Home » Cover Story » உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!

 
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!


ஹேமலதா அண்ணாமலை
Author:

நேர்முகம் : என். செல்வராஜ்

திட்டம் தீட்டுகிறேன் என்று ஆரம்பத்திலேயே பெரிய பெரிய அளவு திட்டம் தீட்டுவதை விட, நம் சக்திக்கு உட்பட்ட திட்டம் தீட்டி, அதில் வெற்றிகண்டு, அடுத்தடுத்து இலக்கை நிர்ணயித்து சாதிக்க வேண்டும்.

துணிச்சலுடன் செயலாற்றினால் வந்தடையும் வெற்றிக்கு ஆணென்று பெண்னென்று பேதமில்லை. யாவரும் இங்கு ஜெயிக்கலாம்.

நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. மற்ற எல்லோரைக்காட்டிலும் அந்த வாய்ப்பை அறிந்து சிறப்பாக செய்து சாதிக்க வேண்டும் என்கிற இலட்சியம் மனதுக்குள் எழுந்து பெண்கள் ஒவ்வொருவரும் தொழில் முனைவோராக உயர வேண்டும் என்று விருப்பப்படக்கூடியவர்.

சிறு வயது முதல் மற்றவர்களைத் திரும்பி பார்க்கும் வண்ணம் தனது செயல்பாட்டை அமைத்துக் கொண்டவர். வெளிநாட்டுத் தொழில் அனுபவம் நிரம்பப் பெற்றவர்.

தான் படித்த ஊருக்குத் தன்னால் முயன்றளவு நற்பணிகள் ஆற்றிட வேண்டும் எனப் பிரியப்பட்டு

‘ஆம்பியர்’ தொழிற்கூடப் பணியைக் கோவையில் மேற்கொண்டு வருபவர்.

நிறுவனத்தை துவக்கி ஓரிரு வருடங்களிலேயே வாடிக்கை யாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனமாக தன் நிறுவனத்தை உயர்த்தி இருப்பவர். நாளொன்றுக்கு நூறு வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை புகுத்தி சாதித்து வருபவர்.

எரிபொருளுக்கு மாற்றாக மக்கள் பெருமளவு பயன்படுத்தும் வாகனமாக எங்கள் நிறுவன வாகனமாகவே இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருபவர். மின்சாரம் மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனத்தை மாற்றுத் திறனாளிகளுக்கேற்ப தயாரித்துக் கொடுத்து தமிழக அரசின் பாராட்டைப் பெற்றிருப்பவர்.

சமூக அக்கறையும், துடிப்பான செயல்பாடும் ஒருங்கே பெற்றவராய் இருக்கும் ஆம்பியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி ஹேமலதா அண்ணாமலை அவர்களை நாம் டாக்டர் நடேசன் செந்தில்,

திரு. ஆர். மோகன்ராஜ் அவர்களுடன் சந்தித்தோம்….

பிறந்தது வளர்ந்தது

சேலம் திருச்செங் கோட்டில் பிறந்தேன். சென்னையில் வளர்ந் தேன். கோவை எஇப கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் இன்ஜினியரிங் முடித்தேன். பெங்களூர் விப்ரோ கம்பெனியில் வேலை கிடைத்தது. அங்கு ஐந்து வருடங்கள் பணிபுரிந் தேன். அப்போது ஆஸ்திரேலியா அரசாங்கம் ‘ஆசேடு’ (அமநஅஐஈ) என்கிற நிறுவனத்தின் மூலமாக வளர்ந்து வரும் நாட்டில் உள்ள மாணவ மாணவியர் முதுகலைப்பட்டப் (எம்.பி.ஏ) படிப்பிற்காக ‘ஸ்காலர்சிப்’ வழங்கியது. இந்திய அளவில் 24 பேர் மட்டுமே தேர்வு செய்யப் பட்டார்கள். அதில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலியா சென்ற பின்புதான் எனக்கு கிடைத்த வாய்ப்பு எவ்வளவு பெரியது என்பதை உணர்ந்தேன். இரண்டு வருட காலம் நிறைய தொழில்சார்ந்த விஷயங்களை அங்குள்ள மாணவ மாணவியருடன் கலந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

