Home » Articles » சிரிப்பே நல்ல மருந்து

 
சிரிப்பே நல்ல மருந்து


சைலேந்திர பாபு செ
Author:

– முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.

குழந்தை ஒரு நாளில் 400 முறை சிரிக்கிறது.      பருவ வயதை எட்டியவர்கள் 17 முறை சிரிக்கிறார்கள்.  பல பெரியவர்கள் ஒரு முறைகூட சிரிப்பதில்லை. சிரிக்காமல் இருப்பது கற்பிக்கப் பட்ட பழக்கம் என்றே கூறலாம்.

மன அழுத்தம் ஏற்படுவதற்கான ஒரு காரணம் சிரிக்காமல் இருப்பதே ஆகும்.  சிரித்து வாழ்ந்தால் மன அழுத்தம் குறைந்து விடுகிறது.  சிலர் உயர்ந்த பதவியில் இருப்பதால் சிரிப்பதில்லை.  சிரித்தால் அவர்களது கௌரவம் குறைந்து போய்விடும் என்று நினைக்கிறார்கள்.  காவலர்களைப் பார்த்து நான் சிரிப்பேன்.  அப்போது அவர்கள் சிரிக்கத் தயங்குவார்கள்.  திருப்பிச் சிரிப்பதா வேண்டாமா, பெரிய அதிகாரிகளைப் பார்த்து சிரிப்பதா என்ற சந்தேகம் அவர்களுக்கு வரும்.  என்னிடம் பழகிய பின்னர் மனம்விட்டுப் புன்னகை புரிந்து விடுவார்கள்.

நமது மனநிலையின் தன்மைக்கேற்ப உடலில் வேதியில் மாற்றங்கள் நிகழ்கின்றன.  எடுத்துக்காட்டாக, ஒரு வாகனம் நம்மை நோக்கி மோத வருகிறது என்றால் நாம் பயந்து வேர்த்து விடுகிறோம்.  டாக்டர் ஓர் ஊசி போடும் போது கூட பதட்டம் அடைந்து உடலையே இறுக்கி கொள்கிறோம்.  ஆனால் ஒரு குண்டூசி கையில் குத்திவிட்டால்  அவ்வளவு  இறுக்கம்   இல்லை.

வரும் ஆபத்தைப் பற்றிச் சிந்திப்பதால் மூளையில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.  இது மனிதனின் பரிணாம வளர்ச்சியில், புலி துரத்தும் போது ஓடவும், புலியை எதிர்த்துப் போராடவும் ஏற்பட்ட வேதியியல் மாற்றங்களாகும். ஆதி மனிதர்கள் இதுபோன்ற ஆபத்துகளை எப்போ தாவது ஒருமுறை சந்தித்திருந்தனர்.

ஆனால், இந்த நவீன உலகில் மன உளைச்சல் தினமும் பலமுறை ஏற்படுகிறது.  அடிக்கடி இது போன்ற வேதியல் மாற்றத்திற்கு உள்ளாகிறோம்.  நோய்வாய்ப்படுதல், தொழில் நட்டம், கணவன் மனைவி சண்டை, பிள்ளை களின் ஊதாரித்தனம், கடன்தொல்லை போன்ற நிகழ்வுகள் மனிதனின் உடல் வேதியல் மாற்றங் களை ஏற்படுத்துகிறன்றன.  இதனால் மகிழ்ச்சி போய்விடுகிறது.  உடல் நலம் கெடுகிறது.  உடல் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

எனவே, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சி யாக இருக்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  அதையும் மீறி மகிழ்ச்சியாக இருக்க முடிய வில்லை என்றால், மனவருத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை உடனே களைய வேண்டும்.  நல்ல எண்ணங்களுடனும், நல்ல மனப்பான்மையுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பவர்களுக்கு உடல்நலம் நன்றாக இருக்கும்.  முதுமை எளிதில் வந்துவிடாது.

சிரிப்பே ஒரு நல்ல மருந்து என்பது பழமொழி.  சிரிப்பதால், உடல் நல்ல வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டு நமது இறுகிய தசைகள், தளர்கின்றன. சிரிக்கப் பயன்படும் தசைகள் முகத்தைத் தளரச் செய்கின்றன.  வாய்விட்டுச் சிரிக்கும்போது எடுக்கும் ஆழ்ந்த சுவாசம் நுரையீரலை விரியச் செய்கிறது.  இதன் மூலம் உடல் ஆக்ஸிஜன் அதிகம் வினியோகிக்கப் படுகிறது. சிரிக்கும்போது நமது மூளையில்         Endorphin என்ற திரவம் சுரக்கிறது. இது நம்மை அதிக நேரம் மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்கிறது.  மன அழுத்தம் நீங்கிவிடுகிறது.

