உடல் பருமனான மனிதன் ஒவ்வொரு நாளும்
பலமுறை மரணத்தைத் தழுவுகிறான்
– ஷெல்லி போவே
‘உடல் பருமன் ஒரு நோய்’ என்று சொன்னால் பலரும் நம்புவதில்லை. உடல் பருமனாக இருப்பதுதான் உடல் ஆரோக்கியத்தின் அறிகுறி என்று நம்புகிறார்கள். இந்தத் தவறான நம்பிக்கையை மாற்றுவது இந்தப் புத்தகத்தின் ஒரு நோக்கம் ஆகும்.
உடல் பருமன் என்றால் என்ன?
ஒவ்வொருவருடைய உடலுக்கும் விரும்பத்தக்க எடை என்று ஒன்று உண்டு. அதைக் கண்டுபிடிக்க வழியும் உண்டு. நமது உயரத்திலிருந்து (சென்டிமீட்டரில்) 100ஐக் கழித்தால் வரும் எண்ணே (கிலோ கிராம்களில்) அந்த எடை.
உங்களது உயரம் 165 செ.மீ. என்றால் 165லிருந்து 100ஐக் கழியுங்கள். உங்களின் விரும்பத்தக்க எடை 65 கிலோ ஆகும். உடல் பருமனாக உள்ளதா, இல்லையா என்று பார்க்க வேறு பல அளவுகளும் உண்டு. அவையாவன,
Body Mass Index (BMI)
எடை (கிலோ கிராமில்)
BMI = —————————-
உயரம் (மீ)2
உங்களது எடை 72 கிலோ, உயரம் 170 செ.மீ. என்றால், உங்களது
72 72
BMI = —– = ——- = 24.91
1.702 2.89
ஒருவரது BMI 23க்குள் இருப்பது ஆரோக்கியமானது. இந்த அளவுகோலை வைத்து உடல் பருமனை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
உடல் பருமனை அளவிடும் இன்னொரு முறை
ஆ. Waist-Hip Rate: இது வயிறு-இடுப்பு விகிதம் ஆகும். இவ்விகிதம் ஆண்களுக்கு 1.0 எண்ணிற்கு குறைவாகவும், பெண்களுக்கு 0.85 எண்ணிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, வயிறு பகுதி 80 செ.மீ. என்று வைத்துக் கொள்வோம். இடுப்பு பகுதி 80 செ.மீ. என்றால் வயிறு-இடுப்பு விகிதம் 80 / 80 = 1. ஒருவருக்கு வயிறு 100 செ.மீ. இடுப்பு 80 செ.மீ. என்றால் வயிறு-இடுப்பு விகிதம் 100 / 80 = 1.25.
சுருங்கச் சொன்னால், வயிற்றுப் பகுதியின் அளவு இடுப்பின் அளவை விடக் குறைவாக இருத்தல் வேண்டும். வயிற்றுப் (Waist) பகுதி இடுப்புப் (Hip) பகுதியைவிட அதிகமானால் உடல் பருமனாகிவிட்டது என்று பொருள்.
நான் எங்கு பணியாற்றினாலும் என்னுடன் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் கூறுவதெல்லாம் உடல் எடையைக் குறையுங்கள் என்பதாகும். அப்படி ஓர் உதவி ஆணையரிடம் சொன்னதும் அவர் கோபித்துக் கொண்டார். ‘நான் நன்றாகத்தானே இருக்கிறேன், என்னைப்போல யாராவது சுறுசுறுப்பாக நமது ஆயுதப்படையில் இருக்கிறார்களா? சொல்லுங்கள்’ என்று கேட்டார். பல அதிகாரிகள் எனது வேண்டுகோளை ஏற்று என்னுடன் ஓடினாலும் இவர் வருவதாக இல்லை. பிறகு அவர் பணி மாறுதலில் வேறிடத்திற்குச் சென்றார்.
