Home » Cover Story » மனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து

 
மனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து


இராமசாமி K.P
Author:

K.P.R. மில்ஸ் நிறுவனர் திரு. இராமசாமி

நேர்முகம் என். செல்வராஜ்

பிறந்தது… வளர்ந்தது… படித்தது…
பெருந்துறை விஜயமங்கலத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள கள்ளியம்புதூர் நான் பிறந்த ஊர். மூன்று சகோதரர்கள். விவசாயக் குடும்பம். அப்பா பழனிசாமிக் கவுண்டர், அம்மா செல்லம்மாள். செய்யும் தொழிலில் எப்போதும் முதல்வனாக இருக்க வேண்டும் என்பது அம்மாவிடம் கற்றுக்கொண்டது,
விஜயமங்கலம் அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு வரையிலும். பி.யூ.சி. பெரியநாயக்கன் பாளையத்திலும் படித்தேன். பி.யூ.சி. முடித்தவுடன் மருத்துவம் அல்லது பி.எஸ்.சி. (Agri) படிக்கலாம் என விருப்பப்பட்டேன். இரண்டு படிப்பிற்கும் இடம் கிடைக்கவில்லை. சிவகாசி அய்யன் நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பி.ஏ. படிப்பில் சேர்ந்தேன். ஏனோ கல்வியில் தொடர மனம் மறுத்தது. ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.
அப்பா விவசாயத்தைக் கவனி என்றார். இரவு பகல் பாராது உழைத்தேன். மிச்சம் ஒன்றும் இல்லை. விவசாயம் ஒத்துவராது என்கிற முடிவுக்கு வந்தேன். மாற்றாக வேறு என்ன செய்யலாம் என்கிற யோசனையில் உதித்தது தான் “பவர் லூம்” தொழில்.
“பவர் லூம்” தொழிலில் ஈடுபடுவது என்கிற முடிவெடுத்தவுடன் அத்தொழிலில் இறங்கி சாதிக்க முடிந்ததா?
இல்லை. கள்ளியம்புதூரில் விவசாயத்திற்கு அடுத்தத் தொழில் “பவர் லூம்” அதுவும் அதிக அளவில் இல்லை. மூன்று பேர் மட்டுமே வைத்து இயக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரிடம் சென்று ஆலோசனை கேட்டேன். “உனக்கெல்லாம் இது ஒத்துவராது, வேறு தொழில் பாரப்பா” என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்கள். ஆனால் எனக்குள் இத்தொழிலைச் செய்து பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம். முதலீட்டுக்கு கையில் பணம் இல்லை. உறவினர் ஒருவரிடம் நூற்றுக்கு 50 பைசா வட்டிக்கு எட்டாயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். தைரியமாகத் தொழிலைத் துவங்கினேன். நாள்தோறும் 3லிருந்து 4 மணிநேரம் மட்டுமே தூக்கம். மற்ற நேரங்களில் உழைப்பு, உழைப்பு.
ஒரு வருட காலத்தில் 4 “பவர் லூம்” 8 ஆனது. 5 வருடத்தில் 40 ஆக உயர்த்தி சாதித்தேன்.
அப்போது குடும்பத்தின் ஆதரவு எந்தளவுக்கு இருந்தது?
என் தந்தையைப் பொறுத்தவரையில் இந்தச் செயலைச் செய்கிறேன் என்று சொன்னால் நல்ல முறையில் செய்யப்பா என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லமாட்டார். தம்பிகள் அப்போது தான் படித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு கிட்டாத கல்வி என் தம்பிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களை நன்கு படிக்க வைத்தேன். அவர்களும் நன்கு படித்தார்கள். அவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் ஓரிரு வருடங்கள் வெளியிடங்களில் வேலைபார்த்தார்கள். பின்பு அவர்களே சொந்தமாக தொழில் துவங்கிட ஆர்வம் கொண்டார்கள். விருப்பப்படியே செய்யுங்கள் என்றேன். அப்போது உருவானது தான் கோவையில் உள்ள “எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனி”.
“எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனி” தந்த திருப்புமுனை குறித்து…
1984 ஜனவரி 23ல் கோவையில் ஆறு இலட்சம் ரூபாய் முதலீட்டில் “எக்ஸ்போர்ட்ஸ்” நிறுவனத்தை ஆரம்பித்தோம். பேப்பரிக் தயார் செய்து ஓவன் பேப்பரிக் என்று சொல்லக்கூடிய சர்ட்ஸ், டாபி, ஜக்கார்டு ரகங்களை ஸ்ரீ லங்கா, பங்களாதேஷ், எகிப்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். 5 வருட காலம் தொழில் நல்ல முறையில் அமைந்தது. அதற்கடுத்த ஓரிரு ஆண்டுகளில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது. கோவையை அடுத்து வேறு ஊரில் இத்தொழிலை விரிவுபடுத்த நினைத்தோம். பெங்களூர், சென்னை என்றாராய்ந்து இறுதியில் திருப்பூரைத் தேர்ந்தொடுத்தோம். 1990களில் “எக்ஸ்போர்ட்ஸ்” தொழில் நல்ல மாற்றத்தைக் கொடுத்தது. கூடவே மாற்றுத் தொழில் சிந்தனையையும் அதிகப்படுத்தியது.

ஒரு தொழில் நன்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மாற்றுத் தொழில் சிந்தனை எழக் காரணம்?
எக்ஸ்போர்ட்ஸ் தொழில் நிரந்தரமானதாக எனக்கு அப்போது தோன்றவில்லை. ஏற்ற இறக்கம் இருந்துகொண்டே இருக்கக்கூடிய தொழில் அது. “ஆர்டர்” இருக்கும் வரைதான் அத்தொழிலில் வெல்ல முடியும். ஆர்டர் இல்லை என்கிறபோது இருக்கிற தொழிலாளர்களுக்கு கூட வேலை தரமுடியாது. அதனால் நிரந்தரமாய் ஒரு தொழிலை அமைத்திட வேண்டும் என்கிற சிந்தனை எழுந்தது. ஆலோசித்தோம் முடிவில் “நூற்பாலை” அமைப்பது என்கிற முடிவுக்கு வந்தோம். 1996ல் சத்தியமங்கலத்தில் K.P.R. மில்ஸ் என்கிற பெயரில் முதன்முதலாக நூற்பாலை துவக்கினோம். 2001ல் கருமத்தம்பட்டியிலும், 2004ல் நீலம்பூரிலும், அதற்குப் பின்பு பெருந்துறையிலும் நூற்பாலைத் துவக்கினோம். 3,50,000 பவர் லூம்களுடன் இன்று நூற்பாலைத் தொழிலில் தென்னிந்திய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் ஒன்றாக உயர்ந்து நிற்கிறோம்.
நூற்பாலையைத் தொடர்ந்து வேறு தொழிலில் ஈடுபட்டு வருகிறீர்களா?
“வின்ட் மில்” கல்வித்துறையில் கால் பதித்திருக்கிறோம். வின்ட் மில்லின் மூலமாக 65 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறோம். கடந்த ஆண்டிலிருந்து K.P.R. இன்ஜினியரிங் கல்லூரியைத் துவக்கி சிறப்புடன் நடத்தி வருகிறோம்.
புகழ்மிக்க நூற்பாலைத் தொழிற்கூடங்கள் பெரும்பாலனவை கோவையில் இல்லாமல் போனதற்குக் காரணம்?
நவீன தொழில் நுட்பத்தை புகுத்த முடியாமை மற்றும் நிர்வாகத்தில் குளறுபடி
எதிர்வரும் காலத்தில் நூற்பாலைத் தொழில் சிறந்து விளங்க அவசியம் என்று நீங்கள் கருதுவது?
நவீன தொழில் நுட்பங்கள் அதிகப்படுத்தப்பட்டு, வேலைப் பளுவை குறைப்பதுடன், வேலை ஆட்களின் எண்ணிக்கையையும் குறைக்கப்பட வேண்டும்.
தொழில் தொடர்ந்து வெற்றி பெற ஒருவருக்கு வேண்டியது…
·    நல்ல எண்ணங்கள்
·    பணியாளர்கள் அனைவருக்கும் எல்லாமும் கிடைக்க ஏற்பாடு செய்தல்
·    செய்யும் தொழிலுடன் எப்போதும் இணைந்திருத்தல்
மக்கள் நலனில் தாங்கள் காட்டி வரும் ஈடுபாடு குறித்து?
எங்கள் நூற்பாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு கல்விச் சேவையை மிகச்சிறப்பாக தந்து வருகிறோம். வருடத்திற்கு ஒன்றரை கோடிவரை இப்பணிக்காக செலவு செய்கிறோம். இதுவரை எங்கள் நூற்பாலைகளில் பணிபுரிந்தவர்களில் 5000 பேர் உயர்கல்வி பெற்றுச் சென்றிருக்கிறார்கள். தற்போது 3000 பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எட்டாம் வகுப்பு படித்தவர்கள், பத்து, பன்னிரெண்டு, இளநிலை, முதுநிலை என தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்து தருகிறோம். வேலை நேரம் போக மீதி நேரங்களில் அவர்கள் படிக்க நிரந்தரமாக ஆசிரியர்களை நியமித்திருக்கிறோம்.
தொலைதூரக்கல்வி இயக்கங்களிலிருந்தும் ஆசிரியர்கள் வருகை புரிந்து பாடம் எடுத்துச் செல்கிறார்கள்.
எங்களிடம் வேலை பார்த்துக்கொண்டு படித்தவர்களில் பலர் காவல், ஏர்லைன்ஸ், நர்சிங், மேலாண்மை என பல துறைகளிலும் கால்பதித்திருக்கிறர்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தர இயலாத கல்வி என்னும் வெகுமதியை நீங்கள் சேவையாகத் தந்துதவுகிறீர்கள். இந்த எண்ணம் எழக் காரணம்?
காரணம் என்று எதுவும் இல்லை. நம்மிடம் வேலை பார்க்கிற பெண்களுக்கு வேலை செய்ததற்கு சம்பளம் தருகிறோம். வேறு என்ன நன்மை செய்கிறோம் என்று யோசித்ததின் விளைவுதான் இத்திட்டம்.
எங்கோ சிறு குக்கிராமத்திலிருந்து வேலைக்கு வருகிற பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு கல்வி தான் சிறந்தது எனக் கருதினேன். செயல்பாட்டிற்கு கொண்டு வந்தேன்.
மழைவந்தால் உங்கள் பள்ளிக்காலப் படிப்பு தடைபட்டிருக்கிறது என்று அறிந்தோம். மழைக்கும் உங்கள் படிப்பின் தடைக்கும் எது காரணமாக இருந்தது?
எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வருடம் நல்ல மழை பெய்தது. கிணற்றில் நீர்வரத்து அதிகரித்தது. கிணற்றில் நீர் இருக்கும்போதே இரண்டு மூன்று விளைச்சலை எடுத்துக் கொள்ளலாம் என்று என்னை விவசாயம் பார்ப்பதற்காக பயன்படுத்திக் கொள்வார்கள். அதனால் அந்த வருடப்படிப்பு இல்லை. மீண்டும் அடுத்த வருடம் அதே படிப்பு. 8ம் வகுப்பு படிக்கும்போது இதே போல் 10ம் வகுப்பு படிக்கும்போதும் நடந்தது.
அன்றைய சூழலில் “கல்வியோடு என்னால் சரிவர பயனிக்க முடியவில்லை. இன்றைய சூழலில் நம்மால் பிறரை கல்வியோடு பயணிக்க வைக்க முடிகிறதே என்பதை நினைக்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
தன்னம்பிக்கை
“இந்த உலகில் சிறப்பான வாழ்க்கையைக் கடைபிடிப்பதற்குத் தன்னம்பிக்கை, தன்னறிவு, தன்னடக்கம் ஆகிய மூன்று நற்பண்புகளும் இன்றியவையானவை. இம்மூன்றும்தான் மனிதனை வாழ்க்கையில் மேம்படுத்தச் செய்து அவனை உன்னத நிலையில் உயர்த்துகின்றன என்பார் டென்னிசன்.
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் தரணியை ஆரலாம்.
தங்கள் குடும்பம் குறித்து?
மனைவி —– ஒரு மகன் ஆனந்த கிருஷ்ணன்-காயத்ரி, இரு மகள்கள் உமா-ராஜசேகர், கல்பனா-ஆனந்தகுமார்.

 

4 Comments

 1. nethaji says:

  ஐயா வணக்கம்,

  மிக அருமையாக உங்கள் அனுபவங்களை சொல்லி, எங்களையும் உற்சாகப்படுத்தி உள்ளீர்கள்..

  நன்றிகள் பல….

 2. Kasilingam says:

  அன்புடயீர்
  உங்கள் அனுபவம் எங்களை பெரிதும் மகில்சிபெற வைத்தது

  நன்றி வணக்கம்

  அன்புடன் சு.ந.காசிலிங்கம்

 3. narayanasamy says:

  ITHU ENNAKU MIKA NAMBIKKAIYAGA ULLATHU SIR. NANUM SONTHAMAGA THOZHIL SEYYA MUYARCHI SEIDHU KONDU IRRUKIREN MIGA SIRANTHA UKKAMAGA ULLATHU AYYA.

 4. Thangarasu says:

  super store sir ennoda roll model nenga tha.i am villuppuram (tk).,company labor ellakkiya friend sir

Leave a Reply to Kasilingam


 

 


January 2011

மனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து
என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்
காலத்தை வென்று வாழும் மகாகவி பாரதி
என் பதில்களுக்கான கேள்விகள் எங்கே?
கவிதை
நலந்தானா
கணினி தொழில்நுட்பம்
இருளிலும் விடியல்
நம்பிக்கை
நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்
உனக்குள்ளே உலகம்-8 நேரந்தான் இல்லையே!
உடலினை உறுதி செய்
நூற்றுக்கு நூறு மார்க்
உள்ளத்தால் உள்ளலும் தீதே
வெற்றி நிச்சயம்
முயற்சி தரும் வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்