குறிக்கோளுடன் இடைவிடாமல் செயலாற்றுங்கள்
தாராபுரம் சுருணிமகன் on Nov 2010
தன்னம்பிக்கை கொள்ளுங்கள் :-
எந்தச் செயலாக இருந்தாலும் அதை முடித்து விட முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வேண்டும். தாஜ்மஹாலைக் கட்டி முடித்தானே, முகலாயப் பேரரசன் ஷாஷஹான். “உலகிலேயே இதுவரை எவரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு நினைவாலயத்தைக் கட்டி முடிப்பேன்” என்ற மன உறுதியோடு கட்டி முடித்தானே, அந்தப் பேரரசன். வண்ணக்கற்களையும், வெள்ளை நிறப் பளிங்குக் கற்களையும் வைத்து இருபதாண்டுகள் கடும் முயற்சி எடுத்துக் கட்டினானே! தன்னம்பிக்கை இல்லாமல் அவனால் இப்படிப்பட்ட காதல் மாளிகையைக் கட்டி முடித்திருக்க முடியுமா? உலகில் வாழும் எத்தனையோ பேருக்குப் பணம் இருந்தும், செய்வதற்கு மனம் இருந்தும், தான் நினைத்த காரியத்தை நிறைவேற்ற முடியாமல் போனதற்குக் காரணம், தங்கள் மேல் நம்பிக்கை இல்லாமையே ஆகும். “நம்மால் முடியுமா?” என்ற கேள்வியை ஒருவர் எழுப்பும் போதே, அவரால் அந்தக் காரியத்தை செய்ய இயலாது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். எனவே எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் நீங்கள் உங்கள் மேல் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்!
மற்றவர்களைப் பற்றி கவலைப் படலாமா?
நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நீங்கள் எண்ணுகிற போதே, தன்னம்பிக்கை ஆட்டம் கண்டு விடுகிறது. மற்றவர்களைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? முதலில் உங்களைப்பற்றி நீங்கள் நினையுங்கள். எதுவாக இருந்தாலும் “தான் தான்” “தான் தான்” என்று நம்பிக்கை வைக்கும் போது, தான் நம்பிக்கை “தன்னம்பிக்கை” ஆகி விடுகிறது.
ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். எல்லோருடைய பேச்சுக்களையும், கருத்துக்களையும் நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், நீங்கள் வீட்டைக் கட்ட முடியுமா? குழம்பிப் போய் வீடு கட்டும் திட்டத்தையே கைவிட்டு விட வேண்டியதுதான்!
தன்னம்பிக்கையைத் தரை மட்டமாக்கும் வெடிகுண்டுகள் :-
தாழ்வு மனப்பான்மை, பயம், மனச்சோர்வு, நம்பிக்கையின்மை, காலம் தாழ்த்துகின்ற எண்ணம், சோம்பல், பிறருடைய விமர்சனங்களால் கவலை கொள்ளுதல், தேவையற்ற ஐயங்கள் ஆகியவைகள் தன்னம்பிக்கை என்கிற தங்கமாளிகையைத் தரைமட்டமாக்க வந்த வெடிகுண்டுகளாகும். இவைகளை நீங்கள் ஏறெடுத்தும் பார்க்காதீர்கள். எப்பொழுதும் நீங்கள் நல்ல எண்ணங்களை நினையுங்கள். இந்த மண்ணில் நீங்கள் நல்ல வண்ணம் வாழலாம். நீங்கள் எப்பொழுதும் வெற்றி காண வேண்டுமா? நீங்கள் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள்! எண்ணத்தில் தூய்மையும், செயலில் தூய்மையும் இருந்தால் எப்பொழுதும் உங்களுக்கு வெற்றி தான்!
உங்களை மதிப்பவர்களை உள்ளத்தில் வைத்துப் போற்றுங்கள் :-
உங்களுடைய எண்ணங்கள், விரைந்து செயல்படும் செயல்கள், பல்லாண்டுகள் ஆனாலும் கொஞ்சமும் மாறாத உங்கள் நற்பண்புகள், அத்தனை பேரையும் கவர்ந்திழுக்கும் அன்பு, ஆகிய யாவையும் அறிந்து உங்களை மதிப்பவர்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட இயல்புடையவர்களை எக்காலத்திலும் ஒதுக்கி விடாதீர்கள். அவர்களில் பலர் உங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கக் கூடும். அவர்களை நீங்கள் எல்லாக் காலத்திலும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்விற்கு உத்தமமான வழிகளைக் கூறும் அவர்களை நிராகரித்து விடாதீர்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் உங்கள் வாழ்விற்குக் கலங்கரை விளக்கம் போல அமைந்திருப்பார்கள்.
கூடவே இருந்து கொண்டு குழியைத் தோண்டும் “உத்தமர்களை” நம்பாதீர்கள் :
உங்கள் தன்னம்பிக்கையைப் பாழடிக்கும் வண்ணம், போகாத இடத்திற்கெல்லாம் கூட்டிக்கொண்டு போய், உங்களைக் கெடுப்பதுடன் உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் சிலர், ‘நண்பர்கள்’வடிவத்தில் வருவதுண்டு. அவர்கள் உங்களிடம் ‘கூடவே’ இருந்து கொண்டு உங்களுக்கு ஆழமான குழியைத் தோண்டுவார்கள். இத்தகையவர்களிடத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்! தன்னம்பிக்கை என்ற மரம் ஒன்று கூட இருக்கக் கூடாது என்று நினைத்து, அதை அழிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அவர்களால் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள்!
பணிவு வேறு – தாழ்வு மனப்பான்மை என்பது வேறு:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
என்று பணிவின் இலக்கணத்தை வள்ளுவர் அழகாகச் சொல்கிறார். ஒருவருக்கு நீங்கள் பணிந்து போவதால், உங்களுடைய பண்பின் செழுமை, உலகத்தவர்க்குத் தெரியுமே அல்லால் நீங்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவராக ஆகி விட்டீர்கள் என்று அர்த்தமல்ல! மற்றவர்கள் முன்னால் நீங்கள் உங்களை எப்பொழுதும் தாழ்த்திக் கொள்ள நினைக்காதீர்கள்!
உயர்ந்த எண்ணம் கொண்டோரிடம் உறவாடுங்கள் :-
இப்படிச் சொல்லும் போது தாழ்ந்த எண்ணம் கொண்டோரிடம் பழகக் கூடாது என்று பொருளல்ல. அவர்களையும் அன்பினாலே அரவணைத்துச் சென்று, உங்களுடைய உயர்ந்த பண்புகளையும், தன்னம்பிக்கை உணர்வுகளையும் அவர்களும் பெறுமாறு நீங்கள் செய்திட, ஒரு நல்ல வழி காட்டியாக நீங்கள் அமைய வேண்டும். அதே சமயத்தில் மிக உயர்ந்த எண்ணமும், நற்பண்புகளும் அமையப் பெற்றோரிடம் நீங்கள் உறவாடி உன்னதமான நட்பைப் பெற வேண்டும். தன்னம்பிக்கையின் ஆணி வேராகத்திகழ வேண்டும், நீங்கள்!
மிகச் சிறந்த வெற்றியைப் பெறுவதற்கு நேர்மை வேண்டும் :-
நீங்கள் வாழ்க்கையிலே மிகச் சிறந்த வெற்றியைப் பெற முடியும். தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்து கொண்டு, நேர்மையான பாதையிலே யாரெல்லாம் சென்றார்களோ, அவர்களெல்லாம் வாழ்க்கையிலே வெற்றி பெற்றிருக்கிறார்கள். நீங்கள் அந்த வெற்றியைப் பெற முடியாதா? பட்டம் எதுவும் பெறாமலேயே பெர்னாட்ஷா சிறந்த பேரறிஞராக விளங்கினார். படிக்காமலேயே காமராஜர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக விளங்கினார். முடமாக இருந்த நெல்சன் போரிலே வெற்றிக் கொடி நாட்டினார். வறுமையிலே பிறந்தாலும், ஜி.டி. நாயுடு கோடீஸ்வரராக விளங்கினார். இவர்களெல்லாம் தங்கள் கடமைகளைச் செய்து கொண்டு, நேர்மையான பாதையிலே சென்று உயர்ந்தவர்கள்!
உங்கள் எண்ணமும், செயலும் ஒரே குறிக்கோளைப் பற்றியதாக இருக்க வேண்டும் :-
நீங்கள் உங்கள் கொள்கையில் உறுதியுடன் நின்று செயலாற்றினால் வெற்றி நிச்சயம். நீங்கள் உங்கள் கொள்கைகளைத் தேர்ந்தெடுப்பதில் தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது. நீங்கள் எதை விரும்புகின்றீர்களோ அதைப் பலமுறை ஆராய்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் மாவட்ட ஆட்சித் தலைவராக ஆக வேண்டும் என்று விரும்புகின்றீர்கள். உங்களால் முடியுமா என்ற பல முறை சிந்தனை செய்தபின் ‘நிச்சயமாக முடியும்” என்ற முடிவுக்கு வருகின்றீர்கள், ஆங்கில மொழியறிவை அமோகமாகப் பெற்ற நீங்கள், மாவட்ட ஆட்சித் தலைவராக ஆவதற்குரிய தகுதிகள் என்ன, எந்த நூல்களைப் படிக்க வேண்டும்? எப்படித் தேர்வு எழுத வேண்டும் என்ற பல விஷயங்களைத் தெரிந்து கொண்ட பின், உங்கள் முழுக்கவனமும் அதிலேயே இருக்க வேண்டும். இவ்வாறு உங்கள் எண்ணமும், செயலும் ஒரே குறிக்கோளைப் பற்றியதாக இருந்தால், அந்தக்குறிக்கோள் உங்களுக்குப் பலனளிக்காமல் போகுமா?
இடை விடாது செயலாற்றினால் வெற்றி கிடைக்கும்!:-
மனைவி, மகன், மகள், நண்பர் என்று எல்லோரையும் இழந்து அநாதையாகத் தாகூர் நின்ற போதும், மன உறுதியோடு இருந்து இலக்கியப் பணியைச் செய்து வந்தார். போராட்டங்கள், பொறாமைகள் இவைகளில் சிக்கித் தவித்தார். இறுதியில் “கீதாஞ்சலி” என்ற இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றுப் பாரத நாட்டின் பெருமையை உயர்த்தினார். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தாங்கள் நினைத்த குறிக்கோளில் கவனம் செலுத்தி இடைவிடாமல் செயலாற்றுபவர்களுக்கு வெற்றி உறுதியாகக் கிடைக்கும் என்பதற்கு இரவீந்திர நாத் தாகூர், சிறந்த எடுத்துக்காட்டு!
நல்ல குறிக்கோளைத் தேர்ந்தெடுங்கள் :-
எதேனும் ஒரு நல்ல குறிக்கோளைத் தேர்ந்தெடுங்கள். அந்தக் குறிக்கோள் நிறைவேற மன உறுதியோடு இடைவிடாமல் பாடுபடுங்கள்! குறிக்கோளை விட்டு விலகியிருக்கும் எவரும் எந்தச் சாதனையும் படைக்க முடியாது. நியூட்டன் புவி ஈர்ப்புத் தன்மையைக் கண்டு பிடித்தார். எடிசன் மின்சாரத்தைக் கண்டு பிடித்தார். ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்தார். இவைகளெல்லாம் ஒரே குறிக்கோளை விடாப்பிடியுடன் பற்றியிருந்ததுதான், இவர்கள் உயர்வுக்குக் காரணமாக அமைந்தன.
முரளிதரன் முத்தையா இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர், இலங்கையில் நடைபெற்ற தனது இறுதி விளையாட்டில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தமாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகசாதனை புரிந்தார். விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்ற குறிக்கோளுடன் இடைவிடாமல் போராடி இறுதியில் வெற்றி பெற்றார்.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத உணவைப்போன்றது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை தண்ணீர் சிறிதும் இல்லாத நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பதைப் போன்றது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை மணம் இல்லாத மலரைப் போன்றது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை மாலுமி இல்லாத கப்பலைப் போன்றது. எனவே குறிக்கோளுடன் வாழ்ந்து, வாழ்க்கையிலே வெற்றி பெறுங்கள்.
2 comments Posted in Articles