Home » Cover Story » கிராமம் என முடங்காதே சிகரம் உண்டு மறக்காதே!!

 
கிராமம் என முடங்காதே சிகரம் உண்டு மறக்காதே!!


திருமலைச்சாமி எஸ்.ஜி
Author:

நேர்முகம் : – டாக்டர் செந்தில் நடேசன்

டாக்டர் எஸ்.ஜி. திருமலைச்சாமி
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் KMCH கோவை

 • இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் தலைசிறந்த மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர்.
 • உலகநாடுகள் பலவற்றில் தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்து அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு இருப்பவர்.
 • முழங்கால் மூட்டு, இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சைக்கான ஆய்வுக் கட்டுரைகளுக்கு தேசிய, மாநில அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர்.
 • தமிழ்நாடு மெடிக்கல் அசோசியேசன் செயலாளராக பொறுப்பு வகித்தவர்.
 • ஏழை எளியவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சையை வழங்கியும், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு பெரிதும் உதவியும் வருபவர்.
 • ‘கிராமத்து இளைஞர்கள்’ தங்களால் எல்லாத்துறையிலும் சிறப்பாக சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் செயல்பட்டு அவர்கள் உலகளவில் உயர்ந்து நிற்க வேண்டும் என்கிற விருப்பம் கொண்டவர். கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர் எஸ். திருமலைசாமி அவர்கள் எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து, இன்று உலகநாடுகள் பலவற்றில் தன் மருத்துவ திறமையை அற்புதமாக பதிவு செய்திருக்கும் அவரோடு இனி நாம்……….

