Home » Articles » உடலினை உறுதிசெய்

 
உடலினை உறுதிசெய்


சைலேந்திர பாபு செ
Author:

தண்ணீரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால்
கடலைத் தாண்டிவிட முடியாது
-இரவீந்தரநாத் தாகூர்

உங்களது உடலினை நீங்களே உறுதி செய்ய இந்நூலில் பல அறிவியல் பூர்வமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன். இப்புத்தகத்தைப் படித்து முடித்திருக்கும் உங்களை என் மனதாரப் பாராட்டுகிறேன். இதன் மூலம் நீங்கள் பெற்றபயனை அனுபவிக்க வேண்டுமானால், இன்றிலிருந்து செயலில் இறங்க வேண்டும். அப்பொழுதுதான் விலைமதிப்பற்ற, நீங்கள் ஈட்டிய பொருட்களுக்கெல்லாம் தலையான நலமிக்க உங்கள் உடல் நேரத்திற்குத் தகுந்த பலன் கிடைத்திருக்கிறது என்று நாம் இருவரும் மகிழ்ச்சி அடையலாம்.
உடல்நலம் காக்கும் செயல்களில் இறங்க வேண்டும்; அதுவும் இப்போதே இறங்க வேண்டும். ஊட்டச்சத்து உணவை அளவோடு உண்டு, உடற்பயிற்சியையும் செய்து நன்றாக உறங்கவும் வேண்டும்.
சுருங்கச் சொன்னால் அளவாக உண்டு, அதிகமாக நடக்க வேண்டும்.
உங்களுக்காக தண்டால் செய்ய இன்னொருவரை நியமிக்க முடியாது என்றார் ஜிப்ரோகன் என்றஅறிஞர். நீங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சியை நீங்கள்தான் செய்ய வேண்டும். மற்றவர்கள் உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், உடற்பயிற்சியை மட்டும் செய்ய முடியாது.
சென்னை மாநகரக் காவலர்களுக்குப் பயிற்சி வழங்க ஒரு பேராசிரியை வந்திருந்தார். ஆரோக்கியமான உணவு வகைகளைப் பற்றியும், உணவுகளில் அடங்கியுள்ள கலோரியைப் பற்றியும், உடல் எடையைக் குறைக்க உதவும் உணவு வகைகளைப் பற்றியும் அவர் விளக்கினார். அப்போது ஒரு காவலர், நாங்கள் மசாஜ் செய்து கொண்டால் உடல்எடை குறையுமா? என்று ஒரு கேள்வியைக் கேட்டார். பேராசிரியைக்கு என்ன சொல்வதென்றேதெரியவில்லை. நான் குறுக்கிட்டு மசாஜ் செய்தால் உடல் எடை குறையும்; உனக்கல்ல, உனக்கு மசாஜ் செய்தவனுக்கு என்றேன். அனைவரும் சிரித்தனர். பேராசிரியையும் சிரித்து விட்டார். அது தான் உண்மை. உங்களுக்காக மற்றவர்கள் உடற்பயிற்சியைச் செய்ய முடியாது. அதை நீங்கள்தான் செய்ய வேண்டும்.
நான் சொல்லப்போகும் இந்த வார்த்தைகளை மனப்பாடம் செய்யுங்கள். உடல்நலம் காப்பதில் குறுக்கு வழி என்று ஒன்றில்லை. உலகில் பெரிய அரிய சாதனைகள் படைப்பதற்கு முயற்சி அவசியம். உடல் நலம் காப்பதும் ஒரு பெரிய அரிய சாதனை தானே.
எதற்குமே ஒரு விலை உண்டு. அதுவும் உடல்நலம் என்றால் நாம் சம்பாதிக்கும் எந்த செல்வத்தினும் மிகச் சிறந்தது அது. உலகில் ஏதாவது ஒன்று புனிதமானது என்றால், அது நமது உடல்தான் என்றார் வாட் ஒயிட்மேன் என்றஅறிஞர். எனவே அதற்கு உண்டான விலையை கொடுக்க முன் வாருங்கள். உடலின் மற்றஉறுப்புகளுக்கு மதிப்பளித்து நாவைக் கட்டுப்படுத்துவதும், தினமும் அரைமணிநேரம் நடக்க செலவிடுவதும் தான் அந்த விலை.
ஒருவருக்கு பரிசளிக்க வேண்டும் என்றால் எதை வாங்குகிறோம்? ஒருவருடைய இல்லத்திற்கு செல்லும்போது கையில் எதை எடுத்துச் செல்கிறோம்? பொதுவாக, ஒரு கிலோ இனிப்போ அல்லது ஏதாவது ஒரு பொருளோ வாங்கிக் கொண்டு செல்வது வாடிக்கை. உங்களது நண்பர் அல்லது உறவினரை நீங்கள் மிகவும் நேசிப்பதாக இருந்தால் நிச்சயமாக அவருக்கு ஒரு கிலோ இனிப்பு வாங்கித் தராதீர்கள். இனிப்பு அவரது உடல் நலத்தைக் கெடுக்கும். அதற்குப் பதிலாக இந்தப் புத்தகத்தை வாங்கிப் பரிசளியுங்கள். இதனால் அவரது வீட்டில் உள்ள அனைவரது உடல்நலமும் பாதுகாக்கப்படும்.
இந்நூலைப் படித்து முடித்துவிடாதீர்கள். அதாவது கடைசிப் பக்கம் முடிந்ததும் முதல் பக்கத்தை படியுங்கள். தினமும் ஒரு அத்தியாயம் என்று படித்துக் கொண்டே இருங்கள். இந்தப் புத்தகத்தின் உரிமையாளர் நீங்கள். இப்புத்தகத்தை நீங்கள் மீண்டும் பலமுறைபடிக்க வேண்டும். எனவே இதனைப் பத்திரப்படுத்துங்கள்.
நீங்கள் இந்த நூலைப் படித்து முடித்ததால், உங்களை நீங்களே பாராட்டி மகிழுங்கள்.
நான் எனது உடலை திருத்தி அமைக்கப்போகிறேன் என்றஒப்பந்தத்தை உங்களுடன் இப்போதே செய்து கொள்ளுங்கள். அந்த ஒப்பந்தத்தை மதித்து இன்றேஅதற்கான செயலிலும் இறங்குங்கள்.
எதற்கும் ஒரு விலை என்று சொன்னேன். ஆனால், அதற்கும் ஒரு விதி விலக்கு உண்டு. எந்த விலையும் கொடுக்காமல் இந்த அற்புத உடல் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இலவசமாக கிடைத்தது என்பதற்காக இந்த உடலை கெடுக்கவோ, புறக்கணிக்கவோ உங்களுக்கு உரிமையில்லை. ஏனென்றால், இவ்வுடல் உங்களது பெற்றோரால் கொடுக்கப்பெற்றமிகப் பெரிய சொத்தாகும். நீங்கள் மற்றசெல்வங்களை ஈட்ட தேவைப்படும் அடிப்படையான மூலப்பொருள் உங்களது உடல். எனவே, அதைக் கட்டிக்காப்பது உங்களது கடமையாகிறது.
உங்கள் உடலை முழுமையாக நேசியுங்கள்.
உடலே கோயில்! உணவே மருந்து! உடற்பயிற்சியே திருவிழா!
நீங்கள் இப்பூமியில் வாழும் ஒவ்வொரு நாளும் திருவிழாவாக அமையட்டும்.
(முற்றும்)

 

1 Comment

  1. ELANGO.R says:

    சார்,ப்ளீஸ் ,உங்கள் கருத்துகள் சூப்பர் ,உங்கள் சந்திப்புக்கு கதுருகன் நன்றி ..9790385574

Post a Comment


 

 


April 2011

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
பிக்மாலியன்
முயன்றேன்… வென்றேன்…
மேன்மைமிகு மேலாண்மையில் வலிமைமிகு வள்ளுவம்
எல்லாம் எவன் செயல்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
நிலைத்திருக்கும் நினைவுகள்
இங்கிலீஸ் ரொம்ப ஈஸி
திருநங்கையர் தினம்
நிதானித்து நட
பிறப்பு தடையல்ல
பெண் இன்றி அமையாது வாழ்வு
மனம் விட்டு கேளுங்கள்
உனக்குள்ளே உலகம்-11
முடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்
உள்ளத்தில் திடம்!! வரலாற்றில் இடம்!!
அச்சீவர்ஸ் அவென்யூ
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்