Home » Articles » சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள்

 
சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள்


மோகன்குமார் இரா
Author:

44. பன்முக வெற்றிக்கு பாதைபோடும் படைப்பாற்றல்

சாதனைகளை சாத்தியமாக்கி சரித்திரத்தில் முத்திரை பதித்த வரலாற்று நாயகர்களின் வரலாற்றை புரட்டி பார்த்தால், அவர்கள் வெற்றிக்கு அடிப்படையாக இரண்டு காரணிகள் காரணமாக இருந்துள்ளதை காணலாம்.

ஒன்று : இடர் ஏற்பு
மற்றொன்று : படைப்பாற்றல்

ரோஜர்வோன் ஓயெச் கூற்றுப்படி இறைவன் படைப்பால் அனைத்து மனிதர்களும் சிறந்த படைப்பாற்றலுக்கு சொந்தமானவர்களே. மழலை பருவத்தில் திறந்த மனதோடு இயல்பாகவே நம்மில் இருக்கும் படைப்புதிறனை முழுமையாக பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியக்கூறுகளை, விடைகளை, வழிமுறைகளை படைக்கும், சிந்திக்கும் குழந்தைகள், வளர்ந்த பின் தங்கள் தனித்தன்மையான படைப்பாற்றலை இழந்து தாங்கள் அறிந்த, விரும்பும், கருத்துக்களிலேயே திடமாக (அடமாக) நின்று முடிவுகளை எடுக்கின்றனர். விளைவு சாதாரண செயல்திறன், பலன்கள் மற்றும் விளைவுகள். இவை நம் வாழ்வை அன்றாடங்காய்ச்சி வாழ்வாக மாற்றிவிடுகின்றது. நம் வாழ்நாளில், நம் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்க முடியாமல் போய் விடுகின்றது.

ஆகவே, சாதிக்க வேண்டுமானால், சரித்திரம் படைக்க வேண்டுமானால், நம்மில் இயற்கையாகவே காணப்படும் படைப்புத்திறனை, மாற்றியோசிக்கும் திறனை மெருகேற்றியே ஆக வேண்டும்.

படைப்புத்திறனை வளர்ப்பதனால் நம் வாழ்வில் விளையும் நன்மைகள் எண்ணிலடங்கா. படைப்பாற்றல் நம் கற்பனாசக்தியை வளப்படுத்துகிறது. பிரச்சனைகளுக்கு விரைவான, தரமான விடைகளை, மாற்றுக்கருத்துகளை வழங்குகின்றது. வாழ்வில், தொழிலிலில் வெற்றிபெற தேவையான புதுமையான யுக்திகள், வழிமுறைகள், தொழில்நுட்பம் மற்றும் கருத்துகளை தருகின்றது. உறவுகளை மேம்படுத்துவது, சமயோஜித அறிவை வளப்படுத்துவது, ஊக்குவிக்கும் திறனை அதிகரிப்பது, ஏற்றம்தரும் மாற்றத்திற்கு வழிவகுப்பது என எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்தி தருகின்றது படைப்புத்திறன்.

இயல்பான படைப்பாற்றல் எங்கே போனது ?

சந்தோஷ சாதனை வாழ்விற்கு அடிப்படையான படைப்பாற்றல் என்பது மனிதனின் இயல்புகளில் ஒன்று. பிறப்பின்போது படைப்பாற்றலோடு பிறக்கும் குழந்தை, தொடர்ந்து படைப்புத்திறனோடும், ஊக்கத்தோடும், ஏற்றத்தோடும் வாழ்வதோ (அல்லது) சாதாரணமாக வாழ்வதோ, அந்தக் குழந்தையின் வளர்ப்பு முறை மற்றும் வளரும் சூழலை பொறுத்தே அமைகின்றது. தாய் தந்தையரின் வளர்ப்புமுறை, ஆசிரியர்களின் கல்விமுறை, வளரும் சூழல் போன்ற எண்ணற்ற காரணிகள் மூலம் படைப்பாற்றலை இழந்துவிடுவதனாலேயே நம்மில் பலரும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்து வருகிறோம். ஆகவே, நம்முள் மறைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டுவருவோம். வாழ்வை வளமிகுந்த சாதனை பாதையில் திசை திருப்புவோம்.

படைப்பாற்றலை வெளிக்கொண்டுவரும் வழிமுறைகள்

1. கனவு காணுங்கள், கற்பனை செய்யுங்கள். தினமும் உங்கள் கற்பனா சக்தியை வளர்க்க ஒரு பதினைந்து நிமிடமேனும் (உங்களுக்கு உகந்த நேரத்தில்) ஒதுக்குங்கள். கற்பனை குதிரையை தட்டிவிடும்போது எந்தக் கட்டுப்பாடும் இருக்கவேண்டாம். எதைப்பற்றி வேண்டுமானாலும் கற்பனை செய்யுங்கள். எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்யுங்கள். கற்பனை, வானம் எனும் எல்லையை தாண்டி செல்லட்டும், உலகமெனும் கட்டுப்பாட்டை கடந்து போகட்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்கள் படைப்பாற்றல் உறுதியாக ஊக்கம் பெறும்.