இளமைக்காலம்

பழநி அருகே எரமநாயக்கன்பட்டி என்ற 200 வீடுகளைக் கொண்ட சிறிய கிராமமே நான் பிறந்த ஊர். அப்பா சுப்பையா கவுண்டர். அம்மா கண்டியம்மாள். ஒரு சகோதரர். அவருக்குத் தொழில் விவசாயம். உலத்தில் யாரையாவது பார்க்க வேண்டும் என்று கேட்டால் நான் என் தந்தையை பார்க்க வேண்டும் என்று கேட்பேன். உயர்ந்த மனம் கொண்ட அவர் நிறைய பேருக்கு நிலம் பொருள் எனப் பலவாறு தானம் தந்து உதவியிருக்கிறார். அப்படிப்பட்டவர் என்னுடன் இல்லை என்பது பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது. அம்மா தான் எல்லாமுமாக இருந்து எங்களை உயர்த்தினார்கள். என் பெற்றோர்களே என் தெய்வம். என்னுடைய ஆரம்ப பள்ளி அரசு ஊ. ஓ. துவக்கப் பள்ளியில் அதுவும் மண்ணில் தான் அ… ஆ……. எழுதி படித்தது வந்தேன். A,B,C,D ஆங்கில எழுத்துக்களை நான் கற்க ஆரம்பித்ததே ஆறாம் வகுப்பில்தான். நேர்மை, கடின உழைப்பு, புராணங்கள், இதிகாசங்கள் முதலியவற்றை அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டேன். தமிழ்வழி பள்ளியிலேயே படித்த காரணத்தினால் தமிழின் மீது தனிப்பற்றுதல் இருந்தது.
பாரதியார் கவிதைகள், கம்பராமாயணம், சீவக சிந்தாமணி, ஆகிய நூல்களை தேவைக்கு மேல் படித்திருக்கிறேன். அதன் பயன்பாட்டை பிற்காலத்தில் உணர்ந்தேன். பாரதியார் கவிதைகள் எனக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தந்தது. எதையும் சாதிக்க முடியும் அச்சப்படக்கூடாது என்பதினை அவர் கவிதைகளின் வழி கற்றுக் கொண்டேன். என்னுடைய பெரியப்பா, மாமாவின் உதவி என்றுமே மறக்கமுடியாதது. இருவர் பெயரும் பழனிச்சாமி கவுண்டர். அவர்கள் தந்த பேராதரவில்தான் இந்த வளர்ச்சியை இன்று எட்ட முடிந்திருக்கிறது. ஆரம்பள்ளிக் காலத்தில் படிப்பில் அக்கறை இல்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக நாம் படித்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை அறிந்தேன். பின்பு தான் சாதிக்க வேண்டும் என்கிற வெறி எனக்குள் வந்தது. எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்தேன் அப்படியே சாதித்தேன். அது எனது முதல் இலட்சியத்திற்கு கிடைத்த வெற்றி.
மருத்துவத்தின் மீது ஈடுபாடுவரக் காரணம்:
நான் ஏழாவது படிக்கும் போது என் தாயாருக்கு மதுரையில் டாக்டர் ஆசிர்வாதம் மருத்துவமனையில் தைராய்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் ஆசிர்வாதம் அவர்களின் அன்பான செயல்பாடு என்னைப் பெருமளவு பாதித்தது. அப்பொழுதே எனக்குள் மருத்துவராக ஆக வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. வளர்ந்து அவரைப் போன்று நாமும் உயர்ந்து உயிர்களைக் காக்க வேண்டும் என்கிற ஆசை எழுந்தது.
மறக்க முடியாத ஆசிரியர்கள்:
சாலமென் ஆசிரியரின் இயேசு கிறிஸ்து கதைகள் மூலம் மதங்களைக் கடந்து மனங்களை நேசிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். குருசாமி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துசாமி, வேதியியல் ஆசிரியர் ஜெகநாதன், ராமசாமி, கந்தசாமி முதலிய ஆசிரியர்கள் என்னால் மறக்க முடியாத ஆசிரியர்கள். நான் ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அவர்களைச் சந்தித்து உரையாடி விட்டு வருவேன். இன்றும் இவ்வாசிரியர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். அன்றைக்கு இவர்கள் காட்டிய அக்கறையே என்னை கல்வியில் வளர வைத்தது. வாழ்வில் உயர வைத்தது.
எச்சம்பவம் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை?
செயின் ஜோசப் காலேஜ் திருச்சியில் படித்தது தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை. 18 வருடங்கள் கிராமப்புற வாழ்க்கையில் இருந்து விட்டு நகர்புற வாழ்க்கைக்கு வந்தபோது என்னால் திருச்சியில் இருந்து கொண்டு படிப்பைத் தொடர முடியவில்லை. ஓரிரு மாதங்களில் ஊருக்குத் திரும்பி விட்டேன். பெரியப்பா, பெரியப்பா, மகன் செல்வராஜ் ஆகியோரின் அறிவுரைகளின் படி மீண்டும் செயின் ஜோசப் கல்லூரியில் வந்து படித்தேன். அங்கு கற்ற கல்வியும், நட்புகளும் என்னைச் சாதிக்கத் தூண்டியது. யாருடைய பரிந்துரை இல்லாமலும், பணம் கொடுக்காமலும் மெரிட்டில் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக கடினமாக உழைத்து வந்தேன். அதன் விளைவாக மெரிட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். கட்டணம் வருடத்திற்கு 400 ரூபாய் உணவுவிடுதிக்கு 300 ரூபாய். இந்தச் செலவை இரண்டு கறவை மாடுகளின் வருமானத்தின் மூலமாக என் மருத்துவக் கல்லூரிப் படிப்பை என் தாய் பார்த்துக் கொண்டார்கள்.
மதுரை மருத்துவக் கல்லுரி:
மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த போது நிறைய மாற்றங்களை எனக்கு இக்கல்லூரி ஏற்படுத்தியது. என் மன வளர்ச்சிக்கும், என் தொழில் வளர்ச்சிக்கும் பெரிதும் காரணமாக இருந்த கல்லூரி அது.
மருத்துவத்தில் இருந்து கொண்டு எப்படி மாநில அளவில் தேர்வு செய்த வீரராக விளையாட்டிலும் ஜொலித்திருக்கிறீர்கள்?
சிறு வயது முதலே எனக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு. நான் நல்ல உயரம். என் உயரத்தைக் கொண்டு திடீரென பேஸ்கட்பால் வீரராக மதுரை மெடிக்கல் காலேஜ் அணியில் தேர்வு செய்துவிட்டார்கள். தெரியாது என்று சொல்லி தவிர்ப்பதை விட இத்துறையிலும் சாதிக்க வேண்டுமென அதிகாலையில் எழுந்து கடும் பயிற்சிகள் எடுத்து பேஸ்கட்பால் வீரராக திண்டுக்கல் மாவட்டம், மதுரை மெடிக்கல் காலேஜ், நேஷனல் கிளப், மதுரை யுனிவர்சிட்டி ஆகிய அணிகளின் சார்பாக விளையாடி பாராட்டுக்கள் பெற்றேன். மேலும் தமிழ்நாடு அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட போது மருத்துவர் இலட்சியம் பாதித்துவிடுமென அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டேன். தற்போதும் ஓய்வு நேரங்களில் என் மகனோடு டென்னிஸ் விளையாடி வருகிறேன்.
ஒரு விளையாட்டு வீரராக இருக்கும் பட்சத்தில் அடையும் நன்மைகள்

 • உடல் ஆரோக்கியம்
 • வெற்றி தோல்விகளை சரிசமமாக எடுத்துக் கொள்ளும்விதம்
 • மனப்பக்குவம்
 • நல்ல நட்புகள்

