– 2012 – January | தன்னம்பிக்கை

Home » 2012 » January

 
 • Categories


 • Archives


  Follow us on

  உனக்குள்ளே உலகம்

  தனது மகனை காணவில்லை என்று பெற்றோர்கள் தேடினார்கள். விடிந்ததும் மணிகண்டனின் பிணத்தைத்தான் அவர்களால் பார்க்க முடிந்தது. மோப்ப நாய் வரவழைத்து மாடசாமிதான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டான் என போலீசார் உறுதிசெய்தபின் மாடசாமியை கைதுசெய்தார்கள்.
  இந்தச் சம்பவம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமான நிகழ்வாக அமைந்துவிட்டது. பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் செல்போன் கொண்டுவரக்கூடாது என்று அரசு உத்தரவு இருந்தபின்பும் அதனைமீறி பள்ளிக்கு செல்போனை கொண்டுவந்ததால்தான் இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது.
  ஒரு தகவலை ஒருவரிடமிருந்து மற்றவரிடம் பரிமாறுவதற்கு இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக ‘செல்போன்’ மாறிவிட்டது. ஆனால் 14 வயது நிரம்பிய அந்த இரண்டு சிறுவர்கள் தினந்தோறும் அப்படி என்னதான் தகவல்களைப் பரிமாறிக்கொண்டார்கள்? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
  செல்போன் வைத்திருப்பதால் தனது மரியாதை அதிகரிக்கும் என்றும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்றும் நம்பி செல்போனை தூக்கிக்கொண்டு அலைந்து திரியும் சில இளவட்டங்கள் எதற்காக செல்போன் வைத்திருக்கிறோம்? என்பதை புரிந்துகொள்வதில்லை. கண்டபடி எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) அனுப்புவதும், தேவையில்லாத புகைப்படங்களை எடுத்து செல்போனுக்கு சேமித்து வைப்பதும், ஆபாச காட்சிகளை அங்கொன்றும், இங்கொன்றுமாக செல்போனுக்குள் அடுக்கி வைத்துக்கொள்வதும் நல்ல மாணவர்களுக்கு அழகல்ல என்பதை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகள் தௌல்வாக புரிந்துகொள்ள வேண்டும்.
  பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பருவம் இனிமையான இளமைப் பருவம். இந்தப் பருவத்தில்தான் பணத்தை சம்பாதிக்காமல் தாராளமாக செலவு செய்ய இயலும். இதனால் “வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே” என்று கல்வி நிலையங்களில் பயிலும் காலத்தை ஒரு திரைப்படப் பாடல் விளக்குகிறது. அந்தப் பாடல் –
  பசுமை நிறைந்த நினைவுகளே; பாடித் திரிந்த பறவைகளே
  பழகிக் கழித்த தோழர்களே; பறந்து செல்கின்றோம் குரங்குகள் போலே மரங்களின் மேலே ; தாவித் திரிந்தோமே
  குயில்களைப்போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே வரவில்லாமல் செலவுகள் செய்து; மகிழ்ந்திருந்தோமே வாழ்க்கை துன்பம் அறிந்திராமல்; வாழ்ந்திருந்தோமே
  – என்று கல்வி பயிலும் காலத்தின் மகிழ்வை படம்போட்டுக் காட்டுகிறது.
  இளமைப் பருவத்தில்தான் வாழ்க்கையின் துன்பத்தை அறியாமல் வாழ இயலும் என்பதை அந்தப் பாடல் சுட்டிக்காட்டுகிறது.
  ஆனால் தற்போது நடப்பது என்ன?
  காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி படித்த மாணவன் மதூர்ஜியா. இவர் 22 வயது இளைஞர். அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவரான இவர் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவந்தார்.
  இவருக்கும் அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள இவரது ஊரைச்சேர்ந்த நவஜோத்தங்காடி என்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை உருவாகிறது.
  நவஜோத்தங்காடி நன்றாகப் படிக்காமல் அரியர்ஸ் வைத்திருந்தார். அவர் அரியர்ஸ் தேர்வை எழுதி வருவதைப்பார்த்து மதூர்ஜியா கேலி செய்ததார். இதனால் அவரை பழிவாங்கத் திட்டமிட்டான் நவஜோத்தங்காடி. தீபாவளிக்கு முந்தைய தினம் மது நன்றாக அருந்தி போதையில் இருந்த நவஜோத்தங்காடி தனது ஊர்க்காரரான மதூர்ஜியாவை சண்டைக்கு இழுத்து வாக்குவாதத்தை உருவாக்கினார் முடிவில் கைகலப்பு ஏற்பட்டது. தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் மதூர்ஜியாவின் மார்பு உட்பட பல இடங்களில் குத்தினான் நவஜோத்தங்காடி. துடிதுடித்து இறந்துபோனான் மதூர்ஜியா. இந்த திடுக்கிடும் சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததுதான் வேதனையான தகவலாக இருக்கிறது.
  தன்னோடு படிக்கும் மாணவர் கேலி செய்தார் என்பதற்காக அவரது உயிரைப்போக்க திட்டமிடுவதும், அதற்காக அதிகமாக மது அருந்திவந்து நிலைத்தடுமாறி கொலைசெய்வதும் இளைஞனுக்கு அழகல்ல.
  தனக்கு பிடிக்காத எந்த செயல் நடந்தாலும் வன்முறையில் ஈடுபட்டு அதற்கு தீர்வுகண்டுவிடலாம் என்கின்ற மனோபாவத்தோடு சில இளைஞர்கள் இருப்பது வேதனைக்குரிய விஷயமல்லவா!
  நல்லொழுக்கங்களை வளர்க்கவேண்டிய கல்வி நிலையங்களில் அவ்வப்போது நடக்கும் சில நிகழ்வுகள் இளைய சமுதாயத்தின்மீது படிந்த கறையாக அமைந்துவிடுகிறது.
  “இன்றைய இளைஞர்கள்தான் நாளைய மனித வளங்கள்” – என்று இந்திய நாட்டைச்சேர்ந்த இளைஞர்களை அனைவரும் நம்புகிறார்கள். நல்ல ஒழுக்கங்களோடுகூடிய கல்விதான் மனித வளத்தை நாட்டில் உருவாக்குகிறது. “நாட்டின் அமைதிக்கு நல்லொழுக்கம்தான் அடிப்படை” என்பதை உணர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் “நல்லொழுக்கம்” குறித்து குறிப்பிடும் கவிதை இதுதான்.
  எங்கே இதயத்தில் அறவொழுக்கம் இருக்கிறதோ
  அங்கே செயல்பாட்டில் அழகு இருக்கும்.
  எங்கே செயல்பாட்டில் அழகு இருக்கிறதோ
  அங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கும்.
  எங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கிறதோ
  அங்கே தேசத்தில் ஒழுங்கு இருக்கும்.
  எப்போது தேசத்தில் ஒழுங்கு இருக்கிறதோ
  அப்போது உலகில் அமைதி நிலவும்.
  டாக்டர் அப்துல்கலாமின் நினைவுகளை நனவாக்க இன்றைய இளைஞர்கள் அனைவரும் சபதம் எடுத்து நிறைவேற்றவேண்டியது இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாகும்.

  வளமான வாழ்வுக்கு

  நெஞ்சிற்கினிய நண்பர்க்கு,
  நலமே செழிக்க! உன் மடல் பெற்றேன் மகிழ்வுற்றேன். ஆமாம், வாங்கிய கடனையெல்லாம் அடைத்து விட்டதாக எழுதியிருந்தாய். இதைப் படித்தபோது எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. ஓர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தன்னம்பிக்கை நிறுவனர் இல.செ.க. என்னிடம் ஒரு வேண்டுக்கோள் வைத்தார். அந்தக் கோரிக்கை விவசாயிகளுக்கானது. மதியழகன் ‘வங்கியில் கடன்பெறவழி’ என்று ஒரு புத்தகம் எழுதுங்கள் என்றார். அப்போது ‘கால்நடை வளர்க்க வங்கியில் கடனுதவி பெறுவது எப்படி’ என்றஎனது கட்டுரையையும் வளரும் வேளாண்மையில் (1986) இரண்டு இதழ்களில் தொடர் கட்டுரையாக வெளியிட்டிருந்தார்.
  அடுத்து ஒரு சில மாதங்களில் ஏராளமான தகவல்களைத் திரட்டி ‘வேளாண்மை – கால்நடை வளர்க்க வங்கியில் கடன்பெறவழி’ என்றநூலை எழுதினேன். 1978ல் மொராஜிதேசாய் அவர்கள் இந்திய பிரதமராக இருந்த காலத்தில் மத்திய அரசு வேளாண்மை கால்நடை வளர்ப்புக்கு அரசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு காப்பீடுத் திட்டம் அப்பொழுது தான் வந்தது. ஊரக வங்கிகளில் வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கும் கடன் வழங்கும் நடைமுறைபரவலாக்கப்பட்டது. விவசாயிகள் நாடெங்குமிருந்து கோவையில் வந்து அய்யாவை சந்தித்து ஆலோசனை கேட்பதும், கடிதம் எழுதி வழிகாட்டுதல் வேண்டுவதும் அன்றாட நிகழ்வாகி இருந்தன.
  உற்பத்தி செய்தல் பொருள்களுக்கு உற்பத்தி செய்தவர்கள் விலை நிர்ணயம் செய்வதுதான் நடைமுறை. இந்த நடைமுறைஇன்று வரை வேளாண்மை செய்வோர்க்கு இல்லை. அதனால் காலங்காலமாக வஞ்சிக்கப்பட்டு வாயிக்கும் வயிற்றுக்குமே போராடிக் கொண்டிருப்பவர்கள் விவசாயிகள் தான். எனவே ஒவ்வோர் ஆண்டும் இருபொருள்களுக்குக் கந்துவட்டிக்கு கடன்வாங்கி, வயலில் விளைந்ததை எல்லாம் வட்டி கொடுத்தே விவாயிகள் தொலைந்து போய்க்கொண்டிருந்ததைக் கண்டு அய்யா, இல.செ.க. விவசாயிகளுக்கு வங்கியில் கடன் பெறவழிகாட்டி விழிப்புணர்வை உருவாக்கி அவர்களை தன்மானத்தோடு வாழ வழிவகுக்கத்தான் என்னை ‘வங்கியில் கடன்பெறவழி’ என்றநூலை எழுதச் செய்தார்.
  நண்பரே கடனையெல்லாம் அடைத்து விட்டேன் என்று உங்கள் கடிதத்தில் கண்டதும் எனக்கு பழைய நினைவுகள் ஓடி வந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்து விட்டன.
  அந்த நூலை என் பெற்றோர்களுக்கு காணிக்கையாக்கி எழுதியிருந்தேன்.
  என்னைப் பெற்று வளர்ந்த
  பெற்றோர்களுக்கு….!
  அவர்களிடம் நான்
  பட்டிருக்கின்றகடனுக்காக…!
  அன்பு அசலும்
  பாச வட்டியும் சேர்ந்து – என்
  நேசத் தவணைகளில்
  முதல் தவணையான
  இந்த நூல் காணிக்கை …!
  தள்ளுபடி போக
  எஞ்சிய கடனை
  வட்டியும் முதலுமாய்
  வருநாளில் செலுத்துவேன்
  என்றாலும் – என்
  உயிருள்ளவரை …நான்
  கடன்காரன் தான்..!
  ஏனென்றால்
  இந்தக் கடனை
  திருப்பிச் செலுத்திவிட
  பயிர்கடனல்லவே……- இது
  உயிர் கடனல்லவா?
  வங்கியில் கடன்பெறும் வாய்ப்பை பயன்படுத்த கடன்பெற்று, முறையாக திருப்பிச் செலுத்தி, மீண்டும் கடன்பெற்று மேலும் மேலும் உயர்ந்தவர்கள் பலர் உண்டு.
  அரசின் கொள்ளை முடிவுகளால் அரசு வங்கிகள் வேளாண்மைக்கு கடன்தர முன்வந்தாலும் வங்கி அதிகாரிகள் வளமானவர்களுக்குத் தான் பெரும்பாலும் கடன்தர முன்வந்தார்கள். ஏழைகள் அல்லல்பட்டுத்தான் ….போராடிதான் கடன்பெறவேண்டியுள்ளது. வங்கிகள் முரண்டு பிடிப்பதற்கு ஓரளவு காரணமும் இருக்கத்தான் செய்கின்றது. ஆம் நண்பரே!
  1978-79 ல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்திட்டம் (RDP) தீட்டப்பட்ட பிறகு, கிராமங்கள் எங்கும் வேளாண்மை – கால்நடை வளர்க்க கடன் பெறுவது திருவிழா போலவே நடைபெற்றது.
  ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவது திருவிழா போல நடைபெற்றதா? அதுதான் இல்லை. திட்டம் சாராமல் தனியாக வங்கியை அணுகி கடன் பெற்றவர்கள் பெரும்பாலும் கடனை திரும்பச் செலுத்தினார்கள். புயல், வெள்ளம் வறட்சி காரணமாக வேளாண்மை பாழாகி ஒருவேளை திரும்பச் செலுத்துவது தவணை தவறி இருக்கலாம். அவர்களை விடாமல் விரட்டியாவது வங்கிகள் கடனை வசூலித்துவிட்டன.
  அரசு திட்டங்களில் பயனாளிகளாக உதவி பெற்றவர்களில் மிக பலர் கடனை திரும்பச் செலுத்தவில்லை. அரசு வங்கிகளில், திட்டங்கள் மூலம் அல்லது கூட்டுறவங்கிகளில் கடன் வாங்கினால் பலர் திரும்பச் செலுத்தவில்லை. என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது கடனை தள்ளுபடி செய்து விட மாட்டார்களா என்றமனோபாவம். இது கூட ஒரு வகை மனநோய்தான். இது கடன் பெற்றவர்க்கோ, நாட்டிற்கோ இரண்டிற்கும் நல்லதல்ல இது தனிமனித வளர்ச்சிக்கும் நாட்டிற்கும் பாதகமான அணுகுமுறை தான். கடனை அரசு தள்ளுபடி செய்கிறபோது கூட பல நேரங்களில் பயனடைகிறவர்கள் பாதிக்குமேல் வசதி வாய்ப்பு இருப்பவர்களே! சிறுகுறு விவசாயிகள், விவசாயக் கூலிகள், சிறுதொழில் செய்வோர் கடனை திருப்பிச் செலுத்தாமல் போனதற்கு காரணம் பயனாளிகளை மட்டும் குறைசொல்ல முடியாது.
  மக்கள் கடனாளி ஆனதற்கு அரசும் ஒரு காரணம். ஆனால் இன்றைய தமிழக அரசு மிக நேர்த்தியாக தொலைநோக்கோடு ஏழைகளுக்கு ஆடு, மாடு வளர்ப்பு திட்டத்தை வகுத்து நடைமுறைபடுத்த தொடங்கியுள்ளது. இது ஒரு முன்மாதிரி திட்டம். இதுவரை ஓர் ஏழைக்கு மாடு அல்லது ஆடு வழங்கும் போது அவற்றைவாங்குவதற்கு உரிய தொகையில் பாதியை அல்லது ஒரு பகுதியை மானியமாக வழங்கும் மீதியை கடனாக அளிக்கும். இந்த நடைமுறைஏழைகளைக் கடனாளியாக்கியது. ஆனால் தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் திட்டத்தில் முழுவதும் மானியமாக வழங்கப்படுவதால் கடன்கட்ட முடியவில்லையே என்று கூனிக்குறுகத் தேவையில்லை. ஊரக வளர்ச்சியில் நெடிய அனுபவம் பெற்றவன் என்கிறவகையில் நான் சொல்ல விரும்புவது. தமிழக அரசின் இத்தகைய அணுகுமுறையை நாட்டின் மற்றமாநிலங்களும் கடைப்பிடித்தால் ஏழை விவசாயிகளின் தன்மானத்திற்குச் சோதனை வராது.
  நண்பரே! நமது வாழ்வியலுக்கு இவை வழங்கும் பாடம் என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஆம் இப்படி நம் அண்ணன் தம்பிகள் கடனாளி ஆனதற்கும், அமெரிக்கா கடனாளியாகி இருப்பதற்கும் என்ன காரணம்? யார் காரணம்? எது காரணம்? அறிந்து கொள்ள வேண்டிய வாழ்வியல் பாடம்.
  …கடிதம் வளரும்