2. படைப்பாற்றல் சிறப்படைய வேண்டுமானால் நம்மில், நம் படைப்புத்திறனில் நமக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். நண்பர்களே நாம் ஒவ்வொருவரும் உலகின் எந்த ஒரு சிறப்பான கணினியிடமும் இல்லாத ஒப்பற்ற அறிவாற்றலுக்கு சொந்தக்காரர்கள். நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். “நம்பிக்கையே வாழ்வு’. உங்கள் படைப்புத்திறனில் முழு நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் படைப்பாற்றல் நீங்களே வியக்கும் வண்ணம் சிறந்த படைப்புக்களை உங்களுக்கு நல்குவது நிச்சயம்.

3. தோல்விகளைக் கொண்டாடுங்கள். அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் துறைகளில் இன்று வரை ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு காரணம், சாதனையாளர்களுக்கு அவர்கள் சாகசப்பயணங்களில் ஏற்பட்ட தோல்விகளே. தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் அவர்கள் வெகுண்டெழுந்து, வெற்றியை நோக்கி புறப்பட அவர்களுக்கு உதவியது நேர்மறை மனோபாவமே. சாதனையாளர்களுக்கு சரித்திரம் படைக்க உதவிய ஆயுதம் தோல்வியை வெற்றியாக எண்ண உதவிய நேர்மறை மனோபாவமே. ஆகவே, உங்கள் படைப்பாற்றல் மூலம் கிடைத்த கருத்துக்கள் அல்லது வழிமுறைகள் தோல்வியில் முடியுமானால், சோர்ந்து விடாதீர்கள். அது வெற்றியின் அறிகுறி என அறிந்து மேலும் முயற்சியை தொடருங்கள்.

4. ஓய்வு: உங்கள் படைப்பாற்றல் சிறப்படைய வேண்டுமானால், தேவையான அளவு ஓய்வு நேரத்தை உருவாக்கி, படைப்புப்பணிக்காக ஒதுக்கி வருவது நல்லது. ஓய்வு நேரம் மணித்துளிகளில் இருந்து மாதங்கள் மற்றும் வருடங்களாக கூட இருக்கட்டும். படைப்புக்காக ஒதுக்கும் ஓய்வு நேரத்தை முழுமையாக (கைபேசி, வலைதளம், தொலைக்காட்சிப்பெட்டி போன்றவற்றை அணைத்து வைத்து) பயன்படுத்துவது, படைப்புத்திறனை மேலும் அதிகரிக்க உதவும்.

5. மனிதரோடு இணைந்து வாழுங்கள். ஏனென்றால் மனிதர்களே படைப்பாற்றலுக்குத் தேவையான கருத்துக்கள், அனுபவங்கள், பிரச்சனைகள், கேள்விகள் போன்றவற்றை வழங்குகிறார்கள்.

6. உங்களுக்குள் இருக்கும் குழந்தையை தட்டி எழுப்பிவிடுங்கள். நமக்குள் இருக்கும் குழந்தை மனமே நம் இயல்பான மனம். அதுவே, படைப்புத்திறனின் ஊற்றுக்கண். அந்தக் குழந்தைப் பகுதியை குழந்தைகளோடு விளையாடுவது, குழந்தைபோல் செயல்படுவது, பகல் கனவு காண்பது, இயற்கையோடு ஒன்றி வாழ்வது, மிருகங்கள், மீன்கள், மற்றும் காட்டுப்பகுதிகளை ரசிப்பது போன்ற செயல்கள் மூலம் வெளிக்கொண்டுவர முடியும். அப்படி உங்கள் குழந்தை மனதோடு உறவைபுதுப்பிக்க துவங்குங்கள். சந்தோஷ சாதனை வாழ்வு வருவது நிச்சயம்.

7. பதிவு செய்யுங்கள்: படைப்பாற்றலோடு புதிய பிறவி எடுக்கும், தாங்கள் எப்போது விழிப்புணர்வுடன் கைபேசி, டைரி, குறிப்புப் புத்தகம், கணினி போன்றவற்றின் உதவியுடன், உங்கள் படைப்பு மனம் தரும் அரிய கருத்துக்களை பதிவு செய்யுங்கள். பதிவு செய்வது மட்டுமல்ல நம் படைப்பு மனம் தரும் அரிய கருத்துக்களை அவ்வப்போது செயல்படுத்துவது அதைவிட முக்கியம்.

செயல்படுத்த துவங்கும்போது தான், கருத்துக்களை மேம்படுத்தி மேலும் சிறந்த படைப்புக்களை உருவாக்க முடியும். மட்டுமல்ல, செயல்பாடு மூலம் ஒரு சில படைப்புக்கள் வெற்றி அடையும் போது தான் மீண்டும் மீண்டும் படைப்புத்திறனை அதிகப்படுத்த நமக்கு தேவையான உற்சாகமும், உத்வேகமும் நம்மில் ஊற்றெடுக்கும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2011

பயறு வகைகளின் விலையேற்றம் ஏன்?
மனிதமனம் உருவாக்கும் மனிதவளம்
மாற்றங்கள் உருவாக்கும் வாய்ப்புகள்
இவர் பேரு அழகர்சாமி
ஸ்டீவ் ஜாப்ஸ்
தங்க மோகம்
வாகை சூட வந்தவர் இல.செ.க.
உள்ளத்தோடு உள்ளம்
மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !!
சாதிக்கலாம் வாங்க
வெற்றிக்கான தலைமை பண்பு
சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள்
இலக்கை எட்டுவது எளிது
விருந்தும் விரயமும்
ஆடம்பரம் அழிவைத் தரும்
தாயுமானவர்
கேளுங்கள் கொடுக்கப்படும்