சில நாட்கள் கழித்து உதவி ஆணையரின் மனைவி தொலைபேசியில் பேசினார். தனது கணவர் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்று கூறினார். நான் அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முடித்துவிட்டு வெளியில் வந்தனர். உதவி ஆணையர் எப்படி இருக்கிறார் என்று கேட்டேன். ‘இதயத்தில் மூன்று அடைப்புகள், அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இப்போது எதுவும் சொல்ல முடியாது’ என்று கூறினார்கள். ‘அப்பா எப்படி ஐயா இருக்கிறார்? சொல்லுங்க ஐயா’ என்று கேட்டு கதறி அழுதார் MBA படிக்கும் அவரது மகள். நான் என்ன சொல்ல முடியும்? அறுவை சிகிச்சை முடிந்து இருக்கிறது. விரைவில் குணமாகிவிடுவார் என்றேன்.
அதிகாலை ஐந்து மணிக்கு அந்த உதவி ஆணையர் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி வந்தது.
இதே போல நான் நேற்று பார்த்த பலர் இன்று இல்லை. காரணம், அதிக பருமன் ………. இதய நோய் …………… ஆஸ்பத்திரியில் மரணம்.
உடல் பருமனின் விளைவு என்ன?
உடல் பருமன் அதிகம் கொண்ட நடுத்தர வயது உள்ளவர்கள் பலர் . நான் ஆரோக்கியமாகத் தானே உள்ளேன்? மற்றவர்களைவிட என்னால் வேகமாக நடக்க முடியும். எனக்கு நோய் எதுவும் இல்லை, எதற்காக உடல் எடையைக் குறைக்க வேண்டும்? என்று கேட்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்வது என்னவென்றால் உங்கள் உடல்நலம் நன்றாக உ;ளளது என்பது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களால் இதைச் சொல்ல முடியுமா? உடல் பருமன் என்ற நிலைத் தொடர்ந்து நீடித்தால் உடலில் என்னென்ன நோய்கள் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது என்பதைப் பாருங்கள்.
1. சர்க்கரை நோய் – Diabetes
2. இதய நோய் – Coronary Artery Diseases (CAD)
3. பக்க வாதம் – Stroke
4. மூட்டுவலி – Arthritis
5. அதிக இரத்த அழுத்தம் – Hypertension
6. புற்றுநோய் – Cancer
7. மனநோய் – Mental Disorder
8. பெண்களுக்கு மலட்டுத் தன்மை – Infertility
9. குடலிறக்கம் – Hernia
10. பித்தப்பை கல் – Gall Stone
இதில் பருமனாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வர 30 சதவிகிதம் அதிகம் வாய்ப்புள்ளது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. முன் காலத்தில் காலரா, பெரியம்மை, போலியோ, மலேரியா, டெங்கு போன்ற பலவித கொடிய நோய்கள் (Epidemic Disease) இருந்தன. ஆனால் அவைகளை ஒழிக்கும் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு இன்று நாம் பாதுகாப்பான நிலையில் இருக்கிறோம். அம்மை நோய்க்கான தடுப்பு ஊசி கண்டுபிடித்த எட்வெர்ட் ஜென்னர், ராபிஸ் என்னும் வெறிநாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்த லுயி பாஸ்டர், போலியோ நோய்க்கு மருந்து கண்ட ஜோனாஸ் சால்க் ஆகியோர்கள் மனித குலம் நல்வாழ்வு வாழ ஆற்றிய பங்கு எவ்வளவு என்பதை எண்ணிப்பாருங்கள்.
இவர்கள் இக்கொடிய நோய்களிலிருந்து விடுதலை வாங்கித் தந்துள்ளனர். இந்நோய்களுக்கு நமது உடலில் நிரந்தர தடுப்பாற்றலை ஏற்படுத்த, இவ்விஞ்ஞானிகள் அற்புத தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த மாபெரும் மருத்துவ விஞ்ஞானிகளுக்கு இந்நூலின் மூலமாக நாம் நன்றி சொல்லிக் கொள்வோம்.
இன்றைய உயிர்கொல்லி நோய் மலேரியாவோ, அம்மை நோயோ, போலியோவோ அல்லது பறவைக் காய்ச்சலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால் இன்று உலகளவில் பரவியுள்ள எய்ட்ஸ் நோயோ, புற்றுநோயோ கூட அல்ல. இன்றைய தினத்தின் உயிர்க்கொல்லி சர்க்கரை (Diabetes) நோய் ஆகும். இதனை ஒரு Silent Killer என்றும் கூறுவர்.
சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyuria)
- அடிக்கடி பசித்தல் (Polyphagia)
- அடிக்கடி தாகம் எடுத்தல் (Polydypsia)
சர்க்கரை நோய் என்பது நிரந்தர வளர்சிதை மாற்ற நோய் (Chronic Metabolic Disorder) ஆகும். இதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகி (Hyperglycemia) அதன் மூலம் பலவித நோய்களும் வந்துவிடுகின்றன. அவையாவன,
அ. இதய நோய் (Cardio Vascular Disease)
ஆ. கண் நோய் (Retinopathy)
இ. பல் நோய் (Periodontal and other Dental Disease)
ஈ. கால் புண் (Foot Infection)
உ. சிறுநீரக நோய் (Nephropathy)
ஊ. நரம்பு நோய் (Neuropathy)
சர்க்கரை நோயினால் ஏற்படும் அனைத்து வித நோய்களும் இதய நோயைப் போல மிகவும் மோசமானவைதான். சர்க்கரை நோய் வர ஒரு முக்கிய காரணம் உடல்பருமன். உடல் பருமன் என்ற நோய் இப்போது ஒரு என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது. பணக்கார நாடுகள் என்றல்லாமல் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளைக் கூட இந்நோய் பாதித்து வருகிறது. பூமியில் 160 கோடி மக்கள் அதிக எடை (over weight) உள்ளவர். இதில் 40 கோடி மக்கள் உடல் பருமன் உள்ளவர்கள் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்து இருக்கிறது.
உடல் பருமனின் தாக்கம்
2004 – 2006ம் ஆண்டுகளில் பரிசோதனை செய்யப்பட்ட டில்லி பள்ளி மாணவர்களில் 30 சதவிகிதம் மாணவர்கள் உடல் பருமன் உடையவர்கள் என்று கண்டறியப்பட்டது. இந்தியாவில் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை நியுஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகமாகும். உடல் பருமன் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 15 கோடி என்று National Institute of Nutrition என்ற நிறுவனம் கூறுகிறது. இது மக்கள் தொகையில் 15 சதவிகிதம் ஆகும். இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் குழந்தைகள் கூட அதிக எடையுடனும், பருமனுடனும் உள்ளனர்.
உடல் பருமன் ஒரு சர்வதேச பிரச்சினை ஆகிவிட்டது. எனவேதான் அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நவம்பர் 26ம் தேதி உலக உடல் பருமன் எதிர்ப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
உடல் பருமனைப் பற்றி வெளிநாட்டவர் கவலைப்படுவதைவிட நம் நாட்டவர்கள் அதிகம் கவலைப்பட பல காரணங்கள் உண்டு. இந்தியர்களின் உடல் கூறு மற்றும் மரபுக்கூறு, சர்க்கரை நோய் ஏற்பட ஏதுவானது. அதேபோல் இந்தியர்களின் இதய தமனிகள் (Coronary artery) மிகவும் சிறியன. இதனால் இதயநோய் எளிதில் ஏற்பட்டுவிடும். ஆகவே பருமனாக இருப்பவர்கள் அதிகமாகி 2010ல் இந்தியா உலகின் மாரடைப்புத் தலைநகர் ஆகிவிடும் அபாயம் உள்ளது என்று கூறுகிறது உலக நல நிறுவன (WHO) அறிக்கை.