பின்பு ராக்கெட்டுக்குத் தேவையான மென்பொருள் (நர்ச்ற்ஜ்ஹழ்ங்) தயாரிக்கும் அமெரிக்க கம்பெனி ஒன்றில் வேலை கிடைக்கப்பெற்று சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தேன். இரண்டாண்டுகள் முடிந்து 32வது வயதில் யாருக்கும் இனி நாம் வேலை செய்யக்கூடாது நமக்கு நாமே வேலை செய்துகொள்ள வேண்டும் என ஒரு முடிவு எடுத்தேன். எல்லோருடைய ஒத்துழைப்பும் அந்நேரத்தில் எனக்கு சரிவர அமைந்தது. ஆம்பியர் எலக்ட்ரிக் வாகன தொழிற்கூடத்தை நிறுவி, எங்கள் குடும்பத்தில் நான் தான் “முதல் பெண் தொழில் நிறுவனர்” என்கிற பெயர் பெற்றேன். அப்பா பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர். அம்மா ஆசிரியை. பெண்கள் என்றாலே வீட்டிற்குள் இருக்கத்தான் வேண்டும் என்பது போல் அவர்கள் என்னை வளர்க்கவில்லை. நல்ல திறமையுடன் தன்னம்பிக்கையுடன் வளர்த்தார்கள். இன்று தொழிலில் சாதிப்பாளராக வளர்ந்து வருகிறேன்.

தொழிலில் இறங்கிய அந்தநேரம் உங்களது மனது

1995ல் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது எந்தத் தொந்தரவும் இருந்ததில்லை. கொடுக்கும் வேலையை செய்து கொண்டிருந்தால் போதுமானது. ஆனால், சொந்த நிறுவனத்தில் வேலை என்கிற போது நேரத்தைக் கடைப்பிடிப்பது என்பது முக்கியம். இதனை சிங்கப்பூரில் இருந்தபோது தான் கற்றுக் கொண்டேன். காலம் பொன்போன்றது என்பதனை அந்த மக்கள் எப்படி மதிக்கிறார்கள் என்று அறிந்தபோதுதான் அதன் சிறப்பை என்னால் உணரமுடிந்தது.

தொழில் நிறுவனராக எனக்கு முன்னோடி யாய் இருப்பவர் என்னுடைய கணவர் (திரு. பாலா) ஒரு தொழில் ஆரம்பிக்கும்போது முதலில் பயம் களையப்பட வேண்டும். நமக்கு ஏதாவது இடர்ப்பாடு என்கிற போது ஆறுதல் தரவும் தன்னம்பிக்கை ஊட்டவும் சிநேகம் தேவைப்படும். அது எனக்கு கணவர், கூடுதல் தன்னம்பிக்கையை எனக்கு வழங்கி வரும் எங்களுடைய சேர்மன் பேராசிரியர் Hang Chang Chieh, அன்பும், ஆதரவும் தரும் என்னுடைய இரு பெண் குழந்தைகளான வீணா, லக்ஷ்மி மூலமாக நிறையவே கிடைத்தது.

திட்டம் தீட்டுகிறேன் என்று ஆரம்பத்தி லேயே பெரிய பெரிய அளவு திட்டம் தீட்டுவதை விட நம் சக்திக்கு உட்பட்ட திட்டம் தீட்டி அதில் வெற்றிகண்டு அடுத்தடுத்து இலக்கை நிர்ணயித்து சாதிக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறேன்.

கோவை

கோவை நான் படித்த ஊர். மரியாதை மிக்க மக்கள் வாழ்கின்ற ஊர் என்பதனால் கோவையை தேர்ந்தெடுத்து தொழில் செய்வதற்காக 2008 மார்ச் மாதம் இங்கு வந்தேன். லூதியானா, புனே, சென்னை போன்ற இடங்களில் ஆம்பியர் தொழிற்கூடத்தை நிறுவ வாய்ப்பு இருந்தது. ஆனாலும் பிடித்த, படித்த ஊருக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற நோக்கம் எனக்குள் முன்னமே இருந்ததால் கோவையைத் தேர்ந் தெடுத்தேன். ஆரம்பத்தில் சில இடர்ப்பாடுகள் இங்கு இருக்கத்தான் செய்தது என்றாலும் அதையெல்லாம் தாண்டி சூலூரில் தொழிற்சாலை 100 பேருடன் சிறப்புற இன்று இயங்கிக் கொண்டிருக்கிறது.

சாதிக்கக்கூடிய முயற்சிகள் நிறைந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு, ஜப்பான், சீனாவிலிருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு முறையான பயிற்சிகள் கொடுத்து வேலைக்கு அமர்த்தியுள்ளோம்.

E – பைக் நிறுவன எண்ணம்

ஜப்பானில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றுக்கு சென்றிருந்தபோது டொயாட்டோ CTO ஒருவர், “Gone are the days of Internal Combustion Engine. The New era is in the horizon”. எரியக்கூடிய இன்ஜின்களுக்கெல்லாம் அழிவு காலம் வந்துவிட்டது என்றார். அப்போதைய தேடலில் தான் எலக்ட்ரிக் வாகனம் என்ற ஒன்று இருப்பதும், அதில் சீனாவே முதன்மை என்பதையும் அறிந்தேன். அப்போது நான் அடிக்கடி சீனா சென்று வரும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன் என்பதால் அதனை நன்கு கவனிக்க ஆரம்பித்தேன். இன்ஜின் இல்லாது புகையில்லாது வாகனம் சாத்தியம் என்பதை உணர்ந்தேன். அன்றிலிருந்து இந்த வாகனத்தின் மீது என் மதிப்பு கூடியது. அது இன்று செயலாக மாறியிருக்கிறது.

தொழிலோடு இணைந்திருப்பவர்களுக்கு எங்கோ ஒரு சிறு பொறி தட்டினாலும் அது பெரிய மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பது, ஆம்பியரால் உண்மையாக்கப் பட்டிருக்கிறது.

2006லிருந்து E-பைக் குறித்து படிக்கவும், தேடவும், ஆரம்பித்தேன். சுவிட்சர்லாந்து, ஜெனிவா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து அங்கு இவ்வாகனம் குறித்து என்ன செய்திருக்கிறார்கள் என்பதை கண்டு உணர்ந்தேன். ஆசியா கண்டத்தை காட்டிலும் ஐரோப்பா கண்டத்தில் எலக்ட்ரிக் வாகனம் குறித்து நிறைய ஆய்வுகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. நிறைய கட்டுப்பாடுகள், கோட்பாடுகள், விதிமுறைகள் என எல்லாவற்றையும் பெருமளவு செய்துவிட்டார்கள் என்பதை அறிய முடிந்தது. அதனால் இந்தியாவுக்கு இது நல்ல சந்தர்ப்பம் என்று கருதி நகர்புறத்தைக் காட்டிலும் கிராமப்புறங்களில் எங்களுடைய பார்வையை பதிவு செய்தோம். அங்கு அவர்களுக்குத் தேவையான வாகனவசதி செய்து தரப்பட வேண்டியிருக்கிற அவசியத்தை உணர்ந்து வாங்கும் திறனும் அறிந்து கோவையைத் தேர்ந்தெடுத்தோம்.

அக்டோபர் 2008ல் ஆம்பியர் நிறுவனத் தின் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வந்தோம். முதல் மூன்று மாதங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு செயல்முறை விளக்க காட்சிகள் நடத்தி பேட்டரி மூலம் வாகனத்தை இயக்குவது இவ்வளவுதானா என்று வாடிக்கையாளர்கள் எண்ணும் வண்ணம் வீடியோ காட்சிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் புரிய வைத்தோம். மக்கள் நம்பிக்கையுடன் வாங்கிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சாதிப்பின் தூரம் இன்னும் நீளூம் என்ற நம்பிக்கை எங்களுக்குள் நிரம்பவே இருக்கிறது.

தனித்துவம்

ஆம்பியர் நிறுவன உ-பைக் வாகனங்களின் தனித்துவம் இரண்டு. ஒன்று, பலதரப் பட்ட மக்களுக்கு பல தரப்பட்ட வாகன வடிவமைப்புகள். இரண்டு, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வாகனத்தை தயார் செய்து கொடுத்தல். உதாரணமாக நூற்பாலையில் நூல் அறுந்தவுடன் அடிக்கடி நடந்து சென்று வேலைபார்ப்பவர்களின் சிரமம் கருதியும் நேரத்தை மிச்சப்படுத்தவும் அவர்களுக்கு ஏற்றாற்போல் வாகனத்தை தயாரித்து உள்ளோம். அதன் மூலம் அவர்கள் பெருமளவு பயனடைய முடியும்.

இன்று ஆம்பியர் என்றாலே தனித் துவத்துடன் செயல்படுவார்கள் என்கிற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறோம். தன்னம்பிக்கையும், தன்முனைப்பும் இருந்தால் சாதிக்க முடியும் என எங்களின் திறந்த நேர்முக சிந்தனைகள் டீலர்களுக்கு நம்பிக்கையை வரவழைத் திருக்கிறது. தமிழகம், பெங்களூர், கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா என பல இடங்களில் ஆம்பியர் தற்போது விரிந்து நிற்கிறது.

E- பைக், வாடிக்கையாளர் பார்வையில்?

அன்னூர், காரமடை பகுதியில் தபால் பட்டுவாடா செய்யக்கூடிய அலுவலர் ஒருவர் E-பைக்கின் பயன்பாட்டை உணர்ந்த பின்பு பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு அவரே வாகனத்தின் சிறப்பை எடுத்துக்கூறி வாங்கித் தந்துள்ளார். இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. வாடிக்கையாளர்கள் தான் எங்களுக்குப் பெரிய விளம்பரதாரர்கள்.

அடுத்த இலக்கு

எடுத்த இலக்கை அடைவதற்கான முயற்சி யில் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இருந்தாலும் எங்கள் இலக்கு என்பது நிறைய இடங்களில் பெட்ரோல் அல்லாத வண்டிகளை அறிமுகப்படுத்தி காற்று மாசுபடுதலை குறைக்க வேண்டும். அதில், கோவை முன்னோடியாக இருக்க வேண்டும் என பெரிதும் விருப்பப்படு கிறோம்.

அண்மையில் இந்தியாவிலேயே முதலாக தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கி உதவியது. வழங்கப்பட்ட வாகனங்களில் ஆம்பியர் வாகனமும் ஒன்றாகும். பெட்ரோல் வாகனத்தை வழங்கும் போது அவர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களை கருத்தில் கொண்டு E-பைக் அவர்களுக்கு பெருமளவு சிரமத்தை குறைக்கக் கூடும் என்பதை ஆராய்ந்தறிந்து எங்களது நிறுவன தயாரிப்பு வாகனங்களை அரசு வாங்கியது எங்களுக்கு ஒரு பெரிய மைல்கல் என்றுதான் கூறவேண்டும்.

இத்துறையில் சாதிக்க தொழில்நுட்ப படிப்பு ஒரு காரணமாகுமா?

ஒரு தொழிலை நிறுவ பொறியாளராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதை நடத்த போதுமான அனுபவமும், திறமையும் தான் தேவை. சீனாவில் 8வது கூட படிக்காத பெண்கள் தொழிலில் அவ்வளவு சாதிப்பாளர் களாக இருக்கிறார்கள். படிப்பறிவு இல்லாத கணவன் மனைவி இருவரும் நாள்தோறும் பத்தாயிரம் E-பைக் வாகனங்களை உற்பத்தி செய்யும் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். அதனால் தொழில் நுட்பத்திற்கும் தொழில் நிறுவுவதற்கும் சம்மந்தமே கிடையாது. இதை அனுபவ பூர்வமாக சொல்கிறேன்.

இளம்வயதில் உண்டான குறிக்கோள்

எம்.பிஏ படிக்கும் போதே எனக்குள் தொழில்துறையில் சாதிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனாலும் அது அப்போதைக்கு முடியுமா? முடியாதா? என்கிற பயம் கலந்து தான் இருந்தது. திருமணம் முடிந்ததும் எனது எண்ணத் திற்கு ஆதரவு நிரம்பக் கிடைத்தது. அப்போது நம்மால் சாதிக்க முடியும் என்கிறதைரியம் பிறந்தது. அதற்கு ஏற்பவே எல்லாம் சரியாக அமைந்து வந்தது.

E-பைக் தயாரிப்பில் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஆம்பியர்?

சிறந்து விளங்குகிறது. எலக்ட்ரானிக் துறையில் எங்கள் நிறுவனம் சிறந்து விளங்குவதால் தேவைக்கேற்ப வசதிகளை ஏற்படுத்தி தரமுடிகிறது. உதாரணமாக ரிவர்ஸில் எடுக்கும் வசதி, ஸ்டேரிங் வசதி, பேட்டரியின் உழைப்பு இப்படி நிறைய கூற முடியும்.

