Home » Articles » கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு

 
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு


சீனிவாசன் D
Author:

– பட்சிராஜன் என்கிற கா. மாரப்பன்

கோவை நகரின் வரலாறு பற்றிய     புதிய – ஆணித்தரமான இதுவரை எடுத்துரைக்கப்படாத செய்தி இது.

கோவை என்பது கோயம்புத்தூர் என்பதற்கான சுருக்கமே. அதேபோல் நாகப் பட்டினம் நாகை என்றும் காறைக்குடி காறை என்றும் சிரவணம்பட்டி என்பது சிரவை என்றும் சுருக்கம் பெறுவது இந்நாளைய மரபாகி வருகிறது.

கி . மு. 2500 ஆண்டுகாலம் முதலே தமிழ் கொங்கிற்கும்  மேற்திசை நாகரிக மையங்களான சுமேரியா, கிரீசு, ரோம் முதலிய நாடுகளுக்கும் நடந்த வாணிபத்தொடர்புக்குரிய நெடுஞ் சாலையும் வட இமயம் வரை துணைக் கண்டத்தின் குறுக்கே தென்வடலாக அமைந்து இயங்கிய ப்ருஹத் சரணா என்ற நெடுஞ் சாலையும் கோவை அருகே உள்ள வெள்ளலூரில் தான் சந்தித்தன. மேலை நாட்டார் வெள்ளலூரிலேயே தங்கி வாணிபம் நடத்தியும் உள்ளனர். இந்த ஊரின் இடத்தை இன்று கோவை ஏற்றுக் கொண்டுள்ளது.

கி.பி பத்தாம் நூற்றாண்டுக்கொங்குச் சோழ மன்னர்களின் கற்சாசனங்களில் கோவை கோவன் புத்தூர் என்று பலமுறை குறிப்பிடப்படும்; கோவை நகரம் இந்தியாவின் முக்கியத் தொழில் நகரங்களில் ஒன்று. அருகே பின்புறத்தில் உள்ள நீலகிரி மலையில் உள்ள ஊட்டி முதலிய மலை நாட்டு நகரங்களுக்கும் கோவைதான் தோரண வாயில். முதற்தரமான கல்வி நிறுவனங்களும் முதற்தரமான மருத்துவ நிறுவனங்களும் அமைந்துள்ள நகரம் கோவை. நல்ல மிதமான தட்ப வெப்பமும், தித்திக்கும் குடிநீர் வாய்ப்பும் அமைந்த ஊர் கோவை.

கி.பி.16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவரால் இயற்றப்பட்ட “சோழன் பூர்வ பட்டயம்” – என்ற நூல் கொங்கில் கரிகாலன் என்ற மன்னன் பல இடங்களில் கட்டி எழுப்பிய சிவன் கோயிற்பணிகளைக் குறிக்கும் போக்கில் கோவன்புத்தூரும் குறிப்புரை பெறுகின்றது.

கோவன் என்ற இருளன் ஏற்படுத்திய புத்தூரே கோவன் புத்தூர் என்பது அந்நூற் கருத்து. அதை அறிஞர் பெருமக்கள் உள்பட தமிழ் உலகம் அப்படியே இன்று வரை ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை அடியோடு மறுப்பதே இக்கட்டுரை எடுத்து வைக்கும் முதல் வாதமாகும்.

பூர்வ பட்டயம் கூறும் செய்தி பத்தாம் நூற்றாண்டுக்குரியது. ஆனால் ஆசிரியர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். அந்நூற் குறிப்புகள் தரும் செய்திகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு உள்ளவை. எடுத்துக்காட்டாக உறையூர்க்கரிகாலனுக்குரிய உண்மையான வரலாற்றுச் செய்திகளை கொங்குக் கரிகாலன் பேரில் சார்த்திக்கூறிக் குழப்புகிறார். மக்களின் வாய்மொழி வழக்காகவும் பிற நூற்குறிப்பு களாகவும் வரும் மெய்யான வரலாற்றுச் செய்திகளைத் திரித்து கூறுவதாகவும் உள்ளது.  எனவே தமிழக் கொங்கின் வரலாற்றினை ஆராய்வதற்கு புதிய நேரடி முயற்சியில் ஈடுபடவேண்டியதாயிற்று.

கோவன் என்பவன் – இருளன் என்பதிலேயே மற்றொரு பெரும் முரண் ஒளிந்துள்ளது. இருளர்கள் இன்றும் ஏழ்மையான பழங்குடிகளாக மெலிந்த, நலிந்த – வறுமையால் – வாடிய மக்களாகவே ஆங்காங்கே மலைக் காடுகளில் மிகச் சிறுபான்மையாக வாழ்வதை நாம் பார்க்கிறோம்.

அன்று இவர்கள் வாட்ட சாட்டமான உடல் வளமுடன் பெரும்பான்மையாகவும் ஆதிக்கம் மிக்க கட்டுக்கோப்பான சமுகக் குடியாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களின் பாரம்பரியத் தொழிலாக  மேய்ப்புத்தொழில் இருந்ததில்லை. ஆடுகளோ, மாடுகளோ- அவற்றைப் பழக்கி, பட்டி தொட்டிகளில் அடைத்து நிலையாகத் தங்கி மேய்ப்பதோடு சுற்றுவட்டார நிலத்தை உழுது மானாவாரிப் பயிர் செய்து வாழும் வாழ்க்கையை அவர்கள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை – இவ்வாறு வாழ்ந்தவர்கள் பாலர், பூழியர், கொங்கர் போன்ற இங்கே குடியேறிய வட திசை ஆயர்களே ஆவர். இம்மூன்று குடியினரும் நிலையான காவல் (காவு) களை ஏற்படுத்திக் கொண்டு ஆங்காங்கே பயிர்த்தொழில் மிகுதியும் ஈடுபடுவார் ஆயினர். இருளர்கள் இவர்களது மந்தைகளை ஏவலர்களாக மேய்த்துக் கூலி பெறும் சார்குடிகளாகவே வாழ்ந்துள்ளனர்.

எனவே – கோவன் என்ற தலைவன் இருளனாதல் சாத்தியமில்லை. அவர் மேற்சொன்ன மூன்று சமூகங்கள் மற்றும் வேட்டுவர் என்கிற இன்னொரு சமுதாயம் ஆக இந்நான்கில் ஒருகுடி சார்ந்தவராகவே இருக்க முடியும்.

கோவன் – கோன் ஆயன் – கோபாலன் இவை நான்கும் பசுமந்தைகளைப் பேணி வளர்ப்பவர் என்ற பொருளைத் தரும் ஒரு பொருட் பன்மொழிகள் ஆகும்.

மராட்டிய மாநிலத்தில் டெல்லி செல்லும் வழியில் தொடர்வண்டி நிலையம் ஒன்றுண்டு. அதன் பெயர் கோபர்காவ் (கோவனூர் Gopar Gawn) என்பது ஆகும். கோவர் என்ற குடிமக்கள் -ஆதியில் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் நகரியச் சிறப்பும் வளமும் முடிந்து (கி.மு 2500) அடுத்து வரும் காலங்களில் நீண்ட வறட்சியால் பாலைவனமாக மாறி வந்த ராஜஸ்தான் பகுதியை விட்டு வெளியேறி தெற்கு நோக்கிப் பயணித்த மேய்ப்பவர் சமூகத்தில் ஒருவரான கோப(வ)ர் எனப்பட்ட குடியினர் தங்கி உருவாக்கிய வாழ்விடம் இவ்வூர் ஆகும்.

இதே போல் – கொங்கர் குடியேறிய கர்நாடகத்தின் தென்கிழக்குப் பகுதியில் கோபி நத்தம், கோபிபாளையம் முதலிய தமிழ்க் கொங்கின் வட பரிசார நாட்டுப் பகுதியிலுள்ள இடங் களோடு அட்டபாடிப் பகுதியில் உள்ள கோபன் ஏரி, குருடிமலை, பாலமலைப் பகுதியில் உள்ள கோவனூர் முதலிய இடங்களும் இவர்களது தெற்கு நோக்கிய இடப்பெயர்ச்சியின் போது ஆங்காங்கே உண்டாக்கி செல்வாக்குடன் வாழ்ந்து பின் கைவிட்டுச் சென்ற நினைவுச் சின்னங்களே ஆகும்.

