருக்கும். பள்ளியிலிருந்து வந்து மாலை 4 மணி முதல் சிங்காநல்லூரில் உள்ள சாமி ஆட்டோமொபைல் ஒர்க் ஷாப்பில் வாகனங்களைக் கழுவி சுத்தம் செய்வேன். ஒரு வாகனத்திற்கு 20 ரூபாய் கிடைக்கும். அப்போதே அங்கு என்னைப்போல் வேலை செய்பவர்களிடம் என்னுடைய பொருளாதாரத் தேவையைக் கூறி 5 ரூபாய் கொடுத்து நிறைய வாகனங்களைச் சேர்த்து வைக்க சொல்லிவிடுவேன். அங்குதான் வியாபாரத்திற்கான சூட்சுமத்தைக் கற்றுக்கொண்டேன்.
இதைத் தவிர காலை 4 மணியிலிருந்து பேப்பரை வீடு வீடாகச் சென்று கொடுப்பேன். அப்போதெல்லாம் பேப்பரில், புத்தகத்தில் வரும் சாதனை படைத்தவர்களைப் பார்த்து நானும் இதுபோல் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் சாதனையாளராக வருவேன் என்று எல்லோரிடமும் கூறுவேன்.
இப்படி எல்லா விஷயத்திலும் என்னுடைய சிந்தனையும், எண்ணங்களும் உயர்ந்ததாகவே இருந்தது மட்டுமின்றி வேகமாகவும் இருந்தது.
உங்களின் எண்ணங்களும், சிந்தனைகளும் அந்த வயதில் பக்குவ மனநிலையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறதேÐ ஆன்மீகத்தின் மீது உங்களுக்கு அந்த வயதிலேயே ஈடுபாடு இருந்ததா?
சிறுவயதில் பெரும்பாலும் நான் கோவிலுக்குச் செல்வதை விரும்பியதுண்டு. காரணம் பக்தியைத் தவிர வேறு சிலவும் உண்டு. அதில் என்னுடைய வறுமையும், பொருளாதார நோக்க நிலையும், பாதுகாப்பு வேண்டும் என்ற பய உணர்வும் முக்கியமானது.
அப்பாவின் மறைவு வறுமையை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது. ஒண்டிப்புதூரில் உள்ள பெருமாள் கோவிலில் பூஜை செய்ய சென்றால் தங்குவதற்கு கட்டணமின்றி வீடு கிடைக்கும் என்ற நிலையால் நானும் எனது தம்பியும் பூஜை செய்ய பூசாரியாகச் சென்றோம். அந்த கோவிலின் அமைதி, பார்க்க நேரிடும் மனிதர்கள், செய்யப்படும் பிரார்த்தனைகள், அனைத்தும் ஒரு நம்பிக்கையையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தியது. அப்போதுதான் சுலோகங்களையும், மந்திரங்களையும், சமஸ்கிருதத்தையும் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்காக உண்மையாக பிரார்த்தனை செய்தேன். மனசு நிறைந்த நல்ல எண்ணங்களுடன் மென்மையாக கடவுளுடன் பேசும்போது நாம் யாருக்காக பிரார்த்தனை செய்தோமோ அவர்களுக்கும் நன்மை நடக்கும் என்பதை உணர்ந்து பிரார்த்தனை செய்தேன். முதலில் இப்படித்தான் பொருளாதாரத் தேவைக்காக ஆன்மிக ஈடுபாடு ஏற்பட்டு மற்றவர்களின் கஷ்டங்களுக்கு மனமுறுகி பிரார்த்தனை செய்து நம்பிக்கைக்குப் பாத்திரமான போது ஆன்மீகம் எனக்குள் தொடர்ந்தது.
மாணவப் பருவத்தில் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம் இருக்கும். ஆனால் நீங்கள் படிப்பு, வேலை என்று இருந்திருக்கிறீர்கள். அப்போது இது என்ன வாழ்க்கை என்று சலித்துக் கொண்டதுண்டா?
இல்லவே இல்லை வறுமை காரணமாக வேலைக்குச் சென்றாக வேண்டும் என்றசூழ்நிலையால் விளையாட்டில் எப்போதாவது தான் கலந்து கொள்ள முடியும் என்ற நிலையிலும், எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும் என்றும், எனக்குள் இருக்கும் ஆளுமையை எல்லோரும் ஆராதிக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு என் வயது ஒத்த பையன்களுக்கு விளையாடத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பேன்.
அதனால் நான் எப்போது சென்றாலும் எனக்கு முதல் இடத்தைக் கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிகழ்வுகளின் மூலம் லீடருக்குத் தேவையான தகுதியையும், ஆளுமையையும் வளர்த்துக் கொண்டேன்.
மேலும் 15 வயதில் இரண்டு சக்கர வாகனங்களைக் குறைந்த விலையில் வாங்கி சரிசெய்து விற்பனை செய்தேன். 17 வயதில் டெக்ஸ்டைல் மெசின் பாகங்களை வாங்கி சரிசெய்து விற்பனை செய்தேன். இப்படி 12 வயதிலிருந்து 20 வயதிற்குள் பொருளாதாரத்தை நேர்மையான வழியில் ஈட்டும் கலையைக் கற்றுக் கொண்டேன். என்னுடைய பலவீனங்களை மற்றவர்களின் கண்களுக்குக் காட்டாமல், என்னுடைய பலத்தை அதிகரித்துக் கொண்டதால் விளையாட்டில் பெரிய அளவில் ஈடுபட முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு ஏற்படவில்லை இன்று வரை.
படிப்பு குறித்து என்றாவது வருத்தப்பட்டதுண்டா?
பள்ளிக்கூடங்களும், மரங்களும், தோழமைகளும் நிறைய இளம்பிராய கதைகளை ஒவ்வொருவரின் வாழ்விலும் பதித்து இருக்கும். ஆனால் எனக்கு அத்தகைய அனுபவம் கிடைக்கப் பெறவில்லை. பள்ளிக்கு வெளியே கற்றுக் கொண்டவை பள்ளிக்கு உள்ளே கற்றுக் கொண்டதை விட அதிகம். ஏனெனில் அது வாழ்க்கைக் கல்வி. கல்வி என்பது அடிப்படையாக ஒரு தகுதி. எனினும் அதில் கற்றுக்கொள்ளும் விஷயங்களைவிட பெற்றுக் கொண்ட பட்டமும், மதிப்பெண்களும் ஒரு மனிதனை முடிவு செய்வது தவறென கருதினேன். காலத்தின் கட்டாயத்தால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆ.இர்ம். படித்தேன்.
ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை அனுபவத்தால் பெற்றுக்கொண்டேன். என் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் கல்வி எதுவோ அதையெல்லாம் கற்றுக் கொண்டேன். உதாரணமாக, ‘அக்கவுண்ட்ஸ்’ எனக்குத் தேவை என்று பட்டது. அந்தக் கல்வியை நன்றாகவே கற்றுக் கொண்டேன். இப்போது நிறைய இளைஞர்கள் அதை ஒரு படிப்பாக படிக்கிறார்கள். நான் அதைத் தேவையாக நினைத்துப் படித்ததால் இன்று அக்கவுண்ட்ஸ், எக்செல் போன்றவற்றில் பெரிய அளவில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறேன்.
பந்து விளையாடவும், பட்டாம்பூச்சி பிடிக்கவும் செல்ல வேண்டிய காலத்தில் தூக்கமில்லாமல் உழைத்திருக்கிறேன். நான் அஷ்டலட்சுமி கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை செய்யும்போது இரவில் சாந்தி கியர்ஸ் கம்பெனி அருகில் மணல் கொட்டப்பட்டிருக்கும். அந்த மணல் மீது இரவில் படுத்திருப்பேன். காலையில் எழுந்து பார்த்தால் ரோட்டில் விழுந்திருப்பேன். அதேபோல் ஒரு நாள் இரவு முழுவதும் வேலை செய்துவிட்டு பஸ்ஸில் பயணம் செய்யும் போது தூங்கி சீட்டில் இருந்து கீழே விழுந்திருக்கிறேன். ஒரு பெரியவர் எழுப்பி கேட்டபோது என்னையறியாமல் என் தூக்கமின்மையை நினைத்து அழுதிருக்கிறேன்.
இப்படிப்பட்ட கடந்துபோன காலங்களும், மனிதர்களும், அனுபவங்களும் கற்றுக் கொடுத்திருக்கிறது பள்ளிக் கல்வியை விட மிக அதிகமாக.
எப்போதாவது மனச் சோர்விற்கு இடம் கொடுத்திருக்கிறீர்களா?
கண்டிப்பாக இல்லை. எப்போது ஒரு மனிதன் தான் சுகமாக இருக்கிறேன் என்று எண்ணுகிறானோ அன்றே அவனுடைய வளர்ச்சி நின்றுவிடுகிறது என்பதே என்னுடைய கருத்து. எனக்கு இதுபோல சுமைகள் அதிகம் வேண்டும் என்றுதான் நினைத்துக் கொள்வேன். உலகில் யாருக்கும் கொடுக்காத சுமைகளை, வலியை எனக்குக் கொடு. அந்த சுமையைத் தாங்கும் சக்தியைக் கொடு, மன வலிமையைக் கொடு, போராட்ட குணத்தைக் கொடு என்றுதான் வேண்டிக் கொள்வேன். அப்போதுதான் தேடல் ஏற்படும். ஜெயிக்கணும் என்ற வெறி ஏற்பட்டு, உழைக்கத் தோன்றும். வாழ்க்கையாகட்டும், தொழில் துறையாகட்டும் சுமைகள் அதிகமானால் தான் வளர்ச்சி ஏற்படும். அதனால் என்னுடைய கஷ்டங்கள் என்னை எந்த விதத்திலும் பாதித்ததில்லை. மாறாக எதையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் வல்லமையை எனக்குக் கொடுத்திருக்கிறது.
எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்து விரும்பி ஏற வைக்கும் பஹஷ்ண் பஹஷ்ண் எண்ணம் உதித்தது குறித்தும், அதன் வளர்ச்சிக்கான காரணம் குறித்தும் சொல்லுங்களேன்?
ஒரு வருடத்திற்கு முன்னர் கோவையில் டாக்ஸி டிரைவரால் கடத்தி செல்லப்பட்ட ரித்விக், முஸ்கான் என்ற இரண்டு பள்ளி குழந்தைகளின் மரணம் என்னை பெரிதும் பாதித்தது. நானும், என் நண்பனும் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போதுதான் இப்படி மனித மனம் மிருகத்தனமாக மாறுவதற்குக் காரணம் கல்வியறிவின்மை, வறுமை, கவுரமாக நடத்தப்படாமை போன்றவற்றால் பாதை மாறுவது தெரிந்தது. அப்போது உதித்ததுதான் இந்த பஹஷ்ண் பஹஷ்ண் திட்டம்.
திட்டத்தை செயல்வடிவமாக்கிய நண்பர் திரு. ஆதவ்ராஜ், மாருதி பிரிண்டர்ஸ் சேர்மன் திரு. திலக்குமார், டிசைனிங்கில் தனி முத்திரை பதித்து வரும் திரு. தங்கவேலு கார்பரேட் கம்பெனிகளின் அனுபவத்தை நிரம்பப் பெற்ற திரு. ஹரிஷ் மற்றும் அருள் ஆனந்த் இவர்களுடன் நம் நாட்டில் வேறு எங்கும் இல்லாத சிறப்புடன் பஹஷ்ண் பஹஷ்ண் திட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர உறுதி எடுத்தேன். காசு பார்க்க வேண்டும் என்பதை விட சேவை அதிகம் இருக்க பார்த்துக் கொண்டேன்.
அன்பும், நேர்மையும், நல்ல வாழ்க்கை முறைகளும், அறிவு சார்ந்த தேடல்களும் கொண்ட மனிதர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கு யோகா, , மிலிட்டரி டிரெய்னிங் எல்லாம் கற்றுக் கொடுத்து பொருளாதார தேவைகளை முற்றிலும் பூர்த்தி செய்யும் அளவிற்கு சம்பளமும் தந்து டிரைவர்களாக அல்லாமல், கேப்டன்களாக அவர்களை வேலைக்கு அமர்த்தினோம்.
கேப்டன்களின் மிடுக்கான தோற்றமும், கனிவான பழக்கவழக்கமும், தூய்மையும் எங்கள் நிறுவனத்திற்கு பெரிய வெற்றியையும், சமுதாயத்தில் ஒரு மரியாதையையும் இன்று கொடுத்திருக்கிறது. மேலும் நாங்கள் பயன்படுத்தும் எடந தொழில்நுட்பத்தின் மூலம் வாகனம் எங்குள்ளது, எப்போது வரும் போன்ற செய்திகளை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதால் ஒரு பயமற்ற பயணம் அமைவதை உறுதி செய்து கொள்கிறார்கள். இந்த சேவை நுட்பங்களுடன் இணைந்த பாதுகாப்புதான் எங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
எதிர்காலத்திட்டம்…
உண்மைக்கும், நேர்மைக்கும், சேவைக்கும் கிடைத்த வெற்றியால் ஆரம்பத்தில் 50 வாகனத்துடன் ஆரம்பித்த சேவை இப்போது 200 வாகனங்களாகத் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 9000 கால்கள் வருகின்றன. ஆனால் எங்களால் 10% மட்டுமே கொடுக்க முடிகிறது. எதிர்காலத்தில் எங்களின் சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் பல திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறோம்.
கோவையின் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் அதிகமாக தனி நபர்கள் கார்களைப் பயன்படுத்துவது தான். அவற்றைக் கருத்தில் கொண்டு நெரிசலைக் குறைக்கவும், உயர்வகுப்பு மக்கள் ஒரு குழுவாக ஒன்றாகப் பயணம் செய்ய வசதியாகவும், ஒரு திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்த உள்ளோம். பஹஷ்ண் பஹஷ்ண் யஐட என்ற பெயரில் பென்ஸ் போன்ற ஆடம்பரமான கார்களைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளோம்.
கோவையின் தனி அடையாளமாகிவிட்ட பஹஷ்ண் பஹஷ்ண் பெயரிலேயே இன்னும் சில மாதங்களில் தலைநகர் சென்னையில் 5000 கார்களுடன் எங்களின் சேவைகளைத் தொடங்க இருக்கிறோம்.
சிறிய அளவில் சேவை செய்பவர்களுக்கு தங்களால் பாதிப்பு என்ற கருத்து உள்ளது அதைப்பற்றி?
தவறான கருத்து. எங்களை பொறுத்த அளவில் மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்க உறுதி பூண்டுள்ளோம். எங்களைப் போலவே அவர்களும் தங்களை மாற்றிக்கொண்டு தரமான சேவைகளை மக்களுக்கு வழங்க முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியமான போட்டியாக எடுத்துக்கொண்டு அவர்களின் சேவைகளை தரமானதாக்கிக் கொண்டால் இந்தத் துறையில் தொடர்ந்து நீடிக்கலாம். எதையும் அணுகும் பார்வையில் தான் இருக்கிறது எல்லா மாற்றங்களும். மாற்றங்களை ஏற்றுக்கொண்டு புதிய வசதிகளை ஏற்படுத்தி தரமான சேவைகளை வழங்கினால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எங்களின் பதில்.
சமுதாய நலனுக்கு நீங்கள் செய்ய நினைப்பது?
சமுதாயத்திற்காக என்று நினைக்கும்போதே தவறு செய்ய ஆரம்பித்து விடுகிறோம் என்பது என் கருத்து. என்னைப் பொருத்த அளவில் என் மன திருப்திக்காக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என் சிந்தனையில் என்ன உதிக்கிறதோ, அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைப்பவன். சமுதாயத்திற்காக என்று நினைத்து செய்யும்போது ஒரு முகமூடியை அணிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. என் மனதுக்கு எது சரி என்று படுகிறதோ அந்த முடிவை தீர்க்கமான முடிவாக எடுத்து சேவை செய்கிறேன்.
அப்படித்தான் பல ஆண்டுகளாக மருதமலை கோவிலின் ராஜகோபுரம் கட்டப்படுவது பொருளாதார நிலையால் தடைப்பட்டுள்ளதை அறிந்தேன். கோவில்கள் மக்களின் நம்பிக்கையை பொய்க்காத இடம். அப்படிப்பட்ட இடம் பல ஆண்டுகளாக பணி பாதியில் இருப்பதைப் பார்த்த போது மிகவும் கஷ்டமாக இருந்தது. காரணத்தை விசாரித்தபோது, பொருளாதார நிலைதான் காரணம் என்று அறிந்தேன். மேற்கொண்டு பணிகள் செய்து முடிக்க என்ன செலவு ஆகுமோ அத்தனையையும் ஏற்றுக்கொண்டேன். தற்போது பணி வேகமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும் கல்விக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். மூன்று வாழ்க்கை வாழ விரும்புகிறேன். ஒன்று சிறுவயது வாழ்க்கை அது கஷ்டத்திலேயே முடிந்து விட்டது. இப்போது நான் வாழும் வாழ்க்கை. இரண்டாவது கட்ட வாழ்க்கை நினைத்தபடி வாழ்ந்து
வருகிறேன். மூன்றாவது கட்ட வாழ்க்கை வாழும்போது “கோவை” எங்கள் நிறுவனத்தால் தனிப்பெருமை அடைய வேண்டும். அதற்கான திட்டங்கள் இருக்கிறது. விரைவில் மக்களுக்கு அச்சேவையைக் கொடுப்போம்.
வளர்ந்தவர்களைப் பார்த்தாலே ‘வதந்திகள்’ வந்துவிடுகிறதே? அது குறித்து?
வதந்திகள் என்பது உலகம் முழுவதும் வேறுபாடில்லாமல் பரவும் ஒரு சுவாரஸ்யமான கதைகள். தொழில், வரலாறு, காதல், விளையாட்டு, ராணுவம் ஏன் மதம் கூட இந்த வதந்திகளுக்கு தப்பவில்லை. இந்த ஆனந்த் பழனிச்சாமியை மட்டும் விட்டுவிடுமா? என்னை சில அரசியல் தலைவர்களின் பினாமி என்று கூட சொல்லுகிறார்கள். அவர்களுக்குச் சொல்லுகிறேன் தொழில் துவங்க தேவைப்படும் பணத்தில் 20% நாம் செலுத்தினால் வங்கிகள் 80% பணத்தை கடனாகக் கொடுக்கிறது. மூன்று கோடி ரூபாயில் தொழில் தொடங்க யாருடைய பினாமியாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கு. வேண்டுமானால் எனக்கு கடனுதவி அளித்த ஐஓபி வங்கியின் பினாமி என்று கூறிக்கொள்ளுங்கள். என் மேல் எழும் வதந்திகளுக்கு எந்த ஒரு பின் பலமும் இல்லை. உழைப்பின் மீதும் சமுதாயத்தின் மீதும் அக்கறை இல்லாதவர்கள் தான் இத்தகைய வதந்திகளை நம்புவார்கள். என் மேல் ஏற்பட்டுள்ள வதந்திகளை தனிமனித புரிதல் இல்லாமையாலும், பக்குவம் இல்லாமையாலும், எடுத்தேன் கவிழ்த்தேன் வகை கருத்துக்களாகவே நான் எதிர்கொள்கிறேன். சாப்பிடத் தெரியும் என்ற ஒரு காரணத்திற்காக சமையல்காரர்களை விமர்சிக்கலாம் என்ற போக்கிலேயே என்னை விமர்சனம் செய்கிறார்கள். நேர்கோட்டில் சிந்தனையுள்ளவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள். நல்ல வியாபாரியாக இருப்பவர்கள் நிச்சயமாக இப்படிப்பட்ட வதந்திகளைப் பேச மாட்டார்கள். இத்தகைய வதந்திகள் குப்பைகளைப் போல் நாளடைவில் யாரும் கண்டுகொள்ளாத நிலை வரும்.
இளைய தலைமுறைக்கு தங்கள் கருத்து?
நேர்மை குறையாத எண்ணங்களை ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தில் பரவ விடுங்கள். இந்த உலகத்தில் எண்ணம் என்றதொரு ஆக்க வினையை விட சக்தி பெற்றது வேறு ஒன்றும் இல்லை. ஆகவே நேர்மையைத் தவிர வேறு குணங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்களும், நல்ல சிந்தனைகளுமே நீங்கள் செய்யும் பணிக்கு வீரியத்தை ஊட்டுகின்றன. விடாமுயற்சி, நேர்மை தவறாத உழைப்பு, புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆகிய பண்புகள் இருந்தால் எந்தத் துறையிலும் வெற்றியைக் கொண்டுவரும். சந்தர்ப்பமே வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும் என்று இருந்த விடாதீர்கள். விடாமுயற்சியுடன் இயங்கிக் கொண்டு இருங்கள். அந்தப் பக்குவமே உங்களை உறுதியான மனதோடு வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.
மேலும் உங்களுக்குத் தேவையானவற்றை மனதிற்குள் சத்தமாகக் கேளுங்கள். அந்தச் சத்தம் வெளியே கேட்கக்கூடாது. நேற்றைய நிகழ்வுகளைப் பற்றிப் பேசாதீர்கள். நாளையைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள். நாளையைப் பற்றிப் புதிதாக சிந்திப்பவர்களால் மட்டுமே தான் வெற்றியை நோக்கி அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும் என்று ஒவ்வொரு அடியாக எடுத்து வைய்யுங்கள். உங்கள் எண்ணத்தில் விஸ்வரூபம் எடுங்கள். உங்கள் கனவுகளை காட்சிகளாகக் காணுங்கள். அந்த எண்ண அலைகள் உங்களுக்கு முன்னரே காட்சியாக இந்த பிரபஞ்சத்தில் பதிந்து விடும். பிற்காலத்தில் உங்களின் வெற்றியாக திரும்ப வரும். ஐம்புலன்களையும் விழிப்புணர்வுடன் வைத்திருங்கள்.
உங்கள் குடும்பத்தைப் பற்றி?
எனக்கும் என் அம்மா சாவித்திரி அவர்களுக்கும் உள்ள பிணைப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாதது. அம்மா என்றதும் என் நினைவுக்கு வருவது அவர்கள் வாழ்ந்த வீட்டைப் பற்றிய நினைவுகள் தான். நாங்கள் கோவிலுக்குச் சொந்தமான வீட்டில் குடியிருந்த போது அந்தக் காலனியைச் சேர்ந்தவர்கள் ஒரு பெரிய வீட்டைக் காட்டி இது உங்களுடையதுதான், விற்றுவிட்டீர்கள் என்று கூறுவார்கள். எத்தனையோ பிறப்புகளையும், இறப்புகளையும் நினைவுகளாகக் கொண்டிருந்த அந்த வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்ற ஆசை. ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது. அந்த வீட்டைச் சொந்தமாக்கிக் கொண்ட பிறகுதான் செல்ல வேண்டும் என்று ஒரு முடிவெடுத்தேன். சில மாதங்களுக்கு முன்னர்தான் அந்த வீட்டை வாங்கி என் அம்மாவிற்குக் கொடுத்தேன். குழந்தைகளின் ஓசை, வாழ்ந்த பெண்களின் சிரிப்பு, ஆண்களின் சந்தோசம் என வாழ்ந்த சுவடுகளை பதித்திருக்கும் அந்த வீட்டிற்குள் நுழைந்த போது ஒரு கவிதையாக தோன்றியது அந்த வீடு.
என் மனைவி விஜயலட்சுமியும் , என் மகள் கிர்தக்ஷனாவும் எனக்கு நித்தம் நித்தம் நேசத்தையும், நாங்கள் உங்களுக்கு மட்டும்தான் என்ற உயிரழுத்தும் ஸ்பரிசமும், மனிதனை மனிதன் மதிக்கும் பாங்கையும், உறவு பலப்பட உதவும் மந்திரமாக சொல்லிக் கொடுக்கிறார்கள்.
என்னுடைய எல்லா முயற்சிக்கும் பக்க பலமாக உறுதுணையாக இருக்கிறான் என் தம்பி கமல் மற்றும் கஷ்டமான காலகட்டத்திலும் அன்பைக் கொடுத்து வளர்த்த அக்கா ஆர்த்தி. இப்படி ஒரு மனிதன் வெற்றி பெற்றவனாக இருக்க வேண்டும் என்றால் தொழில், குடும்பம், சமுதாயம், தனிமனித சுதந்திரம், உடல்நலம், தனிமனித ஒழுக்கம் இவைகளை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும் என்பதை எடுத்துக் கூறும் குடும்பம் அமைந்திருக்கிறது. இப்படி தூண்டுதல்களையும், நம்பிக்கைகளையும், அன்பையும், அரவணைப்பையும் கொடுக்கும் குடும்பத்தில் இருப்பதே பாக்கியமாகக் கருதுகிறேன்.
