Home » Articles » காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II

 
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II


மனோகரன் பி.கே
Author:

– பேரா. பி.கே. மனோகரன்

ஜி.டி. நாயுடு

‘இந்தியாவின் எடிசன்’ என்று மக்களால் போற்றப்பட்டவர் ஜி.டி. நாயுடு. தொழில் துறையில் வளரத் துடிக்கும் இளைஞர்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்கம். அவர் தொடாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் படைத்த சாதனைகள் ஏராளம்.

சிறுவயதில் வீட்டில் குறும்புத்தனம் செய்வதும், வெளியில் குழப்பங்களை உண்டாக்குவதும் வழக்கமாக கொண்டிருந்தார் நாயுடு. பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினால் அங்கேயும் அதே கதைதான். ஒருநாள் ஆசிரியர் பாடல் ஒன்றைமனப்பாடம் செய்யச் சொன்னார். அவ்வளவுதான்! நாயுடுவுக்கு கோபம் வந்து விட்டது. மணலைக் கை நிறைய அள்ளி ஆசிரியர் கண்களில் வீசிவிட்டு பள்ளியை விட்டு ஒரே ஓட்டமாய் ஓடினார். அதன்பிறகு அவர் பள்ளிக்குத் திரும்பவேயில்லை.

ஜி.டி.நாயுடுவுக்கு தொழில் துறையில் ஆர்வம் ஏற்பட்ட விதம் சுவாரசியமானது. ஒரு நாள் ஆங்கிலேயர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். நாயுடுவுக்கு அருகே வரும்போது வண்டி பழுதானது. அவர் இன்ஜினைப் பழுது பார்க்கத் தொடங்கினார். அவருக்கு தேவைப்பட்ட உதவிகளை செய்து கொடுத்தார் நாயுடு. அவரது கவனம் அந்த ஆங்கிலேயர் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் மீதே இருந்தது. ஒருநாள் அவரிடம் சென்று தான் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொடுத்து மோட்டார் சைக்கிளை விலைக்குத் தரும்படி வேண்டினார். நாயுடுவின் ஆர்வத்தை கண்ட அந்த ஆங்கிலேயரும் விலைக்குக் கொடுத்து விட்டார். மகிழ்ச்சியோடு மோட்டார் சைக்கிளைப் பெற்றநாயுடு அதனை அக்குவேறாக ஆணி வேறாக பிரித்தார். திரும்பப் பூட்டினார். மெக்கானிக்காக மாறினார்.

1920ஆம் ஆண்டில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் இடையே பயணியர் பேருந்து போக்குவரத்தை துவக்கி, தானே பேருந்தை ஓட்டிச் சென்றார். 1937ல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மோட்டார் பேருந்து இவருடைய யு.எம்.எஸ். தொழிற்சாலையின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தலைசிறந்த ‘மோட்டார் மன்னன்’ என்று அழைக்கப்பட்டார்.

ஊழியர்கள் உடல் நலத்தில் மிகுந்த அக்கறைகொண்டவர். உடல்நலம் இல்லாத போது எவரேனும் வேலை செய்வதாக தெரிந்தால் பத்து ரூபாய் அபராதம் என்று கட்டளை பிறப்பித்தார். தம் செயலாளர்கள் அலுவலகத்தை எப்படி பராமரிக்கிறார்கள் என்பதை அவ்வப்போது பார்வையிட்டு வந்தார். ஒருநாள் அலுவலக மேஜையில் பைல்கள் அலங்கோலமாக இறைந்து கிடந்தன. அவற்றைஎல்லாம் ஒழுங்காக அடுக்கி வைத்த நாயுடு ஒரு சீட்டில் “நீங்கள் உங்கள் மேஜைகளை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக் கொள்ளப் போகிறீர்களா அல்லது உங்கள் முதலாளியை தினமும் இரவில் இதுமாதிரி ஒழுங்குபடுத்தச் சொல்கிறீர்களா?’ என்று எழுதி வைத்து விட்டுச் சென்றார். அவரின் அந்த செயல் அலுவலர்களிடம் நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்தது.

சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்தர் ஹோப் என்பவர் நாயுடுவின் நண்பர். தொழில் கல்வி பற்றி நாயுடுவின் எண்ணங்களை அறிந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்பைக் கொடுத்து ஆதரித்தவர். கவர்னர் காட்டிய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 1945ல் கோவையில் ஆரம்பித்த தொழில்கல்விக் கூடத்திற்கு ‘ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக்’ என்று பெயரிட்டார்.

அரசின் ஆதரவு
கிடைக்கும் போதே அதைப்

பயன்படுத்திக் கொண்டு பெரிய

அளவில் பொறியியல் கல்லூரி ஒன்றை

நிறுவ விரும்பி, அதே 1945ம் ஆண்டே

ஆர்தர் ஹோப் பொறியியல் கல்லூரியைத் தொடங்கினார். பின்னர் இந்த இரண்டு

கல்வி நிறுவனங்களையும் அரசுக்கு நன்கொடையாக அளித்து விட்டார்.

அந்த இரண்டு கல்வி நிலையங்கள்தான்

இன்று மாநிலத்திலேயே சிறந்து விளங்கும் ஜிசிடி என்றழைக்கப்படும் அரசினர் பொறியியல் கல்லூரியும், ஜிபிடி என்றழைக்கப்படும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியும் ஆகும். கல்லூரியின் பெயர் மாறிய பிறகும் மாறா நினைவாய் ‘ஹோப் காலேஜ்’ பெயர் மட்டும் அந்த இடத்துக்கு இன்றளவும் நிலைத்து விட்டது.

நகைச்சுவை உணர்வுக்கும் அவரிடம் பஞ்சம் இருக்காது. திவான்பகதூர்

இரத்தின சபாபதி முதலியார், நாயுடுவின் நெருங்கிய நண்பர். ஒருநாள், இரத்தின சபாபதி முதலியார் தேநீர் விருந்துக்கு அழைப்பது போல் கோவை நகர பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பி விட்டார் நாயுடு. குறிப்பிட்ட நாளில் எல்லா நண்பர்களும் முதலியார் வீட்டில் கூடிவிட்டனர். வெளியே சென்றிருந்த முதலியார் வீட்டுக்குள் நுழைந்தார். ஒரே கூட்டம்! அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. கூட்டத்தின் நடுவே நாயுடு உட்கார்ந்திருந்தார்.

முதலியார் நாயுடுவை அழைத்து விசாரித்தார். உடனே நாயுடு காலண்டரை சுட்டிக் காட்டினார். அதில் ஏப்ரல் 1 என்று இருந்தது. அப்பொழுதுதான் முதலியார் அன்று முட்டாள்கள் தினம் என்பதை புரிந்து கொண்டார். பிறகு நாயுடு அனைவரையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்தளித்தார்.

ஜே.சி. குமரப்பா

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் சீடர் ஜே.சி.குமரப்பா. காந்தியப் பொருளாதாரத் திற்கு உருவம் கொடுத்தவர். ‘கிராமத் தொழில் களின் மேதை’ என்று காந்தியடிகளால் புகழப் பட்டவர்.

குமரப்பாவின் அறையில் ஓர் விவசாயின் படம் இருக்கும். அந்த படத்தின் கீழ் ‘என்னுடைய எஜமானரின் எஜமானர்’ என்று எழுதப்பட் டிருக்கும். இவரது குருவான காந்தியடிகளுக்கு மேலாக இந்த நாட்டு விவசாயி இருக்கிறான் என்று அதற்குப் பொருள்.

குமரப்பா பொது வாழ்வில் மிகவும் நேர்மையானவர்.

1934ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய ‘பீகார் மத்திய நிவாரணக்குழு’ ஒன்று ஏற்படுத்தப்பட்டது. குழுவின் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். குமரப்பா தணிக்கையாளராக இடம் பெற்றிருந் தார். காந்தியடிகளைப் போன்றே பொதுக் கணக்கை கையாள்வதில் மிகவும் கவனமாக இருந்தார் குமரப்பா.

