Home » Articles » தீரா வாதம்

 
தீரா வாதம்


பாலா
Author:

– பாலா

கதிரவன் மேகங்களையும் மலைகளையும் கடந்து மேலேறி         வந்தான்.  காலை ஏழு மணி.  மெல்ல கண் விழித்து பார்த்தாள் கீதாம்மா. கடிகாரம் பார்த்தவளுக்கு அதிர்ச்சியொன்று நெஞ்சில் பாய்ந்தது போல், எந்திரிடீ! நேரம் பாரு ஏழாச்சு…. நீயாவது சீக்கிரம் எந்திரிச்சு என்னை எழுப்பியிருக்கலாமில்ல…. இப்போ ஆபீஸ் வேலை எல்லாம் பெண்டிங் ஆயிடுச்சு! காலையில எந்திருச்சு ஒரு காப்பித் தண்ணி, டீ தண்ணி வெச்சு அம்மாவை எழுப்பி தரணும், அப்புறம் உக்கார்ந்து படிக்கணும் ஏதாவது அக்கறை இருக்கா? எல்லாம் நானே தான் செய்யணும்……” என்று பேசிக்கொண்டே யிருந்த கீதாம்மாவின் புலம்பலை தவிர்க்க முடியாமல் தன் போர்வையை விலக்கி, மெதுவாய் தலை தூக்கிய பானு, “நைட் நான் தூங்கும் போது ஒரு மணி! நான் அத்தனை நேரம் படிச்சிட்டுதான் இருந்தேன். இன்னைக்கு சனிக்கிழமை காலேஜ் லீவு. அதான் தூங்குறேன். போதுமா?” விடுக்கென்று போர்வைக்குள் மீண்டும் ஒளிந்து கொண்டாள் பானு. அவளிடம் இனி பேசி பயனில்லை என்று உணர்ந்த கீதாம்மா சமையலறை சென்றார்.

அங்கு அழுக்கு பாத்திரங்கள் எல்லாம் கழுவாமல் இரவு போட்டது போட்டபடியே இருந்தது. கீதாம்மா முகம் சிவந்தது.  “பாரு! பாத்திரமெல்லாம் அப்படியே கெடக்குது……. நைட் யாராவது கழுவி வைச்சாங்களா? மாட்டாங்க…. அவுங்கவங்களுக்கு அவங்கவங்க வேலைதான் முக்கியம்”. என்று புலம்பி கொண்டே, இருந்த பாத்திரங்களையெல்லாம் கழுவினாள் கீதாம்மா.

அப்போது அவள் அலைபேசி கண் விழித்தது. மொத்த வீட்டையும் எழுப்பியது அதன் இரைச்சல்.  “வந்திருச்சா? காலையில ஒரு வேலை செய்ய விடமாட்டானுங்க!” என்ற படியே அலைபேசியை கையிலெடுத்தாள். “சொல்லுப்பா! நேத்தைக்கு நான் போன் பண்ணும்போது எடுத்திறாதே! உன்கிட்ட முக்கியமான வேலை சொல்லனும்னு போன் பண்றேன்…. எடுக்கவே மாட்டேங்கிற! ஆறு மணியிருந்து பத்து மணி வரை ‘சுவிட்சிடு ஆப்!’ எதுக்கு உங்களுக்கெல்லாம் மொபைல் போன்…. ஒருத்தனும் நான் சொல்றதை கேக்காதீங்க” என்று தொண்டை கிழிய கத்திய கீதாம்மாவின் குரல் இனி உறங்க விடாது என்று உணர்ந்து பானு, சலிப்புடன் விரக்தி யுடனும் “காலையில நிம்மதியா தூங்கவும் முடியாது, இந்த வீட்ல!” என்றபடி எழுந்தாள்.