இன்று நமக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து அணு ஆயுதங்களில் இல்லை. அது நம்முடைய தட்டில் வைக்கப்பட்ட உணவில் தான் இருக்கிறது. உங்கள் உணவுப்பழக்கமே கூட உங்களின் மிகப்பெரிய எதிரியாக இருக்கக்கூடும். எனவே தான் மீண்டும் வலியுறுத்துகிறேன், உங்கள் உணவுப் பழக்கங்களை மாற்றி உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
நல்ல செய்தி
ஆரோக்கியத்திற்கு அதிகக் கெடுதல் விளைவிக்கும் உடல்பருமன் என்னும் நோயைப் பற்றி ஒரு நல்ல செய்தியும் உண்டு. அது உடல் பருமனை எளிதில் குறைக்க முடியும் என்பதுதான். உடல் எடையைக் குறைப்பதன் மூலம் பயங்கர நோய்கள் வருவதைத் தவிர்த்து விடலாம். உடல் பருமனாகாமல் இருக்கவும், அப்படி பருமனாகிவிட்டால் அதனைக் குறைப்பதற்கான வழிமுறைகளும் உள்ளன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
1. உங்களால் குறைக்க முடியும் என்ற ஓர் எடையை இலக்காக வையுங்கள்.
2. உங்களால் தொடர்ந்து கடைபிடிக்க முடியும் என்ற ஓர் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3. சிறிய அளவு உணவு பல முறை உண்ணுங்கள். அளவுக்கு அதிகமான உணவை ஒரு போதும் உண்ணாதீர்கள். தினமும் 100 கலோரிகள் அதிகம் உண்டால் ஓர் ஆண்டிற்கு ஐந்து கிலோ எடை உடலில் கூடும்.
4. பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5. உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை குறைத்து விடுங்கள்.
6. ஒரு டம்ளர் (200 மி.லி.) சுத்தமான தண்ணீர் தினமும் எட்டுமுறை குடியுங்கள்.
7. தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
8. எட்டு மணிநேரம் உறங்குங்கள்.
9. தவறாமல் தியானம் செய்யுங்கள்.
10. மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்.
11. நோய் கண்டதும் மருத்துவரை அணுகுங்கள்
இவை அனைத்தையும் பற்றி விவரித்துவிட்டேன்.
உடலை ஒல்லியாக வைத்திருப்பதே உடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். உடல் ஒல்லியாக இருந்தால் எந்த நோயும் வரவே வராது என்று சொல்ல முடியாது. சிலருக்கு பாரம்பரியமாகவே, மரபணுவில் நோய் (Genes) இருக்கும். அவர்கள் ஒல்லியாக இருந்தாலும் அந்நோய் வந்துவிடும். ஆனால், உடலை ஒல்லியாக வைத்திருப்பவர்கள் அந்நோய் தாக்குதலைத் தள்ளிப்போட முடியும். நோய் வந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும். ஆனால், உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இயற்கையில் அவரது மரபணுவில் உள்ள நோய்கள் மட்டும் இன்றி, பிற நோய்களும் உடலில் தொற்றிக் கொள்ளும். நடுத்தர வயது உள்ளவர்கள் ஒல்லியாக இருந்தால் அவர்கள் பருமனாக இருப்பவர்களைவிட 30 சதவிகிதம் அதிகநாள் வாழ்வார்கள். அதுபோல அவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பும் 60 சதவிகிதம் குறைவு.
விரும்பத்தக்க அளவு எடை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு அந்த எடையில் உடலைப் பராமரிக்க வேண்டும். தினமும் எடையைப் பார்க்க வேண்டும். அளக்கும் நாடா ஒன்றை வாங்கி வயிற்றுப் பகுதியையும், இடுப்புப் பகுதியையும் அளந்து பார்க்க வேண்டும். எடை அதிகரித்துவிட்டால் அத்தியாயம் 3ல் கண்ட உணவு முறையையும், அத்தியாயம் 4ல் கண்ட உடற்பயிற்சியையும் மேற்கொண்டு எடையைப் படிப்படியாக குறைக்க வேண்டும்.