ஒருமுறை பூகம்ப நிவாரண நிதியின் கையிருப்பை சரிபார்த்த போது பத்தாயிரம் ரூபாய் குறைவாக இருந்ததை கண்டறிந்தார். கணக்கரிடம் விளக்கம் கேட்டபோது நிதிக்குழுவின் உறுப்பினர் ஒருவரை சுட்டிக் காட்டினார். குமரப்பா, அந்த உறுப்பினரை உடனே வரவழைத்து பணத்தைக் கட்டும்படி செய்ய வேண்டும் என்றும், அவரை உறுப்பினர் பட்டியல் இருந்து விலக்க வேண்டும் என்றும் இராஜேந்திர பிரசாத்திடம் கண்டிப்பாக கூறி விட்டார்.

இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்த ராஜேந்திர பிரசாத் காந்தியடிகளுக்கு விவரத்தைக் கூறி ஆலோசனை வேண்டி தந்தி கொடுத்தார். குமரப்பாவை நன்கு அறிந்த காந்தியடிகள் ‘குமரப்பா சொல்கிறபடி செய்யுங் கள்’ என்று பதில் தந்தி அனுப்பி விட்டார்.

குமரப்பாவின் நேர்மைக்கும் கண்டிப் புக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு.

ஒருமுறை குமரப்பா டில்லி ரயில் நிலையத்திலிருந்து தான் வந்த மாட்டு வண்டியி லேயே திட்டக்குழு அலுவலகத்துக்குச் செல்ல விரும்பினார். செல்லும் வழியில் அவரது வண்டி பல இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஒரு இடத்தில் காவல் அதிகாரி வண்டியை நிறுத்த, குமரப்பா ‘இது பொதுச்சாலை, யாரும் போக உரிமை உண்டு’ என்று வாதிட்டார். அதற்கு காவல் அதிகாரி திட்டக்குழு கூட்டத்திற்கு இந்த வழியாக நேரு வருகின்றார். ஆதலால் வண்டிகள் எதுவும் இந்த வழியில் செல்வதைத் தடுக்கிறோம்’ என்றார். குமரப்பா கிண்டலாக ‘நானும் அந்த கூட்டத்திற்குதான் போகிறேன். அவர் வருவதற்கு முன்னால் நான் போனால்தான் அவர் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்ய இயலும்’ என்று கூறிச் சென்றார்.

இன்னும் சிறிது தூரம் சென்றவுடன் இராணுவ காவல் அதிகாரி ‘குடியரசு தலைவரின் வீட்டு எல்லைக்குள் வண்டிகள் செல்லக் கூடாதென்றவிதியை சுட்டிக் காட்டினார். ‘திட்டக்குழு கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு இருப்பதால் தன்னைத் தடுத்து நிறுத்துவது முறையல்ல’ என்று வாதிட்டார் குமரப்பா. காவல் அதிகாரியோ, ‘அழைப்பாளர்களை மட்டும்தான் அனுமதிக்க முடியும், வண்டிகளை அனுமதிக்க முடியாது’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால் பிடிவாதமாக குமரப்பா இறங்கி நடக்க மறுத்துவிட்டபடியால் வண்டியை அனுமதித்தனர்.

ஒருவழியாக மாட்டு வண்டியிலேயே சென்று கூட்டத்தில் கலந்து கொண்டார். சாலைப் போக்குவரத்து பற்றிய விவாதத்தில் கருத்து கூறும்படி குமரப்பாவை நேரு கேட்டுக் கொண்டார். குமரப்பா தனது வண்டியை அனுமதிக்க மறுத்ததை கூறி, ‘மக்களாட்சியில் நாட்டின் தலைமை அமைச்சருக்கு இருக்கும் உரிமையைப் போன்றே மாட்டு வண்டிக்கார ருக்கும் பொதுச்சாலையில் செல்ல உரிமை இருக்க வேண்டும்’ என்றார்.

அப்போது நேரு ‘மாட்டு வண்டிக் காரருக்கு எந்த உரிமையையும் மறுப்பது சரியில்லைதான். ஆனால் குமரப்பா இதன் நோக்கத்தை தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறார். இராணுவ லாரிகள் இந்த சாலையில் மிகுதியாகச் செல்வதால் விபத்து ஏற்பட்டு மாட்டு வண்டிகள் பாதிக்கப்படும் என்பதால் இந்த முறையை வைத்திருக்கிறோம்’ என்று சாமர்த்தியமாகக் கூறினார்.

குமரப்பா விடவில்லை. ஐயா, இரண்டு பேர் பொது இடத்தில் இருக்கிறார்கள். ஒருவர் வலியவர், கொடுமைக்காரர். அவர் இருப்பதால் மற்றவருக்கு தீங்கு நேருமெனில், யார் ஆபத்தானவரோ அவரைத்தான் தடுக்க வேண்டும். அதுபோல ‘மோட்டார் வண்டி களையும், லாரிகளையும் அனுமதிப்பதில்லை’ என்ற அறிவிப்பு பலகை வைத்து மாட்டு வண்டிகளை அனுமதிக்க வேண்டும்’ என்று குமரப்பா மேலும் சாமர்த்திய மாக பதில் கூறினார்.

பாமர மக்களின் உரிமைக்காக போராடும் இவரின் சிறந்த குணம் போற்றுதலுக்கும், பின்பற்று தலுக்கும் உரியதல்லவா?

கவிக்குயில் சரோஜினி நாயுடு

இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்டவர் கவிக்குயில் சரோஜினி நாயுடு. அடிமைப்பட்டுக் கிடந்த பாரத அன்னைக்கு பள்ளி எழுச்சி பாடியவர். தன் நாவன்மையால் நாட்டுப்பற்றைத் தூண்டி, விடுதலைக்காக அயராது அரும்பணியாற்றியவர்.

1914ம் ஆண்டு முதல் உலகப் போர் மூண்டது. உலகப் போரில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்துக்கு உதவி புரிவது இந்தியாவின் கடமை என்று மகாத்மா நினைத்தார். தாமே முன்வந்து போருக்கு படை திரட்டிக் கொடுத்தார். இந்தியப் போர்வீரர்கள் களத்தில் செய்த தியாகங்களை ஆங்கிலேயத் தளபதிகளே ஒப்புக் கொண்டனர். போரில் இங்கிலாந்து வெற்றி கண்டது. இந்தியாவுக்கு இனியாவது நல்லகாலம் பிறக்கும் என்று மகாத்மா காந்தி போன்றோர் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த நம்பிக்கையை ஆங்கிலேயர்கள் பொய்யாக்கினர்.

விசாரணை எதுவுமின்றி தலைவர்கள் பலரை சிறையில் அடைத்தனர். அச்செயலைக் கண்டித்த பொதுமக்களை தடியாலும் துப்பாக்கி யாலும் ‘கௌரவித்தனர்’. ஆங்கிலேய ஆட்சியாளர் களின் இந்த ‘நன்றி’ அறிவிப்புக்குச் சிகரமாக பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில் குழுமியிருந்த அப்பாவி மக்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர். இச்செய்கைகள் உலகுக்கே அதிர்ச்சி அளித்தன. இந்தியா கொந்தளித்தது.

இத்தருணத்தில் சரோஜினி இங்கிலாந்து சென்றார். ஜாலியன்வாலாபாக் படுகொலை அவரின் உள்ளத்தை பெரிதும் புண்படுத்தி யிருந்தது. லண்டனில் கிங்ஸ்லீ ஹாலில் உரையாற்றும்போது இது குறித்துக் குமுறினார். ‘குடிமக்களை கொடிய விலங்குகள் போல் வேட்டை ஆடலாமா? நிரபராதி களையும், நிராயுதபாணிகளையும் ‘சுட்டேன், சுட்டேன் தோட்டா தீரும் வரை சுட்டேன் என்ற ஜெனரல் டயர் குண்டுமாரி பெய்தது நியாயமா? ஆங்கிலேயரின் வீரம் இதுதானா? ஆங்கிலேய ஜனநாயகத்தின் நீதி இதுதானா?

மகளிருக்கு மரியாதை செய்வதாய் கூறிக் கொள்ளும் ஆங்கிலேயர்கள் இந்தியப் பெண்மணி களை நிர்வாணமாக நிறுத்தலாமா? கசையடி கொடுத்து அபலைகளைக் கதறியழச் செய்யலாமா? கற்பழிக்கலாமா? என் சகோதரி களை மானபங்கம் செய்த சண்டாளர்களை நியாயத்திலும் நாகரிகத் திலும் மேலானவர்கள் என்றபீற்றிக் கொள்ளும் ஆங்கிலேயர்கள் ஏன் தண்டிக்கவில்லை? பயங்கர மான காட்டுமிராண்டி ஆட்சி நடத்திய முரடர் களை ஆங்கிலேய பாராளுமன்றம் பாராட்டி யதே நீதியா அது? என்று அனல் பறக்கப் பேசினார் சரோஜினி. ‘வெட்கம், வெட்கம்!’ என்று கூட்டத் தினர் குரல் கொடுத்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட ஆங்கிலேயர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களை வெள்ளைக்காரர்கள் ‘கூலிகள்’ என்றே அழைப் பார்கள். இந்தியக் கோடீஸ்வரனும் அங்கு கூலிதான். வெள்ளையர்களின் இந்த இனத் திமிருக்கு சரோஜினி நல்ல பதிலடி கொடுத்தார். இந்தியர்களைக் கூலிகள் என்கிறார்கள். கூலிகள் என்றால் என்ன அர்த்தம் என்று ஐரோப்பியருக்கு தெரியாது போலும்! அதை நான் அவர்களுக்குச் சொல்கிறேன். அர்த்தம் தெரிந்து கொண்டால் அவர்கள் இந்தியர்களை கூலிகள் என்று கூறமாட்டார்கள்.

பிரிட்டிஷ் ராஜ்யமே கூலிகள் ராஜ்யம். இன்று பிரிட்டனை ஆட்சி புரிவோர் கூலிகளே!. இன்று ‘லேபர் பார்ட்டி’ தானே ஆட்சி புரிகிறது. ஆகவே என் சகோதரர்களை ஐரோப்பியர்கள் கூலிகள்’ என்று அழைப்பதற்காக நான் வெட்கப்பட வில்லை. ‘கூகள்’ என்னும் அப்பெயர் இங்கிலாந்தில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துள்ளோருக்கே மிகப் பொருத்தம்” என்று எதிரியின் ஆயுதத்தைக் கொண்டே அவர்களை அடித்து வீழ்த்தியவர் சரோஜினி.

1903ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களிடையே அவர் நிகழ்த்திய உரையில் ‘என் வாழ்க்கையில் பரந்த தேசிய சகோதரத்துவத்தைக் கடைபிடிக்க முயன்று வருகிறேன். நான் வங்காளத்தில் பிறந்தவள், ஆனால் சென்னைக்குச் சொந்தமானவள். ஒரு முஸ்லிம் நகரத்தில் வளர்ந்தேன், அங்கேயே மணந்தேன். ஆனால் நான் வங்காளி அல்ல, நான் சென்னைக் காரி அல்ல, நான் ஓர் இந்தியப் பெண். இந்துக் களும் முஸ்லிம்களும் சகோதரர்கள். இந்த இருவகுப் பினரையும் மற்றபிறவகுப்பினரையும் என்னுடன் பிறந்த சகோதரர்களாகவே கருதுகிறேன், நேசிக் கிறேன், மதிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்