Home » Articles » மனதினை தெளிவு செய்

 
மனதினை தெளிவு செய்


admin
Author:

மனிதனை மனிதனாய் வாழ வைப்பது மனம். மனிதா, உன் மனதினை தெளிவு செய். மனம் தெளிந்தால் சொல் தெளியும்; சொல் தெளிந்தால் செயல் தெளியும்; செயல் தெளிந்தால் உன்னுள் நம்பிக்கை சுடர்ந்து எரிவது உனக்குத் தெரியும். அச்சுடரொளியில் உன்னால் வெற்றி என்னும் சிகரம் நோக்கி முன்னேறமுடியும். ஆதலால் மனிதா, மனதினை தெளிவு செய்.
மனம் என்பது என்ன?
விந்தைமிகு, வியத்தகு இம்மண்ணுலகில் ஆறறிவு மனிதன் தம் ஐம்புலன்களால் உய்த்துணரும் உணர்வுகளையும், அனுபவம் வாயிலாக அடையும் அனுபவ அறிவு மற்றும் உணர்வுகளையும், தமது எல்லையற்ற சிந்தனைகளையும் பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக அமைவது மனம்.
சொல்லும் சொல் சீர்மை பெற;
செய்யும் செயல் மேன்மையுற;
வாழும் வாழ்வு வளமை பெற;
வழிவகை செய்வது மனம்;
மனம் என்னும் சொல் மூன்று விதமாக மனோதத்துவ அறிஞர்களால் கையாளப்படுகிறது. வெளி மனம், உள் மனம், ஆழ் மனம் என்று அறிஞர்களால் பகுக்கப்படும் மனதை, ஐம்புலன்களுடன் நேரடித் தொடர்புடைய, சுய நினைவில் வெளிப்படுத்துவதுமான உணர்வுகளைக் கொண்ட மனம் வெளிமனம் என்றும்; சுய நினைவிற்கும் அப்பாற்பட்ட அசாதாரண ஆற்றல் உடைய பிரபஞ்சத்துடன் தொடர்புடைய மனதை உள்மனம் அதாவது ஆழ்மனம் என்றும் அடையாளம் காட்டுகின்றனர் மனவியலார்.
ஐம்புலன்களுடன் நேரடித் தொடர்புடைய வெளிமனமானது கிளைவிட்டு கிளைதாவும் குரங்கைப் போன்றது. பல்வேறு வெளி உலக பாதிப்புகளில் சிக்கித்தவித்து, குழம்பி, நிலைதடுமாறி நம் வாழ்க்கையையும் நிலை குலையச் செய்துவிடும்.
மனக் குரங்கைக் கட்டுப்படுத்தியதால் தான் சித்தர்களால் சித்துகள் புரிய முடிந்தது. மனக்குரங்கை அடக்கியதனால்தான் சான்றோர்களால் சாதனை படைக்க முடிந்தது. மனக்குரங்கைத் தன் வசப்படுத்தியதால்தான் ஞானிகளால் ஞாலத்தையே வெல்ல முடிந்தது.
மனிதா, நீ மகானாக வேண்டாம். மனிதனாகவாவது இருக்க வேண்டாமா? மனக்குரங்கை அடக்கி ஆள வேண்டாம், அமைதிப்படுத்தவாவது வேண்டாமா? இம்மானுட பூமியில் மனிதம் செழிக்க மனிதா, மனதினை தெளிவு செய்.
மனத் தெளிவால்
மனிதம் பிறக்கும்
மனம் தெளிந்தால்
மானுடம் சிறக்கும்
மனம் தெளிவு பெற…
ஆணவம், மாயை, காமம், ஆசை, கள்ளுண்ணல் இவைகட்கு அடிமையாகும் மனிதனால் இறைமையைக் காட்டும் அமைதிநிலையை அடைய இயலாது. அழுக்காறு, அடுத்துக் கெடுப்பது, கொலை, களவு, பொய்யுரை இவையனைத்திற்கும் மனித மனமே காரணமாக அமைகிறது.
உள்ளத்துக்குள்ளே உள்ளதடா உலகம் நல்ல
உள்ளத்தைக் கொண்டால் உலகிலிருள் விலகும்
என்பதை உள்ளத்தால் உணர்ந்தறிய வேண்டும். இளமையும், செல்வமும், யாக்கையும் நிலையில்லா இவ்வுலக வாழ்வில் உனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள,
தெய்வம் தெளி
தெளிந்தோர்ப் பேண்
பொய்யுரை அஞ்சு
புறஞ்சொல் பேசேல்
செய்ந்நன்றி கொல்லேல்
தீ நட்பு இகழ்
கள்ளும் களவும்
காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும்
விரகினில் ஒழி
என்று சிலம்பு காட்டும் செயல்களை மேற்கொள்.
ஆழ்கடலில், அமைதியான பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள் சுனாமியாய்ப் பேருருக்கொண்டு சுழன்றடித்து சுற்றுப்புறத்தையே சுத்தமாக்கிவிடவில்லையா? அடிமனதில் அமைதியான தெளிவில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் உன் சுற்றுப்புறத்தை மாற்றி உன்னை முன்னேற்ற சிகரத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
உடலினை உறுதி செய்
– திருமூலர் மந்திரம்
அறிவினை விரிவு செய்
– பாவேந்தர் மந்திரம்
மனதினை தெளிவு செய்
– தாரக மந்திரமாய்
மனிதா, நீ தினம் ஜெபித்தால் மண்ணில் மனிதம் மலரும். வன்முறை அழியும். மானிடம் ஜெயிக்கும்.


Share
 

3 Comments

  1. Jayanthi says:

    I want தன்னம்பிக்கை book. how to get this book?
    Im very much like this book.

    Regards
    Jayanthi

Post a Comment


 

 


March 2011

மு. மேத்தா கவிதை….
கவிதைகள்
முயன்றேன் வென்றேன்
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
உனக்குள்ளே உலகம்-10
வெற்றி விடியல்
நலந்தானா
பஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்
வளமான சிந்தனை
மனதினை தெளிவு செய்
மதிப்பு, மரியாதை
தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்! வாழ்க்கையின் மகத்துவத்தை உணருங்கள்!
மருத்துவம் நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
விதைகளால் ஓவியம்
ஜெயிப்பது நிஜம்
உங்களால் எதையும் சாதிக்க முடியும்
உழைப்பு என்பது தவம்!! சாதனை என்பது வரம் !!
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்