நம் இந்தியப் பெண்கள்

நம் இந்தியப் பெண்கள் இளநிலை, முதுநிலை படிப்பு முடித்து திருமணம், குழந்தைகள் என்றானவுடன் தொழிலின் மீதான ஆர்வத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள். காரணம் அப்படிப் பட்ட ஒரு சூழலுக்கு பழக்கப்பட்டுவிடுகிறார்கள். குடும்பம் என்றானவுடன் வாழ்க்கையில் அதை ஒரு பகுதியாகவும், வேலை, தொழிலை ஒரு பகுதி யாகவும் எடுத்துக்கொண்டு இரண்டிலுமே முத்திரைகள் பதிக்க வேண்டும்.

எங்கள் நிறுவனத்தில் உதிரிபாகங்களை ஒன்றிணைக்கும் பிரிவில் பயிற்சிகள் தந்து பெண்களை பணியில் அமர்த்தினோம். அவர்கள் பணி ஆண்களையும் மிஞ்சும் அளவு இன்று அமைந்திருக்கிறது. நம் இந்தியப் பெண்கள் எதையும் சாதிக்கும் வல்லமையைப் பெற்றவர்கள் அவர்கள் நினைத்தால் எங்கும் எதிலும் வெற்றிக் கொடியை நாட்டமுடியும்.

உங்கள் எதிர்கால ஆசை

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே வேலை பார்க்கக் கூடிய தொழிற்கூடத்தை விரைவில் அமைக்க வேண்டும். என்னைப்போல் நிறையப்பேர் இதனை செய்யவேண்டும். அப்போது பெண்களுக்கு அதிகளவு வேலை வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் வாழ்வில் இதனால் பெருமளவு மாற்றத்தை உருவாக்கிட முடியும்.

இளமைக்காலம்

வீட்டில் சொல்வதைச் செய்யக்கூடிய பெண்ணாகத்தான் வளர்ந்தேன். படிப்பு என்று வரும்போது மற்றவர்களைக் காட்டிலும் வேறுபட்டு முதன்மையாகவே இருக்க விரும்பு வேன். விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. கபடி, கோக்கோ, த்ரோபால், வாலிபால், டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் கேப்டனாக இருந்திருக்கிறேன். எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். நான் 5வது பெண். அதனால் குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகளைக் கவனித்து உள்வாங்கியதில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. விவேகானந்தா வித்யாலயாவில் படித்தபோது யோகா, தியானம் மீது எனக்கு ஆர்வம் வந்தது. கற்றுக் கொண்டேன். அது இப்போது பெருமளவு எனக்கு பயன்பாடாக அமைந்து வருகிறது.

பெற்றோர்களை நினைத்தவுடன்

அவர்கள் தந்த ஊக்கம் தான் சட்டென்று நினைவுக்கு வரும். என் தந்தை திரு. அண்ணாமலை அவர்கள் அவர் குடும்பத்தின் முதல் பட்டதாரி. கடலை வியாபாரம் செய்யச் சொல் கிறார்கள் என்பதற்காக இராசிபுரத்திலிருந்து சென்னைக்கு வந்து படிப்பைத் தொடர்ந்தவர். படிப்பின் மீது அவருக்கு தனிப் பற்றுதல் இருந்ததால் தான் எங்கள் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் நன்கு படிக்க வைத் தார். முடியாததை முடியும் என்று நடத்திக் காட்டியவர் எங்கள் தந்தை. எங்களை மட்டு மல்லாமல் அவர் உடன்பிறந்த சகோதர, சகோதரி கள் என 52 பட்ட தாரிகளை உருவாக்கி யிருப்பவர்.அம்மா ஜானகி அவர்கள் ஆசிரியை என்ப தனால் பண்பாடு, ஒழுக்கம், கல்வி குறித்த விழிப் புணர்வுகளை நிறைய போதித் தார்கள்.

‘சுதந்திரம்’ பெண்களை எங்கோ திசை திருப்புகிறதா?

