Home » Cover Story » பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !!

 
பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !!


இராமநாதன் கோ
Author:

டாக்டர் கோ. இராமநாதன்
தலைவர், ஜி. ஆர். மருத்துவமனை, கோவை

நேர்முகம் என். செல்வராஜ்

 

  • உடல் நலம் பாதுகாத்தல்
  • (Preservation of Health)
  • நோய்த்தடுப்பு (Prevention of Disease)
  • நோயைக் குணப்படுத்துதல் (Curing Disease)
  • உடல் நலம் தேறுதல் (Rehabilitation)

இந்நான்கும் சேர்ந்ததுதான் மருத்துவம். மருத்துவத்துறையில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் வழங்கி நெடிய அனுபவம் கொண்ட மருத்துவ வல்லுநர்.
ஜி. ஆர். மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர்.
மருத்துவர், ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், பேச்சாளர், நிர்வாகி, மனித நேயமிக்கவர் போன்ற பன்முகத்தோற்றங்கள் கொண்டவர்.
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச சர்க்கரை நோய் ஆய்வுகளை நடத்தி, தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதையே அறியாமல் இருந்த ஆயிரக்கணக்கானவர்களின் சர்க்கரை நோயின் கடுமையான சிக்கல்களிலிருந்து காப்பாற்றியவர்.
நூற்றுக்கணக்கான வானொலி உரைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இளைஞர்களுக்கான கருத்தரங்குகளை நிகழ்த்திய மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்.
இதுவரை பதினைந்து நூல்களைப் படைத்திருப்பவர். தமிழக அரசின் சிறந்த நலவியல் நூலுக்கான பரிசு, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் பாராட்டு, சிறந்த வாழ்வியல் நூலாசிரியர், புத்தாயிரம் ஆண்டின் சிறந்த மருத்துவர் விருது, மருத்துவ விழிப்புணர்வில் சரித்திர சாதனைப் படைத்தவர் போன்ற பல்வேறு பெருமைகளைக் கொண்டவர்.
நவீன மருத்துவத்தைப் பற்றி “நூறாண்டு வாழ்க்கை” என்ற தலைப்பில் உடல் நலத்தின் அனைத்து அம்சங்களையும் நான்கு பாகங்களாக எழுதியிருப்பது இவரது தனித்தன்மை. இந்தச் சாதனையை இதுவரை எவரும் செய்ததில்லை என்ற பெருமைக்குரியவர் டாக்டர் கோ. இராமநாதன்.
“”ஒவ்வொரு தனிமனிதனும் விழிப்புணர்வுடன் முன்னேற வேண்டும். அதனால் அவனைச் சார்ந்த குடும்பங்கள் முன்னேறும். அத்தகைய குடும்பங்கள் நிறைந்த ஊர் முன்னேறும். அத்தகைய ஊர்கள் நிறைந்த நாடு உயர்ந்த நாடாகும். அத்தகைய நாடுகள் இருந்தால் உலகமே உயரும்.””
இதுவே உலகத்தின் உயர்வுக்கு வழி” என்கிற விவேகானந்தரின் சிந்தனையுடன் நிறையக் கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட டாக்டர் கோ. இராமநாதன் அவர்களை டாக்டர் செந்தில் நடேசன், ஆசிரியர் டாக்டர் க. கலைச்செல்வி அவர்களுடன் நேர்முகம் கண்டோம் இனி அவரோடு நாம்…..
பிறப்பும், படிப்பும்
இராசிபுரத்தைச் சேர்ந்த வேலம்பாளையத்தில் ய.ட. கோவிந்தராஜன், பாப்பு தம்பதியினருக்கு கடைசிப்பிள்ளையாகப் பிறந்தேன். தேவகி, சிவகாமி, இளங்கோவன் மூவரும் என்னுடன் பிறந்தவர்கள்.
தொடக்கக் கல்வியை வேலம்பாளையம் தொடக்கப் பள்ளியில் பயின்று தொ. சேடர்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை படித்தேன். பள்ளி நாட்களில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் போட்டி, தேர்வில் முதல் மதிப்பெண் போன்ற பரிசுகளைப் பெற்றபோது தன்னம்பிக்கை முளைவிட்டது.
பி.யூ.சி.யை வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் அனைத்து பாடங்களிலும் Distinction என்ற சிறப்புத் தகுதியோடு வெற்றி பெற்றது அக்கால கட்டத்தில் என் வாழ்வில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
1974-ல் மருத்துவபடிப்பு ஒன்றே குறிக்கோளாக வைத்து ஙஆஆநக்கு விண்ணப்பித்து, கோவை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, M.D. படிப்பையும் அதே கல்லூரியில் படித்து, பல்கலைக்கழக முதன்மைத் தகுதியுடன் வெற்றி பெற்று மருத்துவ வல்லுநராக மருத்துவ தொழிலைத் துவங்கினேன்.
“தாயிற்சிறந்த கோயிலுமில்லை; தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்று அடிக்கடி சொல்வீர்கள். அந்த பெற்றோர் உங்களுக்குள்…
மனதிற்குள் பாசத்தை வைத்துக் கொண்டே அதைக்காட்டினால் பிள்ளைகள் கெட்டுவிடும் என கோபத்தைக் காட்டுவார் என் தந்தை ய.ட. கோவிந்தராசன். என்னைப் பெரிய டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டவர். எனக்கு 10 வயது இருக்கும்போது என் தந்தை இராசிபுரத்தில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் என்னை அழைத்துச் செல்வார். இவரைப்போல் நீயும் எதிர்காலத்தில் மருத்துவராக உயர வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.
பொருளாதார சிரமங்களுக்கிடையில் என்னை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துவிட்டு “என்னுடைய அளவில் நான் செய்ய வேண்டியதை செய்துவிட்டேன். நீ புத்திசாலியாக படித்து வாழ வேண்டியதுதான்” என்று சொன்னவர்.
அலாரம் வைக்காமல் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவாள் என் அன்னை பாப்பு அம்மையார். பசுஞ்சாணி கரைத்து முற்றம் தெளித்து கம்பிக் கோலத்தில் பெரிய கோவில் தேர் வரைவாள். அம்மாவைப் பற்றிய ஒரு விஷயம் மட்டும் புரிந்ததில்லை எனக்கு. விடியலில் வரைந்த பெரிய கோவில் தேரை அந்தியில் துடைப்பத்தால் பெருக்கி விடுகிற விட்டேத்தியான மனசு எங்கிருந்து வருகிறது? என்ற கவிஞர் முத்துக்குமாரின் வரிகளைப் போல ஆயிரம் வரிகள் அம்மாவைப் பற்றி எழுதலாம்.
எனது அன்னை திடீர் மாரடைப்பில் காலமான போது எனது வயது 40. அந்த நாற்பது வயது வரை அவர் வாழ்ந்த காலத்தில் தனக்காக எதையும் கேட்காத தியாகி. பொறுமையிலும் சகிப்புத்தன்மையிலும் அவருக்கு நிகர் அவர்தான்.
தங்கள் குடும்பம்…
ஜி.ஆர். மருத்துவமனையிலும், என்னை எழுத ஊக்குவிப்பதிலும் என் துணைவியார் டாக்டர் கோமதி அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. சிறிது நேரம் கிடைத்து அமர்ந்திருந்தாலும் எழுதுகோலும், Prescription Padm கொடுத்து அந்த கட்டுரையை முடித்து விடுங்களேன் என்று ஊக்குவிப்பவர். மகள் ஆர்த்தி எம்.பி.பி.எஸ். படித்துள்ளார். மகன் கார்த்திக் இந்த ஆண்டு கல்லூரியில் சேருகிறார்.
ஜி.ஆர். மருத்துவமனையின் தோற்றம், செயல்பாடுகள் குறித்து?
1987ல் வாடகை கட்டிடத்தில் மருத்துவப் பணியை ஆரம்பித்தேன். அதற்குப் பின்பு படிப்படியாக முன்னேறி சொந்தக் கட்டிடத்தில் ஜி.ஆர். மருத்துவமனையை உருவாக்கினேன்.
ஜி.ஆர். மருத்துவமனை, மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம். அரசு நலத்திட்டங்கள் மற்றும் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறும் அனைத்து இன்சூரன்ஸ் திட்டங்களுக்கும் அங்கீகாரம் பெற்றது. உச்சி முதல் உள்ளங்கால் வரை எல்லா நோய்களுக்கான நவீன சிகிச்சைகளைக் குறைவான கட்டணத்தில் தரமாக வழங்குகின்றோம்.
மருத்துவமனையில் நுழையும்போது ஒரு கோவிலில் நுழைவதைப் போன்ற மனநிலை ஏற்படும். வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளோடு போராடும் மனிதனுக்கு நோய் ஏற்படுவது அடுத்த பிரச்சனையாகி விடுகிறது. அப்போது அந்த நோயாளி எப்படியாவது குணமாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் மனதில் தோன்றாது. நோய் குணமாகி மகிழ்ச்சியாக செல்லும்போது அந்த நிறைவான உணர்வுக்கு எவ்வளவு பணமும் ஈடாகாது.
“ஏழை எளியவர்களின் மருத்துவர்” என்கிற பெயர் உங்களுக்கு மக்களால் வழங்கப்பட்டுள்ளது அது குறித்து?
பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் தான் மருத்துவம் என்று எண்ணுவது சரியல்ல. மருத்துவம் என்பது ஒருவரின் நோய்க் கஷ்டத்திலிருந்து அவரை விடுதலை செய்ய வைக்கின்ற அற்புதமான சேவை. அதில் பணம் தான் முக்கியம் என எப்போதும் நினைத்ததில்லை. ஒருவேளை இந்த எண்ணத்தின் செயல்பாடு கூட காரணமாக அமைந்திருக்கலாம்.
