Home » Articles » சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50

 
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50


மோகன்குமார் இரா
Author:

36. தள்ளிப்போடுவதைத் தவிர்ப்போம்

நிரஞ்ச் 45 வயது இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தாலும், தனக்கென்று ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்கி வாழ்வில் சமூக பொருளாதார அந்தஸ்த்தை உயர்த்தியே ஆக வேண்டும் என்ற நெடு நாளைய குறிக்கோளுக்குச் சொந்தக்காரர் ஆவார். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் அதிபராக வேண்டும் என்ற அடங்கா ஆசை கொண்ட நிரஞ்ச், அது நிறைவேறாத காரணத்துக்காகவும் சேர்த்து தான் இன்று விரக்தியின் விழிம்பில் மனஅழுத்த நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். .அந்த நண்பருடன் நிகழ்த்திய உரையாடல் உணர்த்திய பாடமே சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50 தொடரின் 36- வது வழிமுறையின் உட்கருத்திற்கான ஆதாரம். நிரஞ்ச் தன் வாழ்வில் அடைய நினைத்த குறிக்கோளினை அவர் 45 வயது வரை அடைய முடியாதததற்கு அவருடன் நடத்திய உரையாடலிலிருந்து நான் உணர்ந்து கொண்ட காரணம் “தள்ளிப்போடுதல்” என்றஎதிர்மறைகுணநலனே ஆகும்.
அவர் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற முயற்சியைப் பல முறை, பல காரணங்களைக் (சாக்கு போக்குகளை) கண்டுபிடித்து தள்ளிப்போட்டு வந்துள்ளார். இன்று தன் முழு முதல் லட்சியத்தை அடையமுடியாமல் மன அமைதியை இழந்து தான் தவிப்பதுடன், தன் குடும்பத்தாரின் நிம்மதியான வாழ்க்கையையும் பாழ்படித்தி வருகின்றார்.
நிரஞ்ச், தனது வாழ்நாள் கனவாகிய தொழில் தொடங்குவது முதல் உடல் உபாதைக்கு மருத்துவரை சந்திப்பது, உடற்பயிற்சி செய்வது, படிப்பது, பல் துலக்குவது என நம்மில் பலர் பலவித செயல்களைத் தள்ளிப்போட்டு வருகின்றோம்.
தள்ளிப்போடுதல் – தீமைகள்
தள்ளிப்போடும் செயல் நம் வாழ்வின்
வளர்ச்சியை பாதிப்படையச் செய்யும்.
உடல் மற்றும் மனநல பாதிப்புகளுக்குக் காரணமாக அமையும்.
செயல்திறனை குறைத்து விடலாம்.
பிறருடனான உறவுகள் பாதிப்படையத் துவங்கலாம்.
இவை போன்றமேலும் பல தீமைகளுக்குக் காரணமாக அமைவது தள்ளிப்போடும் குணநலன்.
தள்ளிப்போடுவதை எப்படி தவிர்க்கலாம்?
தன் வாழ்நாள் குறிக்கோளை அடைய முடியாத அளவு செயல்பாடுகளைத் தள்ளிப்போட்டு வந்த நிரஞ்ச்சின் முதல் பிரச்சனை ‘தான் தள்ளிப்போடும் செயல்களுக்கு ஒவ்வொரு முறையும், தன்னை சார்ந்த ஒருவர் மற்றும் தன் சூழ்நிலை காரணிகள் தான் காரணம்’ என காரணம் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தி வந்தது தான்.
ஆகவே தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நீங்கள் விரும்பினால், முதலில் உங்களில் நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அதாவது இன்றைய நிலைக்கு உங்கள் தள்ளிப்போடும் தன்மை தான் காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதைவிட முக்கியமாக அப்படி தள்ளிப்போட்டு வந்ததற்கு நீங்கள் தான், உங்கள் மனோ பாவம் தான், நீங்கள் எடுத்த முடிவுகள் தான் காரணம் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, இனிமேல் எந்த செயலையும் தள்ளிப்போட மாட்டேன் என்றமுடிவை எடுத்துவிட வேண்டும். தள்ளிப்போடவே மாட்டேன் என உறுதியாக முடிவெடுத்த நீங்கள் திட்டவட்டமாக ஒரு லட்சியம் அல்லது குறிக்கோள்களுடன் செயல்படுகிறீர்களா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி செயல்படாவிட்டால் உங்கள் விருப்பு வெறுப்புகளை ஆய்ந்து ஒரு உறுதியான லட்சியம் ஒன்றினை உங்கள் ஆழ்மனதில் ஆழமாக பதிவு செய்து விடுங்கள். அப்படி ஒரு கனலாய் விளங்கும் உன்னத லட்சியம் ஒன்றைஉங்கள் ஆழ்மனது அங்கீகரித்து விட்டால், அடுத்து நீங்கள் உங்கள் பொறுப்புகளைத் தள்ளிப்போடாதவாறு உங்கள் ஆழ்மனதே உங்களை வழிநடத்த துவங்கிவிடும்.
ஆனாலும் தள்ளிப்போடுவதை தவிர்க்க மேலும் சில ஆலோசனைகள்:
தினமும் காலையில் அன்றைய பணிகளைத் திட்டமிடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள். குறிப்பாக அன்றன்று செய்ய வேண்டிய பணிகளை வரிசைப்படுத்தி எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது அந்த பட்டியலைப் பார்த்து வாருங்கள்.
உங்களால் முடியாத சில செயல்களை, அந்த செயல் சார்ந்த வல்லுனர்களிடம் (பணியாளர்களிடம்) ஒப்படையுங்கள்.
முக்கியமான அல்லது கடினமான செயல்களை முதலில் உறுதியுடன் முடித்துவிட்டால் அடுத்த செயல்களைச் செய்யும் உற்சாகம், புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கையும் தானாகவே உருவாகிவிடும். செயல்புரியவும் தொடங்கிவிடுவோம்.
அன்றன்று செய்ய வேண்டிய செயல்களை ஒவ்வென்றாக முடித்து உங்களிடம் காணப்படும் பட்டியலில் அவற்றின் மீது கோடு வரைந்து அடித்து விடவும். இந்த செயல், உங்கள் தள்ளிப்போடும் குணத்தை அடியோடு மாற்றிவிட உதவி புரியும்.
தினசரி மாலையில் தூங்க செல்லும் முன் நீங்கள் இன்று என்னென்ன பணிகளை நிறைவேற்றி உள்ளீர்கள் என்றபட்டியலைத் தயார் செய்யுங்கள். நீங்கள் வெற்றிகரமாக செய்துள்ள பணிகளின் பட்டியலைப் பார்க்கும் போது உங்கள் உத்வேகம் மேலும் அதிகரிக்கும். அத்துடன் நீங்கள் என்னென்ன செயல்களைத் தள்ளிப் போட்டுள்ளீர்கள்? தள்ளிப் போட்டதன் காரணங்கள் என்ன? தினசரி திட்டப்படி செயல்களை நிறைவேற்றாமல் இருக்க மனது என்னென்ன சாக்கு போக்குகளை அள்ளி அள்ளி வழங்குகிறது? போன்றகேள்விகளின் விடைகளைக் கண்டு தள்ளிப்போடுவதைத் தடுப்பதற்கான முயற்சியில் களம் இறங்குவது, சுந்தோஷ சாதனை வாழ்வின் அடிப்படை தேவை. ஆகவே நண்பர்களே…
தள்ளிப்போடுவதைத் தடுப்போம்!
சாதனைகளைக் குவிப்போம்!
சந்தோஷத்தை அனுபவிப்போம்!
37. பொறுமை கடலினும் பெரிது
“பொறுத்தவன் பூமியை (புவியை அல்லது உலகை) ஆழ்வான்” என்கிறது பழமொழி.
பூமியை நாம் (நமக்கு பின் நம் நாமம்) தொடர்ந்து ஆழ வேண்டுமானால் இரண்டு விஷயங்கள் தேவைப்படுகின்றது. ஒன்று நாம் சாதனைகள் புரிந்திருக்க வேண்டும். மற்றொன்று உலகம் (மக்கள்) நம்மீது மட்டற்ற அன்பு கொண்டிருக்க வேண்டும்.
ஆக, நாம் சாதனை செம்மலாக, நமக்குப் பின்னும் மக்கள் மனதில் மாண்புடன் நிலைபெற்றிருக்க, நமக்கு உதவிபுரியும் அற்புத குணநலனான “பொறுமை” வேண்டும்.
ஜானி எல்டன் என்றசுட்டியான குட்டிப் பையனுக்கு மாம்பழம் மீது கொள்ளைப்பிரியம். தொடர்ந்து பெற்றோர் வாங்கி வழங்கி வந்த மாம்பழத்தை மகிழ்வோடு ரசித்து, ருசித்து வந்த ஜானிக்கு ஒரு சந்தேகம். இந்த மாம்பழம் எங்கிருந்து வருகிறது? ஜானி அம்மாவிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தான்.
விடை, மாம்பழ விதையை மண்ணில் விதைத்து வைத்தால், மாமரம் வளரும்; மரம் வளர்ந்து பூ பூத்து, காய் காய்த்து, கனி தரும் என்பதாக இருந்தது.
உடனடியாக செயலில் இறங்கிவிட்டான் அன்று அப்பா வாங்கி வந்த மாம்பழத்தை ருசித்து விட்டு விதையை அம்மா சொன்னபடி நிலத்தை பண்படுத்திவிட்டு விதைத்து வைத்தான் ஜானி.
விதைத்ததோடு நிறுத்தி விட்டானா? இல்லை தினமும் காலை, மாலை என பலமுறை மாமரத்தை காணும் கனவுகளுடன் மாமர விதைக்கு நீர் ஊற்றி கவனித்து வந்தான்.
ஒருநாள், இருநாள் என நாள்கள் கடந்துவிட்ட நிலையில் பொறுமை இழந்த ஜானி, தன்னுடைய மாமரத்தைக் காணும் முயற்சியைக் கைவிடும் முடிவுக்கு வந்துவிட்டான். ஆனாலும் அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு நீர் தெளிப்பதை நிறுத்தி விடலாம் என்று முடிவு எடுத்தான்.
அம்மாவிடம் அம்மா தாங்கள் கூறிய படி மாமரம் துளிர்க்கவில்லையே என்று மனம் வெதும்பி நின்றான் ஜானி. அம்மா மகனே “வாழ்வில் சில நேரங்களில் நாம் நினைப்பது போல் உடனடியாக பலன்களும் விளைவுகளும் விளைந்து விடாது. பலன்களுக்கான முயற்சிகளில் ஈடுபடும் பலர் சிறிது காலத்திற்குள்ளே தங்கள் முயற்சி கைகூடவில்லையே என முயற்சிகளில் இருந்து பின்வாங்கி விடுகின்றனர். இன்னும் சிலரோ, பலன்கள் விளைவுகள் வெற்றிகள் சாதனைகளுக்கு மிக (அருகாமை வரை பொறுமை காத்து) அருகாமையில், பொறுமை இழந்து முயற்சிகளிலிருந்து பின்வாங்கி விடுகின்றனர். ஆனால் யார்? யார்? தொடர்ந்து பொறுமையுடன் பலனை அடையும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டே இருக்கின்றனரோ, அவர்களே இறுதியில் வெற்றிக் கனியை தட்டிச் செல்கின்றனர்.
எனவே, அன்பு மகனே பொறுமையுடன் உன் மாமரம் துளிர்விடுவதைக் காணும் முயற்சியைத் தொடர்வாயாக!” என அறிவுறுத்தினார் ஜானியின் தாய்.
தாய் நல்கிய வெற்றியின் தாரக மந்திரத்தைப் பற்றிக் கொண்ட ஜானி தன் முயற்சியை விட்டு விடவில்லை. அதாவது பொறுமையாக தொடர்ந்து மாவிதைக்கு நீர் ஊற்றி, நிழல் தந்து, பாதுகாத்து கவனித்து வந்தார்.
அவர் பொறுமையின் பலனாக அடுத்து சில நாள்களிலேயே, ஜானி பொறுமையுடன் எதிர்பார்த்திருந்த பலன் வந்து விட்டது. மாமரக்கன்று துளிர்விட்டு பூவுலகை எட்டிப்பார்த்தது. எல்லையில்லா மகிழ்ச்சி கொண்ட ஜானி ஆனந்தக் கண்ணீருடன் தாய் தந்தையரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
பொறுமை காத்து வெற்றி கண்ட ஜானிக்கு சந்தோஷம். ஜானியின் சந்தோஷ கண்ட பெற்றோருக்கும் சந்தோஷம்.
பொறுமையுடன் மாவிதை துளிர்விட வழிவிட்ட ஜானியின் வெற்றிச் செயலால் தனக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும், மனித சமூகத்திற்கும் நன்மை. அளவிலடங்கா மாம்பழங்களை அனுபவித்த இல்லமும் உலகமும் ஜானியிடம் அன்பு செலுத்த ஆரம்பித்தது.
ஜானியின் பொறுமை, சாதனையை நல்கியது. சாதனை சந்தோஷத்துக்குக் காரணமானது. பொறுமையுடன் குறிக்கோளை நோக்கி செயலாற்றுங்கள். இத்தகைய பொறுமையான செயல்பாடு, நம் இலட்சிய செயல்பாடு, நம் இலட்சியப் பயணத்தில் வரும் சின்னச்சின்ன குறுகிய கால தோல்விகள், தடைகள் மற்றும் அவமானங்களைத் தாண்டி நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். தன்னம்பிக்கையாளர்களேÐ நீங்கள் பொறுமையாக செயலாற்றி சந்தோஷ சாதனை வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
(சாதனை களத்தில் மீண்டும் சந்திப்போம்; அடுத்த இதழில்………)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2011

மு. மேத்தா கவிதை….
கவிதைகள்
முயன்றேன் வென்றேன்
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
உனக்குள்ளே உலகம்-10
வெற்றி விடியல்
நலந்தானா
பஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்
வளமான சிந்தனை
மனதினை தெளிவு செய்
மதிப்பு, மரியாதை
தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்! வாழ்க்கையின் மகத்துவத்தை உணருங்கள்!
மருத்துவம் நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
விதைகளால் ஓவியம்
ஜெயிப்பது நிஜம்
உங்களால் எதையும் சாதிக்க முடியும்
உழைப்பு என்பது தவம்!! சாதனை என்பது வரம் !!
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்