Home » Articles » சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50

 
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50


மோகன்குமார் இரா
Author:

இரண்டு ஓட்டுநர்கள், இருவருக்குமே அவசரம். முதலாமவர் நிதானமாக எதிர்புறம் வாகனங்கள் வருகின்றனவா? யாரேனும் சாலையைக் கடக்கின்றனரா? சாலை நேராக, பழுதடையாமல் இருக்கின்றதா? என கவனமாகப் பார்த்து வாகனத்தைச் செலுத்தினார். ஆகவே அவர் அவ்வாகனத்தில் பயணித்த பயணிகள், பாதசாரிகள், இதர வாகனங்களில் பயணம் செய்தோர் என அனைவருக்கும் எவ்வித ஆபத்துமின்றி சந்தோஷ சூழல் தொடர்ந்து நிலவுவதை உறுதி செய்தார்.
மற்றொரு ஓட்டுனர், அவசரமான சூழலில், நிதானமிழந்து, கவனக்குறைவுடன், சாலையில் இதர வாகனங்கள், பாதசாரிகள் சென்று கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாது, கட்டுப்பாடற்ற வேகத்துடன் விரைந்து செல்லும் நோக்குடன் புறப்பட்டார். ஒரு வளைவில் முந்திச் சென்றபோது எதிரே வந்த பள்ளி வாகனத்தில் மோதி தான் இறந்ததுடன் சக பயணிகள் மற்றும் பல பள்ளி மாணவர்களின் இறப்பிற்கும் காரணமாக அமைந்துவிட்டது அந்த இரண்டாவது ஓட்டுனரின் நிதானமற்ற செயல். அது மட்டுமா? அவரது அநியாயச் செயல், ஒன்றுமறியா அப்பாவி குழந்தைகள் எத்தனை பேர் கை, கால், உடலின் பல பகுதிகளில் உள் மற்றும் வெளிக்காயங்களுடன் வலி அனுபவித்து வாழ்நாள் முழுவதும் துன்பத்துடன் வாழவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்திவிட்டது. விபத்திற்கு உட்பட்டவர்களின் பெற்றோர், குழந்தைகள், கணவன், மனைவி என அனைவருக்கும் வாழ்நாள் சோகத்தை ஏற்படுத்தியதற்குக் காரணமாக அமைந்துவிட்டார், மேற்கண்ட அவசர புத்தி ஓட்டுனர்.
இதே அவசரத்தை ஓட்டுனர் பயன்படுத்தும்போது ஏற்பட்ட பின் விளைவுகள் தான் பெற்றோர், ஆசிரியர், மேலாளர், மருத்துவர், பணியாளர், தொழில் அதிபர் என யார்? யார்? அவர் அவர் சூழல்களில் பயன்படுத்தினாலும் ஏற்படப் போகின்றது.
எடுத்துக்காட்டாக, சில தினங்களுக்கு முன் பெங்களூரில் தேர்வில் மதிப்பெண் குறைந்த 10 வயது குழந்தையைப் பெற்றோர் அடித்து, உதைத்து அவமானப்படுத்தியவுடன், அந்தக் குழந்தை தற்கொலை செய்த செய்தியை படித்திருப்பீர்கள். ஒரே குழந்தையை இழந்த பெற்றோர் இனி திருந்தி என்ன பயன்? அவர்கள் வாழ்க்கை முழுவதும் நரக வாழ்வுதான். ஆனால் அவர்களின் அனுபவம் நமக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.
இதுபோன்று 8வது வகுப்பு மாணவி ஒருவர் சகமாணவியரின் பொருட்களைத் திருடி இருப்பார் என்ற சந்தேகத்தில், அவர் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியை அவரை மிக கடுமையாக (அவசரப்பட்டு, நிதானமிழந்து, சுயகட்டுப்பாடின்றி, உடனடி முடிவு எடுத்ததன் விளைவாக) மற்ற மாணவர்கள் முன்பு வைத்து அவமானப்படுத்தியுள்ளார். மாணவி தற்கொலை செய்துவிட்டார். மாணவியின் பெற்றோர் எவ்வளவு வேதனையுடன் துடிதுடித்து போய் வாழ வேண்டியிருக்கும்?
சென்னையில் 4 ஆசிரியைகள் சேர்ந்து ஒரு மாணவியைத் திருத்தும் விதமாக அவமானப்படுத்திய செய்தியையும் படித்திருப்பீர்கள். அதிலும் மாணவி தற்கொலை. ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைகளின் இழப்பு, தாய், தந்தையரின் இழப்பு அல்லது உடன் பிறந்தவரின் இழப்பு என உயிர்களின் இழப்பு என்பது வலி மிகுந்த இழப்பு.
என்ன காரணம்?
நிதானமின்மை, அவசரம், உடனடியாக நினைத்த காரியத்தை அடைந்துவிட வேண்டும் என்ற விவேகமற்ற வேகம்.
நிதானமின்மை தான் ஓட்டுனர்களைக் கவனமின்றி வேகமாக வாகனத்தை செலுத்த வைக்கின்றது.
பெற்றோர், ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளை வழி நடத்த அன்பான வழிமுறைகளை விட்டுவிட்டு அடி, உதை போன்ற அவசரமான, நிதானமற்ற வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்க வைக்கின்றது.
பலன்: விபத்துக்கள், விரக்தி, தோல்வி மனப்பான்மையின் உருவாக்கம், அவமானம், தற்கொலை. மேலும் எதிர்மறை விளைவுகளும், தாக்கங்களும்.
ஆகவே, அன்பு தன்னம்பிக்கையாளர்களேÐ
அவசரம் வேண்டாம்.
நிதானம் போதும்.
குறிக்கோள்களை அடைவது உறுதி.
சந்தோஷம் தொடரும்.
சாதனைகள் நிகழும்.

40. கோபம் அது ஒரு சாபம்
கோபத்தினால் கண்ட பலன்களே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் கோபத்தின் உச்சியில் சிலர் எடுத்த பல முடிவுகளே, உலக சரித்திரத்தில் மிகவும் மோசமான உயிர் சேதங்கள் மற்றும் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஏன் உலக வரலாற்றினைப் புரட்டிப்பாருங்கள்
சமீப காலத்தின் செய்தித்தாள்களைச் சற்று திருப்பிப் பாருங்கள்.
சகோதரர்கள், சகோதர சகோதரிகளைக் கொன்ற செய்திகள். பணியாளர்கள் மேலதிகாரிகளைக் கொன்ற செய்திகள். தொழிலதிபர்கள் சக தொழிலதிபர்களை (யாருக்கும் யாரும் போட்டியாளர் இல்லை, என்பதை உணராமல்) கொன்ற செய்திகள்…
அதற்கும் மேலாக ஆசிரியர், பெற்றோர், நண்பர், சமூகத்திடம் கொண்ட உச்சகட்ட கோபத்தில் தன்னையே தான் மாய்த்துக்கொண்ட குழந்தைகள் பற்றிய செய்திகள்…
இன்னும் எத்தனையோ சகோதரர்கள், கணவன் மனைவியர், பெற்றோர் குழந்தைகள், நண்பர்கள், கோபத்தின் உச்சியில் எடுத்த முடிவுகளால் தங்களுக்கு இருந்த உயிருக்குயிரான. உறவுகளை (சீரழித்து) அழித்து இருக்கிறார்கள். எத்தனையோ சகோதர சகோதரிகள், பெற்றோர் குழந்தைகள், கணவர் மனைவியர், ஒரே வீட்டில் வசித்தும், தங்களுக்குள் எந்த உரையாடலும் இன்றி (ஏதோ) வாழ்ந்து (நடித்து) கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, கோபம் உயிர்களைப் பறிக்கலாம். உறவுகளை முறிக்கலாம், எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கலாம். உடல் நலத்தை சிதைக்கலாம். சிந்திக்கும் திறனை குறைக்கலாம். ஆகவே உங்கள் வாழ்வில் கோபத்திற்கு இடம் கொடுப்பீர்களானால் சந்தோஷத்தோடு சாதனை வாழ்வு வாழ வேண்டிய அற்புத வாய்ப்பை நீங்கள் இழக்க வேண்டியிருக்கும்.
கோபம் எப்படி ஏற்படுகிறது
கோபம் என்பது அடிப்படை காரணம் அல்ல. இது ஒரு விளைவு மட்டுமே, அப்படியானால் ஒரு செயலைத் தொடர்ந்து, உடனடியான விளைவு என்பது அடிப்படை காரணங்களாகிய (அடிப்படை விளைவுகள்) பொறாமை, பயம், தோல்வி, கசப்புணர்வு, அவமானம், பலமின்மை, ஏமாற்றம், பாதுகாப்பின்மை, தனிமை போன்ற அடிப்படை முதல்நிலை உணர்வுகளின் உருவாக்கமே. ஒரு செயல் விளைவித்தவுடன் இந்த அடிப்படை உணர்வுகள் எந்த அளவு வீரியத்துடன் நம்மில் உருவாகின்றதே அந்த அளவு நம் கோபம் (இரண்டாம் நிலை உணர்வு) நம்மிடமிருந்து பீறிட்டு, வார்த்தைகள், செயல்கள், உடல்நிலை மற்றும் மனநிலை மாற்றங்களாக வெளிவருகின்றது.
ஆகவே, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த முடிவு செய்வீர்களானால், முதலில் இரண்டாம் நிலை உணர்வாகிய கோபத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, அந்தக் கோபத்திற்கு காரணமான முதல்நிலை உணர்வுகளில் கவனம் செலுத்துங்கள்.
கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
கோபத்தின் ஆணிவேர் என்பது எண்ணங்களில் தான் இருக்கின்றது. நாம் எதிர்பார்க்கும் விதமாக நம்மை சுற்றி இருப்பவர்கள் செயல்படாவிட்டால்; நாம் விரும்பும்படி நம்முடைய சூழ்நிலைகள் அமையாவிட்டால், நம்முடைய மனது எண்ண அலைகளை ஓடவிடுகின்றது. அந்த எண்ண அலைகளின் விளைவுகள் தான் கோபத்தின் முதல்நிலை உணர்வுகள், எண்ணத்தை தொடர்ந்து வரும், முதல்நிலை உணர்வுகளின் தாக்கம்தான் கோபம் என்கிற இரண்டாம் நிலை உணர்வு. அத்தகைய இரண்டாம் நிலை உணர்வின் வெளிப்பாடுகள் தான் திட்டு, அடி, உதை, மறைமுக தாக்குதல்கள், பொருட்களை உடைத்தல், கொலை, புலம்பல், தற்கொலை என்ற பல்வேறு எதிர்மறை செயல்கள். கோபத்தின் காரணமாக நேர்மறை செயல்களும் விளைவுகளாகலாம். எத்தனையோ சாதனையாளர்களின் சாதனை சரித்திரத்தின் பின்னணியைப் பார்ப்பீர்களானால் சில சூழல்கள் அல்லது நபர்கள் மீது அவர்களுக்கு ஏற்பட்ட கோபமாக இருந்திருக்கலாம். இதனால் நன்மை இருப்பது ஒரு பக்கம். ஆனால் அதிக கோபத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட சாதனையாளர் மனதில், பழிக்குப்பழி அல்லது விரோத உணர்வு தொடர்ந்து இருந்துவிடாமல் இருப்பது அவசியம்.
ஏனென்றால் வெளிப்படுத்தப்பட்ட கோபத்தின் விளைவைவிட, மனதில் அடக்கி வைக்கப்பட்ட கோபத்தின் பின்விளைவு மோசமானது ஆகும்.
ஆகவே, கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டுமானால், கோபம் வரும் சூழல்களில் நமக்குள் ஏற்படும் முதல்நிலை உணர்வுகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
எடுத்துக்காட்டாக, என்னுடைய நண்பர் ஒருவரின் மகன் காதல் திருமணம் செய்யும் முடிவுடன் தாய் தந்தையுடன் பேசத் துவங்கினான். அவன் கூறிய செய்தியைக் கேட்ட தாய் ,மயங்கி விழுந்துவிட்டார். பின் கோபத்துடன் மகனைத் திட்டியதுடன் உடலாலும், மனதாலும் சோர்ந்துவிட்டார். தந்தையோ மகனை வீட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடத் துவங்கினார்.
தாய் தந்தையருக்கு இவ்வளவு கோபம் கொப்பளிக்க என்ன காரணம்? ஊரார் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமாக இருக்கலாம். அதாவது பயம் அல்லது அவமான உணர்வு. தங்கள் கனவுகள் தகர்ந்துவிட்டதோ என்ற எண்ணமாக இருக்கலாம். அதாவது ஏமாற்றம் என்ற உணர்வு, தாங்கள் போட்ட திட்டம் அல்லது தாங்கள் விரும்பிய வரனை முடிக்கமுடியவில்லையே என்ற எண்ணம் கூட காரணமாக இருந்திருக்கலாம். இது தோல்வி என்ற முதல்நிலை உணர்வினை அடிப்படையாக ஏற்பட்ட எண்ணம்.
அத்துடன் எனக்கு கிடைக்காத வாய்ப்பு என் மகனுக்கு கிடைத்துவிட்டதே என்ற எண்ணத்தினால் ஏற்படும் பொறாமை உணர்வு கூட இந்த பெற்றோரின் கோபமான நடவடிக்கைகளுக்கு காரணமாக இருந்திருக்கலாம்.
மேலும் வருகின்ற மருமகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பாளா? தங்கள் அமைதியான வாழ்விற்கு, தங்கள் தேவைகளுக்கு தங்கள் பராமரிப்பிற்கு, தங்கள் மகனின் நிம்மதியான வாழ்விற்கு உதவியாக இருப்பாளா? என்ற பலவீனம் அல்லது பாதுகாப்பின்மை உணர்வு மற்றும் தனிமை போன்ற, முதல்நிலை உணர்வுகள் கூட அந்த பெற்றோர்களின் கடுமையான கோபத்திற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.
ஆகவே, மேற்கண்ட நிகழ்வில் பெற்றோர் தங்கள் இயல்பான குணநலன்கள், கோபத்திற்கான முதல்நிலை உணர்வுகளை (அவர்கள் மழலைக் காலம் முதல் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில்) விழிப்புணர்வுடன் ஆய்ந்து, அறிந்து ஆளுமையில், குணநலன்களில் தேவையான மாற்றங்களைச் செய்து வாழ்ந்து வந்திருப்பார்களானால், எதிர்பாராத கோப உணர்வையும், கோபத்தின் வெளிப்பாடுகளையும் தவிர்க்கலாம்.
கோபத்தினை எளிதாக மேலாண்மை செய்ய முடியும் என்பதனை புரிந்து கொள்ள ஓர் எடுத்துக்காட்டு:
ஒரு நண்பர், அமெரிக்க தேசத்தில் பணிபுரியும் தன் மகனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பை பெறுகிறார். கிடைத்த செய்தி, “அப்பா, நான் என்னுடைய வருங்கால வாழ்க்கைத் துணையை கண்டுபிடித்துவிட்டேன்” என்பது தான். அவர், “அப்படியா மகனேÐ நல்லது. இந்தச் செய்தியை உன் அம்மாவிடம் அவசரப்பட்டு சொல்லிவிடாதே” என்று கூறிவிட்டு, மகனிடம் சில கேள்விகளைக் கேட்டார்.
குறிப்பாக, மகனே அந்த உன் தோழி உனக்கு அறிமுகமாகி எத்தனை காலம் ஆகியது? என்ற கேள்வியை தொடுத்தார். மகன், “மூன்று மாதங்கள்” என்றார். தந்தை உடனே “பரவாயில்லை, நீ தொடர்ந்து அவளுடன் நட்போடு பழகு, திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர். அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது. ஆனால் அப்பெண்ணின் இயல்பு, குணநலங்கள், எதிர்பார்ப்புகள், குடும்ப பின்னணி போன்றவற்றைப்பற்றி விழிப்புணர்வுடன் பழகி மேலும் பயனுள்ள செய்திகளை, அனுபவங்களை தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்துவாயாக” என்று அறிவுரை வழங்கினார்.
அடுத்து மூன்றாவது நாளில் மகனிடமிருந்து தந்தைக்கு அழைப்பு. “அப்பா நான் அந்த பெண்ணை மணக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டேன். இனி நீங்கள் நம் ஊரிலேயே உங்களுக்குப் பிடித்தமான வரனை பார்க்க தொடங்கிவிடுங்கள்” என்றார். இந்த இரண்டாவது நிகழ்வில் எவ்வளவு சந்தோஷம் பெற்றோருக்கு.
ஏன்? இந்த இரண்டாவது நிகழ்வில் மட்டும், தந்தைக்கு மகனிடமிருந்து வந்த செய்தியைக் கேட்டபோது பயம், அவமானம், தோல்வி, ஏமாற்றம், பொறாமை போன்ற கோபத்திற்கு அடிப்படையான முதல்நிலை உணர்வுகள் வந்திருக்காதா?
கண்டிப்பாக ஒரு தந்தை என்ற நிலையில் அப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்பட்டிருக்கும்.
ஆனால், தன் சுய விழிப்புணர்வின் மூலம் அவற்றை அறிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அந்த உணர்வுகள் வழங்கிய தூண்டுதல்களுக்கு ஏற்ப செயல்பட்டு கோபம் என்ற எரிமலையை வெடித்து சிதறவிடாமல், அமைதியாக செயல்பட்டார். தந்தையின் முதிர்வான செயல்பாடு காரணமாக மகன் பெற்றோர் விருப்பமே என் விருப்பம் என்றநல்ல முடிவினை எடுத்துவிட்டார். குடும்ப உறவுகள் சீர்குலையவில்லை. கொலைகள், தற்கொலைகள் நடந்துவிடவில்லை. அமைதி கெட்டுவிடவில்லை. கசப்புணர்வுகள், மன அளவு வடுக்கள் யாருக்கும் ஏற்பட்டுவிடவில்லை. எப்படி முடிந்தது?
சுயவிழிப்புணர்வுடன், பொறுமையுடன் நிகழ்ந்த உரையாடல்கள் காரணமாக மட்டுமே முடிந்தது.
ஆகவே, சந்தோச சாதனைப் பயணம் மேற்கொண்டுள்ள தன்னம்பிக்கை நாயகர்களே, நாயகிகளே, எப்பொழுதும் சுயவிழிப்புணர்வுடன் செயல்பட்டு, உங்களில் காணப்படும் முதல்நிலை கோப உணர்வுகளைப் புரிந்துகொண்டு அமைதியுடன் சூழல்களைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள்.
கோபம் உங்களைப் பார்த்து கோபப்படத் துவங்கும். அத்தகைய சுயவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான், உளவியல் வல்லுனர்கள், கோபம் வந்தால் 1 முதல் 100 வரை எண்ணுங்கள், கோபம் கொள்பவருக்கு கோபமாக ஒரு கடிதம் எழுதுங்கள் (தபால் செய்ய வேண்டாம்) என பல வழிமுறைகளை அறிவுறுத்துகிறார்கள்.
அதைவிட கோபம் வருவதற்கு முன்பாகவே, இப்பொழுதிருந்தே தன் விழிப்புணர்வை நோக்கி செயல்படுவோம். நம்மில் காணப்படும் கோபத்திற்கான முதல்நிலை உணர்வுகளையும், அவற்றின் காரணங்களையும் கண்டுபிடித்து, கோபத்தை முளையிலேயே கிள்ளி எறிய முடிவெடுப்போம்.
என்றென்றும் சந்தோசத்தோடு சாதனை வாழ்வு வாழ்வோமாகÐ வாழ்த்துக்கள்Ð
(சந்தோச சாதனை அனுபவங்களுடன் அடுத்த இதழில் சந்திப்போம்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2011

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
பிக்மாலியன்
முயன்றேன்… வென்றேன்…
மேன்மைமிகு மேலாண்மையில் வலிமைமிகு வள்ளுவம்
எல்லாம் எவன் செயல்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
நிலைத்திருக்கும் நினைவுகள்
இங்கிலீஸ் ரொம்ப ஈஸி
திருநங்கையர் தினம்
நிதானித்து நட
பிறப்பு தடையல்ல
பெண் இன்றி அமையாது வாழ்வு
மனம் விட்டு கேளுங்கள்
உனக்குள்ளே உலகம்-11
முடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்
உள்ளத்தில் திடம்!! வரலாற்றில் இடம்!!
அச்சீவர்ஸ் அவென்யூ
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்