அதிரடி எடைக்குறைப்பு ஆபத்தானது
இரண்டே வருடத்தில் 10 கிலோ எடையைக் குறைத்துக் காட்டுகிறோம் என்ற விளம்பரங்களைப் பார்க்கிறோம். ஒரு பருமனான நபர் பின்னர் ஒல்லியாக மாறிவிட்ட படமும் விளம்பரம்படுத்தப் படுகின்றது. உடல் பருமன் உள்ளவர்கள் பலரும் இந்நிலையங்களுக்குச் செல்கிறார்கள். இதில் பல வித ஆபத்துகள் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றார்கள். இதைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் மலைப்போல் குவிந்துள்ளன.
விரதம் (Fasting)
உடல் எடைக் குறைப்பதாக கூறி விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள் உடலில் எந்த எடையைக் குறைப்பார்கள் என்று கூறுவது இல்லை. வெறும் எடையை குறைப்பார்கள் அவ்வளவுதான். பருமனாக இருப்பவர்களுக்கு உடலில் இருக்கும் கொழுப்பு குறைந்தது என்றால் வரவேற்கத்தக்கதே. ஆனால் பட்டினிக் கிடப்பதன் மூலம் அல்லது தினமும் ஒரு வேளை மட்டும் உண்பதன் மூலம் உடலில் உள்ள நீர் மற்றும் புரதத்தின் அளவு குறைந்து, அதன் மூலம் தசைகளின் அளவும் குறைந்து விடுகிறது. குறைக்கப்பட வேண்டிய கொழுப்பு உடலில் அப்படியே இருந்து விடுகிறது. குறைக்கப்படக் கூடாத செல்களும் நீரும் குறைந்து விடுகின்றன.
விரதம் இருந்து ஒருவர் இரண்டு கிலோ எடை குறைத்தார் என்று வைத்துக் கொள்வோம். அவர் உடலில் எவற்றையெல்லாம் இழந்திருப்பார் என்பதைப் பார்ப்போம்.
அ. இழந்த உடல் எடை – 2 கிலோ
ஆ. இழந்த நீரின் அளவு – 4 கிலோ
இ. சம்பாதித்த கொழுப்பு – 3 கிலோ
ஈ. இழந்த தசைகள் – 1 கிலோ
விரதத்தின் மூலம் 4 கிலோ நீரையும், 1 கிலோ தசையை இழந்த இவர் அதே விரதத்தின் மூலம் 3 கிலோ கொழுப்பையும் உடலில் சேர்த்துக் கொண்டு விட்டார். இதில் 2 கிலோ எடை குறைத்தது ஒன்றும் விரும்பத்தக்க எடைக் குறைப்பே அல்ல. இன்னும் சொல்லப் போனால் இதனால் பாதிப்பே அதிகமாக இருக்கிறது. எனவே, அதிரடி எடைக் குறைப்பு செய்யாமல் இருப்பதே மேல்.
எடை குறைக்கச் சென்றவர் மிகவும் பலவீனம் ஆவதோடு மட்டுமல்லாமல், பிற்காலத்தில் கொழுப்பைக் குறைக்கத் தேவையான தசைகள், தசைகளில் உள்ள செல்கள், என்சைம்கள், நீர் ஆகியவற்றை இழந்து வீடு திரும்புகிறார். இதனால், இந்த பட்டினி படலம் முடிந்து வழக்கமான உணவு உண்ணத் துவங்கியதும் உணவுப் பொருளிலுள்ள கொழுப்பு எரிந்து சக்தியாக மாற்றத் தேவையான என்ஸைம்கள் மற்றும் செல்கள் இல்லாததால் கொழுப்பு அதிக அளவில் உடலில் சேமிக்கப்படுகிறது. இவர் முதலில் இருந்த எடையை விட அதிகம் எடையுடையவர் ஆகிவிடுவார். அது மட்டுமல்லாமல், பல நாட்கள் விரதம் இருக்கும் போது உணவிற்காக ஏங்கிய இவர், எடைக் குறைந்ததும், வழக்கத்தை விட அதிகமாக உண்ண ஆரம்பித்துவிடுவார். இதனால் இந்த அதிரடி எடைக் குறைப்பு நிலையத்திலிருந்து விடுபட்டதும் இவர் எடை இதற்கு முன்னதாக இருந்த எடையை விட அதிகமாகி விடுகிறது.
