Home » Articles » உணவும் உடல் நலனும்

 
உணவும் உடல் நலனும்


கிருட்டிணமூர்த்தி கே.கே
Author:

சூரிய சக்தியினால் (ஒளியினால்) சமைக்கப்படுகின்ற எல்லாம் பொருட்களிலும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளன. குறிப்பாக எல்லா விதமான பழங்களிலும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளிலும் இவை அதிகம் உள்ளன. சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நெல்லிக்காய், தேநீர், உலர்ந்த பழங்களாகிய பேரீச்சம்பழம், பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, வால்நட், ஏப்ரிகாட், கிஸ்மிஸ் மற்றும் பப்பாளி, தக்காளி, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முருங்கை, எல்லா வகையான கீரைகள் (குறிப்பாக ஸ்பைநாட்ச்), கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள், சீரகம், கசகசா, பெருங்காயம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு, வெங்காயம், தேன், எலுமிச்சம்பழம், இஞ்சி, சுக்கு, கடுக்காய், சுண்டைக்காய், பாகற்காய், சுரைக்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், தர்பூசணி, நாவல்பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் மிக அதிக அளவில் உள்ளது.
மேற்கூறிய உலர்ந்த பழங்கள், கொட்டைகள், புதிதாக அறுவடை செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைப் போதிய அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் ஃப்ரீ ரேடிகல்ஸ் உண்டாவதைத் தடுக்கலாம். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாவதுடன் திடமான ஆரோக்கியத்தைப் பெறலாம்.
இட்லி எவ்வாறு சிறந்த சமச்சீர் உணவோ அதைப்போலவே நம்முடைய தமிழக உணவும் மிகவும் சிறந்தது. உலகிலுள்ள அனைத்து உணவுகளைப் பற்றிய ஆராய்ச்சியின் வெளிப்பாடு என்னவெனில் தமிழக உணவுதான் தலைசிறந்தது என்பதாகும். வாழை இலையில் பரிமாறப்படும் நம்முடைய சாப்பாட்டில் சாதம், பருப்பு, நெய், தயிர் அல்லது மோர், ஊறுகாய், இரண்டு விதமான காய்பொரியல்கள், கூட்டு, அப்பளம், ஒரு இனிப்பு ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்கள், என்ஸைம்கள் ஆகியவற்றைக் கொண்டு சமச்சீர் உணவாக அமைகின்றது. அரிசியை மட்டும் (சாதத்தை) கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, மற்றவற்றைக் கொஞ்சம் தாராளமாகவே எடுத்துக் கொள்ளும் பொழுது அது மிகச்சிறந்த உணவாகிறது. உணவை உண்டபின் அது செரிப்பதற்காக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு தரப்படுகிறது. வெற்றிலையில் மருத்துவ குணங்கள் பல உள்ளன. பாக்கு இரத்தம் உறைவதற்கு உதவுகிறது. சுண்ணாம்பு உடலுக்குக் கால்சியம் சத்தைக் கொடுக்கிறது.
அரிசியைக்கூட நம் முன்னோர்கள் கைக்குத்தல் அரிசியாகத்தான் பயன்படுத்தினார்கள். அதில் வைட்டமின் ‘பி’ சத்து உள்ளது. அரிசியைத்தவிர தமிழகத்தில் முழு தானியங்கள் பல உணவாக உட்கொள்ளப்படுகின்றன. அவைகளில் முக்கியமானவை இராகி, கம்பு, சோளம், மக்காச்சோளம், தினை, வரகு, சாமை போன்றவை. இவை அனைத்தும் நார்ச்சத்து மிகுந்தவை. செலினியம், துத்தநாகம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான மினரல்களும் இவற்றில் உள்ளன. கோதுமை, ஓட்ஸ், பார்லி ஆகியவற்றிற்குப் பதிலாகத் தமிழ்நாட்டில் மில்லட்ஸ் என்று சொல்லப்படுகின்ற சிறுதானியங்கள் பல பயன்படுத்தப்படுகின்றன. தற்காலத்தில் மேலை நாடுகளில் உபயோகத்தில் உள்ள சீரியல்ஸ் (இங்ழ்ங்ஹப்ள்) என்று சொல்லக்கூடிய வகையில் கோதுமை, ஓட்ஸ், பார்லி ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன.
நம்முடைய ரசம் மிகச்சிறந்த உணவும், மருந்தும் ஆகும். ரசத்தில் பருப்பு, சீரகம், மஞ்சள், மிளகு, கசகசா, வெந்தயம், பெருங்காயம், கடுகு, கொத்தமல்லி ஆகியவை சேர்க்கப்படுகின்றன. சீரகம் என்பது சீர் ‘ அகம். அகம் என்பது உடலின் உள் பாகத்தைக் குறிக்கும். உடலை சீர் ஆக வைத்துக் கொள்ள உதவுவது சீரகமாகும். மிளகுக்குப் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. “பத்து மிளகு கைவசம் இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்” என்பது பழமொழியாகும். அதாவது பகைவன் வீட்டில் விஷத்தை உணவுடன் கலந்து கொடுத்தாலும் அந்த விஷத்தை முறிக்கும் சக்தி மிளகுக்கு உள்ளது. மேலும் சளி, இருமல் போன்ற பல விதமான தொல்லைகளிலிருந்து நிவாரணம் அளிக்க மிளகு உதவுகிறது. மஞ்சள் மிக்க மருத்துவ குணம் நிறைந்தது என்பது அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு. மஞ்சள் கேன்சர் வராமல் தடுக்கக்கூடியது. ஒரு சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. நம் தமிழகத்துப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதற்குக் காரணமே மஞ்சள் ஒரு சிறந்த காஸ்மெட்டிக்ஸ் என்பது ஆகும். மஞ்சள் முகத்திற்கும் உடலுக்கும் அழகையும் பொலிவையும் தரக்கூடியது.
எந்தெந்த உணவுப் பொருட்களில் கசப்புச் சுவை உள்ளதோ அவற்றல் கால்சியம், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. உதாரணம், வெந்தயம், முருங்கைக்காய், முருங்கைக்கீரை, பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை, கசப்புச் சத்து இனிப்பு நோயைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பாகற்காய், பாகல் இலைச்சாறு, வெந்தயம் ஆகியவை சிறந்த மருந்தாகும்.
எத்தனையோ வகைகளான கனிகள் இருந்தும் ஒளவைப்பாட்டியார் அதியமானுக்கு அவன் நீண்ட நெடுங்காலம் நலமுடன் வாழ நெல்லிக்கனியைக் கொடுத்தார் என்பது செய்தி. நெல்லிக்கனியில் வைட்டமின் மிக அதிகமாக உள்ளது மட்டுமின்றி உயிர்சத்தும், வயதாகும் பொழுது ஏற்படும் மாற்றங்களைக் கட்டுப்படுத்தி இளமையுடன் வைத்திருக்கவும் ஆயுளை நீட்டிக்கவும் உதவும்.
நம்முடைய முன்னோர்கள் மிகச்சிறந்த நுண்அறிவுடையவர்களாகவும் ஆற்றல் உடையவர்களாகவும் விளங்கியுள்ளனர். அவர்கள் கூறிச்சென்ற எல்லாப் பழமொழிகளையும் கூர்ந்து ஆராய்ந்தால் அவை ஒவ்வொன்றிலும் விஞ்ஞான அறிவு நிறைந்திருப்பது தெரியவருகிறது. தமிழக கோவில்களில் தரப்படும் பிரசாதங்களில் கூட ஊட்டச்சத்தும், மருந்துச் சத்தும் கொண்டுள்ளன. உதாரணமாக நம்முடைய (விநாயகர்) பிள்ளையார் திருத்தலங்களில் பொரி, கடலை, சுண்டல் தரப்படுகின்றன. பொரி வயிற்றுப் பொருமலைச் சீராக்கக்கூடியது. சுண்டல் கடலையில் உள்ள புரதம் இரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்க வல்லது. முருகன் கோவிலில் தரப்படுகின்ற பிரசாதம் தேனும் தினைமாவும், பஞ்சாமிர்தம் ஆகும். தேன் ஒரு சிறந்த உணவும் மருந்தும் ஆகும். தினையில்தான் மற்ற எல்லா தானியங்களையும் விட அதிகமான தரமான புரதம் உள்ளது. பஞ்சாமிர்தத்தில் வாழைப்பழம், பேரீச்சம்பழம், தேன், கற்கண்டு, நெய் ஆகியவை உள்ளன. இவையனைத்தும் ஊட்டச்சத்தும் மருந்துச்சத்தும் கொண்டவை. திருமால் அல்லது பெருமாள் கோவில்களில் பிரசாதமாக துளசித் தீர்த்தம் தரப்படுகிறது. துளசித் தீர்த்தம் என்பது தேங்காய்த் தண்ணீரையும், துளசி இலையையும் சேர்த்து தாமிரப்பாத்திரத்தில் (பஞ்சாமிர்தம்) ஊற்றி இரவோடு இரவாக வைத்திருந்து காலையில் எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளப்படுவதாகும். தேங்காய்த் தண்ணீர் அல்லது இளநீரில் வைட்டமின்கள், என்சைம்கள், ஹார்மோன்கள், மினரல்கள், குளுகோஸ் ஆகியவை நிறைந்துள்ளன. பழங்காலத்தில் காலரா போன்ற நோய்கள் ஏற்பட்ட பொழுது இளநீர் அல்லது தேங்காய்த் தண்ணீர் அவர்கள் உயிரைத் தக்க வைத்துக்கொள்ளப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுதுள்ள இன்டிராவீனஸ் குளுகோஸ் அல்லது சலைன் இன்ஜக்ஷனுக்குப் பதிலாக, இளநீர் வாய் வழியாகத் தரப்பட்டிருக்கிறது. இளநீர் சிறிது அமிலத்தன்மை கொண்டிருப்பதால், அது தாமிரப்பாத்திரத்தில் இரவில் வைக்கப்பட்டிருக்கும் பொழுது நமது உடலுக்குத் தேவையான அளவு (மிகச்சிறிய அளவு) தாமிரச்சத்தைக் கரைத்து நம்முடைய உடலுக்கு அளிக்கிறது. துளசி நுரையீரல் சம்பந்தப்பட்ட பல நோய்களைப் போக்கவல்லது.
தொடரும்…

 

1 Comment

  1. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு எங்களது மனமார நன்றி. அவர்கள் கொடுத்த காய்கறி பலம் பருக்கை சம்பந்தப்பட்ட அனைத்தும் இங்கு சவுதி அரேபியாவில் கால்வாசிக்கூட கிடைப்பதில்லை, என்றாவது ஒரு நாள் நாங்கள் எங்கள் தாய் நாட்டுக்கு நிரந்தரமாக திரும்பி போகும்போது அந்த தானிய வகைகளை உன்போன்போம்
    Regards ஷம்ஸ்

Post a Comment


 

 


June 2011

மு. மேத்தா கவிதை….
கவிதை
உணவும் உடல் நலனும்
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
குழப்பம் தீர வழி
அலட்சியப்படுத்தாதே… இலட்சியப்படுத்து
உனக்குள்ளே உலகம்
மாணவச் செல்வங்களே…
லோக்பால் மசோதா
கல்விக்கடன் என்பது என்ன?
நகரும் நதிகள்
முயன்றேன் வென்றேன்
மனநிலை மேலாண்மை(ATTITUDE MANAGEMENT)
எனக்குப் பேச வராது…?
பெண்களுக்கான வாழ்வியல் நுட்பங்கள்
வெற்றி பெரும் வித்தை இதோ
அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு
மாணவனே… வெற்றி மீது பற்று வை
உள்ளத்தோடு உள்ளம்