Home » Articles » திருநங்கையர் தினம்

 
திருநங்கையர் தினம்


மனோகரன் பி.கே
Author:

இந்த ஆண்டு (2011) முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கையர் தினம் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2008-ம் ஆண்டு ‘அரவாணிகள் நலவாரியம்’ தோற்றுவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ம் தேதிதான் திருநங்கையர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது,
பெண் என்பது ஒரு பாலினம் ஆண் என்பது இன்னொரு பாலினம், அரவாணி என்பது மூன்றாவது ஒரு பாலினம் என்று கொள்ளலாம். ஆணும் பெண்ணும் இயற்கையின் படைப்பு என்றால் அரவாணிகளும் இயற்கையின் படைப்புதான் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அடிப்படையான பால் நிலையிலிருந்து திரிபடைந்தவர்களே இந்த அரவாணிகள். ஆரம்பத்தில் ஆணாகப் பிறக்கும் இவர்கள் நாளடைவில் மன ரீதியாக மற்றும் உடல் ரீதியாக பெண்மைக்குரிய தன்மையினை அதிக அளவில் பெறுவதால் இந்த மாற்றம் நிகழ்கிறது. பிறவியில் பெண்ணாகப் பிறப்பவர்கள் ஆணாகத் திரிபடைதலும் உண்டு. எனினும் எண்ணிக்கையில் இது மிகவும் குறைவு.
அரவாணிகள் பலகாலமாக அலி பேடி போன்ற சொற்களால் கிண்டலும் கேலியுமாக அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமின்றி வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள்.
அரவாணிகள் என்போர் இன்று நேற்றல்ல, இதிகாச காலத்திலிருந்தே இருந்து வருகிறார்கள். தொல்காப்பியம் ஆண் தன்மை மிகுந்த பெண்களை ‘ஆண் அரவாணி’ என்றும் பெண் தன்மை மிகுந்த ஆண்களை ‘பெண் அரவாணி’ என்றும் விளக்குகிறது. நன்னூல் ஆண் அரவாணியை ‘ஆண்பேடு’ என்றும் பெண் அரவாணியை ‘பெண்பேடு’ என்றும் வகைப்படுத்தியுள்ளது,
மகாபாரதத்தில் அரவாணிகள் பாத்திரங்களாகவே படைக்கப் பட்டுள்ளனர், குருஷேத்திரப் போரில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க ‘எந்தக் குறையும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனித உயிர் தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்’ என ஆரூடம் கூறுகிறது. அர்ஜுனனின் மகன் அரவானை பலியாக்க முடிவு செய்கின்றனர். அதற்கு அரவான் சம்மதித்தாலும் தன் கடைசி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லறவாழ்வில் ஈடுபட்ட பின்புதான் பலிக்களம் செல்வேன் என்று சொல்கிறான். எந்தப் பெண்ணும் இதை ஏற்க முன்வரவில்லை. இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணக்கிறார். ஒருநாள் இல்லறவாழ்விற்குப் பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக்கோலம் பூணுகிறாள் மோகினி. அந்த மோகினியாகத்தான் அரவாணிகள் தங்களை நினைக்கின்றனர். கொலையுண்ட அரவானை கூத்தாண்டவராக நினைத்து வழிபடுகின்றனர்.
கூத்தாண்டவர் திருவிழா
அரவாணிகள் சமூகத்தில் கூத்தாண்டவர் திருவிழா ஒரு சமுதாய சடங்காக நடத்தப்படுகிறது. திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயில் விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் அருகே கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று நடைபெறுகிறது.
சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானை கணவனாக நினைத்துக் கொண்டு கோயில் அர்ச்சகர் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலி கட்டிக் கொள்கின்றனர். இரவு முழுவதும் தங்களது கணவனான அரவானை வாழ்த்தி பொங்கல் வைத்து கும்மியடித்து ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ச்சியாக இருக்கின்றனர். பொழுது விடிந்ததும் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அரவான் சிலை வைக்கப்பட்டு கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ. தூரத்தில் உள்ள கொலைக்களமான அமுதகளம் கொண்டு செல்லப்படுகிறது. உயிர்விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை துண்டிக்கப்படுகிறது. திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக் கொண்ட தாலியை அறுத்து பூ எடுத்து வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவைக் கோலம் பூணுகின்றனர்.
இந்தியாவின் பல பாகங்களிலிருந்து வரும் திருநங்கைகளை ஒன்றிணைக்கும் விழாவாகவும் அவர்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு கலைத்திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் இந்த விழா அமைகிறது,
அரவாணிகளை மக்கள் மதிக்கின்ற நிகழ்வுகளும் உண்டு, திருமண விழா குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா கடை திறப்பு விழா போன்ற நற்காரியங்களுக்கு பூசாரியை அழைப்பது போன்றே திருநங்கைகளையும் அழைத்து ஆசி வாங்கிக் கொள்ளும் பழக்கம் மும்பை போன்ற பகுதிகளில் அதிகமாக உள்ளது. அரவாணியிடம் ஆசி பெற்றால் குழந்தை அரவாணியாக மாறாது என்று நம்பிக்கையும் நிலவுகிறது.
அரசின் திட்டங்கள்
தங்கள் சமூகத்தின் முதல் போராட்டம் என்று அரவாணி சமூகத்தினர் கருதுவது 2004ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட ரிட் மனுவைத்தான் வங்கிக் கணக்கு திறப்பது வங்கிக் கடன் பெறுவது தொலைபேசி இணைப்புக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றிற்குத் தகுதியானவராகக் கருதப்பட ஒருவருக்கு தேவையான குடும்ப அட்டை அரவாணிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடரப்பட்ட ரிட் மனு அது.
ஜுலை 2004ல் சென்னை உயர்நீதி மன்றம் வெளியிட்ட அறிவிப்பில் அரவாணிகள் அரசு அடையாள அட்டைகளுக்கும் ஆவணங்களுக்கும் விண்ணப்பிக்கும்போது ஆண் அல்லது பெண் இரண்டில் தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறியது.
டிசம்பர் 2006ல் அரவாணிகளின் வாழ்க்கைச் சூழலில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும் என்று அரவாணிகள் நல்வாழ்வுக்கான துணைக்குழு அமைக்கப்பட்டது. இதனையொட்டி வெளிவந்த அரசாணை பல முக்கிய விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறது, அரவாணிகளுக்கு அனுமதி வழங்காத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீது நடவடிக்கைகள்; அரவாணிகள் சுய உதவிக்குழுக்களுக்கு சிறு நிதியுதவிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள்; பால் மாற்று அறுவை சிகிச்சை வேண்டி அரவாணிகள் அணுகும் மருத்துவமனைகளுக்குத் தேவையான அறிவுப்பூர்வமான தகவல்கள்; மனநல ஆலோசனை வழங்குவதற்கானப் பயிற்சி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அடையாள அட்டைகள் குறித்த புகார்களைத் தெரிவிப்பது போன்றவை செயல்படுத்தப்பட வேண்டும் என்று இந்த அரசு ஆணை தெரிவித்தது.
மே 2008ல் சமூக நலவாழ்வுத் துறையின் கீழ் அரவானி நலவாரியம் அமைக்கப்பட்டது. அதே மாதம் நிறைவேற்றப்பட்ட ஒரு ஆணை தமிழகக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அரவாணிகளுக்கு இட ஒதுக்கீட்டிற்கு வழி செய்தது.
கணக்கெடுப்பு
பொதுவாக அரவாணிகளை ‘ஆண்கள்’ பிரிவில் சேர்க்கும் நடைமுறை உள்ளது. ஆனால் ‘தங்களை தனிப்பிரிவாக சேர்த்து தனி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அரவாணிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணைப்படி அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு அரவாணிகள் குறித்து ஆய்வு செய்து அவர்களை ‘மற்றவர்கள்’ பிரிவில் சேர்க்கலாம் என்று பரிந்துரைத்தது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்கள் பெண்களுக்கு முறையே 1 2 என்ற எண்கள் வழங்கப்பட்டுள்ளன, இப்போது அரவாணிகளை ‘மற்றவர்கள்’ பிரிவில் சேர்க்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. அதன்படி அவர்கள் 3 என்ற எண்ணில் குறிக்கப்படுவார்கள் எனினும் 3ம் எண்ணில் குறிக்கலாம் என்று சம்பந்தப்பட்டவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே அந்த எண்ணில் சேர்க்கப்படுவர்.
ஆண் பெண் போலவே அரவாணியும் ஒரு மனித இனமே. அவர்களும் சமமாக கருதப்பட வேண்டும். அரவாணிகள் நலனுக்காக தமிழக அரசு தனி வாரியம் அமைத்துள்ளது. அவர்கள் கல்வியறிவு பெறவும் மருத்துவ அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறவும் சட்டபூர்வ அந்தஸ்தை பெறவும் அரசு வழி வகை செய்துள்ளது. நீண்டகால போராட்டத்திற்குப் பின்பு இப்போதுதான் சமுதாயத்தில் இவர்களுக்கு ஓரளவு அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கி உள்ளது.
மக்கள் அரவாணிகளை அருவருப்பான மனநிலையோடுதான் பார்க்கின்றனர். ஊடகங்கள் அவர்களை கேவலமாக சித்தரிக்கின்றனர். சமூகம் இவர்களை ஒரு இழி பிறவிகளாக கருதி புறக்கணிக்கின்றது. அரவாணிகள் குறித்து பல்வேறு பிரச்சனைகளும் சிக்கல்களும் விவாதங்களும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
மற்றவர்களைவிட உழைப்பிலும் அறிவிலும் அரவாணிகள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. சமுதாயம் தான் அவர்களுக்குரிய வாய்ப்புகளைத் தராமல் ஒதுக்கி வருகிறது. தடைகளைத் தாண்டி அரவாணிகள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறவேண்டும்.
திருநங்கை சமுதாயத்தில் பிறந்து இன்று ஆண் பெண் இருபாலரையும் விஞ்சி விடும் வண்ணம் மிகச் சிறந்த நடனக்கலைஞராக வளர்ந்து நடனப் பள்ளி தொடங்கி நடனத்தை வளர்த்து வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறார்.
திருநங்கைகளுக்குச் சமுதாயத்தில் அங்கீகாரம் தர வேண்டும் என்ற விழிப்புணர்வு விதைக்கப்பட்டதன் காரணமாக ஊடகங்களில் திருநங்கையே தொகுப்பாளராக வந்து முத்திரை பதித்து வருகின்றனர்.
அவர்கள் தங்களுக்குள் இருக்கும் மனத்தடைகளையும் குழப்பங்களையும் உடல் ரீதியான உறவுகள் குறித்தும் தெளிவான சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், பிரபலமாக உள்ள அரவாணிகள் களப்பணியாற்றி தங்களைப் போன்றவர்களை வழி நடத்த வேண்டும்,
அரவாணி வாழ்வு என்பது அவர்களாக விரும்பி ஏற்பதில்லை, அவர்களுக்குள் எழும் மாற்றங்களே அவர்களை அந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. வலியுடனும், வேதனையுடனும் வாழும் அரவாணிகளைப் புறக்கணிப்பதைத் தவிர்த்து அவர்களை அங்கீகரிக்க வேண்டும்.
அரவாணிகளுக்கான தவறான பிம்பத்தை உடைத்தெறிந்து அவர்களது உணர்வு மதிக்கப்படவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அவர்களை அரவாணி என்று குறிப்பிடுவதை விட திருநங்கை என்று அழைப்பதையே விரும்புகின்றனர். பெண்ணியம் போல அரவாணியம் பேசப்பட வேண்டும். அப்போதுதான் திருநங்கையரும் நல்வாழ்வு வாழ வழி பிறக்கும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2011

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
பிக்மாலியன்
முயன்றேன்… வென்றேன்…
மேன்மைமிகு மேலாண்மையில் வலிமைமிகு வள்ளுவம்
எல்லாம் எவன் செயல்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
நிலைத்திருக்கும் நினைவுகள்
இங்கிலீஸ் ரொம்ப ஈஸி
திருநங்கையர் தினம்
நிதானித்து நட
பிறப்பு தடையல்ல
பெண் இன்றி அமையாது வாழ்வு
மனம் விட்டு கேளுங்கள்
உனக்குள்ளே உலகம்-11
முடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்
உள்ளத்தில் திடம்!! வரலாற்றில் இடம்!!
அச்சீவர்ஸ் அவென்யூ
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்