Home » Articles » பிக்மாலியன்

 
பிக்மாலியன்


மாதவன்
Author:

பிக்மாலியன் என்று ஓர் சிற்பி இருந்தாராம். அவர் ஓர் அழகான பெண் சிலையை முழு ஈடுபாட்டுடன் செதுக்கினாராம். அந்த சிலை உயிர் பெற்று வந்து தன்னை மணந்து கொள்ளும் என்று நம்பினாராம் இறுதியில் அப்படியே நடந்தது என கீரேக்க நாட்டு புராணக் கதை கூறுகிறது.
கதையில் இருந்து வாழ்க்கை, வாழ்க்கையில் இருந்து கதை என இந்த கதையை வாழ்வியலோடு தொடர்புபடுத்தும் பொழுது விளைந்தது தான் (Pygmalion Effect) பிக்மாலியன் விளைவுகள்.
மனித வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உள்ள இந்த பிக்மாலியன் விளைவுகள் கூறுவது என்ன?
“நாம் ஒருவரை எப்படி எதிர்பார்த்து நடத்துகிறோமோ அவருடைய செயல்கள் அதுபோலவே அமையும். உயர்வாக நினைத்தால் உயர்வாக, தாழ்வாக நினைத்தால் தாழ்வாக இவைகள் வெறும் வார்த்தைகள் அல்ல நடைமுறைகள்’, ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகள். மேலும், இந்த விளைவுகள் மனிதனின் மனதில் தன்னம்பிக்கையும், நேர்மறைசிந்தனைகளையும், வளர்க்கிறது என கண்டறியப்பட்டுள்ளன. கணவன் – மனைவி, அதிகாரி – தொழிலாளி, ஆசிரியர் – மாணவர் என எல்லோருக்கும் இந்த விளைவுகள் பொருந்தும். தனி மனித வாழ்வு என்பது குடும்பம், சமூகம் என இரு பிரிவுகளைக் கொண்டது. இந்த இரண்டு வாழ்க்கையிலும் சக மனிதர்களை உயர்வாக எதிர்பார்த்து, நடத்தி அதன் மூலம் நல்ல விளைவுகளைப் பெறமுடியும் என்றால் நம் மனதில் நம்மை பற்றி உயர்வான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதில் வெற்றி காண நம்மால் முடியாதா?
நிச்சயம் முடியும். மனித வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் இன்றியமையாதவை. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களுக்கு நியாயமானது. பெற்றோர்களின் இந்த எதிர்பார்ப்புகளால் சிலரின் திறமைகள் அவர்களிடம் இருந்து மறைந்து விட்டன என்று கூறுவதை தற்காலிகமாக மறந்து விட்டனர் என்று கூறலாம். நாம் எல்லோரும் நம் பள்ளிப் பருவத்தில் ஏதேனும் ஒரு திறமையால் ஆட்கொள்ளப் பட்டிருப்போம். உதாரணமாக ஓவியம் வரைதல், பேச்சு போட்டிகளில் சிறந்து விளங்குதல், சிலர் குறிப்பிட்ட விளையாட்டில், நடிப்பு, கலை, இசை மற்றும் நடனக்கலை என பல்வேறு திறமைகள், வேலை, சம்பளம், பிறகு குடும்பம் என நம் சூழலில் உள்ளவர்கள் வாழும் வாழ்க்கையே நம் எதிர்பார்ப்புகளாக அமைவதால் இயற்கையாக நம்மிடம் இருந்த இந்தத் திறமைகள் மெல்ல மறைந்தன (மறந்தன). இன்று நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சிலரின் பள்ளிப் பருவத்தை பின்நோக்கி பார்க்கும் பொழுது, அவர்களில் பலர் அந்நாளில் சிறந்த ஓவியராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் பல்வேறு திறமைகளோடு சிறந்து விளங்கியுள்ளனர். இந்நாளில் குடும்பம் குழந்தைகள் என்று வாழும் இவர்களிடம் இந்தத் திறமைகள் பற்றி கேட்கும் பொழுது இவர்களுக்குள் ஒரு பெருமிதம் தோன்றினாலும், ‘அதெல்லாம் அந்தக் காலம்’ என்று ஒரு வார்த்தையில் கூறி தங்களிடம் இன்றும் மறைந்திருக்கும் அந்தத் திறமைகளை உணராமல் தங்களுக்குத் தாங்களே ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்தை விட்டு வெளியே வர மறுக்கிறார்கள்.
இன்று இந்த ஓவியர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் எங்கே? இதற்குக் காரணம் என்ன? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியை எதிர்பார்த்த அளவு அவர்களின் திறமைகளை எதிர்பார்க்காதது, அதை அறிந்து உற்சாகப்படுத்தாததுÐ இன்று பெற்றோர்களாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்குத் தங்களின் கடந்த காலம் திரும்ப வராமல் போகலாம். ஆனால் உங்களுக்குள் இருக்கும் திறமைகளுக்குக் கடந்த காலம், நிகழ்காலம் என்று கிடையாது. எப்படி மனிதனின் மனதில் தோன்றிய எண்ணங்கள் எளிதில் மறைவது இல்லையோ, அதுபோல்தான் உங்கள் திறமைகளும் இப்பொழுது நீங்கள் நினைத்தால் கூட அந்தத் திறமைகளுக்கு உயிர் கொடுக்கலாம்.
அதன் மூலம் சிறப்பான எதிர்காலம் பெறலாம். உங்கள் திறமைகளால் நீங்கள் ஒளிர்வீர்கள் என்று உங்களிடம் நீங்கள் எதிர்பார்த்தால், நீங்கள் ஒளிர்வீர்கள். இதற்கு வயது ஒரு தடையல்ல. அன்று பதினாறு (16) இன்று நாற்பது (40) இரண்டுக்கும் இடையே அனுபவம் ஓர் மகத்தான துணையாக அமையும். அனுபவமே தைரியம், அனுபவமே ஆசான், நம்புங்கள். இது பலரது அனுபவ உண்மை. சற்று முயற்சி செய்து தற்காலிகமாக நீங்கள் மறந்த திறமையைச் செயல்படுத்தும் நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் நிகழும் விளைவுகள்.
1. உங்கள் பிள்ளைகளின் திறமைகளை நீங்கள் உணர்வீர்கள், செயல்படுத்துவீர்கள்
2. உங்கள் வாழ்க்கையில் நடந்த இந்த விளைவுகளை உங்கள் சந்ததிகள் பாடமாக ஏற்றுக்கொள்வார்கள்.
நான் அடிக்கடி என் நண்பர்களிடம் கூறும் வார்த்தை வாழ்க்கை என்ற பல்கலைக்கழகத்தில் நான் என்றென்றும் மாணவன், ஆம் நாம் எல்லோருமே இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தான் இந்த மாணவப் பருவம் நிதானமும், சிந்தனையும் கொண்டது. நம் சிந்தனையின் மூலமாக நம்மோடு சேர்ந்து மற்றவர்களையும் உயர்த்தலாம். அதுவே இந்த மாணவப் பருவத்தின் சிறப்பு. இங்கே நம் சூழலில் இருந்து கற்கும் பாடங்களுக்கு நாமே ஆசிரியர்; நாமே மாணவர். நூறு கிலோ எடையுள்ள ஒரு கல் சீராக செதுக்கப்பட்டு எடை குறைந்து நம் முன்னே அழகான சிற்பமாக காட்சி அளிப்பது போல் இங்கே குறிப்பிட்டுள்ள சிந்தனைகளை நம்மிடம் நாமே எதிர்பார்ப்புகளாக செயல்படுத்தினால் நம் வாழ்க்கையில் ‘பிக்மாலியன்’ விளைவுகளைக் காணலாம். நாமும் பிக்மாலியனாக மாறலாம்.
எனவே, நீங்கள் எதுவாக ஆக விருப்பப்படுகின்றீர்களோ அதுவாக, முதலில் உங்கள் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
நிச்சயம் அதுவாகவே நீங்கள் ஆவீர்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2011

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
பிக்மாலியன்
முயன்றேன்… வென்றேன்…
மேன்மைமிகு மேலாண்மையில் வலிமைமிகு வள்ளுவம்
எல்லாம் எவன் செயல்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
நிலைத்திருக்கும் நினைவுகள்
இங்கிலீஸ் ரொம்ப ஈஸி
திருநங்கையர் தினம்
நிதானித்து நட
பிறப்பு தடையல்ல
பெண் இன்றி அமையாது வாழ்வு
மனம் விட்டு கேளுங்கள்
உனக்குள்ளே உலகம்-11
முடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்
உள்ளத்தில் திடம்!! வரலாற்றில் இடம்!!
அச்சீவர்ஸ் அவென்யூ
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்