Home » Articles » நல்லா இருங்க…

 
நல்லா இருங்க…


பதி ஆர்.வி
Author:

– ஆர்.வி. பதி

உங்களிடம் நல்ல படிப்பு இருக்கிறது. எதை வேண்டுமானாலும் உடனே வாங்கக்கூடிய அளவிற்குப் பணம் இருக்கிறது. கார் இருக்கிறது. பங்களா இருக்கிறது. மனைவி மக்கள் என எந்தக் குறையும் இல்லை. ஆனால் உங்களிடம் முக்கியமான ஒன்று இல்லை. அது ஆரோக்கியம். உங்களுக்கு பலவிதமான வியாதிகளும் இருக்கின்றன. எல்லா வசதிகளும் இருந்தும் உங்களால் எதையும் நிம்மதியாக அனுபவிக்க முடியவில்லை. நினைத்ததை சாப்பிடக்கூட முடியவில்லை.

இந்த பூமியில் எத்தனையோ விதமான உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை எவற்றிற்குமே இல்லாத தனித்தன்மை மனிதப்பிறவிகளான நமக்கு இருக்கிறது. நம்மால் எதையும் சாதிக்க முடிகிறது. மகிழ்ச்சியாய் இருக்க முடிகிறது. கவலைப்படவும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் நம்முடைய மோட்டார் சைக்கிள், ஏசி போன்ற பொருட்கள் பழுதாகாமல் இருக்க வேண்டுமென விரும்பி அவ்வப்போது சர்வீஸ் செய்து நன்றாக வைத்துக் கொள்ளுகிறோம். இவை பழுதாகிப் போனாலும் வேறொன்றை உடனே வாங்கிக் கொள்ளலாம். ஆனால் நாம் நம்முடைய உடலைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்று ஒருபோதும் சிந்திப்பது கிடையாது. நாம் தினந்தோறும் எதை எதைப் பற்றியோ சிந்திக்கிறோம். ஆனால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுவது எப்படி என்பதை மட்டும் சிந்திப்பதேயில்லை. வியாதி என்றஒன்று வந்த பின்னர்தான் அதற்கான தீர்வை நோக்கி ஓடுகிறோம். பலர் காலம் கடந்து செல்வதன் காரணமாக விலை மதிக்க இயலாத உயிரைக் கூட இழக்க நேரிடுகிறது. முறையான உடற்பயிற்சி, அளவான உணவு, கடின உழைப்பு இவற்றின் மூலம் பல வியாதிகளை நம்மால் வரும் முன்னால் தடுக்க முடியும்.

உடல் நலம் மிகவும் முக்கியம். அதைவிட முக்கியம் மனநலம். நம்முடைய மனதானது ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் இருந்தால் தான் நம்மால் நமது உடலை நல்லபடியாக பாதுகாக்க முடியும். மனம் எக்காரணத்திலாவது சோர்ந்து போய் பாதிக்கப்பட்டால் நமது உடல் நலம் வெகுவாக பாதிப்படையும்.

ஒருநாள் சிறுவன் ஒருவன் தனது வீட்டில் உட்கார விரும்பினான். அவன் உட்கார விரும்பிய இடத்தில் தூசுகள் படிந்திருந்தன. உடனே அதை சுத்தம்செய்து விட்டு அந்த இடத்தில் உட்கார்ந் தான். இதை கவனித்துக் கொண்டிருந்த அவனது தாயார் மகனிடம் விசாரித்தார்.

“சற்று முன்னர் நீ என்ன காரியம் செய்தாய்”

“அம்மா தரை தூசியாக இருந்தது. அதனால் அந்தத் தூசியை தட்டிவிட்டு உட்கார்ந்தேன்.”

இப்போது அந்த அம்மையார் தனது மகனிடத்தில் சொன்னார்.