அவசர அவசரமாய் அலுவலகம் கிளம்பினாள் கீதாம்மா. அவள் கணவன் அவளுக்காய் பால் எடுத்துக் கொண்டிருந்தார்.  மகள் பானு அம்மாவிற்காக மதிய உணவு, காலை பலகாரமும் செய்து கொண்டிருந்தாள்.  அப்போது கீதாம்மாவின் மூத்த மகன்தன் அறையிலிருந்து வெளியே வந்தான்.  தன் சட்டை பேண்ட் சரிவர தனக்கு பொருத்தமாய் உள்ளதா என்று பார்த்தபடியே வந்தவனை கீதாம்மா கவனித்து கொண்டிருந்தாள் “டேய் ரமேஷ்! அந்த பிரிண்டர் சரி செய்யச் சொல்லி எத்தனை நாளாச்சு? எத்தன தடவ சொல்லுறது? நீ போற வழியில தானே இந்த பிரிண்டர் கடை இருக்கு? சொன்னா கேட்டறாத……” என்று ஆரம்பித்த வளைப் பார்த்து ரமேஷ் “நான் என்ன தினமும் சினிமா, பாட்டு, டேன்ஸ்ன்னா சுத்தீட்டிருக்கேன்? காலையில ஒன்பது மணிக்கு போனா நைட் ஏழு எட்டாகும், நான் ஆபீஸி லிருந்து வெளியேவர! எங்க போய் பிரிண்டர் தர்றதுக்கு நேரம்? அந்தக் கம்ப்யூட்டர் கடை பத்து மணிக்கு ஓபன் பண்ணி ஏழு மணிக்கு மூடிருவான். என் ஆபீஸ்ல ரெண்டு வாரமா ஆடிட் மீட்டிங், ஏன்னுவல் மீட்டிங்ன்னு உயிர எடுக்கறானுங்க. எனக்கே நேரமில்லாம திரிஞ்சிக் கிட்டு இருக்கேன்மா! வேணும்னா நீயே போய் கொடு.  இல்லைன்னா இந்தா போன் நம்பர்…. கூப்பிட்டா ஆள்வந்து இங்கேயே சரி செஞ்சட்டு போயிருவான்.” என்று தன் பையும் ஹெல்மெட்டு மாய் வெளியேறினான் ரமேஷ்.

அவன் வீட்டு படிகளை கடந்து விட்டான் என்பதை உறுதிப்படுத்தி கொண்ட கீதாம்மா, “ஆமா எல்லா வேலையும் நானே செய்யணும்! இவங்களுக்காக வேலைக்கு போகணும், காசு சம்பாதிக்கனும், அத இத வாங்கித் தரணும், சமச்சு போடணும்…. ஆனா எனக்கொரு உதவின்னா செய்ய மாட்டாங்க.  என்ன பண்றது என் நிலைமை அப்படி ஆயிடுச்சு!” என்று தன்னைத் தானே நொந்து கொண்டிருக்கையில் அவளுக்கான பால், மதிய உணவு கூடை, காலை டிபன் எல்லாம் அவள் முன்னாருலிந்த மேஜை மீது அடுக்கினாள் பானுவும் அப்பாவும்.  ஒன்றும் பேச இடமில்லை என்று புரிந்தது கீதாம்மாவிற்கு. அமைதியாக சாப்பிட்டு விட்டு கிளம்பினாள். தன் வண்டியி லேறிய போது அலைபேசி அலறியது. யார் என்று பார்த்தாள் கீதாம்மா. அது கீதாம்மாவின் அம்மா.

“சொல்லுமா!” என்று ஆரம்பித்தாள் கீதாம்மா.

“கீதா, இன்னைக்கு ஆறு மணிக்கு நம்ம வீதியில இருக்க முருகன் கோயில்ல விசேஷம் டீ நீ வரமுடியுமில்ல? ரொம்ப விஷேசம் டீ! கண்டிப்பா வா” என்றாள் கீதாவின் அம்மா.

“அட நீ போயிட்டு வாம்மா! இங்க ஆபீஸ்ல போனா, இன்னைக்கு என்ன பிரச்சனை வருமோன்னு தெரியல. முருகனையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்மா. நமக்கெதாவது நல்லது பண்றானான்னு பாக்குறேன். ஒண்ணு மில்லாமா! ஒண்ணும் நாம நெனைக்கிற மாதிரி நடக்கறதில்ல. காலையில எந்திரிச்சதிலிருந்து எல்லாம் வேலையும் ஆளுங்களும் மண்டை காய வெக்கிற மாதிரிதான் இருக்கு. நீ போயிட்டு வாம்மா!”

“கீதா! கொஞ்ச நேரம் சாமி கும்பிடு கண்ணு எல்லாம் அவன் பாத்துக்குவான்!”

அம்மா! அவன் பாத்துட்டு மட்டும்தான் இருப்பான்.  இருக்கான்! நம்ம கஷ்டத்த மட்டுமே படனும்னு எழுதி வெச்சிருக்கான் போல. நீ போயிட்டு வாம்மா!” என்று வேண்டா வெறுப்பாய் அலைபேசியை வைத்தாள் கீதாம்மா.

ஒன்றும் பேச முடியாமல், மீண்டும் அழைத்து பார்க்க தயக்கம் கொண்டு, மனதால் வாழ, கண்களில் கண்ணீர் சொறிந்தால் கீதாம்மாவின் அம்மா. “என் மகளுக்கு ஒரு விடிவுகாலம் சீக்கிரம் கொடு கடவுளே! முருகா!” என்று நெஞ்சுருகி பிரார்த்தனை செய்தாள்.

ஆபிஸ் வந்தடைந்தாள் கீதாம்மா.  வழக்கம்போல மேலதிகாரியின் திட்டுக்கள், கீழ்நிலை வேலையாட்களின் சொல் பேச்சு கேளாதன்மை, இன்னும் பல அலுவலக சிக்கல்கள் அவளைச் சுற்றி பின்னிக்கொண்டன.  பத்துமணி முதல் ஒரு மணிவரை ஓயாத உழைப்பு.  உணவு இடைவேளை.  கீதாம்மாவும், அவளுடன் வேலை பார்க்கும் லதா என்பவரும் ஒன்றாய் சாப்பிட அமர்ந்தனர்.

லதா பேச்சை ஆரம்பித்தார்.

“கீதா! இன்னைக்காவது உன் வேலை முடியுமா?” என வினவியதற்கு பதிலாய் கீதாம்மா, அடபோம்மா! என்னத்தை உழைச்சு? என்னத்தை கண்டோம்? நாம நேர்மையா இருந்து வேலை செஞ்சாலும் இங்க எல்லாம் பொழைக்க முடியாது. ரெண்டு வாரமாச்சு!! என் டாக்கு மென்டஸ் எல்லாம் மேனஜர் டேபிள் மேலேயே கெடப்பா கெடக்குது. வீட்ல வேற நெறைய டாக்குமென்ட்ஸ் முடிக்க வேண்டியிருக்கு.  என்ன செய்ய போறேனோ தெரியல.  ரெண்டு நாள் தான் டைம் கொடுத்திருக்கார் மேனேஜர்.  ரெண்டு நாள்ல…..” என்று புலம்ப ஆரம்பித்தவள்,

அவளது நீளமான உரையை முடிக்கும் போது மணி இரண்டு.  மதிய உணவு நேரமே முடிந்தது. ஏண்டா இவக்கூட பேசினோம்.

என்ற முகத்துடன் கீதாம்மாவுடன் நடந்தாள் லதா.

இரவு எட்டு மணி, கீதாம்மா வீடு வந்தடைந்தாள். மகள் பானு ஆழ்ந்த உறக்கத்தில், அருகே நிறைய புத்தகங்கள். கணவர் தொலைக் காட்சியினுள் மூழ்கி இருந்தார். மகன் ரமேஷ் கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந் தான். சலிப்புடன் உள்ளே நுழைந்து, தனது கனத்த பைகளை கீழே வைத்துவிட்டு, நாற்காலி யில் அமர்ந்தாள் கீதாம்மா. சிறிது நேரம் அமைதியில் இருந்தாள். சட்டென்று அந்த அமைதி உடையும் வண்ணம் “யாராவது ஒரு கப் தண்ணி கொடுத்தீங்களா? மனுஷி கஷ்டப்பட்டு அவளோ தூரத்திலேந்து வர்றாளேன்னு யாருக்காவது அக்கறையிருக்கா?” என்று கடிக்க ஆரம்பித்தாள். மகள் உறக்கம் கலைந்தாள்.  மகன் தன் வேலைகளை விட்டுவிட்டு அம்மாவைப் பார்த்தான். அப்பா தொலைக்காட்சியை நிறுத்தினார்.  “ஒரு நாள் முழுக்க உழைச்சு களச்சு வர்றாளே…… அவளுக்கு ஏதாவது செஞ்சு வெக்க ணும்னு ஏதாவது அறிவிருக்கா உங்களுக்கு…… என்று மறுபடியும் தனது நீளமான உரையை ஆரம்பித்தாள் கீதாம்மா.  அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் பின்னே யிருந்த மேஜையில் சூடாய் சப்பாத்திகளும், குருமா மற்றும் கோப்பை நிறைய தண்ணீரும் இருந்தது. அதைக் கவனித்ததும் ஒன்றும் பேசாமல் அதை சாப்பிட ஆரம்பித்தாள். எல்லாம் அவரவர் வேலைகளினுள் மீண்டும் நுழைந்தனர்.

