Home » Articles » மருத்துவம் நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்

 
மருத்துவம் நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்


admin
Author:

டாக்டர் வி.மு. பழநியப்பன்.

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உங்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்பு இருக்கிறதா?
மாரடைப்பும் அதனால் மரணமும் வரக்கூடுமா?
இனிப்புநீர் நோய் உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பு உண்டா?
கிட்னியில் கற்களோ அல்லது சுருக்கமோ ஏற்பட்டு, அதனால் நீங்கள் மரணமடையக்கூடுமா?
மலட்டுத்தன்மை, ஆண்மையின்மை போன்றவை உங்களைத் துன்புறுத்தக் கூடுமா?
இவற்றிற்கான மறுமொழியை, அறிவியல் முறைக்கேற்பக் கூறிவிடமுடியும்.
அவ்வாறு கூறுவதற்கு ஒலி அல்லது ஒளிக் கருவிகளோ கதிர்வீச்சுக்களோ தேவையில்லை என்பதோடு, மிக எளிதான முறையில், செலவில்லாமலேயே ஓரளவிற்கு மிகச் சரியாகவே கண்டுபிடித்துவிடமுடியும்.
அதுமட்டுமல்ல, அத்தகைய நோய்கள் உங்களைத் தாக்கிவிடாதவாறும், ஒருவேளை அவை வந்துவிட்டால் அவற்றைக் குணப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளையும்கூட நான் உங்களுக்குச் சொல்லித்தரத் திட்டமிட்டுள்ளேன்.
சிறிது பயிற்சி பெற்றால், நீங்களேகூட உங்கள் உடல்நலத்தை மிக எளிதாகக் கண்காணித்துக் கொள்ளலாம்.
இந்தச் செய்தி மிகுந்த வியப்பைத் தரத்தக்கதுதான்.
நான் இங்கு எழுதவிருப்பதைத் தொடர்ந்து படியுங்கள். நான் விளக்கும் ஒவ்வொரு பகுதியையும் நன்றாகப் புரிந்துகொள்ளும்வரை, தேவைப்பட்டால் மூன்று, நான்கு முறைகள் வேண்டுமானாலும் படியுங்கள். சிறிது காலத்திலேயே உங்களை நான் இத்துறையில் வல்லுனராக ஆக்கிவிடுகிறேன்.
நான் எழுதப் போவதில் சில பகுதிகள் மிக எளிமையானவையாகவும் நீங்கள் ஏற்கனவே அறிந்துகொண்டவையாகவும்கூட இருக்கலாம். “இது நமக்குத் தெரிந்ததுதானே!” என்றெண்ணி, எந்த ஒரு சிறு விவரத்தையும் புறக்கணித்துவிடாதீர்கள்.
இதெல்லாம் எவ்வாறு இயலும் என்ற ஐயம் ஏற்படுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். ஏனெனில், மிகக் குறுகிய காலத்திலேயே இது உண்மைதான் என்று நீங்களே உணர்ந்துகொள்ளப் போகிறீர்கள்.
ஆயினுங்கூட, இதனைப் பற்றிய சில அடிப்படைச் செய்திகளை இப்போதே உங்களுக்குச் தெரிவித்து விடுகிறேன்.
கடந்த 36 ஆண்டுக் காலமாக நான் செய்துவந்த ஆய்வுகளின் அடிப்படையில் நான் அறிந்துகொண்ட அனைத்து விவரங்களையும் உங்களுக்காக ஒளிக்காமல் மறைக்காமல் இங்கு எழுதப்போகிறேன்.
முதலில் உங்களுக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லிப், பின்னர் உங்களுக்குத் தெரியாதனவற்றைப் பற்றி சொல்லத் திட்டமிட்டுள்ளேன். எந்த ஒன்றையும் எளிதாக எடுத்துக் கொண்டுவிடாமல், ஒவ்வொன்றையும் நன்றாகப் புரிந்துகொள்ள முயலுங்கள்.
* * * * * *
உலகில் உள்ள அனைத்து மக்களயும் எட்டு வகைப்பட்டோராகப் பிரித்துள்ளேன்.
ஆண்-பெண் என்ற வேறுபாடு, மேலைநாடு, கீழைநாடு என்பன போன்ற வேறுபாடுகள் அனைத்தையும் மீறி, எல்லா மனிதர்களும் இந்த எட்டு வகைகளுக்குள்தான் அடங்குவர். எனவே, நீங்களும் இந்த எட்டில் ஒரு வகையைச் சேர்ந்தவராகத்தான் இருக்கமுடியும்.
பின் வரும் அந்த எட்டையும் நினைவிற் கொள்ளுவது நல்லது:
முதல் வகை: “எலும்பும் தோலுமாய் உள்ளோர்”. இவர்களை, ஆங்கிலத்தில் “Skeletal People” அல்லது “S” அல்லது “Minus-2” என்று குறிப்பிடுவேன்.
இரண்டாம் வகையினர்: “ஒல்லியாய் உள்ளோர்”. “Thin People” அல்லது “Minus One” என்று இவர்களைக் குறிப்பிடுவது எனது வழக்கம்.
மூன்றாம் வகையினர், “ஒச்சமில்லாதோர்”, “குறையற்றோர்”, “சீரானோர்” அல்லது “செம்மையானோர்” என்ற பொருள் தரக்கூடிய “Perfect People” அல்லது “P” என்றவாறு ஆங்கிலத்திலான எனது நூல்களில் குறிப்பிட்டு வருகிறேன். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துச் “செம்மையானோர்” என்றே நாம் இவர்களைக் குறிப்பிடுவோமாக.
“Obese” “Obesity” என்ற சொற்களைத் தமிழில் எவ்வாறு குறிப்பிடுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
“குண்டு”, “குண்டுத்தனம்”, அல்லது, “தடிப்பு”, “தடிப்புத்தனம்”, அதுவுமல்லாது, வடமொழியில் “பருமன்” என்று பலவாறாகக் குறிப்பிடலாந்தான். “அதிக எடையுடையோர்” அல்லது, “பெருத்த உடலுடையோர்’ என்றுங்கூடக் குறிப்பிடலாம்.
குண்டாக இருப்போரைக் “குண்டர்’ என்றோ, தடியாக இருப்போரைத் “தடியர்” என்றோ குறிப்பிடுவது தவறாகிவிடும்.
எனவே, Obesity Status என்பதைக் குறிப்பதற்கு “உடல் வாகு” என்று குறுப்பிடுவதுதான் சரியாக இருக்கும் என எனக்குப் படுகிறது. எனவே, அவ்வாறே செய்வோமாக.
இக்கட்டுரையில் நான் இதனை எவ்வாறு குறிப்பிட்டாலும், அது, ஆங்கிலத்திலான “Obese” அல்லது “Obesity” என்ற சொற்கள் தரும் பொருள்களாகவே கொள்ளுங்கள்.

மக்களுள் நான்காம் வகைப்பட்டோர், “முதல்நிலையிலான உடல்வாகு அல்லது தடிப்புத் தன்மையானோர்” ஆவர். இவர்கள், ஆங்கிலத்தில் “Obesity Type-1” என்ப்படுவர்.
அடுத்துவரும் ஐந்தாம் வகையினர், “இரண்டாம் நிலையிலான உடல்வாகைக் கொண்டோராவர்”. இவர்கள் “Obesity Type-2” எனக்குறிப்பிடப் படுகின்றனர்.
ஆறாம் ஏழாம் வகையினர் யாரென நான் கூறாமலேயே புரிந்துக்கொண்டிருப்பீர்கள். நீங்கள் எண்ணியவாறே இவர்கள், “மூன்றாம் / நான்காம் நிலையிலான உடல்வாகைக் கொண்டோராவர்” என்று குறிப்பிடப் படுகின்றனர். ஆங்கிலத்தில் இவர்களை “Obesity Type-3” / “Obesity Type-4” என்று குறிப்பிடுவது வழக்கம்.
எஞ்சியுள்ள எட்டாவது வகையினர், ஆங்கிலத்தில், “Withered” அல்லது “W” என்று குறிப்பிடப்படுகின்றனர்.
மரத்திலிருந்து முற்றிய நிலையில், “இனி வாழ இயலாது’ என்ற நிலையில் உள்ள பழுப்பு நிறத்து இலைகள் உதிர்ந்துவிடுகின்றனவல்லவா, அந்த நிலையைக் குறிப்பிடுவதுதான் “withered” எனும் இச்சொல்லாகும்.
தமிழில் இதனை எவ்வாறு சுட்டிக்காட்டலாம் என நினைக்கிறீர்கள்?
“நல்வாழ்வை இழந்தோர்’, “வாழத் தகுதியற்றோர்’, “வாழ்க்கையின் எல்லையில் உள்ளோர்’, “இறப்பிற்கு அருகில் உள்ளோர்’, “நலம் இழந்தோர்”, “நலிந்துவிட்டவர்கள்’, என்றெல்லாம் இவர்களைக் குறிப்பிட முடியுமென்றாலும், “நிலைகுலைந்தோர்’ என்று குறுப்பிடுவது நன்கு பொருந்துமென நினைக்கிறேன்.
இத்தகைய நிலைகுலைந்தோரே எட்டாவது வகைப்பட்டவர்களாவர்.
* * * * * *
கதை இதனோடு முடிந்துவிட்டது என்று நினைத்துவிடவேண்டாம்.
இந்தக் கடைசி வகையினரான நிலைகுலைந்தோரிடையே மேலும் எட்டுவகைப்பட்டோர் உள்ளனர்.
இவர்கள், “முதல்நிலை நிலைகுலைந்தோர்’, இரண்டாம் நிலை நிலைகுலைந்தோர், மூன்றாம் நிலை நிலைகுலைந்தோர், என “எட்டாம் நிலை நிலைகுலைந்தோர்’ வரை உள்ளனர்.
ஆங்கிலத்தில்,
“Withered-First Stage” அல்லது,”W-1”,
“Withered-Second Stage” அல்லது, “W-2”,
“W-3”, “W-4”, “W-5”, “W-6”, “W-6”, “W-7” and “W-8” என்பனவே அவையாகும்.
இந்த வகையினரை உங்களுக்கு மிக எளிதாகப் புரியவைப்பதற்காக பின்வரும் எடுத்துக் காட்டுக்களைக் குறுப்பிடுகிறேன்.
ஒருவருக்கு “Diabetes” எனும் இனிப்புநீர் நோய் இப்போதுதான் தோன்றியுள்ளது என்று வைத்துக் கொண்டால், அவர் “Withered-First Stage” அல்லது “W-1” என்ற வகைப்பட்டவராவார்.
இனிப்புநீர் நோயாளிகளை நிச்சியமாகப் பார்த்திருப்பீர்கள். பத்துப் பதினைந்து ஆண்டுகளாகிவிட்டால், அந்த இனிப்புநீர் நோயாளிகள் உடல் எடை குறைந்து, மெலிந்து, நலிந்துபோய்விடுவார்கள். அத்தகையோர், “W-3” அல்லது “W-4” என்ற வகையைச் சார்ந்தவர்களாவர்.
இந்நிலையில் உள்ள ஒருவர் நோய் முற்றிப்போய், படுத்த படுக்கையாக ஆகிப்போவாரானால், அவரை “W-8” என்ற வகைப்பட்டவராகக் குறிப்பிடவேண்டும்.
W-8 என்ற நிலையை ஒருவர் அடைந்துவிடுவாரேயானால், அவரை யாராலும் எந்த வழியாலும் குணப்படுத்த இயலாது. அது, “மரணம் உறுதியாகிவிட்ட நிலை” என்று கொள்ளுவதுதான் சரியாக இருக்கும்.
அந்த இனிப்புநீர் நோய் வருவதற்கு முன்னால், அதாவது, இனிப்புநீர் நோய் இன்னும் ஓரிரு மாதங்கள் அல்லது ஓராண்டுக்காலத்தில் ஏற்படப்போகிறது என்ற நிலையில் உள்ள ஒருவரை, “Obesity Type-4” என்ற “நான்காம் நிலைத் தடிப்புத்தன்மை அல்லது உடல்வாகை உடையவர்” எனக் கொள்ளவேண்டும்.
“நான் எந்த வகைத் தடிப்புத்தன்மையைச் சேர்ந்தவர்?” அல்லது, “எனது உடல்வாகு எத்தன்மையது?” என்ற கேள்விதான் அடுத்து எழும்.
அதை அறிந்துகொண்டால்தான் தமக்கு வரவிருக்கும் அல்லது இப்போதே இருந்துவரும் நோய்களைத் தடுத்துக் கொள்ளவோ குணப்படுத்திக்கொள்ளவோ இயலும்.
உங்களுடைய உடல்தன்மையை மிக எளிதான சில வழிகளில், முன்னரே கூறியதுபோல, கருவிகள் ஏதுமின்றியே கண்டறியலாம்.
சற்றே பொருத்திருங்கள். அடுத்த இதழில் அவ்விவரங்களை உங்களுக்குத் தெரிவித்து, உங்களை இந்தத் துறையில் திறம்படைத்தவராக ஆக்கிவிடுகிறேன்.
அதற்கு முன்னர், இன்று தரப்பட்டுள்ள இந்த விவரங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டால்தான் அடுத்தடுத்து வரும் விவரங்களை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும்.
ஏதோ புரிந்ததுபோல இருக்கிறது என்ற நிலையிலிருந்தால், தயவு செய்து, சோர்வடைந்து, மனந்தளர்ந்துவிடாமல், மீண்டும் ஒருமுறை நிதானமாகப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள்.
மனித வகையினரைப் புரிந்துகொள்ளாமல் இருந்தால், நான் தொடர்ந்து கூறப்போகும் அனைத்து விவரங்களையும் உங்களால் புரிந்துகொள்ள முடியவே முடியாது. அவ்வாறானால், நீங்கள் தேர்வில் தோற்றவர்க்கு ஒப்பாகிவிடுவீர்கள்.
“இது நமக்குச் சரிப்பட்டு வராது” என்றுமட்டும் நினைத்துச் சோர்ந்துவிடாதீர்கள். ஏனெனில், இந்தப் பகுதிமட்டும்தான் சற்றுக் கடினமானதுபோலத் தோன்றும். இனி வருவன புரிந்துகொள்ளுவதற்கு எளிதானதாக இருக்கும் என்பது மட்டுமல்லாமல், மிகப்பெரும் பயனைத் தரத்தக்கதாகவும் இருக்கும்.
உங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளவேண்டுமானாலும். உங்கள் குழந்தைகளை நோயற்றவர்களாக வாழவைக்க விரும்பினாலும், நீங்கள் கண்டிப்பாக இங்கு தரப்பட்டுள்ள விவரங்களைப் படித்துப் புரிந்துகொண்டுதான் ஆக வேண்டும்.
உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா?
“வாழ்க்கையில் வெற்றி பெருவோர் நொண்டிச் சாக்குப் போக்குச் சொல்லுவதில்லை!
அதேபோல,
நொண்டிச் சாக்குப் போக்குச் சொல்லுவோர், வாழ்க்கையில் வெற்றிபெறுவதே இல்லை!
தயவுசெய்து, நீங்கள் நொண்டிச் சாக்குப் போக்குச்சொல்லிவிடாமல், இக்கட்டுரையைப் பல முறைகள் படித்து, கண்டிப்பாகப் புரிந்துக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்வோர்க்கு நிச்சயமாகத் தகுந்த வெகுமதி கிடைக்கும்.
அடுத்த இதழில் மிகவும் பயன்தரத்தக்க விவரங்களைக் கூறவிருக்கிறேன், காத்திருங்கள்.


Share
 

2 Comments

  1. chandrasekaran says:

    மருத்துவ உலகில் பெரும்புரட்சியை ஏற்படுத்தவிருக்கும் சூழியல் மருத்துவ ஆராய்ச்சியை நமது தன்னம்பிக்கையில் தொடர்ந்து வெளியிடுவதற்கு என்னுடைய நன்றிகள்.

  2. sam10 says:

    மிகவும் பயன் உள்ளதகா தெரிகிறது நன்றி….

Post a Comment


 

 


March 2011

மு. மேத்தா கவிதை….
கவிதைகள்
முயன்றேன் வென்றேன்
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
உனக்குள்ளே உலகம்-10
வெற்றி விடியல்
நலந்தானா
பஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்
வளமான சிந்தனை
மனதினை தெளிவு செய்
மதிப்பு, மரியாதை
தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்! வாழ்க்கையின் மகத்துவத்தை உணருங்கள்!
மருத்துவம் நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
விதைகளால் ஓவியம்
ஜெயிப்பது நிஜம்
உங்களால் எதையும் சாதிக்க முடியும்
உழைப்பு என்பது தவம்!! சாதனை என்பது வரம் !!
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்