Home » Articles » கேளுங்கள் கொடுக்கப்படும்

 
கேளுங்கள் கொடுக்கப்படும்


சைலேந்திர பாபு செ
Author:

நம்பிக்கையுடன் கேள்
உன் கேள்வியில் உண்மை இருக்க வேண்டும். கேட்கும் தொனியில் நம்பிக்கைப் புலப்பட வேண்டும். உன் அங்க அசைவுகள் உன் ஆர்வத்தை வெளிப்படுத்த வேண்டும்.
கூனி நின்று, உளறு மொழியில், “எனக்கு வேலை கொடுப்பீர்களா?” என்று கேட்டால் யாரும் வேலை தர மாட்டார்கள். உன்னைப் பார்த்த மாத்திரத்தில்; உனக்கு ஆர்வம் இல்லை என்று தெரிந்து கொள்வார்கள் .
நான் ஒரு நாள் குடும்பத்துடன் ஒரு பேரங்காடிக்குச் சென்றேன். என் நான்கு வயது மகன் பேட்டரியால் இயங்கும் ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கித் தருமாறு அடம்பிடித்தான். என் மனைவி அதை வாங்க வேண்டாம் என்பதற்காக ஏதேதோ சொன்னாள். அவனோ தான் வாங்கும் மனநிலையிலிருந்து சற்றும் மாறவில்லை.
“அப்பா, எனக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது. தயவுசெய்து வாங்கிக் கொடுங்களேன்” என்று கேட்டான். அவன் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தேன். ஏன் தெரியுமா?
1. சரியான ஒருவரிடம் – தந்தையிடம் கேட்டான்.
2. பணிவாகக் கேட்டான்.
3. வாங்குவதற்கான காரணத்தைச் சொன்னான்.
4. வாங்குவதில் விடாப்பிடியாய் இருந்தான்.
5. அவனுடைய உடல்கூறு மொழி அவனுடைய ஆர்வத்தை உணர்த்தியது.
6. மீண்டும் மீண்டும் கேட்டான்.
நான்கு வயதான சிறுவனுக்குக் கேட்கத் தெரிந்திருக்கும் போது, நீயும் கேட்கலாம். கேட்டல் என்பது ஒரு கலை.
நம்பிக்கையுடன் கேள். கிடைக்கும் வரை ஓயாமல் கேள். இந்த வங்கியின் மேலாளர் கடன் கொடுக்க மறுத்தால், அடுத்த வங்கியின் மேலாளரை அணுகிக் கேள். கல்விக் கடன் இலக்கை முடிக்க முடியாமல், உன்னைப் போன்றஇளைஞர் வரமாட்டாரா என அவர் காத்துக் கொண்டிருக்கலாம்.
உன்னை நீ அறிவாய்
நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் உள்ளவர்கள். சிறப்புத் திறன் உடையவர்கள். அளவற்ற ஆற்றல் நம்மிடத்தில் உள்ளது. அதே சமயம் ஒரு சில திறன்கள் நம்மிடம் இல்லாமல் போகலாம். எனவே உன்னுடைய பலம் எது பலவீனம் எது என்று அறிந்து கொள்.
சில பணிகளுக்குச் சில தனித்திறன்கள் தேவை. ஒரு பாடகருக்கு நல்ல குரல்வளம் வேண்டும். ஒரு விமானிக்கு நல்ல பார்வைத்திறன் வேண்டும். ஒரு ஆசிரியருக்கு நல்ல பேச்சாற்றல் வேண்டும். ஒரு சதுரங்க ஆட்டக்காரருக்கு நல்ல நினைவாற்றல் வேண்டும்.
ஆனால், ஒரு விமானிக்கு நல்ல குரல்வளம் தேவையில்லை. ஒரு ஒலிம்பிக் தடகள வீரர் சிறந்த நினைவாற்றல் இல்லாமலேயே தங்கம் வெல்ல முடியும்.
எனவே உன் கனவை செதுக்குவதற்கு முன் நீ சிந்திக்க வேண்டும்.
– உன் திறமைகளின் இருப்பை ஆய்வு செய்.
– உன் விருப்பு வெறுப்புகளை ஆய்வு செய்.
– உன் மனோ பாவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்.
ஓர் இடத்தில் அமைதியாக அமர்ந்து நீ உன்னிடம் சில கேள்விகளைக் கேள்.
– நான் யார்?
– நான் எதை விரும்புகிறேன்?
– என்னுடைய பலம் எது?
– என்னுடைய பலவீனம் எது?
– விரும்பும் பணிக்கேற்றஉடல்வளம் எனக்கு உண்டா?
– என் உடலில் உள்ள குறைகள் எவை?
– என் நினைவாற்றல் எவ்வளவு சக்தி வாய்ந்தது?
– என்னுடைய விருப்பு என்ன? வெறுப்பு என்ன?
– இதுவரை சாதித்தது என்ன?
– இதுவரை தோற்றது எவற்றில்? எவ்வளவு?
எது எனக்கு மன மகிழ்ச்சியைத் தரும்? பணமா? புகழா? அதிகாரமா? வெற்றியா? உன்னை எடைபோடுவதில்; நீ மிகவும் கறாராக இருக்க வேண்டும். கண்டிப்பாக இருக்க வேண்டும். உன்னுடைய விருப்பு, வெறுப்பு, திறமை, திறமையின்மை இவற்றைசீர்தூக்கிப் பார்க்கும் போது நடுநிலை உணர்வோடு இரு.
உனக்கு நினைவாற்றல் குறைவா? ஒத்துக் கொள். அழகாக, உயரமாக இல்லையா? ஏற்றுக் கொள். உனக்குத் திக்குவாய் குறைஉள்ளதா? ஒத்துக் கொள். எல்லாம் சரியாக வாய்க்கப் பெற்றவர் இந்த உலகில் யாருமில்லை. சாதனை செய்வதற்கு அழகு, நினைவாற்றல் போன்றவை தேவையுமில்லை. நோபல் பரிசு பெறஅழகாக இருக்க வேண்டுமா என்ன? ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல உலக நாடுகளின் பட்டியலை நினைவில் வைக்க வேண்டுமா என்ன?
எதற்காக இந்த சுய விமர்சனம் என்றால், பணிக்கேற்றமனோபாவம், திறமைகள், விருப்பு ஆகியவற்றுடன் பணியில் சேர்ந்தால் அந்தப் பணியில் பணி நிறைவும் மன நிறைவும் பெறலாம்.
எதற்கும் மனந்தளராதே, திக்குவாய் குறைஉள்ளவர் கூட இடைவிடா முயற்சியால் மற்றும் பயிற்சியால் சிறந்த பேச்சாளராக உருவாக முடியும்.
ஆசைக்கேற்றதிறமைகள்
உன்னுடைய கனவு கருக் கொள்ளும் போது இரண்டு கூறுகளைக் கவனிக்க வேண்டும்.
1. பணியின் மீதுள்ள ஆசை
2. பணிக்கேற்றதிறமைகள்.
உன் திறமைக்கேற்றபணியில் சேர்ந்தால், மிகக் குறுகிய காலத்தில் அப்பணியில் சாதிக்க முடியும். பாரம்பரிய ஞானமுள்ளவர்கள் இசைத் துறையில் குறுகிய காலத்தில் சாதனை நிகழ்த்துவதைக் காணலாம். அதற்காக நீ கருவிலே திருவுடையவராக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
உன்னிடம் அபாரமான நினைவாற்றல் இருக்குமாயின், சதுரங்க ஆட்டத்தில் பயிற்சி பெறலாம். கிராண்ட் மாஸ்டர் உலகப் பட்டம் பெறகனவு காணலாம்.
உரமிக்க உடல் வாய்க்கப் பெற்றால், தடகளப் பயிற்சியில் ஈடுபட்டுப் புகழ் ஈட்டலாம், செல்வமும் ஈட்டலாம். ஏன் ஒலிம்பிக் தங்கம் வெல்வதைக் கனவாகக் கொள்ளலாம். தங்கப் பதக்கம் வென்றால் 112 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் நிலையான இடம்பிடிப்பாய்.
படிப்பு ஏறவில்லை, கிரிக்கெட் மட்டையும் கையுமாகத் திரிகிறான். உண்மையில் திறமையாக விளையாடினால் அம் மாணவன் கிரிக்கெட்டை தன் வாழ்நாள் பணியாகக் கொள்ளலாம். உலகக் கோப்பை வென்றகிரிக்கெட் அணியினருக்குப் பல கோடி ரூபாய் பரிசாகக் குவிந்ததைச் செய்தித்தாளில் படித்திருப்பாய்.
பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டில் தணியாத ஈடுபாடு இருந்தால் நல்லதுதான். விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் தனி இட ஒதுக்கீடு உள்ளது. அரசு மருத்துவக் கல்லுரியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இட ஒதுக்கீடு உள்ளது.
நல்ல இனிய குரல் வளம் உடைய பெண், முழுநேரப் பாடகியாக உருவாக முடியும். லதா மங்கேஷ்கர் போல, பி. சுசிலா போல, ஜானகி போல, அனுராதா ஸ்ரீராம் போல உலக அரங்கில் கொடிகட்டிப் பறக்கலாம். ஆனால் அதே பெண் பட்டய கணக்காளராக (Chartered Accountant) உருவாக முயற்சி செய்தால், அந்த அளவுக்குப் புகழ் பெறமுடியாது. எனவே இயல்பாக, இயற்கையாக அமைந்த திறன்களைப் பயன்படுத்திச் சாதிப்பது எளிதாகும்.
ஒவ்வொரு அப்பாவும், அம்மாவும் தன் மகன் அல்லது மகள் மருத்துவராக அல்லது பொறியாளராக வரவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இது சரியான அணுகுமுறைஅல்ல.
விளையாட்டை விளையாட்டாக எண்ணுகிறார்கள். இன்றைக்கு அதுபோல் வருமானம் தரக்கூடிய தொழில் வேறு எதுவுமில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களை கோடிக்கணக்கில் பணம் கொட்டி உரிமை கொண்டாடுகிறார்கள். வருமானம் ஒருபுறம் இருக்கட்டும். எல்.கே.ஜி. குழந்தை முதல் எண்பது வயது தாத்தா வரை அனைவரும் இந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்டாடுகிறார்களே!.
தரணி, ராஜேஷ் குமார், தளபதி குமார விக்ரம், ரம்யா – இவர்களை உனக்குத் தெரியுமா? தெரியாதல்லவா?
இன்னொரு பெயர்ப் பட்டியல் இதோ – சான்யா மிர்சா, விஸ்வநாதன் ஆனந்த், சச்சின் டெண்டுல்கர், அபிநவ் பிந்த்ரா, மகேந்திர சிங் தோனி.
ஓ, தெரியுமே என்கிறாய்.
முதல் பட்டியலில் உள்ளோர் மேனிலைப் பொதுத் தேர்வில் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று மாநில அளவில் முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்கள். இரண்டாவது பட்டியலில் உள்ளோர் விளையாட்டு வீரர்கள்.
இப்போது சொல். எதற்குச் சிறப்பு அதிகம்? விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் செல்வத்தோடும், செல்வாக்கோடும் வாழ்கிறார்கள்.
இத்தகைய விளையாட்டுத் துறையைப் பற்றி மேலும் அறிய வேண்டுமா? கேள்.
– தொடரும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2012

உனக்குள்ளே உலகம்
வளமான வாழ்வுக்கு
ஆடம்பரம் அழிவைத் தரும்
வேளாண்மை அன்றும்… இன்றும்… இனியும்…
வாழ்வியல் நுட்பங்கள்
நியூட்ரினோ
நாட்டுக்கு நாமென்ன செய்தோமென கேட்டு கேட்டு கடமைகள் செய்வோம்!
பதிவுகள்
ஸ்டீவ் ஜாப்ஸ்
தாயுமானவர்
சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள்
கோவையின் வரலாற்று வேர்கள்
மனம் விட்டுப் பேசுங்கள்
எண்ணங்களே பிரம்மாக்கள்
சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!!
உறவுகளைக் காப்போம்!
உள்ளத்தோடு உள்ளம்
கேளுங்கள் கொடுக்கப்படும்