Home » Articles » வறுமை ஓர் உந்துசக்தி

 
வறுமை ஓர் உந்துசக்தி


இராஜசேகரன் எல்
Author:

அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்ய வசதியில்லாதவர் வறுமையில் உள்ளவர் எனலாம். வளரும் நாடாகிய நம் நாட்டில் மிகப்பலர் ஏழைகள்தான். வறுமை நிலையில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெற்றோர் அல்லது ஒரு மாணவர் இந்நூலை படிக்க நேரிடலாம். அவர்களைப் பார்த்து ஒன்றைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
உங்களிடம் பணம் இல்லாததால் உங்களை ஏழை என்று எண்ணி விடாதீர்கள். மேலும் வறுமை என்பது ஒரு தற்காலிக நிலைதான். அதை எதிர்கொண்டு முயன்று செல்வந்தர்களானோர் பட்டியலை என்னால் தர இயலும்.
நம் மாநிலத்தில் ஆண்டு தோறும் பள்ளி இறுதிவகுப்பை முடிக்கும் ஆறு லட்சம் மாணவர்களில் நான்கரை லட்சம் பேர் வறுமை காரணமாக மேற்படிப்பைத் தொடரமுடியாமல் இருக்கின்றார்கள்.
வறுமையை எண்ணி வருந்தாதே. அமெரிக்காவின் மிகப்பெரிய பணக்காரர் ராக் பெல்லர் இளம்வயதில் பரம ஏழையாகவே இருந்தார். அவரிடம் அடுத்த வேளை உணவுக்கான காசு இல்லை. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் பணக்காரனாக வேண்டும் என்னும் வெறி இருந்தது, அதனால் வெற்றி கண்டார்.
உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்று இந்தியாவின் அம்பானி குடும்பம். அந்த திரிபாய் அம்பானி தன் 16ம் வயதில் எழுத்தராகச் சேர்ந்து ஈட்டியது மாதம் ரூபாய் முந்நூறு தான்.
இன்று உலகில் எந்த பெரிய நகருக்குச் சென்றாலும் ஓங்கி நின்று ஒளிர்கிறதே ஓபராய் ஹோட்டல்ஸ் என்னும் பெயர், அந்த ஓபராய் ஒரு காலத்தில் ஏழை எழுத்தர் தான்.
டெல்லி, சென்னை, ஐதராபாத், மும்பை, கொல்கத்தா இந்நகரங்களில் வாழும் நூறு பணக்காரர்களை வரிசையாக நிறுத்தினால், அவர்களுள் ஐம்பது பேர்கள் வறுமையில் தொடங்கி வானைத் தொட்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களெல்லாம் வறுமையை விரட்டிய போது, ஏன் உன்னால் முடியாது?
உள்ளோரிடம் இல்லார் குறுகி நிற்பது இல்லாமையால்தானே?
உன்னிடம் சொத்து இல்லாமல் இருக்கலாம். உடல் என்னும் உன்னத சொத்து உன்னிடம் உள்ளதல்லவா?
“வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்”
என்று கவிஞர் தாரா பாரதி சொல்வது உன் செவிகளில் விழவில்லையா?
உன்னிடத்தில் இலக்கு உள்ளது, கடின உழைப்பு உள்ளது, உள்ளத்தில் உறுதி உள்ளது, இரக்க உணர்வும் பணிவும் இயற்கையாவே உள்ளது. இவையெல்லாம் உன்னிடத்தில் உள்ள சொத்துகள் அல்லவா? இனி உன்னை ஏழை என்று பிரகடனப் படுத்தாதே.
ஒரு மாணவர் சொல்கிறார். “நான் மிகவும் ஏழை. என்னால் ஐஅந படிக்க இயலாது.”