விரதம் வேண்டாம்; உடற்பயிற்சி போதும்
எனவே விரதம் இருப்பதைத் தவிர்த்து அளவான எல்லா சத்துகளும் அடங்கிய உணவினை உட்கொண்டு ஏரோபிக் உடற்பயிற்சி (Aerobic Exercise) என்ற வகை உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். (இதைப் பற்றி அத்தியாயம் 4ல் விவரிக்கப்பட்டிருக்கிறது). எடையைக் குறைக்க நீங்கள் செய்ய வேண்டியது, காலையில் எழுந்ததும் கால்களில் ஷூவை மாட்டிக் கொண்டு வீட்டின் முன் கதவைத் திறந்து ஓட வேண்டியது தான். தேவைக்கு அதிகமான கொழுப்பு உங்களைவிட்டு ஓடி விடும். ஒரு வாரம் ஒரு கிலோ எடை குறைப்பதே போதுமானதாகும்.
எந்த அதிரடி எடைக் குறைப்பு நிறுவனமும் ஒரு வாரம் ஒரு கிலோவிற்கு மேல் எடையைக் குறைத்துக் காட்டுகிறோம் என்றால் அதை நம்பாதீர்கள். ஏனென்றால் நீங்கள் மிதமான உணவு உண்டு போதுமான உடற்பயிற்சிகள் செய்தால் கூட உங்கள் உடலில் ஒரு கிலோவிற்கு மேல் கொழுப்பு கரைவதில்லை. வாரத்திற்கு ஒரு கிலோவிற்கு மேல் எடை குறைந்து விட்டது என்றால் அது கொழுப்பு கரைந்ததால் ஏற்பட்ட எடைக் குறைவு அல்ல. இந்த எடைக்குறைப்பு உடலில் உள்ள நீர் மற்றும் தசைகள் குறைந்து விட்டதால் ஏற்பட்டிருக்கும் எடை வீழ்ச்சியே அன்றி வேறொன்றாக இருக்க முடியாது.
எனவே, நியாயமான எடைக் குறைப்பு நிலையங்களுக்குச் செல்வதாக இருந்தால் உங்கள் உடல் எடையை எடை இயந்திரத்தில் பார்ப்பதைப் போல இன்னொரு முறையையும் கையாளுங்கள். எடை குறையும்போது நீங்கள் அணிந்திருந்த ஆடை தளர்கிறதா என்பதைப் பரிசோதித்துப் பாருங்கள். இடுப்பைச் சுற்றி அணிந்திருந்த ஆடை தளர்ந்தால்தான் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு கரைந்திருக்கிறது என்று பொருளாகும்.
கார்போஹைட்ரேட் குறைப்பு
சில அதிரடி எடைக்குறைப்பு மையங்கள் அதிக புரதச்சத்துள்ள அதே வேளையில் மிகக் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவை உண்ண வைத்து எடையினை குறைத்துக் காட்டுகிறார்கள்.