  ஆடம்பரம் அழிவைத் தரும்

  கடந்த இதழின் தொடர்ச்சி…
  கடன்:
  வரவுக்கு மீறிச் செலவு செய்தால் என்ன ஆகும்?
  “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
  சால மிகுத்துப் பெயின்” -குறள் 475
  மிக மெலிதான, எடை குறைவான மயிலிறகே ஆனாலும், அளவுக்கு அதிகமாக ஒரு வண்டியில் ஏற்றினால், வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றார் செந்நாப்புலவர்.
  இன்று பெரும்பாலானவர்கள், கொஞ்சம் தானே, கொஞ்சம் தானே என்று கடன் வாங்கியாவது பல பொருட்களை வாங்கும் மனநிலையில் உள்ளனர். மொத்தமாகப் பார்த்தால் கடன் சுமை அதிகமாகி, இவர்களது உறக்கத்தைக் கெடுத்து நிம்மதியைப் பறித்துக் கொள்கிறது.
  கடன் வாங்கி, அதன் மூலம் வருமானம் வராத பொருட்களையோ, சொத்துக்களையோ வாங்குவது தவிர்க்கப்பட வேண்டிய செயல். எனக்குத் தெரிந்த அன்பர் ஒருவர், கடன் வாங்கி, வீட்டுமனை ஒன்று வாங்கினார். கடனுக்கு வட்டி செலுத்த இயலாமல், வாங்கிய இடத்தை விற்றார். இவருடைய போதாத நேரம், அந்த இடம் வாங்கிய விலையைவிடக் குறைந்த விலைக்கே விற்றது. மொத்தத்தில் நஷ்டம்.
  கந்துவட்டி:
  அதிகமாக வட்டி வாங்கினால் அதைக் கந்துவட்டி, மீட்டர்வட்டி என்று அழைக்கிறோம். நம் நாட்டின் பொருளாதாரம் நிலைகுலையாமல், பல ஏழைக் குடும்பங்கள் வாழ்வதற்கு ஆதாரமாக இந்த நிதிஉதவி உள்ளது என்று தெரிவிக்கின்றது ஆய்வு முடிவுகள். தினசரி காலையில் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கி, மாலைக்குள் விற்பனை செய்வோர் பலருக்கு இந்த நிதி உதவிதான் பசியாற்றுகிறது. இதனால் பயனடைந்த பலரது கூற்று இதோ!காலையில் ரூ.500 கேட்போம்; வட்டி ரூ.50 எடுத்துக்கொண்டு ரூ.450 தருவார். அதில் பொருட்கள் வாங்கி சுமார் ரூ.700 ரூ.800க்கு விற்பனை செய்வோம். இது ஒரு சில நாட்களில் ரூ.300 ரூ.400 எனவும் குறையும்.
  சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பாதிக்க காலையில் வாங்கும் ரூ.450 தான் மூலதனம். மாலை ரூ.500 திருப்பித்தர வேண்டும். ஒரு சில நாட்கள் தர இயலாவிட்டால், அடுத்தநாள் கூடுதலாகிவிடும். திட்டமிட்டுச் செயல்படும்போது நஷ்டம் வர வாய்ப்பு மிகமிகக் குறைவு. இவர்கள் எங்களுக்குத் தராவிட்டால், நாங்கள் செல்வது? வேறு வழியே இல்லை!.
  இதில் பலர் மாலையில் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல், வேறு செலவுகள் செய்தாலும், தேவையற்ற பொருட்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு வாங்குவதாலும் கடன் சுமையைக் கூட்டிக் கொள்கின்றனர். இவர்களை என்ன செய்வது? ஒன்றும் செய்ய முடியாது.
  யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட கதைதான். இவர்களால்தான் கந்துவட்டி கெட்டது என்ற பெயர் வருகிறது.
  ஆடை, ஆபரணங்கள்:
  பண்டிகைகள், தீபாவளி, உள்ளூர் கோவில் விழா போன்றவை, வீட்டு விசேடங்கள் போன்றவற்றுக்கு புதுத்துணிகள் எடுப்பது நமது பாரம்பரியமாகிவிட்டது. இதற்கென சீட்டுப்போட்டு எடுப்பதும், வரவுக்குள் நிதியை சேமித்து எடுப்பதும் புத்திசாலித்தனம். ஆனால் சிலர், கடன் வாங்கி துணி எடுப்பார்கள். அதன் பிறகு கடனாகிவிட்டதே எனப்புலம்புவார்கள். அப்போதும்கூட, தமது செயலுக்கு மற்றவர்களோடு ஒப்பிட்டு “எல்லோரும் தான் செய்யறாங்க. நான் என்ன தப்பா செஞ்சுட்டேன்” என்று சமாதானமும் கூறுவார்கள்.
  துணி எடுத்து, தையல் கூலி கொடுத்து தைப்பதைவிட இன்று ரெடிமேட் ஆடைகள் வாங்குவது புத்திசாலித்தனம். தையல் கூலியிலேயே துணிகளை வாங்கிவிடலாம்.
  இதேபோல் நகைகள் வாங்குவதிலும், பெண்கள் தங்களது இயல்புப் படியே நகைக்கடையில் சீட்டு சேர்ந்து சேமிக்கிறார்கள். ஆனால் விலை ஏற்றஇறக்கம் நகையாக மட்டுமே வாங்க வேண்டும், பணம் திருப்பிக் கிடைக்காது போன்றவற்றால் இங்கும் இழப்புக்கு உள்ளாகிறார்கள்.
  வழுக்கல்கள்:
  நீர் நிலைகளில் பாசமிருந்தால் வழுக்கிவிடும். வழுக்கிவிழுந்து அடிபட்டவர்களுக்குத் தான் இந்தக் கஷ்டம் தெரியும். அதற்காக கீழே விழுந்து கஷ்டம் எப்படி எனப் பார்க்க முயற்சிக்காதீர்கள். வாழ்க்கையிலும் சில சமயம் தவறான பேச்சாலும், செயலாலும் சங்கடங்களைப் பெற்றுக்கொள்வார்கள். தவறுவது சகஜம். அதன் பின் ஏன் இத்தவறு நேர்ந்தது என ஆராய்ந்து தவறைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.
  “ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது அறிவுக்கு வேலை கொடு” அருமையான சொற்கள். உணர்ச்சி வயப்பட்டால் வழுக்கல், அறிவு வயப்பட்டால் ஆனந்தம்!
  வீம்பு:
  வீம்பு என்ற சொல்லைப் பலர் அடிக்கடி பேசுவார்கள். பிறரது வயிற்றெரிச்சலை, பொறாமையைப் பெறுவதற்காகவே சிலர் சிலவற்றைச் செய்வார்கள். அதைச் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. இதுபோன்றது தான் ஆடம்பரமும்.
  “கடன் வாங்கிக் கொடுக்காதவர் நிலை, மரம் ஏறிக் கைவிட்டாற்போல்” என்பார்கள். அவர் கீழே விழுந்து அடிபட்டு, துன்பப்பட வேண்டியதுதான். கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை மனதில் பெரும்பாதிப்பு வரும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  ஆடம்பரம் அவா!:
  2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர்,
  “அஞ்சுவதோரும் அறனே ஒருவனை
  வஞ்சிப்ப தோரும் அவரு” -குறள் 366
  என்ற குறள் மூலம் ஆடம்பரத்துக்கு அஞ்சி வாழ்வதே நல்ல வாழ்க்கை; இல்லாவிட்டால் ஆடம்பரமே வஞ்சித்துவிடும் என்று கூறியுள்ளார். வஞ்சி என்றால் பெண், வஞ்சம் என்றால் பிறர்மேல் காண்பிக்க முடியாத கோபத்தை மனதில் தேக்கிவைத்து, சரியான வாய்ப்புக்காகக் காத்திருப்பது என்று பொருள்.
  செலவே செய்யாமல் கூட, சிலர் வாய் வார்த்தை மூலம் போலியான ஆடம்பரத்தைப் பிறர் மனதில் உண்டாக்குவார்கள். திருமணத்திற்கு பஸ்ஸில் செல்வார்கள்; அங்கு கூறும்போது நண்பர் காரில் வந்ததாய் கூறுவார்கள். பொய்யாகக் கூறி, தற்காலிகத் திருப்தியடைபவர்கள் இவர்கள்.
  பலநாள் திருடன் ஒருநாள் பிடிபட்ட கதையாக: “என்னங்க நான் வந்த பஸ்ஸில்தானே நீங்களும் வந்தீங்க; பஸ்ஸிற்குள் பார்த்தேனே! ஏன் இப்படிப் பொய் சொல்றீங்க” என்று கேட்டால் மிகவும் வருத்தம் உண்டாகும். தலைக்குனிவு என்று கூடக் கூறலாம்.
  துன்பத்துள் துன்பம்:
  ஆடம்பரமானது தொடர்ந்து ஒருவருக்கு துன்பத்தையே தரும் என்பதைத்தான் துன்பத்துள் துன்பம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார் (குறள் 369). உண்மைக்கு என்றுமே மதிப்புண்டு. போலியாக ஆடம்பர வார்த்தைகளைக் கூறுவதும், கடன் வாங்கியாவது மற்றவர் மனதில் பொறுக்க முடியாத எண்ணத்தை உண்டாக்குமாறு வாழ்வதும் ஒருவரது நல்ல குணநலன்களைப் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் வல்லமையுள்ளவை.
  சில குடும்பங்கள், ஆடம்பர வாழ்க்கையாலேயே இருந்த சொத்துக்களையும் விற்றுவிட்டு, வாழ்ந்து வருவதையும் பார்க்கிறோம். தவறு / குற்றம் செய்தவரது மன உணர்ச்சிகள் மாசுபட்டு, தவறான பாதைக்குச் செல்ல நேரிடும்.
  எனவே, வசதியான, ஆடம்பரமான தோற்றத்தின் மூலம் மற்றவர் மனதை ஈர்க்க முயல வேண்டாம். அந்த முயற்சி கேவலமான படுகுழியில் தள்ளிவிடும்.

  வேளாண்மை அன்றும்… இன்றும்… இனியும்…

  சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment – FDI)
  ஜப்பானில் இருந்து இந்தியா வந்தவுடன் என் மகன் வருண் “ஏன் யமடா (Yamada), செய்பு (Seibu), அமெரிக்காவின் வால்மார்ட், நெதர்லாந்தின் அகோல்ட், பிரான்சின் கேர்ஃபோர், ஜெர்மனியின் மெட்ரோ, இங்கிலாந்தின் டெஸ்கோ போன்ற கடைகள் இந்தியாவில் இல்லை. இது போன்ற கடைகள் இருந்தால் காய்கறிகள் முதல் வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் நம்மால் ஒரே இடத்தில் வாங்க முடியுமல்லவா? இன்னும் ஏன் இதுபோன்ற கடைகள் தமிழகத்துக்கு வரவில்லை? எப்பொழுது இதுபோன்ற கடைகள் ஆரம்பிக்கப்படும்?” என்று கேட்டான். இந்த கேள்விக்கும் இதுபோன்று மனதில் உள்ள எண்ணற்ற கேள்விக்கும் விடை சொல்லும் விதமாகச் சில கருத்துக்களை இந்தக் கட்டுரையின் மூலம் தெளிவுபடுத்துகிறேன்.
  சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment in Retailed Business)
  இந்தியாவின் தற்போதைய கொள்கைப்படி பல்பொருள் சில்லறை வியாபாரத்தில் (Multiple retail business) நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதி கிடையாது. ஆனால் ஒற்றைப் பொருட்கள் சில்லறை வியாபாரத்தில் (Single retail business) மேற்படி அந்நிய முதலீடுகளுக்கு எந்தத் தடைகளும் இல்லை.
  இந்தியா உலக வர்த்தக நிறுவனத்தில் (World Trade Organization – WTO) ஒரு அங்கம் வகிக்கும் நாடு. உலக சந்தையில் உள்ள சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO – GAT) ஒப்பந்தத்தில் உள்ளபடி உலக சந்தைக்கு நமது நாட்டின் சந்தையையும் திறந்து விட வேண்டும். இதில் இந்தியா சில பொருள்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதேபோல் மற்ற நாடுகளிலும் நமது பொருள்களுக்கு வர்த்தக அனுமதி தரவேண்டும்.
  பல பொருள்கள் கொண்ட சில்லறை வர்த்தகத்தில் வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என்பது தான் தற்போதைய இந்தியாவிலுள்ள அனைத்து மக்களின் கேள்வி.
  இதில் பலதரப்பட்ட கருத்துக்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப முன்வைக்கப்படுகிறது. இந்தக் கட்டுரையின் நோக்கம் இத்தகைய அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டால் விவசாயத் துறையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை மட்டுமே சுட்டிக்காட்டுகிறது.
  அந்நிய முதலீடு சில்லறை வர்த்தகத்தில் வரும் போது விவசாயத்தில் ஏற்படும் மாற்றங்கள்
  விவசாயப் பொருட்களை வாங்கி விற்கும் இடைத்தரகர்களுக்குப் பெரும் வருமான இழப்பு ஏற்படும். அதிகபட்ச விலை விவசாய விளைபொருட்களுக்குக் கிடைக்கும். இடைத்தரகர்களுக்குக் கிடைக்கும் இலாபத்தின் பெரும்பகுதி விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்றடையும் வாய்ப்புக்கள் அதிகம். இத்தகைய மாற்றங்கள் விவசாயிகளின் பொருளியல் சார்ந்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். மேலும், வால்மார்ட் போன்ற பெரிய அந்நிய நிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தில் 50 சதவிகிதம் விவசாயிகளுக்குத் தேவையான குளிர்சாதன கிடங்குகள், விவசாய பொருட்களைப் பதப்படுத்தி சேமிப்பு செய்தல் போன்ற கட்டுமானத்திலும் செலவு செய்ய வாய்ப்புகள் ஏற்படும். இத்தகைய முதலீடுகள் விவசாயம் சார்ந்த தொழில்களின் உள்கட்டுமானம் அதிக அளவில் பெருக வாய்ப்புக்களை ஏற்படுத்தித்தரும்.
  பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள 30 சதவிகிதம் குறுந்தொழில்கள் செய்யும் நிறுவனங்களிடமிருந்து பொருள்களை வாங்க வேண்டும். இப்படிச் செய்வது விவசாய பொருள்கள் வியாபாரம் செய்யும் குறுநிறுவனங்களின் வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் போன்றவை மேம்பட்டு, வியாபாரம் பெருகி வளர்ச்சிப் பாதையை அடையும்.
  100 சதவிகிதம் அந்நிய முதலீட்டை அனுமதித்த சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உணவுப்பதப்படுத்துதல் துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது. இதனால் உணவுப் பொருட்களின் சேதம் தவிர்க்கப்படும் வாய்ப்புக்கள் அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலும் இத்தகைய மாற்றங்கள் ஏற்படலாம்.
  சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு இந்திய விவசாயிகளின் பயம்
  பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் வந்து இறங்கினால் அவர்கள் வெளியிலிருந்து விவசாயப் பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்கி இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்றால் நமது விவசாயப் பொருட்களுக்குச் சந்தையில் விற்பனைக்குரிய இடம் இல்லாமல் போய்விடும். இதனால் இந்திய விவசாயிகள் தொழிலை விட்டுச் செல்ல வேண்டியதிருக்கும் என்றபயம்.
  வெளிநாட்டு நிறுவனங்கள் சந்தையை ஆக்கிரமித்துக் கொண்டால் விவசாய உணவுப் பொருட்களின் விலையை அவர்களே நிர்ணயிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் முதலாளித்துவம் தலைதூக்க ஆரம்பித்துவிடும். விவசாயிகள் தன் சொந்த விவசாயத் தொழிலை விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலைகூட வரலாம் என்றபயம்.
  இந்த அந்நிய முதலீடு சம்பந்தமான இருதரப்பு விவாதமும் அர்த்தம் பொதிந்ததாகத்தான் உள்ளது. ஆனால் தற்போது உள்ள இந்திய விவசாயத்தின் நிலைமையைக் கருத்தில் கொண்டால் இத்தகைய அந்நிய நேரடி முதலீடு இந்திய விவசாயத்தில் ஒரு புதிய மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளதைக் காட்டுகிறது.
  மற்ற துறைகளில் சுமார் 8 சதம் வளர்ச்சி ஏற்படும் போது, இந்திய விவசாயத்துறையின் வளர்ச்சி மட்டும் 2 சதம் என்பது ஒரு வேதனைக்குறியதாகவே உள்ளது. இப்படி தங்களின் விவசாயத்தை ஒரு இலாபகரமான தொழிலாக நடத்த முடியாத சூழ்நிலையில் இந்திய விவசாயம் இருக்கிறது.
  இந்திய விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி எந்த வகையில் வந்தாலும் அதை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கின்றனர் விவசாயிகள். இந்தக் கேள்விகளுக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஒரு ஜனநாயகத் தீர்வைக் காண வேண்டும் என்ற எண்ணம் அனைத்து தரப்பு மக்களிடமும் மேலோங்கி இருக்கிறது.

