Home » Articles » உடலினை உறுதி செய்

 
உடலினை உறுதி செய்


சைலேந்திர பாபு செ
Author:

– முனைவர் செ. சைலேந்திரபாபு I.P.S.

வாகன விபத்துக்கள்

வாகன விபத்து ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். சில வேளைகளில் மரணத்தையே ஏற்படுத்திவிடும். இறந்தவர் குடும்பத்தலைவன் என்றால் அக் குடும்பத்திற்கு எவ்வளவு இழப்பு என்று சிந்தித்துப் பாருங்கள்.

உங்களது நண்பர்களும். உறவினர்களும் விபத்துக்களில் சிக்கி அவதிப்பட்டதை நீங்கள் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் கூட விபத்தில் சிக்கி இருக்கக்கூடும். எவ்வளவு கடுமையான உடல் வலிமையை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது, பலவிதமான அறுவை சிகிச்சைகள். நடக்கவே முடியாமல் பல நாட்கள் ஆஸ்பத்திரியில் முடங்கி கிடத்தல், மன அழுத்தம், பண விரையம் ஆகியவை ஒரு மனிதனின் மன நலத்தைக்கூட பாதித்துவிடும். சிரிப்பதையே மறக்கச் செய்யும் ஆற்றல் படைத்தது வாகன விபத்து.

மகனை இழந்த தாய்

ஓர் இரத்ததான முகாமிற்கு அழைத் திருந்தனர். சென்ற போதுதான் தெரிந்தது. அது விபத்தில் இறந்துபோன மாணவனின் பிறந்தநாள் விழா என்பது. சக மாணவர்களை அழைத்து ஓர் இரத்ததான முகாமினை நடத்தி இருக்கிறார் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் இறந்த மாணவனின் தாயார். அமெரிக்காவில் படித்தால் மாணவனின் நடத்தை கெட்டுவிடும் என்ற பயத்தில் சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்துள்ளார் இந்த தாய். மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த, அவன் படிக்கும் கல்லூரி பேருந்து மோதி கீழே விழுந்த இம்மாணவனைக் காப்பாற்ற அரை மணி நேரம் யாருமே அருகில் போகவில்லை. பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து ஓடிவிட்டார். தனது ஒரே மகனை உடனே ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தால் அவன் பிழைத்திருப்பான் என்பது இந்த தாயின் ஆதங்கம். தனது மகன் இறக்கவில்லை, இங்குதான் இருக்கிறான் என்று பேசிக் கொண்டிருந்த தாயாரைப் பார்த்தேன். இரண்டு கைகளிலும் தனது மகனின் உருவத்தை பச்சை குத்தியிருந்தார். படத்தின் கீழ் “என் செல்லம்’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த இரத்ததான முகாமை நடத்துவதற்கு என்றே அமெரிக்காவிலிருந்து அந்த தாய் சென்னை வந்துள்ளார். இந்த தாயின் சோகத்தை அளவிட முடிகிறதா உங்களுக்கு. சோகத்திலேயே பெரிய சோகம் புத்திர சோகம்தான்.

