கோவை பயிலரங்கம்
கோவை தன்னம்பிக்கை வாசகர் வட்டம், இன்டக்ரல் யோகா இன்ஸ்ட்டியூட் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் இணைந்து நடத்திய 2010 ஜூலை மாதம், 18.07.2010 அன்று ஞாயிறு மாலை 5.30 மணி அளவில் சுயமுன்னேற்றப் பயிலரங்கம், “உனதாகும் இனி உலகம்!” என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பயிலரங்கத்திற்கு தன்னம்பிக்கை வாசகர் வட்டத் தலைவர் ஏ.ஜி. மாரிமுத்துராஜ் தலைமை தாங்கிப் பேசினார். வாசகர் வட்ட கௌரவ தலைவர், அருள்நிதி ஒஸ்ரீ.ந.ங. பன்னீர் செல்வம் அவர்கள் முன்னிலை உரை நிகழ்த்தினார். பின்னர் அவர் எழுதிய “உடல், உயிர், உள்ளம், உழைப்பு” என்ற புதிய நூலை ஸ்டெர்னா செக்யூரிட்டி சிஸ்டம் திரு. என். ரெங்கசாமி அவர்கள் வெளியிட கலைக்கதிர், மற்றும் ஆனந்தயோகம் மாத இதழ் ஆசிரியர் டாக்டர் வி. ஆர். அறிவழகன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து, தன்னம்பிக்கை வாசகர் வட்டம் நடத்திய, மேடைப்பேச்சு பயிற்சியில், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது.
கோவையைச் சேர்ந்த பிரபலமான, மனிதவள மேம்பாட்டு சிந்தனையாளரும், பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியின் பேராசிரியருமான திரு. எம். ரங்கராஜன் அவர்கள் சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்டு திரளாக பங்கேற்ற, வாசகர்கள் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நல்லதொரு பயிற்சியை அளித்தார்.
வாழ்க்கையில் அனைவரும் விரும்புவது வெற்றியை, சந்தோஷத்தை ஆனால் அதைப் பெறுவதற்கான வழியை நாம் உணர்வதில்லை. வெற்றியின் வழி நம் காலடியிலேயே கிடக்கிறது. அதைக் கண்டுணரத் தவறி விடுகிறோம். எவரெல் லாம் அந்த வழியைச் சரியாகக் கண்டறிந்து நடந்து சென்றார்களோ, அவர்கள் எல்லாம் வெற்றிக்கனியை எட்டிப் பிடித்திருக்கிறார்கள்.
வாழ்க்கை என்பதே உறவு முறையால் ஆனதுதான். அதுமட்டும் அல்ல, இந்த உலகம் நம்மை எப்படி பார்க்கிறது என்பதைப் பொறுத்தும் நாம், இந்த உலகத்தை எப்படி பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தும் அமைகிறது. இங்கே பெரும்பாலானவர்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்றவர்களாகவே இருக்கிறார்கள். மற்றவர்கள் அடையும் வெற்றியை, வெளிப்படையாக பாராட்டுவது போல் பாசாங்கு செய்து விட்டு, அதை இகழ்ந்து விடுவதும் இயல்பாகிப் போனது.
நாம் யார், நம்முடைய பலம் என்ன, பலவீனம் என்ன, என்கிறசுயதேடுதலை நம்மில் பலபேர் தொடங்குவதே கிடையாது. சிறு நிறுவனமாக இருந்தாலும் சரி, அங்கே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொஞ்சம், கொஞ்சமாக, விலகிச் சென்று கொண்டிருக்கிறது. அதனால் தான், இன்று மனநல ஆலோசகர்களும், குடும்ப நல நீதிமன்றங்களும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.
வாழ்வில் சந்தோசம் என்பது, ஒவ்வொரு நாட்டிலும், ஒருவித வரையறைக்கு உட்பட்டதாகவே உள்ளது. எடுத்துக் காட்டாக நெதர்லண்ட் நாட்டிலே எல்லாவிதமான கெடுதல் கொண்ட பழக்க வழக்கத்தை அனுபவிப்பதே, சந்தோசமாக நினைக்கப்படுகின்றது. பூடான் நாட்டை எடுத்துக்கொண்டால், அங்கு உள்ளவர்கள் விதிக்கப்பட்ட வாழ்வை, வாழ்ந்து முடிப் பதே சந்தோசமாக நினைக்கின்றார்கள்.
உச்சகட்ட சந்தோசத்தை அனுபவிப்பவர்கள் நெதர்லண்ட் மக்களாவர், அவர்கள் சந்தோசமாக இருப்பதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். அது மற்றவரின் சந்தோசத்தை கெடுக்கக்கூடும் என்று ஒரு வரைமுறை அங்கு உள்ளது. சந்தோசத்திலே மிகவும் கீழ்நிலையில் இருக்கும் நாடு கடாக், இந்த நாட்டில் ஒழுக்கம் என்பது மருந்துக்குக் கூட இருக்காது. ஆனால் அதிக செல்வம் கொழிக்கும், என்றாலும் அந்த நாட்டிலே சொந்த மண்ணைச் சார்ந்தவர்கள் 20 சதவிகிதம் பேர் மட்டுமே. மீதி உள்ள 80 சதவிகிதம் பேர் அயல்நாட்டவரே. ஆகையால் அவர்கள் யாரையும் நம்பமுடியாத நிலையிலேயே வாழ்வை முடித்துக் கொள்கின்றார்கள். ஆக உன்னனதமான சந்தோஷத்தை எங்கே தேடிப்பிடித்தார்கள் என்றால் அது இந்தியாவிலே தான்.
அவரவர்கள் நிலைக்கு தகுந்தாற்போல் சந்தோசம் அடைந்து கொண்டு, அனைவரும் ஆனந்தமாய் இருக்கிறார்கள். இந்தியாவைப் போல் முழுமையாக சந்தோசத்தை அனுபவிக்கும் நாடு எங்கேயும் இல்லை. ஆக, சந்தோசம் என்பது ஒரு வித மனநிலையே என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை என்று கூறி, வந்திருப்போரின் கேள்விகளுக்குப் பதிலளித்து தனது சிறப்பான பயிற்சியை நிறைவு செய்தார். இறுதியாக நாட்டுப்பண் இசைக்க இனிதே நிறைவு பெற்றது.

August 2010

























No comments
Be the first one to leave a comment.