மானிடா எங்கே செல்கிறாய்? நில்!
ஒரு மனிதனுக்குள் இருக்கும் வலுவை மூன்றாகப் பிரிக்கலாம்.
ஓன்று : உடல் வலு
இரண்டு: உள்ள வலு
மூன்று : மூளை (சிந்தனை) வலு
இவை மூன்றுமே ஒருவனிடத்தில் இருக்குமானால் அவன் தான் வல்லரசன். இம்மூன்று ஆற்றல்களில் ஒவ்வொன்றாலும் ஒவ்வொன்றைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். ஆதலால் இந்த அறிய சக்திகளை நல்ல நோக்கங்களுக்காகவும், ஆக்கப்பூர்வமான விசயங்களுக்கும் செயல்படுத்திப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மூளையற்றவன் மூலையில்தான் இருப்பான் – கிடப்பான்.
உடலையும் , உள்ளத்தையும், சிந்தனையையும், செயலையும் எவனொருவன் ஒன்றாக இயக்குகிறானோ அவனால் முடியாது என்பது உலகில் இல்லை.
அனைத்தையும் ஒன்றாக இயக்குபவனே சுய ஆளுகையில் சிறந்தவன். மனம் எதையும் முடியும் என்று நினைத்ததால் தான், மனிதனால் முடியாதது இல்லை என்ற கருத்தும் சமூகத்தில் பிறந்தது.
மண் இருக்கிறது என்றால், அதில் பயிரிட்டால் பயிரிட்ட அப்பயிர் வளரும். நிலத்தில் பயிரிடாமல் நமக்குத் தேவையான எதுவும் வளருவதில்லை, விளைவதில்லை . பூமியில் நடாமலும், பயிரிடாமலும் முளைப்பது புல், பூண்டு செடி, கொடி போன்ற நமக்குத் தேவையில்லாதவைகளே. அதே மாதிரித்தான் மனித மனமும். இலக்கை நடாமல் சும்மா வெறும் மனதாகவே வைத்திருந்தாலும் முன்னேற்றத்திற்குத் தேவை இல்லாத தீய சிந்தனைகளும், எண்ணங்களும் எழுந்து அவ்வழியில் உள்ளம் போய்க்கொண்டே இருக்கும். அதன் பயன் தீயவைகளாகவே தான் இருக்கும்.
நிலத்தைப்போல் பயிரிடாமல் மனதை சும்மா போட்டு விட்டால் வேண்டாதவை விளைந்து கொண்டே வரும். ஏதோ ஒன்றை பயிரிட்டு விட்டால் அதை நாம் பாதுகாத்து வளர்த்தும் வருவோம் அது வளர்ந்து வரும். அவ்வளர்ச்சியைப் பின்தொடர்வோம்.
நிலத்திலுள்ள வேண்டாதவைகளைக் களைக்கொல்லி கொண்டு அகற்றுவதைப்போல, அவ்வப்போது மனதில் முளைக்கும் களைகளையும் அவ்வாறு நீக்குவது மிகுந்த பயனைத்தந்து உயர்வுப்பாதையில் உன்னை அழைத்துச்செல்லும்.
தேவையில்லாத சிந்தனைகள் எழுந்தால், தேவையான சிந்தனைகள் கொண்டு வெட்டிவிட வேண்டும். பருவத்தே பயிர் செய் என்பது உனக்கும்தான். இளமைப் பருவத்திலேயே உன் இதயத்தில் இலக்கை நட்டுவிடு.
சின்னப்பசங்க வெள்ளாமை வீடு வந்து சேராது என்பது பழமொழி அல்ல,அது பொய் மொழி. ஒரு மாணவனின் திறமைக்கும், அறிவுக்கும், செயலுக்கும், சுதந்திரத்திற்கும் போடப்பட்ட தடுப்புச் சுவர். ஆனால் இன்றோ சின்னப்பசங்க வெள்ளாமைதான் அதிகமாக வீடு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.
இலட்சியப் பயணம்:
இலக்கில்லாப் பயணத்திற்கு முடிவு என்பதும் இல்லை. இப்பூமியில் மனிதனாய்ப் பிறந்துவிட்டோம் . சூரியன் தோன்றி சந்திரன் வருகிறது, சந்திரன் தோன்றி சூரியன் வருகிறது; என்று எண்ணித் தன் வாழ்வில் ஒரு நோக்கமும் இல்லாமல் வாழ்ந்து திரிந்து கொண்டிருப்பவன் மனிதனுமல்ல, இளைஞனும் அல்ல.பெரியதொரு நோக்கத்தைத் தேர்ந்தெடுத்து அதைத் தொலைநோக்குப் பார்வையால் முன்பே கண்டுவிடுங்கள். பின்பு அந்த லட்சியக் கனவை எண்ணிப் பயணிப்பது எல்லாம் இலட்சியப் பயணம் ஆகும்.
எதற்கும் அஞ்சாதீர்கள்
“கொள்கைக்காகச் சிறைப்பட அஞ்சுபவன் கோழை ” என்று அண்ணல் காந்தியடிகள் அன்றே சொல்லியிருக்கின்றார் . உலக வீரத்திற்கே எடுத்துக் காட்டான வீரன்,மாவீரன் தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்றவர்கள் பிறந்து, வாழ்ந்து, மறைந்த தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் நாம் என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ளுங்கள். இவரது வீரவாழ்க்கை வரலாற்றையும், மேலும் இவர் போன்றுள்ள நேதாஜி,பிரபாகரன் போன்றவர்களின் சரித்திரங்களையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவன் கோழையாக இருந்தால் கூட இச்செய்திகள் அவனை வீரனாக மாற்றக்கூடிய செய்திகளாகும். மனிதர்களே மரணம் என்பது வலி இல்லாத ஓன்று; மரணத்தைப் பற்றிய பயம் தான் வலிக்கும் என்கிறார்கள் பத்திரிகை எழுத்தாளர்கள்.
தோல்வி என்ற வார்த்தை தோன்றிய வரலாறு
என் சிந்தனைக்குத் தெரிந்த வரையில் தன்னம்பிக்கை இல்லாதவர்களும், விடாமுயற்சி இல்லாதவர்களும், சோம்பேறிகளும், திறமை இல்லாதவர்களும், கோழைகளும் இது போன்றுள்ளவர்களும் கண்டுபிடித்த வார்த்தை தான் தோல்வி என்பது. இந்தத் தோல்வி என்ற வாசகத்தை உலகிற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியதும் இவர்கள் தான். தோல்வி என்ற ஒன்றெல்லாம் உலகில் இல்லை. இதைக் கண்டறிந்தவனும் மனிதன் தான்.
பலம் என்பது பலவீனம் என்பதும் உனது மனதே:
பலம் என்பதும் உடம்பில் இல்லை, மனதில் தான் இருக்கிறது. உன் பலமும், பலவீனமும் மனதில் தான் உள்ளது. மனதைப் பலப்படுத்தினாலே நீ சக்திவாய்ந்த பலமான மனிதனாகிவிடுவாய். மன வலிமையினால் நீங்கள் எதை நினைத்தாலும் அதை அடைய முடியும்.
நம்மாலும் சாதிக்க முடியுமா ? நமது சாதனை எண்ணம் சரியானது தானா?
நடப்பதுதானா? நடப்பதுதான் நடக்குமா?
இலட்சியத்தை எண்ணிச்செயல்படும் பொழுது இது மாதிரியான தனது இலக்கைப் பற்றிய சந்தேகங்கள் சிந்தனையில் உதயமாகின்றதா?
அப்படியெனில் முதலில் இந்த எதிர்மறையான சிந்தனை சரியானது தானா என்று ஆராய்ந்து பார்ப்போம் .