ஒரு நாள் உண்ணும் உணவில் உள்ள மொத்த கலோரிகளில் 12 சதவீதம் புரதம், 23 சதவீதம் கொழுப்பு, 65 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் என்று இருத்தல் வேண்டும். உணவில் கார்போஹைட்ரேட் அளவு 65 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் உடனே வேதியல் மாறுகிறது. ஏதோ உணவு பற்றாக்குறை வந்தவிட்டது, எனவே உணவை சேமிக்க வேண்டும் என்ற ஒரு நிலையை உடல் எடுத்துவிடுகிறது. இது கூட மனித உடல் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு நிலைப்பாடாகும். எனவே, உடலானது குறைந்த பட்ச கார்போஹைட்ரேட்டையும், இன்னும் சொல்லப்போனால் செல்களைப் பழுது பார்க்க வேண்டிய புரத்தையும் கூட கொழுப்பாக மாற்றி உடலில் தேக்கி வைத்துவிடும். ஆக, எடையைக் குறைக்க உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைக்கப்போய் அதன் மூலம் உடலில் கொழுப்பின் எடை அதிகமாகிவிடும்.
கார்போஹைட்ரேட் அடங்கிய முழு கோதுமை, கைக்குத்தல் அரிசி, ராகி, கம்பு போன்ற தானியங்களை உட்கொள்ளலாம். அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் தீட்டப்படுவதால் அதில் உள்ள வைட்டமின்கள் களையப்படுகிறது. ஆனாலும் இவை அனைத்துமே கார்போஹைட்ரேட் தாம். இவை நமது வயிற்றில் மெதுவாகச் செரிப்பதால் அதிக அளவு குளுக்கோஸ் கொழுப்பாக மாற்றப்படுவது தடைபடுகிறது. எனவே உடல் எடை அதிகமாவதில்லை. அதே வேளையில் வெண்சர்க்கரை (சீனி) 100 சதவீதம் குளுக்கோஸ் ஆகும். இது உடனடியாக இரத்தத்தில் கலந்து விடுகிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் அது உடனே கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் தேக்கி வைக்கப்படுகிறது. எனவே உடல் நலத்தின் எதிரி தானியமோ, சோறோ அல்ல, நாம் உண்ணும் சர்க்கரையே (Sugar) ஆகும். இதைத் தவிர்த்தாலே, உடல் எடைக் குறையும்.
விரதம் – ஓர் என்ஸைம் கொல்லி
நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைச் சக்தியாக மாற்றுவதும், அதிலிருந்து பல விதமான ஊட்டச்சத்துக்களைத் தயாரிப்பதும் என்சைம்கள் மற்றும் ஹார்மோன்கள் ஆகும். இந்த என்சைம்களும் புரதங்களே. பலவிதமான என்சைம்கள் உள்ளன. நமது தசைகளில் உள்ள செல்லுக்குள் குளுக்கோஸ் தானாகவே செல்ல முடியாது. குளுக்கோஸை இன்சுலின் என்ற ஹார்மோன் (இது கணைத்தில் உற்பத்தி ஆகிறது) எடுத்துச் செல்கிறது. தசைகளிலிலுள்ள செல்கள் பெருத்துவிட்டால் (உடல்பருமன் உள்ளவர்கள்) இந்த இன்சுலினால் குளுக்கோஸை செல்லுக்குள்ளே எடுத்துச் சொல்ல முடியாமல் இரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். இறுதியாக இந்த குளுக்கோஸ் கிளைக்கோஜனாக மாறி பின்னர் மூன்று கொழுப்பு அமிலத்துடன் சேர்ந்து டிரைக் கிளிசரைடாக மாறிவிடுகிறது. டிரை கிளிசரைடுகள் கொழுப்புச் செல்லுக்குள் தஞ்சம் புகுந்து விடுகின்றது. இந்த டிரை கிளிசரைடுதான் நமது உடலில் இருக்கும் கொழுப்பு. இதனால் பருமனான நபர் மீண்டும் பருமன் ஆகிவிடுகின்றனர். தசையிலுள்ள செல்கள் இன்சுலின் என்ற ஹார்மோனுக்கு தகுந்த இசைவுதராமல் இருப்பதே இதற்கு காரணம். காலப்போக்கில் குளுக்கோஸ் இல்லாமல் செல்களும் செயலிழந்து தசைகளின் அளவும், எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது.
