Home » Articles » சாதிக்கலாம் வாங்க

 
சாதிக்கலாம் வாங்க


இரகுநாதன் வெ.ச
Author:

சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவில் தமிழ்நாட்டில் இருந்து அதுவும் கிராமப் புறத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பல போராட்டங்களையும், சோதனைகளையும் கடந்து வெற்றி என்னும் சிகரத்தை அடைந்த இளைஞர்களில் ஒருவரும் 84வது இடத்தைப் பெற்றவருமான திரு. ரகுநாதனுடன் ஒரு சந்திப்பு.
என்னுடைய கனவு மெய்ப்படுவதற்காக நான் கடந்து வந்த பாதை மிகவும் கரடுமுரடானது. M.Sc. Computer Science பாடத்தில் பல்கலைக்கழக அளவில் இரண்டாமிடம் பெற்றேன். இந்த சமயத்தில் தான் எனது கல்லூரி ஆசிரியர் எல்லோரும் என்னை சிவில் சர்வீஸ் தேர்வை எழுத ஊக்குவித்தார்கள்.
சிவில் சர்வீஸ் தேர்வு என்பது கல்லூரித் தேர்வு போன்ற சாதாரணத் தேர்வு அல்ல. கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்து கொண்டேன். அதே நேரத்தில் எந்த ஒரு திட்டமும் இல்லாமல் 15 மணி நேரம், 18 மணி நேரம் என்று படிப்பது நமக்கு உதவாது என்பதைப் புரிந்து கொண்டு திட்டத்தைத் தீட்டினேன். ஒரு நாளைக்கு குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் படித்தால் போதும். அது திட்டமிட்டதாகவும், முறையான பயிற்சியாகவும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி திட்டமிடுதலை மேற்கொண்டேன். ஏனென்றால் சிவில் சர்வீஸ் தேர்வைப் பொறுத்தவரை அந்த விருப்பத்தை மற்றவர் மீது திணிக்க முடியாது. யாரையும் கட்டாயப்படுத்தி இந்தத் தேர்வை எழுத வைக்க முடியாது. ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும், ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் இருந்தால் மட்டுமே, இத்தகைய தேர்வில் வெற்றியைப் பெற முடியும் என்று கூறியவரிடம் “முதல் முயற்சியிலே வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இந்த வெற்றி எளிதாகக் கிடைத்ததா? அல்லது மிகுந்த சிரமத்துக்கிடையில் கிடைத்ததா?’ என்றதற்கு, “ரொம்பவும் சிரமப்பட்டேன். மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. எம்.எஸ்.சி. படித்து முடிக்கும் வரையில் நான் செய்தித்தாள்களைப் படித்ததே கிடையாது. கணினி அறிவியல் துறையைத் தவிர மற்ற துறைகளைப் பற்றிய விஷயங்கள் எதுவுமே தெரியாது. இந்த நேரத்தில் புவியியல் மற்றும் அரசியல் அறிவியலை விருப்பப் பாடங்களாக எடுத்தேன். எல்லாவற்றையுமே புதிதாகப் படித்தேன். இந்த நேரத்தில் என் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், நண்பர்களின் வழிகாட்டுதலும், எனக்கு சிறந்த வழிகாட்டிகளாக அமைந்தது.
பொதுப்பாடங்களுக்கு எனது அண்ணன் நாகராஜ் அவர்களும், அரசியல் அறிவியல் பாடங்களுக்கு என் நண்பர் கோபால கிருஷ்ணன் அவர்களும் எனக்கு வழிகாட்டினார்கள். இவர்கள் இருவரும் ஏற்கனவே யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி நன்கு அனுபவம் பெற்றவர்கள். இத்தனை பேருடைய ஆதரவினால்தான் முதல் முயற்சியிலேயே எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது” என்றார்.
“இத்தேர்வுக்கு எந்த மாதிரியான நூல்களைப் படித்தீர்கள்?” என்று கேட்டதற்கு, “இந்திய புவியியல் பற்றிய பாடங்களுக்கு NCERT Books-ம், Civil Service Main Exam Geography of India’ என்ற புத்தகத்தையும் படித்தேன். இதைத் தவிர 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பள்ளி சமூக அறிவியல் பாடங்களைப் படித்தேன்”.
“போட்டித் தேர்வுகளில் அறிவியல் பாடங்கள் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளதையும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளில் இத்தகைய அறிவியல் பாடங்களை தவிர்க்க முடியாது. உதாரணமாக, தகவல் தொழில்நுட்பமும் (Information Technology), நுண்பொருள் தொழில்நுட்பமும் (Nano-technology), உயிரியல் தொழில்நுட்பமும் (Bio-technology) முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.
ஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றிருக்க வேண்டும் என்பது போன்ற மனநிலை இத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நிலவுவதைப் பற்றிக் கேட்டபோது, “இத்தகைய மனநிலையை முற்றிலும் மாற்றினால் மட்டும்தான் அவர்களால் எளிதாக சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடியும். மேலும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், தொடர் பயிற்சியும் விசாலமான மனநிலையும், நேர்மறையான எண்ணங்களும் இருந்தால் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியும். மேலும் பல்வேறு கட்டமாக நடக்கும் இத்தேர்வுக்குத் தயாராவதற்கு நீங்கள் ஒருகால அட்டவணையை அமைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, முதல்நிலைத் தேர்வில் உள்ள பாடங்களைப் படிக்க ஜுன் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலும், ஏப்ரல் முதல் ஜுன் வரை படித்ததை திருப்பிப் பார்ப்பதற்கும் பயன்படுத்தலாம். பல நூல்களை மேலோட்டமாகப் படித்துச் செல்வதைவிட, குறைந்தபட்சம் 5 புத்தகங்களை மிகத் தெளிவாக படித்து பயிற்சி செய்வது நல்லது.