உலகில் மிகப்பெரிய அளவில் பல்துறையிலும் உயர்ந்துள்ள 500 மனிதர்களை வைத்துப் பார்க்கும் போது ,
அதில் 278 பேர் கையில் ஒன்றும் இல்லாமல் அறிவாலும் , அனுபவத்தாலும், தனித்திறமையாலும் , கடின உழைப்பாலும் தான், தனது துறையில் இமாலய வெற்றியடைந்து மிகப்பெரிய செல்வந்தராக உயர்ந்துள்ளனர் என்கின்ற புள்ளி விபரங்கள் தெரிகின்றன.
மொத்தம் 500 நபர்களில் மீதி 222 பேர் தான் இயற்கையாகவே பரம்பரை சொத்துள்ள செல்வந்தர்களாகவும் , தொழிலதிபர்களாகவும் சர்வதேச அளவில் உயர்ந்துள்ளனர்.
இந்த 500 என்கிற வட்டத்திற்குள் நாளுக்கு நாள் எண்ணிக்கைக் கணக்கு அதிகரிப்பதும் புதிதாக இடம்பெறுவதும் கையில் ஒன்றுமில்லாமலும், பரம்பரையாக செல்வம் இல்லாமலும் முன்னேருபவர்களின் கணக்குத்தான் இந்த வட்டத்தில் கூடுகிறது. அதிலிருந்து ஒவ்வொன்றாகக் குறைவதும் , கழிவதும் பரம்பரை செல்வந்தர்கள் தான்.
இவ்வுலகில் ஒவ்வொரு (தொழில் ) துறையிலும் நம்பர் 1 ஆக எவரஸ்ட் சிகரத்தளவில் சிறந்து விளங்கும் 100 நபர்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது,
அந்த 500 பேரில் அடிப்படை வசதி கூட இல்லாமல் சுயமாக உழைப்பால் உயர்ந்த 278 பேரில் இருந்து தான் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
இது தான் உண்மை. இது தான் உலகம் . இதிலிருந்து என்ன தெரிகிறது? நாட்டில் யார் வேண்டுமானாலும் முன்னேற முடியும் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது.
முன்னேற்றத்திற்கு எதுவும் தேவை இல்லை, எதுவும் தடை இல்லை, திட்டமிட்ட முழுமையான விடா முயற்சியும், தன்னம்பிக்கை கலந்த இடை விடாத உழைப்பும் இருந்தால் சரி என்கிற இன்னொரு உண்மையும் தெரிகின்றது.ஏன்? இதெல்லாம் எதற்கு? இன்றைய கோடீஸ்வரராக இருக்கும் தொழிலதிபர் பில்கேட்சை எடுத்துக்கொள்ளுங்கள் ( டீன் ஏஜ் பருவத்தில்) தொடக்க காலத்தில் பெட்ரோல் பங்கில் 500 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தவர் தான். இளவயது கோடீஸ்வரர் என்ற இன்னொரு சிறப்பும் பில்கேட்ஸ்க்கு உண்டு. நம்மைப்போல இளவயதாக இருக்கையில் வேலை தேடி அலைந்தார். திரிந்தார். இன்று வோல்ட் நம்பர் 1 கோடீஸ்வரனாகவும், தொழிலதிபராகவும் வளர்ந்து பல லட்சம் பேருக்கு இன்று தன்னிடத்தில் வேலைகொடுத்திருக்கிறார்.
உலகத்தின் ஒரு பகுதியும், அமெரிக்காவும்கூட ( பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட ) சில சமையங்களில் இவரிடம் தான் கையேந்திக் கடன் வாங்குகின்றன. இவரைப்பற்றி இதுவரை எந்தப்பத்திரிக்கையிலும் எழுதாத மறைந்து கிடக்கும் இன்னொரு உண்மை இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது.
இச்செய்திகளைப் படிக்கும் பொழுது உங்களது சந்தேகத்திற்கு ஒரு விடை கிடைத்திருக்குமே.
இலக்கைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளை உங்களது இதயத்தில் இருந்து களைந்து வெளியே எடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் வாழ்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்.