கடிந்தும் புலம்பியும் படுக்கையை அடைந்தாள் கீதாம்மா….அன்றைய நாளின் அசதி, அவளை மிகவும் சலிப்படையச் செய்திருந்தது. கண்கள் அயர்ந்தன. நல்ல உறக்கம்.  அப்போது ஒரு ஞாபகத்தில் கண் விழித்தாள் கீதாம்மா. நல்ல இருட்டு. ஜன்னல்கள் திறந்திருந்தன.  அதன் வழியே குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. அப்போது சட்டென்று ஜன்னல் வழியே ஏதோ ஓர் வெளிச்சம் கிழித்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தது. “யாரு? யாரது?”என்று கண்கள் கூச வெளிச்சத்தை தன் கைகளால் மறைத்தபடி ஜன்னலருகே யாரென்று பார்க்க முயற்சித்தாள். ஜன்னலருகே அழகிய செம்மை நிறத்தாலான பாதங்கள் தெரிந்தன. இரண்டும் மிக அழகானவை! தலை உயர்த்தி பார்த்தாள் கீதாம்மா.  கையில் வேல், தலையில் கீரிடம், சுமந்து செல்ல மயில் வாகனம், நெற்றி ஜொலிக்கும் வண்ணம் திருநீறு பட்டை, குங்குமப்பொட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக அமைதியை மட்டுமே சிந்திய கண்கள்.

“மு…….மு……….முரு………முருகனா நீ?” என்று தயக்கத்துடன் மகிழ்ச்சியும் உடன் கலந்து வினவினாள் கீதாம்மா.

“ஆம்! கீதாம்மா……. நீ தினமும் மனதால் வணங்கி வழிபடும் உன் இறைவன் முருகன் நானே!” என்று புன்னகைத்து நின்றார் முருகன்.

சட்டென்று சந்தேக பார்வை கொண் டாள் கீதாம்மா.  “நீ! நீ ரமேஷ் இல்ல….. ரமேஷ்! டேய் விளையாடாதே!” என்று தன் மகனை இருந்த இடத்திலிருந்தபடியே கண்களால் தேடி துழாவினாள். எட்டிப் பார்க்கையில், தனது படுக்கையில் வாயைப் பிளந்து கொண்டு உறங்கி கொண்டிருந்தான் மகன் ரமேஷ். இப்போது உறுதியாயிற்று! வந்தது தமிழ் கடவுள்தான்! அவள் விரல்களால் அவள் கண்களையே நன்கு கசக்கி பார்த்தாள். முருகனை தெளிவுப் பெற நோக்கினாள்.

“கீதாம்மா நீ படும் பாட்டை நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  இன்று உன் அம்மா, உனக்காக மனம் வருந்தி, உயிர் உருக்கி என்னை அழைத்தாள்.  உனக்கு அருள் புரிய வேண்டினாள் அதற்காகவே யாம் இங்கு இப்பொழுது உன் முன்னே காட்சி தந்துள்ளோம்.”

“ரொம்ப நன்றி முருகா!” என்று கைகூப்பியபடியே புன்னகைத்து அமர்ந்திருந்தாள்.

“சொல்லம்மா! உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று வினவிய முருகனை கண் குளிர பார்த்து கொண்டிந்தாள் கீதாம்மா.

இதழ் நிறைய புன்னகைத்து நின்ற முருகனின் அந்த சிரிப்பு, அவளை சுய நினை விற்கு கொண்டு வந்தது. யோசனையுடன் மெல்ல மெல்ல பேச ஆரம்பித்தாள் கீதாம்மா.