இந்நிலையைத் தவிர்ப்பதற்கு நாம் மேற்கொள்வது விரதம் அல்ல; உடற்பயிற்சி செய்வதே ஆகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலிலுள்ள தசைகள் நீளமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அவை இன்சுலின் கொண்டுவரும் குளுக்கோசை ஏற்றுக் கொள்கின்றன. இதனால் குளுக்கோஸ் கொழுப்பாக மாற்றப்படுவது தவிர்க்கப்படுகிறது.
விரதம் இருப்பதைப் புறக்கணியுங்கள். பாகம் மூன்றில் நான் குறிப்பிட்டுள்ள உணவு முறைகளைப்ப பின்பற்றிப் பாருங்கள். உடல் எடை குறையும். உடல் எடைக் குறைவது கூட ஓர் இன்பமான அனுபவமாகவும் இருக்கும்.
உடல் பருமனைக் குணப்படுத்தும் சிகிச்சை முறை
சத்தான உணவினைத் தெரிவு செய்து உண்பது, உடற்பயிற்சி செய்வது என்று உடல் எடையைக் குறைப்பதுதான் ஆரோக்கியமானது. இந்த முறையைத் தவிர்த்து வேறொரு முறையை சில மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுவே அறுவே சிகிச்சை. இந்த அறுவை சிகிச்சைக்கு Bariatic Surgery என்று பெயர்.
பேரியாட்டிக் அறுவை சிகிச்சை இரண்டு முறைகளில் செய்யப்படுகிறது.
அ. உணவைக் கட்டுப்படுத்தும் முறை
இம்முறையில் இரைப்பையின் ஒரு பகுதியை Gastric Banding என்னும் முறைப்படி ஒட்டி அதன் கொள்ளளவைக் குறைத்து விடுகிறார்கள். இரைப்பையின் கொள்ளளவு குறைவதால் உண்ணும் உணவின் அளவும் குறைந்து விடுகிறது. இதனால் உடல் பருமன் படிப்படியாக குறையும்.
ஆ. கிரகிக்கும் திறனைக் குறைக்கும் முறை
இம்முறையில் இரைப்பையின் ஒரு பகுதியையும், சிறுகுடலின் ஒரு பகுதியையும் Gastric by-pass முறைப்படி தனிமைப்படுத்தி, அப்பகுதியை பயன்படாமல் செய்துவிடுகிறார்கள். இதனால் உண்ணும் உணவின் அளவும் குறைகிறது. உடலில் உறிஞ்சப்படும் ஊட்டச்சத்தின் அளவும் குறைகிறது. உடல் எடையும் படிப்படியாகக் குறைந்துவிடுகிறது.
இரைப்பையைச் சிறதாக்கும் Gastric Banding என்னும் முறைதான் பிரபலமாக இருக்கிறது. நோய் வரும் அளவிற்கு உடல் பருமனுள்ள (Morbidly obese) பலர் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்கிறார்கள். இந்தச் சிகிச்சையில் இறப்பு விகிதம் ஒரு சதவீதம் ஆகும். எனக்குத் தெரிந்த ஒருவர் இறந்தும் இருக்கிறார். என்ன பயமாக இருக்கிறதா? அந்த ஒரு சதவீதம் நாமாக கூட இருக்கலாம். மிக அதிகமாக உடல் பருமனாகிவிட்டால் உயிரைக் காக்க இந்த அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை.
எனக்குப் பழக்கமான நண்பர்கள் சிலர் உடற்பயிற்சி செய்யத் தயங்குகிறார்கள். உடற்பயிற்சி செய்வது அவர்களுக்குச் சிரமமாக இருக்கிறது. உடற்பயிற்சி செய்வதால் வலி ஏற்படுகிறது என்கிறார்கள். ஒருநாள் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்படும் பொழுதுதான் உடற்பயிற்சியின் போது ஏற்படும் வலி சுகமான வலி என்பது புரியும்.
எனவே உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இந்த இரண்டும் தான் உடல் பருமனைத் தடுக்கும் எளிய இயற்கை முறைகளாகும்.