மருத்துவத்தில் குறிப்பிட்டு ஆர்த்தோ துறையை நீங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம்?
மதுரை மெடிக்கல் காலேஜில் படிக்கும் போது ஆர்த்தோ சிறப்பு மருத்துவர் தேவராஜ் அவரின் செயல்பாடுகள் என்னை அத்துறையில் தனிக்கவனம் செலுத்தி ஆர்த்தோ மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தினை ஏற்படுத்தியது. இவரிடம் நாம் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ள முடியாதா என்று எனக்குள் ஒரு ஏக்கம் ஏற்பட்டது. பின்பு நான் என்னுடைய ஆர்த்தோ பயிற்சியை மேற்கொள்ளும் போது நான் விரும்பியது போலவே அவரின் நெறிகாட்டுதலின் படி பயிற்சி மேற்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தது. அவர்கள் தந்த பாதிப்பு தான் காரணம். அவரின் செயல்பாடுகளே அந்தத் துறையின் மீது என்னை தனிக்கவனத்தை கொண்டு வர வைத்தது. பின்பு அவரிடமே ஆர்த்தோவில் சேர்ந்து பயிற்சிகள் பெற்றேன்.
இந்தத் துறையில் ஒர் சிறந்த அங்கீகாரம் பெற நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து?
எம்.பி.பி.எஸ் முடித்தவுடன் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் 15க்கு மேற்பட்டு எழுதினேன். இரண்டரை வருடங்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. இத்துறையில் இன்னும் உழைப்பை கடினமாக்க வேண்டும் என்று அப்போது உணர்ந்தேன். கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் சிறப்பு அனுமதி பெற்று தினமும் 14 மணிநேரம் உழைத்தேன். இலக்கை நோக்கி எளிதாக பயனித்து சாதிப்புகளை நிகழ்த்த அந்த உழைப்பு பெரிதும் உதவியது.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நீங்கள் தரும் இரண்டு முக்கிய ஆலோசனைகள்
1. மாணவர்களாக இருக்கும் காலத்தில் விளையாட்டில் ஆர்வம் செலுத்துங்கள் அது மனபலத்தையும் உடல்பலத்தையும் அதிகப்படுத்தும்.
2. மருத்துவத்தில் இரண்டாவது வருட படிப்பின் போதே நுழைவுத் தேர்வுக்கும் தயார் ஆகுங்கள் அது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
KMCH – ல் பணியில் அமர்ந்தது குறித்து?
ஜென்ரல் ஆர்த்தோபேடிக்ஸ் மதுரை மெடிக்கல் காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் போதே எம், எஸ் ஆர்த்தோவில் சேர்ந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் நன்கு பயிற்சி பெற்றேன். மேலும் 1995- ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆர்த்தோ சிறப்பு தேர்வு எழுத அங்கு பயணமானேன். ஒரு வருடத்திற்குள் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்கிற உறுதியுடன் அத்தேர்வைச் சந்தித்து வெற்றி பெற்றேன். அதற்குப் பின்பு பல்வேறு வாய்ப்புகள் தேடி வந்தது. நூறு பேர் பங்கேற்ற நேரடித் தேர்வில் முதல் இடத்தைப் பிடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பணியில் இணைந்தேன். அப்பல்கலைக்கழகத்தில் மூட்டு மாற்று அறுவை, ஆர்த்தராங்கோபி இரண்டிலும் நன்கு தேர்ச்சிபெற்றேன். அப்போது கோவை KMCH -ல் பணியாற்ற மருத்துவர்கள் தேவை என்கிற விளம்பரம் இங்கிலாந்து பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது. அப்போது அங்கு நடைபெற்ற நேர்முகத்தேர்வில் டாக்டர் நல்ல பழனிச்சாமி அவர்கள் என்னைத் தேர்வு செய்து இங்கு பணியில் அமர்த்தினார்கள். வாழ்வின் வளர்ச்சியில் இரண்டு ‘ப’ என்பது ( பழனிச்சாமி கவுண்டர்) என்பது மூன்று ‘ப’ ஆனது.
உலக அளவில் ஒப்பிடும்போது ஆர்த்தோ துறையில் இன்னும் நாம் எட்ட வேண்டியது………
நம்மிடம் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களின் ஆற்றல் போதுமானதாக இருக்கிறது. அதற்கான கருவிகளும் மேலைநாட்டைப் போலவே இருக்கிறது. டெலிவரி சிஸ்டம், ஹாஸ்பிட்டல், என்வரால்மென்ட், நர்சிங்கேர், சப்போட்டிங்கேர் இன்னும் கொஞ்சம் உயர்த்தப்பட வேண்டும்.
மெடிக்கல் டூரிசம்:
நம்நாட்டில் விரைவில் இத்துறை நன்கு வளரப்போகிறது. எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து நிறைய நோயாளிகள் சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருவார்கள் அதில் சந்தேகமில்லை. காரணம் தட்பவெட்பநிலை, டூரிசத்திற்கு ஏற்றாற்போல் உள்ள இடங்கள்.
மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான அளவு மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இருக்கிறதா?