சிறுவனின் சோக மரணம்

துப்பாக்கி சுடும் தளத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, 12 வயது மாணவன் ஒருவன் “எனக்கும் துப்பாக்கி சுட ஆசையாக இருக்கிறது. பயிற்சி தருவீர்களா” என்றான். அடுத்த வாரம் வந்தால் அனுமதி பெற்று பயிற்சியை ஆரம்பிக்கலாம் என்றேன். “பட்ஹய்ந் ஹ்ர்ன்” என்று சொல்லிவிட்டு போனான் ஒரு போலீஸ் அதிகாரியின் மகனான அம் மாணவன். அடுத்த நாள் காலையில் டியூசன் சென்றமாணவன் ஒருவன் விபத்துக்குள்ளாகி விட்டான் என்ற செய்தி கேட்டு இராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். அடிபட்ட மாணவனை அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருந்து ஸ்டெரச்சரில் வெளியே கொண்டு வந்தனர். தலை நசுங்கிவிட்டது, அந்த சிறுவன் இறந்து விட்டான். உயிரற்ற உடலைப் பார்த்ததும் திடுக்கிட்டேன், அதே மாணவன், அதே மேல்சட்டை, அதே அரைக்கால் சட்டை. சில நிமிடங்களில் ஆஸ்பத்திரிக்கு வந்த தாயாரின் அழுகை விண்ணையே பிளந்து விட்டது. அங்குவந்த ஒருவர் “ஐயா, அவனது தந்தை டெல்லிக்கு பயிற்சிக்குச் சென்றுள்ளார், நீங்கள் அவரிடம் இந்தச் செய்தியைச் சொல்லிவிடுங்கள்” என்றார். முடியாது என்று மறுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். இது போன்றசூழ்நிலையில், இறந்த மகனின் தந்தையிடம் பேச தேவைப்படும் மனப்பக்குவம் அப்போது எனக்கில்லை.

ஆஸ்பத்திரியில் பெற்றோர்

லண்டன் மாநகரிலிருந்து வந்து கொண்டிருக்கும் தனது மகனை வரவேற்க திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு குடும்பத் துடன் சென்று கொண்டிருந்தார் எனது சகோதரி. செல்லும் வழியில் வாகனம் விபத்துக்குள்ளாகி அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர், இரண்டாண்டுகள் கழித்து பெற்றோரையும், சகோதரியையும் காண ஆவலோடு வந்த மகனுக்கு விமான நிலையத்தில் அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. விரைந்து ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது, மூவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பெற்றோருக்கு பரிசுப் பொருள்களைக் கொடுத்து மகிழ்ச்சியாக புத்தாண்டைக் கொண்டாட வந்த மகன், ஒரு மாதம் பெற்றோரை ஆஸ்பத்திரியில் கவனிக்க வேண்டியதாயிற்று. கார் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டது இந்த விபத்து.

டாக்டரே ஆஸ்பத்திரியில்

ஒரு பெண் டாக்டரை அவர் பிறந்த தினத்தில் இருந்து எனக்குத் தெரியும். 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ கல்லூரியில் படித்து, தன்னுடன் படித்த ஒரு மாணவரை மணந்து ஒரு சாதனை வாழ்க்கைக்குத் தயாரானாள். ஆறு மாதக் குழந்தைக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்க காரில் செல்லும் பொழுது வாகன விபத்து. உடலில் பத்து எலும்பு முறிவுகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் எழுந்து நடக்க முடியவில்லை. இடுப்பில் கடுமையான வலியால் துடித்த அந்த டாக்டர் சில தினங்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் செயற்கை இடுப்பு பொருத்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஒன்றரை வயது குழந்தையைக் கவனிக்க முடியவில்லை, தன்னையே தான் கவனிக்க முடியவில்லை, வலியையும் தாங்க முடியவில்லை. விபத்து இந்த டாக்டரின் வாழ்க்கையையே திசை மாற்றி விட்டது.

இப்படி பல விபத்துக்களைக் குறிப்பிட லாம். ஆனால் விபத்துக்களை விவரிப்பது இந்த புத்தகத்தின் நோக்கம் அல்ல என்பதால் இந்த விபத்துகளோடு நிறுத்துகிறேன். இவை கடந்த ஓர் ஆண்டில் எனக்கு மிகவும் நெருக்கமானவர் களுக்கு ஏற்பட்ட விபத்துக்கள்.