தவறான நண்பர்களுடன் உண்டாகும் பழக்கம் திசை திருப்புகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
சூழலை நல்ல முறையில் அமைத்துக் கொண்டவர்கள் சாதிக்கவே செய்கிறார்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை கவனித்து தோழமை உணர்வோடு அவசியம் கண்டிக்க வேண்டும்.

நாட்டுக்காக நான்கு வார்த்தைகள்

இந்தியா வல்லரசாவதற்கான நம்பிக்கை 200 சதவிகிதம் எனக்குள் இருக்கிறது. நிறைய முதலீட்டாளர்கள் தொழிலைத் துவக்க வேண்டும். 60-ல் யோகா என்பதை இளம் வயதில் இருந்தே வாழ்க்கையோடு ஒன்றாகக் கலந்துவிட வேண்டும். அப்போதுதான் உடல்நலமும் உள்ள நலமும் ஓங்கும். இது நம் ஒவ்வொருக்கும் இனி வரும் காலத்திற்கு அவசியம். மனிதநேயம் சிறக்க வேண்டும். பக்குவப்பட்ட மன நிலையை எல்லோரும் எட்ட வேண்டும். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும்.

உங்களைக் கவர்ந்த நூல்

இ.ஓ.பிரகலாத் எழுதிய “The fortune of the bottom of the pyramid” என்ற நூலும், கெய்த் கேமரான் ஸ்மித் எழுதிய “The Top 10 Distinctions Between Millionaires and the Middle Class” என்ற நூலும் என்னை பெருமளவு பாதித்தது.

தன்னம்பிக்கை

இன்றைக்கு சாதிக்கக்கூடிய வாய்ப்புகள் நிரம்ப நம் இந்தியாவில் இருக்கிறது. அந்த வாய்ப்புகளைத் திறம்பட பயன்படுத்தி சாதிப்பது இளைஞர்கள் கையில்தான். அதற்கு தன்னம்பிக்கை மூலதனமாக இருக்கிறது.

தன்னம்பிக்கை வாசகர்களில் தன் முனைப்புடன் தொழில் துவங்க ஆர்வ முள்ளவர்கள் கோவை அவினாசி சாலை தமோதர் சென்டர் ஆம்பியர் அலுவலகத்தை அணுகலாம்.

தேச நலனில் தங்களின் பங்களிப்பு…

உலகளவில் தொழில் முனைவோரும், தொழில் துவங்குபவரும் சாதிப்பதற்கான வழிமுறைகளைத் தரும் tie (www.tie.org) என்ற அமைப்பு உலகளவில் 55 கிளைகளாக இயங்கி வருகிறது. அவ்வமைப்பின் கோவை கிளையில் நானும் அங்கம் வைக்கிறேன்.

மேலும், மாறிவரும் பொருளாதாரச் சூழலில் தங்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பெண்கள், மகளிர் சுய உதவி குழுக்களில் சேர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். அவர் களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தமிழகத்திலேயே முதல் முறையாக ஆம்பியர் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளோம்.

ஆம்பியர் E -பைக் தரும் நன்மைகள்

1. காற்று மாசுபடாமல் காக்கப்படுகிறது.

2. மாதம் ரூ. 1500 பெட்ரோலுக்காக
செலவு செய்பவர்கள் ரூ150 செலவு
செய்தால் போதும்.

3. வயதானவர்களுக்கு, பள்ளி மாணவ – மாணவிகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பானது.

4. குறைந்த பராமரிப்பு செலவு.

5. லைசென்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன் தேவையில்லை.

6. 6 ரூபாய் செலவில் 60 கிலோ மீட்டர் செல்ல முடியும்.

7. வீட்டில் உள்ள பிளக் பாயிண்டின் மூலமாகவே சார்ஜ் செய்து கொள்ளலாம்.

 

1 Comment

  1. S.M.Guptha says:

    அம்மையாரின் முயற்சி பாராட்டத்தக்கது . தமிழ்நாடு பெருமைபடத்தக்கது. நான் 73 வயதான மாற்றுதிரனாலி (போலியோ). எனக்கு மூன்று சக்கர வாகனம் தேவைபடுகிறது. பெங்களூரில் எங்கே கிடைக்கும், தயவுசெய்து விவரம் தெரிவித்து உதவ வேண்டுகிறேன் . என் முகவரி : 09845980920

Leave a Reply to S.M.Guptha


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்