Home » Articles » நம்பிக்கை

 
நம்பிக்கை


சுப்பிரமண்யன் G.R
Author:

நம்பிக்கை தான் நம் வாழ்வின் உயிர்நாடி. அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. நாளை நாம் பிழைத்திருப்போமா என்பதும் தெரியது. ஆனால் நாம் நீண்டகாலம் உயிருடன் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் தான் நமது வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது.
நம்பிக்கையே மனிதனின் ஒழுக்கத்திற்கும், உயர்வுக்கும் காரணம். கடவுளிடம் திடமான நம்பிக்கை வையுங்கள். அவரது திருநாமத்தின் பிரபாவத்திலும், அருட் கருணையிலும் நம்பிக்கை வையுங்கள். ஆண்டவன் நம்மைச் சகல தடைகளிலிருந்தும் விடுவிடுத்து, நம்மைக் காப்பாற்றுவான் என்று உறுதியுடன் நம்புங்கள்.
நவாஸீ தேவ பக்தாரும் அசுபம் வித்யதே க்வசித. இறைவனை நம்புகிறவன் ஒருபோதும் துன்பத்திற்கு ஆளாவதில்லை என உறுதியுடன் விஷ்ணு சகஸ்ர நாமம் கூறுகிறது.
அசுரனாகிய ஹிரண்ய கசிபுவின் மகள் பிரஹ்லாதன், நாராயணனிடம்  அவனுக்கு அத்யந்த பக்தி. தந்தையோ ஹரியின் நாமத்தை வெறுத்தவன். தன் மகன் என்றும் பாராமல் பிரஹ்லாதனுக்கு பலவிதத்தில் தொல்லைகள் தந்தான். அத்தனையிலும் பிரஹ்லாதன் ஹரியின் அருளால் மீண்டு வந்தான் என்று பிரஹ்லாத சரிதம் கூறுகிறது.
அப்பர் சுவாமிகளை கல்லைக் கட்டிக் கடலில் வீழ்த்திய போதும், சுண்ணாம்புக் காளவாயிலில் போட்ட போதும் சிவபக்தராகிய அவரைச் சிவன் காப்பாற்றினார். இவை புராணங்கள் கூறும் உண்மை நிகழ்ச்சிகள். இதற்கு அடிப்படை ஆதரமே நம்பிக்கை தான்.
ஸம்ஸய ஆத்மாவின் படி, நம்பிக்கையற்றவனுக்கு வாழ்க்கையும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. மேன்மையும் இல்லை. அவன் நாசமடைகிறான் என்று கீதை நம்மை எச்சரிக்கிறது.
கணவன், மனைவியிடையே இந்த நம்பிக்கை உணர்வுதான் அவர்களது இல்லற வாழ்க்கைக்கு அஸ்திவாரமாகும். மனைவியைப் பற்றிக் கணவன் சந்தேகப்பட்டாலோ, கணவனைப்பற்றி மனைவி ஐயுற்றாளோ நல்ல குடும்பம் பல்கலைக் கழகமாகவா இருக்கும்? தாம்பத்ய சீர் குலைந்து போகாதா?
மாமியார் – மருமகளிடையே இந்த நம்பிக்கையின்மை தான், அவர்களிடையே நல்லுறவு ஏற்படாமல் இருப்பதற்குக் காரணம். மருமகள் தன் பிள்ளையைக் கைக்குள் போட்டுக்கொண்டு விடுவாளோ, தலையணை மந்திரம் சொல்லித் தந்திரமாக அவளை மயக்கி விடுவாளோ, பின் நம்மைப் பிள்ளை கவனிக்காமல் உதாசீனப்படுத்தி விடுவாளோ என்று மாமியார் அஞ்சி கொண்டிருந்தால்.
பிள்ளைக்குத் திருமணம் செய்து வைத்தபின் இளம் தம்பதியினரது இல்லற வாழ்க்கையில் தலையிடாமல், ஆனால் தக்க சமயத்தில் ஆலோசனை கூறி உதவினால் மாமியாரிடம் மருமகளுக்கு நம்பிக்கை தோன்றும் நல்லுறவு வளரும்.
ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களிடம் மேலதிகாரி நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போது தான் வேலை சரிவர நடைபெறும். அவர்களை நம்பாமல் அவர்களது வேலையை வேவு பார்த்துக் கொண்டிருந்தா, அதிகாரி மீது ஊழியர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். எப்படி நிறுவன வேலைகள் ஒழுங்காக நடைபெறும்.
அன்றாடப் பணிகளில் தலையிடாமல், ஆனால் மேலாண்மையுடன் கவனித்து நிர்வாகத்தை நடத்திச் செல்பவரே பொறுப்புள்ள அதிகாரி. அவரால் தொழிலும் வளரும். ஊழியர்களும் கடமை உணர்வுடன் வேலை செய்வார்கள்.
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நம்பிக்கை தான் காரணம்.
நம் வாழ்வில் வெற்றி பெறுவது தான் நமது குறிக்கோள். ஆனால் சில சமயங்களில் தோல்வியைத் தழுவ நேரிடலாம். ஆனால் தோல்விகளைக் கண்டு துவண்டு போகக்கூடாது.  தோல்வியில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி இருக்கிறது. அது நமக்கு ஓர் படிப்பினையாகும். நம் தவற்றைத் திருத்திக் கொண்டு அடுத்தமுறை வெற்றி பெற முயற்சி மேற்கொள்பவரே புத்திசாலி.
ஆகவே, தோல்வி அடைந்ததும் முயற்சிகளைத் தளரவிடாதீர்கள். தெய்வீக சோதியை அப்படியே பிரகாசிக்கச் செய்யுங்கள். இப்பொழுது நீங்கள் லட்சியத்தை சமீபித்து விட்டீர்கள். உங்கள் உள்ளத்தில் ஜோதி (நம்பிக்கை) உதயமாகிவிட்டது. உங்களுடைய முகத்தில் பிரம்மதேஜஸ் ஜீவிக்க ஆரம்பித்துவிட்டது. பொறுமையுடனும், சோர்வின்றியும் சாதனை செய்வதன் விளைவாக ஆத்மிகத் துறையில் நீங்கள் பெரும் சாதனை புரிவீர்கள். தாண்ட முடியாத பல சிகரங்களையும் தாண்டிச் செல்வீர்கள். இதற்கு ஆதாரமாக நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சுவாமி சிவானதர் நமக்கு வழிகாட்டுகிறார்.
முதலில் நம்மை நாம் நம்ப வேண்டும். நமது ஆற்றலில், தகுதியில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
நான் என்னை நம்புகிறேன். என் தொழிலை நம்புகிறேன். என்னுடன் பணி புரியும் சக ஊழியர்களை, நண்பர்களை நம்புகிறேன் என் உறவுகளை நம்புகிறேன். இறைவனை நம்புகிறேன் என்பதே சரியான அணுகுமுறை.
எனது கடின உழைப்பாலும், தெளிவான திட்டத்தாலும், என்னுடைய குறிக்கோளை அடையத் தேவையான எல்லாவற்றையும், இயற்கை சக்தி எனக்கு அளித்திருக்கிறது என்று நம்புகிறேன். இப்படி எண்ணுகின்றவர்களது வாழ்க்கையில் வெற்றி பெறுவது நிச்சயம்.
வெற்றி என்பது அதிர்ஷ்டத்தாலோ, குறுக்கு வழியிலோ வருவதில்லை என்பதையும், திறமையாகச் செயல்படுவதால் மட்டுமே வரும் என நம்புகிறேன்.
மற்றவர்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேனோ, அதே போல நானும் மற்றவர்களிடம் நடந்து கொள்வேன். ஒரு போதும் குறை சொல்ல மாட்டேன். மற்றவர்கள் தவறு செய்தாலும், நான் என் கடமைகளைச் சரிவரச் செய்வேன். என்ற நம்பிக்கை எனக்குப் பரிபூரணமாக உண்டு.
என்னிடம் யாரேனும் தவறாக நடந்து கொண்டாலும், அவர்களிடம் கோபம் கொள்ளாமல் எரிச்சல் படாமல் அவர்களை நான் முழுமனதுடன் மன்னிப்பேன்.
தொடர்ந்து விடாமுயற்சியுடன் உழைத்து என்னுடைய குறிக்கோளை அடைய முடியும் என்று உளமாற நம்புகிறேன்.
என்னுடைய மனதில் பொறாமை, வெறுப்பு, சுயநலம் போன்றவற்றைப் புறந்தள்ளி, மனிதாபிமானத்துடனும், பிறரிடம் அன்புடனும் செயல்பட்டு, மற்றவர்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெறுவேன் என நம்புகிறேன்.
என் உடல் நலனைப் பேணுவதிலும், உள நலனைப் பேணுவதிலும் அக்கறை செலுத்துவேன்.
தவறிழைப்பது மனம். தவறு செய்யக்கூடாது என்று அறிவுறுத்துவதும் அதே மனம் தான். ஆகவே, தவறு செய்யாத வழியைத் தேர்ந்தெடுத்து, ஒழுகுவதும் அதே மனம் தான். ஆகவே மன நலத்தைப் பேணுவேன்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என தாயுமானவர் சொன்னதுபோல, உலகோர் அனைவரும், உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ என்னால் முடிந்த அளவு, உதவி புரிவேன் என்று நம்புகிறேன்.
இப்படி மனநலனை வளர்த்துக் கொண்டால் ஒரு நாளும் நாம் துவண்டு போக மாட்டோம்.
வெய்யிலில் விழுந்து விட்ட புழு உயிர்வாழவே துடிக்கிறது. அந்தத் துடிப்பு அதன் நம்பிக்கையைக் காட்டுகிறது. ஆனால் வெயிலின் கடுமை தாங்காமல் அது மடிந்துவிடுவது வேறு விஷயம்.
அந்தப்புழுவை விட நாம் மோசமானவர்கள் அல்ல. “என்னிடம் 100 இளைஞர்களைக் கொடுங்கள். நான் இந்தியாவின் தலைவிதியையே மாற்றிக் காட்டுகிறேன்” என்று உறுதியுடன் கூறினார் சுவாமி விவேகானந்தர்.
“ஆடுவோமே…. பள்ளுப் பாடுவோமே… ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே…” என்று பாரதி நம்பிக்கையுடன் பேசினார். சுதந்திரம் அடைவதற்கு முன் அவர் மரணமடைந்து விட்டாலும், அந்தச் சுதந்திரக் காற்றை அவர் சுவாசிக்காவிட்டாலும், ஆனந்த சுதந்திரத்தை அனுபவித்ததாகக் கனவு கண்டார். அவர் நம்பிக்கையுடன் கனவு கண்டது வீண் போகவில்லை. பாரதி மறைந்து சில வருடங்கள் கழித்து, அவர் நம்பிக்கையுடன் கனவு கண்டது போலவே நாம் சுதந்திரம் பெற்றோம்.
இளைஞர் சக்தியில் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் கனவு காணும் இந்த நல்ல, வளம் பெற்ற இந்தியா ஒரு நாள் மலரும் என்று நாமும் நம்பிக்கை கொள்வோமாக.


Share
 

5 Comments

 1. N mart says:

  இந்தியா ஒரு நாள் மலரும் என்று
  .திடமான நம்பிக்கை வையுங்கள்.

 2. Raja says:

  Super Sir…

 3. வசந்தவாசல் அ.சலீம்பாஷா says:

  நம்பிக்கைத்தானே வாழ்க்கை!

 4. Saravanakumar says:

  Good massage

Post a Comment


 

 


January 2011

மனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து
என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்
காலத்தை வென்று வாழும் மகாகவி பாரதி
என் பதில்களுக்கான கேள்விகள் எங்கே?
கவிதை
நலந்தானா
கணினி தொழில்நுட்பம்
இருளிலும் விடியல்
நம்பிக்கை
நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்
உனக்குள்ளே உலகம்-8 நேரந்தான் இல்லையே!
உடலினை உறுதி செய்
நூற்றுக்கு நூறு மார்க்
உள்ளத்தால் உள்ளலும் தீதே
வெற்றி நிச்சயம்
முயற்சி தரும் வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்