Home » Articles » வருவது தானே வரும்!

 
வருவது தானே வரும்!


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

வைகள் ஒருபுறம்; பெறுவது மறுபுறம் என வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. நமக்கு என்ன வரவேண்டுமோ அது வரும். அதைப் பெறுவதற் கான தகுதி மட்டும் நம்மிடம் இருந்தால் அது தானே வந்து சேரும். எப்படி எனப் பார்ப்போம்.
குடும்பத்தில்
குடும்பத்தில் அனைவரும் விரும்புவது சுமூகமான சூழல்தான். பல சமயங்களில் திடீரென ஒருவர் பேசும் பேச்சு, உறவில் விரிசலை உண்டாக்கிவிடும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் நல்ல குணங்களுடன் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். இதற்கு இவர்கள் நல்ல முன் உதாரணமாய் செயல்பட வேண்டும்.
காலை எழுந்தவுடன் பல் துலக்கி, முகம் கழுவிய பின்பாடம் படிக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கூறும் தந்தை, தானும் பல்துலக்கிய பின் காபி அருந்துவது நல்லது.
வீடுகளில் நீக்கமற நிறைந்துள்ள தொலைக் காட்சிப் பெட்டியில் எந்த நிகழ்ச்சி ஒலி பரப்பி னாலும் எவ்விதமான முனுமுனுப்பும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் கடமையாகக் கருதிப் பார்க்கும் மந்தை போல மாறிவிட்டனர். இதைப் பெறத்தான் அந்த நிறுவனங்களும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெற்றமகிழ்ச்சியில் உள்ளன.
வளர்ந்த குழந்தைகள் சரியான வாழ்க்கைத் துணை அமைய விரும்புவதும், அவர்களது அம்மா ஒத்துப்போகும், சொன்னால் கேட்டுக் கொள்ளும் மருமகள் வேண்டும் என்று நினைப்பதும், அப்பா அதிக ஆசைப்படாத மருமகன் அமைந்தால் நல்லது என விரும்புவதும் இயல்பாகிவிட்டது.
திருமணமான புதிதில், இந்த அம்மாவும், அப்பாவும் தாங்கள் எதிர்பார்ப்பது போன்றே தம் மாமனார் மாமியாரிடம் நடந்து கொண்டார்களா என்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
அப்படி இருந்திருந்தால் இவர்களுக்கும் விருப்பம் போலவே அமைவார்கள்.
வீடுகளில் வயதாகி முதுமையில் உள்ள பெரியவர்கள், தங்களது வாலிப வயதில் தங்கள் வீடுகளிலிருந்த முதியோர்களை எப்படி கவனித்துக் கொண்டார்களோ, அது தான் கிடைக்கும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
எனது பெற்றோர்களிடமிருந்து எவ்வித வரவும் இல்லாமலேயே கஷ்டப்பட்டுப் பார்த்துக் கொண்டேன். இன்று எனக்கு பென்சன் வருகிறது. டெபாசிட் இருக்கிறது. சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
திருமணமான இளம் தம்பதியர் விரைவில் குழந்தை பாக்கியம் பெறவேண்டும் என விரும்புகின்றனர்.
சிறுவயதில் உடன்பிறந்தவர்கள் எல்லோரும், பிற்காலத்திலும், பிரியாமல் ஒற்றுமை யாக ஒன்றாக வாழ வேண்டும் என்று கூறிக் கொள் கின்றனர். காரணம் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள், ஒருவருக்கு திருமணமாகி, வெளியிலிருந்து ஒருவர் வந்த பின் நிலையில் மாற்றம் உண்டாகிறது.
சிறுவயதில் மேற்கொண்ட சூளுரை என்ன ஆயிற்று?
தீர்வுகள்
எதிர்பார்ப்பதில் தவறில்லை. அவை வருவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வதில் ஆர்வம் தேவை. தண்ணீர் போல, எல்லா இடங்களுக்கும் பரவி ஓடும் மனப்பான்மை தேவை.
“கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ இது பழமொழி. கல்லையும் நாள்பட நாள்பட நீரானது காற்றின் துணைகொண்டு, அடித்து அடித்து கரைத்துவிடும்.
அன்பான பேச்சு, கனிவான முகபாவம், புன்சிரிப்புடனான முகம், பொருள்களைக் கையாள் வதில் நிதானம், பொறுமை, வயதில் பெரியவர் களுக்கு மரியாதை கொடுப்பது சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் வைத்துக் கொள்வது உள்ளிட்டவைகள் விரும்பியதை வரவழைக்கும். அதுவும் தானே வரும்.
கல்வி, வேலை, தொழில், வியாபாரம்
பெற்றோர்கள் எல்லோருமே தங்கள் குழந்தைகள் நன்றாகப் படித்து, முதல் ரேங்க் வாங்க வேண்டும். அதனால், தான் பெருமைப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். மாணவர்களும் நன்றாகப் படிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களால் முடிவதில்லை.
காரணம், மிகவும் சுலபமானது. மனதை எல்லா திசைகளிலும் அலைபாய விடுவதுதான்.
ஒழுக்கம், நேர்மை, கீழ்படிதல் உள்ளமாணவர்களையே ஆசிரியர்களும் கல்வி நிறுவனங்களும் விரும்புகின்றனர். இன்றைய நிலையில் கல்விக் கட்டணமாக எவ்வளவு கேட்டாலும் தருகின்ற பெற்றோரையும், அவர்தம் குழந்தைகளையும் தான் கல்வியை வியாபாரமாய் செய்பவர்கள் விரும்பி வரவேற்கிறார்கள்.
கல்வி என்பதே வேலை பெறுவதற்குத் தான் என்ற அளவுக்கு குறுகிய நோக்கத்துடன் தேடும் மனநிலையில் இன்றைய இளைஞர்கள் பறக்கிறார்கள். வேலை கிடைத்தவுடன், வேலை கொடுத்த நிறுவனத்தையோ, நபர்களையோ நட்புணர்வில் அணுகாமல், முதலாளி – தொழிலாளி என்ற நிலையில் பிரித்து வைத்துப் பணி புரிகின்றனர்.
வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலை கள் உள்ளிட்ட வேலை வழங்கும் அமைப்புக்கள், தமது பணியாளர்கள் நம்பிக்கையாக, உண்மையாக பணியாற்றவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். பணிபுரிவோருக்கு நியாயமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுமளவு ஊதியம் வழங்கினால், எதிர்பார்ப்புகள் செயல் களாக மாறிவிடுமே.
சமுதாயம்
சமம் ‘ ஆதாயம் ‘ சமமாக ஆதாயம் (இலாபம்) பெறுதலே சமுதாயம் என்பது. மனிதனைப் படைத்த இறைவன் மனிதனுக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டான். இன்னும் வேண்டும் என்று கேட்டால், இறைவன் எங்கே செல்வான்? அவனிடம் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை.
சமுதாயம் என்பது மக்கள், வாழும் குடும்பங்கள் நிறைந்த ஊர்கள், நாடுகள், ஆட்சி யாளர்கள், பத்திரிக்கைகள் என எல்லோரையும் உள்ளடக்கியதுதான்.
மக்களின் எதிர்பார்ப்பு – நியாயமான, நேர்மையான, ஊழலற்றஆட்சி. ஆனால் வாக்களிக்க இவர்கள் எதிர்பார்ப்பது அன்பளிப்பு, பின் பல இலவசங்கள்.
ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசியல் கட்சியினர், ஊழலால் சம்பாதித்த பணத்தை வைத்து எல்லா ஊர்களிலும், பினாமி பெயரில் சொத்து வாங்குவர். மற்றவர்கள் வாங்கினால் வழக்கு போடுவார்கள்.
சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள், எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், செய்யும் வேலைகளால் பயன்பெறுவோரிடமும் அன்பளிப்பு (பிச்சை லஞ்சம்) எதிர்பார்த்து தாமதம் செய்வதும், அந்தப் பணத்தைத் தவறான வழிகளில் செலவழிப் பதும், நோய்களின் விருந்தாளியாக இருப்பதும், ஆடம்பரமாய் குழந்தைகளை வளர்த்து சமுதயாத்தை களங்கப்படுத்துவதும் இரத்தத்தில் ஊறிவிட்டதாகவே உள்ளது.
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பொருள் பெற உழைக்கத்தயார்; வேலை கிடைக்காவிட்டால், பசிக்கொடுமையை நீக்க பிச்சை எடுக்கவும் தயார்; பிச்சையும் கிடைக்காத போது பிறருக்குச் சொந்தமான பொருட்களை, அவர்களுக்குத் தெரியாமல் அபகரித்துக் கொள்ளவும் தயார்; இதற்குப் பெயர்தான் திருட்டு.
மற்றவர்களுக்குத் தெரியாமல் துவங்கிய திருட்டு, இன்று பைக்கில் வந்து கழுத்து செயினை அறுத்துச் செல்லும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
பொதுமக்களின் வரிப்பணத்தால் சமுதாயத் துக்கு செலவழிக்க ஒதுக்கப்படும் தொகையில் கமிஷன் என்ற பெயரில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கொள்ளையடிப்பதும் சேர்ந்து கொண்டது.
இதையெல்லாம் கண்டு பொறுக்காத நியாய உணர்வுள்ளவர்களால் உருவாக்கப்பட்ட நக்ஸல் போன்ற இயக்கங்கள் இன்று முழுக்க முழுக்க சுயநலத்துடன் செயல்பட்டு உயிருடன் விளையாடும் நிலை பெருகிவிட்டது.
இயற்கையும் தூய்மையும்
நல்லவர்கள் எண்ணிக்கை குறைந்து தீயவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. எனவே, இயற்கை தன்னைத்தானே தூய்மைப் படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டது. சமீப காலங்களில் வேக வேகமாகத் தூய்மைப் பணியைச் செய்து கொண்டிருக்கிறது.
வழக்கமாக குளிராய் இருக்கும் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு கடும் கோடை வெப்பம், இதனால் பல ஆயிரம் மக்கள் சாவு என்ற செய்தி ஒருபுறம்.
இந்த அதிக அளவு வெப்பத்தால் பனி மலைகள் உருகி, கடல் நீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயருகிறது. இரு வருடங்களில் பல நாடுகள் நீரில் மூழ்கி விடும் என்ற அபாய அறிவிப்பு மறுபுறம்.
பாகிஸ்தானில் கடும் மழை, வெள்ளத்தால் பல கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் லே பகுதியில் மேகம் வெடித்து கொட்டிய மழையால் ஏராளமான உயிர்சேதம் மற்றும் பொருள் சேதம்.
இவையெல்லாம் இயற்கை மனிதனுக்கு விடுக்கும் எச்சரிக்கைகள் என்றேகொள்ள வேண்டும்.
இறைவன், இயற்கை என்று போதிக்கும் கஷாயம் தரித்த சிலர் குடும்பத்தில் வாலிப வயதுப் பெண்களை தன்வயப்படுத்துவதும், விபரம் தெரிந்தவர்களையும் வசியம் செய்து, சொத்துக் களைத் தானமாகப் பெறுவதும் தொடர்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தருவதாய் ஜம்பமடிக்கும் தினசரி பத்திரிக்கைகளில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் இதுபோன்ற வெறுக்கத் தகுந்த செய்திகளுக்குத் தான் முதலிடம்; தலைப்புச் செய்தி.
மாத, வாரப் பத்திரிக்கைகளுக்கு திரைப்பட நடிகையர், விளம்பர மாடல்கள் இவர்கள் தான் அட்சயப் பாத்திரம். கேட்டால் இவர்களது படம் போட்டால் தான் மக்கள் வாங்குகிறார்கள் என்று சமாதானம் கூறுகின்றனர். மக்களோ வேறு வழியே இல்லை என வேண்டா வெறுப்பாக வாங்குவதாய் கூறுகின்றனர்.
பால் உறவுக்கல்வியை உரிய பருவ வயதில் இளைஞர்களுக்கு போதிப்பதுதான் இவைகளைத் தடுத்து நிறத்த ஒரே வழி. பேச்சுத் திறமையுள்ளிட்ட பல களங்களில் தங்களின் திறமைகளை வளர்த்து மெருகூட்டிக் கொண்டவர்கள். “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்று தங்கள் திறமைகளை அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.
“நான் பேச்சை விற்பதில்லை’ என்று பெருந்தன்மையாய் நடமாடிய அமரர் தென்கச்சி சாமிநாதன் போன்றோரும், பேச்சுக்காக நான் பெறும் இந்த குறைந்த தொகை, புத்தகங்கள் வாங்கவே என்று வெளிப்படையாக கூறும் ஒரு சிலரும், நான் பேசுவதென்றால் குறைந்த பட்சம் இவ்வளவு என தங்களுக்கு விலை பேசுவோரும் நிறைந்ததே இச்சமுதாயம்.
வருகின்ற நன்கொடைகளை, எவ்வித எதிர்பார்ப்புமின்றி கோடிக்கணக்கில் பொது மக்களின் கல்வி, உடல்நலம், குடிநீர் போன்ற வற்றிற்காகச் செலவிட்டுவரும் சத்ய சாய்பாபா போன்றோர்கள் ஒரு புறமிருந்து இயன்றவரை சமமாய் உலகம் இயங்க முயல்கின்றனர்.
வியாபாரம்
“‘வாழ்க்கை என்பது வியாபாரம் அதில் ஜனனம் (பிறப்பு) என்பது வரவாகும், மரணம் என்பது செலவாகும்”
வருவது தானே வரும்
சமுதாயத்தில் குடும்பத்தில் கிட்டத்தட்ட எல்லோரையுமே ஆய்வு செய்துவிட்டோம். ‘”நீங்கள் செயலை மட்டும் செய்யுங்கள்; அதற்கு மேல் உங்களுக்கு அனுமதி கிடையாது. அந்தச் செயலுக்கு பலன் இதுபோல் இருக்க வேண்டும் என்று உரிமை கொண்டாட முடியாது” இது தான் கீதையின் சாரம்.
ஒவ்வொருவரது முயற்சிக்கும், செயலுக்கும் சரியான பலன் கிடைக்கும். இதற்கு அவரவர் தான் பொறுப்பு. முயற்சிக்கேற்றவாறு தான் பலன் வந்து சேரும். இதைத்தான் வருவது தானே வரும் என்றனர்.
இதற்கும் மேல் நம் வாழ்க்கை முறை, நியாயமான தேவைகள், நல்ல பழக்கங்கள் இவற்றால் நமது தகுதி அதிகரிக்க, அதிகரிக்க நமக்குத் தேவையானவைகள் தாமே வந்து சேரும் என்பதைத்தான் வருவது தானே வரும் என்று கூறினர்.
சிறு உதாரணம்: இராமாயணத்தில் மாற்றான் (இராமன்) மனைவியான சீதையை, இராவணன் கவர்ந்து சென்றான். அவளை அடைந்துவிட இராமன் போன்று உருமாறினான். உடனே இராமனின் நற்குணங்கள் இராமன் உருவத் தில் இருந்த இராவணனுக்கும் தோன்றியதாம். தவறு, என உருவத்தை மாற்றிக் கொண்டானாம்.
இதுபோல், நல்ல குணங்கள் குடி கொண்டுள்ள மனித உள்ளம் எண்ணும் எண்ணங் கள் விரைவில் செயல்களாக மலர்வது இயற்கை.
நமக்கு கிடைப்பதை முதலில் ஏற்று திருப்தி அடைவோம். வலுக்கட்டாயமாக எதை அடைந் தாலும், அதனால் தீய விளைவுகள், மட்டுமே வந்து சேரும். மயக்க நிலையில், இதை உணராமல் நம்மில் பலர் செயல்பட்டு, இருப்பதையும் இழந்து வருந்துவதைப் பார்க்கிறோம்.
நமது செயல்பாடு
“என்னதான் உடல் முழுவதும் எண்ணெய் பூசி உருண்டாலும் ஒட்டும் மண் தானே ஒட்டும்’ என்பது மூத்தோர் சொல். “நமக்காக விதிக்கப் பட்டது இதுதான்; என் தலைவிதி’ என்று புலம்ப வேண்டியதில்லை. உங்கள் விதியை நீங்கள் மாற்ற முடியும்.
“ஊழலையும் உப்பக்கம் காண்பர்’ என்று திருவள்ளுவர் – சோர்வே இல்லாமல் தொடர்ந்து முயற்சி செய்து செயல்படுபவர்களைக் கூறுகின்றார்.
விதி என்பது நம் கைகளுக்கு எட்டும் தூரத்தில் தான் உள்ளது. இதோ சில உதாரணங்கள்.
குஜராத் மாநிலம் – கடுமையான தீவிரவாத அச்சுறுத்தலுக்கு இடையே உயிரைப் பணயம் வைத்து மக்கள் நன்மைக்காக செயல்படும் அரசாங்கம்.
பீஹார் மாநிலம் நேர்மையான இளம் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளால் இன்று ஊழல் குறைந்து நல்லாட்சி நடத்தும் அரசாங்கம்.
சைனா – உற்பத்தி செய்யும் பொருட்களை மிகக்குறைந்த விலைக்கு உலகெங்கும் விற்பனை செய்கிறது. அங்கும் ஊழல் புகுந்துவிட்டது. கம்யூனிஸ்ட் பார்ட்டி சைனா (இடஇ) புகுத்தி செயல்படுத்தும் நன்னடத்தை விதிகளுள் தலையாயது ஆட்சியாளர்கள், அதிகாரிகள், தம் பெயரிலோ, அரசின் சமுதாய நல மேம்பாட்டுப் பணிகளின் ஒப்பந்தங்களைப் பெறக் கூடாது என்பதே அது. இது நல்ல பலனைத் தந்துள்ளது.
இன்று மக்கள் பிரதிநிதிகளாக பாராளு மன்றத்தில் (M.P.) உள்ளவர்களுள் எத்தனைபேர் இந்த சம்பளத்தை மட்டுமே வாங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாய்’ அல்லவா இருக்கிறது இவர்கள் கேட்கும் சம்பள உயர்வு.
சட்டத்தின் ஆட்சி, சிபாரிசு இல்லாத நிர்வாகம், ஊழலற்ற அரசாங்கம் இவை நம் எல்லோருக்கும் தேவைகளை நம்மைத் தேடி வரச் செய்யும். அந்நாள் எந்நாள்? பொறுத்திருங்கள். வானம் கிழக்கே வெளுக்கிறது. விரைவில் விடியும்.
வாழ்க வளமுடன்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2010

வாழும்போதே நீ வானத்தைத் தொட்டுவிடு
கவலை தாங்கி மரம் – பவளமல்லி
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
என்றும்…
வாழ்க்கை ஒரு வசந்தக் காடு
வெற்றிப்படி 4
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம் !
மானுடத்தை வளர்த்த மகாவீரர்
வருவது தானே வரும்!
கணினி தொழில்நுட்பம்
எது விளையாட்டு?
சிந்தனை செய் நண்பனே- என்னைத் தெரியுமா?
அதெல்லாம் ஒரு காலமுங்க!
விடாமல் முயலுங்கள் விரும்பியதை அடையுங்கள்
அர்த்தமற்ற இலக்குகள்
உடலினை உறுதி செய்
மனிதப்பிறவி பெரும்பேறு
வாழ்க்கைப் பயண வெற்றிக்கு…
தொழிலை நேசி! வெற்றியை சுவாசி!!
அன்பு
உள்ளத்தோடு உள்ளம்
நலந்தானா?
CBSE கல்வி உதவித்தொகை
முயன்றேன் வென்றேன்