அவரைப் பார்த்துக் கேட்டேன். “ஒருவர் நூறு கோடி ரூபாய் தரத் தயாராக உள்ளார். உன் இரு கண்களையும் விற்கச் சம்மதமா?”
“முடியாது” என உரைத்தார்; உணர்ந்தார். எனவே பணம் மட்டுமே சொத்து என்று நினைக்காதே. கண்களுக்கு மட்டும் நூறு கோடி. இன்னும் அதை விட மேலான சொத்துகள் உன்னிடத்தே உள்ளன.
உடல் என்றும் ஒப்பற்றசொத்து. அதை பேணுவது உன் முதற்கடமை. அளவான உணவு, அன்றாடப் பயிற்சி என வழக்கப்படுத்திக் கொள். உண்மையான மகிழ்ச்சியைத் தருவது நலம் மிக்க உடம்புதான்.
தாஜ்மகாலும், பைசா நகரத்துக் கோபுரமும் அதிசயங்களில் உன் உடம்புதான் – உன் பெற்றோர் கொடையாகத் தந்த உன் உடம்புதான் பேரதிசயம்.
இப்படியே நீ ஏழையாக இருந்து விடப்போவதில்லை. உன்னிடத்தில் இலக்கு என்னும் மிகப்பெரிய சொத்து இருக்கிறது. காலம் கனியும். நீயும் ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ, ஓர் ஐஅந அதிகாரியாகவோ அல்லது நீ விரும்பும் துறையில் வல்லுநராகவோ ஆவது உறுதி.
ஒரு சிற்றுண்டிச் சாலையில் வேலை பார்த்த வீரபாண்டியன் – மதுரைக்காரர் – பன்னிரெண்டாம் வகுப்பில் புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதல் தகுதி பெற்றார். ஐஅந படிக்க ஆசை கொண்டார். நானும் பயிற்சி தந்தேன். 10 ஆண்டுகள் ஊண் உறக்கம் தவிர்த்தார். இன்று அவர் ஓர் ஐஅந அதிகாரி.
இந்த வீரபாண்டியனிடத்தில் என்ன சொத்து இருந்தது? ஐஅந கனவு என்னும் சொத்தைத் தவிர. இப்போது சொல் – நீ ஏழையா? உன்னிடத்தில் கனவு இருக்கிறது. எனவே உன்னிடத்தில் ஒரு பணக்காரன் இருக்கிறான்.
“காலம் போன காலத்தில் என்ன செய்ய முடியும்?” என்று புலம்புவதற்கு நீ என்ன கிழவனா? (கிழவர்கள் கூட சாதிக்கிறார்கள் என்பது வேறுகதை).
நீ இளைஞன். காலம் என்னும் சொத்து உன்னிடத்தில் நிறையவே உள்ளது.
உன் கனவு மெய்ப்பட வேண்டுமா? காலத்தைக் கவனமாகப் பயன்படுத்து. வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும் – இது நம்மூர் பழமொழி.
ஆம். உன்னிடத்தில் உள்ள வாய் மிகப்பெரிய செல்வம். இந்த வாய்த் திறமையுள்ள மேலாளர்களுக்குக் கம்பெனிகள் பல இலட்சங்களைச் சம்பளமாக கொட்டிக் கொடுக்கின்றன.
பேசக்கற்றுக் கொள். ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொள். அம்மொழி வீட்டின் ஜன்னல் போன்றது. ஜன்னல் இல்லாத வீட்டில் வசிக்க முடியுமா?
பேசி, அசத்தி மற்றவர்களிடம் வேலை வாங்குவது தனித் திறமைதான். அதை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகள் உள்ளன.
1. கண்ணாடி முன் நின்று உனக்கு நீயே ஆங்கிலத்தில் பேசு.
2. கஓஎ முதல் 12 ம் வகுப்பு வரையிலான ஆங்கிலப் பாடநூல்களைப் பாதுகாத்துப் படி
3. தொலைக்காட்சியில் வாசிக்கப்படும் ஆங்கிலச் செய்தியை ஊன்றிக் கவனி.