விபத்துகள் ஏராளம்

விபத்துகள் மற்றவர்களுக்குத்தான், நமக்கு அல்ல, என்று நாம் நினைத்து வருகிறோம். நேற்றுவரை விபத்துக்குள்ளானவர்கள் கூட நிச்சயமாக அப்படித்தான் நம்பியிருப்பார்கள். ஆனால், நம்மையும் மீறி விபத்துக்கள் நடந்து விடுகின்றன. எனவே தான், அவற்றைவிபத்துக்கள் என்கிறோம். சென்னையில் மட்டும் சென்ற ஆண்டு 3000 விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் 3200 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது; 900 பேர் இறந்துள்ளார்கள். சென்றஆண்டு இந்தியாவில் 1.5 இலட்சம் மக்கள் வாகன விபத்துகளால் இறந்துள்ளனர். உலகில் வாகன விபத்துகளில் இறந்தவர்களில் இது 10 சதவிகிதம் ஆகும். அதாவது இப்பூமியில் ஆண்டொன்றுக்கு சுமார் 15 இலட்சம் மக்கள் வாகன விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். அடுத்த ஆண்டு குறியீட்டு புள்ளி விபரத்தில் நாமும் ஒருவராக இருக்க நேரிடலாம். எனவே. விபத்து களில் சிக்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மோட்டார் சைக்கிள்கள்

மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் தான் பெரும்பாலும் விபத்துக்குள்ளாகி மரண மடைகிறார்கள் அல்லது பலத்த காயம் அடை கிறார்கள். கீழே விழுந்தால் கூட அடிபட்டு விடுகின்றது. தலையில் காயம் என்றால் மரணம் கூட ஏற்படுகிறது. வசதியுள்ளவர்கள் கார் வாங்கி கொண்டால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பை ஓரளவு குறைக்க முடியும். மோட்டார் சைக்கிள் ஓட்டுவதாக இருந்தால், கட்டாயம் தலைக்கவசம் அணிந்துதான் ஓட்ட வேண்டும். அனைவரும் தலைக்கவசம் அணிந்தால் சென்னையில் மட்டும் வருடம் சுமார் 250 பேரை மரணத்திலிருந்து காப்பாற்றலாம்.

கார்கள்

மோட்டார் சைக்கிளுக்கு அடுத்தபடியாக கார்களில் பயணிப்பவர்கள்தான் அதிகமாக விபத்துக்குள்ளாகிறார்கள். எனவே, வாகனங் களை கவனமாகவும், வேகக் கட்டுப்பாட்டுடனும் ஓட்ட வேண்டும். ஓர் ஓட்டுநரை நியமிப்பதாக இருந்தால், பயிற்சி பெற்ற ஒருவரையே நியமிக்க வேண்டும். வாகனத்தையும் நன்கு பராமரிக்க வேண்டும். பேருந்துகளில் விபத்துக்குள்ளானவர் களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. இதில் பயணம் செய்பவர் எந்த வகையிலும் விபத்திற்கு பொறுப்பானவர் இல்லை என்றாலும், விபத்து நடந்தால் முழு பாதிப்பும் அவருக்குத்தான். அதிவேக பேருந்து என்று போட்டிக்குப் போட்டியில் இயங்கும் பேருந்து களில் பயணம் செய்யாமல் இருப்பதாலும், பேருந்து பிரயாணத்தை தவிர்த்து புகைவண்டிப் பிரயாணத்தை மேற் கொள்வதாலும் பேருந்து விபத்துகளில் இருந்து தப்பிக்க முடியும்.

விபத்துகளை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1. தேவையற்ற, பயனற்ற பலப் பிரயாணங்களைத் தவிர்த்து விடுதல். திருமணம் அல்லது பிறந்தநாள் என்றால் அது சம்பந்தப்பட்ட வருக்கு தொலைபேசியில் வாழ்த்துச் செய்தி சொல்லிவிடலாம்.

2. அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டாமல் இருத்தல். செல்ல வேண்டிய இடத்திற்கு சில நிமிடங்கள் முன்னதாகவே புறப்பட்டு குறித்த நேரத்தில் சென்றடையலாம். ஓட்டுநருக்கு 60 கி.மீ. வேகத்திற்கு மேல் ஓட்டக்கூடாது என்ற அறிவுரையை தவறாமல் கொடுத்து விடுதல் வேண்டும்.

ஒருவேளை, முக்கியமான அலுவலுக்கு சற்று தாமதம் என்றாலும், அது பரவாயில்லை, விபத்து தவிர்க்கப்பட வேண்டியதுதான் சிறந்தது என்றமனப்பான்மையை வளர்த்து விடுதல் வேண்டும்.

3. குடிபோதையில் வாகனங்களை ஓட்டாமல் இருப்பது. ஒருவேளை குடித்திருந்தால், வாகனத்தை எங்கேயாவது நிறுத்திவிட்டு ஆட்டோவில் வீட்டிற்குச் செல்வது (ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் இருக்கக் கூடாது)

4. மது அருந்திவிட்டு ஓட்டும் ஓட்டுநரின் காரிலிருந்து இறங்கிவிட வேண்டும்.

5. வளைவுகளில் முந்தாமல் செல்ல வேண்டும்.

6. 60 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும் எந்த வாகனத்தையும், எக்காரணம் கொண்டும் முந்தக் கூடாது.

7. செல்போனில் பேசியவாறே வாகனத்தைச் செலுத்தக்கூடாது.

8. ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுநருக்கு ஓய்வு தர வேண்டும்.

9. முந்தைய நாள் தூங்காத ஓட்டுநரை வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது.

10. வாகன விபத்தைத் தடுக்கும் அதே வேளையில், விபத்து நேர்ந்துவிட்டால் சிகிச்சைப் பெற ஓர் உயிர் மற்றும் பொருள் காப்பீட்டுப் பாலிசியை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விபத்துக்களில் சிக்காமல் தப்பித்துக் கொண்டாலே மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க சில வழிமுறைகள்

அ. நடந்ததை எண்ணிக் கவலைப்படாதீர்கள். அணையைக் கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.

ஆ. ஓர் இலட்சியத்தை ஏற்படுத்தி அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். பிசியாகி விடுங்கள்.

இ. ஒரு புது மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். தினமும் ஒரு புது ஆங்கில வார்த்தையைக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஈ. இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரி (Role Model) ஆக இருங்கள். இளைஞர்களோடு உரையாடுங்கள்.

உ. நலிந்த மக்களுக்கு உதவுங்கள்.

ஊ. உங்களுக்குப் பிடிக்காத நட்பு அல்லது உறவினை உடனே முறித்துவிடுங்கள்.

எ. பெரிய சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை அவசியம் படியுங்கள்.

ஏ. சுய முன்னேற்ற நூல்களைப் படியுங்கள்.

ஐ. எந்தச் சூழ்நிலையிலும் மகிழ்ச்சியடையவும், சிரிக்கவும் முடியும் என்று நம்புங்கள்.

தினமும் நாம் சந்திக்கும் பெரும்பாலான நிகழ்வுகள். சிரிக்கும் ஒரு சந்தர்ப்பம்தான் என்பதை உணருங்கள். “நான் வித்தியாசமாய் இருப்பதால் மற்றவர்கள் சிரிக்கிறார்கள்; அவர்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் நான் சிரிக்கிறேன்” என்றார் சுவாமி விவேகானந்தர்.

சிரித்து மகிழத் தெரிந்த நீங்கள் மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தரும் ஒரு காரியத்தையும் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் சுகாதாரம். சுகத்திற்கான ஆதாரம்.

 

2 Comments

  1. metro maamu says:

    சரியாக சொன்னீர்கள் அய்யா.. ஒவ்வொருவரும் தனது கடமைகளை சரியாக உணர்ந்து செய்தாலே போதும்.. விபத்துக்கள் கண்டிப்பாக தவிர்க்க பட வேண்டும்..அல்லது உடனடி முதல் உதவி அளிக்க பட வேண்டும்..

  2. perarasan says:

    super sir hats of you

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்