“அது! அது வந்து முருகா….. என்னோட வாழ்க்கையில நான் நிறைய படிச்சு எல்லாத்துலையும் முதல் ஆளா வந்திருக்கேன்.  கஷ்டம்தான் அனுபவிச்சிருக்கேன்…….…..”

என்று  பேச  ஆரம்பித்த  கீதாம்மாவை  கூர்ந்து கவனிக்கலானார் எம்பெருமான் முருகன்.  கீதாம்மா எழுந்து நடக்கலானாள்.  குட்டிப் போட்ட பூனைப் போல் அங்குமிங்கும் நடந்தபடியே தனது குறைகளை எல்லாம் கொட்டித் தீர்த்தாள். இன்றைய நாள் வரை தான் அனுபவித்த கஷ்டங்களின் பட்டியலை முழுவதுமாய் உரைத்தாள்.
“சரி கீதாம்மா!” என்று அவளின்  பேச்சின் இடையே தான் பேச முற்பட்டார் முருகன்.  விடவில்லை கீதாம்மா தொடர்ந்து பேசினாள்.
“சரியம்மா உனக்கு என்ன வர….” என்று கூறி முடிக்கவில்லை வேலாயுதன், புலம்பி கொண்டுதான் இருந்தாள் கீதாம்மா.  திடுக்கிட்டு போய் முருகன்.  உலக வரலாற்றில், இலக்கிய இலக்கண சுவடுகளில் முதன் முறையாக தமிழ் கடவுள் முருகன் முகத்தில் சலிப்பதற்கான சிறு அடையாளம் தெரிந்தது. அவர் கண்கள் சொருகியது.
“இவ்ளோ பிரச்சனையிருக்கு முருகா”! என்று கீதாம்மா முழு புராணத்தையும் கூறி முடித்து திரும்பி பார்க்கையில் அங்கு யாருமில்லை.  வெறும் இருட்டு, ஜன்னல் வழி காற்றும் இருந்தது.  கதவுகளை திறந்து பார்த் தாள்.  சமையலறை, அட்டாணி, பூஜை அறை சென்று பார்த்தாள்.  முருகன் இருப்பதற்கான தடயங்களே இல்லை. பூஜை அறையிலிருந்து திரும்புகையில் அவள் கை பட்டு பூஜைக்கு வைத்திருந்த மணி கீழே விழுந்த அந்த இரவு மௌனத்தை உடைத்தது.
திடுக்கிட்டு எழுந்தாள் கீதாம்மா அவள் மகள் பானு அருகில் உறங்கிக்கொண்டிந்தாள். மேலே கடிகாரம் மணியடித்துக் கொண்டிருந்தது.  அதன் மண்டை மீது ஒங்கி ஓர் அடி வைத்தாள்.  நேரம் எட்டு மணி.  போர்வை எல்லாம் விலக்கி, மெல்ல எழுந்து அந்த ஜன்னலருகே சென்றாள்.  ஜன்னல் வழி எட்டிப்பார்த்தாள்.  வெளியே ஜன நடமாட்டம். நாய்கள் நடமாட்டம் இருந்ததை பார்த்தாள்.
‘அப்போ எல்லாம் கனவா?’ நன்கு சிந்தித்து தெளிந்தவள் போல,
‘ஆமா…… நம்மள மாதிரி ஆளுக் கெல்லாம் முருகன் வந்து வரம் கொடுப்பானா?’ சே! எல்லாம் கனவு என்று என்று அசட்டுத் தனமாய் புன்னகைத்து விட்டு, திரும்பிதன் மகளைப் பார்த்தாள்.
“எந்திரிடீ! நேரமாச்சு…. காலையில எந்திரிச்சு ஏதாவது பலகாரம் செய்யலாமே, டீ போடலாமே….. ஏதாவது அக்கறை இருக்கா? எல்லாம் நானே தான் செய்யணும்” என்று புலம்பி கொண்டுதன் தலைமுடியை கொத்தாய் சேர்த்தெடுத்து கொண்டையிட்டு சமையலறை சென்றாள்.  அவள் நின்றிருந்த ஜன்னல் அருகே மேஜைக்கு கீழ் மூன்று மயில் தோகைகள் கிடந்தன.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு