Home » Articles » காலத்தை வென்று வாழும் மகாகவி பாரதி

 
காலத்தை வென்று வாழும் மகாகவி பாரதி


மனோகரன் பி.கே
Author:

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் மகாகவி பாரதி,  இனி எந்த நூற்றாண்டுக்கும் அவனே இமய பாரதி,  மனிதன் மனிதனாக, மாமனிதனாக வாழ, தன் வாழ்நாளெல்லாம் பாடிய மக்கள் கவிஞன்,  அந்த இணையிலாக் கவிஞனின் கவிதைகள் காலத்தை வென்று நிற்கும் கவிதைகள்,

‘பாட்டுக்கொரு புலவன்’ என்று கவிமணி போற்றிய பாரதி நாட்டுக்கொரு புலவனாக விளங்கியவன்,  உலகம் போற்றும் ஒப்பற்ற கவிஞன் பாரதி,  பாரதியின் பாடல்கள் காலக்கண்ணாடி,  பாரத சமுதாயம் நிலைத்து வாழ அவன் பாடிய பாடல்கள் ஏராளம்,  தேசத்தை உயிர் மூச்சாகக் கொண்டு, அதற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடிப் பறந்த தேசியக் குயில் மகாகவி பாரதி,

நெல்லைச் சீமை எட்டயபுரத்தில் சின்னசாமி அய்யர், லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு 1882ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11ம் நாள் பிள்ளையாகப் பிறந்தார் சுப்பிரமணிய பாரதி,  ‘சுப்பையா’ என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு,  எட்டயபுரம் சமஸ்தானம் 11 வயது பாரதியின் கவிதையைப் பாராட்டி வழங்கியதே ‘பாரதி’ என்ற பட்டம்,

‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே!’ என்று நாம் நாட்டின் பழம் பெருமையை உணர்த்திய கவிஞன் பாரதி,   இந்திய நாட்டை “வந்தனை கூறி மனதில் இருத்தி, என் வாயுற வாழ்த்தேனோ – இதை ‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’ என்று வணங்கேனோ!” என்று தாய் நாட்டை வணங்குகிறார்,  இந்த ‘வந்தே மாதரம்’ என்னும வீர முழக்கம் தான் வௌ;ளையரை விரட்டி அடித்தது,

‘சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’, என்று பிஞ்சு நெஞ்சிலும் சாதி சமய வேறுபாடுகளை களைந்தவர்,  இந்திய தேசத்தின் அடிமைத் தளையை அகற்ற ‘தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்’ என்று அறைக்கூவல் விடுத்தவர்,  ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று நெஞ்சம் நிமிர்ந்து முழங்கி வாழும் தமிழுக்கு வளம் சேர்த்தவர்,

அடிமை மோகம் விலகிட, ஆனந்த சுதந்திரம் அடைந்திட ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?’ என்று கண்ணீர் விட்டவர்,  எதற்கெடுத்தாலும் பயந்து சாகிறவர்களைப் பார்த்து ‘அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’ என்று வேதனைப்பட்டு அத்தகையவர்களைப் பார்த்து ‘நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்’ என்று மனம் நொந்து ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று வீர முழக்கம் செய்தவர்,

“நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ – கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி” என்று இந்தச் சமுதாய மக்களில் சிலரை அடையாளம் காட்டி, விழிப்புணர்வு கொள்ளச் செய்தான் பாரதி,  “ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?” என்று அறிவுறுத்தி ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு‘ என்று ஒரே வரியில் சாதிச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த கவிஞன்,

“சிந்து நதியின் மிசை நிலவினிலே, சேரநன் நாட்டிளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகளோட்டி விளையாடி வருவோம்” என்று ஒருமைப்பாட்டு ஓவியம் வரைந்து, “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று தமிழ் மொழியின் சிறப்பை சித்திரம் தீட்டிக் காட்டிய தேசிய கவி பாரதி,

“ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்: ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்” என்று தொழில்கள் மேம்படவும், கல்வி வளரவும் தன் ஆசைகளை வௌல்ப்படுத்தி “பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்” என்று நாட்டுப்பற்றை நம் மனதில் விதைத்த கவிஞன்,

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், அநீதிகளையும் பார்த்து ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று பாடினார்,  ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமென்பதை ‘எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி’ என்று பாடினார்,  சுதந்திர இந்தியாவில் அடிமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை ‘ஏழையென்றும், அடிமையென்றும் எவனுமில்லை சாதியில் – இழிவு கொண்ட மனிதரென்ப திந்தியாவில் இல்லையே’ என்று இறுமாந்து பாடினார் பாரதி,

பாரதி குழந்தைகளுக்கும் பாடினார்,  தன் மகள் சகுந்தலா பாரதிக்காக எழுதியது குழந்தைச் சமுதாயத்திற்கே அறிவுரை கூறும் பாடலாக விளங்குகிறது,  ஒற்றுமையை வலியுறுத்தி தொடக்கத்திலேயே ‘கூடி விளையாடு பாப்பா – ஒரு குழந்தையை வையாதே பாப்பா’ என்று கூறுகிறார்,  வாழும் முறைக்கு இலக்கணம் வகுக்கும் முறையில் ‘உயிர்களிடத்தில் அன்பு வேணும், தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும், வயிரமுடைய நெஞ்சு வேணும், இது வாழும் முறைமையடி பாப்பா’ என்று பாடினார்,

‘கற்றது ஒழுகு, கூடித் தொழில் செய், கைத்தொழில் போற்று, செய்வது துணிந்து செய், தையலை உயர்வு செய், நீதி தவறேல்’ போன்ற இவருடைய அறிவுரைகள் நம் வாழ்க்கைப் பாதையை செப்பனிட்டுக் கொள்ள பெரிதும் உதவும்,  அவருடைய அறிவுரை, அறவுரை எல்லாம் மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதுதான்,  ‘மனதிலுறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும், நினைவு நல்லது வேண்டும்’ என்று கூறும் பாரதி நம்பிக்கைதான் வாழ்க்கை என்று நயமாகக் கூறுகிறார்,

பாரதியின் பாடல்கள் வெறும் கற்பனையால் எழுந்தது அன்று,  அவர் ஊனோடும் உயிரோடும் கலந்து உள்ளத்திலிருந்து ஊறித் தெறித்த சத்திய வரிகள்,  39 வயது கூட நிரம்பாத நிலையில் 1921 செப்டம்பர் 11ம் தேதி மரணம் எய்தினார்,   எனினும் “பார் மீது நான் சாகாதிருக்கக் கண்டீர்” என்ற பாரதியின் வாக்கு பொய்க்கவில்லை,  ஆம், அவர் அமரராகி 86 ஆண்டுகள் ஆன பின்பும் அவர் புகழ் இமயம் போல் ஓங்கி நிற்கிறது,

குழந்தைகளுக்கான பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்று பல்வேறு பாடல்களை அவர் பாடியிருந்தாலும் அவர் இயற்றிய பாடல்களில் எல்லாம் ஒற்றுமை உயர்வு, வீரம், பரிவு, உயிர்களிடத்தில் அன்பு, பெண் விடுதலை, மூடநம்பிக்கைகளை அகற்றுதல் போன்ற பல்வேறு அம்சங்கள் பரவியிருக்கும்,  பாரதியின் பாடல்கள் அனைத்திலும் நாட்டுப்பற்று, தாய்மொழிப்பற்று, விடுதலைப்பற்று மேலோங்கி இருக்கும்,

இக்கால இளைஞர்கள் தேசத்தின் பெருமை, விடுதலையின் அருமை குறித்து அறிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள உதவும் கருவூலங்கள் பாரதியின் பாடல்கள்,  பாரத சமுதாயம் நன்றாக வாழ வேண்டும் என்பதிலேயே பாரதிக்கு மிகுந்த அக்கறை இருந்தது,  பாரதியின் பரந்த மனம், விசால பார்வை, பொதுநோக்கு ஆகியவற்றை சிந்தையில் கொண்டு அவரின் கனவை முழுமையாக நனவாக்க சூளுரை ஏற்போம்,


Share
 

1 Comment

  1. nepolini says:

    awesome it is so interesting . it gives a encouragement to the young world

Post a Comment


 

 


January 2011

மனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து
என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்
காலத்தை வென்று வாழும் மகாகவி பாரதி
என் பதில்களுக்கான கேள்விகள் எங்கே?
கவிதை
நலந்தானா
கணினி தொழில்நுட்பம்
இருளிலும் விடியல்
நம்பிக்கை
நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்
உனக்குள்ளே உலகம்-8 நேரந்தான் இல்லையே!
உடலினை உறுதி செய்
நூற்றுக்கு நூறு மார்க்
உள்ளத்தால் உள்ளலும் தீதே
வெற்றி நிச்சயம்
முயற்சி தரும் வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்