நகைச்சுவைகளை ரசியுங்கள்

மற்றவர்களைப் பார்த்து புன்னகை புரிவதையே சிரித்தல் என்றேன். வாய்விட்டு சிரிப்பதும் நல்ல மருந்துதான். அன்றாடம் பத்திரிக்கைகளில் நகைச்சுவைகள் வெளியா கின்றன. அவற்றையும் படித்து வாய்விட்டுச் சிரிக்கலாம்.

மகாத்மா காந்தியே நகைச்சுவையை விரும்பி இருக்கிறார். “எனது வாழ்க்கையில் நகைச்சுவை இல்லை என்றால் நான் எப்போதோ இறந்து போயிருப்பேன்” என்றார் அவர்.

பல இடங்களில் நகைச்சுவை குழுக்கள் (Laughing Clubs) உள்ளன.  இதன் உறுப்பினர்கள் கடற்கரையில் நடந்த பின், வட்டவடிவில் நின்று கொண்டே வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்.  வாய்விட்டுச் சிரிப்பது, புன்சிரிப்புப் போல் நோய் தடுக்கும் சக்தியைத் தரும் ஒரு யுக்தி முறையாகும்.

சமீபத்தில் நான் கேட்ட சில நகைச்சுவைகள்

புவியியல் ஆசிரியர் ஒருவர், உலக வரைபடத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு, ஒவ்வொரு நாட்டையும் காட்டுகிறார்.  அப்போது அந்த உலக வரைபடம் கீழே விழுந்து விடுகிறது.  ஆசிரியர் அதைக் காலால் மிதித்து விட்டார்.  ஒரு மாணவர் ஆசிரியரைப் பார்த்து “சார்” என்றான்.  “என்ன?” என்று கேட்டார் ஆசிரியர்.  ” இந்த உலகமே உங்கள் காலடியில்” என்றான் மாணவன்.  வகுப்பில் உள்ள அனைத்து மாணவரும் சிரித்துவிட்டனர்.

ஒரு தொடக்கப்பள்ளி முதல் வகுப்பில் ஆசிரியர் ஒருவர் ‘சொர்க்கம்’ என்றால் என்ன என்பது பற்றியும், ‘நரகம்’ என்றால் என்ன என்பது பற்றியும் விளக்கினார்.  பின்னர், யார் யார் என்னுடன் சொர்க்கத்திற்கு வருகிறீர்கள் என்று கேட்டார். ஒரு சிறுமியைத் தவிர அனைத்து குழந்தைகளும் கைகளைத் தூக்கினர்.  அந்த மாணவியிடம் ஆசிரியர் “நீ சொர்க்கத்திற்கு ஏன் வரவில்லை?’ என்று கேட்டார். அதற்கு அச்சிறுமி  “எங்கம்மா  பள்ளியிலிருந்து  நேராக

வீட்டிற்குத்தான் வரவேண்டும், வேறு எங்கும் போகக்கூடாது என்று சொல்லியிருக்காங்க” என்றாள்.
அப்பா: டேய்! நானெல்லாம் படிக்கும் போது 12 கி.மீ தூரம் நடந்து சென்று படித்தேன்

மகன்: அப்பவே சந்தேகப்பட்டேன்

அப்பா: என்ன சந்தேகப்பட்டே?

மகன்: உனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்னு

நானும் எனது மனைவியும் ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி னோம். தாமதமாக வந்ததால் 11-ஆம் வகுப்பு படிக்கும் எங்களது மகன் கோபமாக இருந்தான் அம்மாவிற்கும், மகனுக்கும் நடந்த உரையாடல்.

அம்மா: யாராவது போன் பண்ணுனாங்களா?

மகன்: ஆமா.

அம்மா: யார் பண்ணுனது?

மகன்: பிரதம மந்திரி

நாங்கள் இருவரும் சிரித்துவிட்டோம்.

ஈ) துக்கத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்த்தல்

சில பிரச்சனைகள் இயற்கையாகவே நமக்கு வந்துவிடும்.  எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத சிலருக்கு புற்று நோய் வந்துவிடுகிறது.  என்ன செய்வது?  தைரியமாக அதை எதிர் கொள்ள வேண்டியதுதான்.  ஒரு பேருந்தில் பயணம் செய்கிறோம், விபத்து நேரிடுகிறது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறோம்.  தவறு நம்மிடம் இல்லை.  நாம் என்ன செய்ய முடியும்? வலியைச் சகித்துக் கொண்டு சிகிச்சை பெற்று குணமடைய வேண்டியதுதான்.

ஆனால், சில துயரங்களை நாமாகவே சம்பாதித்துக் கொள்கிறோம். இவற்றை வராமலே பார்த்துக் கொள்வதுதான் சிறந்தது.  மனிதனிட மிருந்து மகிழ்ச்சியைப் பிரிக்கும் செயல்கள் சிலவற்றைச் சொல்லித்தான் தீரவேண்டும்.

1. திருமணம்

பலருக்குத் திருமணம் ஒரு மிகப்பெரிய சோக நிகழ்வாகி விடுகிறது. பின்னர் காவல் நிலையங்களில் புகார், விவாகரத்து வழக்கு, ஜீவனாம்சம் வழக்கு என்று நிம்மதி போய்விடுகிறது.  சிலரிடம் தவறு இருக்கிறது.  மற்றவர்களிடம் தவறு இல்லை.  இருந்தாலும் திருமணம், பிரிவு, விவாகரத்து போன்றவை பெருத்த மனஉளைச்சலைத் தந்துவிடுகின்றன.  இதில் சிக்குண்டவர்களுக்குச் சிரிக்க முடிவதில்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தாலும் மனிதனுக்குப் பெருத்த மன உளைச்சல் ஏற்படு கிறது. நன்கு ஆலோசித்துத் திருமணம் செய்வதன் மூலம் இந்தச் சோகத்தைத் தவிர்க்கலாம்.

2. கடன் கொடுத்தல்

சிரமப்பட்டு சம்பாதித்த பணத்தினை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடன் கொடுத்து, பணம் திரும்பி வராமல் ஏமாந்து நிம்மதி இழந்த பலரையும் எனக்குத் தெரியும்.  எனது தந்தையார், எனது சகோதரியின் திருமணத்திற்காக தனது ஓய்வூதியத்தைச் சேமித்து வைத்திருந்தார். எப்போது வேண்டுமானாலும் திருப்பித் தருகிறேன் என்று வாங்கிச் சென்ற உறவினர் எனது சகோதரியின் திருமண அவசரத்திற்குப் பணம் தர மறுத்துவிட்டார். அந்தப் பணத்தை வைத்து தனது மகளின் திருமணத்தை நடத்திவிட்டார்  அந்த உறவினர். என் சகோதரியின் திருமணத்திற்கு அந்தப் பணம் திரும்பி வராமல் எனது தாயும், தந்தையும் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. அன்றிலிருந்து யாருக்காவது இனாமாக பணம் தருவேனேத் தவிர, திருப்பித் தருவார் என்ற நம்பிக்கையில் ஒரு பைசா கூட கடனாகக் கொடுத்ததில்லை.

சின்ன தொகை என்றால் பரவாயில்லை.  பெரிய தொகையைக் கடனாக கொடுத்தால், அது திரும்பி வராது. கடன் வாங்கியவர்களுக்குத் திருப்பிச் செலுத்துவது ஒரு பெரிய சுமையாகவே இருக்கும்.  எனவே,  அவரும்  அதைத்  தவிர்த்து விட முயற்சிப்பார்.  நட்பை விட இந்தக் கடன் சுமை கனமாகவே இருப்பதால், திருப்பித் தராமல் தப்பித்து விடுவது அவருக்கு எளியதாவே இருக்கும். பணம் கொடுத்து ஏமாந்தவர் காவல் நிலையத்திற்குச் சென்றாலும் இது “சிவில்” வழக்கு சம்பந்தப்பட்டது என்று சொல்லி விடு கிறார்கள். இறுதியில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு, மோதலும் வெடிக்கிறது.  பணத்தை இழந்ததும் அல்லாமல் ஓர் உறவை இழக்க நேரிடுகிறது.  பெரிய தொகையைக் கடனாக யாருக்கும் தராதீர்கள். உங்களது நிம்மதி போய் விடும்.  போன பணம் திரும்பி வரவே வராது.

3. கடன் வாங்குதல்

பணம் கடன் கொடுப்பது பெருத்த ஏமாற்றத்தில் முடியும் என்றால் சில வேளை களில் பணம் கடன் வாங்குவதும் மீளமுடியாத தொல்லையில்தான் முடியும். கடன் கிடைக் கிறதே என்று நினைத்து பலர் ஆடம்பரமாக வாழ்ந்து, பின்னர் வட்டிக்கு மேல் வட்டி என்று பெருந்தொகை நிலுவையில் இருக்கும்போது, அதைக் கட்ட முடியாமல் திண்டாடுவார்கள்.  அதைச் சரி செய்ய மீண்டும் கடன் வாங்கு வார்கள்.  இப்படிப் பெருந்தொகை நிலுவையில் வரும்போது, சொத்துக்களை விற்று, தெருவிற்கும் வந்துவிடுகிறார்கள்.