பாதித்த நபர்கள்?
வெற்றி, தோல்வி இரண்டுக்குப் பின்னாலும் முயற்சி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருவரை மதிக்கப்படும் விதத்தை வெற்றியோ தோல்வியோ தான் நிர்ணயம் செய்கிறது. முன்னேற்றம் என்பது பொருளாதாரம் மட்டும் கொண்டதல்ல. அது வாழ்க்கை முறை சார்ந்தது. அப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து வெற்றி பெற்றவர்கள் ஏராளமான பேரை நான் எனக்கான இலக்காக வைத்துக் கொண்டு உழைக்கிறேன். எப்போது அவர்களைப் போல் உயர்கிறேனோ அப்போது மட்டுமே அவர்களைப் பற்றிக் கூற வேண்டும் என்று நினைக்கிறேன்.
புத்தாண்டு வாழ்த்தாக நீங்கள் சொல்ல விரும்புவது?
யாரைப் பற்றியும் பொதுவான கருத்துக்களைத் தவிர்க்கவும், எல்லோரையும் நேசிக்கவும், செயல்களை வைத்து ஆட்களை எடைபோடாமல் செயலுக்குப் பின்னால் உள்ள காரணிகளைக் கவனித்துப் பார்த்து எடை போடுங்கள். உங்களை நீங்களே சுயநிர்ணயம் செய்து கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு புள்ளியின் பார்வை அல்ல. புள்ளி ஒரு வடிவத்தின் காரணி. வடிவம் அறியாமல் அதைப்பற்றிச் சொல்லும் கருத்துக்கள் பயன் இல்லாதவை என்று உணர்ந்து கொண்டு உழையுங்கள். வெற்றியாளர்கள் வரிசையில் அமருங்கள்.
தன்னம்பிக்கை குறித்து…
வெற்றியை தெரிய வைப்பதும், புரிய வைப்பதும், உணர வைப்பதும் தான் தன்னம்பிக்கை. ஒவ்வொரு மனிதனின் இரத்தத்துடன் கலந்து இருக்க வேண்டியது. கார்பன் சீட்டில் நமது பெயரை எழுதினால் அது தன்னம்பிக்கை என்று பதிவாக வேண்டும்.
தேடிச் சோறு நிதந்தின்று பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக வுழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப் பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போல நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
பாரதியிடம் இருந்த சிந்தனை சீற்றம் எனக்குள் எப்போதும் இருந்தது. அதனால் எண்ணத்தை விஸ்வரூபமாக்கினேன். எண்ணியதை நேரிய வழியில் அடையும் வரை ஓயாது உழைத்தேன். பலருக்கு வேலை வாய்ப்பையும், மக்களுக்குச் சேவையையும் செய்யும் அளவு உயர்ந்திருக்கிறேன். இன்னும் உயர்வேன் என்று சொல்லும் திரு. ஆனந்த் பழனிசுவாமி அவர்களை எந்நாளும் உயர்ந்திட ‘தன்னம்பிக்கை’ வாழ்த்தி மகிழ்கிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2012

உனக்குள்ளே உலகம்
வளமான வாழ்வுக்கு
ஆடம்பரம் அழிவைத் தரும்
வேளாண்மை அன்றும்… இன்றும்… இனியும்…
வாழ்வியல் நுட்பங்கள்
நியூட்ரினோ
நாட்டுக்கு நாமென்ன செய்தோமென கேட்டு கேட்டு கடமைகள் செய்வோம்!
பதிவுகள்
ஸ்டீவ் ஜாப்ஸ்
தாயுமானவர்
சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள்
கோவையின் வரலாற்று வேர்கள்
மனம் விட்டுப் பேசுங்கள்
எண்ணங்களே பிரம்மாக்கள்
சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!!
உறவுகளைக் காப்போம்!
உள்ளத்தோடு உள்ளம்
கேளுங்கள் கொடுக்கப்படும்