– 2010 – December | தன்னம்பிக்கை

Home » 2010 » December

 
  • Categories


  • Archives


    Follow us on

    வாழும்போதே நீ வானத்தைத் தொட்டுவிடு

    மகனே,
    வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்ததொரு “இலட்சியம்” இல்லாவிட்டால் மனிதன், கேவலம் மிருகமாய்ப் போய்விடுவான் என்று சுவாமி விவேகானந்தர் கூறிய இந்த வார்த்தைகளை சிறிதளவாவது சிந்தித்துப்பார்.
    மகத்தான செயல்கள் யாவும் முதலில் “முடியும்” என்ற நம்பிக்கையில் தொடங்கப் பட்டவைகள் தான். எனவே தொடங்குவதை ஒழுங்காகத் தொடங்கு முடிவைப்பற்றி நீ கவலைப்படாதே. அதனை என்னிடம் ஒப்படைத்து விடு என்று கிருஷ்ணபரமாத்மா கூறியதை நினைவில் கொள்.
    உன் சரித்திரம், நீ சாதிக்கப்பாடுபடும் சாதனைகள், உன்னை உலகினுக்கே அடையாளம் காட்டும் சாதனைகள், உன்னை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் சாதனைகள், அதனை அடைவதற்கு நீ செய்யும் முயற்சிகள், உனது ஆழமான எண்ணத்தின் தூண்டுகோல்கள், உன்னை வழிநடத்தும் மனத்தின் உற்சாகங்கள், உன் வாழ்வில் ஒளியேற்றும் உன்னதக் குறிக்கோள்கள், உனக்கு என்றும் மகுடம் சூட்டி மகிழும் மகோன்னத மனத்தின் இலட்சியங்கள்தான் உன்னை வழிகாட்டி அழைத்துச் செல்லும் வாழ்க்கையின் நங்கூரங்கள்.
    “நெப்போலியன் ஹில்” கூறியதைப் போன்று நமக்கு என்னென்ன வேண்டும் என்பதை நமது மனதில் பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கான முயற்சியை உண்மையாகவே ஒரு மனதோடு செயலாக்க வேண்டும். ஒவ்வொன்றும் நாம் நினைத்தபடி நம்மை வந்தடைவதை நாம் காணலாம். நான் எதையும் “சாதிக்கும் ஆற்றல் பெற்றவன்” என்று தினசரி தன்னம்பிக்கையுடன் சொல்லிப்பார். தன்னம்பிக்கையுடன் சொல்லும் போது எவ்வளவு பெரிய துன்பமும் ஓடிப்போகும். “நம்மால் முடியும்” என்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதை நீ வெற்றிகரமாக சாதித்துவிடலாம்.

    மகனே, ஒன்றை மட்டும் நினைவில் கொள். “முடியும்” என்ற நம்பிக்கையுடன் எந்தக் காரியத்தையும் தொடங்கி உற்சாகத்துடன் செய்தால் வெற்றி உறுதி உனக்கு.
    முயன்றால் முன்னேறலாம். வாழ்க்கையில் நீ எதுவாக வேண்டும் என நினைக்கிறாய்? முதலில் உள்ளத்தில் அந்த எண்ணம் கருக்கொண்டு உருப்பெறச் செய். வாழ்க்கையில் எதற்காகவும் அஞ்சாதே. எதற்காகவும் கலங்காதே. எந்தச் சிக்கலுக்கும் தீர்வு உண்டு. அதற்கான ஆற்றல் உனக்கு உண்டு. அதனை உணர்ந்து செயல்படுத்து. ஆசைக்கு இடம் கொடுக்காதே. அறிவுக்கு இடம் கொடுத்து ஆலயவாசலைத் திறந்திடு.
    நான் நன்றாக இருக்கிறேன். நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நான் பெரிதாகச் சாதிக்கப் போகிறேன் என்று எப்போதும் எண்ணியபடி இரு. இப்படி இருந்தால் யானை பலம் உனக்கு. ஊக்கமும், ஆர்வமும் இருந்தால் நீ எண்ணியபடி உயர்ந்த இலட்சியத்தை அடைந்துவிடுவாய். துணிச்சலான ஆரம்பம்தான் உன்னைத் தூண்டிவிடும் கிரியா ஊக்கி. “துணிவில்லாதவனின் வாணிபமும், பணிவில்லாதவனின் ஊழியமும் பயன்படாது” என்பதை மனதிலிருத்தி துணிவோடும், பணிவோடும் உன் இலட்சியப் பயணத்தில் அடியெடுத்து வை. உன்னை நிச்சயம் உலகம் பார்க்கும். “பயம் சாதிக்காததை நயம் சாதிக்கும்” என்பதை மறந்து விடாதே.
    யானைக்கு தும்பிக்கை போல மனிதனுக்கு “நம்பிக்கை” தான் எல்லா செயலுக்கும் அடிப்படை. “கெடு” நிர்ணயிக்க வேண்டும். இவ்வளவு காலத்திற்குள் இதனை நாம் அடைந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உனக்குள் ஏற்பட்டால் தான் அது உன்னைப்பிடித்து உந்தித்தள்ளும். உன்னுடைய லட்சியத்தை நீ எட்டிப்பிடித்திடுவாய். “லட்சியம்” மட்டும் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கட்டும்.
    மகனே, வாழத்துடிப்பவர்கள்தான் வாழ முடியும். வகையறிந்து வாழ்கிறவர்கள் தான் நீண்ட நாள் வாழ முடியும். “வாழ்வோம்” வாழ்ந்தே தீருவோம் என்று உறுதி எடுத்துக் கொண்டு வாழ்ந்து காட்டு. உலகம் உன்னை வியந்து

    கவலை தாங்கி மரம் – பவளமல்லி

    வலை தாங்கி மரம் என்றொரு பெயருள்ள “Tree of Sorrow”வை ஒரு புத்தகத்திலே பார்க்க நேர்ந்தது. வீட்டிலே தோட்டம் வைத்து பராமரிக்க யாருக்குத்தான் ஆசையிருக்காது? நம்ம வீட்டில் நாலைந்து மரங்களுடன் அக்கா தங்கையாகப் பழகி விட்டால் ஊர் விட்டு ஊர் மாறுதல் செல்கையில் கண்கலங்கிப் போவார்களோ? என்னவோ? என்ற சந்தேகம் எனக்கில்லை.
    கவலை தாங்கி மரத்திற்குத் திரும்புவோமா? காஞ்சிபுரம் வீட்டு வாசலிலே இவள் தான் நிற்கின்றாள். ஒரு அழகான ஊரில் பார்ப்போர் பரவசப்பட்டுப் போகுமளவு ஒரு பேரழகான இளவரசி இருந்தாளாம். அவள் காலை எழும் கதிரவனைக் காதலித்தாளாம்……… கதிரை யாருக்குத் தான் பிடிக்காது. கண்களிரண்டால் காண ஒளி தருபவனே அவனல்லவா?
    காதல், வெப்பம் தகிக்கும் தருணம் ஒன்றில் தடுமாறி தோல்வியில் முடிந்தது. சோகம் இளவரசியைத் தழுவிக் கொண்டது. உள்ளம் கலங்கியவள் உயிரைச் சுமையாக்கிக் கொண்டு, சுமக்க முடியாமல் இறக்கி வைப்பதாக நினைத்து இறந்து போகிறாள்! அவள் அஸ்தி சாம்பல் பட்ட இடங்களிலிருந்த சோகம் கவலை தாங்கி மரங் களாக வளர்வதாக ஐதீகம். அதனால் தான் சூரியன் இல்லாத நேரம் அதாவது இரவாய்ப் பார்த்து மலர்ந்து மணம் வீசும் மலர்களை காலை ஆதவன் ஆதரவாய் எழுந்து அருகே வர எத்தனிக்கின்ற சமயம், அத்தனையும் சமர்ப்பணம் என்று உதிர்த்து விடுகின்றாள். தமிழில் இவள் பெயர் கேட்டால்……… தகவலே மாறிப்போகும் அதன் மனத்தாக்குதலே மாறிவிடும்.……ஆம், அவள் தான் பவளமல்லி என்கின்ற பாரிஜாத மரம். பவளமல்லிமரத்தை நாம் எவ்வளவோ முறைகள் பார்த்திருக்கிறோம்.
    நாம் அவ்வப்போது காலையில் உதிர்ந்திருக்கிற மலர்களை சேகரித்து இறை வழிபாட்டிற்கு பயன்படுத்துவது உண்டு. அழகான மலர்களுக்குப் பின்னால் எல்லாம் அவசியமான ஒரு கண்ணீர்க் கதை இருக்கும் என்கின்ற நம்பிக்கைக்கு வேரில் நீர் ஊற்றியதைப் போல இந்தக் கதை கண்ணில்பட்டது.

    கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு நானே ஏதோ அழகான பூக்களுக்குப் பின்னாடி அழுகையை, ஒளித்து வைத்திருப்பதாக நினைத்து நீங்கள் கோபிக்க வேண்டாம்.…D.V. கோவன் என்னும் அயல்நாட்டுப் பெண்மணி எழுதிய அற்புதமான “இந்தியாவின் பூ மரங்களும் பூக்கும் புதர்களும்” என்கின்ற புத்தகத்தில் தான் (Flowering Trees and Shrubs in India by D.V. Cowen) இந்தச் சுவையான சோக மரத்தின் கதை கிடைத்தது.
    பவளமல்லிக்குப் பின்னாலிருக்கின்ற கதை இவ்வளவு சோகமானதா? என்று யோசித்துப் பார்த்தால் ஆச்சரியத்தில் மரமாக மலைத்துப் போகின்றேன்.
    பவள மல்லிகை என்கின்ற கவலை தாங்கி மரத்தின் அழகான மணம் வீசும் மலர்களின் வாசனையில் நம் மனதை மறக்கலாம் தான். ஆனாலும் அவசர யுகத்தின் கான்கிரீட் காடுகளில் வேரூன்றி நீருற்றவாய்ப்பில்லாத சூழ்நிலையில் ஜேம்ஸ், சலீம் கோவன் போன்றோர்களின் புத்தகங்களுக்குள் கவலைகள் புதைக்கப்பட்டுவிட பக்குவப்பட்டுக் கொண்டால் புத்தகங்கள் கவலை தாங்கி மரங்களாகிவிடும்.
    “கவலை தாங்கி மரங்கள்” என்ற இந்நூலை இரவல் தரக்கூடாது என்றொரு பரவலான கருத்து பரவி வந்துள்ளது. யோசித்துப் பார்த்தால் ஒப்புக்கொள்ள சிரமமாக இருக்கின்றதே.
    என்னிடமுள்ள நூலகமே இரவல் வந்த புத்தகங்களால் ஆனது என்றபொன்மொழி புத்தகத்தை ஓசி கொடுப்பதை தடுக்கப்பிறந்தாலும் ஒருவர் நூலகம் வைக்க நாம் உதவியது பெரும் பாக்கியமல்லவா? கன்னியரை, புத்தகத்தை இரவல் தந்தால் கசங்காமல் வீடு வந்து சேர மாட்டார் என்று கவிஞர் சுரதா எழுதியதைப் படித்ததாக ஞாபகம்.

    நண்பரொருவர் வீடு வந்த பொழுது இரமண மஹரிஷியின் வசனாமிர்தம் புத்தகத்தை ஏற்ற இறக்கத்தோடு படித்துக் காட்டியதில் மகிழ்ந்து நெகிழ்ந்து போய் அதனை புதிதாய் வாங்கத் தலைப்பட்டார். அதையே எடுத்துக் கொள்ளுங்கள் என்றதும் அதிர்ந்து போய் மறுத்தார். நீங்கள் குறிப்பெடுத்த புத்தகங்கள் அல்லவா? என்ற பொழுது தான் தோன்றியது. அச் சமயம் கர்ணன் பட சிவாஜி தொலைக்காட்சியில் வந்தார். தன் கலசத்தை இரத்தம் சிந்த அறுத்துக் கொடுப்பவர்கள், கொடுக்கின்றார்கள் புண்ணியம் கோடி யாவினும் என்று சொன்ன புத்தகத்தைத் தர மாட்டோமோ? தந்து விட்டவுடன் ஒரு பட்டிய லிட்டு அந்த வாரத்திலேயே புத்தம் புதிய புத்தகம் வாங்கி விடுவோம். அடுத்த பதிப்பு வந்திருந்தால் அறிவு “அப்டேட்’ ஆகிவிடுகின்றதே.
    இனிக் கவலை தாங்கி மரங்களை தாராள மாக தடம் மாற்றி நடலாம் தானே.

    சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்

    30. நானும் – நீயும் அணுகுமுறை
    ஆமை முயல் கதையில் முயல் ஏமாற்ற மடைந்ததை எண்ணி மகிழ்ந்த சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எண்ணி மகிழ்ச்சி யடைந்தே ஆக வேண்டும். இன்று சமுதாயத் தில் ஏற்பட்டுள்ள மனோபாவ மாற்றத்தால், சமுதாயம் முயல் ஆமை கதையில் முயலும் ஆமையும் ஒன்றோடு ஒன்று அணி சேர்ந்து ஒரு அணுகுமுறை முடிவை எடுப்பதாகவும் கற்பனை செய்ய எத்தனித் திருக்கின்றது. அந்த அணுகுமுறை முடிவின் படி முதலில் முயல் தரைப் பகுதியில் ஆமையை தன் முதுகில் சுமந்து கொண்டு வேகமாக போட்டிக்கான தூரத்தின் இடையில் காணப்படும் ஆற்றின் கரை வரை சென்று சேர்க்கின்றது. தன் முதுகில் ஏற்றி ஆற்றில் தன்னால் இயன்ற அளவு வேகமாக நீந்தி மறுகரையை அடைகின்றது. இப்போது மீண்டும் முயல் ஆமையை முதுகில் ஏற்றி ஓடி பந்தயத்தின் வெற்றிக்கோட்டை மிக அதிகமான குறைந்த அளவு நேரத்தில் தாண்டி விடுகின்றது இந்த இருபத்தோராம் நூற்றாண்டு கற்பனைக் கதையில் முயலும் ஆமையும் ஒற்றுமையாக தங்கள் திறமையை ஒன்றோடு ஒன்று பகிர்ந்து செயல்பட்டு இருவரும் அதிக அளவு வெற்றியை ஈட்டியது. அவை தரும் படிப்பினை களைப் பாருங்களேன்.
    அ) முயலின் அளவு கடந்த நம்பிக்கை என்ற எதிர்மறை குணத்தையே கதையிலிருந்து தூக்கியெறிந்து விட்டார்கள்.
    ஆ) முயலின் அபார நம்பிக்கையினால் முயல் துவங்குவது என்ற அடுத்தவரின் குறை பாட்டினைப் பயன்படுத்தி நாம் வெற்றி பெறுவதனை விட நம் பலத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற நேர்மறை கருத்து பலமடைகின்றது.
    இ) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற அற்புதக்கருத்து எடுத்துச் சொல்லப் பட்டிருக்கின்றது.
    ஈ) மேலும் ஒவ்வொருவரும் அவரவர் திறமைகளை அடுத்தவர் திறமைகளோடு இணைத்துச் செயல்பட்டால் செயல் படும் ஒவ்வொருவரின் வெற்றியும் பல மடங்காக அதிகரிக்கும் என்ற கருத்து விதைக்கப்பட்டிருக்கின்றது.
    ஊ) அனைத்திற்கும் மேலாக இக்கதை நம் வெற்றி பல மடங்காக வேண்டுமானால், அடுத்தவர் வெற்றிக்காகவும் பாடு பட வேண்டும் என்ற மிகப் பெரிய தத்துவத் தினை உணர்த்துகின்றது. ஆக நானும் வெற்றி பெறவேண்டும் நீயும் வெற்றி பெறவேண்டும் என்ற உயரிய கருத்தினை, கருத்தின் முக்கியத்துவத்தினை அவசியத்தினை மேற்கண்ட மனித மனோ பாவ மாற்றத்தால் திருத்தியமைக்கப்பட்ட கதை நமக்கு உணர்த்துகிறது.
    அன்பு நண்பர்களே! இந்தக் கதை உணர்த்துவது போல நம் வாழ்வில் அனைத்து சந்தர்ப்பங்களையும் வெற்றி வெற்றி – நானும் வெற்றி பெறவேண்டும் நீயும் வெற்றி பெற வேண்டும் (win win Approach) அணுகுமுறையை பின்பற்றி முடிவுகளை எடுத்துச் செயல் படுவோமானால், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம். சந்தோஷம் மிகுந்த பிரச்சனை கள் அற்ற சாதனை வாழ்வு என்றென்றும் நம்மை சார்ந்ததாக மாறும்.
    31. அடுத்தவர் என்ன நினைத்தால் என்ன !
    ஒரு ஆற்றுப்படுத்துதல் அமர்வில் கிடைத்த அனுபவம் எனக்கு மிகுந்த சந்தோக்ஷத்தை வழங்கியது. அதன் செய்தி தேவைப்படுவோருக்கு அருமருந்தாக அமை யட்டும் என்பதற்காக இங்கே அந்த அனுபவத் தினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
    ஒரு நிறுவன பயிற்ச்சிக்குப் பின் நண்பர் ஒருவர் ஒரு பிரச்சனை இருக்கிறது சார் பேசலாமா? எனக் கேட்டார்.; மேலாளர் அனுமதியுடன் அவரோடு நடத்திய ஆற்றுப் படுத்துதல் அமர்வின் போது நடந்த உரையாடலின் முடிவில் கிடைத்த அனுபவ செய்தி இதோ பக்கத்து வீட்டார் என்ன நினைப்பார் ! அவர் என்ன நினைப்பார்! நண்பர் என்ன நினைப்பார்! உறவினர் என்ன நினைப் பார்! என ஊரார் உறவினர் அனைவரும் என்ன நினைப்பார்களோ? என்ற தவறான நினைப்பால் அவர் வீண் செலவுகளை செய்திருக்கின்றார், மனைவி குழந்தைகள் பெற்றோரிடம் சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டிருக்கிறார், ஓவ்வொரு வரையும் திருப்திபடுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்.
    இறுதியில் கடன்கள், பிரச்சனைகளின் பிடியில் தவிப்பதுடன் தற்கொலை முயற்ச்சி யிலும் ஈடுபட துணிந்திருக்கின்றார்.
    என்னுடைய ஆற்றுப்படுத்துதல் அமர்வின் காரணமாக அந்த நண்பர் தற்கொலை எண்ணங்களை விட்டு விட்டு பிரச்சனைகளை வாய்ப்புகளாக பயன்படுத்தி தோல்விகளை அனுபவ பாடங்களாக மாற்றி சந்தோஷ சாதனை வாழ்வு வாழ துவங்கி யிருக்கின்றார். ஆகவே – தான் அந்த ஆற்றுப் படுத்துதல் அமர்வு எனக்கு ஒரு மகிழ்வான நிகழ்வாக மாறியது என்று கூறினேன். ஆகவே அன்பு நண்பர்களே உங்கள் தனிப்பட்ட மற்றும்; குடும்ப முடிவுகளை எடுக்கும்போது அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ? சுற்றத்தார் எதிர்பார்ப்புகள் என்னவோ உடன் பணிபுரிவோர் ஏதேனும் எண்ணுவார்களோ? என எண்ணி நிம்மதியை இழந்து உங்களுக்கு உங்கள் குடும்ப சூழலுக்கு ஏற்பில்லாத முடிவுகளை எடுத்து உடல் ரீதியிலான மன ரீதியிலான பொருளாதார ரீதியிலான அவதிகளுக்கு உள்ளாவதை தவிர்ப்பீர்.
    ஏனென்றால் “காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” அவர்களுக்கு அவர்கள் பிரச்சனை அல்லது வாழ்க்கைதான் பெரிது. உங்கள் பிரச்சனைகள் உங்கள் முடிவுகள் அவர்களுக்கு சிறிய விஷயமே.
    தீபாவளியன்று ஒரு வீட்டார் ஒன்று சேர்ந்து பட்டாசு கொளுத்துகின்றனர். தாத்தா டேய் பெரிய வெடிகளை கொளுத்தாதீர்கள். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தொந்தர வாகும். அவங்க தப்பா நினைக்கப் போகின் றனர் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே பக்கத்து வீட்டில் அதிபயங்கர வெடிச்சத்தம் இடி இடி என கேட்டது. அத்தோடு இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தாலும், அடுத்தவர் களுக்காக வாழும் தாத்தவாக இருந்தால் அந்த தாத்தவிற்கு அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என சிந்திக்க வைக்கும் பல புதிய பிரச்சனைகள் மற்றும் வாய்ப்புகள் மீண்டும் மீண்டும் கூடி வரும்.
    “வீட்டுக்கு வீடு வாசப்படி”
    ஓவ்வொருவருக்கும் அவர் அவர் எதிர்கொள்ளும் அளவுக்கு பிரச்சினைகள் காணப்படும்.
    ஆகவே பலரும்
    ஐய்யயோ. என் சிற்றுந்தை (car)ஐ பார்த்து அடுத்தவர், பக்கத்து வீட்டுகாரர் என்ன நினைப்பாரோ? என் முக அழகை பார்த்து உடன் பணிபுரிவோர் என்ன நினைப்பாரோ? என் உடையை பார்த்து அவர்கள் என்ன நினைப்பாரோ? நான் நடப்பதை பார்த்து அவர்கள் என்ன நினைப்பாரோ? என அடுத்தவர் என்ன நினைப்பாரோ? என்று எண்ணி தங்கள் நேரம் மற்றும் செல்வத்தின் பெரும் பகுதியை அடுத்தவரை திருப்தி படுத்துவதற்காகவே வீணடித்து வருகின்றார்கள்.
    இப்படி வீணடிக்கும் நேரம் மற்றும் செல்வத்தை உங்கள் வாழ்வின் முன்னேற்றதுக் காக செலவு செய்ய துவங்குங்கள்.
    குறுகிய காலத்தில் உங்கள் ஆளுமை, செல்வம், மனநலம், உடல்நலம், அந்தஸ்து என அனைத்தும் சிறப்படைவது உறுதி. அத்தகைய சிறப்பு உங்களுக்கு உங்கள் குடும்பத்தார், சுற்றத்தார், ஊரார், சமூகம், அது என்ன இந்த உலகம் மொத்தத்தினுடைய பாரட்டுகளைப் பெற்று தரும்.
    32. உங்களோடு போட்டி போடுங்கள்
    உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள சாதனை யாளர்கள் (அவர்கள் எந்தத் துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும்) அனை வரிடமும் இருந்த பொதுவான ஒரு குணநலன் அவர்கள் அவர்களோடு போட்டி பொட்டு முன்னேறி சாதனை சிகரத்தை அடைந்தது தான். அதாவது நான் என்னுடைய நேற்றைய சாதனையை முறியடித்து இன்று ஒரு புதிய சாதனையை நிகழத்த வேண்டும்.
    இதை விட்டு விட்டு நாம் நம் நண்பர் சக தொழில் நிறுவனங்கள் சக பணியாளர்கள் உடன் பயில்வோர் அண்டை வீட்டார் உறவினர் என ஒவ்வொருவருடைய வளர்ச்சி அல்லது முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமைப் பட்டோ, படாமலோ அவர்களை விட நான் வளர வேண்டுமென போட்டி போடுவது பல் வேறு துன்பங்கள் மற்றும் பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்து விட வாய்ப்பு அதிகம்.
    இந்த உலகில் இறைவனால் படைக்கப் பட்டுள்ள ஒவ்வொரு மனிதனும் அவர் அவருக்கென்று ஒரு தனித்தன்மையோடு உருவாக்கப்பட்டுள்ளான்(ள்) .
    ஆகவே நம் தனிதன்மையை பயன் படுத்தி நம் தனித்தன்மைக்கு ஏற்ற துறையில் நம் தனித்தன்மைக்கு ஏற்ப செயல்பட்டு வாழ் வில் வெற்றி பெறுவதுதான் புத்திசாலித்தனம்.
    எனக்குத் தெரிந்த அன்பர் ஒருவர் ஊரில் யார் புதிதாக சொத்து வாங்கினாலும் அவரை ஒரு போட்டியாளராக கருதி தானும் சொத்துக்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தார்.
    இன்று அவர் உடல்நலம் பாதிப்பு அடைந்து விட்டது மனநலம் பாதிப்படைந்து விட்டது. குடும்ப குழப்பங்கள் உச்சமடைந்து விட்டது. குடும்பத்தினருக்கு அவர் கடன்கள் வேண்டாம் அவர் வேண்டாம் ஆனால் அவர் சம்பாதித்த சொத்துக்கள் மட்டும் வேண்டும்.
    போட்டி போடுங்கள் அந்தப் போட்டி நலனான போட்டியாக இருக்கவேண்டும் அதுவும் உங்களுடைய நேற்றைய முன்னேற்றத்தை இன்று முறியடித்து முன்னேற வேண்டும் என்ற போட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
    சந்தோஷம் நிச்சயம்.
    சாதனைகள் சாத்தியம்.
    33. கருத்தேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்
    உளவியலில் கருத்தேற்றம் என்பது அடுத்தவர் மீண்டும் மீண்டும் நம் மனதிற்கு தரும் செய்திகள் மூலம், நம் மனோபாவத்தில், குறிக்கோளில்; குண நலனில், சுயகௌரவத் தில்; தன்னம்பிக்கையில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கின்றது.
    கருத்தேற்றத்தை பொறுத்த அளவில் இருவித அணுகுமுறைகளைப் பின்பற்றுவது உங்களுக்கு சந்தோஷத்தையும் சாதனை களையும் நல்கும் என்பது அனுபவ பாடம்.
    ஒன்று:யாரேனும் உங்களுக்கு, அதாவது உங்கள் மனதிற்கு குறிப்பாக ஆழ்மனதிற்கு ஏதேனும் எதிர்மறை கருத்தேற்றங்களை நல்குவார்களானால் தயவு செய்து அந்த கருத்தேற்றங்களை அதன் செய்திகளை தவிர்த்துவிடுங்கள் அல்லது சல்லடை செய்து விடுங்கள் அல்லது சென்சார் (தணிக்கை) செய்து விடுங்கள்.
    எடுத்துக்காட்டாக, நண்பர் ஒருவர் என்ன இன்று கொஞ்சம் சோர்வாக (Dul) ஆக இருக்கறீர்களே என்று கூறினால், ஏதாவது உறுதியான வழிமுறையால் அந்தச் செய்தியை உங்கள் மனது ஏற்காமல் (அல்லது) அங்கீகரிக் காமல் செய்து விடுங்கள். உடனடியாக, இல்லை இல்லை நான் மிகவும் நன்றாக இருக்கிறேன் என்று அவருக்கு ஒரு பதிலடியை கொடுத்து விடுங்கள்.
    இதே போன்று மாணவர்களிடம் பொற்றோரோ ஆசிரியரோ (அறியாமையால்) நீ வர வர மாமியார் வீட்டு கழுதையாகிறாய் அல்லது கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது என்றோ அல்லது வர வர உன் படிப்பு சரியில்லை என்றோ சொன்னால்; உடனடியாக உங்கள் ஆழ் மனமும் நீங்களும் அவர்களிடம் சேர்த்து “இல்லை இல்லை நான் மேலும் சிறப்படைந்து வருகிறேன்” என்று உறுதியாக உணர்த்தி விடுங்கள்.
    ஏனென்றால் இவர்கள் சில முறை தொடர்ந்து இப்படியே கூற நம் ஆழ் மனது கேட்டு வந்தால் அதை ஆழ் மனது நம்ப துவங்கிவிடும்; அதன் பின் உண்மையிலேயே கல்வியில், தொழிலில், வாழ்வில், சமூகத்தில் தோல்வியடையத் துவங்கிவிடுவீர்கள்; அதன் பின் உங்களை காப்பாற்றி வளர்ச்சிப் பாதையை நோக்கி திருப்பிவிடுவது சற்று கடினமான செயல் ஆகிவிடும்.
    ஆகவே எதிர்மறை கருத்தேற்றங்களை அவ்வப்போது அடித்து நொறுக்கி தோல்வி யடையச் செய்துவிடுங்கள்.
    இரண்டு
    நண்பர்களே! உங்கள் வெற்றி என்பது உங்களை சுற்றிலும் வாழ்ந்தும், செயல் புரிந்தும்; வருபவருடைய வெற்றியையும் சார்ந்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆகவே, தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தோல்வியடையும் விதமாக அவர்களுக்கு எத்தகைய எதிர்மறை கருத்தேற்றங்களையும் வழங்கிவிடாதீர்கள்
    உங்கள் பேச்சு, செயல் மற்றும் நடவடிக்கைகள் மூலமாக எந்தவொரு நண்பர், உறவினர், சுற்றத்தாரையும் எதிர்மறையாக கருத்தேற்றம் (கருத்து கூறுதல் அறிவுரை கூறுதல் மற்றும் குறை கூறுதல்) செய்திருப் பீர்களானால் உங்கள் எதிர்மறை கருத் தேற்றத்தை அவர்கள் ஆழ்மனது ஏற்று செயல்புரிய வாய்ப்புகள் அதிகம். அப்படி அவர்கள் பின்நோக்கி செயல் புரிந்தால் தோல்வியைத் தழுவ வாய்ப்பு உள்ளது.
    நம்முடன் செயலாற்றுவோர் தோல்வி யடைந்து நாம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.
    ஆக எதிர்மறை கருத்தேற்றம் வழங்கு வதையும் ஏற்பதையும் தவிர்த்துவிடுங்கள். வாழ்வில் வசந்தம் வீசுவது நிச்சயம்.
    34. நம்பிக்கையை விதையுங்கள்
    எந்தவொரு மனிதனும் வாழ்வில் சாதனையை நிகழ்த்த வேண்டுமானால் சந்தோஷம் நிலவ வேண்டுமானால் அவரை சார்ந்த பலருடைய (சிலராவது) ஆதரவு மற்றும் உதவிகள் அவரை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.
    ஆனால் வாழ்க்கைத் துணைவர் குழந்தைகள், வீட்டு உரிமையாளர், பால்காரர், மளிகைக்கடைக்காரர், தொழில் கூட்டாளி என அனைவருடைய அன்பும் அரவணைப்பும் அவர்களிடம் நாம் நம்மை பற்றி உருவாக்கிய நம்பிக்கையின் அடிப்படையில் தான் நமக்கு தொடர்ந்து கிடைத்து வரும்
    வாழ்க்கைத் துணைவர் அல்லது தொழில் கூட்டாளிக்கு நம்பிக்கை துரோகம் செய்தாலோ, குழந்தைக்கு வழங்கிய உறுதி மொழியை பெற்றோர் மீறினாலோ கடன் காரர்களுக்குத் தொடர்ந்து தவணை பணத்தைக் கட்டத் தவறினாலோ, அவர்கள் நம்மிடம் வைக்கும் நம்பிக்கை குறைய துவங்கி விடும். அப்படி நம்மைப் பற்றிய நம்பிக்கையை அவர்கள் இழக்க நேரிட்டால், அவர்களிடம் தொடர்ந்து எப்படி உதவிகளை எதிர் பார்க்கலாம் அல்லது அவர்கள் எப்படி தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டுவார்கள்.
    ஆகவே, சந்தோஷத்துடன் சாதனையை நோக்கி பயணம் மேற்கொண்டு வரும் அன்பு தன்னம்பிக்கையாளர்களே தொடர்ந்து ஒத்துக்கொண்ட ஒப்பந்தங்களையும் அளித்த வாக்குறுதிகளையும் மீறாமல் நிறைவேற்றி வாருங்கள். உங்கள் மீது உங்களை சூழ்ந்த அனைவருக்கும் அபரிதமான நம்பிக்கை ஏற்படும். அந்த நம்பிக்கை உங்களை சாதனை யின் உச்சிக்கே அழைத்துச் சென்றுவிடும் வாழ்த்துக்கள்!

    (சந்தோஷ சாதனை பயணம் தொடரும்…….)

    என்றும்…

    காலம் யாருக்காகவும் நிற்பது இல்லை, வேகமாக சூழல்வது இல்லை, சிலரது வாழ்க்கையில் காலம் நல்ல ஆசிரியராக விளங்குகிறது. சில மனிதர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த செயல்களால் கடந்தகாலம், நிகழ்காலம், இறந்தகாலம் என்ற மூன்று காலங்களையும் கடந்து நிற்கின்றனர். முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு உடல் நலம் கருதி, மருத்துவர்கள் தினம் இரவில் 6 மணிநேரம் தூக்கம் அவசியம் என்று வலியுறுத்தினர். அவர் தூங்கும் நேரத்தை குறைத்துக்கொண்டு புத்தகங்கள் படிப்பார். இதை பற்றி தன் நண்பர்களிடம் கூறும் பொழுது, என் மருத்தவர்களுக்கு தெரியாமல் நேரத்தை திருடுகிறேன் என்று கூறுவார்.
    அப்போதைய இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் கடினமான பணிகளையும் அவர் வகித்த பதவி பொறுப்புகளின் சுமைகளையும் தாண்டி, புத்தகம் படிக்கும் பழக்கத்தை அவர் தொடந்தார். அவர் எழுதிய Glimpsis of World History, Discovery of India, இந்த இரண்டு புத்தகங்களும் இன்றும் பல வெளிநாடுகளில் விற்பனையாகின்றன. அந்த புத்தகங்களைப் படித்த ஆங்கிலேயர்கள் பலர் நேருவின் ஆங்கில மொழிப் புலமையைப் பெரிதும் வியந்து பாராட்டியுள்ளனர். புத்தகங்களை ஆழ்ந்து படிக்கும் ஒருவர், சிறந்த எழுத்தாளர் ஆக முடியும் என்றும் தன் எழுத்துக்களின் வழியாக நிலைத்து நிற்க முடியும். இதுவே நேரு அவர்களின் வாழ்க்கையில் நாம் கற்கும் பாடம்.
    தத்துவங்களை எளிய முறையில் பாமரனுக்கும் எடுத்து சொன்ன பெருமை கவிஞர் கண்ணதாசனுக்கு உண்டு. பள்ளிப் படிப்பை அவர் தொடரவில்லை என்றாலும், புத்தகப்படிப்பு அவரை வாழ்க்கையில் உச்சத்தில் உயர்த்தியது. கம்பராமாயணத்திற்கு தமிழில் உரை எழுதிய, அத்தனை உரை ஆசிரியர்களின் உரையை கண்ணதாசன் மனப்பாடமாகக் கூறுவார். மேலும் கம்பராமாயணத்தில் இடம்பெற்று இருக்கும் கவிதைகளை அதன் வரிசை எண் கூறினால் அந்த கவிதையை ஏற்ற இறக்க சந்தங்களுடன் துல்லியமாக பாடும் திறனைப் பெற்றிருந்தார். உருது மொழிக்கவிஞர் ஒருவர், கவிஞர் கண்ணதாசனை பற்றி கூறும்பொழுது கண்ணதாசன் படித்தது, நூல்களை அல்ல! நூலகங்களை என்று கூறினார்.! பிரபல மனநல மருத்துவர் மற்றும், மனோத்தத்துவ நிபுணர், “டாக்டர். ருத்ரன், அவர்கள் எழுதியுள்ள புத்தகத்தின் முகவுரையில், தமிழில் எழுதும் நேர்த்தியை எனக்கு கற்றுத்தந்த மகாகவி கண்ணதாசனுக்கு காணிக்கை என்று கூறியுள்ளார்”. மனநலம் பற்றி அவர் எழுதியுள்ள புத்தகத்தில் பல அறிய கருத்துக்களை கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் மூலமாகவே மேற்கோள் காட்டுகிறார். கண்ணதாசன் பாடல்களின் முதல் வரிகளையே தன் புத்தகத்திற்கு தலைப்பாக தேர்ந்தெடுத்திருக்கிறார் டாக்டர். ருத்ரன். (மனம் என்னும் மேடை, உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால், வாழ நினைத்தால் வாழலாம்). இது மனநல மருத்துவரின் மனதில் கண்ணதாசன் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம். புத்தகம் படிக்கும் பழக்கத்தை மற்றவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்கள் படிக்க நினைக்கும் புத்தகங்கள் அந்த புத்தகம் கிடைக்கும் இடம், அது பற்றிய தகவல்களைக் கவிஞர் கண்ணதாசன் கடிதம் மூலம் தெரிவிப்பார். சிலருக்கு புத்தகங்களை இலவசமாக அனுப்பி வைப்பார். “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” கவியரசர் அவர்களின் என்றும் வாழும் இந்த வரிகள் அவருடைய புத்தக அறிவு வாழ்க்கை அனுபவ அறிவின் வெளிப்பாடே என்றால் அதுமிகையல்ல!.
    மத்திய பிரதேச மாநிலம் குச்சுவாடாவில் சந்திரமோகனாக பிறந்து, தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடரும் முன்பே, பல துறைசார்ந்த ஆயிரம் புத்தகங்களைக் கற்றுத்தேர்ந்தார் ஒருவர்.
    அவர் தான் பின்னாளில் தத்துவ ஞானி ஓஷோவாக திகழ்ந்தார். உலகின் பெரிய நூலகங்கள் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ளது. கல்வி, மருத்துவம், இலக்கியம் என எல்லா துறை சார்ந்த புத்தகங்கள் அங்கு உள்ளன. அந்த நூலகங்களில் உள்ள புத்தகங்களை வரிசையாக அடுக்கினால், இந்த உலகத்தையே ஒரு சுற்று வலம் வரலாம். அத்தனை புத்தகங்களில் உள்ள விஷயங்களையும், மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்கொண்டது ஒரு மனித மனம் என்று நம் மனத்தின் ஆற்றல் பற்றி ஓஷோ கூறிய தகவல் இது. நம் நாட்டை சேர்ந்த ஒருவர் தன் அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்ட தன் மூலம் அமெரிக்கா நாட்டில், பெரிய சமுதாய புரட்சியே ஏற்பட்டது!! நிற வேறுபாட்டை காரணம் காட்டி அன்றைய அமெரிக்கா அரசு, கருப்பர் இன மக்களுக்கு சமஉரிமை வழங்காமல், அவர்களை அடிமையாக நடத்தி வந்தது. அமெரிக்கா அரசு பேருந்துகளில் கருப்பர் இனத்தை சேர்ந்த மக்கள் பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்தாலும், அந்த பேருந்துகளில் அவர் களுக்கு உட்கார அனுமதியில்லை. பேருந்துகள் காலியாக இருந்தாலும், அவர்கள் நின்று கொண்டுதான் பயணம் செய்ய வேண்டும். அந்த அளவிற்கு அவர்களின் உரிமை பறிக்கப்பட்டது அன்றைய அமெரிக்க அரசாங்கத்தால்.
    கருப்பர் இன மக்கள், விடுதலைக்காக போராடிய “மார்ட்டின் லூர்தர் கிங்” இந்த பிரச் சனையை மையமாக வைத்து, தன் இன மக்களை ஒன்று கூட்டி, அந்நாட்டு அரசு நடத்தும் பேருந்துகளில் செல்வதை நம் இன மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று போராட்டம் அறிவித்தார். கருப்பர் இன மக்களின் போராட்டம் மாதக்கணக்கில் தொடர்ந்தது. அதனால் அமெரிக்க அரசு போக்குவரத்து துறைக்கு பெரிதும் நஷ்டம் ஏற்பட்டது. போராட்டைத் தூண்டிய குற்றத்திற்காக “மார்ட்டின் லூர்தர் கிங்” மற்றும் பலரை கைது செய்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது அமெரிக்க அரசு, வழக்கின் முடிவில் “மார்ட்டின் லூர்தர் கிங்” விடுதலை செய்யப்பட்டார்.
    அவர் நடத்திய போராட்டத்தின் விளைவாக பேருந்துகளில் மட்டும் அல்லாது, நிலையான சமஉரிமையை கருப்பர் இன மக்களுக்கு வழங்கவேண்டும் என்று அமெரிக்க நீதி மன்றம் தீர்ப்பு கூறியது. இப்படி ஒரு நூதனப் போராட்டம் நடத்தினால் வெற்றி கிடைக்கும் என்ற சிந்தனை உங்களுக்கு எப்படி வந்தது? என்று மார்ட்டின் லூர்தர் கிங் அவர்களிடம் கேள்வி கேட்டபொழுது, அவர் கூறிய பதில், மகாத்மா காந்தி அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கம் என்ற போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார். அந்த அனுபவத்தை புத்தகமாக எழுதியுள்ளார், அந்த புத்தகமே எனது சிந்தனையின் திறவுகோல். அந்த புத்தகத்தின் அடிப்படையில் நானும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வெற்றி கண்டேன் என்று கூறினார். “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” ‡ இந்த குறளில் உள்ள கருத்தை ஏற்று செயல்படுத்திய “மார்ட்டின் லூர்தர் கிங்” செய்தது ஒரு பெரிய சமுதாய புரட்சி. அமெரிக்க அரசுப் பேருந்துகளில் அமர்வதற்கு, அந்நாட்டு அரசால் தடைவிதிக்கப்பட்ட இனம், இன்று அதே இனத்தை சேர்ந்த “ஒபாமா” அந் நாட்டின் உயர்ந்த பதவியான அமெரிக்க ஜனாதிபதி நாற்காலியில், சரித்திரத்தில் என்றும் இந்த நிகழ்வு பதிவு செய்யப்படும். அதிசயம் ஆனால் உண்மை! இந்த அதிசயத்தின் அடித்தளம் ஒரு புத்தகம். நம் நாட்டில் பிறந்து வாழ்ந்து தான் எழுதிய புத்தகத்தின் மூலமாகவும், அந்த புத்தகத்தில் படித்ததை செயல்படுத்தி மாபெரும் வெற்றி கண்ட, “மார்ட்டின் லூர்தர் கிங்”, மகாத்மா காந்தியடிகள் இவர்கள் இருவரும் நிஜ நாயகர்கள் (பட்ங்ஹ் ஹழ்ங் தங்ஹப் ஏங்ழ்ர்ள்).
    கற்றல்
    கற்றல் ஓர் இனிமையான அனுபவம், “கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ” கூறினார். உன் வாழ்வில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும், உனக்கு குரு என்று, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய நல்ல குணங்கள் எவை?
    விலக்கப்பட வேண்டிய கெட்ட குணங்கள் எவை? மனிதர்களிடமிருந்து இப்படியும் பாடம் கற்றுக் கொள்ளலாம். நல்ல கருத்துக்கள் அடங்கிய சொற்பொழிவுகள் கேட்பதால் அந்த கருத்துக்கள் நம் ஆழ் மனத்தில் பதிவாகி காலப்போக்கில், நம் வாழ்க்கையில் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தும், உதாரணமாக காந்தியடிகளின் சிறு வயதில் அவர் தாய் கூறிய ஹரிசந்திரனின் கதையை கவனமாகக் கேட்டதால் தன் வாழ்நாளில் சத்தியம் தவறாமல் வாழ்ந்தார். ஒரு நல்ல எண்ணம், நல்ல பழக்கம் நமக்குள் வளரும் பொழுது, மற்றொரு நல்ல எண்ணம், நல்ல குணம் இலவச இணைப்பாக நமக்குள் வளர்வதை நம் அனுபவத்தில் காணலாம், மனத்தை செம்மைப்படுத்தும், புத்தகம் படிக்கும் நல்ல பழக்கம், நமக்குள் வளர, வளர நேரவிரையம் என்ற கெட்டப்பழக்கம் நம்மிடம் இருந்து மெல்ல மெல்ல மறைகிறது. “கற்றல் என்றும் ஓர் இனிமையான அனுபவமே”.

    வாழ்க்கை ஒரு வசந்தக் காடு

    வாழ்க்கை என்பது வனாந்தர பூமியல்ல. அது, வண்ணக்கோலங்களைத் தன்னில் தேக்கிக்கொண்டு நம்மை வாவென்று அழைக்கிற ஒரு வசந்தக்காடு. அதனோடு வழக்கொன்றும் வைத்துக் கொள்ளாமல், சொந்தம் கொண்டாடப் பழகிக் கொண்டால் சோக மேகங்கள் சுத்தமாக விலகி, கதிரவன் என்னும் ஒளிச் சுடர் வீசி வாழ்க்கைப் பிரகாசிக்கும்.
    சோதனைகளும், வேதனைகளும் யாரோடு சொந்தம் வைத்துக் கொள்கின்றன தெரியுமா? வாழ்க்கை தன்னைத் தயார் செய்து கொள்ளாமல், வாழ்நாளைத் தொலைத்து விடுகிறவனோடு மட்டுமே.
    நெஞ்சிலே துணிவில்லாதவனுக்கு, தோல்விகள் எல்லாம் தடைக்கற்கள். துணிவுள்ள வனுக்கோ தடைக்கற்கள் கூட அவனைத் தூக்கி நிறுத்துகிற படிக்கற்கள் தான்.
    தோல்வியும் – சோகமும் நம்மோடு நிரந்தர வாசம் புரிய வந்து போகிற சாதாரணச் சங்கதிகளே. இவற்றைஎண்ணியெண்ணி வெந்து போவது என்பது தான் வேண்டாத வீண் வேலை.
    கலங்கித் தண்ணீர் வடிப்பதனால் காரியம் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. எனவே, அந்தக் கையறு நிலையை நாம் கைகழுவி விடுவது தான் புத்திசாலித்தனம்.
    சோம்பலால் சூம்பிப் போயிருக்கும் மனதில், சுகங்கள் கூடச் சோகங்கள் தான். இனிப்பு களெல்லாம் கூட எட்டிக் காய்கள் தான். உற்சாகம் அங்கே ஊற்றெடுத்து விட்டால் பிறகு, சோகங்கள் எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?
    ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு காலக்கெடு உண்டு. இந்தக் காலக்கெடுவுக்குள், வாழ்வு இலக்கியத்தில் காவியமாகப் பதிகிறவன், இறப்புக்குப் பின்னும் வாழ்கிறான். வெற்றுத்தாளாய் வீணாகிப் போகிறவனோ, வாழும்போதே இறந்தவனாகிறான்.
    மாவீரன் அலெக்சாண்டரின் வரலாற்றைப் பிரமிக்கத் தக்க வகையில் எழுதிய புளூடாக்,
    “ஒரு சரித்திர மனிதன் தனி வாழ்வில் சின்னஞ்சிறு செயல்களை எவ்வாறு செய்தான். சிறிய – பெரிய துயரங்கள் எதிர்படும் அவற்றை எவ்வாறு சமாளித்தான் என்று உற்று கவனிப்பது சுவைமிகுந்த தொரு செயல்’ என்று உரைக்கிறார்.
    “என்னுடைய வயதை நான் ஆண்டுகளைக் கொண்டு அளவிட விரும்பவில்லை. நான் செய்து முடித்த செயல்களைக் கொண்டே என் ஆயுளைக் கணக்கிடுகிறேன்’ என்று தாமஸ் ஆல்வா எடிசன் சொல்வது உழைப்பின் பெருமையை எடுத்துக் காட்டுகிறது.
    ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் மெல்லிய கொம்பாகக் காற்றில் ஆடிக் கொண் டிருந்த ஒரு சிறிய ஆலங்கன்று, எல்லோருடைய கண்பார்வையிலே வளர்ந்து யானை கட்டும் தூணாவற்குரிய நிலையிலே இருக்கிறது. அதுபோல் ஒருவன் பலவித அல்லல்களுக்கிடையே முயன்று வந்தால் முன்னேறலாம் என்று பழம்பாடல் ஒன்று கூறுகிறது.
    “சந்தேகம், கவலை, மனச்சோர்வு, பயம் இந்தப் பிசாசுகளெல்லாம் மனிதனை அடிக்கும் பொருட்டுப் பதுங்கி நிற்கின்றன. அவன் சோம்பலுக்கு இடம் கொடுக்கும்போது இவை அவனை வந்து தாக்குகின்றன. முயற்சியோடு உழைப்பதே இந்தப் பிசாசுகள் அடிக்காமல் தன்னைக் காத்துக் கொள்வதற்கு நிச்சயமான வழி. தொழிலைக் கைக்கொண்டால், பிறகு எந்தப் பிசாசும் பக்கத்தில் நெருங்காது. மிஞ்சி வந்தால் தூரத்திலிருந்து உறுமும், அவ்வளவுதான்’ என்று கார்லைல் சொன்னார்.ஜேம்ஸ் தர்பார் என்றஅமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் “நியூயார்க்கர்’ என்ற பத்திரிக்கைக்கு இருபது முறை எழுதினார். இருபது தடவையும் அவரது எழுத்தோவியங்கள் திரும்பியே வந்தன. அவர் முயற்சியில் மனம் சிறிதும் தளரவில்லை. இருபத்
    தோராவது தடவை வெற்றிக்கண்டு பின் அதே இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.மாவீரன் நெப்போலியன் ஓர் அதிகாரிக்கு ஒரு வேலையைச் சொல்லி இருந்தார். அந்த அதிகாரி மாலையில் நெப்போலியனிடம் வந்து, “பகல் முழுவதும் வேலை செய்தேன். வேலை முடியவில்லை’ என்றார்.
    இரவு எங்கே போனது? என்று கேட்டார் நெப்போலியன். தோல்விகள் அடுக்கடுக்காக வந்தாலும் கலங்காமல் மேன்மேலும் உழைக்க வேண்டும்.
    “எழுவதற்கே வீழ்ச்சி, வெல்வதற்கே தோல்வி, விழிப்பதற்கே தூக்கம்’ என்கிறார் ராபர்ட் பிரவுனிங்.மனிதன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் அதற்கு முதற்படி முயற்சியே அவசியம்.
    ராஜாளி எவ்வளவு பலமுடைய பறவையாக இருப்பினும் அதன் கூட்டைவிட்டு வெளியே பறந்து செல்லவில்லையாயின், அதற்கு எவ்விதம் இரை கிடைக்கும்?
    அதுபோல் ஒருவன் பயமின்றி கடல் ஆழத்திற்குச் சென்று முத்துக் குளித்துவரவில்லை என்றால் உலகில் முத்து ஏது?
    “ஒவ்வொரு பறவைக்கும் இறைவன் உணவை அளிக்கின்றார். ஆனால் அந்த உணவை அப்பறவையின் கூட்டிற்குள் கொண்டுபோய் வைப்பதில்லை’ என்றார் ஹாலண்ட் என்றஅறிஞர்.தோல்வியைத் தூர விலக்கித் தள்ளிவிட்டு துணிச்சலாக வாழ்க்கையில் முன்னேறியவர்களில் தற்கால கப்பல் போக்குவரத்தின் தந்தை என்று புகழப்படும் ராபர்ட் புல்லட்டன் என்பாருக்கு மிகவும் உயர்ந்த இடம் உண்டு.சாதனையில் சரித்திரம் படைப்பதற்கு, வயது, நோய், எதுவும் தடை கிடையாது.கண்களை இழந்தவர்களும், கால்களை இழந்தவர்களும், நோயால் உழன்றவர்களும், இலக்கிய வானில்
    இணையற்ற மீன்களாக இலங்கினார்கள். இலங்குகிறார்கள். உறுப்பில் குறையாக இருந்தாலும், இலக்கிய உலகில் புகழ் மணம் பரப்பிய பலரைப் பார்க்கலாம்.
    கவி மில்டனுக்குத் தமது நாற்பதாவது வயதிலே கண் ஒளி மங்கத் தொடங்கிவிட்டது. பின்னர் முழுப்பார்வையையும் இழந்தார். ஆயினும் அவருடைய மிகச்சிறந்த படைப்புக்கள் அவர் பார்வை இழந்த பின்னரே எழுதப்பட்டவையாகும்.
    வில்கின்ஸ் என்பவர் தாவர சாஸ்திரத்தில் மேதை. இவர் தமது இருபத்து மூன்றாவது வயதில் பார்வையை இழந்துவிட்டார். பூக்களை நாக்கின் நுனியால் ஸ்பரிசித்துப் பார்த்தே என்ன பூ என்று அதன் பெயரைச் சொல்லிவிடுவார்.
    புறக்கண் இல்லாமல் இருந்தாலும் அகக்கண்ணாகிய அறிவு பெற்றுப் பிறர்போற்ற வாழ்ந்த புலவர்கள் பலர் தமிழகத்தில் இருந்தனர்.
    உடல் உறுப்புகளில் சிலர் இல்லாதிருப்பது ஒருவனுக்குப் பழிதராது. அவை இருந்தும் அறிவன அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழியாகும்.
    சிலர் உடல் குறைபாடு என்ற கண்ணீர்க் குளத்தில் நின்றாலும், முயன்றால் பன்னீர்ப் பூக்களாக பாரில் மணம் வீச முடியுமே.
    “துன்பப்பறவை உன் தலைக்குமேல் பறந்து போகவிடு. ஆனால் தலையில் கூடுகட்ட இடம் கொடுக்காதே’ என்பது ஒரு சீனப்பழமொழி.
    ஓர் ஆங்கிலப்பாடல் சொல்கிறது;”உன்னுடைய தோட்டத்தை அழகிய மலர்களைக் கொண்டு மதிப்பிடு. ஒருபோதும் விழுந்துகிடக்கும் இலைகளைக் கொண்டு மதிப்பிடாதே’ கடந்துபோன வாழ்க்கையில் கசந்த நினைவுகளையும், தோல்விகளையும் எண்ணிக் கவலைபட்டுக் கொண்டிராமல் அந்த அனுபவங் கள் நமக்குக் கற்று உணர்த்திய தெளிந்த படிப்பினை யையும் மையமாக வைத்து, வருங்கால வாழ்க் கையை வளப்படுத்திக் கொள்வதே சிறப்பினை நல்கும் இல்லையா?
    இன்றே நமது சோக மேகங்களுக்கு மூடுவிழா கண்டு, நாம் இந்த மண்ணில் வாழப் பிறந்தோம், பலரை வாழ்விக்க பிறந்தோம் என்பதை உணர்ந்து, நமது வாழ்க்கை என்னும் வசந்தக் காட்டில் எழில்வீசும் இன்ப மலர்களாகப் பூத்துச் சிரிப்போம்.

    வெற்றிப்படி 4

    அது மட்டுமல்ல. சுற்றுச் சூழல்கள். பிரபஞ்ச இயக்கங்கள். கோள்களின் இடமாற்றங்கள். இவைகளும் நம் மனதை மாற்றுகின்றன.
    எனவே…
    எண்ணங்கள் மனதினின்று தோன்றி னாலும், மனம் பல்வேறு நிலைகளிலிருந்து தாக்குதல்களைப் பெறுகிறது. அதற்கேற்ப எண்ணங்கள் மாறுகின்றன.
    மனதை அதன் வழியிலே விட்டுவிட்டால் அது தாவிக் கொண்டே இருக்கும். நம்மால் ஒன்றிலும் கவனம் செலுத்த முடியாமல் போகும். ஆனால் மனம் நல்ல சுவையான உணவு வகைகளை கேட்கும். குளிர்ச்சியான, வண்ணமயமான காட்சிகளைக் காண ஆசைப்படும். இனிமையான இசையைக் கேட்கத் தூண்டும். நறுமணங்களை விரும்பும். பரிச உணர்வுகளுக்காக ஏங்கும்.
    உடல்நிலை பாதிக்கும்போது மனமும் பாதிக்கும்
    டாக்டரிடம் முழு உடல் பரிசோதனைக் காகச் சென்றான் குப்புசாமி. நாள் முழுவதும் முழு உடல் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவ நிபுணர்கள் இறுதியாக அவரிடம் கூறியவை.
    உங்களுக்கு கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது
    இருதய இரத்தக் குழாயில் அடைப்பு உள்ளது
    சர்க்கரையின் அளவு உயர்ந்துள்ளது
    தகுந்த சிகிச்சைகளும், மருந்துகளும் மேற்கொண்டால் தான் பேராபத்திலிருந்து காப்பாற்றமுடியும்.
    இச்செய்திகள் இடியென விழுந்தன குப்புசாமிமேல். அதிர்ச்சித் தகவல்களால் நிலை குலைந்து மனசோகத்திற்கு ஆளானான்.
    அதே வீடு, மனைவி, மக்கள், நண்பர்கள் தான்.
    குதூகலமாக இருந்த குடும்பம் தான்.
    குப்புசாமியின் மனபாதிப்புகள் அவரது எண்ணங்களை பாதித்தன.
    ‘என்னடா வாழ்க்கை’ என சித்தாந்தம் பேச வைத்தது அவரை. மகிழ்வான மனம், மகிழ்வான அலைகளை பரவச் செய்கிறது. துக்கமான, சோர்வான மனம் சோக, சோர்வு அலைகளைப் பரப்பி அனைவரையும் வேதனைக்குள்ளாக்குகிறது.
    ஐந்தறிவு பெற்றமிருகங்களுக்கு இன்பமோ, துன்பமோ ஐம்புலன்களால் வருவதே. அவை இயற்கையோடு இணைந்து வாழ்வதால் அதன்வாழ்வு முன்னரே வரையறைசெய்யப்பட்டு (Programme) அதன்படி செயலாக்கம் நடக்கிறது.
    மனிதன் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைப் பெற்றுள்ளதால் அவனது வாழ்வை அவனே அமைத்துக் கொள்கிறான்.
    “எண்ணம் போல வாழ்வு”
    “எதை எண்ணுகிறாயோ அதுவாக மாறுகிறாய்”
    மனதை மாற்றி, அதன் மூலம்
    எண்ணங்களை மாற்றமுடியுமா?
    சிந்திப்போம்.
    – வெற்றிப்படி 5ல் சந்திப்போம்….

    திறந்த உள்ளம்

    கடந்த இதழின் தன்னம்பிக்கைத் தலைப்புகளையே கடிதமாக்கியிருக்கிறார்…
    ‘உள்ளத்தோடு உள்ளம்’ பேசி ஊர்வலம் தொடங்கிய தாங்கள், ‘ஏய் தோழா, முன்னால் வாடா’ இதோ காத்திருக்கிறது உனக்குரிய எதிர்காலம் என்று ‘உதவும் குணத்தையும் நம்மை உயர்த்தும் தினத்தையும்’ சுட்டிக்காட்டினீர்கள். நாம் நாமாக இருக்க வேண்டுமானால் ‘மனதை நிமிர்த்தும் அந்த மந்திரச் சொற்களை’ மனதில் இருத்த வேண்டும். அதற்காக நாம் நம் ‘உடலினை உறுதி செய்ய’ வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளீர்கள்.
    ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’ வருவது அதுவாகவே தானாகவே வரும். அதே நேரத்தில் வருவது மட்டும் தானே வந்து சேரும் என்பதையும் கோட்டிட்டுக் காட்டினீர்கள். ஓ இளைஞனே, ‘படிக்காத பாடங்கள்’ உனக்குள்ளே ஒரு உலகம் இருப்பதையும், அதை ஜெயிக்க நல்ல எண்ணம் வேண்டும் என்பதையும், ‘கதையும் கருத்தும்’ கொண்டு விளக்கினீர்கள். உனக்குள் நீ ‘உன்னதமாய் வாழ’ மதிவசம் வாழ்வேற்று, ‘மனமே மனமே’ நீ மாற்றத்தை ஏற்றுவிடு, பின் நீ மாறி விடுவாய் என்று அறம் கூறினீர்கள்.
    ‘சாதாரண வாழ்விற்கான சந்தோஷ வழிமுறை களை’ உள்முகப் பார்வையுடனும், குறிக்கோளுடனும் இடைவிடாமல் இளைஞனே நீ செயலாற்றுவாயே யானால் உள் நல உணர்வுகள் நலமாயப் பீறிடும் என்றீர்கள். அப்போது ‘வேப்பம் பூவிலும் தேன்கசியும்’ எனச் சிந்திக்கச் செய்தீர்கள். ‘வல்லமைதான் வாழ்வின் இலக்கு’ என்று இளைய தலைமுறையினருக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு கடிதம் மூலம் உணர்த்தி தன்னம்பிக்கை மீது நம்பிக்கை வையுங்கள் அப்பொழுது பாருங்கள் எல்லோரும் உங்களை ‘நலந்தானா?’ என்று விசாரிப்பதுபோய், நீங்கள் அனைவரையும் நலந்தானா என்று விசாரிப்பீர்கள் என்று இவ்விதழ் முழுதும் சிந்தித்திருக்கின்றீர்கள்.
    ‘உறவுகள்’ எனும் சிகரத்தில் ஏறிட ‘முயன்றேன், வென்றேன்’ என்று ‘வானம் தொட்டுவிடும் தூரம்’ தான். ஆனால் ஞானம் மட்டும் அருகே இருந்தால்… என்று கூறாமல் கூறி “தன்னம்பிக்கை” இளைஞர்களை தாய்மை உணர்வுடன் உசுப்பி விட்டிருக்கின்றீர்கள்.
    இவற்றையெல்லாம் பேரறிஞர் பேராசிரியர் டாக்டர். இல.செ.க.வின் சிந்தனை நாரால் ஒரு மாலை யாய்த் தொடுத்து, தன்னம்பிக்கை வாசகர் கழுத்தில் வெற்றி மாலையாய்ச்சூட்டி நவம்பர் 2010 இதழில் முன்னேற்றக்கருத்துக்களை முதலீடு என்று இவ்விதழே தமிழகத்தின் முன்னேற்றத்தின் மூலதன மாகும் என்று வழங்கியிருக்கின்றீர்கள் என்பதைத் திறந்த உள்ளத் துடன் இம்மடல் வழிச்சுட்டிக் காட்டுகிறேன்.
    புலவர் தங்க சங்கரபாண்டியன்
    மேனிலைத் தமிழாசிரியர் (ஓய்வு), சென்னை
    நவம்பர் 2010 இதழைக் கண்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை இல்லை. இன்று உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையானது “தன்னம்பிக்கை”. இதனை உணர்ந்து தெளிந்து மனிதகுலத்துக்கு “தன்னம்பிக்கை” ஊட்டும் இமாலயச் செயலைத் தாங்கள் கடந்த 21 ஆண்டுகளாக செய்து வருவதை உண்மையில் ஒரு “சாதனை” என்றே சொல்ல வேண்டும். மனிதர்களுக்குத் “தன்னம்பிக்கை”யை ஊட்டுவது என்பது அவ்வளவு எளிதான செயலன்று; மிகவும் கடினமான பணி. அந்தக் கடினமான பணியைத் தாங்கள் தொய்வின்றி, சோர்வின்றி அயராமல், சளைக்காமல் செய்து வருவது என்பது மிகுந்த பாராட்டிற்கும் போற்றுதலுக்கும் உரியதாகும். தங்களின் “தன்னம்பிக்கை” ஊட்டும் பணி கால காலங்களுக்கு வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

    உன்னதமாய் வாழ்வோம் !

    அன்பு நண்பர்களே! உணவு இரசமாவதில் தொடங்கி இரத்தம், சதை கொழுப்பாகி பின் எலும்பு மற்றும் நரம்பாகும் கதையைத் தான் நாம் இத்தனை அத்யாயங்களில் பார்த்து வந்தோம். இனி, நரம்பு விந்து நாதமாகும் விளக்கத்தைப் பார்ப்போம். நமது விந்து நாதம் என்பது உணவு இரசமாகும் தன்மை முதற் கொண்டு நரம்பு வரை உருவான தன்மைகளை உள்ளடக்கிய மொத்த உயிர் உடலின் சுருக்க பதிவேயாகும். இவைகளின் வீரியமும் வலுவும் முறையே, செரிமாண சக்தி, இரத்தவிருத்தி, சதை ஆற்றல், கொழுப்புச் சத்து சேமிப்பு, எலும்பு வலிமை, நரம்பு விழிப்புணர்வு மற்றும் மூளை திறன் ஆகியவற்றின் சாராம்சத்தைக் கொண் டிருக்கும். நண்பர்களே! நாம் எவ்விதம் வளர்ந்து உருவானோமோ அவ்விதமே விந்து நாதக் கருமையப் பதிவு விளங்கும். இந்தக் கருமையப் பதிவானது நாம் நம் தாயின் ஏழாம் மாத கருவினிலேயே தொடங்கி விடுகிறது. நண்பர் களே! நாம் கருவான சூழலை நாம் முடிவு செய்ய முடியாது தான். அது நம் பெற்றோர் களின் தன்மையைப் பொறுத்தது. அதே போல், நாம் அறிவு (நரம்பு மற்றும் மூளை) முதிற்சி அடையும் (14 வயது) வரை வளர்க்கப்படும் சூழலும் நம் கைகளில் இல்லைதான். ஆனால், இதன் பிறகு நம் வாழ்க்கை நம் கைகளில் என்று புரிந்து வாழ்தல் முடியும் தானே?
    சரி, அன்பர்களே! முதலில் விந்து தன்மைகள் கெடும் விதங்களை அறிந்து, அதனைத் தவிர்த்து வாழ்வது பற்றி இப்போது பார்ப்போம்.
    33. அமிலத்தன்மை :
    வயிற்றில் உண்டாகும் அமிலத் தன்மையால் உணவு செரி மானம் கெட்டு இரத்தத்திற்கு சத்தும் சக்தியும் கிடைக்காமல் போவதால் சதை முதல் விந்து வரை பலகீணம் ஏற்படுகிறது. அமிலத் தன்மையால் விந்து நீர்த்துப்போவதும் வீரீயம் குறைவதும் ஏற்படும். அமிலத் தன்மையால் உடலுறவில் எரிச்சலும், பொறுமையின்மையும், விந்து விரைவாக வெளியேறுவதும் நிகழும்.
    34. மண்ணீரல் தளர்ச்சி : மண்ணீரல் தளர்ச்சியானது சதையாக உள்ள உடல் உள் உறுப்புகளையும் நரம்புகளையும் தளர்வடையச் செய்யும் (மண்ணீரல் சக்தி கிடைக்காததால்). இவ்வாறு சதையும் நரம்பும் தளர்ச்சி அடையும் போது சதையாக உள்ள ஆணுறுப்பும் தளர்ந்து, உடலுறவின் போது விரைப்புத் தன்மை (உழ்ங்ஸ்ரீற்ண்ர்ய்) குறைந்தோ அல்லது முற்றிலும் இன்றியோ காணப்படும்.
    35. செரிமானக் குறைவு : நம் செரிமானத்திறனை பாதிக்காத வகையில் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்ட உணவு இரசமாகி, இரத்தமாகி விந்து வரை சத்தும் சக்தியும் வந்து சேரும். செரிமானம் பாதிக்கும் போதெல்லாம், விந்து வரை சத்தும் சக்தியும் அளிக்க நமது இரத்தம், சதை, மற்றும் எலும்பு கரையும் நிலை ஏற்படும்.
    36. குளுக்கோஸ் ஏற்றுதல் : சக்தி குறைபாட்டிற்காக ஒவ்வொரு முறையும் குளுக்கோஸ் ஏற்றும் போதும் நமது செரிமாண மண்டலம் முற்றிலும் செயல் ஆக்கத்திலிருந்து விடுபட்டு நிற்கிறது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள குறைந்த பட்சம் ஒரு மாதமாவது ஆகிறது. இந்தக் காலவரையரையில் இரத்தம் முதல் விந்து வரை சக்தி இழப்பு ஏற்படுகிறது.
    37. உடல் உஷ்ணம் : வெப்பமான சூழலில் (வெல்டிங் உள்ளிட்ட) வேலை செய்பவர்களின் உடல் எப்பொழுதும் உஷ்ணமாகவே இருப்பதால், விந்து உற்பத்தியும் வீரியமும் குறையும் தன்மை ஏற்படுகிறது.
    38. இரத்த சோகை : இரத்த சோகையானது சதை முதல் விந்து வரை பலமிழக்கச் செய்து ஆண்மைக் குறைவை உண்டாக்கும். உடல் உறவுக்குப்பின் மிகுதியான உடற் சோர்வு ஏற்படும்.இரத்த சோகைக்காக ஒவ்வொரு முறையும் வேறொருவரின் இரத்தம் ஏற்றும் போதும், நமது உடல் உறுப்புகள் ஏற்று அனுசரித்துக் கொள்ள ஐந்து வருட சக்தி இழப்புக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதன் பலனாய் சதை முதல் விந்து வரை நீடித்த பலமிழப்புக்கு ஆட்படுகிறது.
    39. இரத்த அழுத்தம் : கெட்டக் கொழுப்புச் சேர்மானத்தால் ஏற்படும் இரத்த அழுத்தமானது நரம்புகளை அதிகமாகத்தூண்டி விந்து உற்பத்தியை விரைவாக்கி, அதிக பாலுணர்வையும் பொறுமை யின்மையும் ஏற்படுத்திவிடுகிறது. கெட்டக் கொழுப்புத் தன்மையால் ஆணுறுப்பானது சுருங்கி விரியும் தன்மை இழந்து விரைப்புத் தன்மை குறையக்காரணமாகிறது.
    40. வலி நிவாரணிகள் : வலி நிவாரணிகள் (குறிப்பாக ஸ்டீராய்டு மருந்துகள்) எடுத்துக்கொள்ளும் போது நரம்புகள் உணர்வு குறைந்த நிலைக்குத் தள்ளப்படுவதால் நரம்பிலிருந்து விந்துக்கு சக்தி சேர்வது குறைந்து போகிறது. இதனால், மலட்டுத்தன்மை அதிகமாக வழிவகுக்கிறது, இதன் பயனாய் பாலுணர்வு குறையவும், உடலுறவில் நாட்டமின்மையும் வெளிப்படுகிறது. இல்லறச் சிக்கல்கள் இங்கிருந்து ஆரம்பமாகிறது.
    41. மன உளைச்சல் : நரம்பு தளர்ச்சியும் இரத்த அழுத்தமும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பது தெரியும்தானே? மன உளைச்சலுக்கு அற்புத மருந்தாகத் தன்மையான உடலுறவு உதவும் என்பது உண்மைதான். ஆனால், அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகி, அதற்குத் தீர்வாக உடலுறவை மருந்தாக அடிக்கடி பயன்படுத்திக் கொள்வது என்பது நரம்புகளை காலி செய்யும் பாதகமான செயலாக முடியும். நரம்பிலிருந்துதான் விந்துக்கு சக்தி வர வேண்டும் ஆதலால், விந்து பலமிழக்கச் செய்கிறது.

    42. ஹார்மோன் கோளாறு : உச்சம் தலை (பிட்டூட்டரி) முதல் மூலாதாரம் (பாலுணர்வு சுரபிகள்) வரை உள்ள ஏழுவித ஹார்மோன் தொகுப்புகளின் இணக்கம் இருந்தால் மட்டுமே உடல் உயிர் இயக்கம் இணக்கமாகச் செயல்படும். இதில் ஒன்றின் குறைவு அல்லது மிகுதியானது மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் சீர்கெட வைத்துவிடும். இதன் பயனாய் பாலுறுப்பு நோய்கள் உருவாகவும் வழியாகிவிடுகிறது. உதாரணமாக துரிய (பிட்டூட்டரி) குறைபாடால் முறையற்ற பாலுணர்வையும், பீனியல் (புருவமத்தி-ஆக்கினை மையம்) குறைபாடால் கற்பு ஒழுக்கத்தில் தவறுவதும், தைராய்டு குறைபாடால் விந்து வீரீயம் (Sperm Vitality) குறைவதும், தைமஸ் (நெஞ்சுக் குழி) ஹார்மோன் குறைவால் விந்து வேகம் (நல்ங்ழ்ம் ஙர்ற்ண்ப்ண்ற்ஹ்) குறைவதும், மணிபூரக குறைபாடால் (இன்சுலின் குறைவால்) விந்து எண்ணிக்கை (Sperm Counts) குறைவதும், சுவாதிஸ்டான (அட்ரீணல்) குறைவால் விந்து மற்றும் பிறப்புறுப்பு நோய் தொற்றும் (Sperm, Urinary and Gonadal infections), மூலாதார குறைபாடால் மலட்டுத்தன்மை (Infertility) முதல் பிறப்புறுப்பு புற்று வரை நிகழ வழியா கின்றன. ஆகவே, நண்பர்களே! ஹார்மோன் கோளாறு மனச்சிதைவை உண்டாக்கி, உடல் உறுதியைக் குலைத்து நம்மைப் படிப்படியாக நிர்மூலமாக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
    43. தசை இறுக்கம் : எந்திர உடற்பயிற்சி (Gym) மற்றும் கடுமையான விளையாட்டுக்கள் நம் தசை நார்களை கடினமாகவும் இறுக்கமாகவும் ஆக்கச் செய்யும். இதனால் உணவின் சத்தும் சக்தியும் சதையோடு முடங்கி, எலும்பு மற்றும் நரம்பு வலிமை குன்றி ஆண்மையைக் குறைத்துவிடும். வெறும் சதையின் அதீத வேலைப்பாடால் வீரமும் ஆண்மையும் அதீதமாக வெளிப்படுவது போல் மாயத் தோற்றத்தை மட்டுமே உருவாக்க முடியுமே தவிர, உண்மையில் மிக விரைவாக உடல் தளர்வும் ஆண்மைக் குறைவும் ஏற்படும். ஆகவே, தசைகளை இறுக்கப்படுத்த வேண்டாம்.
    44. வயக்ரா வகையாராக்கள் : ஆண்மை ஊக்கிகளாகக் கருதப்படும் வயக்ரா உள்ளிட்ட ஸ்டீராய்டு வகை செயற்கை இரசாயணங்கள் எலும்பு, சதை மற்றும் நரம்புகளை கரைத்து தற்காலிகமாக ஆண்மையை உசுப்பி வீரியம் காட்டிவிட்டு, உள்ளதும் போனதடா என்று வற்றிய கிணராகிவிடுவோம், ஜாகிரதை! விந்து உற்பத்தி என்பது உணவு வழி இரசமாகி, இரத்தமாகி, சதையாகி பின் கொழுப்பாகி, எலும்பாகவும் நரம்பாகவும் உருவாகி வரவேண்டும். இடையில் இருந்து கழன்று வந்தால், பின் இடம் தெரியாமல் போக வேண்டியதுதான். நீடித்து வாழ வேண்டுமாயின் உடல் உறவை நீட்டிக்கும் வயக்ரா வேண்டாமே!
    45.கற்பொழுக்கமின்மை : கற்புத்தன்மை பேனாதவருக்கு ஹார்மோன் சமன்பாடுகெட்டு உயிர் உடல் இணக்கம் இழந்து மனநிம்மதி கெட்டு வாழ வேண்டியதாய் இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கற்பொழுக்க நெறியில் வாழும்போது உடலின் ஆண் (வலது பாகம்) பெண் (இடது பாகம்) சமநிலை, அறிவு (ஆண்) உணர்ச்சி (பெண்) சமநிலை, கார (விந்து) அமில (யோனி திரவம்) சமநிலை, மூன்று தோஷ (வாத, பித்த மற்றும் கபம்) சமநிலை உள்ளிட்டவைகளை பக்குவமாய் பாதுகாக்கும் உண்ணத தன்மை வாய்ந்தது. கற்பொழுக்கம் தவறிய உடலுறவானது விந்து நாத ஜீவ காந்தத்தை குலைத்து இல்லற இணக்கத்தை உயிர், உடல், மனம் மற்றும் ஆண்ம நிலைகளில் மாற்றியமைத்து திண்டாட வைத்துவிடும்.
    46. நீரழிவு நோய் : நீரழிவு நோய்க்குக் காரணமான கெட்டச் சர்க்கரையானது உடல் முழுவது தேங்கத் தேங்க, உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிப்படையச் செய்கிறது. இதன் விளைவாக இரத்தம் முதல் சதை, கொழுப்பு, எலும்பு யாவும் பாழ்பட்டு விந்துவையும் பாழ்படுத்தி ஆண்மையைக் குலைத்து விடுகிறது.
    47. சிறுநீரக மற்றும் தோல் தொற்று : உடற்கழிவுகளின் தேக்கத்தால் சிறுநீரக மற்றும் தோல் தொற்று நோய்கள் அதிகமாகும் போது ஆணுறுப்பு மற்றும் விந்து தொற்று ஏற்பட்டு தீராத அரிப்பையும் வேதனையும் தரும்.
    48. வேண்டாத பாலியல் பழக்கங்கள் : சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகி, செயற்கையாக விந்து வெளியேற்றி பிஞ்சிலேயே பழுத்து மலட்டுத் தன்மைக்கு விரைவாக அழைத்துச் செல்லும் பழக்கம் நமக்கு வேண்டாமே!. “விந்து விட்டவன் நொந்து போனான்’ என்பது முதியோர் வாக்கு என்பதை மறக்க வேண்டாம். இயற்கையான உடலுறவில் வெளியேற்றிய விந்துச் சக்திக்கு ஈடாக துணைவியின் யோனித் திரவச் சத்தை ஆணின் உயிர் சுழற்சி எடுத்துக் கொண்டு புத்துணர்வை ஏற்படுத்துகிறது. அப்படி அல்லாத சுயமான விந்து வெளியேற்றம் சக்தி இழப்புக்குத்தான் வழி வகுக்கும்.
    அன்பு நண்பர்களே! அடுத்த அத்தியாயத் தில் பெண்மையை பாதிக்கும் விதங்களை அறிந்து, அதனைத் தவிர்த்து வாழ்வது பற்றி பார்ப்போம்.
    ஆண்மை என்பது ஆணின் ஆளுமைத்திறனாகும்; அதை ஆயுள் முழுமைக்கும் கற்பென காப்பது அவசியம் ஆகும்.
    இரகசியங்கள் தொடரும்….

    மானுடத்தை வளர்த்த மகாவீரர்

    மகாவீரர் பாரதத்தின் தவப்புதல்வர்களில் ஒருவர். அவர் வாழ்ந்த கி.மு.ஆறாம் நூற்றாண்டு இந்திய வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலம். இக்காலகட்டத்தில்தான் உலகெங்கும் மக்களிடையே ஒருவகை அமைதியின்மை காணப் பட்டது. இந்தியாவிலும் இந்த அமைதியின்மை சமயத் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் உண்டாயிற்று.
    இந்நூற்றாண்டில் இந்து சமயத்தில் மூடப்பழக்க வழக்கங்கள் மலிந்திருந்தன. வேள்வி களும் சடங்குகளும் அதிகரித்திருந்தன. உயிர்ப்பலி கொடுப்பதும் பெருகியிருந்தது. சாதிப்பாகுபாடுகள் கடுமையாக இருந்தன. வேதங்களும். இலக்கியங் களும் மக்களுக்கு எளிதில் பொருள் விளங்காத மொழியில் எழுதப்பட்டன. கோயில்களில் வழிபாடு செய்யவும். வேதங்கள் ஓதவும். வேள்விகள் நடத்தவும் ஒரு சாரார் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். இச்சீர்கேடுகளைக்களையும் பொருட்டே புத்த, சமண சமயங்கள் இந்தியாவில் தோன்றின.
    சமண சமயம் இந்தியாவின் தொன்மை மிக்கசமயமாகும். அதனைத் தோற்றுவித்தவர் மகாவீரர். மகாவீரரின் இயற்பெயர் வர்த்தமானர். மகாவீரரின் இளமை வாழ்க்கையைப் பற்றி தெளிவான செய்திகள் இல்லை. இவர் வைசாலி (விதேக நாடு) என்றநகரின் அருகே உள்ள குந்த கிராமத்தில் சித்தார்த்தர், திரிசாலை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இளமையில் சிறப்பாகக் கல்வி பயின்றார். யசோதை என்றநங்கையை திருமணம் செய்து கொண்டு அனோஜா என்றபெண் மகவிற்கு தந்தையானார்.
    தன்னுடைய முப்பதாவது வயதில் துறவறத்தை மேற்கொண்டார். சுமார் பன்னி ரெண்டு ஆண்டுகளாக கடுந்தவம் புரிந்து உண்மை அறிவை நாடித் திரிந்தார். பதிமூன்றாவது ஆண்டு ஜிம்பிரிப் என்னும் கிராமத்தில் சாலா என்னும் மரத்தடியில் ஞான ஒளியைப் (உண்மை அறிவு) பெற்றார். அதிலிருந்து அவர் ‘மகாவீரர்’ என்று அழைக்கப்பட்டார்.
    மகாவீரர் என்றால் பெரும் வீரர் என்று பொருள். அவரை ‘ஜீனர்’ என்றும் அழைப்பதுண்டு. ஜீனர் என்றால் ‘ஜெயித்தவர்’ என்று பொருள். அதாவது ஆசை, துன்பம் ஆகியவற்றைவெற்றி கண்டவர் என்பதாகும். சமண மதத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம் என்றும் பல பெயர்கள் உண்டு. ‘சமணர்’ என்றால் துறவிகள் என்று பொருள்.
    மகாவீரரது போதனைகள் ‘திரிரத்தினம்’ அல்லது ‘மும்மணிகள்’ என்றழைக்கப்படும். முதல் ரத்தினம் நன்னம்பிக்கை. நன்னம்பிக்கை என்பது மகாவீரரின் சக்தி. தூய்மை, மாசற்றதன்மை, உண்மை அறிவு ஆகியவற்றில் ஒருவர் உண்மை யான, உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதாகும். வீடுபேறு அடைவதற்கு நம்பிக்கை சீராக இருக்க வேண்டும் என்பதனை இது தெளிவுபடுத்துகிறது.
    இரண்டாவது ரத்தினம் நல்லறிவு. சமண சமயத்தின் கோட்பாடுகளை தெளிவுற உணர்ந்தால் அண்டத்தைப் பற்றி அறிய முடியும் என்பதே நல்லறிவாகும். நல்லறிவு என்பதற்கு முழுமுதற் கடவுள் இல்லை என்பதிலும், இயக்குபவர் இல்லாது உலகம் இயங்குகின்றது என்ற கோட்பாட்டையும், சம உரிமை பெற்ற எண்ணற்ற உயிர்கள் நிலைத்துள்ளன என்பதையும் உணர்வதாகும்.
    மூன்றாவது ரத்தினம் நன்னடத்தை. இன்னா செய்யாமை. உண்மை மொழிதல். உடைமை நீத்தல், திருடாமை, சொல், சிந்தனை, செயல் ஆகியவற்றில் அறம் மேலோங்கி நிற்றல் ஆகிய ஐந்து மாவிரதங்களைக் கடைபிடித்தலே நன்னடத்தை ஆகும். இம்மூன்று கொள்கைகளைப் பின்பற்றினால் வீடுபேற்றைஅடைய முடியும் என மகாவீரர் போதித்தார்.
    மகாவீரரின் அறநெறிக் கோட்பாடுகளில் மானுட நேயம் மேலோங்கி நிற்கிறது. மகாவீரரின் அறநெறிகள் வேதத்தையும். வேள்வியையும் எதிர்க்கிறது. வருணாசிரம தர்மத்திற்கு அங்கே இடமில்லை. ‘எல்லா உயிர்களும் சமம்’ என்றகருத்தை முன்னிலைப்படுத்தி மானுடத்தை உயர்த்தியவர் மகாவீரர்.
    உயிரினங்களுள் மிக உயர்ந்த நிலையில் மனிதனை வைத்துப் பேசுகிறார் அவர். மனிதனை விட தெய்வங்கட்குச் சிறப்பு தரும் வேதக் கொள்கைகளைக் கடுமையாக சாடுகிறார். நம் இன்ப துன்பங்களுக்கு நாமே பொறுப்பு. நம் கருமங்கள் நம்முடைய முயற்சியினால் நாமே களைந்து விடுதலை பெறவேண்டும். அவ்வாறு அறவழி நடந்து மனத்தால் தூய்மை உடையோர் அனைவரும் கடவுளர்களே என்பது மகாவீரரின் கருத்து.
    மகாவீரர் கொல்லாமைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். கல், மண், உலோகம் போன்ற வற்றிற்கும் உயிர் உண்டு என்று கருதினார். தண்ணீரைக் காய்ச்சினால் அதிலுள்ள உயிரினங்கள் இறந்து விடும். எனவே தண்ணீரைக் காய்ச்சக் கூடாது. சுவாசிக்கும் போது உயிரினங்கள் மூக்கு வழியே சென்று இறந்து விடும். எனவே மூக்கை திரையிட்டு மூட வேண்டும். நடக்கும்போது பாதம் பட்டு எறும்பு போன்றவை இறந்து விடும். எனவே தரையைச் சுத்தம் செய்து உயிரினங்களை அகற்றி விட்டே நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
    இல்லறத்தில் இருப்பவர்கள் இன்னா செய்யாமை (அகிம்சை), வாய்மை (சத்தியம்), கள்ளுண்ணாமை (கள்ளாமை), பிறர் மனை விழையாமை (பிரமசரியம்), கவராமை (திருடாமை), ஊணுண்ணாமை முதலிய நற்பண்புகளை கடைபிடித்து ஒழுக வேண்டும்.
    துறவிகளாக இருப்பவர்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொண்டு கர்ம வினையை நீக்க வேண்டும். சமணத் துறவிகள் தங்கள் தலைமுடியை ஒவ்வொன்றாக முழுவதையும் பிய்த்து எடுத்துவிட வேண்டும். அடிக்கடி உண்ணா நோன்பிருந்து இறுதியில் முழுப்பட்டினி கிடந்தே உயிர் துறக்க வேண்டும். உடையேதும் அணியாமல் நிர்வாணமாகத் திரிதல் வேண்டும். நீராடல் கூடாது. தரையிலேயே படுத்து உறங்குதல் வேண்டும். நின்றபடியே சாப்பிட வேண்டும். இவற்றைசமண முனிவர்கள் கடைபிடிக்க கட்டளையிடப்பட்டது.
    ‘கடவுள் உண்டு’ என்பதை மகாவீரர் ஏற்கவில்லை. உலகில் உள்ள அனைத்துப் பொருள் களையும் அவர்தான் படைத்தார் என்பதையும் அவர் ஏற்கவில்லை. உயிருக்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்பது இவரின் கருத்து. உலகின் மிகச் சிறந்த சக்திகளுக்கு மேலான சக்தியாக இருக்கும் ஒன்றையே கடவுள் என்கிறார். அது மாந்தரின் ஆத்ம சக்திதானே தவிர தனியாகக் கடவுள் என்பவர் இல்லை என்பது மகாவீரரின் வாதமாகும்.
    மகாவீரர் தன்னுடைய கொள்கைகளை கோசலம், மகதம், விதேகம், அங்கம் ஆகிய நாடு களில் போதித்தார். அவரைப் பின்பற்றியவர்கள் ‘நிர்க்கிரந்தர்கள்’ அல்லது பற்றற்றவர்கள் என்று அழைக்கப்பட்டனர். மகாவீரர் தனது 72ம் வயதில் கி.மு.467ல் ராஜகிருதத்திற்கு அருகிலுள்ள பவா என்னுமிடத்தில் உயிர் நீத்தார்.
    கர்னாடகத்தில் உள்ள சிரவன பெலகோலா வில் பத்ரபாகு என்பவர் தங்கியிருந்த போதுதான் மகாவீரரின் போதனைகள் ஓரளவு தொகுக்கப் பட்டன. மகாவீரரின் போதனைகள் ‘பூர்வங்கள்’ என்றழைக்கப்படுகிறது.
    சமணம் இந்து சமயத்தின் ஒரு கிளையாக விளங்கியதே அன்றி சமயத்தைப் பரப்பும் ஆர்வத்துடன் திகழவில்லை. நாளடைவில் சமணம் சுவதம்பரர்கள் அதாவது வெள்ளாடை அணிந்தவர் கள் என்றும், திகம்பரர்கள் அதாவது ஆகாயத்தை ஆடையாகக் கொண்டவர்கள் என்றும் இருபிரிவுகளாகப் பிரிந்தது. சமணம் கடுமையான துறவு வாழ்வைப் பணித்ததாலும். இன்னா செய்யாமையை அதிக அளவில் வலியுறுத்திய தாலும் இச்சமயத்தை பலரால் பின்பற்றமுடியாமல் போயிற்று.
    மகாவீரர் இந்து சமயத்தில் காணப்பட்ட குறைகளைக் களைந்தார். மக்களுக்குப் புரிகின்றஎளிய மொழியில் சமயக் கொள்கைகளைப் போதித்தார். மகாவீரரின் போதனைகளால் சமூகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்கின. கண்மூடித்தனமான கொள்கைகளும். உயிர்பலி இடுதலும் ஒழிந்தன. மகாவீரரின் சிந்தனைகளை சிந்தையில் கொண்டு மானுடத்தை உயர்த்தி நானிலம் போற்றும் நன்மக்களாக வாழ நாம் முயற்சிக்க வேண்டும்.
    குருநானக்
    சீக்கிய சமயத்தை தோற்றுவித்தவர் குருநானக். அவருடைய உபதேசங்கள் எந்நாளும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கருவூலமாகும். அவர் மறைந்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவரது அறிவுரைகள் இன்றைக்கும் பொருத்த முடையதாகவே இருக்கின்றன. மதக் கலவரங்கள் தலைவிரித்தாடும் இன்றைய நிலையில் குருநானக்கின் உபதேசங்களை பின்பற்றினால் மதக்கலவரங்கள் மறைந்து மதநல்லிணக்கம் தோன்றி, மனம் கனிந்த நல்லுறவு ஏற்படும். ‘மதம் மனிதனைக் கடவுளோடு இணைப்பது மட்டு மல்லாமல் மனிதனை மனிதனோடும் இணைக்க வேண்டும்’ என்று மகாத்மாவின் சிந்தனையை அன்றைக்கே இந்த மண்ணில் விதைத்தவர் குருநானக்.
    குருநானக் 1469ல் அன்றைய இந்தியாவில் ஒரு பகுதியாக விளங்கிய மேற்கு பஞ்சாபில் (இன்றைய பாகிஸ்தான்) லாகூருக்கு தென்மேற்கில் 65கி.மீ. தொலைவில் தாள்வாண்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். இளமையில் குருநானக் பள்ளிக்குச் சென்றார் என்றாலும் கல்வியில் அவருக்கு ஆர்வமில்லை. பின்னர் வாணிபத் தொழிலைச் செய்யுமாறு அவரது தந்தையார் ஏற்பாடு செய்தார். அதிலும் குருநானக் பொருள் ஈட்டுவதற்கு பதிலாக தன்னிடமுள்ள செல்வங்களையெல்லாம் ஏழைகளுக்கு அளித்தார். மனதை மாற்றுவதற்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் இல்லறவாழ்க்கையிலும் அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை. மாறாக சுமார் 30 ஆண்டுகள் இந்திய நாடெங்கும் சுற்றித் திரிந்து தனது நற்செய்தியாகிய தூய வாழ்வையும்;. நேயமிக்க வாழ்வையும் பரப்பி தனது நோக்கத்தில் வெற்றி பெற்றார்.
    குருநானக் தோன்றிய காலத்தில் இந்து சமயமும். இசுலாமிய சமயமும் வேறுபட்டு நின்றன. இவ்விரு சமயங்களுக்கும் இடையே ஒற்றுமை நிலவ குருநானக் முயற்சித்தார். வெற்றியும் பெற்றார். வெற்றியின் விளைவே சீக்கியமாகும். இந்துக்களும், முஸ்லீம்களும் இணைவதற்கு உரிய பொதுவான சில அடிப்படைகளைச் சீக்கியம் கண்டது. ஆதலால் சீக்கிய சமயம் இந்து -இசுலாம் ஆகிய இரண்டு மதங்களையும் இணைக்கும் பாலமாக
    கருதப்பட்டது. மக்களை இந்து-இசுலாமியர், ஆண்-பெண், வன்மைமிக்கவன்-எளிமையானவன், மேல்சாதி-கீழ்சாதி என்று பகுக்கக் கூடாது என்று குருநானக் அறைகூவல் விடுத்தார்.
    குருநானக் காலத்தில் பொய், புரட்டு, வஞ்சம், சூழ்ச்சி போன்றவை சமயத்தின் பெயரால் தழைத்தன. இவற்றைகுருநானக் கண்டித்தார். சமயப் போர்வையில் விளங்கிய ஆரவாரமான போக்கையும், கொடுமையையும் அவர் சாடினார். மூட நம்பிக்கைகள், பொருளற்றசடங்குகள். கேடு பயக்கும் சமுதாய சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்தார். அன்பு, இரக்கம் ஒப்புரவு ஆகிய உயர் பண்புகளை அவர் வலியுறுத்தினார்.
    குருநானக் கடவுள் ஒருவரே என்று போதித்தார். கடவுள் உலகத்தையும் மக்களையும் படைத்தவர். அழிவில்லாதவர். ஜெபம், தன்னடக்கம், நற்செய்திகள் ஆகியவற்றால் ஆன்மீக விடுதலையை அடைய முடியும் என்பது குருநானக்கின் கருத்து. குருநானக் சிலை வழிபாட்டை மறுத்தார். ‘கடவுள் இரக்கமானவர். கடவுள் பற்று, நல்வாழ்க்கை ஆகியவற்றால் ஒருவர் கடவுளை அடையலாம். கடவுள் எல்லா மக்களுடைய இதயங்களிலும் இருக்கின்றார். ‘இறைவனை நாம் அறிய நேர்ந்தாலும், அவனது இயல்புகளை விரித்துரைக்க இயலாது. இறைவன் வேதங்கள், திருநூல்கள் யாவற்றையும் கடந்து விளங்குகிறான். சொற்கள் அவனது குணங்களை சரிவர உணர்த்தாது’ என்று உபதேசிக்கிறார்.
    சீக்கியர் யார் என்பதற்கு குருநானக் சொல்லும் விளக்கம் அற்புதமானது. ‘உண்மையும், மனநிறைவும், உள்ளத்தில் இரக்கமும் உடையவரே சீக்கியர். சீக்கியர் என்பவர் யாருக்கும் தீமை இழைக்காமல் இருக்க வேண்டும். ஆசைகளுக்கும் ஐம்புலன்களுக்கும் அடிமையாகாமல் இருக்க வேண்டும். தம்மை வெறுப்பவரையும் நேசிப்பவரே சீக்கியர். தமக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவரே சீக்கியர்’.
    மேலும் அவர் ‘உலகைக் குறித்து கவலையற்றவனாக விளங்கு. உனக்கு அமைந்த வாழ்நாட்களை அமைதியுடன் கழிக்க முற்படு’. ‘எவரிடத்தும் பகைமை கொள்ளாதே. இறைவன் உயிர்தோறும் விளங்குகிறான். மன்னித்தல் என்பது அன்பின் உயர்ந்த வளர்ச்சி பெற்றநிலையாகும். எங்கே மன்னிப்பு நிகழ்கிறதோ. அங்கே இறைவன் இருக்கிறான். இறைவனுடைய தொண்டிற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். நின்றும், அமர்ந்தும், விழித்தும், உறங்கியும் இறைவனுக்கே நாம் ஆட்பட்டு ஒழுக வேண்டும்’ என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
    குருநானக் கடுமையான தவநெறிகளில் ஈடுபட்டு உடலை வருத்துதலை வெறுத்தார். புலனின்பங்களில் தோய்ந்த வாழ்வையும் வெறுத்தார். இவ்விரு நிலைகளையும் மறுத்த அவர். நடுநெறியொன்றைவகுத்தார். இந்து சமயத்தில் காணப்பட்ட சடங்குகளை குருநானக் ஏற்றுக் கொள்ளவில்லை. இவர் குடும்ப வாழ்க்கையை கடிந்து கொள்ளவில்லை. குருநானக் பெண்களின் பெருமையை உயர்த்தினார். அவர்களது விடுதலைக்காக அரும்பாடுபட்டார். பெண் நம்மை பெற்றெடுக்கிறாள். பெண்ணிற்கே நம்மை மணமுடிக்கிறார்கள். பெண்ணே நமது நண்பன் என்று பெண்களுக்கு புகழாரம் சூட்டுகிறார்.
    சீக்கிய சமயத்தை நிறுவியவர் குருநானக் என்றாலும் அவர்தாம் இச்சமயத்தை தோற்றுவித்ததாகக் கொள்ளத் தயங்குவார். சீக்கிய சமயத்தின் புனிதமான கோயில் அமிர்தசரசில் உள்ள ‘பொற்கோயில்’ ஆகும். குருநானக் காலத்திற்குப் பிறகுதான் சீக்கியம் சமயமாக உருப்பெற்றது. இவருக்கு சீடர்களாகவே இருந்தவர்களே பின்னர் சீக்கியர்களானார்கள். ‘சிஷ்ய’ என்றசமஸ்கிருத சொல் பஞ்சாபி மொழியில் ‘சீக்’ என்று வழங்குகிறது.
    ஆதிகிரந்தம் என்பது பஞ்சாப் மொழியின் இலக்கியத்தில் மிகவும் சிறந்த இடத்தைப் பெறுகிறது. ஆதிகிரந்தத்தின் பெரும்பகுதி குருநானக் அவர்கள் பாடியருளிய பாடல்களால் ஆனது. இவர் இந்திய மாநிலமெங்கும் சுற்றினார். தெற்கே இலங்கை. கிழக்கே அஸ்ஸாம். மேற்கே பாக்தாத் வரையும் சென்று தாம் கண்ட உண்மைகளை எடுத்துரைத்தார். இவர் எடுத்துரைத்த உண்மை இறையொருமையாகும். இறைவன் ஒருவனே. நாமனைவரும் அவனது மக்கள். உலகம் ஒன்று-மக்கட் சமுதாயம் ஒன்றேஎன்பன அவர் அடுத்தடுத்து வற்புறுத்திய உண்மைகளாகும்.
    கி.பி. 1538ல் குருநானக் மண்ணை விட்டு மறைந்தார். அகம்பாவம், ஆசை போன்ற இருளில் மூழ்கிய மக்களுக்கு ஒளிகாட்ட வந்த அந்த உத்தமர் இறைவனோடு இரண்டறக் கலந்தார். குருநானக்கை கண்டவர்கள். அவரது உபதேசங் களைக் கேட்டவர்கள். அவர் ஆன்ம ஞானத்தின் ஊற்றாக விளங்கியதை உணர்ந்தார்கள். காந்தம் மிகுந்த அவரது ஆளுமை. தோற்றப் பொலிவு. சாந்தம் தவழும் இன்முகம் அனைவரையும் ஈர்த்தன. இந்து முஸ்லீம் இரு மதத்தாருக்கும் இடையில் ஒருமைப்பாட்டை உருவாக்கிய அவருக்கு அவ்விரு மதத்தினரும் தங்கள் மதத்திற்கு உரிய வகையில் சமாதியையும் கல்லறையையும் எழுப்பினார்கள். இன்றும் இலட்சக்கணக்கான மக்கள் அவருடைய கல்லறைக்கு வந்து செல்கின்றனர்.

    வருவது தானே வரும்!

    வைகள் ஒருபுறம்; பெறுவது மறுபுறம் என வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. நமக்கு என்ன வரவேண்டுமோ அது வரும். அதைப் பெறுவதற் கான தகுதி மட்டும் நம்மிடம் இருந்தால் அது தானே வந்து சேரும். எப்படி எனப் பார்ப்போம்.
    குடும்பத்தில்
    குடும்பத்தில் அனைவரும் விரும்புவது சுமூகமான சூழல்தான். பல சமயங்களில் திடீரென ஒருவர் பேசும் பேச்சு, உறவில் விரிசலை உண்டாக்கிவிடும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் நல்ல குணங்களுடன் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். இதற்கு இவர்கள் நல்ல முன் உதாரணமாய் செயல்பட வேண்டும்.
    காலை எழுந்தவுடன் பல் துலக்கி, முகம் கழுவிய பின்பாடம் படிக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கூறும் தந்தை, தானும் பல்துலக்கிய பின் காபி அருந்துவது நல்லது.
    வீடுகளில் நீக்கமற நிறைந்துள்ள தொலைக் காட்சிப் பெட்டியில் எந்த நிகழ்ச்சி ஒலி பரப்பி னாலும் எவ்விதமான முனுமுனுப்பும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் கடமையாகக் கருதிப் பார்க்கும் மந்தை போல மாறிவிட்டனர். இதைப் பெறத்தான் அந்த நிறுவனங்களும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெற்றமகிழ்ச்சியில் உள்ளன.
    வளர்ந்த குழந்தைகள் சரியான வாழ்க்கைத் துணை அமைய விரும்புவதும், அவர்களது அம்மா ஒத்துப்போகும், சொன்னால் கேட்டுக் கொள்ளும் மருமகள் வேண்டும் என்று நினைப்பதும், அப்பா அதிக ஆசைப்படாத மருமகன் அமைந்தால் நல்லது என விரும்புவதும் இயல்பாகிவிட்டது.
    திருமணமான புதிதில், இந்த அம்மாவும், அப்பாவும் தாங்கள் எதிர்பார்ப்பது போன்றே தம் மாமனார் மாமியாரிடம் நடந்து கொண்டார்களா என்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
    அப்படி இருந்திருந்தால் இவர்களுக்கும் விருப்பம் போலவே அமைவார்கள்.
    வீடுகளில் வயதாகி முதுமையில் உள்ள பெரியவர்கள், தங்களது வாலிப வயதில் தங்கள் வீடுகளிலிருந்த முதியோர்களை எப்படி கவனித்துக் கொண்டார்களோ, அது தான் கிடைக்கும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
    எனது பெற்றோர்களிடமிருந்து எவ்வித வரவும் இல்லாமலேயே கஷ்டப்பட்டுப் பார்த்துக் கொண்டேன். இன்று எனக்கு பென்சன் வருகிறது. டெபாசிட் இருக்கிறது. சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
    திருமணமான இளம் தம்பதியர் விரைவில் குழந்தை பாக்கியம் பெறவேண்டும் என விரும்புகின்றனர்.
    சிறுவயதில் உடன்பிறந்தவர்கள் எல்லோரும், பிற்காலத்திலும், பிரியாமல் ஒற்றுமை யாக ஒன்றாக வாழ வேண்டும் என்று கூறிக் கொள் கின்றனர். காரணம் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள், ஒருவருக்கு திருமணமாகி, வெளியிலிருந்து ஒருவர் வந்த பின் நிலையில் மாற்றம் உண்டாகிறது.
    சிறுவயதில் மேற்கொண்ட சூளுரை என்ன ஆயிற்று?
    தீர்வுகள்
    எதிர்பார்ப்பதில் தவறில்லை. அவை வருவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வதில் ஆர்வம் தேவை. தண்ணீர் போல, எல்லா இடங்களுக்கும் பரவி ஓடும் மனப்பான்மை தேவை.
    “கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ இது பழமொழி. கல்லையும் நாள்பட நாள்பட நீரானது காற்றின் துணைகொண்டு, அடித்து அடித்து கரைத்துவிடும்.
    அன்பான பேச்சு, கனிவான முகபாவம், புன்சிரிப்புடனான முகம், பொருள்களைக் கையாள் வதில் நிதானம், பொறுமை, வயதில் பெரியவர் களுக்கு மரியாதை கொடுப்பது சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் வைத்துக் கொள்வது உள்ளிட்டவைகள் விரும்பியதை வரவழைக்கும். அதுவும் தானே வரும்.
    கல்வி, வேலை, தொழில், வியாபாரம்
    பெற்றோர்கள் எல்லோருமே தங்கள் குழந்தைகள் நன்றாகப் படித்து, முதல் ரேங்க் வாங்க வேண்டும். அதனால், தான் பெருமைப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். மாணவர்களும் நன்றாகப் படிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களால் முடிவதில்லை.
    காரணம், மிகவும் சுலபமானது. மனதை எல்லா திசைகளிலும் அலைபாய விடுவதுதான்.
    ஒழுக்கம், நேர்மை, கீழ்படிதல் உள்ளமாணவர்களையே ஆசிரியர்களும் கல்வி நிறுவனங்களும் விரும்புகின்றனர். இன்றைய நிலையில் கல்விக் கட்டணமாக எவ்வளவு கேட்டாலும் தருகின்ற பெற்றோரையும், அவர்தம் குழந்தைகளையும் தான் கல்வியை வியாபாரமாய் செய்பவர்கள் விரும்பி வரவேற்கிறார்கள்.
    கல்வி என்பதே வேலை பெறுவதற்குத் தான் என்ற அளவுக்கு குறுகிய நோக்கத்துடன் தேடும் மனநிலையில் இன்றைய இளைஞர்கள் பறக்கிறார்கள். வேலை கிடைத்தவுடன், வேலை கொடுத்த நிறுவனத்தையோ, நபர்களையோ நட்புணர்வில் அணுகாமல், முதலாளி – தொழிலாளி என்ற நிலையில் பிரித்து வைத்துப் பணி புரிகின்றனர்.
    வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலை கள் உள்ளிட்ட வேலை வழங்கும் அமைப்புக்கள், தமது பணியாளர்கள் நம்பிக்கையாக, உண்மையாக பணியாற்றவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். பணிபுரிவோருக்கு நியாயமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுமளவு ஊதியம் வழங்கினால், எதிர்பார்ப்புகள் செயல் களாக மாறிவிடுமே.
    சமுதாயம்
    சமம் ‘ ஆதாயம் ‘ சமமாக ஆதாயம் (இலாபம்) பெறுதலே சமுதாயம் என்பது. மனிதனைப் படைத்த இறைவன் மனிதனுக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டான். இன்னும் வேண்டும் என்று கேட்டால், இறைவன் எங்கே செல்வான்? அவனிடம் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை.
    சமுதாயம் என்பது மக்கள், வாழும் குடும்பங்கள் நிறைந்த ஊர்கள், நாடுகள், ஆட்சி யாளர்கள், பத்திரிக்கைகள் என எல்லோரையும் உள்ளடக்கியதுதான்.
    மக்களின் எதிர்பார்ப்பு – நியாயமான, நேர்மையான, ஊழலற்றஆட்சி. ஆனால் வாக்களிக்க இவர்கள் எதிர்பார்ப்பது அன்பளிப்பு, பின் பல இலவசங்கள்.
    ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசியல் கட்சியினர், ஊழலால் சம்பாதித்த பணத்தை வைத்து எல்லா ஊர்களிலும், பினாமி பெயரில் சொத்து வாங்குவர். மற்றவர்கள் வாங்கினால் வழக்கு போடுவார்கள்.
    சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள், எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், செய்யும் வேலைகளால் பயன்பெறுவோரிடமும் அன்பளிப்பு (பிச்சை லஞ்சம்) எதிர்பார்த்து தாமதம் செய்வதும், அந்தப் பணத்தைத் தவறான வழிகளில் செலவழிப் பதும், நோய்களின் விருந்தாளியாக இருப்பதும், ஆடம்பரமாய் குழந்தைகளை வளர்த்து சமுதயாத்தை களங்கப்படுத்துவதும் இரத்தத்தில் ஊறிவிட்டதாகவே உள்ளது.
    அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பொருள் பெற உழைக்கத்தயார்; வேலை கிடைக்காவிட்டால், பசிக்கொடுமையை நீக்க பிச்சை எடுக்கவும் தயார்; பிச்சையும் கிடைக்காத போது பிறருக்குச் சொந்தமான பொருட்களை, அவர்களுக்குத் தெரியாமல் அபகரித்துக் கொள்ளவும் தயார்; இதற்குப் பெயர்தான் திருட்டு.
    மற்றவர்களுக்குத் தெரியாமல் துவங்கிய திருட்டு, இன்று பைக்கில் வந்து கழுத்து செயினை அறுத்துச் செல்லும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
    பொதுமக்களின் வரிப்பணத்தால் சமுதாயத் துக்கு செலவழிக்க ஒதுக்கப்படும் தொகையில் கமிஷன் என்ற பெயரில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கொள்ளையடிப்பதும் சேர்ந்து கொண்டது.
    இதையெல்லாம் கண்டு பொறுக்காத நியாய உணர்வுள்ளவர்களால் உருவாக்கப்பட்ட நக்ஸல் போன்ற இயக்கங்கள் இன்று முழுக்க முழுக்க சுயநலத்துடன் செயல்பட்டு உயிருடன் விளையாடும் நிலை பெருகிவிட்டது.
    இயற்கையும் தூய்மையும்
    நல்லவர்கள் எண்ணிக்கை குறைந்து தீயவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. எனவே, இயற்கை தன்னைத்தானே தூய்மைப் படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டது. சமீப காலங்களில் வேக வேகமாகத் தூய்மைப் பணியைச் செய்து கொண்டிருக்கிறது.
    வழக்கமாக குளிராய் இருக்கும் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு கடும் கோடை வெப்பம், இதனால் பல ஆயிரம் மக்கள் சாவு என்ற செய்தி ஒருபுறம்.
    இந்த அதிக அளவு வெப்பத்தால் பனி மலைகள் உருகி, கடல் நீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயருகிறது. இரு வருடங்களில் பல நாடுகள் நீரில் மூழ்கி விடும் என்ற அபாய அறிவிப்பு மறுபுறம்.
    பாகிஸ்தானில் கடும் மழை, வெள்ளத்தால் பல கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் லே பகுதியில் மேகம் வெடித்து கொட்டிய மழையால் ஏராளமான உயிர்சேதம் மற்றும் பொருள் சேதம்.
    இவையெல்லாம் இயற்கை மனிதனுக்கு விடுக்கும் எச்சரிக்கைகள் என்றேகொள்ள வேண்டும்.
    இறைவன், இயற்கை என்று போதிக்கும் கஷாயம் தரித்த சிலர் குடும்பத்தில் வாலிப வயதுப் பெண்களை தன்வயப்படுத்துவதும், விபரம் தெரிந்தவர்களையும் வசியம் செய்து, சொத்துக் களைத் தானமாகப் பெறுவதும் தொடர்கிறது.
    செய்திகளை உடனுக்குடன் தருவதாய் ஜம்பமடிக்கும் தினசரி பத்திரிக்கைகளில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் இதுபோன்ற வெறுக்கத் தகுந்த செய்திகளுக்குத் தான் முதலிடம்; தலைப்புச் செய்தி.
    மாத, வாரப் பத்திரிக்கைகளுக்கு திரைப்பட நடிகையர், விளம்பர மாடல்கள் இவர்கள் தான் அட்சயப் பாத்திரம். கேட்டால் இவர்களது படம் போட்டால் தான் மக்கள் வாங்குகிறார்கள் என்று சமாதானம் கூறுகின்றனர். மக்களோ வேறு வழியே இல்லை என வேண்டா வெறுப்பாக வாங்குவதாய் கூறுகின்றனர்.
    பால் உறவுக்கல்வியை உரிய பருவ வயதில் இளைஞர்களுக்கு போதிப்பதுதான் இவைகளைத் தடுத்து நிறத்த ஒரே வழி. பேச்சுத் திறமையுள்ளிட்ட பல களங்களில் தங்களின் திறமைகளை வளர்த்து மெருகூட்டிக் கொண்டவர்கள். “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்று தங்கள் திறமைகளை அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.
    “நான் பேச்சை விற்பதில்லை’ என்று பெருந்தன்மையாய் நடமாடிய அமரர் தென்கச்சி சாமிநாதன் போன்றோரும், பேச்சுக்காக நான் பெறும் இந்த குறைந்த தொகை, புத்தகங்கள் வாங்கவே என்று வெளிப்படையாக கூறும் ஒரு சிலரும், நான் பேசுவதென்றால் குறைந்த பட்சம் இவ்வளவு என தங்களுக்கு விலை பேசுவோரும் நிறைந்ததே இச்சமுதாயம்.
    வருகின்ற நன்கொடைகளை, எவ்வித எதிர்பார்ப்புமின்றி கோடிக்கணக்கில் பொது மக்களின் கல்வி, உடல்நலம், குடிநீர் போன்ற வற்றிற்காகச் செலவிட்டுவரும் சத்ய சாய்பாபா போன்றோர்கள் ஒரு புறமிருந்து இயன்றவரை சமமாய் உலகம் இயங்க முயல்கின்றனர்.
    வியாபாரம்
    “‘வாழ்க்கை என்பது வியாபாரம் அதில் ஜனனம் (பிறப்பு) என்பது வரவாகும், மரணம் என்பது செலவாகும்”
    வருவது தானே வரும்
    சமுதாயத்தில் குடும்பத்தில் கிட்டத்தட்ட எல்லோரையுமே ஆய்வு செய்துவிட்டோம். ‘”நீங்கள் செயலை மட்டும் செய்யுங்கள்; அதற்கு மேல் உங்களுக்கு அனுமதி கிடையாது. அந்தச் செயலுக்கு பலன் இதுபோல் இருக்க வேண்டும் என்று உரிமை கொண்டாட முடியாது” இது தான் கீதையின் சாரம்.
    ஒவ்வொருவரது முயற்சிக்கும், செயலுக்கும் சரியான பலன் கிடைக்கும். இதற்கு அவரவர் தான் பொறுப்பு. முயற்சிக்கேற்றவாறு தான் பலன் வந்து சேரும். இதைத்தான் வருவது தானே வரும் என்றனர்.
    இதற்கும் மேல் நம் வாழ்க்கை முறை, நியாயமான தேவைகள், நல்ல பழக்கங்கள் இவற்றால் நமது தகுதி அதிகரிக்க, அதிகரிக்க நமக்குத் தேவையானவைகள் தாமே வந்து சேரும் என்பதைத்தான் வருவது தானே வரும் என்று கூறினர்.
    சிறு உதாரணம்: இராமாயணத்தில் மாற்றான் (இராமன்) மனைவியான சீதையை, இராவணன் கவர்ந்து சென்றான். அவளை அடைந்துவிட இராமன் போன்று உருமாறினான். உடனே இராமனின் நற்குணங்கள் இராமன் உருவத் தில் இருந்த இராவணனுக்கும் தோன்றியதாம். தவறு, என உருவத்தை மாற்றிக் கொண்டானாம்.
    இதுபோல், நல்ல குணங்கள் குடி கொண்டுள்ள மனித உள்ளம் எண்ணும் எண்ணங் கள் விரைவில் செயல்களாக மலர்வது இயற்கை.
    நமக்கு கிடைப்பதை முதலில் ஏற்று திருப்தி அடைவோம். வலுக்கட்டாயமாக எதை அடைந் தாலும், அதனால் தீய விளைவுகள், மட்டுமே வந்து சேரும். மயக்க நிலையில், இதை உணராமல் நம்மில் பலர் செயல்பட்டு, இருப்பதையும் இழந்து வருந்துவதைப் பார்க்கிறோம்.
    நமது செயல்பாடு
    “என்னதான் உடல் முழுவதும் எண்ணெய் பூசி உருண்டாலும் ஒட்டும் மண் தானே ஒட்டும்’ என்பது மூத்தோர் சொல். “நமக்காக விதிக்கப் பட்டது இதுதான்; என் தலைவிதி’ என்று புலம்ப வேண்டியதில்லை. உங்கள் விதியை நீங்கள் மாற்ற முடியும்.
    “ஊழலையும் உப்பக்கம் காண்பர்’ என்று திருவள்ளுவர் – சோர்வே இல்லாமல் தொடர்ந்து முயற்சி செய்து செயல்படுபவர்களைக் கூறுகின்றார்.
    விதி என்பது நம் கைகளுக்கு எட்டும் தூரத்தில் தான் உள்ளது. இதோ சில உதாரணங்கள்.
    குஜராத் மாநிலம் – கடுமையான தீவிரவாத அச்சுறுத்தலுக்கு இடையே உயிரைப் பணயம் வைத்து மக்கள் நன்மைக்காக செயல்படும் அரசாங்கம்.
    பீஹார் மாநிலம் நேர்மையான இளம் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளால் இன்று ஊழல் குறைந்து நல்லாட்சி நடத்தும் அரசாங்கம்.
    சைனா – உற்பத்தி செய்யும் பொருட்களை மிகக்குறைந்த விலைக்கு உலகெங்கும் விற்பனை செய்கிறது. அங்கும் ஊழல் புகுந்துவிட்டது. கம்யூனிஸ்ட் பார்ட்டி சைனா (இடஇ) புகுத்தி செயல்படுத்தும் நன்னடத்தை விதிகளுள் தலையாயது ஆட்சியாளர்கள், அதிகாரிகள், தம் பெயரிலோ, அரசின் சமுதாய நல மேம்பாட்டுப் பணிகளின் ஒப்பந்தங்களைப் பெறக் கூடாது என்பதே அது. இது நல்ல பலனைத் தந்துள்ளது.
    இன்று மக்கள் பிரதிநிதிகளாக பாராளு மன்றத்தில் (M.P.) உள்ளவர்களுள் எத்தனைபேர் இந்த சம்பளத்தை மட்டுமே வாங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாய்’ அல்லவா இருக்கிறது இவர்கள் கேட்கும் சம்பள உயர்வு.
    சட்டத்தின் ஆட்சி, சிபாரிசு இல்லாத நிர்வாகம், ஊழலற்ற அரசாங்கம் இவை நம் எல்லோருக்கும் தேவைகளை நம்மைத் தேடி வரச் செய்யும். அந்நாள் எந்நாள்? பொறுத்திருங்கள். வானம் கிழக்கே வெளுக்கிறது. விரைவில் விடியும்.
    வாழ்க வளமுடன்!