Home » Articles » கோவையின் வரலாற்று வேர்கள்

 
கோவையின் வரலாற்று வேர்கள்


மனோகரன் பி.கே
Author:

வரலாற்று வேர்கள் பாதுகாக்கப் பட்டால் மட்டுமே புதிய வரலாற்றுக் கனிகளைப் பெற முடியும். அந்தந்த மண்ணுக்குரிய நிகழ்வுகளை காலத்தே பதிவு செய்து அடுத்த சந்ததியின் கரங்களில் ஒப்படைப்பது சமூகத்தின் முதன்மையானதொரு அறிவுப் பணி.
அந்த வகையில் கோவை விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் நாம் வாழும் இந்த கொங்கு மண்ணின் வரலாற்றை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, பொருளாதாரத்தை… என்று கொங்கு நாட்டின் பன்முகத் தோற்றங்களை சொல்லோவியமாக படம் பிடித்துக்காட்ட முனைந்திருக்கிறது இந்த உரைச்சித்திரம்.
கொங்குநாடு
பண்டைத்தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு என ஐந்து பிரிவுகளாக இருந்தன. இன்றைய கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது கொங்கு நாடு. கொங்கு நாட்டில் பூந்துறை நாடு, பொங்கலூர் நாடு, வராக நாடு, அரிய நாடு, வெங்கல நாடு, ஆனைமலை நாடு, கஞ்சிக்கோவில் நாடு, குரும்ப நாடு… என மொத்தம் 24 நாடுகள் இருந்தன.
கொங்கு நாட்டின் பெரும்பகுதி வனத்தால் சூழப்பட்டது. கொங்கு என்பதற்குத் தேன் என்றும் மலர்க்கொத்து என்றும் பொருள். கொங்கு நாடு கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளதால் இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. கொங்கு நாடு ஆறுகள் நிறைந்தது.
கொங்கு நாட்டின் ஒரு பகுதியான கோவை ஒன்பதாம் நூற்றாண்டில் உருவானதாக வரலாறு கூறுகிறது. ‘கோயன்’ என்ற இருளர் தலைவனின் ஆளுகையில் இப்பகுதி இருந்ததாகவும், இருளர் தலைவன் பெயரிலேயே ‘கோயன்பதி’ என்றழைக்கப்பட்ட இப்பகுதி ‘கோயன்புதூராகி’ பின்னர் மருவி ‘கோயம்புத்தூர்’ என்றானதாகக் கூறப்படுகிறது.
வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறப்பிடமாகக் கோவை விளங்கியிருக்கிறது. இப்பகுதி மக்கள் தாங்கள் வணங்கிய கோனியம்மன் கோயிலை முன்னிலையாக வைத்து ராஜ வீதி, தேர் வீதி, கடை வீதி என வீதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
1903ல் கோவையில் பிளேக் நோய் பரவியிருக்கிறது. இதற்குச் சுகாதாரமின்மையே காரணம் எனக் கருதி மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் வாழும் மக்களை நகரசபை இடமாற்றம் செய்திருக்கிறது. அதன் காரணமாகவே இன்று ஆர். எஸ். புரம் என்றழைக்கப்படும் ரத்தின சபாபதி புரம் என்ற புறநகரும், பிறகு ராம் நகர், காந்திபுரம், டாடாபாத் போன்ற பகுதிகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கோவையைத் தலைநகராகக் கொண்ட ஒன்றுபட்ட கோவை மாவட்டம் 1804ம் ஆண்டு உருவானது. தமிழ்நாட்டின் தென்மேற்குத் திசையில் அமைந்திருக்கும் மாவட்டம் கோவை மாவட்டம். இம்மாவட்டத்தின் முதல் பொறுப்பு ஆட்சித்தலைவராக இருந்தவர் எச். எஸ் கிரேமி (H.S. Gareame) என்பவர். இப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. எம். கருணாகரன் அவர்கள் 173வது ஆட்சித்தலைவர்.
கோவை மாவட்டம்
இன்றைய கோயம்புத்தூர் மாவட்டம் தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் முக்கியமானதொரு மாவட்டம். இதன் மேற்கே கேரள மாநிலத்து பாலக்காடு மாவட்டமும், தெற்கே இடுக்கி மாவட்டமும், வடக்கே நீலகிரி மாவட்டமும், கிழக்கே ஈரோடு மாவட்டமும் அமைந்துள்ளன. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 7649 சதுர கி.மீட்டராகும். மாவட்டத்தில் ஓடும் முக்கிய ஆறுகள் பவானி, நொய்யல், அமராவதி, சிறுவாணி மற்றும் ஆழியார் கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி.
மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் NH-47, NH-67 & NH-209 கோவை மாவட்டத்தைப் பிற பகுதிகளோடு இணைக்கின்றன. தென்னக ரயில்வேயில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் பெறுவது கோவை ரயில்நிலையம். பீளமேட்டில் சர்வதேச விமான நிலையமும், சூலூரில் விமானப் படைத்தளப் பயிற்சி நிலையமும் உள்ளது.
2011 கணக்கெடுப்பின்படி மாவட்டத்தின் மக்கள்தொகை 35 லட்சம். 84 சதவீதத்தினர் எழுத்தறிவு பெற்றவர்கள். 90 சதவீத மக்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இஸ்லாமியர் 5 சதவீதம். கிறித்தவர்கள் 4 சதவீதம். பிறமதத்தினர் 1 சதவீதம். இம்மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளன. மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 6 தாலுக்காக்கள் உள்ளன.
தேசிய அளவில் தொழில் மற்றும் வணிக நகரங்களுள் குறிப்பிடத்தக்கது கோவை என்றழைக்கப்படும் கோயம்புத்தூர். தென்னிந்தியாவிலேயே தொழில், வாணிபம், கல்வி, கலாச்சாரம், நாகரிகம் இவைகளில் சிறந்து விளங்கும் ஒரு நகரம் கோவை.
சென்னை ராஜதானி தமிழ்நாடாக உதயமானபோது தமிழகத்தில் இருந்த தொழிற்சாலைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். நாடு சுதந்திரமடைந்த பிறகு மத்திய அரசு தொழிற்துறைக்கு முக்கியத்துவம் அளித்த காலகட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் உருவாகின. அரசு நிறுவனங்கள் மட்டுமே வேலை வாய்ப்பை அளிக்க முடியாது என்ற சூழலில் தனியாரும் ஊக்குவிக்கப்பட்டனர். இந்த அரிய சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு வளர்ந்தது கோவை.
கோவை மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் மூன்று. முதலாவது, ரயில் போக்குவரத்து. இரண்டாவது நூற்பாலைத்தொடக்கம். மூன்றாவது சிறுவாணி குடிநீர்த்திட்டம். இந்த மூன்றும் உருவான பிறகே தொழில் வளர்ச்சியில் கோவை உயர்ந்து வளரத் தொடங்கியது. கோவை நகருக்கு முதல் ரயில் போக்குவரத்து 1872ல் அறிமுகமானது. முதல் நூற்பாலை 1888ல் உருவானது. அருஞ்சுவை நீர் எனப்போற்றப்படும் சிறுவாணி நீர் 1929ல் கொண்டுவரப்பட்டது.
கோவை தொழில் வளர்ச்சி
கோவை மாவட்டம் கணிசமான பருத்தி விளைச்சல் கொண்டதாக இருந்தது. அதன் காரணமாகப் பருத்தியிலிருந்து அதன் விதைகளைத் தனியாகப் பிரிக்கும் ஜின்னிங் தொழிற்சாலைகள் ஆங்காங்கு தோன்றின. இவ்விதம் கிடைத்த பஞ்சை நூலாகவும், நூலை துணியாகவும் மாற்றக்கூடிய பஞ்சாலைகள் கோவை நகரில் இல்லை.
அப்போதுதான், அதாவது 1888ல் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் இர்ண்ம்க்ஷஹற்ர்ழ்ங் நல்ண்ய்ய்ண்ய்ஞ் ஹய்க் ரங்ஹஸ்ண்ய்ஞ் ஙண்ப்ப்ள் என்ற ஆலையைத் தொடங்கினார். ஜவுளித்துறையில் கோவையின் இன்றைய பிரம்மாண்ட வளர்ச்சிக்கு வித்தாக அமைந்தது இந்த மில். பிற்காலத்தில் இந்த மில் அவருடைய பெயரைக் கொண்டே ஸ்டேன்ஸ் மில் என்றே அழைக்கப்பட்டது. கோவைக்கு மோட்டார் காரை அறிமுகப்படுத்தியவரும், ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனிகளை கோவையில் உருவாக்கியவரும் இவரே. இவரின் உதவியாளராக இருந்த பிரேசர் என்பவர்தான் 1895ல் கோவைக்கு சைக்கிளைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவர்.
ஸ்டேன்ஸ் மில்லுக்குப்பிறகு காளிஸ்வரா மில்லும், சோமசுந்தரா மில்லும் 1910ல் தொடங்கப்பட்டது. 1911ல் லட்சுமி மில்ஸ் தொடங்கப்பட்டது. 1930களில் ‘பைகாரா மின் நிலையம்’ கொண்டுவரப்பட்டதன் காரணமாக மேலும் பல மில்கள் உருவாகின.
திவான் பகதூர் பி.எஸ்.ஜி. ரங்கசாமி நாயுடு அவர்களால் 1926ல் தொழில்கல்வி போதிக்கும் ஸ்தாபனம் ஒன்று நிறுவப்பட்டது. இந்த ஸ்தாபனம் கல்வியைப் போதிப்பதோடு மில்களுக்கும், விவசாயத்திற்கும் தேவையான இயந்திரங்களையும் தயார் செய்தது. இந்தியாவில் முதன்முதலாக மின்மோட்டார் தயார் செய்த பெருமை இந்த நிறுவனத்துக்கு உண்டு. இந்நிறுவனத்தைப்போன்றே முக்கிய தொழில் கூடங்களாக விளங்கியது லட்சுமி மெசின் ஒர்க்ஸ் மற்றும் டெக்ஸ்டூல் நிறுவனம். இவைகள் நூற்புத் தொழில் சம்பந்தமான எல்லா இயந்திரங்களையும், உபகரணங்களையும் உற்பத்தி செய்து உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தன.
கோவையில் பஞ்சாலைத் தொழிலும், இயந்திரங்களைத் தயாரிக்கும் தொழிலும் வளர்ந்து விரிவடையவே, நகரத்தில் மக்கள் தொகை தானாகவே பெருகிவிட்டது. ‘சித்ரா’ என்றழைக்கப்படும் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக்கழகம் 1955ல் கோவையில் துவக்கப்பட்டது. இது மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுவின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. நாட்டிலுள்ள பஞ்சாலைத் தொழிலின் மேன்மைக்கு இந்த ஆராய்ச்சிக் கழகம் மகத்தான சேவை புரிந்து வருகிறது.
கோவை – சினிமா துறை வளர்ச்சி
கனவுத் தொழிற்சாலையாக விளங்கும் சினிமாத் துறையின் முக்கிய கேந்திரமாகவும் கோவை 1930 மற்றும் 40களில் விளங்கி உள்ளது. அனைத்து வசதிகளையும் கொண்ட ஸ்டுடியோக்களாக ‘சென்ட்ரல் ஸ்டுடியோ’ மற்றும் ‘பக்சிராஜா ஸ்டுடியோ’ திகழ்ந்திருக்கிறது. சென்ட்ரல் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட திரைப்படம்தான் எம்.ஜி.ஆர். நடித்த மர்மயோகித் திரைப்படம். திரை உலகில் புகழ்பெற்ற அந்தக்கால நட்சத்திரங்கள் தங்கள் ஆரம்ப நாட்களை இங்குதான் கழித்திருக்கிறார்கள்.
1900ம் ஆண்டில் ரயில்வே பொறியாளர் சுவாமிகண்ணு வின்சென்ட் என்பவர் ‘வெரைட்டி ஹால்’ எனும் ஊமைப்படத் திரையரங்கைக் கட்டியுள்ளார். அந்தத் திரையங்குதான் இன்றுள்ள ‘டிலைட் தியேட்டர்’. அந்தத் திரையங்கின் பெயரைக் கொண்டுதான் அந்தச் சாலைக்கு பின்னாளில் வெரைட்டி ஹால் ரோடு என்று பெயரிடப்பட்டுள்ளது.
இவர் மேலும் ராதா டாக்கீஸ் (இன்று மேம்பாலம் அருகே இருக்கும் முருகன் தியேட்டர்), லைட் ஹவுஸ் (இன்று ஆர். எஸ். புரத்திலுள்ள கென்னடி தியேட்டர்), பேலஸ் (இன்றைய நாஸ் தியேட்டர்) ஆகிய திரையரங்குகளைக் கட்டியுள்ளார். இவரது பெயரில் அமைந்ததுதான் பெரிய கடை வீதியில் இருந்து உக்கடம் செல்லும் வின்சென்ட் சாலை.
கோவை கல்வித்துறை வளர்ச்சி
கல்வி தனிமனிதனின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யவும் துணைபுரிகிறது; சமுதாயத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லவும் கை கொடுக்கிறது. கோவை நகரின் முதல் பள்ளி 1831ல் ‘வெர்னாகுலர்’ பள்ளி எனும் பெயருடன் மரக்கடை – கிறித்தவப் பேட்டையில் தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளி இநஐ தொடக்கப்பள்ளி எனும் பெயருடன் மூன்று ஆசிரியர்களோடும், நூறு மாணவர்களோடும் இன்றும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியைத் தொடங்கிய மாவட்ட ஆட்சியர் சலீவன் பெயரால் அமைந்ததுதான் இன்றைக்கு இருக்கும் சலீவன் வீதி.
1927ல் கோவையில் இருந்த கல்வி நிறுவனங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு வனவியல் கல்லூரி, ஒரு வேளாண்மைக்கல்லூரி, ஒரு இடைநிலைக் கல்லூரி (இன்றைய அரசு கலைக்கல்லூரி) ஒரு ஆசிரியப்பயிற்சி நிறுவனம் (இன்றைய டவுன்ஹால் பகுதியில் உள்ள மகளிர் கல்வியியல் கல்லூரி) நான்கு உயர்நிலைப் பள்ளிகள் அவ்வளவுதான். இந்தக் கல்வி நிறுவனங்களே கோவையின் பலமுனை வளர்ச்சிக்கு ஆணிவேராக அமைந்திருக்கின்றன.
இன்றைய கோவை அரசு கலைக்கல்லூரி 1852ல் ‘பிராஞ்சு ஸ்கூல்’ எனும் பெயரில் ஆரம்பப்பள்ளியாகத் தொடங்கப்பட்டது. 1867ல் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. 1869ல் இடைநிலைக் கல்லூரியாக உயர்த்தப்பெற்று 1946ல் முதல்நிலைக் கல்லூரியாக மாறியது.
கோவையில் பூளைப்பூக்கள் மிகுந்த மேட்டுப்பகுதி ‘பூளைமேடு’ என அழைக்கப்பட்டு, இப்போது பீளமேடு எனப்படுகிறது. பீளமேட்டில் உள்ள முக்கிய இடம் ‘ஹோப் காலேஜ்’ பகுதி. சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்தர் ஹோப் என்பவர் ஜி.டி. நாயுடுவின் நண்பர். கவர்னர் காட்டிய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 1945ல் கோவையில் ஆரம்பித்த தொழிற்பயிற்சிக் கல்லூரிக்கு ‘ஆர்தர் ஹோப் காலேஜ்’ என்றுப் பெயரிட்டார் ஜி.டி. நாயுடு.
அதே 1945ம் ஆண்டே ஆர்தர் ஹோப் பொறியியல் கல்லூரியையும் தொடங்கினார். பின்னர் இந்த இரண்டு கல்வி நிறுவனங்களையும் அரசுக்கு நன்கொடையாக அளித்துவிட்டார். அந்த இரண்டு கல்விநிலையங்கள் தான் இன்று மாநிலத்திலேயே சிறந்து விளங்கும் எஇப என்றழைக்கப்படும் அரசினர் பொறியியல் கல்லூரியும், இடப என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியும் ஆகும். கல்லூரியின் பெயர் மாறிய பிறகும் மாறா நினைவாய் ஹோப் காலேஜ் பெயர் மட்டும் அந்த இடத்துக்கு இன்றளவும் நிலைத்துவிட்டது.
வேர்கள் அடுத்த இதழில் பரவும்…

 

1 Comment

  1. Arunkumar OSR says:

    அருமையான ஓர் பதிவு …

Post a Comment


 

 


January 2012

உனக்குள்ளே உலகம்
வளமான வாழ்வுக்கு
ஆடம்பரம் அழிவைத் தரும்
வேளாண்மை அன்றும்… இன்றும்… இனியும்…
வாழ்வியல் நுட்பங்கள்
நியூட்ரினோ
நாட்டுக்கு நாமென்ன செய்தோமென கேட்டு கேட்டு கடமைகள் செய்வோம்!
பதிவுகள்
ஸ்டீவ் ஜாப்ஸ்
தாயுமானவர்
சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள்
கோவையின் வரலாற்று வேர்கள்
மனம் விட்டுப் பேசுங்கள்
எண்ணங்களே பிரம்மாக்கள்
சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!!
உறவுகளைக் காப்போம்!
உள்ளத்தோடு உள்ளம்
கேளுங்கள் கொடுக்கப்படும்