Home » Articles » பிறப்பு தடையல்ல

 
பிறப்பு தடையல்ல


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளால் அனைத்து மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அடிமைப்பட்டு வாழ்ந்த போதிருந்த சுதந்திரம், இன்று இந்திய நாட்டில், சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுமையாக அனுபவிக்க இயலவில்லை.
வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளான உணவு, உடை, வீடு (குடிநீர், கல்வி, மருத்துவம்) உட்பட, அந்தந்தக் காலத்தே தடையின்றி அனைவருக்கும் கிடைப்பதே நமது அடிப்படை உரிமை. அவ்வாறு கிடைப்பதை உறுதி செய்வதும், இயற்கைச் சீற்றத்தாலோ, குழுக்களாலோ அல்லது தனிமனிதர்களாலோ தடை ஏற்படுமானால், அதைச் சரிசெய்து வழங்குவதுமே சுதந்திரம் ஆகும்.
ஆனால், இன்றைய நிலை என்ன? இயற்கைச் சீற்றங்களைக் கூட முன்கூட்டியே அறிந்துகொண்டு, அதன் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. ஆனால், ஜனநாயகம் என்ற போர்வையில் அரசியல் கட்சிக்காரர்கள். குழுக்களாக, மாறிமாறி, மக்களை மயக்கநிலையில் வைத்துக்கொண்டே ஆட்சியைக் கைப்பற்றி பலப்பல தலைமுறைகட்கு சொத்து சோர்ப்பதையும், தனி நபர்கள் அதிகாரம், பணம், பதவி, பேட்டைத் தலைவர் என்ற போர்வையில், ஏதுமறியாத அல்லது அறிந்தும் ஒன்றும் செய்யக் கையாலாகாத பொதுமக்களை, மிரட்டி, அநியாயங்களை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மையை உருவாக்கிவிட்டதையும் நினைத்து வருந்துவதைவிட, இந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே நோக்கம்.
மூதறிஞர் ராஜாஜி அவர்கள் 1925ம் ஆண்டு சிறையிலிருந்து எழுதியதாக, ஒரு செய்தியை ஈரோடு தேசிய விழிப்புணர்வு இயக்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதன் சாரம்:
“நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிவிட்டால், உடனே சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. நீண்ட காலத்துக்கு கிடைக்காது என்றே நினைக்கிறேன். தேர்தல், ஊழல், அநியாயம், பணக்காரர் பலம் மற்றும் ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை எல்லாம் சேர்ந்து சுதந்திர இந்தியாவில் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.
அடிமை இந்தியாவில் இருந்த நீதி, அமைதி, திறமை, நேர்மையான நிர்வாகம் ஆகியன சுதந்திர இந்தியாவில் இல்லையே என்று எண்ணிப்பலர் வருந்தும் நிலை ஏற்படும். அடிமைத்தனம் ஒன்றிலிருந்து காப்பாற்றப் பட்டதான லாபம் மட்டுமே கிடைக்கும்.
நமது நம்பிக்கை, ஒழுக்கம், இறைபக்தி, அன்பு இவைகளைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்விமுறைதான் தேவை. இதில் வெற்றியடைந்தால், சுதந்திரம் மகிழ்ச்சியைத் தரும் இல்லாவிட்டால், சுதந்திரம் பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும், அக்கிரமத்துக்கும் தான் நம்மை அழைத்துச் செல்லும்.
என்னேÐ ஒரு தீர்க்க தரிசனம். சுதந்திர இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய, சுயநலமில்லாத, நாட்டு நலனையே மூச்சாய் கொண்டு செயல்பட்டவர்களைத்தான் காணமுடிகிறது.
திரும்பத்திரும்ப தன்னம்பிக்கை உரைகளைக் கேட்டாலும், படித்தாலும், பொதுவான நாட்டு நிலைமை, மக்களின் மனோபாவம் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியையே இன்றைய இளைஞர்கள் மத்தியில் உண்டாக்கி வருகிறது. ஒருசமயம் ஏராளமான தன்னம்பிக்கையுடன் என்னால் கட்டாயம் முன்னேறமுடியும் என்று கூறும் மனம், பலசமயம் பத்திரிக்கை, டி.வி. செய்திகள் மூலம் என்னால் இந்த ஊழல் மலிந்த சமுதாயத்தில் எப்படிக் காலம் தள்ள முடியும்.
இப்படித்தான் என்றவரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல், எப்படி வேண்டுமானாலும் வாழும் மன நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லா அறிவிலா தார் – குறள் 140
உலகத்தோடு ஒத்து வாழ்வதாய் எண்ணிக்கொண்டு, கனவுக்கதாநாயகர்களாக, குறுகிய காலத்தில் பெரும் பணக்காரர்களாகி விட்டவர்களை ரோல்மாடல்களாக வைத்துக்கொண்டு வீதியில் வலம்வரும் வாலிபப் பட்டாளம் ஒருபுறம்.