  வாழ்வியல் நுட்பங்கள்

  பெண்களில் சிறப்பாகச் செயல்படும் இடது மூளை (Left Brain) தர்க்கரீதியாக (Logically) இயங்கும் தன்மை வாய்ந்தது. அதுவே, ஆண்களில் சிறப்பாகச் செயல்படும் வலது மூளை (Right Brain) ஆக்கபூர்வமாக (Right Brain) இயங்கும் தன்மை வாய்ந்தது. ஆகவேதான், பெண்கள் உணர்ச்சி வசமாகவும், ஆண்கள் அறிவு வசமாகவும் சிந்தித்து, முடிவெடுத்து செயல்படுகிறார்கள். ஆகவே, அன்பையும் பாசத்தையும் மோசமில்லாமல் வாரி வழங்கும் பெண்களே! உங்கள் வாழ்க்கைத் துணைவரைத் தெரிவு செய்வதில், உணர்வு பூர்வமாக அல்லாமல் அறிவு பூர்வமாகச் செயல்படுவது மிக முக்கியம். அப்படியில்லாமல், உணர்ச்சி வசமாக தெரிவு செய்துவிட்டு, “எனக்கு வாய்த்தது இதுதான், இதனோடு குப்பைக் கொட்டுவது என் தலை எழுத்து” என்று உணர்ச்சிவசமாகப் புலம்ப வேண்டியதுதான். அன்பான செல்விகளே! வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யத் தயாராய் இருப்பவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய வாழ்வியல் நுட்பங்களை இனி பார்ப்போம்.
  1. கண்ணைப் பாருங்கள்: உங்களுக்கானவரை நீங்கள் தெரிவு செய்யும் முன், அவரது கண்களை நேருக்கு நேர் நோக்க வேண்டும். அவ்வாறு நோக்கும் போது, உங்களவர் உங்கள் கண்களை நேராகப் பார்த்தால் உண்மையானவர் என்று கொள்க. உங்களை நேருக்கு நேர் பார்க்க முடியாது பார்வையை வேறு பக்கம் திரும்பினால் அவரை ஒதுக்கி விடுங்கள். தோழிகளே! இந்த இரகசியத்தைத் தெரிந்து கொண்ட ஆண், உங்கள் கண்களை நேருக்கு நேர் பார்த்தாலும், அவரிடம் உண்மைத் தன்மை இருந்தால் மட்டுமே உங்களை அதிக நேரம் நோக்கவும், பார்த்து பேசவும் முடியும். பொய் பேசும் கண்கள் காட்டிக் கொடுத்து விடும்.
  2. ஆரோக்கியத்தைப் பாருங்கள்: ஊளைச் சதையுடன் உடல் பருத்து, அல்லது உடல் மெலிந்து, இயற்கையான தோல் மினுமினுப்பு இழந்து, கண்கள் சொருகி, பாதங்கள் வரண்டு, வழுக்கை அதிகமாகி, அல்லது முடி அதிகம் நரைத்து, முகம் முதிர்ந்து, உடல் தளர்ந்து இருக்கின்ற ஆரோக்கியமற்ற அறிகுறிகளை வெளிப் பார்வையிலேயே கண்டு உணர்ந்து கொள்ள முடியும். இப்படி எல்லாம் பார்த்துத் தெரிவு செய்ய வேண்டுமா? என்று யோசிக்கிறீகளா?. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், தன் மீதும் தன் ஆரோக்கியத்தின் மீதும் அக்கரை இல்லாதவர்கள், கண்டிப்பாக உங்கள் மீதும், உங்கள் ஆரோக்கியம் மீதும் அதிக அக்கரையும் ஆதங்கமும் கொள்ளமாட்டார்கள். தன் தனிப்பட்ட வாழ்க்கைக்கே பொறுப்பு ஏற்காதவர்கள், எப்படி குடும்பப் பொறுப்பை ஏற்பார்கள்?.
  3. அறிவைப் பாருங்கள்: அன்புத் தோழியர்களே! இல்லறம் என்ற தேர் விபத்தில்லாமல் ஓட, ஆணின் அறிவு, பெண்ணின் அன்பு என்ற இரண்டு அச்சாணிகள் தேவை. ஆண் வழிகாட்டுதல் (Creative Decisions) மற்றும் வழி நடத்துதல் (Constructive Action), பெண் அரவனைப்பு (Love), மற்றும் இணக்கத் தன்மை (Relationship) ஆகியவற்றைப் பங்காக அளித்து குடும்ப அமைப்பை சிறக்கச் செய்ய வேண்டும். ஆகவே, உங்கள் வாழ்க்கைத்துணைவர் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறிவாற்றலைக் கொண்டுள்ளாரா? என்று பார்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். அறிவில் பண்பட்டவர், தன்னம்பிக்கையோடும், அடக்கத்துடனும், அமைதியுடனும், குறைவாகப் பேசுபவராகவும் இருப்பார்.
  4. அன்பைப் பாருங்கள்: அன்பு உள்ளவர் வெளிப்படையாகப் பேசுவார். வெளிப்படையாகப் பேசுபவருக்கும், அதிகப்படியாக பேசுபவருக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன வென்றால், வெளிப்படையாகப் பேசுபவர் கண்ணில் உண்மை தெரியும். அடுத்தவரையும் பேச விடுவார். அதிகப்படியாகப் பேசுபவர் அவர் மட்டுமே பேசுவார். அடுத்தவரைப் பேச விடமாட்டார். பேசுவதில் உள்ள பொய்களைக் கண்கள் காட்டிக்கொடுத்து விடும். அன்பாய் இருப்பவர் பொறுப்பாகவும் இருப்பார். பொறுப்பு அற்றவர்கள் எவ்வளவுதான் அன்பாய் இருப்பதாகச் சொன்னாலும், அவர்களின் கண்கள் உண்மையைச் சொல்லிவிடும்.
  5. ஆற்றலைப் பாருங்கள்: ஆற்றல் உள்ளவர்கள், நிதானமாகப் பேசுவார்கள். நிமிர்ந்து உட்காருவதும், நேர் கொண்ட நடையையும், நிமிர்ந்த பார்வையையும் கொண்டிருப்பார்கள். பேச்சில் தன்னம்பிக்கையும், நேர்மறைத் தன்மையும் இருக்கும். ஆற்றல் இல்லாதவர்கள், நிலைகொள்ளாமலும், படபடப்பாகவும், அவசரக்காரர்களாகவும் முதுகு வளைந்தும் இருப்பார்கள்.
  6. அடக்கத்தைப் பாருங்கள்: பொறுமை அற்றவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதும், அதுபோலவே செய்வதுமாக இருப்பார்கள். தான் பேசுவதை விட அடுத்தவர் பேசுவதை கேட்பதில் அதிக நேரம் செலவழித்து, அவர்களுக்கு சுருக்கமாக பேசி தீர்வு கொடுப்பார். எந்த நிலையிலும் தன் தன்மையை இழக்காமல் இருப்பார்.
  7. ஆளுமையைப் பாருங்கள்: தன் இயல்பான இருப்பால் சுற்றி இருப்பவர்களையும், இருக்கும் சூழலையும் உயிரோட்டமாக (Lively) இருக்கச் செய்வார். எதிர்மறை (Negative) நிலைகள் மற்றும் மனிதர்களை நாசுக்காக தவிர்த்து (Positive) நிலையினை வெளிப்படுத்துவார். தன் பேச்சால் கவர்வதை தவிர்த்து தன் உண்மைத் தன்மையால் உங்களைக் கவர்வார்.
  மேலே குறிப்பிட்ட ஏழு அடிப்படை வாழ்க்கைத் தன்மைகளும் இருக்கிறதா என்று பொறுத்தம் பார்த்து உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் சத்தியமாக தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் இதில் எத்தனை முடியுமோ அவற்றுக்கு ஏற்ப உங்களவரைத் தெரிவு செய்து கொள்ள முடியும். மேலே குறிப்பிட்டவைகள்தான் நமது வாழ்க்கையின் தரம் மற்றும் தன்மையை முடிவு செய்கின்றன. இந்த குண அமைப்பை அனேகமாக மாற்றம் செய்ய முடியாது அல்லது மாற்றம் செய்ய முனைந்தால் வாழ்வின் அனேக காலம் இதற்காகவே காலியாகிவிடும். மேலே சொன்ன ஏழு அடிப்படை தன்மைகள் மூலம் இவைகளை சரியாகக் கையாண்டு இல்லற வாழ்வில் அமைதி, ஆனந்தம், ஆஸ்தி, ஆயுள் மற்றும் ஆண்ம மேன்மை ஆகியவற்றை அற்புதமாக அடைய முடியும். ஆகவே, இல்லற வாழ்வின் அடிப்படைகளை அடையாளம் கண்டு அதற்குத் தக்கபடி வாழ்க்கைத் துணையை தெரிவு செய்வோம். மற்றதை மாற்றுவோம்.

  நியூட்ரினோ

  இயற்பியல் பயில்வோருக்கு முதல் பாடமே ஒளியின் வேகம் குறித்து ஐன்ஸ்டீன் உருவாக்கிய சிறப்புச் சார்புக் கோட்பாடு (Special Relativity Theory) தான். ஒளியின் திசைவேகத்தை பிரபஞ்சம் முழுவதும் எப்படி அளக்க வேண்டும் என்பதில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த கோட்பாடு தான் சிறப்புச் சார்பியல் கோட்பாடு. ஒளியின் வேகத்தை கால அலகுகளில் அளப்பதும், காலத்தை ஒளிவேகத்தின் அலகுகளில் அளப்பதும் தான் இதன் சாராம்சம். பிரபஞ்சத்தில் ஒளியின் திசைவேகமே (Velocity) எல்லை. இதை மீறிய திசைவேகத்தில் எந்த துகளும் பாய்ந்து செல்வதில்லை என்று அந்தக் கோட்பாடு கொண்ட கருத்தை கற்பிதம் என்று நிரூபிக்கும் கண்டுபிடிப்பாய் அமையப்போகிறது. நியூட்ரினோவின் வேகம். அதைப்பற்றிய சில செய்திகளைப் பார்ப்போம்.
  நியூட்ரினோ என்ற வார்த்தைக்கான பொருள் ‘சிறிய சார்புருதியற்ற ஒன்று’ (Small Neutral One) என்பதாகும். அதாவது மின்காந்த விசையால் (Electromotive Force) எந்த பாதிப்பும் அடையாமல் சார்புருதியற்ற ஒரு பொருள் என்று கூறலாம். இது அணுவினின்றும் சிறிய பொருள் என்றும், இதன் திரண்ட நிலை (Mass) ஏறக்குறைய பூஜ்ஜியம் என்றும் கூறப்படுகிறது. சூரியன் மட்டுமல்லாது விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும். கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. நியூட்ரினோக்கள் அண்டம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகள்களைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும், பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது. நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம். 1930ம் ஆண்டு இப்பொருளின் முதல் வடிவம் கோட்பாடாக அறிவிக்கப்பட்டது. பின் 1956ல் நியூட்ரினோ கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த பொருள் ஒளியை விட வேகமாக பயணிக்கவல்லது என்று ஐரோப்பிய அறிஞர்களால் தெரிவிக்கப்படுகிறது.
  இந்தியாவில் முதன்முதலாக காஸ்மிக் கதிர்களில் இருந்து உண்டாகும் நியூட்ரினோக்கள், கோலார் தங்க வயல் சுரங்கத்தில் 1965ல் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இச்சுரங்கங்கள் 15 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டுவிட்டன. எனவே மீண்டும் இந்த ஆராய்ச்சியை நடத்துவதற்காக இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடம் (Indian Neutrino Observatory) என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல அறிவியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த பாதாள அறிவியல் கூடத்தை அமைக்க முன்வந்துள்ளன. சுமார் 100 விஞ்ஞானிகள், பொறியாளர்கள் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
  நியூட்ரினோ எந்த பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடிய திறன் கொண்டது. அதனால் ஜெனிவாவில் உள்ள CERN என்ற ஆய்வுக்கூடத்தில் 1300 மெட்ரிக் டன் எடையுள்ள இயந்திரம் (OPERA) கொண்டு நியூட்ரினோவை பூமிக்குள் செலுத்தினர். சுமார் 16,000 நியூட்ரினோக்களின் வேகத்தை ஆராய்ந்தனர். 2.3 மில்லி செகண்ட் நேரத்தில் 730 கிலோமீட்டர் பயணித்த நியூட்ரினோ, ஒளியைவிட சுமார் 60 நானோ செகண்ட் அதிக வேகத்தில் சென்றதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை அதிநவீன கருவிகள் மூலமாக, நுணுக்கமான கடிகாரத்தின் துணைகொண்டு கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த ஆராய்ச்சி மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனை பலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அதற்கான காரணம், இந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ள நிலையற்ற தன்மை நேரம் (Uncertainty) பத்து நானோ செகண்ட் என்பது, இது சாத்தியமாவது மிகவும் கடினம் என்கின்றனர். இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தையும், ஆச்சர்யத் தன்மையையும் ஏற்கும் சிலர் மேலும் பல ஆராய்ச்சிகளை செய்து இதே வேகத்தில் நியூட்ரினோ பயணிக்கிறது என்று நிரூபித்தால் தாங்கள் ஒப்புக்கொள்ளத் தயார் என்றும், இதை ‘சாத்தியமற்றது’ என்று சொல்லி முழுமையாக ஒதுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர்.
  இதையெல்லாம் தாண்டி தற்போது இந்த ஆராய்ச்சிக்கூடம் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகிலுள்ள பொட்டிப்புரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ. கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை தோண்டப்படும். அதையடுத்து பெரிய ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். இதைச்சுற்றி நான்கு திசைகளிலும் மேலேயும், கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ. பரிமாணமுள்ள பாறை இருந்தால்தான் ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து நிறுத்த முடியும். அதன் பிறகுதான், நியூட்ரினோவை காணமுடியும். முதற்கட்டமாக ஐ.என்.ஓ. கூடத்தில் காஸ்மிக் கதிர்கள் உண்டாக்கும் நியூட்ரினோக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப்படும். அடுத்த கட்டம் மிக முக்கியமானது. ஜப்பான், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதி ஆற்றல் வேக வளர்ச்சி ஆலைகள் (High Energy Accelerater) உண்டாக்கும் நியூட்ரினோக்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவை பூமியின் உள்ளே கடந்து ஐ.என்.ஓ. கூடத்தை வந்தடையும்.
  நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை, கடினமான மலைப்பாறைகளின் கீழே தான் அமைக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள மலைகளைப்போல, இந்தியாவில் எங்கும் இல்லை. இதன் மூலம் அறிவியல் வளர்ச்சியில் தமிழ்நாடு தனிப்புகழ் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நமது இளம் விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சி மாணவர்களையும், பொறியாளர்களையும் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்த முடியும். இந்த வாய்ப்பை தமிழகம் இழந்துவிடக்கூடாது. இந்த ஆய்வுக்கூடத்தில், எவ்வித ஆபத்தான கதிர்வீச்சு பொருட்களும் பயன்படுத்தப்படாது. அணுகுண்டு ஆராய்ச்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுற்றுப்புறத்தையோ, நீர் நில வளத்தையோ இந்த ஆராய்ச்சி எந்த விதத்திலும் பாதிக்காது. நியூட்ரினோ கருவி மற்ற தொலைநோக்கு கருவிகளைப் போன்றது தான். தமிழகத்தில் இது அமைவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் அங்கு சென்று ஆராய்ச்சிகளைப் பார்க்க முடியும்.
  இதனால் தேனி பகுதியிலும், அதன் சுற்றுவட்டாரங்களிலும் உள்ள அறிவியல் நிலையங்களும், கல்லூரிகளும் இந்த நியூட்ரினோ திட்டத்தால் மேலும் வலுப்படுத்தப்படும். தோண்டி எடுக்கப்படும் கற்கள் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் மற்றும் சாலைகள் உண்டாக்குவதற்கும் பயன்படுத்தப்படும். பொதுமக்களும் இதனால் பயனடைவர்.
  ஐரோப்பாவிலுள்ள செர்ன் (CERN) ஆராய்ச்சி நிலையம் அதன் பெரிய ஹாட்ரான் கொல்லைடர் திட்டத்தால் புகழடைந்தது போன்று தேனியும் அதன் சுற்றுவட்டாரமும் நியூட்ரினோ அறிவியல் திட்டத்தால் புகழடையும்.

  நாட்டுக்கு நாமென்ன செய்தோமென கேட்டு கேட்டு கடமைகள் செய்வோம்!

  கல்விப் பணியையும், சமூகப் பயன்பாட்டுப் பணியினையும் இரண்டு கண்களாகப் பாவித்துச் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியரும், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர் டாக்டர் கி. கோவிந்தராஜூலு அவர்கள் ஒரு பன்முகத் திறன் கொண்ட மனிதநேயர். மாணவர்கள் மரியாதையுடனும், பாசத்துடனும் போற்றும் ஆசிரியராகப் பணிபுரிபவர். பொருளியல் கல்வியைப் போதிப்பதும் சுற்றுச்சூழல் பொருளியல் ஆய்வில் ஈடுபட்டிருப்பதும் இவரின் கல்வித் திறனுக்கு சான்றென்றால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டு நலப்பணித் திட்ட பணிகளில் திட்ட அலுவலராகவும், பிறகு பல்கலைக்கழக ஒருங்கிணைப் பாளராகவும் ஈடுபாட்டுடன் கூடிய களப்பணிகளில் செயலாற்றி வருவது சமூகத்தின் மீது இவருக்குள்ள அக்கறையின் சான்றாகும்.
  அமைதியான செயல்பாடு, ஆற்றொழுக்கு போன்ற பேச்சுத்திறன், தமிழ் மொழிப்புலமை, பொருளியல் பாடத்தைச் சுவையுடன் வழங்குவது, உலக நடப்புகளின் விசயங்களை வழங்கும் அறிவாற்றலில் ஆய்வு மாணவர்களை நெறிப்படுத்தும் ஆற்றல், மாணவர்களின் மனதை பண்படுத்தும் தன்னம்பிக்கை பேச்சு இதுதான் பேராசிரியர் டாக்டர் கி. கோவிந்தராஜுலு என்றால் அது மிகையாகாது. இவருடன் ஒரு சிறிய நேர்முகம்.
  உங்களைப்பற்றி…
  பள்ளிப்படிப்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் முடித்த பிறகு மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் பி.யூ.சி மற்றும் இளங்கலை படிப்பையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.எம்.பில். படிப்பையும் முடித்துவிட்டு கடந்த 1983ம் ஆண்டு கோவை சி.பி.எம். கல்லூரியில் பொருளியல் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தேன். ஐ.ஏ.எஸ். பணியில் சேர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு என்னைத் தயாரித்த நாட்களை மறக்க முடியாது. வேளாண் குடும்பத்தைச் சேர்ந்தவன். வசதி வாய்ப்புகள் குறைவு. கனவுகள் நிறைய.
  ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற ஏக்கத்திற்கு மருந்தாக கல்லூரி ஆசிரியர் பணிகிடைத்த போது மனநிறைவாக இருந்தது. கடந்த 28 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான இளம் உள்ளங்களுடன் பாடத்தை மட்டும் (தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக கோவை சட்டக்கல்லூரியில் மாலை வகுப்பில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றுள்ளேன்). பகிர்வதோடு அல்லாமல் பொது சிந்தனைகளையும், நாட்டு நடப்புகளையும் பகிரும்போது கல்விப்பணியாற்ற கிடைத்த வாய்ப்பு சிறப்பாக அமையப் பெற்றது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
  பேராசிரியராக தற்சமயம் உங்கள் பணி…
  தற்போது கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்ற எனக்கு கிடைத்த வாய்ப்பு கல்லூரியில் பணி செய்த காலத்தில் ஈடுபாட்டுடனும் கடினமாகவும் புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுமே எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். சுற்றுச்சூழல் பொருளாதாரத்தில் நாங்கள் மேற்கொண்டுவரும் சில ஆய்வுகள் சமூக நலனை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக நொய்யல் ஆற்றில் கலக்கப்படும் கழிவுகளால் வளரும் தலைமுறைக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி ஆய்வு செய்து நொய்யலைச் சீர்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பற்றி சமுதாய நோக்குடன் எடுத்துரைத்துள்ளேன். மாணவர்களை பன்முகத் திறமை கொண்டவர்களாக உருவாக்க வேண்டும். அதற்கான வழி முறைகளைத் தெளிவாக அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டு எனது பணியைச் செய்து வருகிறேன். இளைஞர்கள் மனது ஒரு குறையும் இல்லாத வெள்ளைத்தாள் போன்றது. அதில் கருத்தான கவிதை, அழகான ஓவியம் ஆகியவற்றையும் வரையலாம். தேவையற்ற விசயங்களையும் தெளித்துவிட்டு போகலாம். நல்லவற்றைப் பதிய வைக்கப் பாடுபடுவது மகிழ்வைத் தருகிறது.
  பொதுச்சேவையில் தங்கள் ஈடுபாடு…
  மாணவர்களுக்கான நாட்டு நலப்பணித்திட்ட (என்.எஸ்.எஸ்) அமைப்பில் திட்ட அலுவலராகக் களம் இறங்கியது தான் எனது ஈடுபாட்டை பொதுச்சேவை நோக்கி அழைத்துச் சென்றது. ஒரு நாடு எவ்வளவுதான் இயற்கை வளமும் செல்வச் செழிப்பும் மிக்கதாக இருந்தாலும், அளவான ஆசையும் உயர்ந்த நோக்கம் கொண்ட மனித உள்ளங்களும் அந்த நாட்டில் குறைந்துவிட்டால் வளர்ச்சியின் பலனை யாருமே அனுபவிக்க முடியாமல் போய்விடும் என்பது என் எண்ணம். நாட்டுப்பற்று, திடமனது, மனிதநேயம், தலைமைப்பண்பு, ஆக்கச் செயல்திறன், ஒழுக்கம் இவற்றைக் கொண்ட இளைஞர்களை உருவாக்குவது தான் என்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம். இவை தான் இன்றைய அவசியத் தேவையும் கூட. இவற்றை செயல்படுத்த மேலும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதாவது பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எனும் பொறுப்பு, 84 கல்லூரிகளில் உள்ள 25,000 மாணவர்களை நெறிப்படுத்துவதை ஒரு உயரிய பணியாகக் கருதுகிறேன். ஈடுபாட்டுடன் செய்யும் எந்தப் பணிக்கும் ஒரு அங்கீகாரம் என்றாவது ஒருநாள் கிடைக்கும் என்று சொல்வார்கள். எனக்கு அப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதாவது பாரதியார் பல்கலை மற்றும் தமிழக அரசின் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருது கிடைத்ததை எனது பணிக்கான அங்கீகாரமாக நினைத்து மகிழ்கிறேன். அந்த அனுபவங்கள் பொதுச்சேவைக்கு உதவியாக உள்ளது. தற்போது மாணவர்கள் மூலம் அரசுத் திட்டங்களில் உதவுவது, மாவட்ட நிர்வாகத்திற்கு உதவி புரிவது, காவல் துறைக்கு தேவைப்படும்போது உதவியாக நிற்பது என்ற செயல்பாடுகளோடு சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் ‘மாணவர் தனித்திறன் வளர்ச்சி’ எனும் நோக்கோடு எனது பணி தொடர்கிறது.
  மறக்க முடியாத நிகழ்வுகள்…
  எனது வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வுகள் நிறைய உள்ளன. என்னை மிகவும் நெகிழச் செய்த நிகழ்ச்சி கல்லூரிகளில் உள்ள இரத்த வங்கியின் மூலம் பலருக்கு உதவி வருகின்றோம். அரிதான இரத்த வகை கிடைக்காதவர்களுக்கு எங்கள் வங்கி மூலம் உதவும்போது உரியவர்கள் அடையும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பல தருணங்களில் கண்ணுற்றுள்ளோம். குறிப்பாக ஒரு கைக்குழந்தைக்கு நடந்த இதய அறுவை சிகிச்சை மற்றும் சாலை விபத்தில் படுகாயமுற்ற மாணவனின் உயிரைச் சரியான நேரத்தில் காப்பாற்ற முடிந்த நிகழ்வு ஆகியவற்றை என்றென்றும் மறக்க முடியாது. மேலும் தொண்டைப் பகுதியில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழை மாணவனுக்கு லட்சக் கணக்கில் மருத்துவம் செய்ய வேண்டிய சூழலில் என் மூலம் பெரிய தொகையை நிதியாகத் திரட்டிக் கொடுத்ததால் அறுவை சிகிச்சை நல்ல முறையில் முடிந்தது. இன்று அந்த மாணவன் மேல் படிப்பு படிப்பதைப் பார்க்கும்போது எனது பணியின் காரணமாக நம்மால் முடிந்த உதவியை செய்ய முடிந்தது என்ற மனநிறைவு ஏற்படுகின்றது.
  இளைய தலைமுறைக்குத் தங்களின் கருத்து, செய்தி…
  அனைவரும் மதிப்பிடுவதைப் போல் இன்றைய இளைஞர்கள் திறம் படைத்தவர்களாக, எதையும் விரைவில் கிரகித்துக் கொள்பவர்களாக, உலக அறிவு பெற்றவர்களாக பெரும்பாலும் இருப்பதைப் பார்க்க முடிகின்றது. இந்தியத் திருநாட்டைப் பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் இளைஞர்களைப் பெற்றிருப்பது நமது நாட்டின் மிகப்பெரிய பலம். ஆனால் அவர்களுக்கு இன்றைய சமுதாயத்தில் எது தேவையானதோ அதை வழங்கும் காரணிகள் மிகக் குறைவு. இளைஞர்களுக்கு எது தேவையில்லையோ அது அபரிமிதமாக வாரி வழங்கப்படுகின்றது.
  இந்த நிலை மிகுந்த கவலையை அளிக்கின்றது. என்.எஸ்.எஸ். மூலம் மனித வளர்ச்சிக்குத் தேவையானதைப் பயிற்சிகள் மூலமும், களப்பணிகள் மூலமும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமும் மிகவும் சிரமப்பட்டு வழங்குகின்றோம். ஆனால் விசயங்களை, ஒரு சொடுக்கு போடும் நேரத்தில் ஒரு திரைப்படப் பாடலோ, காட்சியோ அவனை வேறு வழியில் செல்ல வழி வகுத்து விடுகின்றது. அவன் மனது அலைக்கழிக்கப்படுகின்றது. சமூக சீர்கேடுகளான புறஊதாக் கதிர்களிடமிருந்து அவன் தன்னை உணர்ந்து பாதுகாத்துக் கொண்டால் இளமையான, வளமையான பாரதம் அமைவது நடைமுறைச் சாத்தியமே. அன்பு கலந்த நல்ல வாழ்க்கை முறைகளும், அளவான முறையில் பணம் சார்ந்த வாழ்க்கையும் கொண்ட இளைய சமுதாயத்தை வளர்க்க குடும்பமும், இன்றைய சமுதாய அமைப்பும் முயற்சி மேற்கொண்டால் மட்டுமே வருங்கால பாரதம் நிலைத்திருக்கும். இல்லையேல் இனிவரும் இளைய சமுதாயம் எல்லாம் வெறும் வான்கோழிகள் தான்.
  நீங்கள் பொருளாதாரப் பேராசிரியர்… இந்திய பொருளாதாரத்தைப் பற்றி…
  இந்தியா நீர்வளம், நில வளம், மலை வளம், காடு வளம், கனிம வளம், நிரம்பப் பெற்ற நாடு. நமது பண்பாடும், பாரம்பரியமும் உலகப் பிரசித்தி பெற்றது. வாழ்வு முறை, குடும்ப அமைப்பு முறை சிறப்பானது என்று பிறநாட்டவரும் புகழ்கின்றனர். இயற்கையோடு இயைந்தவாழ்வு தான் நமது தினச்சிறப்பு. இவ்வளவு பெருமைக்குரிய நாம் இன்று வேலைவாய்ப்பின்மை, விலைவாசி ஏற்றம், அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள், வேளாண்மையில் தேக்க நிலை என்று பல நிலைகளில் பிரச்சனைகளைச் சந்திக்க முக்கிய காரணங்கள் கட்டுப்படுத்தப்படாத மக்கள் தொகைப் பெருக்கம், நீர் மேலாண்மை மற்றும் வேளாண்மைக்கான முக்கியத்துவத்தை உணர மறந்தது, சரிசமமற்ற துறைசார் வளர்ச்சி, பொருளாதார நுகர்வில் அந்நிய நாடுகளின் தாக்கம், அறிவார்ந்த முறையில் வளங்களைப் பயன்படுத்தாமை ஆகியன நம் பொருளியல் பிரச்சனைக்கான காரணிகளில் முக்கியமானவையாகும். இவற்றை நாம் முதலில் உணர்ந்தால் மட்டுமே தீர்வு பற்றிய சிந்தனை முளைக்கும். மேலும் சேவைகள் துறையில் மட்டும் கவனம் செலுத்தாமல் உற்பத்தித் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நாடு சமச்சீர் வளர்ச்சியைப் பெற முடியும்.
  தங்களின் எதிர்காலப் பணிகள், ஆர்வம் எதை நோக்கியதாக இருக்கும்?
  நமது இந்தியத் திருநாட்டைப் பொறுத்தவரை அதன் பலமாகவும், உயிர் நாடியாகவும் நான் கருதுவது மூன்று விசயங்கள். அதாவது இயற்கையைத் தோற்கடிக்காத வேளாண்மை, கலப்படமில்லாத சுற்றுச்சூழல், ஆரோக்கியமான இளைஞர் சக்தி ஆகிய மூன்றும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டால் நம் நாட்டின் பொருளாதார அடிப்படை பலமாகும். (அறிவியல் வளர்ச்சியினால் ஏற்பட்டு விட்ட சொகுசு வாழ்க்கை மட்டுமே பொருளாதார முன்னேற்றமாகாது என்பது என் கருத்து). அதன் பிறகு இதர வகை முன்னேற்றங்கள் ஊடு பயிராக வளர்வதுதான் நீடித்த வளர்ச்சிக்கு உகந்ததாகும். என் எதிர்காலப் பணிகள் மேற்சொன்ன மூன்று விசயங்களை நோக்கியதாக இருக்கம்.

  பதிவுகள்

  அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது. உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன். மனித பிறப்பு மற்றும் நம் உடலின் அருமையை உணர்த்தும் நம் முன்னோர்களின் அற்புதமான பதிவுகள் இவை. 72,000 நரம்புகள் மற்றும் கோடிக்கணக்கான செல்கள் கொண்ட மனித உடல் ஒரு சிறிய அணுவிலிருந்தே உருவானதுÐ காலத்தை வென்று நிற்கும் நம் மனித உடல். அதிசயம், அதிசயம் என்று வெளியில் தேடுகிறான் மனிதன். ஆராய்ந்து பார்த்தால் மனிதனே ஓர் அதிசயம். அவனுக்குள் சிறு உலகமே இயங்குகிறது என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன. உருவமும் நிறமும் கொண்ட மனிதனை, பொருளை நமது மூளை பதிவு செய்கிறது. நம் நாவினால் சுவைக்கும் சுவைக்கு உருவம் இல்லை. நம் நாசிகளால் உணரும் வாசனைக்கும் உருவம் இல்லை. உருவமில்லாத இந்த விஷயங்களைக் கூட நமது மூளை துல்லியமாக பதிவு செய்து, இப்பொழுது சாப்பிடும் உணவின் ருசி இதற்கு முன் சாப்பிட்ட இதே உணவின் ருசி. அதே போல் முன் நுகர்ந்த வாசனை இப்பொழுது நுகரும் வாசனை என மூளை தனது முந்தைய பதிவுகளின் மூலமாக நம்மை உணர வைக்கிறது. நமது முகத்தில் உள்ள உறுப்புகளான கண், காது, மூக்கு, வாய், மூளைக்கு மிக நெருக்கமானவை நமது நாவில் ஒன்பதாயிரம் சுவை மொட்டுக்கள் உள்ளன. நம் கண்களால் நாம் காணும் காட்சி தலைகீழாக பதிவாகி நமது மூளையில் நேராக நிமிர்த்தப்பட்டு நம் மனத்திரையில் பதிவாகின்றன. இத்தனை செயலும் வெறும் கால்நொடி பொழுதில்Ð நமது மூளையை மனித இயந்திரத்தின் தலைமை மெக்கானிக் என்று கவிஞர் கண்ணதாசனும் மனித இயக்கத்தின் தலைமை செயலகம் என்று எழுத்தாளர் சுஜாதாவும் கூறியுள்ளனர். மனித மூளையை ஆராய்ச்சி செய்தவர்கள் கூறும் முடிவு என்ன தெரியுமா? நமது மூளையின் திறன் அளவிட முடியாதது.
  2009 ஆண்டின் மே மாதத்தில் ஒரு நாள் எனது நண்பர்களின் வருகைக்காக எனது இல்லத்தில் காத்திருந்தேன். அந்த நேரம் தொலைபேசியில் ஓர் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் எனது நண்பர். அவர் கூறிய தகவல் என்னவென்றால்? என் இல்லத்துக்கு அருகே உள்ள இரயில் நிலையத்தில் அவருடைய நண்பர் இரயிலில் சிக்கி இறந்துவிட்டதாகவும், அவர் உடலை பெறுவதற்கு என்னை உதவுமாறு கேட்டுக் கொண்டார். நானும் விரைந்து இரயில் நிலையம் சென்று மனித தலைகளை விலக்கி பார்த்தபொழுது அங்கு நான் கண்ட காட்சி மிகவும் கோரமானது. உடலின் பாகங்கள் சிதறிய நிலையிலும் பாதிபாதியாய் உடலும் சிதைந்து கிடந்தது.
  மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு இறந்தவரின் குடும்பவசம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இது ஒரு சம்பவம். பரவலாக செய்தித்தாளில் இதுபோன்ற சம்பவங்களை நாம் படித்திருப்போம். ஆனால் நடந்த இந்த சம்பவம் ஆராய்ச்சிக்குரியது. இறந்தவருக்கு வயது 32. திருமணமாகி இரண்டு குழந்தைகள். அவரின் பெற்றோர்கள் மற்றும் ஒரு இளைய சகோதரனும் உள்ளனர். இறந்தவரைப் பற்றி அவரது அலுவலகத்தில் விசாரித்தபோது நல்ல ஊழியர் என்றும் நல்ல விதமாக எல்லோருடனும் பழகுபவர் என்றும் கூறினர். அவர் நட்பு வட்டாரங்களும் அவரை நல்ல மனிதர் என்றே கூறினர். எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்தவர் சிந்தனை செய்யாமல் சிறிய கெட்ட பழக்கத்துக்கு இடம் கொடுத்ததால் இன்று உயிரை இழந்துவிட்டார். இவருடைய 29வது வயதில் (இறப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னால்) இவருக்கு தெரிய வந்தது. ஆரம்ப காலத்தில் பொழுதுபோக்காக தொடங்கிய இந்தப் பழக்கம், பிறகு ஒரு நாளில் 10ல் இருந்து 15 பொட்டலங்கள் மெல்லும் வரை அதிகமாகி உள்ளது. குறிப்பாக விடலைப் பருவத்தில் இதுபோன்ற பழக்கங்கள் பழகிக் கொள்ளப்படும். அந்த வயதைக் கடந்த பின்பும் இவர் இதுபோன்ற பழக்கங்களுக்கு அடிமையானது. ஆச்சர்யமும், வேதனையும் அளிக்கிறது. எப்பொழுதும் தன்னுடன் 10 பொட்டலங்கள் வரை வைத்திருப்பாராம். இவர் வேலை பார்த்த அலுவலகத்தில் பணத்தை கையாளும் பொறுப்பு இவர் வசம் வந்துள்ளது.
  அந்தப் பணியை நேர்மையாகவும், திறம்படவும் இவர் செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இவர் இறக்கும் இரண்டு நாட்கள் முன்பாக அலுவலக பணம் பத்தாயிரம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்ற தகவல் குறிப்பு இல்லாததால் இவர் சற்று குழப்பமான மனநிலையில் இருந்திருக்கிறார். பிறகு பணம் கொடுத்தவர்களிடம் விசாரிக்கப்பட்டு கணக்கு சரி செய்யப்பட்டது. இவர் குழப்பமும் தீர்ந்துவிட்டது. இதுபோன்ற சம்பவம் நடந்தது அவர் கணிகாலத்தில் அதுவே முதல் முறை. காரணம் லாகிரி பாக்கு வகைகள் நரம்பு மண்டலத்தின் நுட்பமான நரம்புகளை பலவீனப்படுத்துவதால், கோபம், பதட்டம், நினைவாற்றல் இழப்புகள் நிகழ்கின்றன. இவரும் இந்த நிகழ்வுகளுக்கு உட்பட்டு இருக்கிறார். இவர் இறந்த நாளான அன்று காலை இவர் மெல்லும் பாக்கு பொட்டலம் ஒன்று கூட இவரிடம் இல்லை. அதற்கு முதல் நாள் அலுவலகத்தில் பணி நிமித்தமாக வெகு நேரம் இருந்ததால் கைவசம் இருந்த பாக்கு பொட்டலங்கள் தீர்ந்துவிட்டன. இந்நிலையில் இவரும் வழக்கம்போல் அலுவலகம் கிளம்பிவிட்டார். இவர் வசிக்கும் இடத்திலிருந்து ரயிலில் அவர் அலுவலகம் செல்ல 35 நிமிடங்கள் ஆகும். நம் மனம் ஒரு கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால் அதை விட்டு நம்மால் இயங்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதனால் வரும் கேடுகளையும், இழப்புகளையும் நம் மனம் உணர்வதில்லை என்பதும் உண்மை. இங்கே இவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ரயிலில் அலுவலகம் சென்று கொண்டிருந்த இவர் பத்தே நிமிடத்தில் வேறு ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி, ரயில் நிலையத்தை விட்டு வெளியில் வந்து அவர் மெல்லும் லாகிரி பாக்கு வகையினை வாங்கி ஒரு பொட்டலம் மென்று கொண்டு அலுவலகம் செல்ல ரயில் நிலையம் நோக்கி நடந்து கொண்டிருந்த பொழுது மீண்டும் இரண்டாவது பாக்கு பொட்டலத்தை மெல்வதற்காக ரயில் வரும் தண்டவாளத்தின் மிக அருகாமையில் நின்று பிரித்துக் கொண்டிருந்த சமயம் விரைவு ரயில் மோதி உடல் பாகங்கள் சிதறி இறந்தார். தண்டவாளத்தில் ரயில் வருவதையும், அதன் ஒலியையும் சுற்றி இருந்த மக்களின் கூச்சலையும் அவரால் அந்த நிமிடத்தில் உணர முடியவில்லை. அதனால் அதுவே அவர் வாழ்க்கையின் இறுதியான நிமிடமாகியது.
  நீண்ட நேரம் தாகத்தால் தவிக்கும் மனிதனுக்கு தண்ணீர் கிடைத்தால் அந்த நேரத்தில் இந்த உலகத்தை விட தண்ணீர்தான் பெரிதாக தெரியும். சற்று கூடுதலாகவே நீர் அருந்துவார். இங்கே இவரின் மனமும் மூளையும், அந்த லாகிரி பாக்கு துகள்களுக்கு ஏங்கியுள்ளது. அது கிடைத்ததும், அந்த ருசியில் இவரது மனமும், மூளையும் சற்று மயக்கமடைந்துள்ளது (மதி மயக்கம்). இதெல்லாம் விதி சார் என்று மிக எளிதாக கூறி விடலாம். ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த விதி கூட சில சமயம் நம் மதியின் மூலமாகவே வேலை செய்கிறது. அவர் வாழ்க்கையில் அந்த 35 நிமிடங்களைக் கடந்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார். அவர் குடும்பமும் ஆதரவற்றதாகி இருக்காது. அவருக்குக் கண்கள் நன்றாகவே தெரிந்தன. அவருடைய காதுகளும் நன்றாகவே ஒலிகளைக் கேட்டன. ஆனால் இந்த உறுப்புகளை இயக்கும் மனமும், மூளையும் மரத்துப் போயின. அதுவும் ஒரு சில நொடிகளேÐ இதற்கு காரணம் தவறான பழக்கங்கள் விலை மதிப்பில்லாத இந்த மனித வாழ்க்கையை வெறும் 100 கிராம் அளவு கூட இல்லாத பாக்கு துகள்கள் மதிப்பில்லாமல் செய்துவிட்டதே?
  வளர்ச்சிக்கு வானமே எல்லை என்று செல்ல வேண்டிய நம் வாழ்வு. இதுபோன்றதவறான பதிவுகளால் மண்ணை நோக்கி செல்லும் என்பதற்கு இந்த சம்பவமே ஓர் சான்று!
  தீய பழக்கமும், தீய ஒழுக்கமும் முதலில் விருந்தாளியாக வரும்.
  பிறகு நண்பனாக மாறும்.
  அடுத்து எஜமானாகி கட்டளையிடும்.
  இறுதியில் நம் தலையில் அமர்ந்து சைத்தானாகி மாறி நம் உயிரைக் குடிக்கும்.
  – ஓர் மகான்
  மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னர் கசக்கும் பின்னர் இனிக்கும்.

  ஸ்டீவ் ஜாப்ஸ்

  1972ம் ஆண்டு ஒரேகோன்-ல் உள்ள ரீட் கல்லூரியில் சேர்ந்து ஒரு செமஸ்டர் முடிந்த நிலையில் கல்வியை நிறுத்திக் கொண்டார். கல்லூரி டிராப் அவுட்களால் கூட ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தையே எழுப்ப முடியும் என்பதற்கு உதாரணமாக கூறுமளவிற்கு விஸ்வரூப வெற்றியடைந்தது எப்படி?
  ஸ்டீவ்வின் விஸ்வரூப வளர்ச்சிக்கு விதை போட்டது அவருக்குக் கிடைத்த நட்பு தான். ஸ்டீவ்வின் இளம்வயதில் எலெக்ட்ரானிக்ஸ் தான் உயிர் எனச் சுற்றிக்கொண்டிருந்தபோது இன்டெல் நிறுவனம் உலகின் முதல் மைக்ரோ பிராஸஸரை (Micro Processor 8080) வெகு குறைவான விலையில் வெளியிட்டது. இத்தகைய பிராஸஸர் தான் Personal Computer எனப்படும் தனிக் கணினி உருவாக்குவதற்கான அடிக்கல்லாக இருந்தது. எலெக்ட்ரானிக்ஸ் சாக்யூட்களில் பொழுதுபோக்காக விளையாடிக் கொண்டிருந்த பல தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு இன்டெல்லின் இந்த விலை குறைந்த மைக்ரோபிராஸஸர் மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது. 70-களில் கணினி என்றால் அது பாதுகாப்புத்துறை, பல்கலைக்கழகங்கள், பெரிய நிறுவனங்கள் போன்றவற்றில் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தபோது வெளியிடப்பட்ட இந்த பிராஸஸர் புதிய புரட்சியை ஏற்படுத்தியது.
  ஒருநாள் பில் பெர்ணான்டஸ் என்ற நண்பன், கீரிம் சோடா கம்ப்யூட்டர் என்று கம்ப்யூட்டர் மாதிரி ஒன்றை உருவாக்கியிருப்பதை ஸ்டீவ்விடம் கூறினான். நானும் என்னுடைய நண்பனும் சேர்ந்து இந்த கம்ப்யூட்டரை செய்திருக்கிறோம். கண்டிப்பாக நீ பார்க்க வேண்டும் என்று அழைத்துச் சென்றார். அந்த சந்திப்பு தான் ஸ்டீவ்வின் வாழ்வை மட்டுமல்ல நம் உலகையே மாற்றிய சந்திப்பு ஸ்டீவ் வாஸ்னிக்குடன் (Steve Wozniak). சில நேரங்களில் வாஸ் (Woz) என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஸ்டீவ் வாஸ்னிக், ஸ்டீவ்வை விட 4 வயது மூத்தவர். பகுதி நேரமாக HP கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருந்தார். அட்டாரி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது தான் செய்திருந்த எலெக்ட்ரானிக்ஸ் பிராஜக்ட்களை விட வாஸ் (Woz) செய்திருந்தது மிகவும் அருமையாக இருந்ததை உணர்ந்தார் ஸ்டீவ். மேலும் வாஸ்னிக் எலெக்ட்ரானிக்ஸ் சர்க்யூட் செய்து பார்க்க உதவும் பிராட்போர்டு தயாரிப்பதில் கில்லாடி என்பதையும் ஸ்டீவ் புரிந்துகொண்டார்.
  எலெக்ட்ரானிக்ஸ்-ல் ஆர்வம், பட்டாம் பூச்சியைத் துரத்திச் செல்வதில் விருப்பம், பீட்டில்ஸ் இசையை விட பாப் டைலன் இசைதான் மேம்பட்டது என்பதில் கருத்தொற்றுமை என அவர்களிருவரின் விருப்பங்களும் ஒத்திருந்தது விதியின் விருப்பம்தான்.
  ஒருநாள் மங்கிய மாலை வேளையில் இருவரும் புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது ஒன்றில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரம் இவர்களின் மனதில் எண்ணச் சிதறல்களை ஏற்படுத்தியது.
  முதலில் 800-ல் தொடங்கும் டோல் ப்ஃரீ நம்பருக்குப் போன் செய்யுங்கள். பின்னர் ஒரு அட்டைப் பெட்டியில் விசிலடித்து போன் லைனைக் கைப்பற்றி எந்த நம்பருக்கு வேண்டுமானாலும் பேசலாம் என்று போட்டிருப்பதை பார்த்தனர்.
  இதை உடனே செய்து பார்க்க வேண்டும் என்ற உந்துதல் இருவருக்குமே ஏற்பட்டது. உடனே செயலில் இறங்கினர் இருவரும்.
  கால் செய்த கையோடு கிளம்பி வந்தவர்களுக்கு உதித்தது ஒரு ஐடியா. நாமே இப்படி ஒரு பாக்ஸை கண்டுபிடித்தால் என்ன என்று தோன்றிய எண்ணத்தை செயலாக்க முனைந்தனர். செயல்படுத்தியும் விட்டனர். மிக நேர்த்தியான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட அந்த அவுட்கோயிங் கால் ப்ஃரீ கருவிக்கு புளூ பாக்ஸ் (Blue Box) என்றும் பெயரிட்டனர்.
  இவர்கள் கண்டுபிடித்த இந்த கருவி மூலம் போலீஸ் முதல் போப் வரை கால்போட்டு கடுப்படித்தார்கள். திடீரென ஸ்டீவ்விற்கு ஒரு எண்ணம் தோன்றியது. இந்த பாக்ஸை விலைக்கு விற்றால் என்ன?
  150 டாலருக்கு விற்க ஆரம்பித்த இந்த பாக்ஸ் செய்து முடிக்க ஆன அடக்க விலை 40 டாலர் தான். சில நேரங்களில் 300, 400 டாலர் வரை கூட விலைபோனது இந்த பாக்ஸ். இப்படி ஆரம்பித்த விலைதான் இன்றும் இவர்களின் கருவிகளுக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிகப்படியான விலை.
  இவர்கள் இப்படி திருட்டுத்தனமாக தயாரித்த புரூ பாக்ஸ், ஏடி ஆன் டி போன் கம்பெனிக்கு மிகப்பெரிய நட்டத்தை ஏற்படுத்தியது.
  இன்று எல்லோரும் நினைப்பது போல் ஆப்பிள் புதிதாக எதையும் கண்டு பிடிப்பதில்லை என்றாலும் மற்றவர்களின் பொருளைக்காட்டிலும் எல்லாவிதத்திலும் நேர்த்தியும், சிறப்பும் இருக்கும் என்பதற்கு இந்த புளூ பாக்ஸ்ஸின் வடிவமும், செயல்படும் விதமும் சிறப்பானதாகவே இருந்தது. அதேபோல் அடக்க விலையை விட அதிகமான விலைக்கு விற்பதும் ஆம்பிளின் சாமார்த்தியம் தான். இதற்கிடையில் அட்டாரியில் வேலை செய்து கொண்டிருந்த ஸ்டீவ்விடம் அதன் நிறுவனர் ஒரு புதிய வீடியோ கேம் தயார்செய்து தர வேண்டும். எப்படி இருக்க வேண்டும், என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று கூறியதுடன் இதை 50 சிப்களுக்குள் முடிக்க வேண்டும் என்றார். மேலும் 50 சிப்களுக்கும் குறைவாக இருக்கும் ஒவ்வொரு சிப்புக்கும் 1000 டாலர் அதிகமாகத் தருகிறேன் என்றார்.
  இதை வாஸிடம் கூறி, கிடைக்கும் 1000 டாலரை சரிபாதியாக எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியதுடன் வாஸுடன் இணைந்து புதிய கேமை தயாரிக்கத் தொடங்கினார். நான்கே நாட்களில் 45 சிப்புகளில் செய்து முடித்து தன் சாமார்த்தியத்தை நிரூபித்தார்கள்.
  இத்தகைய கண்டுபிடிப்புகள் அவர்களுக்கு பெரிய தன்னம்பிக்கையையும், புதிது புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
  இந்நிலையில் 1975ல் Popular Electronics என்னும் பிரபலமான பத்திரிக்கையில் ஜனவரி மாத இதழில் ஒரு கம்யூட்டரை அட்டைப் படமாக வெளியிட்டிருந்தனர். அதற்குப் பெயர் அல்பேர். பல அட்டைப் படங்கள் வரலாற்றில் பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியதைப்போல் இந்த அட்டைப் படமும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. கம்ப்யூட்டருக்கு புரோகிராம் எழுதுவதே அந்த மாற்றம்.
  அப்படி புரோகிராம் எழுதுவதற்காக ஒரு கம்ப்யூட்டர் கிளப் ஏற்படுத்தப்பட்டு, அதற்கு ஹோம் புரூ (Home Brew) கம்ப்யூட்டர் கிளப் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த கிளப்பின் முக்கிய வேலையே இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுடைய புரோகிராம் அறிவை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்வதுதான்.
  இந்த ஹோம் புரூ கூட்டத்திற்கு வாஸ்னிக்கை, அலென் பாம் என்ற நண்பர் அழைத்துச் சென்றார். தொடர்ச்சியாக அந்தக் கூட்டத்திற்கு போகப்போக எலெக்ட்ரானிக்ஸ் கில்லியான வாஸ் எத்தனையோ செய்திருக்கிறோம், இதைச் செய்ய மாட்டோமா என்று எண்ணினார்.
  இவர்கள் செய்திருப்பதைவிட மேம்பட்ட சிறந்த ஒரு கம்ப்யூட்டரை செய்ய வேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டு செயலில் இறங்கினார் வாஸ்.
  வாஸ் செய்திருந்த கம்ப்யூட்டரில் பல வசதிகளைக் கேட்டு அவற்றையும் இணைத்து எல்லா விதத்திலும் சிறப்பாக உருவாக்கியதும், அத்தனை மாற்றங்களையும் செய்து முடிக்கத் தேவையான பாகங்கள் கிடைக்காத பட்சத்தில் ஸ்டீவ் தன்னுடைய திறமையால் அவற்றையெல்லாம் பெற்றும் கொடுத்தார்.
  இப்படியே நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக உருவான கம்ப்யூட்டர் அதுவரை புழக்கத்தில் இருந்த கம்ப்யூட்டர்களில் அமைக்கப்பட்டிருந்த ஸ்விட்ச் லைட் போன்றவற்றையெல்லாம் மாற்றிவிட்டு கீ போர்டும், ஸ்கிரீனும் கொண்ட உலகின் முதல் கம்ப்யூட்டரை செய்து முடித்தார் வாஸ்.
  இப்படி வாஸ் உருவாக்கிய முதல் தனிக் கணினியை (Personal Computer) ஹோம் புரூ கிளப் மெம்பர்களுக்கு டெமோ காட்ட எடுத்துச் சென்றனர் இருவரும்.
  சிலிக்கன் பள்ளத்தாக்கின் கணினி ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைக் கண்ட ஸ்டீவ் புளூபாக்ஸைப் போல் இதற்கும் ஒரு விலை வைத்து விற்றால் என்ன என்று கேட்டார்.
  காசு பார்க்க முடியும் என்பதில் வாஸிற்கு சிறிதுகூட நம்பிக்கை இல்லை. எனினும், ஸ்டீவ்வின் வற்புறுத்தலுக்கு இணங்கினார் வாஸ். கம்ப்யூட்டர் தயாரிக்க இடமும், மூலப்பொருள்கள் வாங்க பணமும் தேவைப்பட்டது.
  ஸ்டீவ் வீட்டின் கார் நிறுத்தும் இடம் கணினி தயாரிக்கும் இடமாயிற்று. இருவரும் சேர்ந்து 1000 டாலர் முதலீடு செய்ய முடிவு செய்தனர். ஆளுக்கு 500 டாலர் என்று முடிவானது.
  வாஸ் தன்னுடைய முதலீடான 500 டாலருக்கு தன்னுடைய HP கால்குலேட்டரை 500 டாலருக்கு விற்றார். ஸ்டீவ் தன்னுடைய வோல்க்ஸ் வேகன் பஸ்ஸை 1000 டாலருக்கு விற்றார். எனினும் அவருக்குக் கிடைத்ததோ 500 டாலர் தான்.
  இரண்டு பேரும் சேர்ந்து 1000 டாலர் முதலீடு செய்தனர். கம்ப்யூட்டர் பாகங்களுக்கு 220 டாலரும், கம்ப்யூட்டர் போர்டை கட்டி முடிக்க உதவிய ஸ்டீவ்வின் நண்பனுக்கும், சகோதரிக்கும் போர்ட் ஒன்றுக்கு 1 டாலர் என்ற அளவில் தரப்பட்டது.
  இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டரை ஹோம்புரூ கிளப்பில் விற்பனைக்கு வைத்தார். அங்கு கூட்டங்களுக்கு வந்து போய்க்கொண்டிருந்த பவுல் டெரலை (Paul Terrel) இந்தக் கம்ப்யூட்டர்கள் கவர்ந்தன.
  ஏற்கனவே டெரல் பைட் ஷாப் என்னும் கடையைத் திறக்க முடிவு செய்திருந்தார். அவருக்கு ஸ்டீவ் வாஸ் தயாரித்த பொருளுக்கு நல்ல கிராக்கி இருக்கும் என்று தோன்றியது. ஸ்டீவ்விடம் தன்னை வந்து சந்திக்குமாறு கூறிவிட்டுச் சென்றார் டெரல்.
  அடுத்த நாளே சென்று பார்த்த ஸ்டீவ்விடம் முழுமையான கம்ப்யூட்டராக கிடைக்குமெனில் 100 கம்ப்யூட்டர்களை ஒவ்வொன்றுக்கும் 500 டாலர் கொடுத்து வாங்கிக் கொள்வதாக கூறினார்.
  ஒரு கம்ப்யூட்டரின் அடக்கவிலை 220 டாலர்தான். 500 டாலர் கிடைத்தால் விடுவாரா ஸ்டீவ். உடனடியாக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு ஆர்டர் செய்யப்பட்டது.
  100 கம்ப்யூட்டர் தயாரிக்க 22,000 டாலர் தேவைப்பட்டது. இவர்களிடம் இருந்த 1000 டாலரும் முதலீடு செய்யப்பட்டுவிட்டது. தற்போது பார்ட்ஸ் வாங்கினால் மட்டுமே கம்ப்யூட்டர் உருவாக்க முடியும். சிலிக்கன் வேலி எங்கும் நடந்தார் ஸ்டீவ். இறுதியில் ஒரு கடையைப் பிடித்தார். பவுல் டெரலிடம் ஆர்டர் பெற்றிருப்பதையே கூறி கடன் கேட்டார். 30 நாட்கள் தவணையில் கடனைப் பெற்றுக்கொண்டு கம்ப்யூட்டர் தயாரிப்பதற்குத் தேவையான பார்ட்ஸை வாங்கிக்கொண்டு வந்தார்.
  ஒருவழியாக கம்ப்யூட்டரை தயாரித்து அதை பவுலிடம் காட்டியபோது கம்ப்யூட்டர் எங்கே என்று கேட்காத குறையாக பெரிய ஏமாற்றத்தை பெற்றார் பவுல்.
  பவுல் எதிர்பார்த்தபடி அமையவில்லை இவர்கள் உருவாக்கிய கம்ப்யூட்டர். ஆனாலும் இவர்களிடம் அவர் சொன்னபடி ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் (கம்ப்யூட்டர் என்பதைவிட சர்க்யூட் போர்டு என்றே சொல்லலாம். அப்படித்தான் இருந்தது) 500 டாலர் என்று கொடுத்து மொத்த கான்ட்ராக்டைப் பெற்றார் பவுல்.
  ஒரு கம்பெனி ஆரம்பித்து அதிலிருந்து கம்ப்யூட்டரையும் தயாரித்து விற்றுவிட்டோம். கம்பெனிக்கு பெயர் வேண்டாமா என்று யோசனையில் ஆழ்ந்தார்கள் ஸ்டீவ்கள்.
  அப்போது ஸ்டீவ்வின் நினைவில் வந்து விழுந்தது ஆப்பிள் தோட்டம். ஓரிகன் (Oregan) என்னுமிடத்தில் ஆப்பிள் தோட்டங்களில் தன்னுடைய காதலியுடன் பொழுதைக் கழித்தது நினைவுக்கு வர ஆப்பிள் என பெயர் வைத்தால் என்ன என்றார்?
  ஆப்பிள் ஒரு சிலிர்ப்பூட்டும் பெயர் அல்ல. மேலும் ஏற்கனவே ‘ஆப்பிள் ரெக்கார்ட்’ என்று ஒரு கம்பெனி இருப்பதையும் சுட்டிக்காட்டினார் வாஸ்.
  ஸ்டீவ்வின் பிறவிக்குணமான பிடிவாதம் மீண்டும் ஒருமுறை தலைதூக்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது, தனது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஆப்பிள் தோட்டத்திற்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அவருடைய சந்தோசம், துக்கம் அனைத்தையும் அந்தத் தோட்டம் பார்த்திருக்கிறது. பிரென்னன் என்ற பெண்ணுடன் இவருக்குக் கல்லூரியில் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் காதலிக்கும் இடமும் இந்த தோட்டம்தான். அந்த வசந்த காலத்தை நினைவு கூறும் விதமாக, தனது நிறுவனத்திற்கு ‘ஆப்பிள்’ என்று பெயர் சூட்ட நினைத்தார்.
  தனக்கு மிகவும் பிடித்த ஆப்பிள் கணினியின் பெயரைக் கண்டிப்பாக வைத்தே தீரவேண்டும் என்று விரும்பினார். தன் நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார். மாலை 5 மணிக்குள் ஒரு நல்ல பெயரைத் தராவிட்டால் தன் கம்பெனிக்குத் தன் விருப்பப் பழமான ஆப்பிளின் பெயரையே வைத்துவிட வேண்டும் என்றும் மிரட்டினார். இவரது மிரட்டலுக்குப் பயந்து ஒருவரும் பெயர் தராததால் ஆப்பிள் கம்ப்யூட்டர் (Apple Computer) உருவானது. ஆப்பிள் நிறுவனம் ஆரம்பித்த பின்னரும் அந்தத் தோட்டத்திற்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் ஜாப்ஸ்.
  1976 முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1ல் முறைப்படி சம உரிமைப் பேப்பரில் கையொப்பமிட்டு ஆப்பிள் கம்பெனியாக பதிவு செய்யப்பட்டது. இந்தக் கோடைகாலத்தில் விற்பனைக்கு வந்த இந்தக் கணினிகள் பொறியாளர்களுக்கும், பொழுதுபோக்கிற்காக உபயோகிப்பவர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. வாஸ் வடிவமைக்க, சந்தைப் படுத்துதலை ஜாப்ஸ் பார்த்துக் கொண்டார்.
  இவர்கள் உருவாக்கியது எல்லா வகையிலும் மேம்பட்ட கணினியாக இல்லை. மேலும் இதை செம்மைப்படுத்தி புதிய உத்திகளைப் புகுத்தி வெளியிட வேண்டும் என்று எண்ணிய ஸ்டீவ்விற்கு இருந்த ஒரே தடை முதலீடு தான். எப்படியாவது தன்னுடைய ஆப்பிள் நிறுவனத்தை விரிவுபடுத்த முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்த ஸ்டீவ்வின் வலையில் விழுந்தார்கள் மூவர்.
  எப்படி முதலீட்டை பெற்று ஆப்பிளை விரிவுபடுத்தினார். முதலீட்டை அளித்த ஆப்பிள் என்ற விதைக்கு நீரையும், உரத்தையும் போட்டு விருட்சமாக்கிய அந்த மூவர் யார்? காத்திருங்கள்…

  தாயுமானவர்

  கடந்த இதழில் விலங்கியலில் அவற்றின் நடத்தை, அசையும் ஜீவராசிகளின் மனது குறித்த படிப்பான எதாலஜி பற்றி பார்த்தோம். இனி ஆரினித்தாலஜி என்றால் என்னவென்று பார்ப்போம்…
  ஆரினித்தாலஜி என்னும் பறவை இன அறிவியலாகட்டும், ‘பேர்டிங்’ என்னும் விருப்பப் பழக்கமாய் பறவைகளைப் பற்றித் தெரிந்து மகிழும் வாழ்வியல் பிரிவாகட்டும் பொறுமையின் சிகரமாக இருப்பவர்களுக்கு உகந்ததாகிப் போகின்றது. சில நேரங்களில் என்றும் பரபரப்பாக இருக்கும் நம் மனநிலைக்கு பண்பை மென்மையாக்கும் ‘பேர்டிங்’ சரிப்படும் என நினைத்து அதில் மூழ்கி லயிப்பதும் உண்டு. நிஜமே! நான்கு மணி நேரங்கள் கூட ஒரே பறவையைத் தேடிச் செலவிடும் நிலை பறவைகளைக் காண விரும்புபவர்களுக்குப் பெரிய விஷயம் அல்ல. இதை ஒரு வகை தியானம் என்றும் சொல்லலாம்.
  தாய்மார்கள் ‘குழந்தை நல்லா வளர்கின்றதா’? என்று மருத்துவர் ‘ஸ்கேன்’ பரிசோதனை செய்து சொன்னார் என்று நெகிழ்ந்து போவதைப்போல, முட்டைக்குள் கரு வளர்வதை கவனமாக பார்த்து தெரிந்து கொள்வதை, ‘இஹய்க்ப்ண்ய்ஞ்’ என்று சொல்கின்றோம். இரு இரத்தக் குழாய்கள் புடை சூழ மெதுவாக படர்ந்து வேர் போன்ற நிழலை ஒரு மெழுகுவர்த்தி போன்ற ஒளி நிழலிலில் காண்போமேயானால் அதனில் கரு உயிராகியிருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
  முட்டையின் அகலமான பகுதியில் ஒரு காற்றறை இருக்கின்றது. ஒரு நாள் குழந்தைக்கு இதை காட்டணும்! குஞ்சு உருவாகையில் அதிலுள்ள காற்றை முட்டை உடைப்பதற்கு முன்பு சுவாசிக்க உபயோகித்துக் கொள்கின்றது. மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான் என்கின்ற பாடலே ஞாபகம் வருகின்றது. இதுவே கடவுளின் திட்டமிடல். இன்குபேட்டர் சாதனத்தை நண்பர் இயங்கிக் காட்டினார். வண்டலூர் பக்கத்திலேயே இருக்கும் ஏதோ ஒரு சிறு அமெச்சூர் மெக்கானிக் பொறியாளரை வைத்து முற்றிலும் யோசனை சொல்லிலிச் சொல்லி தயாரித்ததாம் இந்த “இன்குபேட்டர்”.
  இம்பிரன்டிங்கால் தாயாகிப் போயிருந்த நமது தாயுமானவரின் கருவறை, இஃது என்றால் மிகையாகாது. முட்டைகள் இவ்வறைக்குள், இருக்கின்ற தாங்கிப்பிடிக்கின்ற அமைப்பில் அழகாக தருபூசணிப்பழம் போன்று அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தானியங்கி இவ்வமைப்பு மேலும் கீழுமாகச் சுழன்று கொண்டு இருந்தது. அப்பொழுது முட்டைகள் உரசிக்கொள்ளாமல் இருக்கத் துணி சுற்றியிருந்தார்கள். அம்மா கருவுற்றிருக்கையில் வயிற்றில் நீர் மெத்தையில் கரு சுழல்வது வேறு வேறு உறுப்புகள் உருவாகையில் அவற்றின் மீது புவியீர்ப்பு விசை சரியான அளவில் செயல்படுவதற்கும் அத்தகைய சத்துப்பரிமாற்றம் சரியாக நடைபெறுவதற்கும் குஞ்சின் வளர்ச்சி ஒரே சீராக இருப்பதற்குமாகச் சேர்த்து இந்தத் தாலாட்டும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
  மனதும் கூட ஒரே மாதிரியாக இருப்பின் உலகின் சுவர்களில் சரியாக வளராமல் கெட்டியாக ஒட்டிக் கொள்ளாதிருக்க வேண்டுமெனில் தத்துவம் என்கின்ற தாலாட்டுதலைக் கொண்டு தந்துகிகள் சுவற்றோடு ஒட்டுதலைத் தவிர்த்து பற்றற்ற தன்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் இதைப் பார்க்கையில் தோன்றியது.
  பரபரப்பான வாழ்விலிலிருந்து பறவைகள் சில நொடியேனும் நம்மை சிந்திக்க வைக்கின்றன, சிறகடிக்கக் கற்றுக் கொடுக்கின்றன. கணினியும் மின்சாரமும் உலவும் இடங்களில் கதவிடுக்கில் துண்டிக்கப்பட்ட பல்லி வால் துள்ளுவது போல உயிரற்ற பொருட்களை உயிரோட்டமானவை என்று நம்பி நம்மை நாம் மயக்கமூட்டிக் கொள்கின்ற வாழ்விலிருந்து இயந்திர உலகில் கூட இயற்கை மிளிர வாழ்கின்ற தாயுமானவரின் தனித்துவத்தோடு கொஞ்சம் சமரசம் செய்து கொண்டு விழிப்பார்வையைக் கொஞ்சம் சமநிலைக்குத் திருப்பிக்கொண்டு திரும்பினேன்! உள நிறைவோடு!