இலவச மருத்துவ முகாம்களின் மூலமாக மக்களிடையே அதிகம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறீர்கள். அச்சேவை குறித்து?
நவீன மருத்துவத்தை எல்லோரும் பெறுகின்ற நிலை இங்கு இல்லை என்றாலும் தற்போதுள்ள காப்பீட்டு திட்டங்கள் ஓரளவு நவீன மருத்துவத்தைப் பரவலாக கொண்டு சேர்க்கின்றன.
உலகளவில் சர்க்கரை நோயின் பாதிப்பு நம் நாட்டில் அதிகம். சர்க்கரை நோயின் தலைநகரம் இந்தியா என்ற பெருமை (Ð) நமக்கு உண்டு. கடந்த இருபது வருடங்களாக இந்நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி இலட்சத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வில் இந்நோயின் பாதிப்பு இல்லாமல் செய்திருக்கிறோம் என்கிற பெருமை எங்கள் ஜி.ஆர். மருத்துவமனைக்கு உண்டு. இச்சேவைக்காக ரோட்டரி சங்கத்தின் சார்பாக பாராட்டுதல் பெற்றுள்ளோம். மேலும் இலவச மருத்துவ முகாம்கள் மூலம் நோய் வருமுன் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.
தங்கள் மருத்துவமனையில் ‘நிறைய மனதைத் தொட்ட சம்பவங்கள்’ நடந்திருக்கிறது. அதில் ஒன்று வாசகர்களுக்காகச் சொல்லுங்களேன்?
உயிர் ஊசலாடும் நிலையில், ஒரே சமயத்தில் பல்வேறு உறுப்புகளின் பாதிப்பால் (Multisystem Diseases), உயிருக்குப் போராடும் நிலையில், விபத்து போன்றவற்றால் உயிரிழக்கும் நிலையில் கொண்டு வந்தவர்களை பிழைக்க வைத்து அவர்கள் வாழ்வில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் நிறைய உண்டு.
சமீபத்தில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 வயது மணிகண்டன் சாலை விபத்தில் சிக்கி கடுமையான மூளை பாதிப்பால் சுவாசம், இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் எல்லாமும் குறைந்துவிட்ட நிலையில் ஜி.ஆர். மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். உறவினர்கள் யாரும் இல்லை. தெரிந்தவர் ஒருவர் உதவிசெய்ய எடுத்து வந்தார். நமக்கெதற்கு சிரமம் என அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கலாம். அட்டென்டர் யாரும் இல்லை.
தீவிர சிகிச்சையில் செயற்கை சுவாசம் மூலம் முதல் கட்ட சிகிச்சைக்கொடுத்து கோமாவில் இருந்த அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்து 30 நாட்கள் போராடி பிழைக்க வைத்துவிட்டோம். விவரங்கள் அறிந்து பெற்றோர்கள் வந்து நடந்த நிகழ்வுகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியுமா என்ற தயக்கத்தோடு சிகிச்சையை நிறுத்துக் கொள்ளலாமா என்றும் வினவினர்.
சிகிச்சையைத் தொடர்ந்தோம். அடுத்த கட்டமாக உடல் நலம் தேறுதலுக்கு (Rehabilitation) எங்கள் பொறுப்பிலேயே அவர் சொந்த ஊருக்கு அனுப்பி மேற்கொண்டு சிகிச்சை செய்ய வழி செய்தோம். இப்படி நிறைய நிகழ்ச்சிகள். கருணை நிறைந்த உள்ளம் தான், கடவுள் வாழும் இல்லம்.
அடிபட்டு ஆபத்தான நிலையில் அட்டன்டர் இல்லாமல் வருபவர்களுக்குச் சிகிச்சை தர தனியார் மருத்துவமனைகள் அதிகம் முன்வருவதில்லை ஏன்?
சட்ட ரீதியான பிரச்சனை, நோயாளியின் உதவியாளர் இல்லாதபோது பாதிக்கப்பட்டவர் ஒரு வேளை இறந்து போய்விட்டால் மருத்துவமனையைத் தாக்குவது, பாதிக்கப்பட்டவருக்கு உரியவர்கள் இல்லாதபோது எதற்கு நீங்கள் சிகிச்சையளித்தீர்கள் என்கிற கேள்வி, இப்படிப்பட்ட நிலைகள் இருப்பதால்தான் மருத்துவர்கள் சிகிச்சையளிக்க தயக்கப்பட வேண்டியிருக்கிறது. எந்த மருத்துவரும் தன்னிடம் வருபவரை தவிர்க்க வேண்டும் என விரும்புவதில்லை. சூழ்நிலைகளே அவர்களைத் தடுக்கின்றன.
தனி மனிதனின் நெறிமுறைகள், பண்புகள் எப்போது ஒரு சமுதாயத்தில் உயர்வாக வளர்கிறதோ அப்போதுதான் எல்லாமுமே சரியாகும்.
தற்பொழுது பெருகிவரும் நோய்கள் குறித்து தங்கள் கருத்து?
25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பிரச்சனைகளுக்கும் இப்போது உள்ள பிரச்சனைகளுக்கும் எண்ணற்ற வித்தியாசங்கள். பெரியம்மை, காசநோய், காலரா, பிளேக் போன்ற கிருமி தாக்குதலால் பெருமளவு இறப்பு நேர்ந்த நிலைமாறி, மன உளைச்சலால் ஏற்படுகின்ற மனம் சார்ந்த உடல் நோய்கள் அதிகரித்துவிட்டன.
நவீன விஞ்ஞான வளர்ச்சி காரணமாக வாழ்வியல் நோய்களான அதிக உடல் எடை, இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, சர்க்கரை நோய், அஜீரணம், தலைவலி, தூக்கமின்மை, பக்கவாதம் போன்ற சிக்கல்கள் அதிகமாகின்றன. இந்நோய்களுக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அத்துடன் மன உளைச்சல் இருந்தால் இந்நோயின் பாதிப்புகள் மேலும் அதிகமாகும். சான்றாக ஒரு சின்னக்கதை,
ஒரு ஊரில் எமன் நுழைந்தான். அதைப்பார்த்த ஒருவன் கேட்டான். “இன்னைக்கு யாருடைய உயிரைப் பறிக்க வந்தாய்?”
“என்னுடைய கணக்குப்படி 2 பேருக்கு ஆயுள் முடிகிறது. அதற்கு வந்தேன்” எமன்.
உடனே இந்த செய்தி ஊரெல்லாம் பரவியது. மக்களுக்கெல்லாம் பீதி. அன்று மாலைக்குள் 100 பேர் இறப்பு.
எமலோகத்தில் எமனிடம் கேள்வி, “இரண்டு பேருக்கு மட்டுமே ஆயுள் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டு, 100 பேரின் உயிரை எடுத்துக்கொண்டாயேД என்று.
அதற்கு எமன், “என்னுடைய கணக்குப்படி இரண்டுதான். ஆனால் மீதி 98 பேர் அவரவர் பயத்தினால் தாங்களே என்னிடம் வந்துவிட்டனர். நான் என்ன செய்ய?” என்றான்.
மனப்பதட்டம், மன உளைச்சல், உறவுகளில் விரிசல், போட்டி மனப்பான்மை, தீய பழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, அதிக உடல்எடை, அதிக கொழுப்பு போன்றவற்றால் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன.
மருந்து கடைகளில் தூக்க மருந்துகளும், வலி மருந்துகளும் மிக அதிக அளவில் விற்பனையாவது இதையே உறுதிபடுத்துகிறது.
வாழ்க்கை முறையில் மாற்றம் தரும் பயிற்சிகளாக தாங்கள் கருதுவது?
உடற்பயிற்சி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அன்றாட பழக்கமாக வேண்டும். உடற்பயிற்சிகளை காலை மாலை இரு வேளைகளிலும் செய்யலாம். அதனால் நல்ல கொழுப்பு அதிகமாகிறது. கெட்ட கொழுப்பு குறைகிறது. இதயம் முதல் அனைத்து உடல் உறுப்புகளும் வலிமை பெறுகின்றன. யோகா பயிற்சிகளின் மூலம் நம் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனின் அளவு இயல்பை விட அதிகமாக கிடைக்கிறது. அதனால் உடல் உறுப்புகள் அனைத்துமே புத்துணர்வு பெறுகின்றன.
நம் உடலிலுள்ள சிம்பத்டிக் நரம்பு மண்டலம் அளவிற்கதிகமாக செயல்பட்டால் பயம், பதட்டம், கோபம், ஆத்திரம், தூக்கமின்மை ஏற்படும். யோகா செய்யும்போது இந்த நரம்புகள் சமநிலை அடைந்து அமைதி, பொறுமை, நிதானத்தை உண்டாக்குகின்ற பாராசிம்பதடிக் நரம்புகள் அதிகமாக இயங்குகின்றன.
தியானம் செய்யும்போது நமது மூளையில் ஆல்பா அலைகள் ஏற்பட்டு மனதை சமநிலையில் செயல்படுத்துகின்றன. அந்த நிலையில் எண்டார்பின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து அமைதியான மனநிலையை உண்டாக்கும்.
யோகா, தியானம் போன்றவை நாகரிக மனிதனின் அன்றாட பழக்கமாகி விட்டால் நோய்கள் குறையும், வாழ்வும் வளமாகும்.
உணவுகள், மனநிலை மற்றும் நோய்களுக்கான தொடர்புகள் எப்படி?
நம் குணம்
நாம் உண்ணும் உணவு
நம் நோய்கள்
இவை மூன்றுக்கும் நேரடித் தொடர்பு உண்டு.
மருத்துவத்தில் A, B, C வகை குணம் என மனிதர்களைப் பிரிப்பர்.
A வகையினர் எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள். பதட்டம், பயம், கோபம், ஆத்திரம், பேராசை என எல்லாமே அதிகமாக இருக்கும். திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு மன உளைச்சல் அதிகம். இத்தகைய குணம் உள்ளவர்களில் பெரும்பாலோர் மாரடைப்பிற்கு ஆளாகிறார்கள். இதை ரஜோகுணம் எனலாம். உணவுகளில் காரம், உப்பு அதிகமாக உள்ள உணவுகள் இத்தகைய மனநிலையை மேலும் அதிகமாக்குகின்ற இயல்புடையவை.
B வகையினர், எப்போதும் நிதானமாக, சமநிலை மனதுடன் அமைதியாக செயல்படுவார்கள். இவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் பெரும்பாலும் சுமூகமாக பதட்டமில்லாமல் இருக்கும். இவர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு நோய் வருவதில்லை. இதை சத்வ குணத்தோடு ஒப்பிடலாம். உணவுகளில் பழங்களை அதிகமாக சாப்பிட்டால் இத்தகைய மனநிலைக்கு உதவும்.
C வகையினர் சோம்பேறிகளாய், அதிக தூக்கம் உள்ளவர்களாய் இருப்பார்கள். இவர்கள் எந்த பொறுப்பையும் சரியாக செய்ய மாட்டார்கள். நிறைய சாப்பிடுவார்கள். உழைப்பு என்பது விரும்பத்தகாதாகிவிடும். சலிப்பான மனிதர்கள். இவர்களை தமோ குணத்துடன் ஒப்பிடலாம். புளிப்பு மற்றும் எண்ணெய் அதிகமான மந்த உணவுகளால் இத்தகைய மனநிலை அதிகமாகிவிடும்.
பொதுவாக மூன்று வகை இயல்பும் எல்லோரிடத்திலும் இருக்கும். எதனுடைய தன்மை அதிகமாகிறதோ அதற்கேற்ப செயல்பாடுகளும் நோய் பாதிப்புகளும் ஏற்படும். நல்ல மனநிலையும், உணவும் சேர்ந்தால் நமது குண அம்சங்களை மாற்றலாம்.
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய கண்டுபிடிப்பே மனிதன் தன் சிந்தனைகளை மாற்றுவதன் மூலம் வாழ்க்கையையே மாற்ற முடியும் என்பது தான்.
‘சரித்திரம் படைத்த சாதனை’ என்ற பாராட்டு கிடைத்தது தங்களின் எந்தப் பணிக்காக?
கடந்த இருபது ஆண்டுகளாக சர்க்கரை நோயை வருமுன் கண்டறியும் முகாம்களை நடத்தி பல லட்சக்கணக்கானோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். சர்க்கரைநோய் தமக்கு இருப்பதை அறியாத ஆயிரக்கணக்கானோர் அதை அறிந்து வாழ்க்கை முறை மாற்றம் பற்றிய செயல்பாடுகளினால் சர்க்கரை நோயில்லாதவர்களைவிட அதிக ஆண்டுகள் நலமாக இன்று வாழ்கின்றார்கள். இப்பணிக்கு கிடைக்கப் பெற்ற பாராட்டுதலே ‘சரித்திரம் படைத்த சாதனை’ என்ற பாராட்டு.
எப்பொழுதும் என்னுடைய ஆயுதம் உழைப்பும், படிப்பும் என்பீர்கள். அந்த உழைப்பு குறித்தும், படிப்பு குறித்தும் உங்கள் கருத்து?
உழைப்பு என்றால் எதற்கும் சலிக்காமல் செய்வதுதான். எந்தெந்த செயல்களை நம்மால் கையாள முடியுமோ அத்தனையையும் நாமே முன்வந்து செய்தல்.
இன்னும் குறிப்பாக எதையாவது செய்ய வேண்டுமானால் அதை அவ்வப்போதே செய்துவிடுதல். பிறகு செய்யலாம் என்பதில் உடன்பாடு இல்லை. அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப்போடும் வேலைகளைச் செய்ய நமக்கு நேரம் இல்லாமல் போகலாம். வாய்ப்பில்லாமல் போகலாம். அதனால் எதையும் தள்ளிப்போடுவதில்லை.
பள்ளியில் படிக்கின்ற காலத்திலிருந்தே விடுமுறைகளில் நேரத்தை வீணாக்காமல் உழைப்பதுண்டு. வீட்டில் நெசவுத்தொழில். பத்து கைத்தறிகள் இயங்கும். நானும் மற்ற தொழிலாளர்களுடன் இணைந்து அவர்களை விட அதிகமாக செய்து விடுவேன்.