நான் பிறந்தது ஏழை வீடு; என்னால் எப்படி நன்கு படித்து முன்னேறமுடியும் என்று மனதுக்குள் தன்னம்பிக்கையின்றி ஏங்கித் தவிக்கும் சிறார் மற்றும் பள்ளி மாணவர் சமுதாயம் மறுபுறம்.
வேலைக்கு ஆட்கள் தேவையென்ற போர்டுகள் பெரும்பாலும் எல்லா நகரங்களிலுமே உள்ள அதே நேரம், வேலைக்குச் செல்ல சோம்பேறித்தனப்பட்டு, வேலை செய்யத்தகுதியான உடல்வலு இருந்தும், அரசின் சலுகைகளை, அனுபவித்து வாழ்ந்துவரும் குடும்பங்கள் இன்னொரு புறம் – எனப்பல வகையிலும் தடைகள் இருந்தாலும், முக்காலஞானி திருவள்ளுவர் பொய்யாசொல்லியிருப்பர் என மீண்டும் மேலுள்ள குறளுக்கு அர்த்தம் பார்த்தேன். வள்ளுவர் கூறியது ஒழுக்க நெறியாகும். ஒழுக்கமில்லாமல், என்ன தான் படித்திருந்தாலும் அவர் அறிவில்லாதவரே என்றார்.
இவ்வளவு சிக்கலான நிலையிலிருந்து மீள முடியுமா? என்ற இமாலயக் கேள்வி எழுகிறது. மீள முடியும், சிறிதுகாலம் கூடுதலாகத் தேவை.
ஒரு பாத்திரத்தை உபயோகிக்கிறோம்; உடனே சுத்தம் செய்வது சுலபம். ஆனால், தொடர்ந்து சுத்தம் செய்யாமலேயே பலமுறைஉபயோகித்து அதன்பின் சுத்தம் செய்வது எவ்வளவு கடினமோ அது போன்றதுதான் இது.
ஒரு வாகனத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்து கொள்வது இலகுவாக உபயோகிக்க உதவும். ஆனால், நீண்ட இடைவெளிக்குப்பின் சர்வீஸ் செய்தால் செலவும் அதிகம். நாளும் கூடும்.
இதுபோன்றது தான் இன்றைய சமுதாய நிலை. வயதானவர்களிடம் விரைவில் மாற்றம் கொண்டுவர முடியாது. வந்தாலும் பெரிய அளவில் உபயோகமிராது. நடுத்தர வயதுள்ளவர்கள் இப்போது ஒரு வாழ்க்கை முறையில் இருப்பதால் அவ்வளவு எளிதில் மாறமாட்டார்கள்.
எளிதில் மாறும் தகுதியுள்ளவர்கள், மாற்றவேண்டிய நிலையில் உள்ளவர்கள் 10 வயது, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், மாணவர்களும் தான். இதை நம்மால் செய்ய முடியுமா?
கட்டாயம் செய்ய முடியும். இனி தொடருங்கள்.
ஓர் அப்பா, அம்மா, 10 வயது மகள், 6 வயது மகன் அடங்கிய குடும்பம். குடும்பத் தலைவரின் மாதவருமானம் அவர்களது அத்தியாவசியச் செலவுகளைச் சரிக்கட்டிவிடுகிறது. குடும்பத் தலைவியும் தன்னால் முடிந்த சிறுதொழில்களைச் செய்து மாதம் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வருகிறார்.
ஒருநாள் வீதியில் நால்வரும் நடந்து பூங்கா ஒன்றுக்குச் செல்கின்றனர். அங்கு நின்றிருந்த கார் ஒன்றைப் பார்க்கின்றார்.
மகன்: அப்பா, இந்தமாதிரி நாம ஒரு கார் வாங்கலாமா?
அப்பா :அடப்பயலேÐ இந்தக் கார் வாங்கறதை நாம நெனச்சுக் கூடப் பார்க்க முடியாதுடாÐ
மகன்: சரிÐ கார் தான் வாங்க முடியாது. ஒரு நல்ல மெத்தை வீடாவது கட்ட முடியுமா?
அம்மா : எங்கண்ணுÐ அதுக்கெல்லாம் லட்சக்கணக்குலே பணம் வேணும்டாÐ அவ்வளவு பணம் நமக்கு ஏதுப்பா?
மகன் : அக்காÐ நீ பெரிசாகி நல்ல வேலைக்குப் போய் எனக்கு ஒரு மோட்டார் பைக் வாங்கித் தருவியா?
அக்கா: தம்பிÐ கவலைப்படாதே. கட்டாயம் வாங்கித் தர்றேன். நீயும் நல்லாப் படிக்கணும்.
இவன் பலமுறைசாலையில் செல்லும் கார்களைப் பார்த்து, இவர்களெல்லாம் காரில் போகிறார்களேÐ ஏன் நான் போக முடியாதா? என்னால் கார் வைத்துக் கொள்ள முடியாதா? என நினைப்பதுண்டு. அதன் வெளிப்பாடுதான் மேலே கண்ட உரையாடல்.
நல்ல, விலை உயர்ந்த உடை அணிந்து, போட்டு, டை கட்டி செல்லும் பலரையும் பார்த்து மலைப்பான். ஒருநாள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் தன் பெற்றோரிடம் கேட்கிறான்.
“இந்த வருஷம் எம் பொறந்த நாளுக்கு நல்லதா டிரஸ், ஷு, டை எல்லாம் வாங்கித் தருவீங்களா?”
அம்மா : கட்டாயம் வாங்கித் தர்றோம்டா கண்ணு.
அப்பா : ஏய்Ð கிறுக்குப்புள்ளே… இவன் கேக்கறதை வாங்கணும்னா கொறைஞ்சது ஆயிரம் ரூபாயாவது வேணும். அந்தப் பணம் இருந்தா 10 நாள் பொழப்பையே முடிச்சிரலாம். கொழந்தைங்க மனசுலே அளவுக்கு அதிகமாக ஆசையை உண்டாக்கக் கூடாது.
மகன் : ஏம்மாÐ நீ ஒருமுறைசொன்னியே, ஞாபகமிருக்கா? நீ துண்டு முடிஞ்சு கொடுக்கறபணக்காரங்க வீட்டுப்பொண்ணுக்கும் நான் பொறந்த அன்னிக்குத்தானே என்ன மாதிரியே ராசாவாட்டம் ஒரு பையன் பொறந்தான்னுÐ
அம்மா : ஆமாம்பா
மகன் : அப்படீன்னா. கொழந்தைகளை இங்கே போய் வசதியான குடும்பத்திலோ பொறங்க, வசதியில்லாத எடத்துலே போய் பொறங்க அப்படீன்னு யார் பிரிச்சு அனுப்பறாங்க?
அப்பா : அடப்பயபுள்ளேÐ இதென்ன? இவ்வளவு பெரிய கேள்வி கேக்கறே? இதெல்லாம் நாங்க நெனச்சிக்கூடப் பாத்ததில்லேÐ
அம்மா : நீங்க நெனைக்கலேÐ உங்க அப்பா மாதிரி கூலி வேலைக்குப் போறீங்க. இவனாவது நெனைக்கட்டும். நல்லாப் படிக்கவைச்சு, அவன் வேலைக்குப் போய் சம்பாதிச்சா நாமளும் பணக்காரங்களாகலாமேÐ
அப்பா : அட்றா சக்கைÐ ஆசையைப் பார்றா ஆசைÐ அம்மாவும் மவனும் சேர்ந்து ஏதோ திட்டம் போடறீங்க. போடுங்கÐ போடுங்கÐ என்னாலே தான் அதிகமா படிக்க முடியலே, இவனாவது நல்ல படிச்சு பெரிய வேலைக்குப் போயி நெறைய சம்பாதிக்கட்டும்.
அக்கா : ஆமாப்பாÐ இப்ப அரசாங்கத்துலோ ஏழைங்க, வசதியில்லாதவங்க படிக்கறதுக்கு நெறைய உதவி செய்யறாங்கனு எங்க டீச்சர் அடிக்கடி சொல்லுவாங்க, தம்பியை ஒருநாள் என் டீச்சர்கிட்டே கூட்டிட்டுப் போறேன்.
மகன் : அக்காÐ ஒருநாள் அந்த டீச்சர் கிட்டே என்னைக் கூட்டிட்டுப் போக்காÐ அவங்க கிட்டே நான் நெறைய விசாரிச்சுத் தெரிஞ்சுக்கறேன். அந்த நாளுக்காகக் காத்திருப்போம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2011

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
பிக்மாலியன்
முயன்றேன்… வென்றேன்…
மேன்மைமிகு மேலாண்மையில் வலிமைமிகு வள்ளுவம்
எல்லாம் எவன் செயல்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
நிலைத்திருக்கும் நினைவுகள்
இங்கிலீஸ் ரொம்ப ஈஸி
திருநங்கையர் தினம்
நிதானித்து நட
பிறப்பு தடையல்ல
பெண் இன்றி அமையாது வாழ்வு
மனம் விட்டு கேளுங்கள்
உனக்குள்ளே உலகம்-11
முடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்
உள்ளத்தில் திடம்!! வரலாற்றில் இடம்!!
அச்சீவர்ஸ் அவென்யூ
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்