– 2011 – March | தன்னம்பிக்கை

Home » 2011 » March

 
 • Categories


 • Archives


  Follow us on

  மு. மேத்தா கவிதை….

  மரங்கள்
  மானுட ஆண்மைக்கு
  மண் கொடுத்த சீதனங்கள்
  மரங்கள்

  நாங்கள்
  சிறகுத் துடுப்புகள்
  செலுத்திச் செல்கிற
  படகுப் பறவைகளின்
  பயணியர் விடுதிகள்

  எந்தப் பறவைக்கும்
  இருக்க இடங்கொடுக்கும்
  பொதுவுடைமை வீடுகள்

  அதனால்தான்…
  தராதரம் அறியாத
  தான்தோன்றிப் பறவைகள்
  எங்கள் தலைமீதே
  எச்சமிட்டுச் செல்கின்றன

  நாங்கள்
  சூடுபடுகின்ற
  சொந்தக்காரர்களுக்காக
  விரித்தே வைத்திருக்கும்
  வெண்கொற்றக் குடைகள்

  மழைக்கும் ஒதுங்கும்
  மர நிலையங்கள்
  சரியாகப் போடாத
  சல்லடைப் பந்தல்கள்
  பாத சாரிகளின்
  பணிமனைக் கூடங்கள்

  மனிதர்கள்
  வாங்கி வைக்காத
  மண்ணின் விசிறிகள்

  மானுடர் கரங்களில்
  அகப்பட்டுக் கொண்ட
  மண்ணின் கைதிகள்…

  அதனால்தான்
  ஊருக்கு வெளியே
  உட்கார்ந்திருந்தாலும்
  எங்கள்
  மார்பிலும் தோளிலும்
  எண்களை எழுதி
  மாட்டி வைக்கிறார்கள்

  நாங்கள்
  காற்று மன்னவன்
  கால்நடை யாத்திரையைக்
  கண்டு முரசறையும்
  கட்டியங்காரர்கள்

  தரையில் நடக்கப்
  பிரியப்படாத போது
  காற்று எங்கள்
  தலைகளின் மீதே
  நடந்து செல்கிறது

  தென்றலின் பார்வையில்
  செல்லப்பிள்ளைகள்
  நாங்கள்
  புயலின் கண்களில்
  புரட்சிக்காரர்கள்

  வெட்டி யெடுத்தால்
  விறகாவோம்… வெய்யிலிலே
  சுட்டு எடுத்தாலும்
  சுறுசுறுப்பாய் அடுப்பெரிப்போம்

  நாங்கள்
  கல்லில் எறிந்தாலும்
  கம்பில் அடித்தாலும்
  பரிசு கொடுக்கின்ற
  பண்பின் வார்ப்புகள்

  வானத்தில் நடக்கும்
  நட்சத்திர இரவு
  விளையாட்டு மேடையில்

  தவறி விழுவதைத்
  தாங்கிப் பிடிப்பதற்காக
  மண்ணில் கட்டிய
  வலை விரிப்புகள்

  மனிதர்கள்
  தூங்கிய பிறகும்
  வானத்தில் விளக்கெரிவது
  மரங்களுக்காகவே

  கவிதைகள்

  நீ உணர்வாய்

  தோல்விகள் உன்னைத்
  தழுவும்போது
  எல்லாம் தலையெழுத்து
  என்று நீ எண்ணி
  தலைசாய்ந்து நிற்காதே!
  நம்பிக்கையுடன்
  நடந்து செல்
  நீ உணர்வாய்
  திசைகள் எட்டும்
  உன்
  வருகைக்காய் காத்திருப்பதை!
  ப. நிகரன், ஈரோடு

  உயர்ந்த எண்ணமே உன்னை உயர்த்தும்

  நம்பிக்கையற்றவன்
  காற்றுக்கே சாயும்
  சல்லிவேர் கொண்ட புல்
  நம்பிக்கையுள்ளவன்
  புயலுக்கே நிமிர்ந்து நிற்கும்
  ஆணிவேர் கொண்ட ஆலமரம்

  நம்பிக்கையற்றவன்
  சிறகொடிந்த கூட்டுப்பறவை
  நம்பிக்கையுள்ளவன்
  சிறகை விரித்து
  வானில் வட்டமிடும் ராஜாளி

  நம்பிக்கையற்றவன்
  வெய்யிலில் புழுப்போல் காய்ந்து
  வெந்ததை தின்று ஓய்ந்து
  வேதனையில் தினமும் நொடிந்து
  வேடிக்கை பார்த்தே மடிந்து போகிறான்

  நம்பிக்கையுள்ளவன்
  இரத்தத்தை வியர்வையாக்கி
  இரவை பகலாக்கி
  சோதனையை சாதனையாக்கி
  சரித்திரம் படைக்கிறான்

  தாழ்ந்த எண்ணம் உன்னை தாழ்த்தும்
  உயர்ந்த எண்ணமே உன்னை உயர்த்தும்Ð
  – கவிஞர் ஞானச்சித்தன்

  உணர்வினை புரிந்து…
  முடியற செயல்கள் எதுவெனத் தெரிந்து
  முயற்சியைத் தொடங்கிட வேண்டும் நாம்
  நடக்கிற பாதையில் தடைகளைக் கண்டு
  களைகளை அகற்றிட வேண்டும்

  வடிக்கிற வேர்வை நிலத்தினில் வீழ்ந்தால்
  நினைக்கிற வெற்றிகள் தோன்றும் அதிலே
  படிக்கிற பாடமும் முடிக்கிற வேகமும்
  படிப்பினை ஆகிட வேண்டும்

  எடுப்பதும் முடிப்பதும் எளிதென நினைத்தால்
  நடிப்பென வாழ்க்கை மாறும் மனிதன்
  உடுப்பதும் உண்பதும் உறங்கிடும் சுகமதும்
  நொடிக்கொரு துன்பங்கள் சேரும்

  படிக்கிற நூலில் பயன்களைத் தெரிந்தால்
  வடிக்கிற பாதை தெரியும் மனிதன்
  எடுக்கிற முயற்சியும் படிக்கிற பயிற்சியும்
  கொடுத்திடும் வெற்றிகள் குவியும்

  மனமெனும் குதிரை மலைகளைத் தாண்ட
  தினமொரு வேகத்தைத் தூண்டும் அருகில்
  கனமது நிறைந்திட தருகிற வாய்ப்பினை
  மனமது புரிந்திட வேண்டும்

  உணர்வினைப் புரிந்து உணர்ச்சியை அடக்கும்
  விடைகளைத் தெரிந்தால் வெல்வோம் நாம்
  கனவினில் காணும் காட்சியைப் புரிந்தால்
  நினைவினில் வெற்றியைக் கொள்வோம்
  – “கவிஞர் நம்பிக்கை நாகராஜன்,
  கோவை.

  மனதில் ஹைக்கூ

  ஒரு வழிப்பாதை
  ஏறும் இறங்காது
  விலைவாசி!
  – கவிஞர் இரா. இரவி,
  மதுரை

  முயன்றேன் வென்றேன்

  வயிற்றுப்பசியாற்ற’கலைக்குவியல்’ என்கிற விளம்பர நிறுவனமும், கலைப்பசி தீர்க்க ‘உடு’ என்கிற ஓவியப் பள்ளியும் நடத்திக் கொண்டிருப்பவர் சி.சீ. அர்விந்த் குமார்.
  அவரின் எண்ணங்கள் போன்றே எளிமையான தோற்றம் அவருக்கு கல்லுரியில் காட்சித் தொடர்பியல் முடித்தும், ஆங்கிலம் தெரிந்திருந்தும் எளிய தமிழில் பேச்சைத் தொடர்ந்தார்.
  என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு கலையானாலும், வியாபாரத்துக்காகவும், பொழுதுபோக்குக்காகவும், அதைப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
  கலைகள் இதுவரை பல வரலாற்றுப் பொக்கிஷங்களை நமக்கு தந்துள்ளது. மக்களின் கலாரசனையை மாற்றக்கூடிய 40க்கும் மேற்பட்ட பல குறும்படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளேன். நான் ஒளிப்பதிவு செய்த ‘எறிதழல் பறவைகள்’ என்ற குறும்படம் கனடாவில் நடந்த உலகத்திரைப்பட நிகழ்வில் பாராட்டுதல் பெற்றது நமக்குப் பெருமை.
  நல்ல இசை எப்படி மனதில் ஆழமாக பதிகிறதோ, ஒரு நல்ல சினிமாவும் மக்களிடையே ஊடுறுவி ஒரு மாற்றத்தை நிகழ்த்துகிறது.
  தனக்குத் தெரிந்த சினிமாக்கலையைப் பொழுதுபோக்கு மற்றும் கவர்ச்சிப் பொருளாக விற்காமல் மக்கள் ரசனையை வேறு ஒரு கோணத்தில் கொண்டு செல்லும் கடமையில் நானும் ஒருவன் எனச்சொல்லும் இந்த தன்னம்பிக்கை ஒளிப்பதிவாளன் ஆர்வத்தோடு வரும் இளைஞர்களுக்கு புகைப்படக்கலையைக் கற்றுத் தருகிறார்.
  இவரிடமிருந்து ஒரு நல்ல திரையுலக எதிர்காலத்தை எதிர்பார்த்து தன்னம்பிக்கையுடன் வாழ்த்துவோம்.
  – X-Ray ராஜ்குமார்

  என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

  பொறியியல் சேர்க்கை 2011

  தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை விபரங்களில் இந்த இதழில் நாம் அறிய இருப்பது கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறைகள்.
  கடந்த ஆண்டுகளில் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி மற்ற நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை பலதரப்பட்ட தொழில்களையும், அதன் சார்ந்த பொறியாளர்களையும் மிகவும் பாதிப்படைய வைத்தது. அதன் தொடர்ச்சியாக பலர் தங்களின் மாத சம்பளத்தின் அளவு குறைக்கப்பட்டது. சிலர் தங்களுடைய வேலையை இழந்தனர். இதன் தாக்கம் அத்துறை சார்ந்த மாணவர்களின் சேர்க்கை விகிதத்தில் பெறும் விளைவுகளை ஏற்படுத்தியது. குறிப்பாக கம்யூட்டர் மற்றும் தகவல் தொடர்பு துறையின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டது.
  தகவல் தொடர்பு துறை மீண்டும் எழுச்சி பெற்று, கடந்த ஆண்டின் இறுதியில் மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற கல்லூரி வளாகத் தேர்வின் மூலம் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களின் வேலை வாய்ப்புக்கான கடிதங்களைப் பெற்றதன் மூலம் இத்துறை மீதான மாணவர்களின் நம்பிக்கை துளிர்கின்றது.
  பெரும்பாலான மாணவர்களின் மத்தியில் உள்ள சந்தேகம் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கும் தகவல் தொடர்பு பொறியியலுக்கும் இடையே உள்ள வேறுபாடு.
  கம்யூட்டர் சயின்ஸ் (CSE) என்பது தனிப்பட்ட கம்யூட்டர் மற்றும் புரோகிராமிங் பற்றிய அறிவை பெறுவதாகும். ஆனால் தகவல் தொடர்பு (IT) என்பது கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சேர்ந்த பிரிவாகும்.
  கம்யூட்டர் சயின்ஸ் (CSE)
  உலகளவில் கம்யூட்டர் நுழையாத இடம் உண்டா என்றால் அதற்கு இல்லை என்றுதான் பதில். அந்த அளவிற்கு கம்யூட்டர் நமது வாழ்வில் ஓர் அங்கமாகி விட்டது. நமது பொறியாளர்கள் பலர் வளர்ந்த மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் பல லட்சங்களை ஆண்டு வருமானமாகப் பெற்றுக்கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகள் இந்திய பொறியாளர்களின் திறமைகளை வாழ்த்துவதுடன் அவர்களின் வளர்ச்சி தங்களைப் பாதிக்கும் என்பதனையும் அவர்கள் அறிய மறக்கவில்லை.
  கம்யூட்டர் துறையின் மீதான இளம் வயது ஆர்வம் சில மாணவர்கள் தங்களின் தேர்வை பிளஸ் டூ பாடப்பிரிவிலிருந்து வெளிப்படுத்துகின்றனர். கம்யூட்டர் புரோகிராமிங் ஆர்வம், குளிர்சாதன அறையில் வேலை செய்யும் வழிமுறை, பல இயக்க பணி ஊதியம் ஆகியவை இத்துறை பொறியாளர்களின் தனித்தன்மைகள்.
  நாள்தோறும் புதிய புதிய கண்டுபிடிப்புகள், அதற்கு தகுந்தாற்போல் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் பக்குவம் செயல்பாடுகள். Software Engineering, Information Technology, Network Engineering and Computer and Communication போன்ற முதுகலை பொறியியல் படிப்புகளையும், TCS, Wipro, Infosis, CTS, IBM, HP, HCL போன்ற முன்னிலை பன்னாட்டு கம்பெனிகளில் (MNC) வேலை பெறும் வாய்ப்புகளுடன் இத்துறை மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
  தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரி சேர்க்கையில் ECE, Mechanical துறைக்கு அடுத்தபடியாக விளங்குவதுடன் பெண்களால் அதிகம் விரும்பப்படுவதும் இநஉ பொறியியல் துறையாகும்.
  இநஉ துறையைத் தேர்வு செய்வதற்கு முன் சில விபரங்களை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அவர்கள் தொடர்ந்து கம்யூட்டர் முன் அமர்ந்து வேலையை தொடரவும், அதன் மூலம் ஏற்படும் முதுகு வலி, கண் பார்வை பாதிப்பு, தலைவலி மற்றும் மனநிலை சோர்வு போன்ற உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகளையும் கவனிக்க வேண்டியுள்ளது.
  தமிழ்நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 443 கல்லூரிகளில் சுமார் 39,000 இடங்கள் உள்ளன. பொருளாதார மந்த நிலை காரணமாக 2009ம் ஆண்டு நடந்து முடிந்த அரசின் சேர்க்கை கலந்தாய்வில் 58 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தங்களின் இடங்களைத் தேர்வு செய்தனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட வளர்ச்சி மாணவர்களின் மனதில் மாற்றத்தைக் கொண்டு வந்ததுடன், அதிகளவில் மாணவர்கள் தங்களின் வாய்ப்புக்களை CSE துறையில் பதிவு செய்தனர்.
  தகவல் தொடர்பு பொறியியல் (IT)
  சமீப காலங்களில் தொடங்கப்பட்ட பிரிவாக இருந்தாலும் தொடங்கப்பட்ட ஆண்டுகளில் மாணவர்கள் மத்தியில் மிக அதிக அளவிலான வரவேற்பைப் பெற்று, அசைக்க முடியாத துறையாக வலம் வந்து, அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் தன்னுடைய முழு பலத்தையும், இழந்து மாணவர்கள் மனதில் கடைசி இடத்தை பிடித்திருக்கின்றது. இதன் மூலம் இத்துறை பொருளாதாரம் என்ற இரக்கத்திற்கு ஏற்றாற்போல் மாறுவதால் இத்துறை மீது மாணவர்களின் தேர்வும் மாறிக்கொண்டே வருகின்றது.
  மாணவர்களுக்கு எங்களுடைய அறிவுரை என்ன வென்றால் ஒருபோதும் தங்களின் சேர்க்கை பெறும் ஆண்டின் நிலையை வைத்துக்கொண்டு தங்களின் தேர்வை மேற்கொள்ளக்கூடாது. ஏன் என்றால் அவர்கள் வேலைபெற முயற்சிப்பது அடுத்த நான்கு ஆண்டிற்குப் பிறகு தான்.
  தமிழ்நாட்டில் கடந்த 2007ம் ஆண்டு 95% மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட துறையானது, 2009ம் ஆண்டில் வெறும் 44% மாணவர்கள் மட்டுமே தங்களின் தேர்வைப் பதிவு செய்தனர். இது போன்ற நிலையற்றதன்மை காரணமாக பெரும்பாலான தனியார் கல்லூரிகள் இத்துறையில் உள்ள தங்களின் இடங்களின் எண்ணிக்கையைக் குறைத்தும், சில கல்லூரிகள் முழுவதுமாக நிறுத்தியும் உள்ளன. Information Technology, System Engineering and Communication & Networking போன்ற புதுமையான முதுகலை பொறியியல் படிப்புகளும், படிப்பு முடிவதற்குள் ஏதேனும் ஒரு தகவல் தொடர்பு துறையில் வேலை வாய்ப்புகளும் இத்துறை மாணவர்களின் அசையாத நம்பிக்கைகளாக உள்ளன.
  ஆசிரியர் பணி என்பது ஒரு புனிதமான தன்னை முழுவதும் மாணவர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கும் தொண்டாகும். அந்த அர்ப்பணிப்புக்குத் தற்பொழுது அதிக அளவிலான வாய்ப்புக்கள் உருவாகி உள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து (497) இருப்பதன் மூலம், முதுகலை பட்டம் பெற்ற பொறியாளர்களின் தட்டுப்பாடு அதிகளவில் காணப்படுகின்றது. ஒரு மாணவர் ங.உ. படிப்பை முடிப்பதற்கு 6 மாதத்திற்கு முன்பே மாதம் சுமார் ரூ.20,000 சம்பளத்தில் ஆசிரியர் பணிகள் காத்திருக்கின்றன. குறிப்பாக இநஉ மற்றும் ஐப சார்ந்த துறைகளில் அதிக அளவிலான ஆசிரியர்கள் தட்டுப்பாடு தனியார் கல்லூரிகளில் நிலவுகின்றது.
  கடந்த இதழ்களில் அதிகம் அறியப்பட்ட துறைகளின் விபரங்களைத் தொடர்ந்து, அடுத்த இதழில் அதிகம் அறியப்படாத, அதே நேரம் அதிக அளவிலான வேலை வாய்ப்புக்களைக் கொண்டிருக்கும் சில பொறியியல் துறைகளின் விபரங்களை அறிய இருக்கின்றோம்.

  சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50

  36. தள்ளிப்போடுவதைத் தவிர்ப்போம்

  நிரஞ்ச் 45 வயது இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தாலும், தனக்கென்று ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்கி வாழ்வில் சமூக பொருளாதார அந்தஸ்த்தை உயர்த்தியே ஆக வேண்டும் என்ற நெடு நாளைய குறிக்கோளுக்குச் சொந்தக்காரர் ஆவார். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் அதிபராக வேண்டும் என்ற அடங்கா ஆசை கொண்ட நிரஞ்ச், அது நிறைவேறாத காரணத்துக்காகவும் சேர்த்து தான் இன்று விரக்தியின் விழிம்பில் மனஅழுத்த நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். .அந்த நண்பருடன் நிகழ்த்திய உரையாடல் உணர்த்திய பாடமே சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50 தொடரின் 36- வது வழிமுறையின் உட்கருத்திற்கான ஆதாரம். நிரஞ்ச் தன் வாழ்வில் அடைய நினைத்த குறிக்கோளினை அவர் 45 வயது வரை அடைய முடியாதததற்கு அவருடன் நடத்திய உரையாடலிலிருந்து நான் உணர்ந்து கொண்ட காரணம் “தள்ளிப்போடுதல்” என்றஎதிர்மறைகுணநலனே ஆகும்.
  அவர் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற முயற்சியைப் பல முறை, பல காரணங்களைக் (சாக்கு போக்குகளை) கண்டுபிடித்து தள்ளிப்போட்டு வந்துள்ளார். இன்று தன் முழு முதல் லட்சியத்தை அடையமுடியாமல் மன அமைதியை இழந்து தான் தவிப்பதுடன், தன் குடும்பத்தாரின் நிம்மதியான வாழ்க்கையையும் பாழ்படித்தி வருகின்றார்.
  நிரஞ்ச், தனது வாழ்நாள் கனவாகிய தொழில் தொடங்குவது முதல் உடல் உபாதைக்கு மருத்துவரை சந்திப்பது, உடற்பயிற்சி செய்வது, படிப்பது, பல் துலக்குவது என நம்மில் பலர் பலவித செயல்களைத் தள்ளிப்போட்டு வருகின்றோம்.
  தள்ளிப்போடுதல் – தீமைகள்
  தள்ளிப்போடும் செயல் நம் வாழ்வின்
  வளர்ச்சியை பாதிப்படையச் செய்யும்.
  உடல் மற்றும் மனநல பாதிப்புகளுக்குக் காரணமாக அமையும்.
  செயல்திறனை குறைத்து விடலாம்.
  பிறருடனான உறவுகள் பாதிப்படையத் துவங்கலாம்.
  இவை போன்றமேலும் பல தீமைகளுக்குக் காரணமாக அமைவது தள்ளிப்போடும் குணநலன்.
  தள்ளிப்போடுவதை எப்படி தவிர்க்கலாம்?
  தன் வாழ்நாள் குறிக்கோளை அடைய முடியாத அளவு செயல்பாடுகளைத் தள்ளிப்போட்டு வந்த நிரஞ்ச்சின் முதல் பிரச்சனை ‘தான் தள்ளிப்போடும் செயல்களுக்கு ஒவ்வொரு முறையும், தன்னை சார்ந்த ஒருவர் மற்றும் தன் சூழ்நிலை காரணிகள் தான் காரணம்’ என காரணம் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தி வந்தது தான்.
  ஆகவே தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நீங்கள் விரும்பினால், முதலில் உங்களில் நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அதாவது இன்றைய நிலைக்கு உங்கள் தள்ளிப்போடும் தன்மை தான் காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதைவிட முக்கியமாக அப்படி தள்ளிப்போட்டு வந்ததற்கு நீங்கள் தான், உங்கள் மனோ பாவம் தான், நீங்கள் எடுத்த முடிவுகள் தான் காரணம் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  அடுத்ததாக, இனிமேல் எந்த செயலையும் தள்ளிப்போட மாட்டேன் என்றமுடிவை எடுத்துவிட வேண்டும். தள்ளிப்போடவே மாட்டேன் என உறுதியாக முடிவெடுத்த நீங்கள் திட்டவட்டமாக ஒரு லட்சியம் அல்லது குறிக்கோள்களுடன் செயல்படுகிறீர்களா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி செயல்படாவிட்டால் உங்கள் விருப்பு வெறுப்புகளை ஆய்ந்து ஒரு உறுதியான லட்சியம் ஒன்றினை உங்கள் ஆழ்மனதில் ஆழமாக பதிவு செய்து விடுங்கள். அப்படி ஒரு கனலாய் விளங்கும் உன்னத லட்சியம் ஒன்றைஉங்கள் ஆழ்மனது அங்கீகரித்து விட்டால், அடுத்து நீங்கள் உங்கள் பொறுப்புகளைத் தள்ளிப்போடாதவாறு உங்கள் ஆழ்மனதே உங்களை வழிநடத்த துவங்கிவிடும்.
  ஆனாலும் தள்ளிப்போடுவதை தவிர்க்க மேலும் சில ஆலோசனைகள்:
  தினமும் காலையில் அன்றைய பணிகளைத் திட்டமிடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள். குறிப்பாக அன்றன்று செய்ய வேண்டிய பணிகளை வரிசைப்படுத்தி எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது அந்த பட்டியலைப் பார்த்து வாருங்கள்.
  உங்களால் முடியாத சில செயல்களை, அந்த செயல் சார்ந்த வல்லுனர்களிடம் (பணியாளர்களிடம்) ஒப்படையுங்கள்.
  முக்கியமான அல்லது கடினமான செயல்களை முதலில் உறுதியுடன் முடித்துவிட்டால் அடுத்த செயல்களைச் செய்யும் உற்சாகம், புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கையும் தானாகவே உருவாகிவிடும். செயல்புரியவும் தொடங்கிவிடுவோம்.
  அன்றன்று செய்ய வேண்டிய செயல்களை ஒவ்வென்றாக முடித்து உங்களிடம் காணப்படும் பட்டியலில் அவற்றின் மீது கோடு வரைந்து அடித்து விடவும். இந்த செயல், உங்கள் தள்ளிப்போடும் குணத்தை அடியோடு மாற்றிவிட உதவி புரியும்.
  தினசரி மாலையில் தூங்க செல்லும் முன் நீங்கள் இன்று என்னென்ன பணிகளை நிறைவேற்றி உள்ளீர்கள் என்றபட்டியலைத் தயார் செய்யுங்கள். நீங்கள் வெற்றிகரமாக செய்துள்ள பணிகளின் பட்டியலைப் பார்க்கும் போது உங்கள் உத்வேகம் மேலும் அதிகரிக்கும். அத்துடன் நீங்கள் என்னென்ன செயல்களைத் தள்ளிப் போட்டுள்ளீர்கள்? தள்ளிப் போட்டதன் காரணங்கள் என்ன? தினசரி திட்டப்படி செயல்களை நிறைவேற்றாமல் இருக்க மனது என்னென்ன சாக்கு போக்குகளை அள்ளி அள்ளி வழங்குகிறது? போன்றகேள்விகளின் விடைகளைக் கண்டு தள்ளிப்போடுவதைத் தடுப்பதற்கான முயற்சியில் களம் இறங்குவது, சுந்தோஷ சாதனை வாழ்வின் அடிப்படை தேவை. ஆகவே நண்பர்களே…
  தள்ளிப்போடுவதைத் தடுப்போம்!
  சாதனைகளைக் குவிப்போம்!
  சந்தோஷத்தை அனுபவிப்போம்!
  37. பொறுமை கடலினும் பெரிது
  “பொறுத்தவன் பூமியை (புவியை அல்லது உலகை) ஆழ்வான்” என்கிறது பழமொழி.
  பூமியை நாம் (நமக்கு பின் நம் நாமம்) தொடர்ந்து ஆழ வேண்டுமானால் இரண்டு விஷயங்கள் தேவைப்படுகின்றது. ஒன்று நாம் சாதனைகள் புரிந்திருக்க வேண்டும். மற்றொன்று உலகம் (மக்கள்) நம்மீது மட்டற்ற அன்பு கொண்டிருக்க வேண்டும்.
  ஆக, நாம் சாதனை செம்மலாக, நமக்குப் பின்னும் மக்கள் மனதில் மாண்புடன் நிலைபெற்றிருக்க, நமக்கு உதவிபுரியும் அற்புத குணநலனான “பொறுமை” வேண்டும்.
  ஜானி எல்டன் என்றசுட்டியான குட்டிப் பையனுக்கு மாம்பழம் மீது கொள்ளைப்பிரியம். தொடர்ந்து பெற்றோர் வாங்கி வழங்கி வந்த மாம்பழத்தை மகிழ்வோடு ரசித்து, ருசித்து வந்த ஜானிக்கு ஒரு சந்தேகம். இந்த மாம்பழம் எங்கிருந்து வருகிறது? ஜானி அம்மாவிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தான்.
  விடை, மாம்பழ விதையை மண்ணில் விதைத்து வைத்தால், மாமரம் வளரும்; மரம் வளர்ந்து பூ பூத்து, காய் காய்த்து, கனி தரும் என்பதாக இருந்தது.
  உடனடியாக செயலில் இறங்கிவிட்டான் அன்று அப்பா வாங்கி வந்த மாம்பழத்தை ருசித்து விட்டு விதையை அம்மா சொன்னபடி நிலத்தை பண்படுத்திவிட்டு விதைத்து வைத்தான் ஜானி.
  விதைத்ததோடு நிறுத்தி விட்டானா? இல்லை தினமும் காலை, மாலை என பலமுறை மாமரத்தை காணும் கனவுகளுடன் மாமர விதைக்கு நீர் ஊற்றி கவனித்து வந்தான்.
  ஒருநாள், இருநாள் என நாள்கள் கடந்துவிட்ட நிலையில் பொறுமை இழந்த ஜானி, தன்னுடைய மாமரத்தைக் காணும் முயற்சியைக் கைவிடும் முடிவுக்கு வந்துவிட்டான். ஆனாலும் அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு நீர் தெளிப்பதை நிறுத்தி விடலாம் என்று முடிவு எடுத்தான்.
  அம்மாவிடம் அம்மா தாங்கள் கூறிய படி மாமரம் துளிர்க்கவில்லையே என்று மனம் வெதும்பி நின்றான் ஜானி. அம்மா மகனே “வாழ்வில் சில நேரங்களில் நாம் நினைப்பது போல் உடனடியாக பலன்களும் விளைவுகளும் விளைந்து விடாது. பலன்களுக்கான முயற்சிகளில் ஈடுபடும் பலர் சிறிது காலத்திற்குள்ளே தங்கள் முயற்சி கைகூடவில்லையே என முயற்சிகளில் இருந்து பின்வாங்கி விடுகின்றனர். இன்னும் சிலரோ, பலன்கள் விளைவுகள் வெற்றிகள் சாதனைகளுக்கு மிக (அருகாமை வரை பொறுமை காத்து) அருகாமையில், பொறுமை இழந்து முயற்சிகளிலிருந்து பின்வாங்கி விடுகின்றனர். ஆனால் யார்? யார்? தொடர்ந்து பொறுமையுடன் பலனை அடையும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டே இருக்கின்றனரோ, அவர்களே இறுதியில் வெற்றிக் கனியை தட்டிச் செல்கின்றனர்.
  எனவே, அன்பு மகனே பொறுமையுடன் உன் மாமரம் துளிர்விடுவதைக் காணும் முயற்சியைத் தொடர்வாயாக!” என அறிவுறுத்தினார் ஜானியின் தாய்.
  தாய் நல்கிய வெற்றியின் தாரக மந்திரத்தைப் பற்றிக் கொண்ட ஜானி தன் முயற்சியை விட்டு விடவில்லை. அதாவது பொறுமையாக தொடர்ந்து மாவிதைக்கு நீர் ஊற்றி, நிழல் தந்து, பாதுகாத்து கவனித்து வந்தார்.
  அவர் பொறுமையின் பலனாக அடுத்து சில நாள்களிலேயே, ஜானி பொறுமையுடன் எதிர்பார்த்திருந்த பலன் வந்து விட்டது. மாமரக்கன்று துளிர்விட்டு பூவுலகை எட்டிப்பார்த்தது. எல்லையில்லா மகிழ்ச்சி கொண்ட ஜானி ஆனந்தக் கண்ணீருடன் தாய் தந்தையரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
  பொறுமை காத்து வெற்றி கண்ட ஜானிக்கு சந்தோஷம். ஜானியின் சந்தோஷ கண்ட பெற்றோருக்கும் சந்தோஷம்.
  பொறுமையுடன் மாவிதை துளிர்விட வழிவிட்ட ஜானியின் வெற்றிச் செயலால் தனக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும், மனித சமூகத்திற்கும் நன்மை. அளவிலடங்கா மாம்பழங்களை அனுபவித்த இல்லமும் உலகமும் ஜானியிடம் அன்பு செலுத்த ஆரம்பித்தது.
  ஜானியின் பொறுமை, சாதனையை நல்கியது. சாதனை சந்தோஷத்துக்குக் காரணமானது. பொறுமையுடன் குறிக்கோளை நோக்கி செயலாற்றுங்கள். இத்தகைய பொறுமையான செயல்பாடு, நம் இலட்சிய செயல்பாடு, நம் இலட்சியப் பயணத்தில் வரும் சின்னச்சின்ன குறுகிய கால தோல்விகள், தடைகள் மற்றும் அவமானங்களைத் தாண்டி நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். தன்னம்பிக்கையாளர்களேÐ நீங்கள் பொறுமையாக செயலாற்றி சந்தோஷ சாதனை வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
  (சாதனை களத்தில் மீண்டும் சந்திப்போம்; அடுத்த இதழில்………)

  உனக்குள்ளே உலகம்-10


  வேண்டாமே பயம்…

  பள்ளிக்குச் சென்றுவிட்டு திரும்பிய மகளிடம் அம்மா கேட்டாள், “அடுத்த வாரம் உனக்கு ஆண்டுத்தேர்வு நடக்குமே?…. நீ….. பிரிப்பேர் (Prepare) பண்ணிட்டியா?” – இந்தக் கேள்வி மகள் திவ்யாவை திரும்பிப்பார்க்க வைத்தது. அம்மாவை பார்த்து அமைதியானாள்.
  “ஏன்….. இப்படி அமைதியாயிட்டே?”. அம்மா கேட்டதற்கு சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு திவ்யா பதில் சொல்ல ஆரம்பித்தாள்.
  “அம்மா….. எனக்கு இந்த எக்ஸாமை நினைத்தாலே பயமா இருக்கிறது. பிளஸ் 2 வில் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடம் எடுத்துப் படிப்பவர்கள், மிக நன்றாகப் படித்தால்தான் நல்ல மார்க் எடுத்து படிக்கமுடியும் என போனவருடமே என் தோழிகள் சொன்னார்கள். இப்போது தேர்வை நினைத்தாலே பயமாக இருக்கிறது. பாஸ் பண்ணுவேனா? என்பதுகூட எனக்கு சந்தேகமாகிவிட்டது”, என தனது பயத்தை சந்தேகமாக்கி வெளிப்படுத்தினாள். தேர்வு நேரம் நெருங்கியதுமே பய வடிவில் சந்தேகம் திவ்யாவுக்கு உருவாகிவிட்டது.
  பிளஸ் 2 தேர்வுகள் முடிந்தன.
  “எவ்வளவு மார்க் உனக்குக் கிடைக்கும்?”, பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்டார்கள்.
  “ஏதோ சுமாராகத்தான் மார்க் கிடைக்கும். ரிசல்ட் வரட்டும் பார்ப்போம்”, என திவ்யா பதில் கொடுத்தாள்.
  மீண்டும் பயத்துடன் கூடிய சந்தேகம்.
  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
  தேர்வில் குறைந்த மதிப்பெண்களைத் திவ்யா பெற்றிருந்தாள்.
  “பிளஸ் 2வில் உனது மார்க் ஏன் குறைந்துவிட்டது?”, உறவினர்களும் ஊர்க்காரர்களும் கேட்டார்கள். முதலில் திவ்யாவுக்கு வருத்தமாக இருந்தது. பின்பு பழகிப்போனது.
  அடுத்து என்ன செய்யவேண்டும்?
  கேள்விக் கொக்கி மனதை நெருடியது.
  “திவ்யா எந்தக் காலேஜில் படிக்கப்போகிறாய்?” தெரிந்தவர்கள் பலரும் கேட்க ஆரம்பித்தார்கள்.
  “இந்த 645 மார்க்குக்கு கல்லூரியில் இடம் கிடைக்குமா?”, திவ்யாவுக்கு குழப்பம் ஏற்பட்டது. சந்தேகம் உருவானது பயமும் அதிகரித்தது.
  கல்லூரிக்கு விண்ணப்பம் போட அப்பாவோடு சென்றாள்.
  “இதெல்லாம் ஒரு மார்க்கா சார்? 1000 மார்க்குக்கு மேல் எடுத்தவங்களுக்கே எங்களால் அட்மிஷன் கொடுக்க முடியவில்லை. நீங்கள் எந்த நம்பிக்கையில் எங்கள் கல்லூரிக்கு வந்தீர்கள்?”, தரமான அந்தக் கல்லூரியின் அலுவலக மேலாளர் ஏளனமாய் சிரித்தார்.
  அப்பா அமைதியாய் நின்றார்.
  “எனது மதிப்பெண்களால் என் அப்பாவுக்கும் அவமானம் வந்துவிட்டதே”, திவ்யா கவலைப்பட்டாள். கவலை அதிகமானதும் பயம் அதிகமானது. கல்லூரியில் இடம் கிடைப்பதில் சந்தேகமும் உருவானது.
  சில நாட்களில் அந்த தரம் வாய்ந்த கல்லூரியில் “இடம் இல்லை” என அறிவித்துவிட்டார்கள்.
  மீண்டும் அவளுக்கு கவலை. கண்ணீர்த் துளிகள்.
  ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ‘டிப்ளமோ’ படிப்பில் சேர்த்தார்கள். அஞ்சல்வழி பட்டப்படிப்பிலும் திவ்யா சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.
  “இந்தப் படிப்புக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா?” அந்தப் படிப்புகள் பற்றி மீண்டும் சந்தேகம் அவளுக்கு எழுந்தது. குழம்பினாள். அதிகமாய் பயந்தாள்.
  மூன்று வருடத்தில் திவ்யா பட்டதாரி ஆனாள். கம்ப்யூட்டர் படிப்பையும் முடித்திருந்தாள்.
  இப்போது “இண்டர்வியூ” நேரம். வேலையில்லாப் பட்டதாரிகள் ஆயிரமாய் குவிந்திருந்தார்கள்.
  “என்னை நிச்சயம் செலக்ட் செய்ய மாட்டார்கள்”. “எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாதல்லவா?”, என இண்டர்வியூ நேரத்தில் நினைத்தாள் திவ்யா.
  பயம் ‘பக்’கென பற்றிக்கொண்டது. சந்தேகம் சகோதரனாகிவிட்டது. குழப்பம் மனதுக்குள் ‘கும்மாளம்’ போட்டது.
  ‘திவ்யா’வைப்போல இன்று சில மாணவிகளும், மாணவர்களும் மனங்களில் தேவையில்லாத பயத்தையும், சந்தேகத்தையும் நிரப்பி தங்கள் வாழ்க்கையை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
  இந்தக் குழப்பம் தேவைதானா?
  ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துவிட்டோம். உட்கார்ந்தபின்பு ‘இந்த பஸ் சரியான நேரத்துக்கு போகுமா? டிரைவரைப் பார்த்தால் கிழவர்போல் இருக்கிறார். இவர் ஒழுங்காக பஸ்ஸை ஓட்டுவாரா? கண்டக்டர் அவ்வளவு சுறுசுறுப்பில்லை. டிக்கெட் கொடுத்து முடிப்பதற்கே அரைமணி நேரம் எடுத்துக்கொள்வார் போலிருக்கிறதே? இப்பவெல்லாம் பழைய பஸ்களுக்கு புதுசா பெயிண்ட் அடிச்சிடுறாங்க? இந்தப் பஸ் மதுரை வரை ஒழுங்காகப் போகுமா? வழியில் ஸ்டாப் இல்லாமல் பஸ் போகுமா? இப்படி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் விதவிதமாக சிந்தித்து விநோதமான கேள்விகளையும் எழுப்பி பயணத்தைத் தொடர்ந்தால் பஸ் பயணம் எப்படி இருக்கும்? இல்லாத வேதனைகளை கற்பனைமூலம் இழுத்துவந்து மனதில் போட்டு சோதனைகளாகச் சொந்தங் கொண்டாடுவது ஏன்?
  இந்த சோகங்களுக்கெல்லாம் எதிர்மறைஎண்ணங்கள்தான் (Negative Thoughts) அடிப்படை காரணமாக அமைகிறது. இந்த எண்ணங்கள் பல நேரங்களில் பயத்தை உருவாக்கிவிடுகிறது. சந்தேகத்தை கிளப்பி விடுகிறது. அவதூறுச் சேற்றையும் அள்ளி வீசுகிறது.
  மாணவி திவ்யாவிடம் ‘உனக்கு ஏன் இண்டர்வியூவில் வேலை கிடைக்கவில்லை’ எனக் கேட்டார்கள்.
  “இதுக்கு முக்கிய காரணம் எங்க ஸ்கூல்தான். அங்குள்ள அமுதா டீச்சர் மார்க் போட மாட்டாங்க. கணக்கு ஆசிரியர் ரொம்ப கண்டிப்பானவர். அவர் கண்டிப்பாக இருந்ததால்தான் எனக்கு கணக்குப் பாடம்மேல் விருப்பம் இல்லாமல் போய்விட்டது. எங்கள் கிளாஸ் டீச்சர் நான் வகுப்புக்கு முதல் பீரியடுல லேட்டாகப் போனால் வகுப்புக்கு உள்ளே விடமாட்டாங்க. இதனாலேயே எனக்கு 20 நாள் பாடம் புரியாமல் போச்சுது. நான் ரொம்ப ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். எனது அப்பா ஐந்தாம் கிளாஸ் படித்தவர். அம்மா ஸ்கூல் வாசனையே இல்லாதவங்க. நான்தான் மூத்தப்பொண்ணு. எங்க ஊர் குக்கிராமம். பிறகு என்னால் எப்படி நன்றாகப் படிக்க முடியும்”, இப்படி ஏராளமான காரணங்களைத் தாராளமாக மனதிற்குள் போட்டுவைத்து பலரையும் குற்றம் சாட்டுவதற்குத் திவ்யா தயாராக இருந்தாள்.
  ஆனால், ஒன்றைமட்டும் ‘திவ்யா’ மறந்துவிட்டாள். இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் அவளேதான் என்பதை திவ்யா உணர தவறிவிட்டாள்.
  தனது பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் எங்கே இருக்கிறது என்று வெளியே தேடிய திவ்யா, அந்தக் காரணம் தன்னிடம்தான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டாள்.
  அதாவது தேர்வு நேரத்தில் தான் வெற்றி பெறுவேனா? வெற்றிபெறமாட்டேனா? என்பதில் திவ்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தேர்வில் வெற்றிபெற்றபின் கல்லூரியில் சேர இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று குழப்பம் ஏற்பட்டது. கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்தபின் தனக்குப் பட்டம் கிடைக்குமா? கிடைக்காதா? என்றசந்தேகம் உருவாகிவிட்டது. பட்டம் பெற்றபின்பு தனக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்றசிக்கல் திவ்யா மனதிற்குள் உருவானது. வேலை கிடைக்காததால் குழப்பமும் பயமும் அதிகரித்தது. இதனால்தான் தனது பிரச்சனைகளுக்கு “தான் காரணமில்லை” என்று நம்பினாள். தனக்கு வேலை கிடைக்காததற்கு மற்றவர்கள்தான் காரணம் என்று சொல்லி பிறர்மீது பழி போட்டு தப்பிவிட நினைத்தாள்.
  இளம்பெண் திவ்யாவைப்போலவே இன்று சிலர் தங்களது இளைய வயதில் தனது இயலாமைக்கும், தோல்விக்கும் பிறர் தான் காரணம் என குற்றம் சொல்கிறார்கள். தங்களது பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் தனது எண்ணங்களும், செயல்பாடுகளும் என்பதை மறந்து அடுத்தவர்கள் மீது அவதூறுச் சேற்றைஅள்ளி வீசுகிறார்கள். ஆனால் வார்த்தைகளை கொட்டித் தீர்க்கிறார்கள்.
  இந்த மனநிலை கொண்டவர்கள் தனது வாழ்க்கையில் தவறு நிகழும்போது தன்னைத் திருத்திக்கொள்ள முன்வருவதில்லை. திவ்யா தன்னுடைய பிரச்சனைகளுக்கு அடிப்படைத் தீர்வாக எது அமையும்? என்பதை சற்று விரிவாக சிந்தித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் இருந்ததால் பிரச்சனைகள் வேகமாக வளர்ந்துவிட்டது.
  வாழ்க்கையில் பிரச்சனைகள் உருவாகும்போது அந்தப் பிரச்சனைகளுக்கு மற்றவர்கள்தான் காரணம் என்று வரிந்துகட்டிக்கொண்டு, வார்த்தைகளில் உணர்ச்சிகளை தேக்கி எரிச்சல்படுவதை தவிர்த்துவிட்டு, தன்னைப்பற்றி சிந்திக்க வேண்டும். தனக்குள் சந்தேகத்தையும், பயத்தையும் உருவாக்கிக்கொண்டு செயல்களைச் செய்யும்போது வெற்றியடைய வேண்டிய செயல்கள் தோல்வியில்போய் முடிகிறது.
  திவ்யா வாழ்க்கையில் எதிர்பார்த்தவைகளெல்லாம் நிறைவேறும்போது அவளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் எதிர்பார்த்தவைகள் நிறைவேறாமல் தோல்வி ஏற்படும்போது தன்நிலை உணராமல் அடுத்தவர்கள்மீது கோபப்படும் அல்லது வருத்தப்படும் அநாவசியமான சூழல் உருவானது.
  தோல்வியிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தோல்லி நமக்கு வெற்றி கிடைக்காமல் செய்துவிடலாம். ஆனால் அந்தத் தோல்வி தரும் பாடம் அது நம்மைத்தவிர மற்றவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்தப் பாடங்களை அல்லது படிப்பினை ஒழுங்காக புரிந்து வாழ்க்கையைச் சீரமைத்துக்கொண்டால் நல்ல வாழ்க்கை வாழ இயலும்.
  வாழ்க்கை என்பது பிறப்பு (Birth) மற்றும் இறப்பு (Death) இவை இரண்டும் நிச்சயிக்கப்பட்ட முடிவுகள் கொண்ட ஒரு விளையாட்டாகும். இந்த இரண்டு எல்லைகள் கொண்ட விளையாட்டில் நாம் எப்போதும் வெற்றிபெறஇயலாது என்பதைப் புரிந்துகொண்டு வாழ வேண்டும். இருந்தாலும் அந்த விளையாட்டில் நாம் எப்படி பங்கு எடுத்துக் கொண்டோம் என்பது மிக முக்கியமானது. அதுவே நம் வாழ்க்கையில் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் சந்தேகமும், பயமும் கொண்ட வாழ்க்கையை நிரந்தரமாய் நீக்கிவிடலாம். தன்னம்பிக்கையோடு வாழலாம். மற்றவர்களையும் மகிழ்விக்கலாம்.

  வெற்றி விடியல்

  விடியல் என்பது இரவு பகல் என மாறிவரும் பூமியின் காலமாற்றத்தின் ஒரு பகுதி. இரவின் முடிவில் பகலின் தொடக்கத்தில் முளைவிடும் காலவிதை தான் விடியல். பகலோ இரவோ சூரியனின் ஒளி அல்லது வெப்பம் உமிழ்வது நிற்கிறதா? மறைந்து போகிறதா? இல்லவே இல்லை. ஆனாலும் நமக்கு இரவு, பகல் என்ற அனுபவம் கிடைக்கிறது. அது நம் வாழ்க்கைக்கு நல்லது என்பதும் அவசியம் என்பதும் உண்மை தானே. சூரியனின் ஒளி தொடர்ந்து இருந்தும் இரவு என்றஒரு நாளின் ஓர் அங்கம் எப்படி ஏன் நமக்கு கிடைக்கிறது என்பதை அறிவியல் உலகம் எடுத்துரைக்கும் உண்மையில் பூமியின் சுழலும் தன்மை காரணமாக இருக்கிறது. நிரந்தரமாக ஒன்று கிடைத்தாலும் மற்றதன் செயல்பாட்டால் கிடைப்பதில் மற்றும் இருக்கிறது என்ற தத்துவார்த்தமான உண்மை நமக்குத் தெளிவாகிறது.
  வாழ்க்கையில் வெற்றி என்பதுகூட இந்த சூரியன், சுழலும் பூமி தத்துவத்தில் உள்ளடங்கியுள்ளதை அறியலாம். வெற்றிக்கான பிரகாசம் சூரியனின் ஒளி உமிழும் தன்மையைப் போல என்றும் தொடர்ந்து இருப்பது மட்டுமல்லாமல் மறைந்தும் போய்விடுவதில்லை. சுழலும் பூமியைப்போல் நாம் இருக்கிறோம். நாம் வெற்றிப் பிரகாசத்தைப் பெறுவது போலவும் இழப்பது போலவும் அனுபவப்படுகிறோம். ஆனால் வெற்றியின் பிரகாசம் மட்டும் எப்போதும் நிரந்தரமாக இருக்கும். இங்கும் ஒரு விடியல் பகுதி உண்டு. அதுதான் வெற்றிக்கான வாய்ப்பு. அதுதான் வெற்றிக்கான ஆரம்பம். வெற்றியின் முகப்பு வாசல். வெற்றி விதையின் உயிர் முனைப்புக்கான முதல் செயல். வெற்றி என்ற திரைப்படத்தின் ஒரு டிரைலர். ஆமாம் வெற்றி விடியல் உங்களை வெற்றிப் பிரகாசத்திற்கு வரவேற்கும் அழைப்பிதழ். அழைப்பை ஏற்று செயல்படுபவர்களுக்கு வெற்றி என்றபிரகாசமான பகல் விரியத் தொடங்குகிறது. இயற்கையில் பூமியில் வாழும் நமக்கு எப்படி இரவு என்ற ஒரு நாளின் ஒரு பகுதியை அனுபவிக்கின்றோமோ அதேபோல் வெற்றி என்ற பிரகாசம் குறைவாகவும் இல்லவே இல்லை என்பது போன்ற அனுபவமும் ஏற்படலாம். கவலைப்படாதீர்கள் அது கால அளவு மட்டுமே. ஒருவர் உயிருடன் இருந்தால் எப்படி இரவு கடந்து பகலை அனுபவிக்கிறாரோ அதைப்போல் நிச்சயம் வெற்றிப் பிரகாசம் உங்களுக்கு கிடைத்தே தீரும். ஆனால் உயிருடன் இருப்பது போல் வெற்றிக்கான திட்டமும் உழைப்பும் உங்களிடம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இரவு என்பது தோல்வியா என உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். அது பகலுக்கான காத்திருப்பு – தேவையான ஓய்வு. வெற்றி விடியலுக்கான முன்னுள்ள கால அளவு வெற்றிக்கான காத்திருப்பு காலம். திட்டமிடவும், அதில் சரி செய்திட கிடைக்கும் கால அவகாசமாக அதனைக் கருதிக்கொள்ள வேண்டும். மரம் வெட்டுவதற்கு முன் அதற்கான கருவியைத் தயார் செய்வது போலவும், மண்ணில் மறைந்து முளைக்க காத்திருக்கும் நல்ல விதையைப் போலவும் அதற்கான கால அளவினைப் போல் வெற்றிக்கான பிரகாசத்திற்குக் காத்திருக்கும் காலம். நம்மால், நம் செயல்பாடுகளின் விளைவுகளால் சில வேளை வெற்றி முழுமையாக அல்லது பகுதியாக மறைக்கப்பட்டிருப்பது போல உணருகிறோம். இரவு வந்தால் விடியல் கடந்து பகல் வருவது போல வெற்றி வாய்ப்பும் பிரகாசமான வெற்றியும் உங்களுக்கு நிச்சயம் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
  உங்கள் உழைப்பும், அதற்கான திட்டமும் உங்களிடம் இருந்தால் வெற்றி விடியலுக்குக் காத்திருப்பதில் தவறில்லை. விடிந்த பின் விழித்திருங்கள். வெற்றிப் பிரகாசம் உங்களை உங்களாலும் மற்றவர்களாலும் கண்டுகொள்ள வைக்கும் என்ற தன்னம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.

  நலந்தானா

  எனக்கு 58 வயதாகிறது. 13 வருடமாக சர்க்கரை வியாதி இருக்கிறது. ஆங்கில மருந்துகளால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். கை, கால்களில் மதமதப்பு, எரிச்சல் வருகிறது. சமீப காலமாக சர்க்கரையின் அளவு சிறிது வேறுபடுகிறது. அக்குபிரஷர் செய்து கொள்கிறேன். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. இன்சுலின் எடுத்துக் கொள்வது நல்லது என குடும்ப மருத்துவர் கூறுகிறார். இது தொடர்ந்து செய்யக் கூடியதா? (கலையரசன், தூத்துக்குடி)
  சரியான உடற்பயிற்சி ஆரம்பமுதலே இருந்திருந்தால் சர்க்கரையினால் ஆன பக்க விளைவுகளைத் தடுக்க முடியும். தற்போது பல வருட பிரச்சனையின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாததால் கால், பாத நரம்புகள் நுண்ணிய இழைகளில் இரத்த ஓட்டம், சக்தி ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டதால் இதனை அலட்சியப்படுத்தாமல் இருக்க ஒரே வழி இன்சுலின் தேவையான அளவு தொடர்ந்து ஏற்றுக் கொள்வதே புத்திசாலித்தனமானது. இருக்கும்வரை கண், கால், சிறுநீரக பாதிப்புகளை Neuropathy, Nephropathy இதன் மூலம் கட்டுப்படுத்தி வைக்க முடியும். துணைமருத்துவமாக அக்குபிரஷர் செய்து கொள்ளலாம். யோகாசனம் சிகிச்சையாக 3 நாள் பயிற்சி போதுமானது. தொடர்ந்து செய்யலாம். பச்சைக் காய்கறிகள், வெள்ளரி அதிகம் சேர்க்கவும். நீண்டநேரம் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.

  பஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்

  இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. அதாவது ஐந்து ஆதார சக்திகளால் ஆனது. அது நமக்குத் தெரியும்.
  வாழ்க்கையில் வெற்றியடைய விரும்புகிறவர்களுக்கு இந்த பஞ்ச பூதங்களும் சில பாடங்களை, சில ரகசியத் தத்துவங்களைச் சொல்கின்றனவே, அது தெரியுமா?
  எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.
  1. நிலம்
  தங்கம், தாதுப்பொருட்கள், பெட்ரோல் என்று பலப்பல வளங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது நிலம். அந்த வளங்களை, அந்த மூலப் பொருள்களை எடுத்துத்தான் மனிதன் இன்று ஆயிரக்கணக்கான அற்புதப் பொருட்களைப் படைத்துப் படைத்து தனது வாழ்க்கையைச் சுகமாகவும் சொகுசாகவும் அமைத்துக் கொண்டிருக்கிறான்.
  மனிதனிடமும் பல்வேறு வகையான திறமைகள் பதுங்கிக் கிடக்கின்றன. ஒரு திறமைகூட இல்லாத மனிதன் உலகில் யாராவது உண்டா?
  ஆனால், எத்தனையோ திறமைகளைத் தன்னுள் வைத்திருக்கிற மனிதன், அதில் எத்தனை திறமைகளை வெளிக்கொண்டு வந்தான்? அவற்றால் எத்தனை பலன்களை அடைந்தான்? இதுதான் கேள்வி.
  இன்னொரு விஷயம். கார் நிற்கும், ரயில் நிற்கும். பூமி எப்போதாவது நின்றிருக்கிறதா? நின்றால் என்ன ஆகும்?
  இயக்கம்தான் பூமியின் இலக்கணம். இயக்கம்தான் மனிதனின் ஆக்கத்திற்கும் அடிப்படை. உழைப்பு, உழைப்பு, ஓயாத உழைப்பு. இதுவே மனித வளர்ச்சிக்கான ஏணி.
  நம்மிடம் திறமை இருக்கிறது. வெளியே கொண்டுவர வேண்டும். இடைவிடாத இயக்கமே அளவிலாத ஆக்கம் தரும்.
  இவையே நிலம் நமக்குச் சொல்லும் பாடங்கள்.
  2. வானம்
  வானத்திற்கு எல்லையுண்டா? அதுபோல் மனிதனின் கனவுகளும் லட்சியங்களும் வானம்போல் எல்லையற்று விரிந்து இருக்க வேண்டும். கனவுகளும் லட்சியங்களும் எந்த அளவுக்கு உயர்வாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு நமது முயற்சிகளின் தீவிரமும் அதிகமாக இருக்கும். முயற்சிகளின் தீவிரத்தைப் பொருத்தே வெற்றிகள். வெற்றிகளைப் பொருத்தே வளங்கள்; செழிப்பு; மகிழ்ச்சி.
  வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
  உள்ளத் தனைய உயர்வு
  பாதங்கள் மண்ணில் பதிந்திருந்தாலும், பார்வை வானத்தில் இருக்கட்டும்.
  இது, வானம் நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம்.
  3. நீர்
  மேட்டிலிருந்து பள்ளம் நோக்கிப் பாயும் தன்மை உடையது நீர்.
  மேகத்தின் சுமை நீர்த்துளிகள். அதை மழையாகக் கீழே விடுகிறது. ஆற்றின் சுமை வெள்ளம். பள்ளங்களைத் தேடிப் பயணம் செய்து கடைசியில் கடலில் கொண்டு போய்த் தள்ளிவிடுகிறது.
  மனிதனும் தனக்குச் சுமையாக உள்ள கெட்ட பழக்கவழக்கங்கள், அழிவுச் சிந்தனைகள், சோம்பல், பயம், தாழ்வு மனப்பான்மை, கவலை போன்ற ஆக்கத்திற்காகாத அத்தனையையும் கீழே இறக்கி வைத்தால் தான் வாழ்க்கை வளம் பெறுகிறது.
  ஆக்கத்திற்கு உதவாத எண்ணங்களை, செயல்களை, பழக்க வழக்கங்களை, நபர்களை விட்டுவிடு.
  நீர் நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்.
  4. நெருப்பு
  ஒரு சின்ன தீப்பொறி போதும். காடே எரிந்து சாம்பலாவதற்கு.
  ஒரு சின்ன வெறி, வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்; வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற லட்சிய வெறி போதும், ஒரு மனிதனின் தலையெழுத்தை மாற்ற; அவனது தலை முறையையே தலைநிமிர்ந்து வாழ வைக்க.
  ஒரு தீக்குச்சியை, ஒரு தீப்பந்தத்தை கீழ்நோக்கிப் பிடித்தாலும் தீயின் ஜ்வாலை மேல் நோக்கித்தான் இருக்கும்.
  இது என்ன சொல்கிறது மனிதனுக்கு?
  நமது எண்ணங்களும் செயல்பாடுகளும், மேல்நோக்கித்தான் இருக்க வேண்டும். அதாவது, மேன்மைகளை நோக்கித்தான், வளர்ச்சிகளை நோக்கித்தான், முன்னேற்றங்களை நோக்கித்தான், உயர்வை நோக்கித்தான் இருக்க வேண்டும்.
  இந்த இரண்டும் நெருப்பு நமக்குச் சொல்லும் பாடங்கள் அல்லவா?
  5. காற்று
  இந்த உலகில் காற்று இல்லாத இடம் எது?
  நம்மைச் சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு கவசமாக காற்று இருக்கிறது.
  இதைப்போலத்தான் நம்மைச் சுற்றி ஒரு கவசமாக, பாதுகாப்பாக, வழித்துணையாக தன்னம்பிக்கை இருக்க வேண்டும். தன்னம்பிக்கை சற்றே அகன்றாலும் விரக்தியும், ஏக்கமும், சலிப்பும், அலுப்பும் நம்மைச் சூழ்ந்து நெருக்கிவிடும். சுருக்கிவிடும். விடலாமா அப்படி?
  காற்று அவ்வப்போது மாசுபடுவதைப் போல, தன்னம்பிக்கையும் அவ்வப்போது மாசுபடும். அதாவது தளரும்; மறையும். அப்போதெல்லாம் தன்னம்பிக்கை நூல்களைப் படித்தும், உரைகளைக் கேட்டும் அதை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
  லட்சக்கணக்கான பணம் கொடுத்து வாங்கிய அயல்நாட்டுக்கார் என்றாலும் இரண்டு ரூபாய் டிப்ஸ் கொடுத்து சக்கரங்களில் காற்றை நிரப்பவில்லை என்றால் வண்டி ஓடுமா? ஓடஓடக் குறையும் காற்றையும், மீண்டும் நிரப்பிக் கொள்ளத்தானே வேண்டும்.
  உள்சென்று வெளியே வரும் மூச்சுக் காற்றுக்கு எப்போது முற்றுப்புள்ளி விழுகிறதோ, அப்போதே வாழ்க்கையும் முடிகிறது.
  வாழ்வதற்கு மூச்சு முக்கியம். வளர்வதற்கு முயற்சி முக்கியம். முயற்சி நின்றால் வளர்ச்சி நிற்கும்.
  ஆக, காற்றைப் போல, தன்னம்பிக்கை நமக்குக் கவசமாக இருக்க வேண்டும். மூச்சுக்காற்றைப் போல முயற்சிகள், தொடர்ந்து நடைபெறவேண்டும்.
  காற்று நமக்கு கற்பிக்கும் பாடங்கள் இவை. பஞ்ச பூதங்கள் சொல்லும் இத்தனை செய்திகளையும் கொண்டு வாழ்க்கையை வளமாக்கி மனதில் பசுமையாகப் பதித்துக் கொண்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வோமே.

  வளமான சிந்தனை

  வளமான சிந்தனையுடன் கட்டுக்கோப்பான முயற்சி இருந்தால் தொடர்ந்து முன்னேறமுடியும். சிந்தனையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஓர் குட்டிக்கதை அனைவரும் அறிந்ததே;
  ஒரு கிராமம், அதில் ஓர் இளைஞன், அவனுக்கு நிறைய உழைக்க வேண்டும் என்று ஆசை. எனவே அவன் ஓர் முனிவரிடம் சென்று தான் நிறைய உழைக்கத் தேவையான உடல் மற்றும் மன வலிமையை எப்படி வளர்ப்பது என்றும் தனக்கு உதவுமாறும் வேண்டினான். உடனே முனிவர் அவனுக்கு ஓர் குட்டி பூதத்தைப் பரிசாகக் கொடுத்து, அவன் காதில் ஓர் இரகசியம் கூறினார். அந்த இரகசியம், “நீ இந்த பூதத்திற்கு தினமும் வேலைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும், இது அனைத்தையும் தட்டாமல் செய்து கொடுக்கும், ஆனால் நீ வேலைகள் கொடுப்பதை நிறுத்திவிட்டால் இது உன்னை விழுங்கிவிடும்” என்று கூறி அனுப்பினார். அவனும் தினம் தினம் அந்த பூதத்திற்கு வேலைகளைக் கொடுத்தான். ஆடம்பரமான வீடு, பணம், நகை, விவசாயம் என அனைத்தையும் பூர்த்தி செய்துவிட்டது அந்த குட்டி பூதம். அவனின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகிவிட அவன் எந்த வேலையையும் பூதத்திற்குத் தரவில்லை. முன்பு முனிவர் கூறியதுபோலவே அது அவனை விழுங்க நெருங்கி வந்தது. உடனே அந்த முனிவரிடம் ஓடிச்சென்று காலில் விழுந்து உதவி கேட்டான். பின், மறுபடியும் அவர், இளைஞனின் காதில் ஓர் இரகசியம் சொன்னார். அதன்படி அவன் பூதத்திடம் ஓர் பெரிய இரும்புத்தூண் ஒன்றை உருவாக்கச் சொன்னான். மிக உயரமான அந்தத் தூணை அந்தக் குட்டி பூதம் தினம் தினம் ஏறி இறங்க வேண்டும், அவன் அழைக்கும்போது மட்டும் அது வந்து உதவி செய்ய வேண்டும். மிக அழகான யோசனை… (கதை: சுவாமி சின்மையானந்தா).
  இதன் கருத்து நம் வளமான சிந்தனை என்பது குட்டி பூதம் போன்றது. தினம் தினம் அதற்கு வேலைகளைக் கொடுத்துக் கொண்டே இருத்தல் வேண்டும். இல்லையென்றால் அது தவறான பாதையில் சென்று தீய பழக்கங்களுக்கு அடிமையாகி நம்மையே விழுங்கிவிடும். வளமான சிந்தனை என்ற முக்கிய பூதம் நம்முள் எப்போதும் இருக்கிறது. அதைத் தக்க தருணத்தில் நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.