மருத்துவத்திலும், மற்ற துறையிலும் உள்ள புதிய விஷயங்களைப் படித்துக் கொண்டிருப்பது அன்றாட பழக்கம். தினமும் சுமார் இரண்டு மணி நேரம் படிப்பிற்காகச் செலவிடுகிறேன்.
குட்டிக் கதைகளைச் சொல்லி எப்படிப்பட்ட விசயத்தையும் எளிமையாக புரிய வைத்திடும் ஆற்றல் பெற்றவரான தாங்கள் ‘தன்னம்பிக்கைக்கு’ வலிமை சேர்க்கும் விதமாக ஒரு சம்பவத்தைக் கூறுங்களேன்?
இரண்டு இளைஞர்கள் ஒரு இண்டர்வியூவிற்குச் சென்றார்கள். நிறுவனத்தலைவர், முதலாமவனைப் பார்த்துக் கேட்டார்.
“இந்த வேலை உனக்கு கிடைக்காவிடில் என்ன நினைப்பாய்?”
அவன் “இவ்வளவு பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லையே. இது என் துரதிஷ்டம் என வருத்தத்தோடு போவேன்” என்றான்.
அதே கேள்வியை இரண்டாமவனிடம், “உனக்கு வேலை இங்கு கிடைக்காவிடில் என்ன நினைப்பாய்” எனக் கேட்டார்.
“இது உங்க துரதிஷ்டம். என்னுடைய திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு இல்லை என்று நினைத்து, இதைவிட பெரிய வாய்ப்பை எண்ணிக்கொண்டு செல்வேன்” என்றான். அதுதான் தன்னம்பிக்கையின் உயர்வு.
நிறுவனத்தலைவர் உடனே இரண்டாவது இளைஞனுக்கு வேலை உத்தரவை கொடுத்து உடனே பணியில் சேரும்படி வாழ்த்தினார்.
தன்னம்பிக்கை என்பது உடலுக்கு மூச்சைப் போன்றது. அதை இழக்கின்றபோது மூச்சுநின்று விட்டால் உயிர் நின்றுவிடுவதைப் போல வாழ்க்கையே உயிரோட்டமில்ல தாகிவிடும்.
சுயமுன்னேற்றம் மற்றும் மருத்துவ விழிப்புணர்வு நூல்கள் வாழ்வை உயர்த்துகிறதா?
நிச்சயமாக உயர்த்துகிறது.
1974ல் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் ஆனந்த விகடனில் “எண்ணங்கள்” தலைப்பில் எழுதிய சுயமுன்னேற்றக் கட்டுரையில் ஆரம்பித்து டாக்டர் இல.செ.க. எழுதிய அனைத்து சுயமுன்னேற்ற நூல்களையும் படித்திருக்கிறேன்.
மருத்துவம், மனிதவள மேம்பாடு இரண்டையும் முக்கிய இலக்குகளாகக் கொண்டு 15 நூல்களை எழுதியுள்ளேன். எண்ணற்ற கட்டுரைகளை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதியுள்ளேன். நூற்றுக்கணக்கான வானொலி உரைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இளைஞர்களுக்கான கருத்தரங்குகளில் பேசியுள்ளேன்.
பேராசிரியர் டாக்டர் இல.செ.க. உங்களுக்குள்…
என்னுடைய வழிகாட்டியும், எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் டாக்டர் இல.செ.க. தான். அவர் ஊன்றிய விதை சுமார் 15 நூல்களைப் படைத்து மேலும் பல நூல்களை படைக்கும் அளவு வளர்ந்து கொண்டிருக்கிறது.
1979ல் நான் மருத்துவப் படிப்பில் ஙஆஆநல் தேர்ச்சி பெற்று, டாக்டர் இல.செ.க.வை சந்தித்த போது, “டாக்டர் ! நீங்கள் சிறந்த மருத்துவராக எளியவர்களை அரவணைத்து, உயர்சேவைகளைச் செய்து, சிறந்த மருத்துவமனையை உருவாக்கி இப்படியொரு மருத்துவர் மற்றும் மருத்துவமனை இல்லையென்று போற்றுமளவிற்கு உங்கள் செயல்கள் அமைய வேண்டும்” என்று வாழ்த்தி வழிகளையும் சொன்ன தீர்க்கத்தரிசி அவர்.
வழிகாட்டுபவர்களின் மீது ஆழ்ந்த பற்றுதலும் அன்பும் கொண்டவர் தாங்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். தங்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக, ஊக்கம் தந்தவர்களாக நீங்கள் கருதக்கூடியவர்கள்?
சிறந்த ஆசிரியர்கள், நல்ல மனிதர்களின் தொடர்பு, நல்ல நண்பர்கள், நல்ல பணியாளர்கள் போன்ற எல்லாமே மனிதனின் உயர்வுக்கு முக்கிய அம்சங்கள்.
ஆசிரியர்களில் பள்ளி ஆசிரியர் புலவர் முத்து கந்தசாமி முதல் பேராசிரியர்கள் டாக்டர் அ. ராஜசேகரன், டாக்டர் அ.த. விஜயகுமார், டாக்டர் பைரவரத்தினம், டாக்டர் பிரனேஷ், டாக்டர் தண்டபாணி போன்று பலர் என் முன்னேற்றத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள். இவர்களின் ஊக்குவிப்புகளை எதனுடனும் ஒப்பிட முடியாது.
சிறந்த ஆசிரியர்களை எப்போதும் மனதில் மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் மாணவர்கள் நினைவு கொள்ள வேண்டும். ஒரு நல்ல ஆசிரியர் ஆயிரம் போதகர்களைவிட உயர்ந்தவர். அதைத்தான் மாவீரன் அலெக்சாண்டர், “என்னுடைய பிறப்பை என் பெற்றோர்களுக்கும், என்னுடைய வாழ்க்கையை என் ஆசிரியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்றார்.
டாக்டர் அப்துல்கலாம் அவர்களை 5.7.2005ல் சந்தித்தபோது என்னுடைய மருத்துவ சேவை, விழிப்புணர்வு நூல்கள் போன்றவற்றைப் பாராட்டி, “உங்களின் சேவை மிகவும் மகத்தானது. தொடரட்டும் வாழ்த்துக்கள்” என்று பாராட்டி ஊக்குவித்தார். என்னுடைய நூலைப் பற்றிக் குறிப்பிடும்போது “வெற்றியைப் பற்றிய தங்களுடைய விளக்கங்களை நான் ரசித்தேன்” என்று வியந்தார்.
சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களுடைய தொடர்பு ஒரு நீண்ட பயணம். “நமது கலாச்சாரத்தின் சம்பிரதாயங்களின் விளக்கங்கள்; சீடன் விழித்தெழும் வகையில் செயல்படுபவரே சிறந்த குருவாக முடியும்; மூட நம்பிக்கைகளை வளர்ப்பது முட்டாள்களைப் பெருக்கிவிடும்” போன்ற அவருடைய கோட்பாடுகளை பலமுறை அவரோடு அலசியதுண்டு.
என்னுடைய முதல் நூலை அவர் வெளியிடும்போது “இந்நூல் இராமநாதன் என்ற ரிஷியின் அனுபவ எழுத்துக்கள். அவருடைய வெற்றியில் என்னுடைய வெற்றியும் என்னுடைய வெற்றியில் அவருடைய வெற்றியும் கலந்துள்ளன” என்று குறிப்பிட்டது என்றும் மறக்க முடியாது.
எனது முதல் நூலை அச்சிட்டு என்னை ஊக்குவித்த கவிதா பதிப்பகம் சேது. சொக்கலிங்கம் அவர்களையும் மறக்க முடியாது.
தலைசிறந்த பொதுமருத்துவராக திகழும் தாங்கள் “இன்றைய மருத்துவம்” இதழை பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடத்தி வருகிறீர்கள். அப்பணி குறித்து?
மருத்துவம் என்றால் நோயைத் தீர்ப்பது மட்டுமன்று. நோயை வராமல் தடுப்பதும்தான் என்ற கோணத்தில் “இன்றைய மருத்துவம்” மாத இதழ் செயல்படுகிறது. வாழ்க்கை முறையில் மாற்றம் செய்தால்தான் பெருகிவரும் நோய்களான சர்க்கரைநோய், மாரடைப்பு, இரத்தக்கொதிப்பு, அதிக உடல் எடை போன்றவற்றின் சிக்கல்களைச் சரிபடுத்த முடியும். அதற்கான பயிற்சிகளை டாக்டர் மனோகர் டேவிட், டாக்டர் வத்சலா அவர்களுடன் சேர்ந்து கொடுத்து வருகிறோம்.
வாசிப்பதையும், எழுதுவதையும் நாள்தோறும் கடைபிடித்து வருகிற தாங்கள் ‘புத்தகம்’ குறித்துச் சொல்ல விரும்புவது?
ஆசைப்படுவது கிடைக்காவிட்டால் அதை விதி என்போம். ஆனால் அப்போது கிடைப்பதுதான் அனுபவம். புத்தகம் படிப்பது ஒரு கலை.
ஏதாவது ஒரு பட்டத்தைப் பெற்று ஒரு சம்பாத்தியத்தைப் பெற்றுவிட்டால் படிக்கத் தேவையில்லை என்ற மனப்பான்மை மக்களிடையே உண்டு. வாழ்க்கை முழுவதும் படிப்புதானே. தொடர்ந்து படிக்க வேண்டியது மனித வளர்ச்சியின் தேவை. மிருகங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது அறிவு. அந்த அறிவு படிக்கப் படிக்கத்தான் புதுப்பிக்கப்படும். இல்லையேல் பராமரிப்பு இல்லாத பழைய கட்டிடம் போலாகிவிடும்.