கர்நாடகத் தாமிரசாசனங்கள், கற் சாசனங்கள் மற்றும் கொங்கு தேச ராஜாக்கள் கதைப்படி கோபன் என்ற பெயரில் ஒரு மன்னன் தென் கர்நாடகக் கொங்கவாடியில் கி.பி. 400 முதல் 450 வாக்கில் வாழ்ந்துள்ளான்.

இதற்குச் சற்று முன் காலத்தில் இன்றைய கோலார் மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களைச் சுற்றியுள்ள அன்றைய தடிகை நாட்டுக்கு வேளான முதலாம் மாதவவர்மன் – குடகுமலை வரை மேற்குத்திசையிலுள்ள எல்லா வேள்களையும் வென்று அடிமைப்படுத்தி ஸ்ரீ கொங்கணீவர்ம மகாராஜாதிராஜ மாதவ வர்ம சக்கரவர்த்திகளான விருத்தராஜர் என்று பட்டம் சூடினான். இவனுக்கு அடுத்த நான்காம் தலைமுறையில் வந்த ஒரு சிறுவனுக்கு காப்பாளராக இருந்து நாடாண்டவரே – அச்சிறுவனின் தாய்மாமனான விஷ்ணுகோபன் ஆவார். இவருக்குச் சமகாலப் பேரரசர் மகத நாட்டு சமுத்திர குப்தர் ஆவார்.

சிறுவனுக்குப் பட்டம் சூட்டிய விஷ்ணுகோபனின் வாரிசுகள் தெற்கே பரவிய கொங்கணி ஆட்சியைத் தமிழகக் கொங்கில் நிறுவகித்து வருவதற்காக பின்னர் இடம் பெயர்ந்து தமிழ்க் கொங்கைத் தாயகமாக்கிக் கொண்ட போது மேலே சொன்னவாறு அவர்கள் தங்கிய பல வித இடப் பெயர்களும் அவர்களது செல்வாக்கின் சின்னங்களாக ஏற்பட்டவை என்று நாம் எளிதில் விளங்கி விடலாம்.

கோவன் என்ற ஒரு தலைவன் இவ்வகை யாக இறுதியாக தாம் வாழ்ந்த கோவனூரையும் விட்டு கி.பி. 10ஆம் நூற்றாண்டளவில் வெளியேறி தெற்கே ஆற்றுப் பாங்கான நொய்யலாற்று மருதக் கழனி வெளியில் புதிய ஊரை அமைத்து வாழத் தொடங்கிய போது அழைக்கப்பட்ட ஊர்தான் கோவன் புத்தூர் ஆகிய இன்றைய கோவை ஆகும்.

முதலாம் கோவனுக்கு பின்பு அடுத்த ஏழெட்டுத்தலைமுறை காலமும் கோவன் என்ற சொல் விருதுப் (பொதுப்) பெயராகி நிலைத்து விட்டதை நாம் அறிதல் வேண்டும்.

கொங்குச் சோழர்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் பேரூர்த் திருத்தலப் பணிகளில் ஈடுபட்ட போது இவ்வூர்த்தலைமை வேளாளரும் மன்னருடன் கூடிப்பாடுப்பட்டுள்தையே கற்சாசனங்கள் பேசும். இந்த முகமையாளர்கள் தான் கோப்பண்ண மன்றாடியார் என்று பேசப் படும் இன்றைய புரவிபாளையம் பெருநிலக் கிழார் குடும்பம் ஆகும். இவர்கள் சென்ற தலை முறை வரை இக்கோயிலின் முதன்மை அறங் காவலர்களாக இருந்து வந்துள்ளனர்.

எனவே கோவன் என்ற பெயர் ஒரு தொல்குடிப் பெயர் -அக்குடியினர் தலைமகன் ஒருவன் நிர்மாணித்த புத்தூரே ஆதிகாலக் கோவை நகரம் என்றும் புரிந்து மகிழ்வோமாக.

 

1 Comment

  1. GobuGounder says:

    கோப்பண்ண மன்றாடியார் பூலுவவேட்டுவக்கவுண்டர் இனத்தை சார்ந்தவர்.வரலாற்றை ஆய்வு செய்து உண்மையை எழுதுங்கள்.

Leave a Reply to Mallar (Pallar) Community Website | கோவையின் வரலாற்று பின்னணி


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு