Home » Articles » வாழ்க்கை ஒரு வசந்தக் காடு

 
வாழ்க்கை ஒரு வசந்தக் காடு


செல்வராசன்
Author:

வாழ்க்கை என்பது வனாந்தர பூமியல்ல. அது, வண்ணக்கோலங்களைத் தன்னில் தேக்கிக்கொண்டு நம்மை வாவென்று அழைக்கிற ஒரு வசந்தக்காடு. அதனோடு வழக்கொன்றும் வைத்துக் கொள்ளாமல், சொந்தம் கொண்டாடப் பழகிக் கொண்டால் சோக மேகங்கள் சுத்தமாக விலகி, கதிரவன் என்னும் ஒளிச் சுடர் வீசி வாழ்க்கைப் பிரகாசிக்கும்.
சோதனைகளும், வேதனைகளும் யாரோடு சொந்தம் வைத்துக் கொள்கின்றன தெரியுமா? வாழ்க்கை தன்னைத் தயார் செய்து கொள்ளாமல், வாழ்நாளைத் தொலைத்து விடுகிறவனோடு மட்டுமே.
நெஞ்சிலே துணிவில்லாதவனுக்கு, தோல்விகள் எல்லாம் தடைக்கற்கள். துணிவுள்ள வனுக்கோ தடைக்கற்கள் கூட அவனைத் தூக்கி நிறுத்துகிற படிக்கற்கள் தான்.
தோல்வியும் – சோகமும் நம்மோடு நிரந்தர வாசம் புரிய வந்து போகிற சாதாரணச் சங்கதிகளே. இவற்றைஎண்ணியெண்ணி வெந்து போவது என்பது தான் வேண்டாத வீண் வேலை.
கலங்கித் தண்ணீர் வடிப்பதனால் காரியம் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. எனவே, அந்தக் கையறு நிலையை நாம் கைகழுவி விடுவது தான் புத்திசாலித்தனம்.
சோம்பலால் சூம்பிப் போயிருக்கும் மனதில், சுகங்கள் கூடச் சோகங்கள் தான். இனிப்பு களெல்லாம் கூட எட்டிக் காய்கள் தான். உற்சாகம் அங்கே ஊற்றெடுத்து விட்டால் பிறகு, சோகங்கள் எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?
ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு காலக்கெடு உண்டு. இந்தக் காலக்கெடுவுக்குள், வாழ்வு இலக்கியத்தில் காவியமாகப் பதிகிறவன், இறப்புக்குப் பின்னும் வாழ்கிறான். வெற்றுத்தாளாய் வீணாகிப் போகிறவனோ, வாழும்போதே இறந்தவனாகிறான்.
மாவீரன் அலெக்சாண்டரின் வரலாற்றைப் பிரமிக்கத் தக்க வகையில் எழுதிய புளூடாக்,
“ஒரு சரித்திர மனிதன் தனி வாழ்வில் சின்னஞ்சிறு செயல்களை எவ்வாறு செய்தான். சிறிய – பெரிய துயரங்கள் எதிர்படும் அவற்றை எவ்வாறு சமாளித்தான் என்று உற்று கவனிப்பது சுவைமிகுந்த தொரு செயல்’ என்று உரைக்கிறார்.
“என்னுடைய வயதை நான் ஆண்டுகளைக் கொண்டு அளவிட விரும்பவில்லை. நான் செய்து முடித்த செயல்களைக் கொண்டே என் ஆயுளைக் கணக்கிடுகிறேன்’ என்று தாமஸ் ஆல்வா எடிசன் சொல்வது உழைப்பின் பெருமையை எடுத்துக் காட்டுகிறது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் மெல்லிய கொம்பாகக் காற்றில் ஆடிக் கொண் டிருந்த ஒரு சிறிய ஆலங்கன்று, எல்லோருடைய கண்பார்வையிலே வளர்ந்து யானை கட்டும் தூணாவற்குரிய நிலையிலே இருக்கிறது. அதுபோல் ஒருவன் பலவித அல்லல்களுக்கிடையே முயன்று வந்தால் முன்னேறலாம் என்று பழம்பாடல் ஒன்று கூறுகிறது.
“சந்தேகம், கவலை, மனச்சோர்வு, பயம் இந்தப் பிசாசுகளெல்லாம் மனிதனை அடிக்கும் பொருட்டுப் பதுங்கி நிற்கின்றன. அவன் சோம்பலுக்கு இடம் கொடுக்கும்போது இவை அவனை வந்து தாக்குகின்றன. முயற்சியோடு உழைப்பதே இந்தப் பிசாசுகள் அடிக்காமல் தன்னைக் காத்துக் கொள்வதற்கு நிச்சயமான வழி. தொழிலைக் கைக்கொண்டால், பிறகு எந்தப் பிசாசும் பக்கத்தில் நெருங்காது. மிஞ்சி வந்தால் தூரத்திலிருந்து உறுமும், அவ்வளவுதான்’ என்று கார்லைல் சொன்னார்.ஜேம்ஸ் தர்பார் என்றஅமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் “நியூயார்க்கர்’ என்ற பத்திரிக்கைக்கு இருபது முறை எழுதினார். இருபது தடவையும் அவரது எழுத்தோவியங்கள் திரும்பியே வந்தன. அவர் முயற்சியில் மனம் சிறிதும் தளரவில்லை. இருபத்
தோராவது தடவை வெற்றிக்கண்டு பின் அதே இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.மாவீரன் நெப்போலியன் ஓர் அதிகாரிக்கு ஒரு வேலையைச் சொல்லி இருந்தார். அந்த அதிகாரி மாலையில் நெப்போலியனிடம் வந்து, “பகல் முழுவதும் வேலை செய்தேன். வேலை முடியவில்லை’ என்றார்.
இரவு எங்கே போனது? என்று கேட்டார் நெப்போலியன். தோல்விகள் அடுக்கடுக்காக வந்தாலும் கலங்காமல் மேன்மேலும் உழைக்க வேண்டும்.
“எழுவதற்கே வீழ்ச்சி, வெல்வதற்கே தோல்வி, விழிப்பதற்கே தூக்கம்’ என்கிறார் ராபர்ட் பிரவுனிங்.மனிதன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் அதற்கு முதற்படி முயற்சியே அவசியம்.
ராஜாளி எவ்வளவு பலமுடைய பறவையாக இருப்பினும் அதன் கூட்டைவிட்டு வெளியே பறந்து செல்லவில்லையாயின், அதற்கு எவ்விதம் இரை கிடைக்கும்?
அதுபோல் ஒருவன் பயமின்றி கடல் ஆழத்திற்குச் சென்று முத்துக் குளித்துவரவில்லை என்றால் உலகில் முத்து ஏது?
“ஒவ்வொரு பறவைக்கும் இறைவன் உணவை அளிக்கின்றார். ஆனால் அந்த உணவை அப்பறவையின் கூட்டிற்குள் கொண்டுபோய் வைப்பதில்லை’ என்றார் ஹாலண்ட் என்றஅறிஞர்.தோல்வியைத் தூர விலக்கித் தள்ளிவிட்டு துணிச்சலாக வாழ்க்கையில் முன்னேறியவர்களில் தற்கால கப்பல் போக்குவரத்தின் தந்தை என்று புகழப்படும் ராபர்ட் புல்லட்டன் என்பாருக்கு மிகவும் உயர்ந்த இடம் உண்டு.சாதனையில் சரித்திரம் படைப்பதற்கு, வயது, நோய், எதுவும் தடை கிடையாது.கண்களை இழந்தவர்களும், கால்களை இழந்தவர்களும், நோயால் உழன்றவர்களும், இலக்கிய வானில்
இணையற்ற மீன்களாக இலங்கினார்கள். இலங்குகிறார்கள். உறுப்பில் குறையாக இருந்தாலும், இலக்கிய உலகில் புகழ் மணம் பரப்பிய பலரைப் பார்க்கலாம்.
கவி மில்டனுக்குத் தமது நாற்பதாவது வயதிலே கண் ஒளி மங்கத் தொடங்கிவிட்டது. பின்னர் முழுப்பார்வையையும் இழந்தார். ஆயினும் அவருடைய மிகச்சிறந்த படைப்புக்கள் அவர் பார்வை இழந்த பின்னரே எழுதப்பட்டவையாகும்.
வில்கின்ஸ் என்பவர் தாவர சாஸ்திரத்தில் மேதை. இவர் தமது இருபத்து மூன்றாவது வயதில் பார்வையை இழந்துவிட்டார். பூக்களை நாக்கின் நுனியால் ஸ்பரிசித்துப் பார்த்தே என்ன பூ என்று அதன் பெயரைச் சொல்லிவிடுவார்.
புறக்கண் இல்லாமல் இருந்தாலும் அகக்கண்ணாகிய அறிவு பெற்றுப் பிறர்போற்ற வாழ்ந்த புலவர்கள் பலர் தமிழகத்தில் இருந்தனர்.
உடல் உறுப்புகளில் சிலர் இல்லாதிருப்பது ஒருவனுக்குப் பழிதராது. அவை இருந்தும் அறிவன அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழியாகும்.
சிலர் உடல் குறைபாடு என்ற கண்ணீர்க் குளத்தில் நின்றாலும், முயன்றால் பன்னீர்ப் பூக்களாக பாரில் மணம் வீச முடியுமே.
“துன்பப்பறவை உன் தலைக்குமேல் பறந்து போகவிடு. ஆனால் தலையில் கூடுகட்ட இடம் கொடுக்காதே’ என்பது ஒரு சீனப்பழமொழி.
ஓர் ஆங்கிலப்பாடல் சொல்கிறது;”உன்னுடைய தோட்டத்தை அழகிய மலர்களைக் கொண்டு மதிப்பிடு. ஒருபோதும் விழுந்துகிடக்கும் இலைகளைக் கொண்டு மதிப்பிடாதே’ கடந்துபோன வாழ்க்கையில் கசந்த நினைவுகளையும், தோல்விகளையும் எண்ணிக் கவலைபட்டுக் கொண்டிராமல் அந்த அனுபவங் கள் நமக்குக் கற்று உணர்த்திய தெளிந்த படிப்பினை யையும் மையமாக வைத்து, வருங்கால வாழ்க் கையை வளப்படுத்திக் கொள்வதே சிறப்பினை நல்கும் இல்லையா?
இன்றே நமது சோக மேகங்களுக்கு மூடுவிழா கண்டு, நாம் இந்த மண்ணில் வாழப் பிறந்தோம், பலரை வாழ்விக்க பிறந்தோம் என்பதை உணர்ந்து, நமது வாழ்க்கை என்னும் வசந்தக் காட்டில் எழில்வீசும் இன்ப மலர்களாகப் பூத்துச் சிரிப்போம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2010

வாழும்போதே நீ வானத்தைத் தொட்டுவிடு
கவலை தாங்கி மரம் – பவளமல்லி
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
என்றும்…
வாழ்க்கை ஒரு வசந்தக் காடு
வெற்றிப்படி 4
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம் !
மானுடத்தை வளர்த்த மகாவீரர்
வருவது தானே வரும்!
கணினி தொழில்நுட்பம்
எது விளையாட்டு?
சிந்தனை செய் நண்பனே- என்னைத் தெரியுமா?
அதெல்லாம் ஒரு காலமுங்க!
விடாமல் முயலுங்கள் விரும்பியதை அடையுங்கள்
அர்த்தமற்ற இலக்குகள்
உடலினை உறுதி செய்
மனிதப்பிறவி பெரும்பேறு
வாழ்க்கைப் பயண வெற்றிக்கு…
தொழிலை நேசி! வெற்றியை சுவாசி!!
அன்பு
உள்ளத்தோடு உள்ளம்
நலந்தானா?
CBSE கல்வி உதவித்தொகை
முயன்றேன் வென்றேன்