சாதனையாளர்களும், விஞ்ஞானிகளும் புத்தகங்களால்தான் உருவாகியுள்ளனர். குடியரசுத்தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற டாக்டர் அப்துல்கலாம் “இரண்டு சூட்கேஸ்களுடனும் தனக்கு சொந்தமான புத்தகங்களுடனும் ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறுகிறேன்” என்றார்.
ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் மனதில் உண்டாகிவிட்டால் ஒரு பெண் கருத்தரிப்பதைப் போல அது வளர்ந்து கொண்டே வரும். ஒருநாள் பிரசவிக்கும் வரை அதைப்பற்றிய சிந்தனைகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். பிரசவித்தவுடன் ஏற்படுகின்ற உணர்வை ஒவ்வொரு படைப்பை முடிக்கும்போதும் உணரலாம்.
தங்கள் மருத்துவமனையின் கல்விப் பணிகள் குறித்து?
GREAT அறக்கட்டளையின் மூலம் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகப் படிப்புகளான B.Sc. (ஆபரேஷன் தியேட்டர்), பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமா நர்ஸ் மற்றும் பட்டதாரிகளுக்கு ஙஆஅ போன்ற படிப்புகளை வழங்குகிறோம். இங்கு மருத்துவ மேற்படிப்பு, DNB படித்தவர்கள் மேலை நாடுகளில் சிறப்பாக பணிபுரிகிறார்கள்.
இதன் விரிவாக்கமாக Rtn. குரியேச்சன் அவர்களுடன் இணைந்து மேலும் பல படிப்புகளை வழங்க இருக்கிறோம்.
இளைய சமுதாயம் இன்னும் சிறந்தோங்கி வளர தாங்கள் தரும் ஆலோசனை…
அபார ஆற்றல் பெற்றவர்களாக இன்றைய இளைஞர்கள் திகழ்கிறார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம் மனிதநேயம் நெறிமுறைகள், பண்பு நலன்கள் இவற்றிலும் அவர்கள் உயர வேண்டும். 25 வயதிலேயே மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடியவர்களாக, போதை வஸ்துகளுக்கு அடிமைப்பட்டவர்களாக அதிகமானோர் மாறி வருகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கிறது. படித்து முடித்து சாதிக்க வேண்டிய வயதில் தவறான செயல்களில் ஈடுபட்டு அதற்காக சிகிச்சைக்கு வந்து குணமாகிப் போனாலும் முக்கியமான பத்து வருடங்களை (Productive Age) இழந்து விடுகிறார்கள். அபார ஆற்றலுடன் நல்ல பண்பு நலன்களை அவர்கள் இன்னும் பெற்று வளர்ந்தால் மொத்தச் சமூகமுமே உயர்வடையும். இன்று நடக்கின்ற வன்முறை, கொலை, கொள்ளை போன்ற தீய செயல்கள் அனைத்தும் மனிதநேயம் குறைந்ததால்தான் அதிகமாகி இருக்கிறது.
பாதித்த புத்தகங்கள்…
முதலில், டாக்டர் இல.செ.க.வின் “முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்” என்கிற புத்தகம். எதையும் சொல்லிக் கொண்டே இருக்காமல் செயலில் இறங்கி முடிக்கக் கூடியவர்களாக ஒவ்வொருவரும் மாற வேண்டும் என்று “செயல், செயல், செயல்” என்று செயல்பட தூண்டியிருப்பார். இரண்டாவது, 1974ல் நான் மாணவனாக இருந்தபோது எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் ஒரு வாரப்பத்திரிக்கையில் எழுதிய ‘எண்ணங்கள்’ தொடராக நெப்போலியன் ஹில் எழுதிய ‘Law of Success’. இந்த வரிசையில் இன்னும் பல.
தன்னம்பிக்கை…
1989ல் டாக்டர் இல.செ.க. அவர்களால் “தன்னம்பிக்கை” தொடங்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் ஒரு இயக்கமாக வளர்ந்து வருகிறது என்பது மனதுக்கு மகிழ்வைத் தருகிறது.
தன்னம்பிக்கை தமிழ் உலகின் ஆலமரம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2011

எழுத்துக்கள்
பலம் படைத்தவர் நீங்கள் நம்புங்கள்
சிறகாகும் சருகுகள் …
உனக்குள்ளே உலகம்
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
தெய்வம் நீ என்றுணர்த்திய தெய்வம்
சுவிஸ் வங்கி கருப்புப் பணம்
முகம் ஒரு சைக்கோகிராப் (Psychograph)
சாதனை வாழ்விற்கான சந்தோச வழிமுறைகள் 50
மனநிலை மேலாண்மை
கடவுளின் பரிசு
சளைக்காத மனமே சாதனைக்குச் சரியான துணை
பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !!
மாணவனே… வெற்றி மீது பற்று வை
உள்ளத்தோடு உள்ளம்