“இறைவனும் அப்படிதானப்பா. நம்முடைய மனசுக்குள் அழுக்கு இருந்தால் அவர் அங்கே வந்து உட்காரமாட்டார். நாம் நம்முடைய மனத்தினுள் நிறைந்திருக்கும் பொறாமை மற்றும் தீய எண்ணங்களை துடைத்து சுத்தம் செய்து மனத்தை மிகத்தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இறைவன் அங்கே வந்து உட்காருவார்”

தாயார் சொன்ன இந்த அறிவுரை அந்தச் சிறுவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த அறிவுரையைப் பின்பற்றி வாழ ஆரம்பித்தான் அந்தச் சிறுவன். அச்சிறுவனே பிற்காலத்தில் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக் கும் நமது மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு மிகவும் அவசியமாகும். சிலர் தொடர்ந்து ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். பணம் ஒன்றே அவர்களுடைய குறிக்கோள். ஆனால் ஒரு கட்டத்தில் சம்பாதித்த பணத்தை அவர்களால் அனுவிக்க முடியாமல் போய்விடும். துர்பாக்கியமான நிலைமை உண்டாகிவிடுகிறது. கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் இடையிடையே சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் ஒரு வரை முறையைப் பின்பற்றி வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உடல்நலம் நிச்சயம் கெடும். பின்னர் உழைக்கவே முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகிவிடும்.

நீங்கள் ஆரோக்கியமானவர்களா? அதுபோல உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆரோக்கியமானவர்களா? இதற்கான பதில் ஆம் என்றால் உங்களைப் போல அதிர்ஷ்டசாலி இந்த உலகத்திலேயே இல்லை எனலாம்.

உணவை அளவாகச் சாப்பிடுங்கள். பசி எடுத்த பின்னரே சாப்பிடுங்கள். எண்ணெ யால் செய்யப்பட்ட திண்பண்டங்களை அடிக்கடி சாப்பிடாதீர்கள். பழங்களை தினந்தோறும் சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள். வசதி குறைவானவர்கள் என்றால் கவலை வேண்டாம். இருக்கவே இருக்கிறது வாழைப்பழம், நெல்லிக்காய்,, கொய்யாப்பழம், பப்பாளிப்பழம், இவையெல்லாம் மிக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழங்கள். தினந்தோறும் இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள். தண்ணீர் நிறையக் குடியுங்கள். மலிவான விலையில் நிறையக் கீரைகள் கிடைக்கின்றன. முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, வல்லாரைக் கீரை, போன்றவற்றை வாரம் இருமுறை சாப்பிடலாம். நார்சத்து அதிகமுள்ள சுண்டல் போன்ற உணவு வகைகள் அதிக நன்மை பயக்கும். வசதி உள்ளவர்களாக இருந்தால் கிரீன் டீ, காளான் போன்ற ஆண்ட்டி ஆக்சிடென்ஸ் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

தினந்தோறும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். காலையில் நடப்பது நல்லது. முடிந்தால் முறையாகப் மூச்சுப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு காலையில் தினமும் செய்தால் நோய் உங்களை நெருங்கப் பயப்படும்.

இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இன்பம் துன்பம் இரண்டும் பொது வானது.

எல்லாவற்றையும் நேர்மறையாகச் சிந்திக்கத் தொடங்குங்கள். அவரைப்போல நாம் இல்லையே என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த உலகத்தில் ஒவ்வொரு வருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. இந்த உலகத்திலேயே மிக உயர்ந்த விஷயம் எது என்று அனுபவசாலி களிடம் கேட்டால் அவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே பதில் நிம்மதி. அத்தகைய நிம்மதியைப் பெற உடல்நலம் மனநலம் இரண்டும் மிகவும் முக்கியம்.

உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது மனநலம். மனதை எப்போதும் லேசாக வைத்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். டென்சன் உடல் நலத்தின் முதல் எதிரி என்பதை நினைவில் கொள்ளுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் யாரைப் பார்த்தும் பொறாமைப்படாதீர்கள். கோபமும் படாதீர்கள். பொறாமையும் கோபமும் உங்கள் உடல் நலத்தைக் கெடுத்து உங்களை அழித்து விடும். எந்தச் சூழ்நிலையையும் நிதானமாக யோசித்து அந்தச் சூழ்நிலையை உங்களுக்குப் பயன்படும் விதத்தில் சாதகமாக்கிக் கொள்ளுங்கள்.

மதன்மோகன் மாளவியா எனும் அறிஞர் காசி மாநகரத்தில் இந்து பல்கலைக்கழகத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். காசி நகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த செல்வந்தர்கள் ஜமீன்தார்கள் போன்றவர்களை சந்தித்து இதற்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.

காசியை ஆண்டு கொண்டிருந்த நவாப்பின் மாளிகைக்குச் சென்று பல்கலைக்கழகம் அமைக்க நிதி தந்து உதவுமாறு கேட்டார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த நவாப் கோபமடைந்து தன் காலணியைக் கழற்றி மாளவியா மீது வீசிவிட்டார். சபையிலிருந்தோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் மாளவியாவோ கோபப்படாது அந்தச் சூழ்நிலையை அமைதியாக சமாளித்தார். நவாப் வீசிய அந்த காலணியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து ஒரு மேடை மீது ஏறி நின்று நவாப்பின் காலணியை ஏலத்தில் விடப் போகிறேன். வாங்க விருப்பம் உள்ளவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றார். கூட்டத்தில் பலர் உடனே ஏலம் கேட்கத் தொடங்கினார்கள். அரண்மனை அதிகாரி ஒருவர் நவாப்பிடம் விஷயத்தைச் சொல்ல நவாப்போ யாராவது அதை மிகக்குறைந்த விலைக்கு ஏலத்தில் வாங்கிவிட்டால் நமக்கு அவமானம் என்று கருதி தனது அதிகாரியை அனுப்பி எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை. அந்தக் காலணியை ஏலத்தில் எடுத்து வரும்படி கட்டளையிட்டார். அரண்மனை அதிகாரியும் ஏலத்தில் கலந்து கொண்டு ஒரு பெரும் தொகையினைத் தந்து எலத்தில் அந்தக் காலணியை எடுத்தார்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட மாளவியா நவாப்பிடம் வந்து செருப்பை தூக்கி வீசியமைக்கு நன்றி என்று கூறி மற்றொரு காலணியை வீசினாலும் நல்லது என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார். மாளவியா கோபப் பட்டு ஏதாவது செய்திருந்தால் அவருக்கும் ஆபத்து. பணமும் கிடைத்திருக்காது. எல்லா சிக்கல்களுக்கும் ஒரு நல்ல விடை இருக்கதான் செய்கிறது.

நம்மில் பலர் பணக்காரர்களைப் பார்த்து ஏங்குகிறோம். அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போல நாமும் பணக்காராய் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து மன உளைச்சளுக்கு ஆளாகிறோம். நம்மை நாமே நொந்து கொள்ளு கிறோம். நாளடைவில் மனநலம் பாதிப்படைந்து மெல்ல மெல்ல உடல் நலமும் கெடத் தொடங்குகிறது. ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் நிறைந்திருக்கிறது. ஆனால் அதை எப்படி அனுபவிப்பது என்பதுதான் நமக்குத் தெரியவில்லை.

ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற்ற ஒவ்வொருவரும் மிகப்பெரிய பணக்காரர்களே. உண்மையில் சொல்லப்போனால் அத்தகையவர்கள் மட்டுமே கொடுத்து வைத்தவர்கள். இந்த உண்மையைப் புரிந்து கொண்டு நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்ந்து நல்ல நல்ல வழிமுறைகளைப் பின்பற்றி மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும்.

உலக மகா சாதனையாளர்கள் பலர் உடல் நலம் குன்றி இளம்வயதிலேயே இறந்து போயிருக்கிறார்கள். அவர்கள் செய்த சாதனையை பலர் போற்றுவதைக் கண்டு மகிழ அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. அவர்கள் தங்கள் சாதனை குறித்தே இருபத்திநாலு மணிநேரமும் சிந்தித்து சிந்தித்து உடல் நலத்தைப் பற்றி சிந்திக்க மறந்து போனதுதான் இதற்குக் காரணமாகும்.

வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிப்பவர் களும் சாதனை செய்ய விரும்புபவர்களும் ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட இயலும் என்பது பழமொழி. உடலும் மனமும் நலத்தோடு இருந்தால் தான் சுறுசுறுப்பாக இயங்கி சாதனை களைச் செய்து அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். சாதனைகள் நிகழ்த்தி பாராட்டு மழையில் நனையுங்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்