2000த்தில் 5000 மூட்டுமாற்று அறுவை சிகிச்சைகள் நடந்திருந்தன. 2010ல் ஒரு இலட்சம் மூட்டுமாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. பத்து ஆண்டுகளில் 20 மடங்கு அதிகமாயிருக்கிறது என்றாலும் இது 20 சதிவிதம் தான். இன்னும் 80 சதிவிகிதம் அறுவை சிகிச்சை செய்யப்படாமல் இருக்கிறது. அதனால் இந்திய அளவில் தனியாகவே மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனைகள் தேவைப்படுகிறது.
மூட்டுமாற்று அறுவை சிகிச்சை பெருகிவரக் காரணம்:
முதலில் மக்களின் லாஞ்சிவிட்டி அதிகமானது. கடந்த 20 ஆண்டுகளில் மனிதனின் சாரசரி ஆயுள் 57லிருந்து 67 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தப் பத்து வருடகாலத்தில் தான் இதயநோய், நீரழிவு நோய் என அதிகமாயிருக்கிறது. இரண்டாவது உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறைகள்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்குப் பின்பு மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காயிருக்கிறது.
மூட்டுத் தேய்மானத்திற்கு அறிவியல் பூர்வமான காரணம் இல்லை. ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் கண்டறியப்படவில்லை.
மூட்டுத் தேய்மானத்தினைக் குறைக்க உயரத்திற்கு தகுந்த எடையைக் கொண்டிருத்தல் வேண்டும். தசைகளுக்கு பயிற்சிகள் கொடுத்தல், படிக்கட்டுகளை அதிகம் பயன்படுத்தாதிருத்தல் இப்படி அன்றாட வாழ்க்கையில் சில நடைமுறைகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலமாக ஓரளவு மூட்டு வலியைக் குறைக்க முடியும். 100 சதவிகிதம் தடுக்க முடியாது.
இங்கிலாந்தில் 95 -ல் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்ய ஒருவர் காத்திருக்க வேண்டிய காலம் 1, 1/2 வருடம் தற்பொழுது ஆறு வாரங்கள். நம் நாட்டினைக் காட்டிலும் இப்பாதிப்பு மேலை நாடுகளில் அதிகம்.
குடும்பம்
மனைவி டாக்டர் தமிழ்ச்செல்வி (பிரபல மருத்துவர் ஜே.கே. பெரியசாமியின் சகோதரர் மகள்) குழந்தைகள் – சிந்து (டிசைனிங் பெங்களூர்) மிருதுன் (10ம் வகுப்பு வித்யா நிக்கேதன்)
நீங்கள் விரும்பிய புத்தகங்கள் குறித்து?
தமிழில் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. பாரதியார் கவிதைகள் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல்புறா, சின்னச் சின்ன சிறுகதைகள்.
தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது
எந்தச் சூழலில் பிறந்திருந்தாலும், கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு குறிக்கோளை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம்.
குடும்பச் சூழல் சரியில்லை. படிப்பு வரவில்லை, எனக்கு யாரும் உதவிபுரியவில்லை இவையெல்லாமே நமக்கு நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடியவைகள். நமக்கென்று முயற்சிகள் இருந்தால் முன்னேற முடியும்.
மருத்துவ பாலிசி குறித்து உங்கள் கருத்து
சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு இம்முறை நன்மைபயக்கத் தக்கது. ஒவ்வொருவரும் இப்பாலிசிகளை வைத்திருத்தல் அவசியம். அதே சமயம் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் இன்டியன் மெடிக்கல் அசோசியேசன் மருத்துவக் குழுவினருடன் கலந்தாலோசித்த பின்பு ஒவ்வொரு அறுவைசிகிச்சைக்கும் உண்டாகும் தொகையை நிர்ணயம் செய்தால் பாலிசிதாரர்கள் நவீன சிகிச்சைகளை திறம்பட எடுத்துக் கொள்ள முடியும்.

 

1 Comment

 1. King says:

  I was so confused about what to buy, but this makes it udnertsandblae.

Leave a Reply to King


 

 


October 2010

கிராமம் என முடங்காதே சிகரம் உண்டு மறக்காதே!!
சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல
வரி சில வரிகளில்
உடலினை உறுதி செய்
விதை
தன் வினை தன்னை சுடும்
பயத்திற்கு குட்பை
ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க ஆலோசனைகள்
கதையும் கருத்தும்
உனக்குள்ளே உலகம்-5
கோபத்தை அகற்றுங்கள்
ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?
சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள் 50
இடத்தை மாற்று வெற்றி நிச்சயம்
சோம்பலை சாம்பலாக்கி வெற்றி பெறு!
வெற்றி விலாஸ்
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
வல்லமை தாரோயோ
உள்ளத்தோடு உள்ளம்