முதல்நிலைத் தேர்வை முடித்து மெயின் தேர்விற்கு செல்லும் மாணவர்கள் கட்டுரைத்தாள் கேள்விக்கு விடையளிக்க எழுத்துப் பயிற்சியை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும். இந்தத் தேர்வை எழுத முடிவு செய்துவிட்டால் அதில் நம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் பயிற்சியை மேற்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்றவர், நன்றாகத் திட்டமிடுங்கள். அதைச் செயல்படுத்த கடுமையான முயற்சியை எடுங்கள். முயற்சிக்குத் தக்கபலன் கண்டிப்பாகக் கிடைக்கும் என்றவரிடம் நேர்முகத் தேர்வைப்பற்றிக் கேட்கையில்,
“நேர்முகத் தேர்வில் உண்மையாக பதிலளிக்க வேண்டும். நமக்குத் தெரிந்த விஷயங்களைத் தெள்ளத் தெளிவாக எடுத்து வைக்க வேண்டும். தெரியாத துறையைப் பற்றியோ, தெரியாத விஷயங்களைப் பற்றியோ கேள்விகள் அமைந்தால் உண்மையாக உங்களுக்கு என்ன தெரியுமோ அதைத் தெளிவாகக் கூறுங்கள். எல்லாம் அறிந்தது போன்ற பதில்களைக் கூறி உங்களின் மதிப்பெண்களைக் குறைத்துக்கொள்ளாதீர்கள். ஏனென்றால் இத்தகைய பணிக்கு நேர்மையாக, உண்மையாக உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்வார்கள். மேலும் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் முன் உங்களின் பார்வையை விசாலப்படுத்திக் கொண்டும், திட மனதுடனும் செல்லுங்கள். ஏனெனில் பல நேரங்களில் நம்முடைய நம்பிக்கையை குழைக்கிற மாதிரியான கேள்விகளைக் கூட கேட்பார்கள். எல்லாவற்றையும் உங்களின் ஆளுமைத்திறனாலும், பயிற்சியாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்” என்றார்.
நம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் சிறந்த பயிற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்ற கிராமப்புறத்தைச் சேர்ந்த ரகுநாதன் ஐ.ஏ.எஸ். அவர்களைத் தன்னம்பிக்கை வாழ்த்துவதுடன், கிராமப்புறத்தை மேன்மையடையச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் பதிவு செய்கிறது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2011

நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
சிந்திக்கத் தூண்டும் இலக்கியச் சிந்தனையாளர்
ஊக்கஉணர்வுடன் வாழுங்கள்!
பறவைகள் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை!!
சாதிக்கலாம் வாங்க
நேனோ டியூப்
கவலைதரும் கலாச்சார மாற்றங்கள்
புகை வண்டி
உலக கழிப்பறை தினம்
மாறிவரும் வேளாண்மை
அத்தனைக்கும் ஆசைப்படு
வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை
உங்கள் குழந்தை எப்படி…?
முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!!
தாய் மண்ணே வணக்கம்
உள்ளத்தோடு உள்ளம்