4. ஜெஃபரி ஆர்ச்சர், சிட்னி ஷெல்டன், ஆர்தர் ஹெய்லி போன்றோர் எழுதிய ஆங்கில நாவல்களைப் படி.
5. பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
6. உன் பேச்சைப் பதிவு செய்து, மீண்டும் கேட்டு, தவறுகளைத் திருத்து.
7. நிறுத்தி நிதானமாகப் பேசிப் பழகு.
8. எழுதி அனுப்பும் முன், எழுதியதைப் படி, திருத்து. உன் விண்ணப்பத்தில் உள்ள ஓர் எழுத்துப்பிழை கூட உன் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும். (அன்புள்ள ஐயா, என்பதை அன்புள்ள ஜயா என்று எழுதினால் யார் வேலை கொடுப்பார்).
உணர்வாட்சித் திறன் ஓர் ஒப்பற்றசொத்து (Emotional Intelligence is a valuable property)
கோபம், பயம், வெறுப்பு, பொறாமை, காமம் இவற்றை அடக்கி ஆளும் திறன் மிக முக்கியம். இத்திறன் இல்லாதவர்களிடம் பணம் இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது, நிம்மதி இருக்காது. சோகத்தை விதைத்து அறுவடை செய்யும் இவர்கள் பணக்கார ஏழைகள்.
‘மனம் வாடி துன்ப மிக உழன்று – பிறர்
வாட பல செயல்கள் செய்து’
வாழ்வோர் என இவர்களை அறிமுகம் செய்கிறார் பாரதியார். இத்தகைய மனோபாவத்தால் இவர்கள் நாளடைவில் நண்பர்களையும் செல்வத்தையும் இழக்கக் கூடும்.
சிலருக்கு வருந்துவதே வாழ்க்கை. கோடையில் வெயில் அதிகம் என்பார். வாடையில் மழை அதிகம் என்பார். காரணம் கண்டு பிடிப்பதே இவர்களுடைய வழக்கம்.
சில்லரை காரணங்களுக்காக சினம் கொள்வதும் மனம் வருந்துவதும் சிலருக்கு அன்றாட வாழ்க்கை. நீ அப்படியாயின், உன் நடத்தையை மறு ஆய்வு செய்து, சீரமைத்தல் வேண்டும். இல்லையேல் மன நோயாளியாக மாறிவிடுவாய்.
வாழ்க்கையில் நாம் எப்போதும் வெற்றிபெறமுடியாது. நாம் கட்டுப்படுத்த இயலாத சில புறக் காரணங்களால் தோல்விகள், துன்பங்கள் ஏற்படும்.
தேர்வுக்கு முதல்நாள் தவறி விழுந்து கட்டுப் போட நேர்வது, தேர்வு விடைத்தாள் சிலசமயம் கவனக் குறைவாக திருத்தப்படுவது – இவை போன்றன புறக் காரணங்களால் நிகழ்வன.
12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவு வெளியாகி, ஒரு மாதம் கழித்து, மறுகூட்டலில் 1184 மதிப்பெண் பெற்றார் ஒரு மாணவர். அது முன்னர் அறிவிக்கப்பட்ட மாநில முதல் மதிப்பெண்ணை விட அதிகம். கிடைத்திருக்க வேண்டிய பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்காமல் போயிற்று. இதில் அவருடைய தவறு எதுவுமில்லை.
மர்ஃபி விதி இது: “ஏதாவது ஏடாகூடமாக நடக்க வாய்ப்பிருந்தால், அது நடந்தே தீரும்” அதற்காக வருந்துவதை விடுத்து, அடுத்த வாய்ப்புக்குத் தயாராக வேண்டும்.
எனவே, இன்பத்திலும் துன்பத்திலும் நிலை தடுமாறாமல் உன்னால் இருக்க முடியுமானால், நீ ஏழை அல்லன்.

ஏழை என்னும் மனோபாவம்
ஏழை என நினைத்தால் நீ ஏழை; இல்லை என்றால் இல்லை.
சிலர் பதவி உயர்வு பெற்றாலும், வணிகத்தில் சிறப்படைந்தாலும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். அதற்குப் போதும் என்றபொன்மனம் – நிறை மனம் வேண்டும்.
குறை காண்பார் எதிலும் குறை காண்பார். எனக்குத் தெரிந்த விவசாயி ஒருவர் நன்றாக விளைந்தால் விலை இல்லை என்பார். விலை நன்கு கிடைத்தால் விளைச்சல் இல்லை என்பார். அவரைப் போன்றவர்கள் எவ்வளவு செல்வம் இருந்தாலும் ஏழைகள்தாம்.
ஒருவர் அண்ணனைப் போல் தான் வசதியாய் இல்லையே என வருந்துவார். இன்னொருவர் தன் நண்பன் வீட்டைவிட தன்வீடு சிறியதாய் உள்ளதே என்று வருந்துவார். மற்றுமொருவர் தன் பக்கத்து வீட்டுக்காரரின் காரைப் போன்று தனக்கில்லையே என்று வருந்துவார். தம்முடைய மகனும் மகளும் திறமை மிக்கவராய் இருப்பதை எண்ணி இவர்கள் மகிழார். இவர்கள் தாம் ஏழையினும் ஏழைகள்.
உன் பெற்றோர்கள் ஏழையர் என்று எண்ணாதே. உனக்கு இலக்கும், கனவும் இருந்தால் உன் பெற்றோர் ஒருபோதும் ஏழையரல்லர்.
இப்போது சொல் நீ ஏழையா. ‘இல்லை’ என உறுதியாகச் சொல்வது என் காதில் விழுகிறது.
வறுமை ஒரு வாய்ப்பு
பணக்காரர் ஆவதற்கு வறுமை ஒரு தூண்டுகோலாகவும் அமையும். வறுமை சோம்பியிருக்க அனுமதிக்காது. பணக்காரன் ஆகும் கனவு ஏழைக்குதான் வரும்.
மார்ச் 2009ல் நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஜோஸ் ரிஜான் மாநிலத்தில் முதலிடம் பெற்றான். மதிப்பெண் 496/500. வறுமையில் வாழ்ந்த மீனவப் பெற்றோரின் மகன் அவன். வலையில் மீன் விழுந்தால் மட்டுமே அவனுடைய வீட்டு உலையில் சோறு வேகும். அந்த வறுமைதான் அவனை ஒரு வெறியோடு படிக்கச் செய்தது. அவனுடைய பெற்றோர் தொடர்ந்து கடலோடு மல்லுக்கட்டக் கூடாது என்பது தான் அவனது ஆசை.
பசியால் வாடும் இளைஞன் தன் குடும்பத்தின் வறுமை நிலையை மாற்றமுனைப்புக் காட்டுவான். எந்த ஒரு மோசமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் சக்தி அவர்களுக்கு உருவாகும்.
“ஒரு பையனோ பெண்ணோ ஏழையாய் பிறப்பது குற்றமில்லை; ஆனால் ஏழையாய் மடிவதுதான் குற்றம்.” என்று சொல்கிறார் உலகத்துப் பணக்காரர் பில்கேட்ஸ். எவ்வளவு பொருள் பொதிந்த கூற்று இது. அவரே அவ்வளவு வசதியற்றகுடும்பத்தைச் சேர்ந்தவர்தான். வெற்றி பெறவேண்டும் என்றவெறி இருந்ததால் தன் குடும்பநிலையை மாற்றிக் காட்டினார்.

டாக்டர். அ.ப.ஜெ. அப்துல் கலாம்
பாரத பூமியின் தவப்புதல்வர்களுள் தலைசிறந்த ஒருவர் அவுல் பக்கிர் ஜெயினுலாபுதீன் அப்துல்கலாம். திரு.ஜெயினுலாபுதீன் திருமதி. ஆசியம்மாள் ஆகிய பெற்றோருக்கு இராமேஸ்வரம் தனுஷ்கோடியில் 15.10.1931 அன்று பிறந்தார்.
மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளை வாடகைக்கு விட்டு, அதில் கிடைத்த வருவாயில் கலாமைப் படிக்க வைத்தார் அவர் தந்தையார். கலாமும் பள்ளியில் படிக்கும் போது வீடுதோறும் பேப்பர் வினியோகம் செய்தல் போன்றசிறுசிறு வேலைகளைச் செய்து பொருள் ஈட்டி உதவினார்.
உயர்நிலைப் படிப்பை இராமநாதபுரம் ஸ்குவார்ட்ஸ் கிறித்துவ பள்ளியிலும், பட்டப் படிப்பை திருச்சி புனித ஜோசப் கல்லூரியிலும், விமானவியல் பொறியியல் படிப்பை சென்னை MIT கல்லூரியிலும் முடித்தார். பள்ளிப் படிப்பை முடிக்காத தன் சகோதரர்கள் பாராட்டும் வகையில் குடும்பத்தின் முதல் பட்டதாரியானார் கலாம்.
1958-ல் DRDO (Defence Research and Decvelopment Organisation) நிறுவனத்தில் முதுநிலை அறிவியல் உதவியாளராக சேர்ந்தார். 1962-ல் ISRO (Indian Space Research Organisation) நிறுவனத்தில் சேர்ந்தார். குறுகிய காலத்தில் ரோகினி – I என்னும் விண்கலத்தை ஏவி வெற்றி கண்டார். பின்னர் இராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 13.05.2001 நடந்த அணு ஆயுத சோதனையின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
பல்வேறு நிலைகளில் 19 ஆண்டுகள் ISRO வில் பணியாற்றியப் பின், மீண்டும் DRDO நிறுவனத்தில் ஏவுகணைத் துறையின் தலைவரானார். அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகளை விண்ணில் பாய்ச்சி வெற்றி கண்டார்.
இந்தியாவின் ஏவுகணை மனிதர் (Missile Man of India) என்னும் புகழைப் பெற்றார். நவம்பர் 2001 வரையில் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றினார். 2002 முதல் 2007 வரை உலகமே போற்றும் வண்ணம் 11வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். அதற்குமுன் ஒரேமுறை 1964-ல் NASA வில் ஒரு பயிற்சிக்காக அமெரிக்கா சென்றார்.
ஏவுகணை விஞ்ஞானி ஒரு சிறந்த மனிதநேயப் பண்பாளராகத் திகழ்கிறார். முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நடக்க உதவும் கருவிகளே பெருஞ்சுமையாய் இருந்ததைக் கண்டு மனம் இரங்கினார். வெறும் 300 கிராம் எடையுள்ள கார்பனால்; செய்யப்பட்ட நடைக் கருவியை உருவாக்கி உதவினார்.
1981-ல் பத்மபூஷன் விருதும், 1990-ல் பத்ம விபூஷன் விருதும் பெற்றார். 1998-ல் நாடு அவருக்கு பாரதரத்னா விருதை வழங்கி மகிழ்ந்தது. 2020 ல் இந்தியா வளர்ந்த நாடாக, வளமை மிகுந்த நாடாக வேண்டும் என்பது அவரது கனவு.
தொலை நோக்குப் பார்வையும், தெளிவான நோக்கமும் கொண்ட கலாம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக, உந்து சக்தியாக விளங்குகிறார்.
வறுமை என்பது அவரை இளமையிலேயே புடம்போட்ட தங்கமாக மாற்றியது.
இந்திய வரலாற்றின் மாமனிதர்களுள் ஒருவராக அவர் உருவாவதற்கு வறுமை ஒருபோதும் ஒரு தடைக்கல்லாக இருந்ததில்லை; மாறாக படிக்கல்லாகவே பயன்பட்டது.

 

4 Comments

 1. ayyasamy says:

  nandru. collectorukku valthukkal (sollalamla?)

 2. muruganandam .s says:

  அய்யா ,
  அருமையாச் சொன்னீர்கள் .இளைய இதயங்களை நல வழிப்படுத்தும் தங்களுக்கு நன்றிகள் பல.

 3. baskar says:

  ரொம்ப அருமையாக இருந்தது

 4. rathnavel says:

  அருமையான பதிவு.
  மிக்க நன்றி.

Post a Comment


 

 


September 2011

வெற்றி பெறும் வித்தை இதோ!
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்…..
நம்பிக்கையின் சக்தி
அறிவோம் அறிவியல்
வறுமை ஓர் உந்துசக்தி
வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!!
உள்ளத்தோடு உள்ளம்
நெடுஞ்சாலை நந்தவனங்கள்