தகுதிக்கு மேல் பெரிய வீடு கட்டிக் கடனாளியாகி அந்த வீட்டையும் விற்ற பலரை எனக்குத் தெரியும்.  கேரளாவில் வங்கி அதிகாரி யாகப் பணியாற்றியபோது, பலருக்குக் கடன் வழங்கியுள்ளேன். அரேபிய நாடுகளிலிருந்து பணம் சம்பாதித்து பெரிய வீடு கட்டுவார்கள்.  வீட்டு மனையை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்குவார்கள். ஊருக்குத் திரும்பிய பின் வருமானம் இல்லாமல் போகவே, கடன் தொகையைத் திருப்பிக் கட்ட முடியாமல் காலம் தாழ்த்துவார்கள்.  வீடுகள் பின்னர் ஏலத்திற்கு வரும்.

“மீட்டர் வட்டி” என்ற முறையில் கடன் வாங்கியவர்கள் பலர் தற்கொலை செய்து இறந்துள்ளனர்.  சமீபத்தில் ஒரு சினிமா பட அதிபர் மீட்டர் வட்டி கட்ட இயலாமல் அனைத்துச் சொத்துக்களையும் விற்று பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.  அவரைப் போல பலர் இன்றும் கடன் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த பள்ளி முதல்வர் ஒருவர் அவரது கணவருக்காக 4 இலட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.  சுமார் 20 இலட்சம் வட்டியாக கட்டிய பின்னரும் 20 இலட்சம் வட்டி மீதம் உள்ளது என்று கூறினான் மீட்டர் வட்டி விடுபவன். அவனது அடியாட்கள் பள்ளி முதல்வர் வீட்டிற்கு வருவதோடு பள்ளியிலும் வந்து பணம் கேட்டு மிரட்டியதும் ஆடிப்போனார் அவர். நீதிமன்றத்திற்குச் சென்றால், கையொப்பமிட்ட வெற்றுக் காசோலையில் பெரிய தொகையை எழுதி வங்கிக்கு அனுப்பி பணம் கிடைக்காத பட்சத்தில், கிரிமினல் வழக்கு தொடர்வதாகவும் மிரட்டுகிறான்.  அந்த  முதல்வர்  20  ஆண்டுகள் உழைத்து ஆசையாக வாங்கிய காரைக் கூட பறிமுதல் செய்துவிட்டுச் சென்றுவிட்டனர் அவனது அடியாட்கள்.  மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கியதால் நிம்மதி சுத்தமாக போய்விட்டது அவருக்கு.

கடனே வாங்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஒரு தொழில் தொடங்க வேண்டும், பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும், வீட்டுமனை வாங்கவேண்டும்,

வீடு  கட்ட  வேண்டும்  என்ற  அத்தியாவசியத் தேவைகளுக்குக் கடன் வாங்கத்தான் வேண்டும்.  ஆனால் அதற்கு வங்கிகளை நாடுங்கள். அரசு அங்கீகரித்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவார்கள். தனியாரிடம் மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கவே வாங்காதீர்கள். பெரிய ஆடம்பரச் செலவுக்கு கடன் வாங்கினால் மான மிழந்து, மதிகெட்டு, பின்னர் எல்லோருக்கும் தீயவராகவே மாறவேண்டியிருக்கும்.  வருமானத் திற்கு ஏற்ற செலவு செய்வதே கடன் தொல்லைக்குச் சரியான தடுப்பூசியாகும்.

 

2 Comments

  1. t.balasubramanian says:

    iyaa vanakkam .கடன் koduttaal திரும்ப வரவே varaathuunu நீங்க சொல்றீங்க ,பதினைன்ந்து வருடங்களுக்கு நாகர்கோயிலில் 10 பேரிடம் கடன் வாங்கினேன் ,சொந்த uurai விட்டு சென்னை சென்றேன் .இன்று 5பேருக்கு avargalai theedi சென்று vangiya கடனை போலீஸ் mulamaga திருப்பி koduthu விட்டேன் இதற்க்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் .

  2. Tainara says:

    That saves me. Thanks for being so sesnible!

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு